தரமான கல்வி, வேலைவாய்ப்பு, மறுக்கப்படும் உரிமைகளை மீட்டெடுத்தல் என பல்வேறு நோக்கங்களைச் சுமந்தபடி, பார்வையற்றோருக்கென நிறைய அமைப்புகள் இங்கு போராடி வருகின்றன. பார்வையற்றோர் என்ற பொதுமைப்படுத்தல் காரணமாக, பார்வையற்ற மகளிரின் பல்வேறு பிரத்யேகமான பிரச்சனைகள் பேசுபொருளாகாமலும், பொது விவாதத்திற்கு உட்படாமலும் பல காலங்களாகத் தேங்கிக்கிடந்தன. இத்தகைய நிலையை மாற்றி, பார்வையற்ற மகளிரின் உரிமைக் குரல்களை வெளிக்கொணர கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதுதான் பார்வைச்சவாலுடைய மகளிர் சங்கம் (Women Association of Visually Challenged).
இன்றளவும் தமிழக பார்வையற்ற பெண்களின் ஒரே அடைக்களமாகத் திகழும் அந்த அமைப்பின் நிறுவனரும் தலைவியுமான திருமதி. வனஜா அவர்களை மகளிர்தின சிறப்பு நேர்காணலுக்காக சந்தித்தேன். இதழின் சார்பாக நான் அவருக்கு மகளிர்தின வாழ்த்துகளைத் தெரிவிக்க, பதிலுக்கு எனக்கும் அவர் தனது வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு என் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார். மிகுந்த நேர்மறை அணுகுமுறையோடு நிதானமாக பேசினார்.
பொதுவாக பெண்களுக்கான அமைப்பு என்றாலே, அதன் அமைப்பாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் பெண்ணியம் என்ற பெயரில் ஆணாதிக்கத்தைச் சாடுகிற தொனியில் செயல்படுவார்கள். ஆனால், திருமதி. வனஜா அவர்கள் இதுபோன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஊக்கமும் உத்வேகமும் தனக்கு ஆண்களிடமிருந்தே கிடைத்தது என்று உளமார சொல்கிறார்.
பொதுத்துறை வங்கி ஒன்றில் உயரதிகாரியாக பணிபுரிந்தபடி, சிறந்த இல்லத்தரசியாகவும், தனது அமைப்பின் மூலமாகப் பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்கிறார். பார்வையின்மை என்கிற தன் உடல் குறையைப் பின்னுக்குத் தள்ளி, இத்தனை தளங்களில் தான் தொடர்ந்து இயங்குவதற்கு தனது சரியான திட்டமிடலும், தன் கணவரின் ஒத்துழைப்புமே முக்கியக் காரணிகள் என்கிறார். இவரது கணவர் திரு. சத்யா அவர்களும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்பது நம்பிக்கைத் தரும் கூடுதல் தகவல்.
அவரது அமைப்பின் மூலமாக பார்வையற்ற மகளிரிடையே மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றிக் கேட்டால், பார்வையற்ற அல்லது பார்வைக் குறைபாடுடைய பெண்களை படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று முதலில் வகைப்படுத்திக்கொள்கிறார்.
படித்த பெண்களுக்கான ஒரே இலக்கு, வேலைவாய்ப்புதான். அந்த வகையில், பல்வேறு போட்டித்தேர்வுகளை அந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சிகளைத் தனது அமைப்பின் மூலம் அவ்வப்போது ஏற்பாடு செய்வதாகக் கூறும் அவர், அவர்களுக்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள கற்றல் உபகரணங்களான (Specially Designed Learning Aids) டி.வி.டி. பிளேயர்கள், ஃப்ளெக்ஸ்டாக் போன்றவற்றை வழங்கி வருகிறார்.
பார்வையற்ற பெண்களுக்கான மறுவாழ்வை பொறுத்தவரை, திருமதி. வனஜா அவர்கள் தனது சிந்தனையையும் செயல்பாட்டையும், படித்த பெண்களைவிட படிக்காத பெண்களை நோக்கியதாகவே அமைத்துக்கொண்டுள்ளார்.
