***
இப்போது விரல்மொழியர் இதழ்களை ஒலி வடிவிலும் கேட்டு மகிழுங்கள்!
இதழை தவறாமலும் தாமதமின்றியும் படிக்க, இதழை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்:
"" ""
*** இப்போது விரல்மொழியர் இதழ்களை ஒலி வடிவிலும் கேட்டு மகிழுங்கள்! இதழை தவறாமலும் தாமதமின்றியும் படிக்க, இதழை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்:
0 Comments
![]() கடந்த மாதத்தில் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ‘மீ டூ’ (#MeToo) புயல் அவ்வப்போது கரை கடப்பதாக எதிர்பார்க்கப்பட்டாலும், திடீரென ஏதாவது ஒரு பிரபலத்தைச் சுற்றிச் சுழன்று, மீண்டும் உக்கிரம் கொள்ளத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் பாலியல் ரீதியில் தாங்கள் சந்தித்த கொடுமைகளைப் பகிர்கிற நல்லதொரு களமாக இது அமைந்திருப்பதாக ஒரு பகுதியினரும், இது சமுதாயத்தில் நற்பெயருடன் திகழ்வோரைக் குறிவைத்து நடத்தப்படும் நாடகம் என்று மற்றொரு பகுதியினரும் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாயினும், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளை நிகழ்த்துகிற ஆண்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்றே சொல்லலாம். ‘மீ டூ’ பிரச்சாரம் சமூக ஊடகங்களில் கவனமும் வரவேற்பும் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், பிரபல ஊடகத்தின் இணையதளத்தில், சென்னையின் புறநகர்ப் பகுதியான மறைமலை நகரின் இரயில் நிலையத்திற்கு அருகே, நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த பார்வையற்ற பெண் பாலியல் வண்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது. மேற்குறிப்பிட்ட செய்தி, பொதுச் சமூகத்தினரிடையே, குறைந்தபட்சம் பார்வைச்சவாலுடைய சமூகத்தினரிடையேகூட அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியது. அன்றாட வாழ்வில் சாதாரணப் பெண்களைக் காட்டிலும் பாலியல் ரீதியிலான தொல்லைகளை அதிகம் எதிர்கொள்பவர்கள் பார்வையற்ற பெண்களே! கல்வியின் நிமித்தமாக, பார்வையற்ற பெண்கள் குழந்தைப் பருவத்திலேயே தங்கள் பெற்றோரிடமிருந்து விலகி, விடுதிகளில் தங்கவேண்டிய சூழலிலிருந்தே இந்தக் கொடுமை அவர்களைத் துரத்தத் தொடங்கிவிடுகிறது. தனக்கு நிகழ்த்தப்படுவது அநீதி என்றே அறியாத அந்தப் பருவத்தைக் கடந்து வளரிளம் பருவத்தை அடையும் அவர்கள், அந்தப் பருவத்திற்கே உரித்தான சிக்கல்களைச் சமாளிப்பதில் உரிய வழிகாட்டலின்றித் தடுமாறுகிறார்கள்; அன்பு, ஆறுதல், காதல் என்ற பெயர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். தொண்டு நிறுவனங்கள், சிறப்புப் பள்ளிகள், பெருநகரங்களில் பார்வையற்ற பெண்களுக்காகவே இயங்கும் தங்கும் விடுதிகள் என மறுவாழ்வு என்ற பெயரில் அவர்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளை அவர்களே முன்வந்து எழுதத் தொடங்கினால், அவை வெறும் எழுத்துகளாக இருக்காது; சமுதாயத்தின் அழுகல் முற்றிய மனசாட்சியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கண்முன் நிறுத்துவதாகவே இருக்கும். கடந்தவற்றைப் பொதுவெளியில் பேசி, புதிய சர்ச்சைகளை ஏற்படுத்துவது எதற்கும் தீர்வாகாது. எனவே, இன்று வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும் பார்வையற்ற பெண்கள், தாங்கள் சந்தித்த இன்னல்கள் மூலம் கற்றுக்கொண்ட படிப்பினைகள் குறித்து தங்களின் இளைய தலைமுறை பார்வையற்ற சிறுமிகளைத் தேடிச் சென்று உரையாடல்களை முன்னெடுப்பதே மிகவும் அவசியமும் அவசரமுமான ஒன்று. “உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு சமுதாயத்தில் சில பிரிவினர் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்து வந்துள்ளனர். அதில் தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் முதலியோரோடு மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இருந்தபோதிலும், பல மாற்றுத்திறனாளிகள் உயர்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் மறுக்கமுடியாது.
கி.பி. 1000-ஆம் ஆண்டு, ராஜராஜ சோழனால் ஓர் பார்வையற்ற பிராமணருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டதாக தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ‘இலியட்’, ‘ஒடிசி’ போன்ற காப்பியங்களை எழுதிய ஹோமர் ஒரு பார்வையற்றவர். இஸ்லாமிய சமயத்தில், நபிகள் நாயகம் ஆட்சித் தலைவராக இருந்தபோது, அவர் போர் நிமித்தமாக வெளியூர் சென்ற நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற நபித் தோழர் பகர ஆட்சியாளராக இருந்துள்ளார். மஹாபாரதத்தில், திரிதராஸ்டிரன் என்ற பார்வையற்றவர் ஒரு பொம்மை ஆட்சியாளராக இருந்தார். இதுபோல, பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும், பொதுவாக அவர்கள் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர். ஆனால், கீழை நாடுகளோடு ஒப்பிடுகையில் மேற்கத்திய நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் போற்றப்பட்டு வந்துள்ளனர் என்பதற்கு லூயி பிரெயில், ஹெலன் கெல்லர் ஆகியோர் முதல் அமெரிக்காவில் ஒபாமா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சச்சின்தேவ் பவித்திரன், இங்கிலாந்து நாட்டில் டோனி பிளேயர் அமைச்சரவையில் டேவிட் பிளங்கெட், சவுதி அரேபியாவில் தலைமை நீதிபதியாக இருந்த அப்துல்லாஹ் பின் பாஸ் ஆகியோரையும் ஆதாரங்களாகக் காட்டலாம். ‘மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் 2016’ உருவான வரலாறு இரண்டாம் உலகப் போருக்குப் பின், இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினரானது. ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கியது. 1968-ஆம் ஆண்டு பெல்கிரேடில் நடைபெற்ற ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளின் நலன் பாதுகாக்கப் படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீண்டும், 1993-ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் அனைத்து நாட்டுப் பாராளுமன்றங்களிலும் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளிகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தில் இந்தியா உட்பட 180-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கையொப்பமிட்டன. அதன்படி, 1995-ஆம் ஆண்டு நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்தபோது, இந்தியப் பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அச்சட்டம் வெறும் ஏட்டளவிலேயே இருந்து வந்தது. கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை. 2004-ஆம் ஆண்டு டாக்டர். மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராக இருந்தபொழுது, மாற்றுத்திறனாளிகள் சிறப்பாகப் பணியாற்றும் வகையிலான வேலை வாய்ப்புகளைக் கண்டறிந்து அறிக்கையளிக்கும்படி பல்வேறு துறைகளுக்கும் உத்தரவிட்டார். அந்த அடிப்படையில்தான் செல்வி. பெனோ ஜெஃபைன் அவர்கள் இந்திய வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலராகவும், திரு. தினகரன் இ.ஆ.ப. அவர்கள் தெற்கு இரயில்வேயில் முதன்மைச் செயலாளராகவும், செல்வி. ஹர்சா பட்டேல் அவர்கள் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான், 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஒய்.கே. சபர்வால் மற்றும் ஹெச்.கே. சேமா ஆகியோர், மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்ததுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும்கூட மாற்றுத்திறனாளிகள் நலனில் அரசு எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை என்று கூறியது. பதவி உயர்விலும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு, அது குறித்த அறிக்கையை 3 மாதத்திற்கு ஒருமுறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஆணையிட்டது. இதன் பிறகுதான், 2016-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான திருத்தச் சட்டத்தை இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன்படி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மூன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. 7 வகையான குறைபாடு உடையோர் மாற்றுத்திறனாளிகளாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 வகையான குறைபாடுகளை உடையவர்கள் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்தியாவிலேயே ஹரியானா முதலிடத்திலும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3, 4-ஆம் இடங்களிலும் உள்ளன. 1974-ஆம் ஆண்டில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழகத்தில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒரு தனித் துறை உருவாக்கப்பட்டு, அத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. மேலும், அரசுப் பேருந்துகளில் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகை, மாற்றுத்திறனாளிகளுடன் பயணம் செய்யும் அவர்களின் உதவியாளருக்கும் கட்டணச் சலுகை, அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் போக்குவரத்துச் சிக்கல் இருப்பதால் அலுவலகம் முடிவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னதாகவே செல்லலாம், உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் மூன்றாம் தேதி அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் போன்ற அரசாணைகள் இக்காலகட்டத்தில்தான் வெளியிடப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், 2006 முதல் 2011 வரையிலான காலம், தமிழக மாற்றுத்திறனாளிகளின் பொற்காலம் எனலாம். இன்னும் என்ன செய்ய வேண்டும்? அயல்நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலனில் செலுத்தப்படும் அக்கறை நம் நாட்டில் செலுத்தப்படவில்லை என்பது எனது கருத்தாகும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் அச்சடிக்கப்படும் பணத்தில், பண மதிப்பு பிரெயிலிலும் அச்சடிக்கப்படுகிறது. அரசியலிலும்கூட மாற்றுத்திறனாளிகள் சிலர் உயர் பதவி வகிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகள் அரசியலுக்கு வருவதையெல்லாம் கற்பனை செய்யக்கூட முடியாது! வெளிநாடுகளில் கட்டப்படும் அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்துசெல்ல, சாய்தள (Ramp) வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுதான் நமது நாட்டில் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வட இந்தியாவில், பெரும்பாலான மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் தற்போதும் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும்கூட அரசுப் பணி, பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசோ, மாநில அரசுகளோ முறையாகப் பின்பற்றுவதில்லை. இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், 2012-ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசு பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் பணிக்குத் தகுதியற்றவர்கள் என்று ஒரு அரசாணை வெளியிட்டது. அதற்கு, ‘அவர்களால் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வகுப்புகள் எடுக்க முடியாது’ என்று காரணம் சொல்லப்பட்டது! ‘மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் 2016’ நிறைவேற்றப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் நம்முடைய மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நவீனத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியளிப்பது, அவர்களுக்குரிய பணிவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை உரிய முறையில் பின்பற்றுவது, நம் நாட்டில் அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் பணமதிப்பை பிரெயிலில் அச்சிடுவது ஆகியவை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை என்பது எனது கருத்தாகும்! *** (கட்டுரையாளர் சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர்). தொடர்புக்கு: [email protected] ![]() ஏழைகட்கு இறுகுகின்றாய்; இருப்பவர்க்கோ இலகுகின்றாய்! சாலையோர மனிதரையே, சாட்டை கொண்டு வருத்துகின்றாய்! மனசாட்சி உள்ளவர்க்கும், மனித நேயம் கொண்டவர்க்கும், மாற்றுப் பாதை தேர்வு செய்ய மறைமுகமாய்த் தூண்டுகின்றாய்! பொது விதியை, நடுநிலையைப் பேணி வந்த பொழுதுகளில், போற்றுதலாய் ஏற்றுதலாய் பெருமையுடன் பவனி வந்தாய். நீதிநேர்மை ஞாயம்தன்னை நிரந்தரமாய் மறந்ததனால், அவமதிப்பும் அருவருப்பும், அணிகலனாய் அணிந்துகொண்டாய்! எவருக்கும் நான் அடிமையில்லை என்றிருந்த காலங்களில், தவறிழைத்தோர் தண்டனையில் தவறிடவும் கூடாதென்றாய்; இன்றிருக்கும் நிலைதனிலே அன்றிருந்த நிலை மறந்தே, தவறுகளைத் தண்டனையைத் தரம் பிரித்தே முடிவு செய்தாய்! எண்ணங்களை எழுதுகிறேன்; ஏக்கத்துடன் குமுறுகின்றேன். இன்னமும் நீ இருக்கும் நிலை, இகழ்தலுக்கே உரியதென்பேன்! நடுநிலையைக் கடைபிடித்தால் நல்ல உள்ளம் வாழ்ந்திருக்கும், நாடு நகர் செழித்திருக்கும், சுபிட்சங்களும் நிறைந்திருக்கும். உன்னை மாற்றிக் கொண்டுவிடு, ஊழல் தன்னைக் கொன்றுவிடு. நீதி நேர்மை ஞாயத்திற்கே, நிச்சயமாய் வளைந்துகொடு. ஏழைகளை வாழவிடு, ஏற்றங்களைக் காணவிடு. நாளைகளும் உண்டெனவே, நிம்மதியாய் உறங்கவிடு! பிஞ்சுக் குழந்தைகளைப் பாழ்படுத்தும் பாதகனை, பொது வெளியில் நிறுத்தி வைத்துத் தண்டனைக்கு ஆணையிடு! வாழ்வதுவே கேள்வி என்று வருத்தமுறும் மாந்தருக்கே, வாழ்க்கை ஒரு வரமெனவே, வாழ வழி உரைத்துவிடு! உடல்நலத்தைக் கேடு செய்யும் உணவுகளைத் தவிர்ப்பதற்கே, பொதுநலனை மனதில் வைத்தே போலிகளை அழித்துவிடு! உன்னை ஒன்று வேண்டிடுவேன், உருக்கமுடன் கேட்டிடுவேன்; கண்ணை விற்றுச் சித்திரத்தைக் காட்சிகொள்ளப் பயன் பெறுமோ? நன்றாக உரைப்பதனை நயமுடனே கேட்டிடுவாய்! சான்றாக ஒன்று சொல்வேன் சலிக்காமல் மனதில் கொள்வாய்! தனியொருவன் தரகினுக்கே தாழ்ந்து விலை போவதுவோ? பசுமைதனை அழித்துவிட்டுப் பெயரில் மட்டும் புகுத்துவதோ? விவசாயம் அழிவதற்கே வித்தாகும் திட்டங்களை, பழிபாவம் ஏதுமின்றி செயல்படுத்தித் திளைப்பதுவோ? உன்னைச் சொல்லிக் குற்றமென்ன? உள்ளவர்க்கே நட்டமென்ன? ஒற்றுமையைக் கற்றிருந்தால் உண்மையிலே மாற்றம் வரும்! தலைமையது சிறந்திருந்தால், தவறுகளும் குறைந்திருக்கும்! தன்னலன்கள் மலிந்திருந்தால், அவலநிலை தொடர்ந்திருக்கும்! இயற்கையையும் இறைவனையும் இரங்கும் வண்ணம் இறைஞ்சி நிற்போம், இவ்வுலகைக் காப்பதற்கே, இதயங்களால் வேண்டிநிற்போம்! *** (கவிஞர் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூலத்தின் கணக்கர்). தொடர்புக்கு: [email protected] ![]() அறிவியல் புரட்சிக்கு முன் பார்வையற்றோருக்கான கல்வி மறுக்கப்பட்ட நிலையில், வசதி படைத்த பார்வையற்றவர்கள் பத்திரமாக அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர்; வசதி குறைந்தவர்கள் பெரும்பாலும் கைவிடப்பட்டனர். உலகின் பல நாடுகளில் இவர்கள் தெருவோரம் திரிந்து, பிச்சையெடுத்து உண்டு, பலரின் நகைப்புக்குள்ளான வரலாறுகள் உண்டு. உலகின் முதல் பார்வையற்றோருக்கான பள்ளியான பாரிஸ் ‘Royal Institute for the Blind’-ஐ நிறுவிய வேலண்டைன் ஹாய், பார்வையற்றவர்கள் சர்க்கஸ்களில் நகைச்சுவைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டதாய்க் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பார்வையற்றவர்கள் தாங்கள் செல்லும் பாதையின் முன் உள்ள மேடு, பள்ளங்களை அறிந்துகொள்ளும் ஆயுதமாகக் கோல்களைப் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்திலும் பல காலமாக பார்வையற்றவர்கள் கோல்களைத் தங்களின் துணையாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். 12-ஆம் நூற்றாண்டில் ஔவையாரால் இயற்றப்பட்ட நல்வழியின் 4-ஆம் பாடல் இதற்குச் சான்று தருகிறது. சரியாகத் திட்டமிடாமல் ஒரு செயலைச் செய்தால் என்ன ஆகும் என்பதை விளக்க வந்த ஔவையார், ‘கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே’ என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மாங்காயை அடிக்க நினைக்கும் பார்வையற்றவன் அதற்குத் தன் கையில் இருக்கும் கோலை எறிந்து பெற முயன்றான் என்றால், மாங்காயும் போய், வழிகாட்டும் கோலும் போய்த் துன்புறுவான் என்பதை உவமையாகத் தெரிவிக்கிறார் ஔவையார். ஆக, 12-ஆம் நூற்றாண்டிலிருந்தோ, அதற்கு முன்பு எக்காலத்திலிருந்தோ தமிழகத்தில் பார்வையற்றவர்கள் வழிகாட்டியாகக் கோலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது உறுதி. மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கியக் கண்டுபிடிப்புகள் பல போர்களால் ஏற்பட்டவையே. போர்கள் செய்த நன்மை என்று இதைக் கூறலாமா? தெரியவில்லை. முதல் உலகப் போரின் இறுதியில், போரால் ஊனமடைந்தோர் எண்ணிக்கை ஐரோப்பா முழுவதும் அதிகமாகவே இருந்தது. அவர்கள் நாட்டுக்காக உழைத்ததன் விளைவாக தங்கள் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்பதால் கொஞ்சம் மரியாதையோடே பார்க்கப்பட்டார்கள். அவர்கள் பொது இடங்களில் நடமாட வேண்டியிருந்தது. இதனால், பல புதுப் புது கண்டுபிடிப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாயின. இயல்பாகவோ, விபத்தாலோ ஊனமடைந்தவர்கள் மேல் இரக்கம் காட்டிய சமூகம், இவர்கள் மேல் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தியது. அதுவரை சலுகைகளாகப் பார்க்கப்பட்டவை, இவர்களால் உரிமைகளாகக் கருத்தில் கொள்ளப்பட்டன. வெளிப்படையாகச் சொல்ல இயலாதுதான் என்றாலும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வளர்ச்சிக்காக இரு உலகப் போர்களுக்கும் நன்றி தெரிவிப்பதில் தவறில்லை! 1921-இல், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் (James Biggs) என்பவர்தான் முதன்முறையாக தான் பார்வையற்றவர் என்பதை வேறுபடுத்திக் காட்ட கோல்களில் வெள்ளை வண்ணம் பூசியதாகக் கூறப்படுகிறது. புகைப்படக் கலைஞரான இவர் விபத்தால் பார்வையை இழந்தவர். தொடர்ந்து, 1931-இல் பார்வையற்றவர்கள் சாலைகளிலும், பொது இடங்களிலும் இயல்பாக நடமாட, ‘வெண்கோல் இயக்கம்’ (White Cane Movement) பிரான்சில் தொடங்கப்பட்டது. கில்லி டிஹெர்ப்மான்ட் (Guilly d'Herbemont) என்ற பிரான்சு அமைச்சர், ஒரு பிரமாண்ட விழாவில் முதல் உலகப் போரில் பார்வையை இழந்த 5000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு வெண்கோல்களை வழங்கினார். இதே காலகட்டத்தில், அமெரிக்காவிலும் அரிமா சங்கம் பார்வையற்றோருக்கு வெண்கோல்களை வழங்கியது. 1944-இல், தற்போது ஓரளவு புழக்கத்தில் இருக்கும் நீண்ட வெண்கோல்கள் (Long White Canes) ரிச்சர்ட் ஹூவர் (Richard E. Hoover - 1915-1986) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஹூவர் அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பார்வையற்றோருக்கான பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அப்போது நடந்துகொண்டிருந்த இரண்டாம் உலகப்போரில் பார்வையை இழந்த ராணுவ வீரர்களுக்காகவே இவர் இத்தகைய கோல்களை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்தான் முதல் முறையாக பார்வையற்றோர் நடமாடுவது (Mobility) குறித்த விதிமுறைகளை உருவாக்கியவர். இது ‘ஹூவர் முறை’ என்று இன்றும் வழங்கப்படுகிறது. 1964-இல், பார்வையற்றோருக்கென ‘வெண்கோல் தினம்’ கொண்டாடப்படும் என அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த ஆண்டு அக்டோபர் 15 தொடங்கி, ‘வெண்கோல் பாதுகாப்பு தினம்’ (White Cane Safety Day) அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. 1966-இல், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு பார்வையற்றோர் கூட்டமைப்பு (International Federation for the Blind) அக்டோபர் 15-ஆம் நாள் சர்வதேச வெண்கோல் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, பல உலக நாடுகளிலும் வெண்கோல் தினம் இதே நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் எப்போதிலிருந்து வெண்கோல் தினம் கொண்டாடப்படுகிறது? வெண்கோல் குறித்த அறிமுகம் இந்தியாவிற்கு எப்படி வந்தது? இக்கேள்விகளுக்குச் சரியான தரவுகளுடன் கூடிய பதில் இல்லை. இருந்தபோதிலும், இக்கேள்விகளை கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பார்வையற்ற பேராசிரியரும் கவிஞருமான வே. சுகுமாரன் அவர்களிடம் கேட்டோம். “பன்னாட்டு பார்வையற்றோர் கூட்டமைப்பில், தேசிய பார்வையற்றோர் சங்கமும் (National Association for the Blind - NAB) உறுப்பு அமைப்பாக இருந்தது என்பதால், 1960-களின் இறுதியிலேயே இந்தியாவிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். எனக்கு நினைவு தெரிந்து, 1980-களில் கூட வெண்கோல் தினத்தை ‘NAB’ சிறப்பாகக் கொண்டாடியது. அதனைத் தொடர்ந்துதான் பிற அமைப்புகள் தற்போது கொண்டாடி வருகின்றன. பார்வையற்றோருக்கென நடமாடும் பயிற்சி 1965-லிருந்தே தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கிண்டியில் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. நானும் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருக்கிறேன். ஆனால், தற்போது இந்நிறுவனம் பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியோடு இணைக்கப்பட்டதாகத் தகவல்” என்கிறார். மேலும், 1956-இல்தான் NAB தொடங்கப்பட்டது என்பதாலும், அதற்கு முன் பார்வையற்றோர் குறித்துப் பெரிய அளவில் பேச அமைப்புகளும் இல்லை என்பதாலும் 1960-களிலேயே வெண்கோல் குறித்த அறிமுகம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கவேண்டும் என்கிறார் இவர். ‘White Cane’ என்ற சொல்லை தமிழில் ‘ஊன்றுகோல்’ என்றும், பிறகு ‘வெண்கோல்’ என்று மொழிபெயர்த்திருக்கிறோம். இலங்கையில் இது ‘வெள்ளைப் பிரம்பு’ என்று வழங்கப்படுகிறது. நீளமான வெண்கோல்தான் வெண்கோல்களில் பழமையானது. நவீன வெண்கோல் வடிவமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் ரிச்சர்ட் ஹூவரின் நினைவாக இது, ‘ஹூவர் கோல்’ எனப்படுகிறது. பிறகு மடக்குவகை வெண்கோல், குழந்தைகளுக்கான வெண்கோல், நடக்கும்போது இடையூறுகள் வரின் அதிர்வூட்டும்/ஒலியெழுப்பும் வெண்கோல் என இது தற்போது வளர்ச்சி பெற்றுள்ளது. பார்வையற்றோருக்கு வழிகாட்ட நாய்கள், GPRS கருவி போன்றவை இருந்தாலும் இன்றளவும் எளிய மக்களின் உதவியாளனாக விளங்குகிறது வெண்கோல். பல பார்வையற்றவர்கள் வெண்கோல்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை. வெண்கோல்கள் மேடுகளை, பள்ளங்களை, தடுப்புகளை நமக்கு அடையாளப்படுத்தும்; அதோடு, எதிரில் வருபவருக்கு நாம் பார்வையற்றவர் என்பதையும் அடையாளப்படுத்தும். சொந்தத் தேவைக்கென வெண்கோலைப் பயன்படுத்த மறுப்பது, தான் பார்வை மாற்றுத்திறனாளி என்பதையே ஒருவர் மறுப்பதைப் போன்றது. நாம் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல என்று மனதில் நினைத்துக்கொண்டால் போதுமா? எதார்த்தத்திலிருந்து நம்மால் விலகி வாழமுடியுமா? பார்வையற்றோருக்கான நடமாடும் பயிற்சியும் தற்போது சிறப்பு நிறுவனங்களால் வழங்கப்படுவதில்லை. பார்வையற்றோருக்கும், அவர்களோடு