2017 சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்த சித்ராக்காவிடம் நான் கேட்டுப் பெற்ற புத்தகங்கள் இரண்டு. ஒன்று ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய ‘வெண்ணிற இரவுகள்’. படித்து முடித்தபோது இதயம் கனத்தது. மற்றொன்று, விடியல் பதிப்பகத்தார் வெளியிட்ட ‘பெரியார் இன்றும் என்றும்.’ படிக்க எடுத்தபோதே கை கனத்தது.
ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை, தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவை வைத்துப் பதிவு செய்துவிடலாம் என்ற முயற்சியில் மிகத் தொடக்கத்திலேயே தோல்வியடைந்துவிட்டேன். இதை முழுமையாகவெல்லாம் படித்து முடிப்பது சாத்தியம் இல்லை; ஒரு குறிப்பிட்ட விஶயத்தின்மீது பெரியாருடைய கருத்தினை அறிந்துகொள்கிற ஒரு ஒப்பீட்டு மூலமாக (for reference) பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்து மூடிவைத்ததோடு சரி, இந்தநாள் வரை நானும் அதுவும் பேசிக்கொள்ளாமல் தனக்கு வழங்கப்பட்ட பரப்பில் அழுத்தமாகவும் கம்பீரமாகவும் வீற்றிருக்கிறது அது.
இந்தச் சூழலில்தான், ஜூலை 14 2018 அன்று, பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை என்கிற அமைப்பும் வாசிப்பாளர் கோமதி குப்புசாமியும் இணைந்து இந்தப் புத்தகத்தை ஒலிவடிவில் வெளியிடவிருப்பதாகக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். மகிழ்வுக்கு இரண்டு காரணங்கள், 1. இவ்வளவு பெரிய புத்தகத்தை, பார்வையற்ற சமூகம் ஒலிவடிவில் பெறப்போகிறது என்பது. 2. ‘பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை’ ஒரு மாறுபட்ட சிந்தனையுடன் துவங்கப்படும் ஓர் அமைப்பு. அவசியம் ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவோடு அந்த நிகழ்விற்குச் சென்றேன் புத்தகம் வாங்கித் தந்த சித்ராக்காவோடு.
அரங்கின் உள்ளே
நிகழ்வு நடைபெறவிருந்த சென்னை எத்திராஜ் கல்லூரியின் அரங்கை நாங்கள் தேடிக்கொண்டிருந்தபோது, அந்த நிகழ்வில் பார்வையாளர்களாகவும், தன்னார்வத் தொண்டு புரியவும் (Voluntary Service) பணிக்கப்பட்டிருந்த அந்தக் கல்லூரி மாணவிகள் எங்களை அங்கு அழைத்துச் சென்றார்கள். தாங்களும் நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருப்பதாகச் சொன்ன அவர்களில் பெரும்பாலோருக்கு அது என்ன நிகழ்ச்சி என்பது தெரியவில்லை. அரங்கினுள் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையைத் தோற்றுவித்திருக்கிற பேராசிரியர்கள் திரு. முருகானந்தம் மற்றும் திரு. பூபதி இருவரிடமும் எங்களை அறிமுகம் செய்துகொண்டு அமர்ந்தோம்.
எத்திராஜ் கல்லூரி மாணவிகளே பெரும்பாலும் அரங்கை நிறைத்திருந்தார்கள். சுமார் 25 முதல் 50 பார்வையற்றவர்களே இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள் என்றாலும், பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் தாங்கள் சார்ந்திருக்கும் பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்காக ஏதோ ஒரு தளத்தில் தங்கள் காத்திரமான பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர்கள் என்பதே இந்த நிகழ்விற்குக் கிடைத்த முதல் வெற்றி.
அறிவியல் காரணமே, ஊழ்வினை அல்ல
நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றுப் பேசினார் அக்கல்லூரியின் தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் அரங்க மல்லிகா அவர்கள். “நான் பார்வையற்றவர்கள் என்று அழைப்பதில்லை. அகவிழியாளர்கள் என்றே அழைக்க விரும்புகிறேன்” என்று கனிவு காட்டியவர், நிகழ்வின் சிறப்பு விருந்தினர் திரு. விடுதலை இராஜேந்திரன் அவர்களை வரவேற்றுப் பேசுகையில், “நான் அவரை அரசியலுக்குள் நுழைக்கவில்லை; கல்வி குறித்துப் பெரியாரின் சிந்தனைகளைப் பேசும்படி கேட்டோம்” என்று சொன்னதன் மூலம், சில கட்டுப்பாடுகளுடன் நிகழ்வை நடத்திமுடிப்பதில் கவனமாக இருக்கிறார் என்பது புரிந்தது. முனைவர் அரங்க மல்லிகா அவர்களின் உரையைக் கேட்க, https://www.youtube.com/watch?v=v3Mwjx_6YkM.
