‘ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்’
இவ்வுலகம் தோன்றியது அறிவியலின் ஆதிக்கமா, ஆன்மீகத்தின் பௌதீகமா என்ற வினாவிற்கு விடை ஏந்தி நிற்கிறாள் பெண். நீந்தி வரும் அணுக்களை நீர்த்துப் போகச் செய்யாமல், தனக்குள் வாங்கித் தந்திரங்கள் பல செய்து, தோற்புகளை வெற்றியாக்கும் விந்தைதனை அவ்விந்திற்குக் கற்பித்துக் கருவாக்குபவள் பெண்.
தனது வயதிற்கேற்ற பக்குவத்துடன் பண்பாய் தன் வாழ்க்கைச் சக்கரத்தை செலுத்துபவள் பெண். வாழ்வோடு கொண்ட போராட்டங்களில், தன்மீது ஏற்றப்பட்ட குடும்பம் என்னும் சுமையைக்கூட எங்கும் புரட்டிப் போடாது, தனக்குள் புதைத்த பொக்கிஷமாய், சேரும் இடம் வரை சேதாரங்களையும் ஆதாரமாக கொண்டு பயணிப்பவள் பெண்.
தீயில் குளிப்பவளும் தீயைத் தீக்குளிக்க வைப்பவளும் பெண். பூமி அடி ஆழம் முதல் வானின் எல்லைகள் வரை, வர்ணிப்பதற்கு வாசகங்களாய் அமைபவள் பெண். போற்றுதலுக்குரியவளாய், காவியம்தனில் நாயகியாய், தரணியை ஆளும் சக்தியாய் உருபெற்றவள் பெண் என்றால் மாற்றுக் கருத்தில்லை.
ஆதி மனிதன் தன் நாடோடி வாழ்க்கையைகூட தனது மனையாளிடமே ஒப்படைத்திருந்தான். இவ்விதி விலங்குகளிடமும் காணக் கிடைக்கிறது. தன்னை ஒரு பலவீனமானவன் ஆளுவதை இயற்கை என்றுமே அனுமதித்ததில்லை. கணவன் கனத்திற்குரியவனாகவும், மனைவி மனையை ஆள்பவளுமாகவே கருதப்படுகிறாள்.
நாகரிகம் சற்று ஓங்கியிருந்த சங்க காலங்களில், ஆட்சிக் கட்டிலில் அமர அனுமதிக்கப்பட்ட என் பெண்ணினம், சுயமாக சிந்திக்கவும் அனுமதிக்கப்பட்டதன் உதாரணமே சுயம்வரம். ஆளுகையின் அரசிகளை கண்டு அஞ்சியது ஆணினம். விளைவு, அடுப்படியில் தள்ளியது; அன்றும் அச்சமறியா பெண்ணை உடன்கட்டை ஏற்றியும், ஊழ்வினை என்று குற்றஞ்சாட்டியும் கைம்பெண் என்ற கண்ணாடி கூண்டிற்குள் தள்ளியது. என் வீரத் திருமகள்கள் தனக்கு நிகழ்த்தப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் உரமாக்கியதன் விளைவாகத்தான் பல வேலு நாச்சியார்களையும் ஔவைகளையும் ஈன்றெடுத்தது என் தேசம்.
அடுப்படி புகுந்த என் பாட்டிகள், தன் மகள்களை கல்வியின் திறவுகோல் கொண்டு பாரதி கண்ட புதுமை பெண்களாக வார்த்தனர். ஆணாதிக்கத்தின் ஆளுகைகளை வீட்டிலும், நாட்டிலும், செல்லும் இடங்களெல்லாம் சந்திக்கும் என் சகோதரிகள், தங்களின் சுதந்திரத்தைத் தேடி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் கொடுமை. போகும் இடமெல்லாம் போர்க்கொடி தூக்கும் ஆணினம், எம் பெண்களை ஓட ஓட விரட்டுவதும், பாலியல் கொடுமைகளுக்குள் தள்ளுவதும், பெண்ணின் அடக்கத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதும், சாத்திரங்கள் படைக்க வேண்டிய சரித்திர தலைவிகளைக் கீழ்த்தரமாகப் பேசிப் புலகாங்கிதம் அடைவதும், நாகரிகத்தின் நன்மைகளைகூட நடத்தை மீறலாகக் கூறிக்கொண்டு பெண்களை வீட்டிற்குள் தள்ளி வீரம் பேசுவதும்தான் பெண்ணிற்கு ஆண் கொடுத்த சன்மானங்கள்.
‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைத்த விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என்ற வாக்கு இன்று பலித்தது. பெண் ஒளிபடைத்த கண்ணினவளாய், உறுதி கொண்ட நெஞ்சினவளாய் சாத்திரம் படைக்க, சரித்திரம்தனில் பெயரை பொன்னெழுத்தால் பொறித்துக்கொள்ள வீறுநடை போட்டு வருகிறாள். வந்தவளுக்கு வரவேற்புகள் தர மறுக்கும் ஆணாதிக்க சமூகம், வரதட்சணை என்ற வீரிய விஷ அம்பை எய்து பார்த்தது.
பல எரிவாயு உருளைகள் வெடித்தன; ஆண்களின் 'சுய வியாபாரம்' மீண்டும் மீண்டும் அரங்கேறிற்று. வெடித்த சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவையாய் புறப்பட்டாள் என் சிநேகிதி. சிந்திய விழித் துளிகளை ஒன்று சேர்த்தாள்; வேதம் புதிதாய் படைக்க இதோ புயலாய் பொங்குகிறாள்; போர்க்களம் புகும் என் பெண்மையின் ஆண்மையை எவரும் பூட்டு போட்டு பூட்டிவிட முடியாது.
முதல் பெண் மருத்துவராக முத்துலெட்சுமி அம்மையார், அன்பிற்கு தெரசா, வீரப் பெண்மணி ஜான்சி ராணி, விண்ணைத் தொட்ட கல்பனா சாவ்லா என சாதனை பெண்களின் பட்டியல் நீள்கிறது.
பெண் அன்பானவள் என்று சொல்லியே அடக்கி வைக்கும் இந்தச் சமூகத்தில், சமுக அநீதிகளைத் தீ கொண்டு எரித்திட பெண்மையே உன் மென்மைக்குள் ஒரு ஆண்மை வேண்டும். உன் அன்பில் அதிகாரமும் கம்பீரமும் வேண்டும்.
பூமி என்று சொல்லி உன்னை மிதிக்கப் பார்க்கும் மனிதர்க்கு, உன் பொறுமைக்குள் பல போர்க்குணம் உண்டென்பதை உணர்த்திடும் காலம் இது. ஓங்கிய மூங்கிலாய், ஓசையில் குயிலாய் நின் சாதனைகள் பெருக்கிக்கொள். நீ பெண் ஹிட்லர் என்று முத்திரை பெற்றாலும் பெருமை கொள். ஹிட்லராய் வாழ தைரியமும், துணிவும், ஆளுமையும் தேவை. அங்கனம் என் பெண்மையே! தலைக்கனம் அவசியம் இல்லை; துளி திமிர் இருப்பதில் பிழையில்லை.
அவசியம் இருப்பின், நீ சூரியனைச் சுட்டெரி; திங்களாய் மாறி நின் கணவனை பிரதிபலி. மெழுகாய் உருகியது போதும்; வீட்டுச் சிறைக்குள் விளக்காய் ஒளிர்ந்தது போதும். மீண்டும் சூரியனாய், எவரும் தீண்டவொண்ணா தீப்பிளம்பாய் சுடர் விடு. நன்மைகள் பல கொடு; நன்றி கெட்டவரை சுட்டெரித்திடு.
காலை மலர்ந்து மாலை உதிரும் மலரல்ல மகளிர். ஒருநாள் அவளுக்காய் ஒதுக்கிப் பின் அவளது வாழ்நாள் திருடும் கள்வர்களே! முடிந்தால் மாற்றம் கொள்ளுங்கள் அல்லது ஒதுங்கிப் போங்கள்!
--
கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]