நெருக்கமாக இருப்போருக்கும் சிறப்பு நிறுவனங்கள் அடிக்கடி நடமாடும் பயிற்சி வகுப்புகளை நடத்தவேண்டும். ஊனத்திலிருந்து விடுதலையாவதன் முதல் படி சுயமாக இயங்குதல். அதைப் பெருமளவில் சாத்தியமாக்கியிருக்கிறது வெண்கோல். வெண்கோல் அளித்திருக்கும் இத்தகைய சாத்தியங்களை அனைத்து பார்வையற்றவர்களும் பெற முன்னேறிய பார்வையற்றோரும், நமக்கான அமைப்புகளும் முயலவேண்டும். *** தொடர்புக்கு: [email protected] ![]() சமீபத்தில் வெளியான ‘வட சென்னை’ திரைப்படம் மிகுந்த வரவேற்புகளுக்கு இடையே, வட சென்னைப் பகுதி மக்களைத் தவறானவர்களாகக் காட்டியுள்ளனர் என்பது மாதிரியான எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இதுநாள் வரையிலான ‘விக்ரம் வேதா’ வரை பல திரைப்படங்களில் இப்படிக் காட்டியிருந்தாலும், ‘வட சென்னை’ திரைப்படத்திற்கு மட்டும் எதிர்ப்பு ஏன்? ஏனென்றால், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் யதார்த்தமான திரைப்படங்களை உருவாக்குகின்றனர். இவர்கள் திரையில் காட்டுவது உண்மைதான் என்று வெகுமக்கள் நம்புவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். எனவேதான், மற்றவர்களை விடவும் வெற்றிமாறன் போன்றவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. அப்படியொரு இயக்குநரான பாலா இயக்கத்தில் உருவான ‘நான் கடவுள்’ திரைப்படம் தான் இப்பகுதியில் இடம்பெறுகிறது. நான் கடவுள் திரைப்படத்தில், நாயகி பூஜா எந்தவொரு ஆதரவும் இல்லாத பார்வை மாற்றுத்திறனாளி. சாலை ஓரங்களில், மக்கள் கூடும் இடங்களில் கூத்தாடும் தொழில் செய்கின்ற எளிய மனிதர்களின் ஆதரவில் வளர்கிறாள். மாற்றுத்திறனாளிகளை, ஆதரவற்றவர்களை வைத்து தொழில் முறையாக பிச்சையெடுக்கும் கும்பல் இவளைப் பார்க்கிறது. இவளின் பாடும் திறனைக் கண்டுகொண்ட அந்தக் கும்பல், அவளை தங்களது கூட்டத்திற்குக் கடத்திச் செல்கிறது. இந்நிலையில் காசியில் அகோரி சாமியாராக இருக்கும் நாயகன் ஆர்யா அந்த ஊருக்கு வருகிறான். நாயகனைப் பற்றி அறிந்த இவள், தன்னைக் காப்பாற்றக் கோரி தஞ்சம் கேட்கிறாள். அதற்கு ஒப்புக்கொண்ட நாயகன், இவளை எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதாகத் திரைப்படம் நிறைவடைகிறது. பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, பல வகையான மாற்றுத்திறனாளிகள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் படுகின்ற பாடுகள் மட்டுமின்றி, இயக்குநர் பாலாவின் திரைப்படங்களுக்கே உரிய அதிர வைக்கும் அடிகளும் அடிக்கடி விழுகின்றன. ஆனாலும், அவர்களுக்கு இடையே காணப்படுகின்ற கொண்டாட்டமும், மகிழ்ச்சியும்தான் வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று. அதுவும் கூட, உருவத்தை அல்லது உடல் குறைபாடுகளை வைத்துச் செய்யப்படும் நகைச்சுவை துளியளவும் இல்லை என்பதுதான் இயக்குநர் பாலாவின் தனித்துவமான படைப்பாக்கம். பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த நடிகை பூஜா, அசலான மாற்றுத்திறனாளியாகவே திரையில் வாழ்ந்திருப்பார். அதாவது அவர் பேசும் இயல்பும், பாடும்போது வெளிப்படுத்தும் முகபாவங்களும் அவ்வளவு துல்லியமாக இருக்கும். மேலும், அவரது உடல்மொழியும்கூட வெண்கோல் பயன்படுத்தும் அனுபவம் இல்லாத பார்வை மாற்றுத்திறனாளி என்பதை இயல்பாகக் காட்டியிருக்கும். புதிதாகச் சேர்ந்த இடத்தில் உடனடியாக ஒருங்கிணையும் தன்மை, சாமியாரான நாயகனுக்குக் குடும்பம் குறித்து அறிவுரை கூறும் அக்கறை என எல்லா விதத்திலும் நாயகியின் கதாபாத்திரம் முன்மாதிரியானதாகவே உருவாக்கப்பட்டிருக்கும். தொடக்கத்தில் பார்வை மாற்றுத்திறனாளியான நாயகியைப் பராமரித்து வருபவர்கள் மிகமிக ஏழ்மையான எளிய மனிதர்கள். பிறகு இன்னொரு கூட்டத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கும் ஒரு திருநங்கை உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் ஆறுதல் அளிக்கின்றனர். மேலும், தனது குறைபாட்டினை வைத்துப் பிச்சையெடுக்க மறுக்கும் உறுதி கொண்டவளாகவும் நாயகி இருக்கிறாள். இப்படியாக, பல்வேறு அருமையான கதாபாத்திரங்களைத் திரையில் உலாவச் செய்துள்ள இயக்குநர் பாலா மிகுந்த பாராட்டுகளுக்கு உரியவர். இவ்வளவு காலம் தானும் வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன்தான் நாயகி வாழ்கிறாள்; ஒருமுறைகூட தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவிற்கு அவள் வரவேயில்லை; உடன் இருக்கின்ற எளிய மனிதர்களும் அந்த நம்பிக்கையை நாள்தோறும் வளர்த்துக்கொண்டேதான் இருக்கின்றனர். ஆனாலும், தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கின்ற நாயகனுக்கு மட்டும் அந்த நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்? வார்த்தைகளால் கூற முடியாத துன்புறுத்தல்களை நாள்தோறும் தாங்கிக்கொண்டுதான் பலரும் அங்கு வாழ்கின்றனர். அப்படியானால், நாயகி மட்டும் இந்தச் சூழலில் வாழ இயலாது என்ற முடிவிற்கு வருவதற்கான காரணம் எது? அவள் பார்வை மாற்றுத்திறனாளி என்பது மட்டுமின்றி, அவள் நாயகி என்பதால், அவளது கற்பு பாதுகாக்கப்பட வேண்டிய கருத்தாக்கமும் உள்ளது. ஆமாம்! நாயகி என்பவள் கற்பை இழக்காதவளாகத்தான் இருக்க வேண்டுமல்லவா? ஆக, அவள் கற்புடனே இறந்துவிட்டால் ஒருவித நிம்மதி அடைகிறது பொதுப்புத்தி. ஆகவேதான், அவளைப் பழைய குடும்பத்தினருடன் சேர்த்துவிடலாம் என்ற சிந்தனைகூட பொதுப்புத்தியில் தோன்றுவதில்லை. இத்தகைய சிந்தனைதான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண் இறந்துவிடுவதாக அல்லது தற்கொலை செய்துகொள்வதாகக் காட்சிகள் அமைக்கச் செய்கிறது. தரமான இயக்குநர் என்று பெயர்பெற்ற பாலாவின் திரைப்படங்களும்கூட இந்த ரீதியில் இருப்பதால், தரம் என்பதற்கும் நியாயம் என்பதற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளைப் பிரித்து உணர வேண்டியிருக்கிறது. இதைத்தான் தாகூர் மிகவும் நயம்படப் பின்வருமாறு கூறுகிறார், ‘எறியும் நெருப்பு அனலை வீசி வெளிப்படையாக எச்சரிக்கிறது; சாம்பல் பூத்த நெருப்புதான் விபரீதங்களை மறைத்து வைத்து போக்குக் காட்டுகிறது’. ஆமாம், வணிக ரீதியான திரைப்படங்களை உருவாக்குவோர் என்று பெயர்பெற்ற இயக்குநர்கள் வெளிப்படையாக இருக்கின்றனர். அதாவது தங்களது படைப்பாளிகளை ரசிக்கலாம்; நம்பிக்கை வைத்து ஏற்றுப் பின்பற்ற வேண்டாம் என்று. ஆனால், யதார்த்த வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லிக்கொள்வோர், தேன் தடவிய நஞ்சாக இருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத அவலம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நைசாக பிற்போக்கான கருத்துக்களை வெகுமக்கள் மனங்களில் விதைத்து வளர்க்கின்றனர் இவர்கள். ‘தகுதி உள்ளவை மட்டுமே தப்பிப் பிழைக்கும்’ என்ற டார்வினின் கோட்பாட்டினைப் பலரும் ஏற்கவில்லை. ஆனாலும், சிலர் மட்டும் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். அதாவது, இயற்கை விதியின்படி தகுதி, வலிமை, திறமைக் குறைவானவர்கள், தற்காத்துக்கொள்ள இயலாதவர்கள் அழிக்கப்படுவது அல்லது அடிமைகள் ஆக்கப்படுவது நியாயம்தானே என்பது இவர்களது வாதம். இந்தச் சிந்தனைதான் இட ஒதுக்கீடு எதிர்ப்பு, மானிய ஒழிப்பு போன்றவற்றை நியாயப்படுத்துகிறது. இத்தகைய அறமற்ற சிந்தனையுடன் எளிய மக்களை அழித்தொழிக்கும், அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இத்திரைப்படம் அமைந்திருப்பதை எந்த வகையிலும் ஏற்க இயலாது. நான் கடவுள் திரைப்படத்திற்கு மாறாக, இயல்பான வாழ்க்கை, சின்னச் சின்ன கொண்டாட்ட தருணங்கள், யதார்த்தமான ஏமாற்றங்கள் என பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை இன்னொரு கோணத்தில் காட்டிய திரைப்படம் அது. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இணையாக பார்வை மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் பாடல்களைக் கொடுத்த இளைய தலைமுறை இசையமைப்பாளர் இடம்பெற்ற அந்தத் திரைப்படம், அடுத்த பகுதியில்! *** (கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல). தொடர்புக்கு: [email protected] ![]() பல அசத்தும் தீர்ப்புகளை வழங்கத் துவங்கியுள்ளது நீதிமன்றம் என்றால் இல்லை என்று கூறுவீர்களா? ஆம்! அசத்தும் தீர்ப்புதான்; ஆனால், அபாயகரமான தீர்ப்பும் கூட என்கிறது சமுதாயம். அந்த தீர்ப்பு என்னவென்றால், ‘ஒரு பெண் தன் திருமணத்திற்குப் பிறகு, கணவன் அல்லாத வேறு ஆணோடு உறவு வைத்துக்கொண்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்பட மாட்டாது’ என்பதுதான் அது; இதில் ஆணுக்கு இருந்த தண்டனையும் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அப்படியிருந்தால் சமூகம் கெட்டு விடாதா?’ என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள். ஆனால், இதைச் சற்று பரந்த மனப்பான்மையோடு அணுகுங்கள் என்கிறது இளைய சமூகம். இச்சமயத்தில், ஒரு பெண்ணாக என் கருத்துகளையும் பதிவிடுவது அவசியம் என உணருகின்றேன். இந்த தீர்ப்பைப் பற்றி நான் பல பிரிவு மக்களோடு விவாதித்ததற்கு பின்பே நான் இதை எழுதுகின்றேன். ‘நமது சமுதாயம் குடும்பங்களால் கட்டமைக்கப்பட்டது. பலதரப்பட்ட மனிதர்களைத் தன்னுள் அடக்கியது. நமக்கென்று கலாச்சாரம், பண்பாடு என வகுத்துக் கொண்டு வாழும் நாம், இதுபோன்ற சட்டங்களை எப்படி வரவேற்பது?’ என்ற வினாவிற்கு, “கலாச்சாரம் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே வருவது” என விடை கூறுகிறார் நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன். ஆம்! அது உண்மைதான். ஒரு காலத்தில் விதவை மறுமணம் அங்கீகரிக்கப்படவில்லை; இளம் விதவைகள் தங்களை முடக்கிக் கொண்டு வாழ்ந்த தேசம் தானே இது? மாற்றம் வரும்போது அங்கீகரிக்கப்படவில்லையா? காலத்தோடு மாற்றங்களை சுவிகரித்துக் கொண்டு வாழ நினைக்கும் நாம், நம்மை வளரும் நாடுகளின் வரிசையில் காட்டிக்கொள்ளும் நாம், இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதுதானே சரி? ‘497’ – சட்டம் கூறுவதுதான் என்ன? பெண்களுக்குச் சட்டம் என்றைக்கும் சாதகமாகத்தான் இருக்கும்; இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால், அவர்கள் இந்தச் சமூகத்தில் பலவீனராகவே கருதப்படுகின்றனர். அப்படியிருக்க, ஒரு பெண் தன் கணவனது ஒப்புதலோடு இன்னொரு ஆணோடு உறவு வைத்திருந்தால், அது கிரிமினல் குற்றம் அல்ல. ஆனால், ஒரு பெண் கணவனுக்குத் தெரியாமல் மற்றொரு ஆணோடு உறவு வைத்திருந்தால், அந்த ஆணுக்குத் தண்டனை; அந்த பெண்ணுக்கு இல்லை. இதை ‘அடல்ட்ரி’ என அழகாகக் கூறுகின்றனர். ஒரு ஆண், தன் மனைவியுடன் உறவு வைத்திருக்கும் மற்றொரு ஆண் மீது புகார் அளிக்க முடியுமே அன்றி, பாதிக்கப்பட்ட பெண் ஆண் மீதோ, உறவு கொண்ட பெண் மீதோ புகார் அளிக்க முடியாது. அதுவும், ஆண் திருமணம் ஆகாத பெண்ணோடு உறவில் ஈடுபட்டால், பாதிக்கப்பட்ட பெண் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட முடியாது என பேசுகிறது 158 ஆண்டுகள் பழமையான இந்தச் சட்டம். அன்றைய ஆணாதிக்க சமூகம் பெண்ணை அடக்கி ஆள நினைத்தது. அதனால், அன்றைய காலகட்டத்திற்கு அதுபோன்ற சட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால் இன்றோ, ஒளிபடைத்த கண்ணினவளாய், நிமிர்ந்த நடையோடும், நேர்கொண்ட பார்வையோடும் உலகை ஆள பெண்கள் வீறுகொண்டு எழும் காலம். அதனால், இன்றைய தீர்ப்பு இப்படிப் பேசுகிறது, ‘ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வேறு உறவில் இணைவது கிரிமினல் குற்றம் அல்ல. அதை