"I will teach her in a special way. So, promise me that you won't disrupt me". மேலே படித்த வரிகள் கண், காது, வாய் ஆகிய 3 புலன்களின் செயல்பாட்டை இழந்த குழந்தையின் பெற்றோரிடம், அக்குழந்தையின் வளமான எதிர்காலத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியர் கூறியவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தம் குழந்தைகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டவோ, தட்டிக் கேட்கவோ திராணியற்ற பெற்றோரிடமும், கண்டிக்கவோ, தண்டிக்கவோ உரிமையில்லாத ஆசிரியர்களிடமும் வளரும் இன்றைய இளம் தலைமுறையினர் இதுபோன்ற சம்பவங்களைக் கடந்து வரவோ, ஏன் கற்பனை செய்து பார்க்கவோ கூட வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்.
முப்புலன்களை இழந்த சாதனைப் பெண்மணி யார் என்று கேட்டால், ஹெலன் கெல்லர் என்ற பதில் உடனடியாகக் கிடைக்கும். இத்தகைய சாதனைப் பெண்மணியைச் செதுக்கிய சிற்பி யார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஹெலன் கெல்லரின் சாதனைகளைப் பட்டியலிடத் தெரிந்த நமக்கு, அவரது ஆசிரியரின் பர்சனல் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் ஆர்வமோ, நேரமோ இருப்பதில்லை. தன் சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும், சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகப் பரிணமித்தவருமான ஆனி சல்லிவன் (Anne Sullivan) குறித்து இக்கட்டுரையில் அறிந்துகொள்வோம்.
ஆனி சல்லிவன் என்று எல்லோராலும் அறியப்பட்ட ஜொஹானா மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் மேசி (Johanna Mansfield Sullivan Macy), அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பீடிங் மலை அகவம் (Feeding Hills Agawam, Massachusetts) என்ற இடத்தில், 14 ஏப்ரல் 1866 அன்று தாமஸ் மற்றும் ஆலிஸ் க்லோசி சல்லிவன் என்ற கல்வியறிவற்ற ஏழைத் தம்பதியினரின் மூத்த குழந்தையாகப் பிறந்தார். இவரது பெற்றோர் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர்கள். இவருக்கு ஹெலன் சல்லிவன், ஜேம்ஸ் சல்லிவன், மேரி சல்லிவன் மற்றும் ஜேம்ஸ் ஜிம்மி ஆகிய உடன்பிறப்புகள் இருந்தனர்; இவர்களில் மூவர் உடல்நலக் குறைபாட்டால் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.
5 வயதானபோது, நுண்மணி இமைப் படல அழற்சி (Trachoma) என்ற கண் நோய் இவரைத் தாக்கியது. அதன் விளைவாக, அவரது பார்வைப் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. தமது 8-ஆம் அகவையில் தாயாரை இழந்தார். பின் 2 ஆண்டுகள் அவரது குடிகாரத் தந்தையின் பராமரிப்பில் கடந்தன. பின், போதிய வருமானமின்மையால் தம் தந்தையாரால் கைவிடப்பட்ட இவரும் இவரது தம்பி ஜேம்ஸ் ஜிம்மியும், மாசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள டியூக்ஸ்பரி (Tewksbury) என்ற இடத்தில் இருந்த ‘Almshouse’ என்ற மக்கள் நெருக்கடி மிகுந்த, சீர்கேடுற்ற ஆதரவற்றோருக்கான இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்ட 2, 3 மாதங்களில், இவரது தம்பி ஜிம்மி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இப்போது சல்லிவனுக்குச் சொந்தம் என்று யாரும் இல்லை.
பார்வைக் குறைபாடு ஏற்பட்டதால் எழுதுவதோ, படிப்பதோ, பிற திறன்களை வளர்த்துக் கொள்வதோ இயலாமல் போகவே, வீட்டு வேலைகளைச் செய்வதிலேயே கவனமாக இருந்தார் சல்லிவன். 4 ஆண்டுகள் அந்த இல்லத்தில் கழிந்தன.