“இங்கு, படித்த பெண்களைவிட படிக்காத பெண்களுக்கே நமது உதவி அதிகம் தேவைப்படுகிறது. காரணம், ஏதோ ஒரு சூழலில் அவர்கள் படிப்பைக் கைவிடுகிறார்கள் அல்லது அவர்களுக்கு படிப்பு மறுக்கப்படுகிறது. அதேசமயம், அவர்கள் வளர்கிறார்கள்; திருமணம், குழந்தைகள் என்று அவர்களின் பொறுப்புகளும் அதிகமாகின்றன. குடும்பம் என்று வந்துவிட்டால், ஒரு பார்வையுள்ள பெண்ணைப்போல வெறும் இல்லத்தரசியாக இருந்துகொண்டு கணவன், குழந்தைகளைப் பராமரிப்பதோடு தனது கடமை முடிந்துவிடுவதாகப் பார்வையற்ற பெண்கள் கருதுவதில்லை. காரணம், அவர்களின் வறுமை. ஆகவே, தனது வழக்கமான கடமைகளைச் செய்தபடி, அவர்கள் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். இத்தகைய சூழலில் அவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர்வதோ, அதில் சாதிப்பதோ அத்தனை எளிதானதில்லை. எனவேதான், எங்கள் அமைப்பின் வாயிலாக அவர்களுக்கு பொருளுதவி செய்கிறோம். அவர்களின் வியாபாரத்திற்கான பல்வேறு பொருட்களை இலவசமாக வழங்கி, அந்தப் பெண்கள் சம்பாதிப்பதை ஊக்குவிக்கிறோம்”.
பார்வையற்ற பெண் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர் அதீத பாதுகாப்பு (Over Protection) உணர்வோடு வளர்க்கிறார்கள் அல்லது பேதம் காட்டுகிறார்கள். இந்த எதார்த்தம் குறித்து அவரிடம் கேட்டால், குறைகூறும் மனப்பான்மையை தவிர்த்துவிட்டு, மிகுந்த முதிர்ச்சியோடும் நேர்மறையாகவும் இந்த சிக்கலை அணுக விரும்புகிறார்.
“இந்த பிரச்சனைக்கு முழுமுதற்காரணம், பாசம் கலந்த அறியாமைதான். பெற்றோரின் அதீத பாதுகாப்பு உணர்வாலோ அல்லது தன் குழந்தையின் இயலாமை மீதான கழிவிறக்கத்தின் காரணமாகவோ அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்களோடே வைத்துக்கொள்கிறார்கள். ஆகவே, அக்குழந்தை கல்வி பெற இயலாமல் போய்விடுகிறது. இதுபோன்ற தருணங்களில், அவர்களிடம் நீண்ட உரையாடல்கள் மேற்கொண்டு, பார்வையற்ற பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதைப் புரியவைக்க வேண்டும். பார்வையற்ற பெண்களை பொறுத்தவரை, அவர்களுக்கு பெற்றோரைவிட பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வேறு எவராலும் வழங்கிவிட இயலாது. அதே நேரத்தில், அந்தப் பெண்களும் எல்லாவற்றிற்கும் பெற்றோரையே சார்ந்திராமல், தன்னால் எல்லாம் முடியும் என்பதை பெற்றோர் ஏற்கும் வண்ணம் செயலாற்றிக் காட்டிட முன்வர வேண்டும்.
பொதுச் சமூகமும் பார்வையற்றவர்கள் மீதான தங்கள் பரிதாபப் பார்வையை விடுத்து, அவர்களின் திறமையை அங்கீகரிக்க வேண்டும். என் அனுபவத்தில் சொல்வதானால், சமூகத்தின் மனப்போக்கில் பெரிய அளவிலான மாற்றங்கள் வந்துவிட்டதாக நான் கருதவில்லை. ஆனால், அந்த மாற்றத்தை நோக்கிய முன்னெடுப்பாகவே பார்வையற்றோராகிய நமது அன்றாட செயல்பாடுகள் அமைதல் வேண்டும். திறந்த மனதோடு பரஸ்பரம் மேற்கொள்ளும் நீண்ட உரையாடல்களே இதை சாத்தியமாக்கும் என நம்புகிறேன்” என்றவரிடம், பார்வையற்ற ஆண்களை பார்வையுள்ள பெண்கள் திருமணம் செய்துகொள்வதுபோல், பார்வையற்ற பெண்ணை ஒரு பார்வையுள்ள ஆண் திருமணம் செய்துகொள்வது அரிதாக உள்ளதே எனக் கேட்டேன்.