சிவில் குற்றமாகக் கருதி, குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம்’. அப்படியெனில், வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு, நிதிநிலை குறித்து என்ன சொல்கிறது சட்டம்? பெண்ணும், ஆணும் தன் விருப்பத்திற்கிணங்க உறவுகளை ஏற்படுத்திக்கொண்டால், அவர்களால் கொண்டுவரப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன? குழந்தைகள் அரசின் பொறுப்பு என கூறப்படுமா? அல்லது, மாற்றாக வரும் உறவு அக்குழந்தைகளை ஏற்க வேண்டும் என கட்டளையிடப்படுமா? எனக் கேட்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். குழந்தைகளை இடைஞ்சல் என எண்ணி, கொலை செய்யும் அரக்கிகளோடும் நாம் பயணித்து வருகிறோம் தானே? அன்பு, பாசம், காதல் என்ற மந்திரச் சொற்கள் எல்லாம் என்னவாகும்? திருமணம் என்ற அமைப்பு உடைந்தே போகும் என்கிறது ஒரு தரப்பு; அதே நேரத்தில், உடைந்த மனங்களுக்கு மருந்தாகத்தான் மறு உறவு தேவை என்கிற வாதமும் எழத்தான் செய்கிறது. பிரிந்து வேறு துணையோடு வாழலாம்; அதற்கு சட்டப்படி விவாகரத்து பெற்றிட வேண்டும். ஆனால், அடுத்த வாழ்க்கையும் கசந்துவிட்டால்? என்ற வினாவும் எழத்தான் செய்கிறது. ‘இக்காலகட்டத்திற்கு இச்சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மனிதன் நாகரிகத்தை நோக்கிப் பயணிக்கும்போது, இதுபோன்ற சட்டங்கள் அவசியம். இது, தனிமனித வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்கிறார் மனநல மருத்துவர் ஒருவர். சதி எதிர்ப்பு, தேவதாசி முறை எதிர்ப்புச் சட்டங்கள் வந்த போதும்கூட நாம் ஏற்க மறுத்தவர்கள்தான். காலப்போக்கில், காலத்தோடும் தேவைகளோடும் பயணிக்கும்போது அவைகள் அவசியமானவை என உணரப்பட்டன; அதுபோன்றதுதான் இதுவும்! பெண்ணை ஆண்களின் அடிமையாகவோ, சொத்து போல் கருதவோ/நடத்தவோ முடியாது. பெண் நினைத்தால் உலகை ஆளவும், அழிக்கவும் முடியும் என்பது உண்மை. அப்படியிருக்க, பெண்ணைத் தவறாகச் சித்தரிப்பதும், குடும்பம் உடையும் என்று நினைப்பதும் அதீத கற்பனை. அடிகளையும், ஆபாசங்களையும் பொறுத்து வாழும் கட்டாயம் இனி பெண்களுக்கு இல்லை! அதே நேரத்தில், இது ஆண்களுக்கும் சாதகமான சட்டம்தான். இனி தண்டனைகள் இல்லை; விவாகரத்து என்பது அவனுக்குப் பெரிய தண்டனையாக இருக்க முடியாது. அன்பு, காதல் என்ற சக்கரங்கள் சிதறும்போது திருமணம் என்ற அச்சாணி உடைகிறது. பலதார மணம் நம் சமுதாயத்திற்குப் புதியது அன்று. இதுவரை ஆணுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று, இன்று பெண் வசம் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துவதும், உதாசினம் செய்வதும் அவள் உரிமை. ஆனால், ஆண்களே எச்சரிக்கை! ‘கல்லானாலும் புல்லானாலும்’ என்ற கான்செப்ட் இனி இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவே இனி உங்களுக்கு பிரதிபலிக்கும். இனி பெண் உங்கள் அடிமைகள் அல்ல. இப்பொழுதும் சட்டம் உங்களுக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது; முடிவு உங்கள் கையில். நமது சமூகம் இன்னும் முற்போக்கு எண்ணங்களை ஏற்கப் பழகவில்லை. ஆனால், இதுபோன்ற சட்டங்கள் வருங்காலத்திற்கு அவசியம்தான். இன்றைய சூழலில் இது புரியாத புதிர், விடை தேடும் வினா! பெண் தரப்பில், சுதந்திரம் என முழுவதும் கருதிட முடியாத கேள்விக்குறி; ஆண் தரப்பில், அச்சம் ஊட்டும் ‘அட்சயபாத்திரம்’. பெண்களே! இனியேனும் மனதால் யோசிப்பதை விடுத்து, புத்தியால் யோசியுங்கள்! ‘மெல்லச் சிரி மௌனத் தாரகையே! வேறொருவன் வானில் ஒளிர்ந்ததன்றி வேறொரு குற்றமும் உன் கணக்கில் சேராது. கிரகணத்தை நோக்கி நீ ஓடலாம். ஆனால், மறக்காதே கண்மணியே! நீ மிளிர்ந்த இந்நாளை மனதில் கொண்டு கும்மியடி...!’ *** (கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்). தொடர்புக்கு: [email protected] ![]() நிபுணத்துவம் அல்லது ரசனை என ஏதாவது ஒரு வகையில் பார்வையற்றவர்களின் வாழ்வில் பசை மாதிரி ஒட்டிக்கொண்டிருக்கிறது இசை. இவ்வாறு நம் வாழ்வில் இரண்டறக் கலந்த இசைத் துறையில் உள்ள பணி வாய்ப்புகளையும், சவால்களையும் இந்த மாதத் தொடரில் தர முயற்சித்திருக்கிறேன். குருவாயூர் விரைவு இரயிலில் திருநெல்வேலியிலிருந்து குருவாயூருக்கு இரவுப் பயணம். ரயில் திருநெல்வேலிக்கு அடுத்த நிறுத்தமான நாங்குநேரியிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில், இரவுக்கே உரித்தான அமைதியைக் கிழித்துக்கொண்டு காதுகளை வந்தடைந்தது, ‘கல்யாணத் தேன்நிலா’ பாடலின் துவக்க இசை. அது ஒரு பார்வையற்றவர் பாட்டு பாடி யாசகம் கேட்பதற்காக கையடக்க ‘Mp3 பிளேயரில்’ கரோக்கியை ஒலிக்கவிட்டதால் வந்த இசை என்பதை அறியாமல், “யாருயா சைனா செட்டுல பாட்டு வைக்கிறது” என்று கொஞ்சம் சத்தம் போட்டு கேட்டுவிட்டேன். அதுவரை நான் மேற்கொண்ட இரயில் பயணங்களில் பாட்டு பாடி யாசகம் கேட்கும் பார்வையற்றவர்களைப் பார்த்திருந்தாலும், இதுபோன்று ‘Mp3 பிளேயரில்’ கரோக்கியை ஒலிக்கவிட்டு பாடி யாசகம் கேட்கும் யாரையும் பார்த்ததில்லை. தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது என நினைக்கும்போது வியப்பாக இருந்தது! அந்தப் பார்வையற்றவரிடம் பேசியபோது, அவர் ஒரு பட்டதாரி என்று தெரிந்ததும், வேலையின்மை பிரச்சனையால் பார்வையற்றவர்கள் எவ்வளவு பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்கிற எதார்த்தம் எனது தூக்கத்தைக் கெடுத்துவிட்டது; அந்த நிகழ்வுதான் இந்தத் தொடருக்கான தொடக்கம்! இயல்பிலேயே பார்வையற்றவர்களுக்கு இசை ரசனையும், திறமையும் அதிகம் இருக்கிறது என நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அத்துறையில் இன்னும் நாம் சொல்லிக்கொள்ளும் உயரத்தை அடையவில்லை என்பதைத் திறந்த மனதோடு ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்; அந்த உயரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல என்பது இந்தக் கட்டுரைக்காக நான் சந்தித்தவர்களின் ஒப்புதல் வாக்குமூலம். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாக்குமூலத்தில், இசைத் துறையில் உள்ள பணி வாய்ப்புகளைவிட சவால்களைப் பற்றியே அதிகம் பகிர்ந்துகொண்டனர். இதில் நான் உங்களிடம் எதை அதிகம் பகிர்ந்துகொள்வது என்கிற குழப்பமான மனநிலையோடே கட்டுரையைத் தொடர்கிறேன். ஆனால், பணி வாய்ப்புகளோ, சவால்களோ எதுவும் மிகைப்படுத்தப்படாமல், உள்ளது உள்ளபடியே தரப்பட்டிருக்கிறது என்பது உறுதி. தேவாலயங்கள் பார்வையற்றவர்களின் இசை ரசனைக்குத் தீனி போட்டவை சினிமா பாடல்கள் என்றால், அவர்களில் பெரும்பாலானோரின் ஆர்வத்தை நெறிப்படுத்தி இசைக் கலைஞர்களாக மாற்றுபவை கிறித்துவப் பள்ளிகள்தான் என்று சொன்னால் எல்லோரும் ஒத்துக்கொள்வீர்கள்தானே! கிறித்துவப் பள்ளிகளில் படித்ததன் விளைவாகவே மதம் மாறி, இன்று பல தேவாலயங்களில் நம் பார்வையற்றவர்கள் பாடகர்களாகவும், இசைக் கருவிகள் வாசிப்பவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்த தேவாலய இசைக் கலைஞர்களில் சிலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களாகவும், பலர் கர்த்தருக்காக தங்களின் இசையைக் காணிக்கையாகத் தருபவர்களுமாய் இருப்பதைத் தனி அதிகாரமாகவே எழுதலாம். அரசுப்பணி இசை ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்றவர்களில் சிலர், அரசுப் பள்ளிகளில் பகுதி நேரப் பயிற்றுனர்களாகவும், சிலர் முழுநேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இதில் பணி நிரந்தரம் செய்யப்படாத பகுதிநேர பயிற்றுனர்களின் மாதச் சம்பளம், கடைசியாகச் செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பிறகு, ரூ. 7700-ஆக உள்ளது. முழுநேர நிரந்தர இசை ஆசிரியர்கள், இடைநிலை [Second Grade] ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் நிரந்தர இசை ஆசிரியர் பணி நியமனம் 2009-க்குப் பிறகும், பகுதிநேரப் பயிற்றுனர்களுக்கான பணி நியமனம் 2012-க்கு பிறகும் நடத்தப்படவே இல்லை. இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல், இன்றளவும் நம்மவர்கள் சிலர் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இசைக் கல்லூரியில் சேர்ந்து வருவது பேரவலம். தனி வகுப்புகளும், மேடைக் கச்சேரிகளும் இசைத் துறையில் ஆர்வமும், தேர்ச்சியும் உள்ள நம்மவர்கள் பலர் தங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பகுதிநேர இசை வகுப்புகளை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் நடத்தி வருகிறார்கள். இது தவிர, மேடை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள். மேடை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளும், வகுப்புகளுக்கான மாணவர்களும் நிரந்தரம் இல்லை என்பதால், இதனை மட்டுமே சார்ந்திருப்பவர்களின் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. நடமாடும் இசைக் கச்சேரிகள் (Mobile Orchestra) பார்வையற்றவர்கள் என்றாலே இசைக் கலைஞர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற பிம்பத்தை பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தியதில் இந்த நடமாடும் இசைக்கச்சேரி குழுவினருக்குதான் முதலிடம். ஆரம்ப காலகட்டங்களில் இரயில்களில், குறிப்பாக சென்னையின் மின்சார இரயில்களில் தனித்தனியாகவோ, குழுவினராகவோ பாடல்கள் பாடி, இசைக் கருவிகள் வாசித்து யாசகம் பெற்றுவந்தனர். 90-களிலேயே இந்தக் கலைஞர்களின் ஒரு நாளைய வருமானம் சராசரியாக ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிடும் என்று நம்மோடு பகிர்ந்துகொண்டார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்! இன்றும் சில பார்வையற்ற ரயிலிசைக் கலைஞர்கள் இருந்தாலும், அவர்களின் வருமானம் குறித்த சரியான தகவல்கள் இல்லை. இந்த இரயிலிசைக் குழுவினர்களை அடியொற்றி, சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘குட்டி யானை’ எனப்படும் சிறிய ரக லாரிகளில் ஊர் ஊராகச் சென்று, வண்டியை முக்கிய வீதிகளில் நிறுத்தி, பின்னணி இசையுடன் பாடகர்கள் இருவர் பாட, இருவர் மக்களிடம் சென்று யாசகம் பெறும் முறை பரவலானது. ஆரம்ப காலகட்டத்தில், இரயிலிசை போல இம்முறையும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், இதன் தற்போதைய நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது. இது குறித்து நடமாடும் இசைக்குழு ஒன்றில் பணிபுரியும் முதுகலைத் தமிழ் பட்டதாரியான லிங்கதுரை, “வண்டி வாடகை, டீசலுக்கு ஆகும் செலவு, ஓட்டுனர் படி, ஆண் மற்றும் பெண் பாடகர்கள், மக்களிடம் சென்று யாசகம் கேட்கும் இருவர் மற்றும் அவர்களுக்கு வழிகாட்ட ஒரு பார்வையுள்ளவர் உள்ளிட்டவர்களுக்கான ஊதியம், தேனீர் மற்றும் சாப்பாட்டுச் செலவு, வெளியிடங்களுக்குச் சென்றால் தங்கும் அறைக்கான வாடகை இவையெல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 7000 செலவு பிடிக்கிறது. உணவு மற்றும் தங்குமிடத்திற்கு ஆகும் செலவு போக, பாடகர்களுக்கு ரூ. 400-ம், மக்களிடம் சென்று யாசகம் கேட்கும் நபருக்கு ரூ. 