ஒலிப்புத்தகம் குறித்த அறிமுக உரை நிகழ்த்திய திருவள்ளுவர் உறுப்புக் கல்லூரியின் பேராசிரியரும், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான திரு. முருகானந்தம் அவர்கள், “அகவிழியாளர்கள் என்று அழைக்க விரும்புவது அம்மா அவர்களின் பெருந்தன்மை; பார்வையற்றவர்கள் என்ற வார்த்தையை நாங்கள் ஓர் அடையாளமாகப் பயன்படுத்த விரும்புகிறோம்” என்றார். பார்வையற்றவர்களாகப் பிறப்பதற்கு ஊழ்வினை அல்லது விதி காரணமல்ல; என்பதை வலியுறுத்திய அவர், முற்போக்குவாதிகள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கும் பார்வையற்ற சமூகத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதையும், அதனைப் பரஸ்பர உரையாடல்களால் களைய முற்படுவதே தங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம் என்றும் சொன்னார். திரு. பேரா. முருகானந்தம் அவர்களின் உரையைக் கேட்க, https://www.youtube.com/watch?v=AnvGzq9RMa0.
அமைப்பு பற்றி அவர் விளக்கிக்கொண்டிருந்தபோதே, அவருடைய பேச்சு இடைநிறுத்தப்பட்டு, ‘பெரியார் இன்றும் என்றும்’ ஒலிப்புத்தகம் வெளியிடப்பட்டது. ஒலிப்புத்தகம் குறித்த கற்பனைகள் பார்வையாளர்கள் மனதில் இறக்கை கட்டிப் பறந்துகொண்டிருந்த சரியான தருணத்தில், அதன் சிறு கீற்றுகள் கோர்க்கப்பட்டு அனைவரின் காதுகளிலும் பாய்ச்சப்பட்டன. ஆனால், முழுக்க மேற்கோள்களால் நிரம்பியிருக்கிற ஒரு புத்தகத்தை, அப்படியே ஒலிவடிவில் தர நினைத்து, ஒற்றை மேற்கோள், அடைப்புக்குறி என அனைத்தையும் வாசித்திருப்பது, புத்தகத்தின் உயிர்க்கருத்திலிருந்து கேட்பவரின் கவனத்தைச் சிதறடித்துச் சோர்வுறச் செய்யும் என்பதே உண்மை.
விடியலுக்கு நன்றி
நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கியவர்களில் ஒருவரான வாசிப்போம் இணையதளத்தின் நிறுவனர் திரு. இரவிக்குமார் அவர்கள், இந்தப் புத்தகத்தின் அவசியம் குறித்தும், ஒலிப்புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்தும் துடிப்போடு பேசியது பார்வையாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதலில் இந்தப் புத்தகத்தை ஒலிவடிவில் பதிவு செய்ய அனுமதி வழங்கிய விடியல் பதிப்பகத்திற்கு அவர் நன்றி சொன்னபோது, நீண்டநேரமாக மருகிக்கொண்டிருந்த என் மனதின் அங்கலாய்ப்பைத் தணித்தார்.
பெரியார் குறித்து திரு. விடுதலை இராஜேந்திரன் அவர்கள் ஒரு பத்திரிக்கையில் எழுதியதை மிகப் பொருத்தமாக நினைவுகூர்ந்த இரவிக்குமார் அவர்கள், இந்த ஒலிப்புத்தக வாசிப்புப் பணியில் தான் இணைந்தது குறித்து தனது பெருமிதத்தை வெளிப்படுத்தினார். 1000 பக்கங்கள் கொண்ட இந்த ஆவனத்தின் ஒலிக்கோப்புகள் 21 பகுதிகளில் 394 அத்தியாயங்களைக் கொண்டது. ஒருநாளைக்கு ஒரு தலைப்பாகப் படித்துப் புதிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு அமர்ந்தார். திரு. இரவிக்குமார் அவர்களின் உரையைக் கேட்க, https://www.youtube.com/watch?v=jiIIBctEDqI.