“எல்லா காலங்களிலும் பார்வையற்றவர்களிடம் இது ஒரு விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது என்றாலும், தற்போது இந்த நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். அதேசமயம், இப்போது பார்வையற்ற தம்பதிகளின் பார்வையுள்ள பிள்ளைகளுக்கு வரன் கிடைப்பதில் நிறைய தடைகளை அந்த பார்வையற்ற தம்பதிகளும், அவர்களின் பிள்ளைகளும் எதிர்கொள்கிறார்கள்” என்றார். இப்படி ஒரு புதிய, ஆனால் நிச்சயம் தீர்வு காணப்பட வேண்டிய சிக்கலை என்னிடம் அவர் சொன்னபோது, மிகுந்த அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. போதிய விழிப்புணர்வை சம்பந்தப்பட்டவர்களிடம் ஏற்படுத்துவதே இந்த சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வு என்கிறார் அவர்.
பார்வையற்றோரின் மேம்பாட்டில் அரசின் கடமைகள் குறித்துக் கேட்டால், பள்ளிக்கல்வி தொடங்கி, பல்வேறு பயிற்சிகள், உதவித்தொகைகள் என சிறப்பாகச் செயல்படும் அரசு, வேலை என்று வந்துவிட்டால் தன் கடமையிலிருந்து பின்வாங்குகிறது என்று கூறும் திருமதி. வனஜா அவர்கள், தற்போது அரசின் பல்வேறு துறைகளில் காணப்படும் பின்னடைவு காலிப் பணியிடங்களில் பார்வையற்றோருக்கான ஒதுக்கீட்டில் அவர்களை நியமனம் செய்தாலே அதிக பார்வையற்றோர் இதனால் பயன்பெறுவார்கள் என்கிறார்.
உங்கள் அமைப்பின் எதிர்காலத் திட்டம் என்ன என்று கேட்டேன். அனைத்து பேட்டிகளிலும் இடம்பெறும் வழக்கமான கேள்வி என்றாலும், அன்பின் ஈரம் சொட்டச் சொட்ட அவர் தந்த பதில் என் கேள்வியை உயிர்ப்புடையதாக்கியது. நாற்பது வயதிற்கு மேற்பட்ட பணிக்குச் செல்லும், செல்லாத, தனியாக வசிக்கும் பார்வையற்ற பெண்களுக்கென விடுதி ஒன்றைத் தொடங்கும் திட்டம் உள்ளதாகவும், அது இன்றைக்கு அவசியமான ஒன்று எனவும் கூறினார்.
“நன்கு படித்து, பணியிலுள்ள பார்வையற்ற பெண்களில் பலருக்கு உரிய வயது வந்தும், பல்வேறு சமூகக் காரணங்களால் திருமணம் நிகழாமல் போய்விடுகிறது. துணையாக இருந்த பெற்றோரின் மறைவுக்குப்பின், அந்தப் பெண்கள் தனித்து விடப்படுகிறார்கள். ஒருவித பாதுகாப்பின்மையும் அவநம்பிக்கையும் அவர்களைத் தொற்றிக்கொண்டுவிடுகிறது. படித்த பெண்களுக்கே இந்த நிலை என்றால், படிக்காத பெண்களின் நிலை இன்னும் மோசம். எனவே, அத்தகைய சூழலில் தள்ளப்படும் பார்வயற்ற பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, அவர்களை அரவணைத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று முடித்த அவரின் குரலிலிருந்த தழுதழுப்பும், தாய்மையின் பரிவும் இப்போதும் என் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.
--
தொடர்புக்கு: [email protected]