300-ம் ஒரு நாளைய ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆகும் செலவுத் தொகையை விடக் குறைவான வருமானம் கிடைத்தால், இவர்களின் ஊதியத்தில் அது சரிகட்டப்படும். பணம் மட்டுமின்றி ஆடைகள் மற்றும் தேவையான சில பொருட்களும் யாசகமாகப் பெறப்படும். கிடைக்கும் ஆடைகளில் பெரும்பாலானவை பயன்படுத்த இயலாதவையாகத்தான் இருக்கும்” என வருத்தத்தோடு கூறுகிறார். நம் பார்வையற்றவர்கள் மத்தியிலேயே இந்த நடமாடும் இசைக்குழுவினர் குறித்து பரவலான மாற்றுக் கருத்துகள் இருப்பதை இந்தத் தொடருக்காகப் பலருடன் பேசியதில் உணரமுடிந்தது. ஆனால், மாற்றுக் கருத்துகள் கொண்ட அனைவருமே, இந்தக் குழுக்களில் இருக்கும் பெரும்பாலான பட்டதாரிகள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலக்குகளை எட்டிப்பிடித்த சில விதிவிலக்குகள் சமீபத்தில், நம் தமிழ் பார்வையற்ற சமூகத்தில் பரவலாக அறியப்படும் புல்லாங்குழல் பெருமாள், ஒரு இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று வந்திருக்கிறார். இதுபோல, இன்னும் சில பார்வையற்றவர்களை உள்ளடக்கிய ஒரு இசைக்குழுவும், சில தனிநபர்களும் இசை நிகழ்ச்சிக்காக ஓரிருமுறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததாக நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள். சினிமாத் துறையைப் பொறுத்தமட்டில், தற்பொழுது பிரபலமாக இருக்கும் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மியை யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. முழுக்க மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்ட ‘மா’, திகில் திரைப்படமான ‘கருட பார்வை’ என இரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் கிடியோன் கார்த்திக் என்கிற பார்வையற்ற இசைக் கலைஞர். மேற்சொன்ன உதாரணங்களெல்லாம், பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பல விதைகளுக்கு மத்தியில், கடுமையாகப் போராடி முளைத்த சில மரங்களே! இந்த சில மரங்களும், தங்களின் கடின உழைப்போடு குடும்பம், பொருளாதாரம் அல்லது சாதி இவற்றில் எல்லாமோ அல்லது சிலவோ ஆணிவேராகத் தாங்கிப் பிடித்திருப்பதால்தான் தாக்குப்பிடிக்க முடிகிறது! சவால்கள் திறமை, கடின உழைப்பு இவற்றோடு விடாமுயற்சியும் உடனிருந்தால் கண்டிப்பாக இசைத் துறையில் சாதித்துவிடலாம் என்று நான் சொன்னால், அது இசைத் துறையில் நுழையக் காத்திருக்கும் சிலருக்கு வேண்டுமானால் உற்சாகத்தைத் தரலாம். ஆனால், நுழைந்து, பல ஆண்டு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மூன்று வேலை வயிற்றுப்பாட்டுக்கான முழுமையான உத்திரவாதத்தைத் தரும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் பலருக்கு எரிச்சலையே தரும். இசைக்கல்லூரியில் பயின்று, கர்நாடக இசையில் கைதேர்ந்த ஆதிக்க சாதி அல்லாத எந்தவொரு பார்வையற்றவருக்கும் எந்தவொரு கான சபாக்களும் வாய்ப்பளிக்கப் போவதில்லை. இளையராஜா பாடல்களை இளையராஜா மாதிரியே பாடும் எண்ணற்ற பார்வையற்றவர்களில் ஒருவரைக்கூட அவருடைய மகன்/மகள், அவருடைய மாணவர் என எந்த இசையமைப்பாளரும், சமூக வலைத்தளத்தில் இத்தனை முறை பார்க்கப்பட்டவர் என்கிற குறைந்தபட்ச தகுதி இல்லாத பட்சத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை. புரஃபெஷனலான இசைக் கருவிகள் மற்றும் அதுசார்ந்த சில துணைக்கருவிகளின் விலை லட்சங்களைத் தொட்டுவிட்ட பிறகு, இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்கிற வெறும் லட்சியத்தை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு போய் வாய்ப்பு தேட? இந்த மாதிரியான யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு, எதிர்காலத்தைத் திட்டமிடுவதுதான் இசைக் கலைஞர்களுக்குச் சிறப்பானதாக இருக்கும். நிரந்தர வருமானத்திற்கான வாய்ப்புகளை முதலில் உருவாக்கிக்கொண்டு, இசைத் துறையிலும் கவனம் செலுத்தி வந்தால், என்றாவது வாய்ப்புகள் நம் வசமாகும். இந்தப் பதிவால், பார்வையற்ற இசைக் கலைஞர்களின் மனம் புண்பட்டிருந்தால், தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களின் நியாயமான மாற்றுக் கருத்துகள் எதுவாக இருந்தாலும் நேரடியாக பதிவு செய்யுங்கள். இசைக் கலைஞர்களையும், இசைத் துறையையும் குறைத்து மதிப்பிடுவதல்ல எனது நோக்கம்; மாறாக, பொதுச் சமூகத்தில் பார்வையற்றவர்கள் என்றாலே இசைத் துறையில் சிறப்பானவர்கள் என்கிற செயற்கையான பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த இசைக் கலைஞர்களின் பாடுகளைப் பதிவு செய்வதே எனது இந்தப் பதிவின் நோக்கம். நமது இசைத் திறமையை சோகப் பின்னணியோடு மிகைப்படுத்திக் காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தும் பொது ஊடகங்கள் மத்தியில், நம்மை நாமாகப் பார்க்கும் கண்ணாடியே விரல்மொழியரின் பதிவுகள். அடுத்த மாதம், மசாஜ் உள்ளிட்ட சில சுயதொழில்களைப் பற்றிய பதிவுகளோடு தொடர் முடிவடையும்! *** தொடர்புக்கு: [email protected] ![]() ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம், ஒரு அடையாளம் உண்டு. சிலர் வாழும்போது தனக்கான அடையாளத்தை உருவாக்குகின்றனர்; சிலர் பிறக்கும்போதே அடையாளத்துடன் பிறந்து, அந்த அடையாளத்தோடே வாழ்ந்து, அதிலிருந்து வெளிவராமல் தன்னை நிரூபிக்கப் போராடுகின்றனர். ஆசிரியர், ராணுவ வீரர் முதலியோர் முதலாவது கருத்திற்கான சான்றுகள். மாற்றுத்திறனாளிகள் இரண்டாவது கருத்திற்கான சான்றுகள். ஏன்! தற்போது நடந்த ஆசிய ஒலிம்பிக் போட்டியில், ஆறு விரல் கொண்ட ஸ்வப்னா பர்மன் என்ற இந்திய வீராங்கனை ஹெப்டாத்லான் (Heptathlon) போட்டியில் பதக்கம் பெற்றதன் மூலம், தனது அடையாளத்தோடு போராடி வெற்றி பெறவில்லையா? ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளியும் தங்களை நிரூபிக்கவே தங்களின் வாழ்நாட்களைச் செலவிட வேண்டியதாக இருக்கிறது. நான் இந்தக் கட்டுரைக்கான செய்திகளைத் திரட்டத் தொடங்கியபோது, நானே என்னை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன். காரணம், என் பார்வையற்ற சமூகத்தைச் சார்ந்த ஒரு விளையாட்டு வீரர் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘அர்ஜூனா’ விருதைப் பெற்றிருக்கிறார் என்பது எம்மைப் போன்ற மக்களுக்கு அல்லவா முதலில் தெரிந்திருக்க வேண்டும்? இது எம்மைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பெருமை தானே! விராட் கோலி ‘கேல் ரத்னா’ விருதைப் பெற்றார் என தெரிந்துகொண்ட நான், என்னைப் போன்ற ஒருவர் ‘அர்ஜூனா’ விருதைப் பெற்றார் என்பதை தெரிந்து வைத்திருக்கவில்லை! ஓட்டப் பந்தயம் என்றால் உங்களுக்கு உசேன் போல்ட், பீ.டீ. உஷா, தற்போது ஹிமா தாஸ் போன்றவர்கள்தான் நினைவிற்கு வருகிறார்களா? அப்படியே அங்கூர் தாமாவையும் (Ankur Dhama) பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஓட்டப் பந்தயத்தில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., 5000 மீ., 10000 மீ. என பல பிரிவுகள் உண்டு. போட்டியில் கலந்துகொள்ளும் பார்வையற்ற வீரர்களுக்கு ஒரு துணையாளர் (Guide) இருத்தல் வேண்டும். அவர் பக்கத்துத் தடத்தில் (Track) அவருக்கு ஒரு கயிற்றின் மூலம் வழியைக் காட்டுவார். மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளுக்கு ஈடாக, மாற்றுத்திறனாளிகளுக்கு என்றே தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றைச் சில அமைப்புகள் ஒழுங்குபடுத்தி நடத்தி வருகின்றன. பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களிடையே பன்முகத் திறமைகள் இருக்கும். கிரிக்கெட், சதுரங்கம், தனிநபர் விளையாட்டுகளான தடகளப் போட்டிகள் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். இந்தியர்களிடையே இருக்கும் ரசனை காரணமாக இம்மாதிரியான தனிநபர் போட்டிகளைப் பலரும் கண்டுகொள்வதில்லை. கிரிக்கெட் மீதான மோகத்தினால், இத்தகையவர்களின் சாதனையைப் பேச நாம் மறந்துவிடுகிறோம். அப்படி மறந்துபோன, பலராலும் பேசப்படாத ஒருவர்தான் அங்கூர் தாமா! உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பாத் (Baghpat) என்ற ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் அங்கூர் தாமா. இன்று ஏட்டளவில் ‘இந்தியாவின் முதுகெலும்பு’ என அழைக்கப்படும் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். தனது ஆறு வயதுவரை ஆரவாரமாய்த் திரிந்த இவருக்கு, விதி வேறு ஒரு கணக்கு வைத்திருந்தது. ஒரு விபத்தின் மூலம் அவரது கண் பார்வையை இழந்தார் அங்கூர். அப்புறம் என்ன? மருத்துவமனை மருத்துவமனையாய் ஏறி இறங்கியிருக்கிறார்கள்; எந்த மாற்றமும் இல்லை. ஒரு மருத்துவரின் வழிகாட்டலில், புதுடெல்லியில் உள்ள JPM உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார் அங்கூர். என்னதான் அவரது பார்வை பறிபோனாலும், விதிக்கோ கடவுளுக்கோ தெரியாது, இவர் கடிவாளம் இல்லாத குதிரை என்று. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே அங்கூருக்கு கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்; அதிலும், கிரிக்கெட்டில் மற்றவருக்கு ரன்னராக ஓட மிகுந்த ஆர்வம். என்ன செய்ய? நம் நாட்டில்தான் கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதாதே! அதனாலோ என்னவோ, அவரது கிரிக்கெட் ஆர்வம் அவர் படித்த JPM பள்ளி காம்பௌண்ட் சுவருக்குள்ளேயே புதைந்துவிட்டது. பள்ளிப் படிப்பை முடித்த தாமா, டெல்லியில் உள்ள புனித ஸ்டீஃபன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை வரலாறு பட்டம் பெற்றார். தாமா இக்கல்லூரியை பற்றி இவ்வாறு சொல்கிறார், “எனது விளையாட்டிற்கு எங்கள் கல்லூரி எல்லா வகையிலும் உதவியது. நான் செல்லும் எல்லாப் போட்டிகளுக்கும் அனுமதி அளித்து, எனக்கு வருகைப் பதிவில் எவ்வித இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர் கல்லூரி நிர்வாகிகள்”. கால்பந்தும், தடகள விளையாட்டும் திறமைவாய்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகளை அப்படியே கட்டி அணைத்துக்கொள்ளும்; அவ்வளவு காதல் நம் மேல். அப்படியே ஒரு ரோஜாப் பூவைக் கொடுத்து முதுகில் தட்டிக்கொடுக்கச் சிறந்த நண்பர்களும், பயிற்சியாளரும் கிடைத்தால் போதும்; அந்தக் காதல் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதற்கு அங்கூர் தாமா ஒரு உதாரணம். ஆம்! அங்கூருக்குக் கிடைத்த அத்தகைய பயிற்சியாளரின் பெயர் சத்தியபால் சிங். இந்தியாவில் இளவயதில் ‘துரோணாச்சாரியா’ விருதைப் பெற்றவர். பயிற்சியாளர் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அங்கூருக்கு பயிற்சி அளித்து, இன்று 2017-18-ஆம் ஆண்டிற்கான ‘அர்ஜூனா’ விருதைப் பெறவைத்துள்ளார். நாள்தோறும் காலையிலும், மாலையிலும் நேரு விளையாட்டு அரங்கத்தில் இவர் அங்கூருக்கு பயிற்சி அளித்திருக்கிறார்; இதற்காக எவ்வித கட்டணமும் அவர் பெறவில்லை. ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், சத்தியபால் சிங்கைப் பற்றி அங்கூர் தமா இப்படிக் கூறுகிறார், “எனது பயிற்சியாளர் எனக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்கள், அயல்நாட்டு போக்குவரத்துச் செலவுகள், தங்குமிடச் செலவுகள், எனது இதரத் தேவைகள் என அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். நான் நாட்டிற்காகப் பதக்கம் வெல்கிறேனோ இல்லையோ, கண்டிப்பாக எனது பயிற்சியாளர் சத்தியபால் சிங் அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று நெகிழ்ந்துள்ளார். இதைவிட ஒரு குருவிற்கு வேறு பெருமை வேண்டுமா என்ன? அவர் குறிப்பிட்டபடியே வெற்றி பெற்று, அவரது குருவிற்கு பெருமையைத் தேடித் தந்துள்ளார் அங்கூர். அவரது வெற்றிக்கு உதவிய இன்னொரு கையை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். நான் மேலே கூறியது போன்று, ஒரு பார்வையற்ற தடகள வீரர் ஒரு துணையாளரை வைத்திருக்கவேண்டும் அல்லவா? ஆம், அங்கூருக்கு ஒரு சிறந்த துணையாளர் கிடைத்தார்; அவரும் ஒரு தடகள வீரர்தான். ஆனால் என்ன, அவருக்கு நமது நாட்டில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால்தான் அங்கூர் அவரது துனையாளருக்காகவும் பதக்கம் வெல்ல வேண்டும் என வேட்கை கொண்டார். அங்கூரின் பதக்க வேட்டை நடுத்தரக் குடும்பத்திலிருந்து வரும் சாதனை புரிந்த வீரர்களுக்குப் பெரும்பாலும் அவர்களது பெற்றோர் அல்லது சகோதர சகோதரிகள்தான் துணையாக நிற்பார்கள். அதே நியதிதான் அங்கூர் தாமாவின் வாழ்விலும் நடந்தது. அவரது சகோதரி ஒரு உடற்கல்வி ஆசிரியை. அவரின் தூண்டுதல் மூலம்தான் அங்கூருக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. கால்பந்து உலகத்தில் லயோனல் மெஸ்ஸியின் கால்களை ‘மாயக் கால்கள்’ என கூறுவதுண்டு; அதுபோலதான் இந்த கட்டுரை நாயகனின் கால்களைச் சொல்லவேண்டும். காரணம், 2013-ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த பார்வையற்றோருக்கான கால்பந்து போட்டியில் இந்தியாவிற்கான முதல் கோல் அடித்த பெருமை அங்கூருக்குத்தான் உண்டு! கால்பந்து தவிர, ஓட்டப் போட்டியில் எண்ணற்ற சாதனைகளைப் புரிந்திருக்கிறார் அங்கூர். பள்ளியில் படிக்கும்போதே பாரா ஒலிம்பிக்கைப் பற்றித் தெரிந்து கொண்ட அவர், அப்பொழுதிலிருந்தே அதற்கான பயிற்சியினைத் தொடங்கிவிட்டார். 