அகமதிப்பெண் (Internal Marks) வழங்குங்கள்
ஒலிப்புத்தகம் உருவானதில் வாசிப்பாளர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை ஏற்படுத்திப் பைசா செலவில்லாமல் மிகப்பெரும் பணியை செய்து முடித்திருப்பவர் வாசிப்பாளர் கோமதி குப்புசாமி அவர்கள். அவர் இந்த செயல்முறை கருவுற்று உருப்பெற்ற விதத்தை எளிமையாக விளக்கினார்.
தனது நண்பர் பேராசிரியர் பூபதி இந்தப் புத்தகத்தைத் தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், படிக்கப் படிக்க அது தன்னைப் புதிய புரிதல்களும் நம்பிக்கையும் கொள்ளச் செய்ததாக வியந்து சொன்னார் கோமதி. “திரு. பூபதி அவர்கள் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆர்வம் கொண்டார். ஒரு பார்வையற்றவர் இந்த புத்தகத்தை மொழிபெயர்க்க விரும்புகிறார் என்கிறபோது, புத்தகத்தின் அமைப்பை அப்படியே ஒலிவடிவில் கடத்திட வேண்டும். எனவே, அதன் பத்திகள் தொடங்கி, மேற்கோள் குறிகள், அடைப்புக்குறிகள் என எல்லாவற்றையும் பதிவு செய்வது என முடிவு செய்து அவை விதிகளாக வரையறுக்கப்பட்டு, சிறு குறிப்புத் தொகுப்பாக வாசிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது” என எளிமையாகச் சொல்லிவிட்டார் கோமதி. எனக்கோ வாசிப்பாளர்களின் உழைப்புகுறித்து மனதில் பிரமிப்பு ஏற்பட்டது.
“பதிமூன்று வாசிப்பாளர்களை ஒரு வாட்ஸ் ஆப் குழுவாக ஒருங்கிணைத்து, புத்தகத்தின் பகுதிகள் அவர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டன. எந்தச் சிரமமும் இல்லை, இன்றைய தொழில்நுட்ப உலகில் இது எளிமையான செலவு பிடிக்காத வேலை. இதற்கு தன்னார்வத்துடன் கூடிய உழைப்பு மட்டுமே தேவை. ஆகையால் நீங்களும் ஒரு புத்தகத்தைப் பதிவு செய்து உங்கள் பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு பரிசாக வழங்கலாம்” என மாணவிகளை அறிவுறுத்தினார். “இந்தப் பணிக்கு உங்கள் பேராசிரியர்களிடம் அகமதிப்பெண் கேளுங்கள்” என்கிற கோமதியின் நேர்மறை உசுப்பேற்றலிலும், மதிப்பெண்கள் வழங்கிடுமாறு பேராசிரியர்களுக்கு அவர்விடுத்த வேண்டுகோளிலும், பார்வையற்ற சமூகத்தின் மறுமலர்ச்சி மீதான உள்ளார்ந்த அக்கறை வெளிப்பட்டது. செல்வி கோமதி குப்புசாமி அவர்களின் உரையைக் கேட்க, https://www.youtube.com/watch?v=Yf-o3tilfts&t=634s.
நெடுநாள் பாரம் நீங்கியது
ஒலிப்புத்தகத்தை உருவாக்கிய 13 தன்னார்வ வாசிப்பாளர்களில் 12 பேர் பெண்கள் என்று சொன்ன அந்த நிமிடம், நிகழ்வின் பெருமிதத் தருணம். அவர்களுள் பாவ்யா, பிரியங்கா என சிலர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்றிருந்தார்கள். வர இயலாதவர்கள் இந்தப் பணிகுறித்தத் தங்கள் அனுபவங்களைக் காணொலி மூலம் வழங்கியிருந்தார்கள். அவற்றுள் இப்போதும் மூளையின் மூலையில் கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு குரல் திருமதி. விஜயலட்சுமி பாரதி என்கிற விஜிபாரதி அவர்களுடையது.
“நான் அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகள் பணியாற்றி கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன். 1982ல் நான் ராணிமேரி கல்லூரியில் இசை படித்தபோது, எங்கள் வகுப்பில் ஒரு பார்வயற்ற மாணவி சேர்ந்திருந்தார். போதல், வருதல் என அவருக்கு ஒருவரின் உதவி தேவைப்படுவதை நான் உணர்ந்தேன். நானே அவரை அணுகி, என்னை அவரின் தோழியாக இணைத்துக்கொண்டு, கல்லூரி நாட்கள் முழுவதும் அவரோடே பயணித்தேன்.