கல்வியில் முதன்மை
ஒருமுறை, அந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு வருகை தந்த உயர் அதிகாரி ஃபிராங்க்ளின் பெஞ்சமின் சாம்போன் (Franklin Benjamin Sanborn) என்பவர் கல்வியின்மீது இவருக்கிருந்த ஈடுபாட்டை அறிந்து வியந்து, பாஸ்டனில் உள்ள ‘Perkins School For The Blind’ என்ற பள்ளியை அவருக்கு அறிமுகப்படுத்தினார். உண்மையைச் சொல்வதென்றால், இவர் தமது 14-ஆவது வயதில், அதாவது அக்டோபர் 7, 1880 அன்றுதான் முறையான கல்வியைப் பெறத் தொடங்கினார். இக்கல்வியே இவரது எதிர்காலச் சரித்திரச் சாதனைகளுக்கு வித்தாய் அமையும் என்பதை அப்போது யாரும் கணித்திருக்கவில்லை.
புதுமையான பள்ளிச் சூழலில் நுழைந்த சல்லிவனுக்கு முதலாவது ஆண்டு சற்று கடினமாகவே கழிந்தது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்போடு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஊக்குவிப்பையும் சேர்த்துக்கொண்டு, முழுமூச்சுடன் படித்த சல்லிவனால் அந்த வகுப்பின் முதலிடத்தை வெகுவிரைவில் கைப்பற்றவும், பின் தக்கவைத்துக் கொள்ளவும் முடிந்தது என்பதுதான் ஆச்சரியம்!
அங்கு, பார்வையற்ற மற்றும் காதுகேளாதோர் பிரிவில் முதன்முதலாகப் பட்டம் பெற்றவராகிய லாரா பிரிட்ஜ்மன் (Laura Bridgman) என்பவரிடம் தற்போது நடைமுறையிலுள்ள எழுத்து முறையைக் (Manual Alphabets) கற்றுத் தேர்ந்தார். கண்களில் நடைபெற்ற தொடர் அறுவை சிகிச்சைகளால், பார்வையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆறே ஆண்டுகளில் பட்டம் பெற்ற சல்லிவன், 1886-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் ஆற்றிய சொற்பொழிவில், "Fellow-graduates: duty bids us go forth into active life. Let us go cheerfully, hopefully and earnestly, and set ourselves to find our especial part. When we have found it, willingly and faithfully perform it" என்று கூறி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
சல்லிவன்-ஹெலன் சந்திப்பு
இதற்கிடையில், தம் குழந்தையின் எதிர்காலம் குறித்து தீராத கலக்கம் கொண்டிருந்த ஹெலனின் பெற்றோர், காதுகேளாதோருக்கான சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்ட அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்பவரைச் சந்தித்தனர் (நீங்கள் நினைப்பது சரிதான்; தொலைபேசியைக் கண்டறிந்த அதே பெல்தான்). அவருடைய பரிந்துரையின்பேரில், பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு ஹெலனின் தாயார் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், ஹெலனின் குறைபாடுகள் மற்றும் நடத்தைகள் குறித்தும், அவருக்குப் பயிற்றுவிக்க முறையான பயிற்சி பெற்ற சிறப்பாசிரியரின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டிருந்தது.
அதைப் பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகம், அந்த ஆண்டின் சிறந்த மாணவியாகிய ஆனி சல்லிவனை அப்பணிக்குத் தேர்வு செய்தது. எனவே, அப்பள்ளியின் அப்போதைய நிர்வாக இயக்குனராக இருந்த மைக்கில் அனக்னோஸ் (Michael Anagnos) என்பவர், விடுப்பிலிருந்த சல்லிவனைத் தொடர்புகொண்டு விவரத்தை எடுத்துரைக்க, சல்லிவனும் மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார். தன் வாழ்நாள் முழுமையையும் ஓர் அறப்பணிக்காக ஒப்புக்கொடுக்கத் தயாராகிவிட்டார் சல்லிவன்.