2008-இல் இந்திய பார்வையற்ற விளையாட்டு சங்கம் (Indian Blind Sports Association – IBSA) நடத்திய தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 400 மற்றும் 800 மீ. ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார். இந்த இரண்டு போட்டிகளிலும் அங்கூர் ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்! அதாவது, இந்த 400 மற்றும் 800 மீ. ஓட்டப் போட்டியில் அதற்கு முன்பு 1.3 நிமிடங்களும், 2.37 நிமிடங்களுமாக இருந்த சாதனையை முறியடித்து 1.1 நிமிடத்திலும், 2.25 நிமிடத்திலும் கடந்து இன்று வரை சிறுவர்களுக்கான முறியடிக்கப்படாத சாதனையைத் தன்னகத்தே வைத்துள்ளார் அங்கூர்! 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற, உலக இளைஞர்களுக்கான தடகளப் போட்டியிலும் (World Youth and Student Championships) அவர் பங்கேற்றுள்ளார். இவரது கால்களின் ஓட்டம் போலவே, பதக்க வேட்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டியில் 800 மீ. மற்றும் 1500 மீ. ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். அதைத் தொடர்ந்து, துபாயில் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளியையும், 1500 மீ. ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். ஷார்ஜாவில் 1500 மீ. ஓட்டத்தில் தங்கமும், 800 மீ. ஓட்டத்தில் வெண்கலமும் பெற்றுவந்தார். 2014-ஆம் ஆண்டு இஞ்சியனில் [Incheon] நடைபெற்ற ஆசிய பாரா தடகளப் போட்டியில் 1500 மீ. ஓட்டத்தை 4.23 நிமிடத்தில் கடந்து வெண்கலமும், 800 மீ. ஓட்டத்தை 2.9 நிமிடத்தில் கடந்து வெள்ளியையும் வென்று இந்தியக் கொடியை விண்ணுயரச் செய்தார் இந்த தாமா. அதே தொடரில், முதன்முதலாக 5000 மீ. ஓட்டத்தில் கலந்து கொண்ட அவர், 16.41 நிமிடத்தில் கடந்து இரண்டாவது வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். இவ்வாறு தொடர்ந்து அங்கூர் தாமா பெற்ற பதக்கங்கள் மூலம் அவருக்கு இந்தியாவில் விளையாட்டிற்குக் கிடைக்கும் உயரிய விருதான ‘அர்ஜூனா’ விருது வழங்கப்பட்டது. மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அவ்விருதினை வழங்கி அங்கூர் தாமாவைப் பெருமைப்படுத்தினார். ராம் கரன் சிங் என்ற பார்வையற்றவருடன் சேர்ந்து ‘அர்ஜூனா’ விருதுக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார் அங்கூர் தாமா. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டைப் பொறுத்தவரை, அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் சலுகைகள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். பெரும்பாலும் நன்கொடையாளர்கள் மூலமோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமோதான் இதுவரை விளையாட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகளால் சாதிக்க முடிகிறது. இம்மாதிரியான கடினங்கள் அங்கூரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த அங்கூரால் அவரது பயிற்சியாளர் சத்தியபால் சிங், இந்திய பார்வையற்றோருக்கான விளையாட்டு சங்கம் (IBSA), சுருக்கமாக BRA என்று அழைக்கப்படும் ‘Blind Relief Association’ ஆகியோர் மூலமாகத்தான் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது. இறுதியில், ‘GoSports Foundation’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், இவருக்கு உதவ முன்வந்தது; அபினவ் பிந்த்ரா, ராகுல் டிராவிட் மற்றும் புல்லேலா கோபிசந்த் போன்றவர்கள் இவ்வமைப்பின் நிர்வாகிகள். இந்நிறுவனம் திறமையுள்ள வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான பயிற்சி மற்றும் பண உதவிகளைச் செய்து வருகிறது. வாழ்க்கையில் தடைகள் இல்லாமல் போனால், எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க நினைவுகள் எதுவும் இருக்காது. இவ்வளவு தடைகளைத் தாண்டியதால்தான், அங்கூர் தாமாவால் ‘ராஷ்டிரபதி பவனில்’ ராஜாங்க நடை போட முடிந்தது. இவர் வாழ்க்கையில் மேலும் பல சிகரங்களைத் தொட என் சார்பாகவும், இதழின் சார்பாகவும் அங்கூருக்கு வாழ்த்துகள்! *** தொடர்புக்கு: [email protected] ![]() பொதுவாகப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிற மொழிகளைக் கற்பது என்பது இன்றுவரை சவாலாகவே உள்ளது. அதுவும், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இந்து, இஸ்லாமிய பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்கள் வேதங்களின் தத்துவங்களைப் பொருளுணர்ந்து அறிந்துகொள்வது என்பது இன்றுவரை எட்டாக் கனியாக இருந்துவருகிறது. இந்துக்களின் வேதங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை போன்ற மதப் புனித நூல்கள் இந்து மதத்தில் ஆன்மீகத் தேடல் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வகையில் பிரெயில் முறையில் இதுவரை வெளியிடப்படவில்லை என்று கருதுகிறேன். ஆனால், கிறித்துவ மதத்தில் இத்தகைய குறைகள் இல்லை; எல்லா மொழிகளிலும் பைபில் பிரெயில் எழுத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதே சமயம், இஸ்லாத்தில் ஆன்மீக நாட்டங்கொண்ட பார்வையற்றவர்கள் இஸ்லாமியர்களின் புனித வேதமான திருக்குர்ஆனைப் படிக்கும் வாய்ப்பு சில ஆண்டுகளுக்கு முன்புவரை இல்லாதிருந்தது. இந்தக் குறையைக் கலையும் வகையில், மலேசியாவில்தான் முதன்முதலில் பிரெயில் குர்ஆன் வெளியிடப்பட்டது. இந்தியாவில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள ‘ஃபைன் டச்’ அமைப்பு, இஸ்லாமிய பார்வையுள்ள மார்க்க அறிஞர்களுக்கு (உளமாக்கள்) அரபி மொழியில் பிரெயில் எழுத்துப் பயிற்சியளித்து, பிரெயில் குர்ஆனை வெளியிட்டு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்பிக்கச் செய்தது. நானும் இம்தாதியாவும் 1991-ஆம் ஆண்டு முதலே மலேசியாவிலிருந்து குர்ஆனை வரவழைத்து அதனைக் கற்றுக் கொண்ட நான், தமிழகத்திலுள்ள இஸ்லாமியப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பிரெயில் குர்ஆன் பயிற்சி மையம் தொடங்கப்பட வேண்டுமென்று எண்ணம் கொண்டேன்; என் கனவை நனவாக்கியது இம்தாதியாதான். வேலூர் மாவட்டம், மேல்விசாரம் என்னும் இடத்தில் ‘இம்தாதியா’ என்ற அமைப்பை நிறுவிய மௌலானா திரு. முஹம்மது உஸ்மான் அவர்களை அணுகி, என் எண்ணத்தைத் தெரிவித்தேன். மனமகிழ்வோடு அதனை ஏற்றுக்கொண்ட திரு. உஸ்மான் அவர்கள், தனது மதரஸாவிலேயே இத்தகையதொரு பயிற்சி மையத்தைத் தொடங்க ஒப்புக்கொண்டார். 2012-ஆம் ஆண்டு, என்னை ஆசிரியராகக் கொண்டு ஐந்து மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது நாற்பத்தைந்து பார்வை மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரெயில் குர்ஆனைத் தவிர, பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி, உணவு, உடை, உறைவிடம் மற்றும் கணினிப் பயிற்சி ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது இவ்வமைப்பு. ஆரம்ப காலகட்டத்தில், தமிழகத்தின் சில பார்வை மாற்றுத்திறனாளிகளை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்த மையத்தில், தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பார்வை மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்கின்றனர். அண்மையில் இவ்வமைப்பு பிரெயில் குர்ஆனை அச்சிட்டு, இந்தியா முழுவதுமுள்ள இஸ்லாமியப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கியது. இப்போது இந்த அமைப்பு பார்வையற்ற இஸ்லாமிய பெண்களுக்காகவும் ஒரு கிளையைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. ஆலம்விழுதாக இருந்த இந்த மதரஸா, இன்று மாபெரும் விருட்சமாக வேர்விட்டுள்ளது. இவ்வமைப்பு, பார்வை மாற்றுத்திறனாளி இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் தரும் ஒரு மாபெரும் அமைப்பாக வளரவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமாகும். இவ்வமைப்பைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி: 9952120340 மின்னஞ்சல்: [email protected] இணையதளம்: www.mimvs.com *** (கட்டுரையாளர் தஞ்சை மாவட்டம் ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர்). தொடர்புக்கு: [email protected] ![]() ‘சின்னச் சின்ன ஆசை’ எனக் கிளம்பி, தமிழ் திரையிசை ராக ராஜியத்தை ராஜாவிடமிருந்து மெல்ல கைப்பற்றிக் கொண்ட A.R. ரஹ்மான், திரையிசைக்குப் பல திறமையான இருபால் பாடகர்களை அறிமுகம் செய்தார். ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தில், ‘பொன்மானே! கோபம் ஏனோ?’ என 1983-இல் பாடிய உன்னி மேனனையும், ‘காயத்ரி’ படத்தில், ‘காலைப்பனியில் ஆடும் மலர்கள்’ என 1975-லேயே பாடிவிட்டு, காலம் செய்த மாயமாய்த் தமிழ் திரை இசையுலகில் தலைகாட்டாமல் இருந்த சுஜாதாவையும், 1992-இல் வெளிவந்த தன் முதல் படமான ‘ரோஜா’-வில் இணைத்து, ‘புது வெள்ளை மழை’ பொழியச் செய்து, நம்மை நனையச் செய்தார் ரஹ்மான். அந்த வரிசையில், ‘தமிழா! தமிழா!’ என ஹரிஹரனை விளிக்கச் செய்து எழுச்சியூட்டினார். ‘என்னவளே! அடி என்னவளே!’ என உன்னிகிருஷ்ணனைக் குழையச் செய்து உசுப்பேற்றினார். ‘நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது’ என 13 வயது பாலகி ஹரிணியை நம் காதோரம் கிசுகிசுக்க வைத்தார். ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன் என எல்லோருமே ரசிகர்களின் உணர்வுகளை மேடை அரங்கேற்றம் செய்கிற மேன்மை பொருந்திய மேட்டுக்குடி குரல்களாகத் திகழ்ந்தார்கள். உருகி உருகிப் பாடிய அவர்களின் குரல்கள் ரசிகனுக்கானதாக இருந்ததே அன்றி, ரசிகனே தனக்காய்ப் பாடுவதாக இல்லை. தன் இசையில் இருந்த இந்த மிக நுட்பமான குறையை ரசிகன் உணர்வதற்கு முன்னதாகவே உணர்ந்துகொண்டு விழித்துக்கொண்டார் ரஹ்மான். ராஜாவின் காலத்திலும்கூட, என்னதான் S.P.B.-யும் மனோவும் ராகமழையில் தங்களைக் கரைத்துக்கொண்டாலும், ரசிகனும் தன்னை அதில் ததும்பத் ததும்ப நனைத்துக்கொண்டாலும், ராஜாவின் குரலில்தான் தானே பாடுவதான ஒரு தன்மையை உணர்ந்தான் ரசிகன். ரஹ்மானுக்கு அதிலும் சிக்கல்; தன்னுடையது இயல்பான மேல்தட்டுக் குரல் என்பதால், கடைநிலை ரசிகனையும் தன் பாடல்களோடு ஒன்றச் செய்யும் பொறுப்பைத் தன் உற்ற தோழனிடம் கொடுத்தார் ரஹ்மான். ஷாகுல் ஹமீது என்கிற அந்த உயிர்த்தோழனும் தன் ஊண் குழைத்து, உயிர் உருக்கிப் பாடிய அத்தனையிலும் அப்பழுக்கற்ற ரசிகனின் முகம் பளிச்சிட்டது. ‘கண்டமனூரு மைதாரேன், கண்ணுல வச்சா ஆகாதா? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சேந்து போனா ஆகாதா?’ என்று அவர் பாடியபோது, சிலித்துக்கிட்டுப்போற சின்னப்பொண்ணை நிறுத்தி, களத்துமேட்டுக் காதலனான தானே அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டதாகக் கிறங்கினான் ரசிகன். எப்போதும் உச்ச ஸ்தாயில் பாடும் ஹமீது, ‘பழமை வேறு பழசு வேறு, வேறுபாட்டை அறிஞ்சுக்கனும்; புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே, புரிஞ்சு நீயும் நடந்துக்கனும்’ என செந்தமிழ் நாட்டு தமிழச்சியைத் தன் தாழ்த்திய குரலால் செல்லமாகவும் தட்டிக்கொடுத்திருக்கிறார். ‘குட்டைக்காமன் தேவன் கட்டி வச்ச கம்மாய், கூத வரும் முன்னால குளிக்கட்டுமா?’ என்று கேட்கும்போதே நாம் நனைந்துவிடுவதுதான் அவரின் குரல் கொண்ட மாயம். ‘வாரத்துக்கு ஏழுநாளு; வந்தவளோ நாளுபேரு; மூணுபேரு குறையுதடி கணக்கு’ என்று நம்மை ஒரு பாடலில் சிரிக்க வைத்தவர், வேறொரு பாடலில் தன் குரலைக் குழைத்து, வார்த்தைகள் அத்தனையிலும் விம்மலை விதைத்து, கேட்பதனாலோ பாடுவதாலோ அல்ல, நினைத்தாலே நம் கண்களில் நீர் செருகிடும்படி தன்னோடு அந்தப் பாடலையும் நித்தியமாக்கிவிட்டார் ஹமீது. ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலுக்கான இசை ரஹ்மான். ஒரு புது முயற்சியாக, இசைக்கருவிகளின் துணையில்லாமல், வெறும் குரல்களை வைத்துக்கொண்டே அந்தப் பாடலை வடிவமைத்தார் ரஹ்மான். பாடலின் மனம்கவர் வெற்றிக்குக் காரணங்கள் இரண்டு; ஒன்று வைரமுத்துவின் மண்வாசனை மிகுந்த வரிகள். மற்றொன்று, அந்த வாசனையின் நிறம் மாறாது, ரசிகர்களிடம் அப்படியே பரிமாறிய ஷாகுல் ஹமீதின் குரல். ‘கார வீட்டுத் திண்ணையில, கறிக்கு மஞ்சள் அரைக்கையில, கரிசக்காட்டு ஓடையில, கண்டாங்கி துவைக்கையில’ என நினைவுகளை ஒன்றுகூட்டி, ஒப்பாரி வைப்பதான அவரின் குரல்பாவத்தைக் கேட்கையில், உரத்து அழுதுவிட ஏங்குகிறது மனம். ‘தொட்டுத் தொட்டுப் பொட்டு வச்ச சுட்டுவிரல் காயலையே! மதுரையில வாங்கி வந்த வளவி உடையலையே! – அந்தக் கழுத்துத் தேமலையும், காதோரம் மச்சத்தையும் பார்ப்பதெப்போ? – அந்தக் கொலுசு மணிச்சிரிப்பும், குமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ?’ என பிரிவின் ஆற்றாமையில் புரண்டழுகிற நாயகனை மட்டுமல்ல; தன் சொல்லொணாச் சோகத்தைக் கண்ணீரில் கரைத்தபடி, விதிவழி நடக்கிற நாயகியின் வடிவழகையும் வார்த்தைக்கு வார்த்தைத் தன் குரல் கம்மலால் கண்முன் நிறுத்திவிடுவார் ஹமீது. கமகம்தான் பாடகருக்கு அழகென்று நினைத்தால், குரல் கம்முதலும் பேரழகாய் வாய்த்தது ஹமீதின் குரலுக்கு மட்டும்தான். ‘நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டுவிட்டு, அரளிப் பூச்சூடி அழுதபடி போறபுள்ள’ என்ற வரியை இப்போது கேட்டால், ‘நண்பா! இன்னும் ஏராளமாய் உனக்கு வாய்ப்புகள் வழங்கக் காத்திருந்த என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாயே!’ என ரஹ்மானே தேம்புவதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது நமக்கு. ‘ஆத்தங்கரை மரமே’, ‘குறுக்குச் சிறுத்தவளே’, ‘ஈச்சு எலுமிச்சு’ என நிலம் சார்ந்த எத்தனையோ பாடல்களை ரஹ்மான் தந்திருந்தாலும், ஷாகுல் ஹமீதைப் போல வெள்ளந்தியான ஒரு நிலம் சார்ந்த குரலை (Nativity Voice) இன்றளவும் ரஹ்மானால் அடையாளம் காணமுடியவில்லை என்பதே உண்மை. ‘அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்’ – ‘நேருக்குநேர்’ படத்தில் இடம்பெற்ற ‘அவள் வருவாளா’ பாடலில் பயின்ற மிகப்பிரபலமான இந்த வரியைப் பாடிய ஹமீது அவர்கள், அந்தப் பாடல் வெளியான 1997-இல் உயிரோடு இல்லை. அதற்கு முந்தைய ஆண்டு என்பதாகத்தான் நினைவு; உடுமலைப்பேட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மரணமடைந்தார் பாடகர் ஷாகுல் ஹமீது. ‘ஜீன்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘வாராயோ தோழி’ என்பதுதான் கடைசியாக அவர் குரலில் வெளிவந்த பாடல். வித்யாசாகர் இசையில் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’, தேவாவின் இசையில் ‘நேருக்குநேர்’ போன்ற ஒன்றிரண்டு படங்களில் பாடிய ஷாகுல் ஹமீது, ரஹ்மான் இசையில் பாடிய பாடல்களும் 25-ஐத் தாண்டாது. ஆனாலும், அவர் குரல்தான் அத்தனை நெருக்கமாய் ரஹ்மானின் இசையைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. ஏனெனில், அவருக்கு வாய்த்தது ரசிகனுக்கான குரல் அல்ல; அது ரசிகனின் குரல். சாகும்வரை அவர் பாடியதெல்லாம் சாமானியனின் சங்கீதம். அவரின் மரணச் செய்தியை அறிவித்த கொழும்பு வானொலி தன் இரங்கலைத் தெரிவிக்கும் வகையில், ‘திரு. ஷாகுல் ஹமீது அவர்களே! இத்தனை சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்து செல்லவா நீங்கள் இப்படிப் பாடிவைத்தீர்கள்?’ என்று கேட்டபடி அந்தப் பாடலை ஒலிபரப்பியது. அந்தப் பாடல், ‘ராசாத்தி! என் உசுரு என்னதில்ல’ (பாடலைக் கேட்க). ...ரதம் பயணிக்கும் *** தொடர்புக்கு: [email protected] ![]() நான் மதுரை மாவட்டம் சுந்தரராஜன்பட்டியில் உள்ள IAB மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். எங்கள் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை எழுத ஸ்கிரைப் வருவார்கள். தேர்வில் நாங்கள் சொல்லும் விடையை எழுதுபவர்கள்தான் ஸ்கிரைப் (Scribe); தமிழில் பதிலி எழுத்தர். நான் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது, அமெரிக்கன் கல்லூரியிலிருந்துதான் (The American College) ஸ்கிரைப் வரவேண்டுமென்று நினைப்பேன். ஏனென்றால், அது ஆண்கள் கல்லூரி. வரும் அண்ணன்மார்களிடம் விடை தெரியவில்லை என்றால் தைரியமாய்ச் சொல்லிவிடலாம். அதனால் எனது கௌரவத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை; இது முதல் காரணம். நான் நினைத்ததெல்லாம் என்றுதான் நடந்திருக்கிறது? நான் நினைப்பதற்கு மாறாக, பெரும்பாலும் லேடி டோக் (Lady Doak College) கல்லூரியிலிருந்துதான் எனக்கு ஸ்கிரைப் வருவார்கள். விடை தெரியாவிட்டால் எனது மானம் பொண்ணுங்க முன்னாடி போய்விடுமே என்கிற ஒரு மரண பயம் என்னை துரத்திக்கொண்டே இருக்கும். ஏதாச்சும் கதை அடிக்கலாம் என்று பார்த்தாலும், கல்லூரி ஃபைனல் இயர் வந்த பின்னாடியும், பத்தாம் வகுப்பு ஆன்சர்களை அப்படியே ஒப்பிப்பார்கள் அவர்கள்; அதனால், தப்பவே முடியாது! 2-ஆவது காரணம், நானோ மிகவும் அமைதியான பையன். எனக்கு புதியவர்களிடம் சரளமாகப் பேச வராது. அதிலும் பெண்கள் என்றால் கை, காலெல்லாம் நடுக்கமேற்பட்டு வார்த்தைகள் வர மறுக்கும். ஆனால், பார்வையற்றவர்கள் வாயை நம்பித்தான் பிழைக்க வேண்டியிருக்கிறது. அதனால், அவற்றை வெளிக்காட்டாது சமாளிக்க முயன்றும், பலமுறை முதல் பந்திலேயே கிலீன் போல்ட் ஆகியிருக்கிறேன்! எழுத வந்த அக்கா, “தேதி என்ன”ன்னு கேட்க, நானோ, “அறிவியல் பரிட்ச” எனச்சொல்ல, “தேதியக் கேட்டேன்” எனச் சொல்லும்போதுதான் நிதானத்துக்கு வருவேன். சில நேரம், என்னை விட எழுதவந்த அக்கா பதட்டமா இருக்கும். கொஸ்ட்டின் கொடுத்தாச்சா என கேட்கும்போதே நடுங்கிப்போய்விடும். நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது, நாங்கள் தேர்வுக்கு படிப்பதே ஒரு கொண்டாட்டம் போல இருக்கும். ‘குற்றாலக் குறவஞ்சி’ படிக்கும்போது பசங்க எல்லோரும் குஷியாகிவிடுவோம். ‘வசந்தவள்ளி பந்தடிக்கும்போது, அவளது இரு பாதங்கள், இரு முலைகள், கையில் இருந்த பந்து என 5 பந்துகள் களத்தில் ஆடின’ எனச் சொல்லும்போது, பசங்க கூட்டம் ஆர்ப்பரிக்கும். இவ்வரிகளில் இன்ஸ்ஃபையர் ஆகித்தான், ‘ஸ்டெஃபி கிராப் டென்னிஸ் மேட்ச்சில எம்பி குதிச்சா – டோண்ட் மிஸ்’ என்ற பாடல் வரியை எழுதியிருக்க வேண்டும் என எனது கண்டுபிடிப்பையும் சபையில் கூறுவேன். இவ்விலக்கியத்தில் பசங்க மிகவும் கொண்டாடும் ஒரு இடம் இருக்கிறது! ‘பருத்த மலையைக் கையில் அடக்கியவர், கொங்கையாகிய பருவ மலைகளை தன் கையால் அடக்காமல் தாமதிக்கிறாரே’ என வசந்தவள்ளி ஏங்கித் தவிக்கிறாள். “குற்றாலக் குறவஞ்சியில் எந்த வினா கேட்டாலும் இந்தப் பாயிண்ட்டை கட்டாயம் எழுதுவேன்” என ஒருவன் சபதம் எடுத்தான். ‘மலை வளத்தை விளக்குக என்ற வினா வந்தால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டதற்கு, ‘இவ்வளவு வளம் பொருந்திய மலையில், இவ்வாறு ஏங்கித் தவிக்கும் வசந்தவள்ளியும் இருந்தால் என்று எழுதுவேன்’ என்றான். தனிப்பாடல்கள் படிக்கும்போது, ‘நாகப் பாம்பின் படம் போல அகன்ற அல்குலை உடைய எனது பெண், உன்னையே எண்ணி உருகுகிறாள் அரசே!’ என வரும். இந்த உவமைகளை எல்லாம் படிக்கும்போது அத்தனை கிலுகிலுப்பாய் இருக்கும். அதையும் தாண்டி, பின் நவீனத்துவக் கதைகளும், நாவல்களும் எங்களுக்குப் பாடமாக இருந்தன. நாங்கள் வட்டமாக அமர்ந்து சாரு நிவேதிதாவின் ‘ஜீரோ டிகிரி’ நாவலைப் படித்தோம். கதை புரியவில்லை என்றாலும், அப்பட்டமான பாலியல் வர்ணனைகளும், கொச்சையான சொற்களும் எங்களுக்கு ஒருவித பரவச நிலையைக் கொடுத்தது. காணொளியிலோ, நிழல் படத்திலோ அல்லது நேரடியாகவோ என் பார்வையுள்ள நண்பர்களுக்குப் பெண் உடலைக் கண்டு ரசிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. நானோ, இலக்கியத்தில் சொற்களூடேதான் அவற்றைத் தரிசித்தேன். எனவே, கிலுகிலுப்பான இப்பகுதிகளைச் சிறப்பாகப் படித்துவிட்டு தேர்வுக்குச் செல்வேன். தேர்வு அன்று காலையில் எழுந்து, எல்லாக் கடவுள்களிடமும் கோரிக்கை வைப்பேன்; அதற்கு ஏதுவாக கோவில், மசூதி, தேவாலயம் என எல்லாமே எங்கள் விடுதிக்கு அருகிலேயே இருந்தன. போகிற வழியில் இருப்பதால், தல்லாகுளம் பெருமாளிடமும் “கைவிட்டிறாத” என வேண்டிவிட்டுத்தான் செல்வேன். மிகச் சரியாக எல்லாக் கடவுள்களும் என்னைக் கைவிட்டுவிடுவார்கள். எனக்குத் தேர்வு எழுத, ஒரு பொம்பளப்புள்ள வந்து அமர்ந்திருக்கும்! ரசித்துப் படித்த வினாக்களை எல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டு, குறத்தியின் நாட்டு வளத்தையும், மலை வளத்தையும் எழுதுவேன். சரி, அந்த அகன்ற அல்குல் வினாவுக்காவது விடை எழுதுவோமென்று தொடங்கினா, “அல்குல்னா என்ன”-ன்னு அந்தப் புள்ள கேட்கும். ‘மச்சம்’ என்று குத்துமதிப்பா ஒரு பொய்யைச் சொல்லி, அந்த வினாவ எழுதி முடிச்சிருவேன். ‘என்னடி! உனக்குக் காதோரத்தில் அல்குல் இருக்கு’ என்று பேசிக்காம இருந்தா சரின்னு மனசுக்குள்ள நெனச்சுக்குவேன்! தேர்வறையிலிருந்து வெளியே வந்ததுமே, “தல! பின்னிட்டேன்”, “வசந்தவள்ளி மேட்டர நொறுக்கி விட்டுட்டேன்”, “அந்த பாயிண்ட்டெல்லாம் ஸ்டிக் பென்னுலதான் எழுதினேன்” - இப்படி பலவாறா நம்ம வயித்தெரிச்சல வளர்த்தெடுப்பானுங்க. பிறகு, “உனக்கு ஏதோ ஒரு புள்ள எழுதுச்சு போல?” என அப்படியே நைசா விசாரணை தொடங்கும். “நீ நாட்டு வளம் தானே எழுதின?” எனக் கேட்பார்கள்; “ஆமாம்” என்று உண்மையை ஒத்துக்கொள்வேன். இல்லை என்று பொய் சொன்னால், எல்லாப் பசங்களும் என்னைச் சுத்தி நின்னுக்கிட்டு, “அப்பறம் தல! பந்தடிக்கிற மேட்டர சொல்லும்போது எப்படி ரியாக்ட் பண்ணுச்சு? ஆர்வமாக் கேட்டு எழுதுச்சா?” - இப்படிப் பல வினாக்களைக் கேட்டு கிலுகிலுப்படையத் தொடங்கிவிடுவார்கள். அவர்களின் போதைக்கு நான் ஊறுகாயாய்ச் சிக்கவேண்டியிருக்கும். ஒருமுறை தேர்வு எழுத வந்த பெண்ணிடம் வழக்கம் போல, “பேர் என்ன” என்று கேட்க, “தேர்வு எழுதுற வேலையை மட்டும் பார்க்கலாமே!” எனச் சொன்னதும் ஆடித்தான் போனேன். அதிலிருந்தே, எப்போதும் எழுத வரும் பெண்களிடமே உரையாடும் பொறுப்பை விட்டுவிடுவேன். இருப்பினும், அன்று நடந்த திருப்பத்தை நானே எதிர்பார்க்கவில்லை. துன்பத்திற்குப் பிறகு இன்பம் வந்தாக வேண்டுமல்லவா? தேர்வை எழுதி முடித்ததும், “உங்களுக்குத் தேர்வு எழுதியதால் நான் நிறைய தெரிந்துகொண்டேன். இதுதான் என் நம்பர். இனி பரிட்சைனா நானே எழுத வாரேன். என்ன உதவி வேண்டுமென்றாலும் தயங்காம கேளுங்க” எனச் சொல்லிவிட்டு சென்றார் அந்தப் பெண்! எனக்குப் போட்டித்தேர்விற்கு எழுத வருபவர்கள் ஏனோ, கர்த்தர் அல்லது யோகா குழாமைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். நான் வினாக்களுக்கான விடையைச் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அவர்களோ, கிறிஸ்த்துவின் மகிமையையும், தியானத்தின் சிறப்பையும் எனக்குப் போதிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துதான் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள், நான் சொல்வதை அப்படியே விடைத்தாளில் எழுதிய பதிலி எழுத்தர்கள்தான். அதிலும், அதிகமாய் எனது தேர்வுகளை எழுதியவர்கள் பெண்கள்தான். எனக்குத் தேர்வு எழுத வந்தவர்களுள் மிகச் சிறந்தவர்களாக இருவரைக் குறிப்பிடுவேன். முதலாமவர் ஈஸ்வரி மேடம்; அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு புறமதிப்பீட்டுத் தேர்வுகள் அனைத்தையும் அவர்தான் எழுதினார். “நீ சொல்வதைக் கேட்கும்போதே அருமையாய் இருக்கும். அதனால்தான் உனக்கே எழுத வருகிறேன்” என்று சொல்வார். வேறு கல்லூரிகளுக்குச் சென்ற பிறகுதான் அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன். இன்னொருவர், எனக்கு M.Phil. தேர்வு எழுத வந்த புஷ்பலதா. சொல்வதை விரைவாகவும், பிழை இன்றியும் அவர் எழுதினார். பிழையின்றி எழுதியது உனக்கு எப்படித் தெரியும் என்பதுதானே உங்கள் ஐயம்? 