கல்லூரி மரத்தடியில் நாங்கள் அமர்ந்துகொண்டு, பாடங்களை நான் வாசிக்க வாசிக்க, அவர் பிரெயில் முறையில் குறிப்பெடுத்துக்கொள்வார். அந்த கடக் கடக் சத்தமே ஒரு புதிய ரசிக்கும்படியான இசையாக இருந்தது. அவரோடான நாட்கள் மனதிற்கு ஓர் சுகமான அனுபவம். பிறகு கல்யாணம், குடும்பம், பணி என வாழ்க்கை போன போக்கில் ஓடினாலும், அவரின் நினைவுகளும், தொடர்ந்து அவரைப்போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற வாய்க்காது போனது மனதில் நீண்டநாள் பாரமாகவே அழுத்திக்கொண்டிருந்தது. இந்தப் பணியின்மூலமாக அந்த பாரம் நீங்கியது” எனத் தனக்கே உரிய சாந்தமான குரலில் சொன்னார். அந்தக் குரலிலிருந்த தாய்மையின் சுகந்தத்தைச் செவி நுகர்ந்து கொண்டுவந்து இதயத்தை நெகிழ்த்தியது.
“பெரியார் எல்லாப் பெண்களுக்குமே ஆதர்சமானவர் என்பதை மறுக்கமுடியாது. நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள் என்றாலும், விழாக்கள் கொண்டாடுவது தொடர்பான பெரியாரின் கருத்துகளில் முழுமையாக உடன்படுகிறேன்” என்று திருமதி. விஜிபாரதி அவர்கள் சொன்னதை, திரு. விடுதலை இராஜேந்திரன் தனது சிறப்புரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
விடியலுக்கு இது புதிய பரிமாணம்
நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கிய புதுவையைச் சேர்ந்த ஆய்வு அறிஞர் விடியல் பதிப்பகத்தின் திரு. கண்ணன் அவர்கள், தங்கள் பதிப்பகத்தைத் தோற்றுவித்து வழிநடத்திய சிவா அவர்களை நினைவுகூர்ந்தார். பெரியார் புத்தகத்தை ஒலிவடிவில் படைத்ததன்மூலம் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையால் இந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக விடியல் பதிப்பகம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது எனப் பெருமிதம் கொண்டார்.
ஒரு ஆய்வுப்பணி நிமித்தமாக, 1980 களில் பொதுவுடைமை இயக்கத் தோழர் ஐயா கண்ணன் அவர்களின் காரல்மார்க்ஸ் நூலகத்திற்கு தான் செல்ல நேர்ந்தபோது, சில பார்வையற்ற தோழர்களிடம் உரையாடும் வாய்ப்பைப் பெற்றதாகச் சொன்னார் திரு. கண்ணன். அவர்கள் ஐயாவின் வீட்டினைத் துள்ளியமாக வந்தடைவது குறித்தான தனது வியப்பினைக் கேள்வியாக அவர்களிடமே முன்வைத்திருக்கிறார். ஒவ்வொரு கட்டடத்திற்குமான இடைவெளிகளைக் காற்றின்மூலம் தாங்கள் அறிந்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்கள். அந்தப் பதிலை இன்றைய நெருக்கடியான நகரச்சூழலுடன் ஒப்பிட்டு, “நிச்சயமாக இந்த ஒலிப்புத்தகம் காற்றைப்போல சமூகத்தின் இடைவெளிகளை உணர உங்களுக்கு உதவும்” என நம்பிக்கை ஊட்டினார். திரு. கண்ணன் அவர்களின் உரையைக் கேட்க, https://www.youtube.com/watch?v=NLHf4VUAlv0.
வேண்டும் புதிய ஆய்வு
தனது மாணவர்களான பேராசிரியர்கள் முருகானந்தம் மற்றும் பூபதியின் சமூகம் சார்ந்த சிந்தனை குறித்துத் தன் பூரிப்பை வெளிப்படுத்திய முனைவர் சிவராமன் அவர்கள், “பெரும்பாலும் பார்வையற்றோருக்குச் செய்யப்படும் உதவிகள் புண்ணியம் என்ற கண்ணோட்டத்திலேயே அமைந்திருக்கின்றன; சமூகத்தில் இந்தக் கண்ணோட்டத்தை மாற்றப் பெரிதும் துணைபுரிபவை பெரியாரின் கருத்துகளே” என்றார். “மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஆய்வுகளில் பெரியாரின் கருத்துகளை இணைத்து அதன் பொருத்தப்பாட்டை ஆவணப்படுத்தி நிறுவ வேண்டிய கடமை இன்றைய இளம் மாணவர்களுக்கு அதிலும் குரிப்பாகப் பார்வயற்ற மாணவர்களுக்கு இருக்கிறது, அதற்கு இந்த ஒலிப்புத்தகம் சிறந்த மூலமாகத் திகழும்” என்று முடித்தார் நம்பிக்கையோடு. பேராசிரியர் திரு. சிவராமன் அவர்களின் உரையைக் கேட்க, https://www.youtube.com/watch?v=ZDlMafZtM0s.
