வெளிச்சம் என்பது இருளைப் போக்குவது தானே? அது எப்படி இருளை உருவாக்குவதற்குத் துணை செய்யும்? ஆமாம், வெளிச்சம் தானே நிழல்களை உருவாக்குகின்றது? பிரம்மாண்டமான நிழல்கள் தானே இருள்? விடியலைத் தரும் சூரியன் தானே இரவையும் தருகிறது? சூரிய ஒளி தருகின்ற வெளிச்சம் இயற்கையானது; இயல்பானது. ஆனால், திரையில் செலுத்தப்படும் வெளிச்சம் முற்றிலும் செயற்கையானது; முறையாகத் திட்டமிடப்பட்டது. தவறான இடத்தில் செலுத்தப்படும் வெளிச்சம் தேவைப்படும் இடங்களில் இருளை ஏற்படுத்துகிறது; கண்களை கூசச்செய்து அவசியமான இடங்கள் மறைக்கப்படவும் செய்கிறது.
கலை என்பதும் ஒருவகையான அறிவியல்தான்! ஏனென்றால், அறிவியல் என்பது என்ன? தனி நபர்களால் கண்டுபிடிக்கப்பட்டவையும் உருவாக்கப்பட்டவையும் பொதுச் சமூகத்திற்குப் பயன்படுவது அறிவியல் ஆகிறது. அதேபோல, தனிநபர்கள் அறிந்தவற்றை, உணர்ந்தவற்றை எழுத்து, இசை, நாடகம், ஓவியம் போன்றவை வாயிலாக பொதுச் சமூகத்திற்கு வழங்குவது கலை ஆகிறது.
கலை என்பதை அறிவியல் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், இன்னொன்றையும் மறுக்கக்கூடாது. ஆமாம்! அறிவியலில் மிகவும் மெச்சப்பட்ட கண்டுபிடிப்புகள், பிற்காலத்தில் தவறானவை அல்லது பயனற்றவை என ஒதுக்கப்படும். அப்படியானால், கலைப் படைப்புகளையும் மறு ஆய்வு செய்யலாம்தானே?
இவ்வளவு பீடிகைகள் எதற்காக என்றால், கலைப் படைப்புகள் அல்லது படைப்பாளிகள் என்றாலே புனிதத் தன்மையுடன்கூடிய ஒளிவட்டம் நமக்குத் தோன்றுவது வழக்கம். இவ்வளவு காலமும் உயர்ந்த பீடத்தில் வைத்து, போற்றி, ஆராதித்து வந்த ஒன்றை, மீண்டும் பொதுவெளியில் நிறுத்துவது சற்று சங்கடத்தை ஏற்படுத்துவது இயற்கைதான். மீண்டும் பொதுவெளியில் வைத்து, பழுதுபார்த்து, மீண்டும் பயன்படுத்தலாமா அல்லது இனி பயன்படாது என்ற முடிவிற்கு வரலாமா என்பதான முயற்சிதான் இது. அதாவது, படைப்புகளையோ அல்லது படைப்பாளிகளையோ குற்றம் சாட்டுவது இதன் நோக்கம் அன்று என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும், நம்ப வேண்டும் என்பதே இதன் மூலமாக யாம் தெரிவிக்கும் பொறுப்புத் துறப்பு.
உண்மையில் திரையில் காண்பன பெரும்பாலும் மாயைதான். அங்கு போய் நிஜத்தைத் தேடுவது சரியாகாது. ஏனென்றால், மரத்தடியில் கூட்டம் கூட்டி தீர்ப்பு வழங்கும் சின்னக் கவுண்டர், நாட்டாமை போன்றோரை உண்மையில் பார்த்திருக்கிறோமா? ஆறுச்சாமி, துரைசிங்கம் போன்ற அதிரடியான அதிகாரிகளைப் பார்த்திருக்கிறோமா? ஆனால், சின்னக் கவுண்டர், நாட்டாமை, ஆறுச்சாமி, துரைசிங்கம் போன்ற கதாபாத்திரங்கள் திரையில் நாம் கண்டதைவிட நிஜத்தில் இன்னமும் கொடூரமான குணம் நிறைந்தவர்களாக நம்மைச் சுற்றி உலவிக்கொண்டிருப்பதையும் எவராலும் மறுக்க முடியாது. இருந்தாலும், இவற்றைப் பிரித்தறியும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அதேநேரத்தில், உண்மையில் மாற்றுத்திறனாளிகளுடன் பழகவும் புரிந்துகொள்ளவும் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லையே!