5-ஆம் பக்கம் எழுதிக் கொண்டிருக்கும்போது, “அந்த 2-ஆம் பக்கத்தில் 2-ஆவது பத்தியில் சின்னதா ஒரு சந்தேகம். வாசிங்களேன்?” எனக் கேட்பேன்? இப்படி எனக்குச் சந்தேகம் இருப்பதுபோலச் சொல்லி, அவர்கள் சரியாகத்தான் எழுதுகிறார்களா எனச் சோதிப்பேன். நான் அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பதால், அதிகம் எழுத வேண்டியிருக்கும்; அந்தக் காரணத்திற்காகவே எனக்குப் பதிலி எழுத்தராக வர மறுத்தவர்களும் உண்டு. பதிலி எழுத்தராகப் பார்வையற்றோருக்குத் தேர்வு எழுதுவது என்பது சற்று கடினமான பணிதான். உடல் உழைப்போடு, அதீத பொறுமையும் அதற்குத் தேவை. தேர்வு முடிவுகள் வரும்போது, என்னைவிட அவர்கள் அடையும் மகிழ்ச்சி இருக்கிறதே! அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனது கல்விப் பயணத்தை மகிழ்வாக்கிய அனைத்து பதிலி எழுத்தர்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்று, 10-ஆம் வகுப்பில் அறிவியல் தேர்வை விரைவாய் எழுதி முடித்துவிட்டு அமர்ந்திருந்தேன். பக்கத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த அக்கா, எனக்கு எழுதிய அக்காவிடம், “என்னடி அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுருச்சா?” எனக் கேட்க, “சும்மா இருடி! இவனுக்கு எல்லாம் தெரியும். இப்பத்தான் அந்த கொஸ்டினுக்கு ஆன்சர் சொன்னான்டி” என்றதுமே, வெவரம் தெரியாத பச்சப்புள்ளையாகிய நானே சிரித்துவிட்டேன்! அந்தக் கொஸ்டின், மனித இனப்பெருக்க மண்டலம் பற்றி விளக்குக? விளக்கம் 1. அல்குல் - பெண்குறி. 2. கட்டுரையில் சுட்டப்பட்ட குற்றாலக் குறவஞ்சி வரிகள்: ‘வசந்தபூங் கோதைக் காலில் இருபந்து குதிகொண் டாட இருபந்து முலைகொண் டாட ஒருபந்து கைகொண் டாட ஒருசெப்பு லைந்து பந்துந் தெரிகொண்டு வித்தை ஆடுஞ் சித்தரை யெதிர் கொண்டாளே...’ ‘பருத்த மலையைக் கையி லிணக்கினார் கொங்கை யான பருவ மலையைக் கையி லிணக்கிலார்’. *** தொடர்புக்கு: [email protected] ![]() ‘ஐயா’ என்ற சொல்லால் நான் பலரை அழைத்திருக்கிறேன். நான் தமிழாசிரியர் என்பதால், பலராலும் அப்படியே அழைக்கப்பட்டும் இருக்கிறேன். ஆனால், அச்சொல்லின் பொருளாகவும், நடமாடும் வடிவமாகவும் திகழ்ந்தவர் பாலகிருஷ்ணன் ஐயா. நான், சிவகங்கை அரசு பார்வையற்றோருக்கான பள்ளியில் படிக்கும்போது எனக்கு அமைந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஐயா. 16/10/2018 அன்று ஐயா இறந்துவிட்டார் என்ற செய்தி என் மனதில் இடியாய் விழுந்தது. எனக்கு மட்டுமல்ல; அங்கு படித்த நூற்றுக்கணக்கான பார்வையற்றவர்களின் மனதிலும்தான். ஆம்! எங்கள் இதய சிம்மாசனத்தில் சப்பணமிட்டு அமர்ந்திருப்பவர் ஐயா. அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் துரை அவர்கள்; என் வகுப்புத் தோழர் இவர். ஐயா குறித்த நினைவலைகளை இப்படிப் பகிர்ந்துகொள்கிறார். “நான் 1990-இல் 1-ஆம் வகுப்பில் சேரும்போது எல்லாப் பையன்களையும் போல அழுதுகொண்டிருந்தேன். அப்போது, தன் சட்டைப் பொத்தான்களையும், கையில் வைத்திருந்த பேனாவையும் தொட்டுக் காட்டி அவரும் என்னோடு நெருக்கமானவர்தான் என்று புரியவைத்தார்”. ஒருமுறை தன் வகுப்பைக் கவனிக்காமல், பக்கத்து வகுப்பில் ஐயா நடத்திக்கொண்டிருப்பதைக் கவனித்து சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் அதிகமாய் அடி வாங்கியதையும் நினைவுகூர்கிறார் துரை. அப்போதும் அவர்தான் இவரை அடியிலிருந்து காத்திருக்கிறார். ஆம்! மற்ற ஆசிரியர்களின் பிரம்படியிலிருந்தும், சொல்லடியிலிருந்தும் தப்பித்து அடைக்கலமாவோருக்கு ஆறுதலாய்த் திகழ்ந்திருக்கிறார் ஐயா. அதற்காக அவர் தண்டனைகள் எதுவும் தரமாட்டார் என்று நினைத்துவிட வேண்டாம். அவர் தண்டனைகள் வினோதமானதாக இருக்கும்; அரவணைப்பும் அப்படித்தான். நான் செய்த தவறு ஒன்றிற்காக, தலைமை ஆசிரியர் அலுவலகம் வரை என் காதைப் பிடித்துத் தூக்கிச் சென்றதை எப்படி மறக்கமுடியும்? இன்னொரு முறை என் தவறுக்காய் அவர் தந்த தண்டனை, வழிபாடு! என் குலதெய்வத்தைக் கேட்டறிந்துகொண்டார். பிறகு அவர் எனக்குச் சொல்லிக்கொடுத்த வேண்டுதல், “குதிரையில் அமர்ந்திருக்கும் ஐயனாரே! வெள்ளை வேட்டி கட்டியிருக்கும் ஐயனாரே! எனக்கு நல்ல பண்பைத் தாரும் ஐயா!”. வேண்டுதலோடு ஐயனார் குதிரையில் அமர்ந்திருப்பார், வெள்ளை வேட்டி கட்டியிருப்பார் என்பதையும் எனக்குக் கற்றுக்கொடுத்துவிட்டார் மனிதர். ஐயா வகுப்புக்கு வருகிறார் என்றால் எங்களுக்கு மகிழ்ச்சியும், சில நேரங்களில் பயமும் தானாகவே வந்துவிடும். தான் வருவதை ஒலிக் குறியீடுகளால் அவர் அறிவித்துவிடுவார். பெருங்குரலெடுத்துப் பேசிக்கொண்டே வருவார்; சாவிக்கொத்தை ஆட்டிக்கொண்டே வருவார்; பிரெயில் முறையின் முதல் நிலையைக் கற்றுத்தரும் கோலிக்குண்டு டப்பாவை ஆட்டிக்கொண்டே வருவார். இப்படி ஏதேனும் ஒரு முன்னறிவித்தலோடுதான் எங்கள் வகுப்பில் வந்து மையம் கொள்வார் ஐயா. பிரெயில் அடிப்படைகளைக் கற்க உதவும் கட்டையின் மேல் கோலிக்குண்டுகளைப் பதமாக அடுக்கிவைத்துவிட்டு, ஒரு மந்திரம் சொல்வார். பிறகு 'ஃபூ' என ஊதுவார். எல்லாக் குண்டுகளும் சரிந்து விழுந்துவிடும். என் மந்திர சக்தியைப் பார்த்தாயா? என்று பயமுறுத்துவார்! “ஐயா! என்ன சாப்பிட்டீங்க?” என்று நாங்கள் கேட்டால், “கத்தரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், வெங்காயம், பெருங்காயம், கரிவேப்பிலை, பருப்பு எல்லாம் போட்ட சாம்பார்” என்று சொல்லி சிரிக்க வைத்த ஐயாவை எங்களால் எப்படி மறக்கமுடியும்? (அப்போது நாங்கள் சிரித்தோம்; குழம்பில் என்னென்ன கலந்திருக்கும் என்பதை அவர் நுட்பமாய் பாடம் நடத்தியிருக்கிறார் என்பது இப்போதுதானே புரிகிறது). “வீட்டு விலாசம்: N. ராஜரத்தினம், 23 A, குமரன் புதுத் தெரு, அருப்புக்கோட்டை, காமராசர் மாவட்டம்” என்ற என் அப்போதைய முகவரி எனக்கு மட்டுமல்ல; என் வகுப்பில் உள்ள எல்லோருக்கும் தெரியும். மற்றவர்கள் முகவரிகளும் எனக்குத் தெரியும்; கற்றுக்கொடுத்தவர் ஐயா. என் முன் எழுத்து என்னவென்று சொல்லிக்கொடுத்தவரே அவர்தானே! ‘கொடி காத்த குமரன்’ நாடகத்தில் நான் குமரன். இன்னொருவர் ஆங்கிலேயர். அவர் என்னை அடிக்கவேண்டும். பஞ்சு சுற்றிய கம்பைக் கொண்டுதான் அடித்தார் என்றாலும், பலமாய் அடித்துவிட்டார். ஒரே அழுகை. “பாலகணேசன்னு பேரு வச்சிட்டு அழலாமா? நடிகர் சிவாஜி பேரு கூட கணேசன்தான் தெரியுமா?” என்று என்னைத் தேற்றிவிட்டு, என் கண்ணீரைத் துடைத்த கைகளை என்னால் எப்படி மறக்க முடியும்? முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் கலந்துகொண்ட விழாவில் அந்த நாடகத்தை அரங்கேற்றி, அதற்காக எனக்கு வேட்டி கட்டி விட்ட கைகளை நான் எப்படி மறக்கமுடியும்? காகத்தைப் பாடம் செய்து பத்திரப்படுத்தி, அதை ஒவ்வொரு பார்வையற்றவனையும் தொட்டுப்பார்க்கச் செய்த ஐயாவை நாங்கள் எப்படி மறக்க முடியும்? பிரெயில் கடிகாரத்தை முதன்முதலில் தொட்டுப்பார்க்க வைத்த உங்களை நாங்கள் எப்படி மறக்க முடியும்? ஒருபோதுமே அது இயலாது ஐயா. ‘ஐயா’ என்ற சொல்லை நான் கேட்கும் வரை என் காதுகளிலும், மனதிலும் நீங்கள்தான் நிறைந்திருப்பீர்கள். 2000-ஆம் ஆண்டு, நான் மதுரை IAB மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கடைசியாக ஐயாவைச் சந்தித்தேன். நான் 10-ஆம் வகுப்பு படிக்கிறேன் என்பதையே பெருமகிழ்வோடு அவரிடம் சொன்னேன்; அவரும் அதே மகிழ்வோடு கேட்டுக்கொண்டார். சென்ற ஆண்டு, சிவகங்கை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி பள்ளிக்குச் சென்றோம். அப்போது ஐயாவைச் சந்திக்க இயலவில்லை; உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்தார். அப்போது வாய்ப்பு கிடைத்திருந்தாலும், அதே குழந்தைத்தனத்துடன், “ஐயா! நான் ஆசிரியராகிவிட்டேன்” என்று சொல்லியிருப்பேன். அவரும் குழந்தையாய் மாறி அதை ஏற்றுக்கொண்டிருப்பார். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டுப் போய்விட்டது. 1990-களிலேயே சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பார்வையற்றோருக்கென ஒரு சங்கத்தை ஐயா தொடங்கியதாக தற்போதுதான் தெரிந்தது. பணி நிறைவிற்குப் பின்னும் சம்பளத்தை எதிர்பாராமல் தன் உடல் ஒத்துழைக்கும் வரை ஐயா சிவகங்கை பார்வையற்றோர் பள்ளியில் பணியாற்றினார் என்பதையும் தெரிந்துகொண்டேன். காலம் முழுக்க தொடக்கப் பள்ளி ஆசிரியராய், சாதாரண சிறு நகர பார்வையற்றோருக்கு உதவும் தொண்டுள்ளம் படைத்தவராய் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார் ஐயா. எங்கள் அறிவுக் கண்ணைத் திறந்து ஒளியேற்றிய பெருங்குரலோன் அவர். எல்லோரும் ஆசிரியர்களை ஏணிகள் என்பார்கள். ஏணிகளைக் கூட தொட்டு நன்றி சொல்லிவிடலாமே! இவர் எங்கள் வேர்களாய் இருந்தார். மரத்தின் நிழலில், பழைய நினைவில் நாங்கள் ஒதுங்கி நின்றபோதும் எங்கள் உயரத்தை அவர் அண்ணாந்துதான் பார்த்தார். மரத்திற்கும், கிளைகளுக்கும் நன்றி தெரிவிக்க முடிந்த எங்களால் வேர்களைத் தொடக்கூட இயலவில்லை. ஆம், உங்களின் கரம் பற்றி உரையாடக் கூட இயலாதவனாகிவிட்டேனே நான்! (குறிப்பு: திரு. கோ. பாலகிருஷ்ணன் (1944-2018) அவர்கள், சிவகங்கை மாவட்டம் கீழடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது 25-ஆம் வயதில் பார்வையை இழந்த இவர், அதன் பிறகு பார்வையற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் பயிற்சி முடித்து, 1975-இல் திருவாரூர் பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்பு, சிவகங்கை அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு பணியிட மாற்றம் பெற்ற இவர், 2002-இல் ஓய்வு பெற்றார். 1992-இல், ‘பார்வையற்றோர் நலச் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவி, கல்வி அறிவு பெறாத உள்ளூர் பார்வையற்றோருக்குத் தேவையான தொழில், நிதி உதவிகளைப் பிறரிடமிருந்து பெற்றுத் தந்தார்). *** தொடர்புக்கு: [email protected] |