6 வயது குழந்தையாக இருந்த ஹெலனை 3 மார்ச் 1887 அன்று அவரது வீட்டில் சந்தித்தார் சல்லிவன். அப்போது ஹெலனின் பெற்றோரிடம் சல்லிவன் கூறிய வார்த்தைகள்தான் கட்டுரையின் தொடக்கத்தை அலங்கரித்துள்ளன. ஹெலனுக்கும் சல்லிவனுக்குமிடையே புதிய நெருக்கம் மலரத் தொடங்கியது. இருவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு பயணிக்கப் போகிற காலமும், தூரமும் அதிகம் என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஹெலன் பெற்ற ஒளியும், ஒலியும்
ஹெலனது இல்லத்திற்கு வருகை தந்த சல்லிவனிடம் அவரது குணங்களைப் பற்றி விவரித்த அவரது தாயார், "Miss. Sullivan, I can't see her crying any longer; because it breaks my heart" என்று கூற, அதற்கு சல்லிவன் கும்மிருட்டும், நிசப்தமும் மட்டுமே சூழ்ந்திருக்கும் ஹெலனின் வாழ்வில் ஒளியையும், ஒலியையும் புகுத்துவதாக உத்திரவாதம் அளித்ததோடு, அவரது கண்டிப்பு கலந்த கற்பித்தல் முறைகளைத் தடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டிருந்த பாடத்திட்டம் ஹெலனுக்குப் பொருத்தமற்றது என்பதை உணர்ந்த சல்லிவன், ஹெலனது சொந்த விருப்பத்திற்கேற்பப் பாடங்களை வகுத்துக் கற்பித்தார். முதலில், ஒரு பொருளின் பெயரைச் சல்லிவன் ஹெலனின் கைகளில் மெதுவாக எழுத, ஹெலனும் எழுதக் கற்றுக்கொண்டார். எனினும், பொருளையும் அதன் பெயரையும் பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டார் ஹெலன்.
எனவே, பொருளையும் அதன் பெயரையும் ஒருசேரக் கற்பிக்க முடிவெடுத்த சல்லிவன், ஹெலனைத் தண்ணீர்க் குழாயின் அருகில் அழைத்துச் சென்றார். அவரது வலது கையில் தண்ணீரை ஓடவிட்டு, இடது கையில் ‘W A T E R’ என்று ஒவ்வொரு எழுத்தாக எழுதி, ஹெலன் பிழையின்றி எழுதும்வரைப் பொறுமையாகக் கற்பித்தார். அவரது முகம் சட்டென மலர்ந்ததைக் கண்ட சல்லிவன், மேலும் அவரை உற்சாகப்படுத்தினார். மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஹெலன், முழு ஈடுபாட்டுடன் 30 புதிய வார்த்தைகளை சில நிமிடங்களில் கற்றுக்கொண்டார். சல்லிவனைச் சந்தித்த ஆறே மாதங்களில், 575 வார்த்தைகளையும், சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும், பார்வையற்றோருக்கான புடைப்பு (Braille) எழுத்து முறையையும் கற்றுக்கொண்டார் ஹெலன்.
ஹெலனுக்கு 10 வயது நிறைவடைவதற்குள் லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மனி ஆகிய மொழிகளைக் கற்றுக் கொடுத்தார் சல்லிவன். அத்தோடு, சதுரங்க விளையாட்டையும் கற்றுக் கொடுத்தார். இயற்கையை நேசித்த ஹெலனுக்கு, அதன் அகோர முகத்தையும் புரிய வைத்தார் சல்லிவன். ஹெலனது பழக்க வழக்கங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. சல்லிவனது கண்டிப்பில் அதிருப்தி அடைந்திருந்த ஹெலனது பெற்றோர், அவரது முன்னேற்றத்தைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அவரது பெற்றோரின் அனுமதியுடன் 1888-ஆம் ஆண்டு பெர்க்கின்ஸ் பார்வையற்றோர் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஹெலனுக்கு, அவருடனேயே தங்கிப் பயிற்றுவித்தார் சல்லிவன். பெர்க்கின்ஸில் தொடங்கிய அறப்பணி, ஹெலன் ராட்க்லிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரைத் தொடர்ந்தது.
பொதுவாக, பாடங்களை ஹெலனது உள்ளங்கைகளில் தன் விரல்களால் எழுதியே கற்பித்தார் சல்லிவன். இவர்கள் படிப்பதற்காக மட்டும் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரங்களைச் செலவிட்டிருக்கிறார்கள். சல்லிவனது பொறுமையும், திறமையும் பாராட்டுக்குரியதன்றோ!