நெகிழ்ச்சியான மேடை
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த திரு. விடுதலை இராஜேந்திரன் அவர்கள் தனது உரையில், தான் மிக நெகிழ்ச்சியாக உணர்வதாகக் கூறினார். ஒரு நிறுவனம் செய்திருக்க வேண்டிய பணியைத் தன்னார்வலர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் இணைந்து செய்திருப்பது பெரியாருக்கும் அவரின் கருத்துகளுக்கும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கிறது என அகமகிழ்ந்தார்.
முனைவர் அரங்க மல்லிகா அவர்கள் கேட்டுக்கொண்டபடி, திரு இராஜேந்திரன் அவர்களின் பேச்சு, அரங்கின் முன்வரிசையில் அமர்ந்திருந்த பார்வையற்றோரைக் கடந்து, பின் வரிசைகளை நிறைத்திருந்த அந்தக் கல்லூரி மாணவிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. பெண்கள் குறித்தும், பெண்கல்வி குறித்தும் பெரியாரின் கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தார். திரு. விடுதலை இராஜேந்திரன் அவர்களின் உரையைக் கேட்க, https://www.youtube.com/watch?v=qtVHHIY8Eu4.
நேரம்தான் நெருக்கடியா
இறுதியாக நன்றி பகர வந்த பேராசிரியர் பூபதியும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை குறித்து ஓரிரு நிமிடங்கள் பேசினார். நிகழ்வின் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்ததால், பார்வையாளர்களிடையே பேராசிரியர் சுபவீ மற்றும் முற்போக்குப் பேச்சாளர் மதிமாறன் இருவரின் வாழ்த்துக் காணொலிகள் எப்போது இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. காட்சிப்படுத்தப்பட்ட திரு. சுபவீ அவர்களின் காணொளி, வாழ்த்தை மட்டும் பகிர்ந்துகொண்டதும், திரு. மதிமாறன் அவர்களின் காணொளி சில வினாடிகளில் நிறுத்தப்பட்டு அதற்கு நேரமின்மை காரணமாகக் கூறப்பட்டதெல்லாம் அரங்கு தந்தவர்களின் சுதந்திரம் என்பதால், பெரியாரின் சுதந்திரமான கருத்துகளைக் கொண்டுசேர்க்க, பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை அமைப்பு தனக்கான மேடையை உருவாக்கிக்கொள்வது காலத்தின் கட்டாயம் என்று தோன்றியது.
மேலும், பேராசிரியர் முருகானந்தம் அவர்கள் சுட்டிக்காட்டியபடி, பார்வையற்ற சமூகத்திற்கும் முற்போக்கு பேசுபவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கும் இடையேயான அந்த இடைவெளி குறித்து உரையாடும் ஒரு களமாக இந்த நிகழ்வு பரிணமிக்காமல் போனதும், சிறப்பு அழைப்பாளர்கூட அதுகுறித்த தனது புரிதலைப் பகிராததும் என்னைப் போன்றவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.
தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகக் கருதிக்கொண்டு, புண்ணியம் என்கிற பெயரில் பார்வையற்றோருக்கு உதவிக்கொண்டிருக்கிற மத நம்பிக்கையாளர்கள்தான், இதுவரை பார்வையற்ற சமூகத்தில் நடந்தேறிய பெரும்பாலான மறுமலர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள். இவர்களைவிட, தாங்கள் அதிமேதாவிகள் என்று கற்பனை செய்தபடி, பார்வையற்ற சமூகத்திடமிருந்து விலகி நிற்கிற பல முற்போக்குவாதிகளிடமே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.
இந்த உண்மையை உணரவைத்த ‘பெரியார் இன்றும் என்றும்’ ஒலிப்புத்தக வெளியீட்டு நிகழ்வு, அதன் மாற்றுச்சிந்தனை காரணமாக, தமிழ்ப் பார்வையற்ற சமூக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.
--
தொடர்புக்கு: [email protected]