பொதுவாக, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுமே திரைப்படங்களில் முறையாகக் காட்டப்படுகின்றனரா என்பதே பெரிய கேள்விதான். அப்படியானால், பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றி மட்டும் தனியாக ஏன்? உடல் உறுப்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் ஓரளவிற்குத் தங்களது தேவைகளைச் சுயமாக நிறைவேற்றிக்கொள்வர்; மனவளர்ச்சி மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு தேவைக்கும் பிறரைச் சார்ந்திருப்பர்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் இத்தகைய விஷயங்களில் எந்த வகை? அவர்களால் சுயமாக இயங்க முடியுமா அல்லது பிறரைச் சார்ந்தே இருக்கின்றனரா? இந்தக் கேள்விக்கான பதில் பொதுச் சமூகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? பார்வை மாற்றுத்திறனாளிகள் எப்படி சாப்பிடுவர், எப்படி படிப்பர், எப்படி தேர்வு எழுதுவர், எப்படி உடைகளைத் தேர்ந்தெடுப்பர், எப்படி ஒப்பனை செய்வர், என்னென்ன பணிகளில் உள்ளனர் என்பதெல்லாம் பொதுச் சமூகத்திற்குத் தெரியுமா?
‘சின்னத்தம்பி’ திரைப்படத்தில் கவுண்டமணி, மாலைக்கண் நோய் உள்ளவராக இருப்பார்; ‘குற்றமே தண்டனை’ திரைப்படத்தில் விதார்த், குழாய்ப் பார்வை நோய் உள்ளவராக இருப்பார். இவை தவிர்த்து, ஏனைய திரைப்படங்களில் இடம்பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி கதாபாத்திரங்கள் அனைத்தும் முழுமையான பார்வையற்ற கதாபாத்திரமாகவே இருக்கும். இது நிஜமா, வெறும் நிழலா?
பூமியில் உள்ள எல்லாவற்றையும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. ஆனால், அருகில் இருப்பவர் பசியுடன் இருக்கிறார், பசியை வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறார், பசியைத் தணிக்க வழியில்லாமல் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள விரும்பாமல் இருப்பது மனிதத் தன்மை ஆகுமா? இல்லை அல்லவா? அதனால், சக மனிதர்களைப் புரிந்துகொள்ளும் நோக்கில், நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள இடைவெளிகளை வெளிச்சமிட்டுக் காட்டும் முயற்சிதான் இது.
இந்தத் தொடருக்கான டிரெய்லரை இங்கு நிறைவு செய்கிறோம். முதல் பகுதிக்கான டீசர் இதோ: தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்ற பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளி கதாபாத்திரங்கள் பாடுகின்றனர்; பிச்சை எடுக்கின்றனர்; அல்லது பாடிக்கொண்டே பிச்சை எடுக்கின்றனர். அப்படியானால், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வேறு எதுவும் தெரியாதா அல்லது வேறு எதுவும் முடியாதா?
ஏன் முடியாது? இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் எவரும் பிச்சை எடுக்கவில்லை; இனிமையான குரல் வளம் கொண்டவர்களாக இல்லை; அவ்வளவு ஏன், இசைத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகக்கூட காட்டப்படவில்லை! மேலும், அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காக உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் காட்டப்படவில்லை. இயல்பான, வழக்கமான தொழில் செய்பவர்களாக பார்வை மாற்றுத்திறனாளிகள் காட்டப்பட்டுள்ளனர். அந்தத் திரைப்படம் தான் இத்தொடரின் முதல் திரைப்படமாக, வரும் இதழில்!
...வெளிச்சம் பாய்ச்சுவோம்
--
கட்டுரையாளர் ஈரோட்டிலுள்ள காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல.
தொடர்புக்கு: [email protected]