திருமண வாழ்க்கை (1905-1914)
ஹெலனின் ஆசிரியரான சல்லிவனுக்கும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகவும், சிறந்த இலக்கிய விமர்சகராகவும் விளங்கிய ஜான் ஆல்பர்ட் மேசி (John Albert Macy) என்பவருக்குமிடையே காதல் முளைவிடத் தொடங்கியது. மேசி பலமுறைத் தன் விருப்பத்தைக் கூறியும், ஹெலன் மீதிருந்த அக்கறையால் தொடர்ந்து நிராகரித்து வந்தார் சல்லிவன். இறுதியில், அவரது சம்மதத்துடன் மே 3, 1905 அன்று திருமணம் நடைபெற்றது.
அதற்குப்பின் மேசி, சல்லிவன், ஹெலன் மூவரும் ஒரே பண்ணை வீட்டில் வசித்ததாகவும், ஹெலனின் சில புத்தகங்கள் வெளிவருவதற்கு மேசி உதவியாக இருந்ததாகவும் சில வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஹெலன்-சல்லிவன் நட்பு, பணப்பற்றாக்குறை, ஹெலன் கெல்லரின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் சல்லிவனுக்கும், மேசிக்குமிடையே தொடர் கருத்து வேறுபாடுகள் ஏற்படவே, 1914-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழ்வதென முடிவெடுத்துச் செயல்படுத்தினர்.
இருவரும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை; ஜான் ஆல்பர்ட் மேசி முற்றிலுமாகச் சல்லிவனை விட்டு மறைந்த பின்னும், மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் சல்லிவனுக்குத் தோன்றவேயில்லை. புதிய உறவின் தோற்றமும், மறைவும் ஹெலன்-சல்லிவன் நட்பில் எந்தவித விரிசலையும் ஏற்படுத்தவில்லை. இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்க ஹெலன் என்ன தவம் செய்தாரோ தெரியவில்லை!
இறுதிக்காலம்
ஹெலன் கெல்லருக்கு முதலில் ஆசிரியராகவும், தலைசிறந்த வழிகாட்டியாகவும், இறுதியில் நல்ல நண்பராகவும் விளங்கிய சல்லிவனுக்கு, 1920 முதலே வலது கண்ணில் வலி ஏற்பட்டு பார்வை குறையத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, தம் 69-ஆம் வயதில் (1935) முழுப் பார்வையையும் இழந்தார். பின்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர், தமது 70-ஆவது வயதில், நியூயார்க்கின் வனமலைக் குயின்ஸ் (Forest hills queens, New york) என்ற இடத்தில், 20 அக்டோபர் 1936 அன்று ஹெலனது வீட்டில், அவரது கைகளைப் பிடித்தபடியே, இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார். அவரது பிரிவு ஹெலனை மட்டுமன்றி ஒட்டுமொத்த பார்வையற்ற சமுதாயத்தையே மீளாத் துயரில் ஆழ்த்தியது. அவர் இறப்பதற்கு 6 நாட்களுக்குமுன், கோமாவிற்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
சல்லிவனது சாதனையையும், போதனையையும் பாராட்டிய அப்போதைய அமெரிக்க அரசு, அவரது மறைவுக்குப் பின்னும் அவரைப் பெருமைப்படுத்த விரும்பியது. அதன்படி, அவரது சாம்பல் வாஷிங்டன் தேவாலயத்தில் (Washington National Cathedral) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உயர்ந்த குடியரசுத் தலைவர்களுக்கு மட்டுமே இத்தகைய மதிப்பு கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தி மிராக்கில் வொர்க்கர்
‘Teaching was done without sight or sound’ என்று பல்வேறு கல்வியாளர்களால் பாராட்டப்பட்ட சல்லிவனைத் தேடிவந்த பரிசுகளும், விருதுகளும், சிறப்புப் பட்டங்களும் ஏராளம்.
தம் வாழ்வில் விடியல் உருவாகக் காரணமாக இருந்த தமது ஆசிரியரின் சேவையைப் போற்றும் விதமாக, ‘My Teacher’ என்ற நூலை எழுதியுள்ளார் ஹெலன். மேலும், அவர் எழுதிய ‘The Story of My Life’ என்ற புத்தகத்தில், தம் உயர்வுக்காகச் சோர்வின்றி உழைத்த ஆசிரியரை ‘The Miracle Worker’ என்று குறிப்பிடுகிறார். பின்னாளில், வில்லியம் கிப்சன் (William Gipson) என்பவர் இதே தலைப்பில் கதைவசனம் எழுதி, வெளியான திரைப்படம் பல பரிசுகளையும் பாராட்டுக்களையும் வென்றுள்ளது.
1919 முதல், ஹெலனும் சல்லிவனும் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று, பலவாறு விரிவுரைகளை நிகழ்த்திப் பிரபலமானார்கள். 1924-இல், ‘American Foundation for the Blind’ என்ற அமைப்பு இவர்கள் இருவரையும் தங்கள் ஆலோசகர்களாக நியமித்துப் பெருமைப்படுத்தியது. 1930-இல், ஃபிலடெல்ஃபியாவின் டெம்புல் பல்கலைக்கழகம் இவர்களுக்கு கௌரவப் பட்டங்களைப் பரிந்துரைத்தது! ஹெலன் உடனடியாக ஏற்றுக்கொண்டார்; முதலில் அப்பட்டத்தை ஏற்க மறுத்த சல்லிவன், ஒராண்டிற்குப்பின் ஏற்றுக்கொண்டார். 1966 முதல், சிறப்பாகப் பணியாற்றக்கூடிய பார்வை மற்றும் செவித்திறனற்ற ஆசிரியர்களுக்கு, ‘ஆனி சல்லிவன் மேசி விருது’ (Anne Sullivan Macy Award) அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில், ஹெலனது பிறந்த நாளான ஜூன் 27 அன்று வழங்கப்பட்டு வருகிறது.
நான் மதுரை சுந்தரராஜன்பட்டியிலுள்ள IAB பள்ளியில் 12-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, எங்களுடைய தமிழாசிரியருக்கு அரசுப்பணி கிடைத்தது. அதைக் கொண்டாடும் முகமாக, எங்கள் வகுப்பிலுள்ள அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. எங்கள் வாழ்த்துகளை வரிசையாகத் தெரிவித்துக் கொண்டிருந்தபொழுது, "மகிழ்ச்சி தானே ஐயா?" என்று மாணவர்கள் சார்பில் ஒரு குரல் கேட்டது. அதற்கு அவரிடமிருந்து, "நிச்சயமாக இல்லை; இங்கு, நமது பார்வையற்ற சமுதாயத்திற்காகப் பணியாற்றும்பொழுது கிடைக்கின்ற திருப்தி, வேறெந்தப் பள்ளிக்குச் சென்று பணியாற்றினாலும் கிடைக்கப் போவதில்லை” என்ற பதிலே வந்தது. அப்போது, இது ‘Satisfaction’ அல்ல; வெறும் ‘Samalification’ என்று கிண்டலடித்திருக்கிறேன் நான். அவர் கூற்றின் பொருள் இன்னதென்று புரிந்துகொள்வதற்கும், பார்வையற்ற சிறப்பாசிரியர்களுக்கான பட்டயப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்தாதது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்துகொள்வதற்கும் எனக்கு அதிக காலம் தேவைப்படவில்லை.
எப்படிப் பார்த்தாலும், ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறக்கும் மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களது வீட்டிற்கு நேரடியாகச் சென்று, அக்குழந்தைகளின் பெற்றோருக்குச் சிறப்புப் பள்ளி குறித்த அறிமுகம் கொடுத்து, அவர்களிடம் போராடி அனுமதி பெற்று, குழந்தைகளைத் தங்கள் பள்ளிகளில் சேர்த்து, உணவு, உடை, உறைவிட வசதிகளை வழங்குவதோடு, கல்விக் கேள்விகள், பலவிதக் கலைகள், பழக்க வழக்கங்கள் எனப் பலவற்றைக் கற்பித்து, உடல், உள நலன்களைப் பாதுகாத்து, அவர்கள் வாழ்வில் அதிக உயரம் செல்லவேண்டும் என்பதற்காக தங்கள் சிரமங்களைப் பொருட்படுத்தாமல், பொறுமையுடனும், கனிவு கலந்த கண்டிப்புடனும், அர்ப்பணிப்பு மனப்பான்மையுடனும் அன்றாடம் பணியாற்றும் அனைத்துச் சிறப்பாசிரியர்களும் மிராக்கில் வொர்க்கர்களே!
--
(கட்டுரையாளர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]