முடிவில்லா முதன்மையும், புதுமை மாறாத் தொன்மையும், முதுமையில்லா இளமையும் பெற்ற நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளில் படர்ந்து, விரிந்து, வளர்ந்து, வாழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழ் வாழும் பகுதியிலுள்ள தமிழர்கள் 60 ஆண்டுகளுள் 32-ஆவது ஆண்டாகிய ஸ்ரீ விளம்பிப் புத்தாண்டின் முதல் நாளாகிய சித்திரை முதல் நாளை, சென்ற 14.04.2018 (தி.பி. 2049) அன்று தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்து சாஸ்திர முறைப்படியும், வானியல் சார்ந்த காலக் கணிப்பு முறைப்படியும் சூரியன் மேட ராசிக்குள் (மேஷம் = ஆடு) நுழையும் நாள் சித்திரை முதல் நாளாகக் கொள்ளப்பட்டு, வேண்டினோர்க்கு வேண்டிய வரமருளும் சூரிய பகவானை மகிழ்விக்க வேண்டுதல் நிறைவேற்றும் படலங்களும், சிறப்பு வழிபாடுகளும், விதவிதமான படையல்களும் அளிக்கப்பட்டன. மேலும், திருவிழாக்களின் பொது நிகழ்வுகளாகிய விருந்தினர் உபசரிப்பு, உறவினர் சந்திப்பு, பரிசுகளின் பரிமாற்றம் போன்றவையும் வழக்கம்போல அரங்கேறத் தவறவில்லை. இலங்கையில், புத்தாண்டின் சிறப்பு நிகழ்வாக வேப்பங்காய் பச்சடி உண்ணும் வினோத வழக்கமும் நடைமுறையில் உள்ளதாம்.
நாரதரும், கிருஷ்ணரும் உறவுகொண்டு பெற்றெடுத்த 60 குழந்தைகளின் பெயர்களே தமிழ்ப் புத்தாண்டு பெயர்களாக வழங்கப்படுவதாகத் தமிழர்களின் கலைக் களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ சான்று பகர்கிறது. நம் முன்னோர் நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என காலத்தை முறையாக வரையறுத்துள்ளனர். 60 நாழிகைகள் சேர்ந்தது ஒரு நாள் என்றும் வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் எனும் 6 சிறுபொழுதுகள் அடங்கியது ஒரு நாள் என்றும் இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என 6 பெரும்பொழுதுகளை உள்ளடக்கியது ஓர் ஆண்டு என்றும் பார்த்துப் பார்த்துக் கணித்த நம் முன்னோர், ஆண்டுகளின் கணக்கீட்டில் மட்டும் ஒரு தொடர்ச்சியற்ற பற்சக்கர முறையில் வகுத்திருக்கிறார்கள் என்று கருதுவது தமிழை இழிவுபடுத்தும் செயல் என்பதைவிட, தன்மானமுள்ள எந்தத் தமிழனும் ஏற்க மறுக்கும் வேதனைக்குரிய செயல்முறை என்பதுதான் தவிர்க்க முடியாத உண்மையாகும்.
தமிழர் வாழ்வியல்
பழந்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தனர். இயற்கையை அடிப்படையாகக் கொண்டே நாள், கிழமை, மாதம், ஆண்டு என அனைத்தையும் கணித்தனர். ஒரு நாள் என்பது காலையில் சூரிய உதயத்தின்போது உதயமாகி, அடுத்த சூரிய உதயத்தோடு முற்றுப் பெற்றது.
கிழமைகளைப் பொறுத்தவரை, சூரியக் கதிர்கள் பூமியின்மீது நேரடியாக விழும் முதல் நாள் ஞாயிறு என்ற சூரியப் பெயரிலும், அடுத்த நாள் திங்கள் என்ற சந்திரனின் பெயரிலும், அடுத்து வந்த நாட்களை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என சூரியக் குடும்பக் கோள்களின் பெயரிலும் அழைத்து மகிழ்ந்ததாகவும், பின்னர் அதுவே வழக்கமாகி வரலாற்றில் நிலைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மாதம் என்ற சொல் தமிழில் திங்கள் என்றும் வழங்கப்படுவதுண்டு. இந்த சொல், சந்திரனைக் குறிக்க உருவாக்கப்பட்டதாகும். அதாவது, சந்திரனின் அமாவாசை, பௌர்ணமி நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மாதங்கள் வகுக்கப்பட்டதாகச் சொல்வோரும் உண்டு.
சூரியன் பூமியைச் சுற்றி வரும் சுற்றுப்பாதையானது 30 பாகைகள் (Degrees) கொண்ட 12 பகுதிகளாகத் (ராசிகள்) தொகுக்கப்பட்டதாகவும், அந்த ராசிகளின் தொகுதி ஓர் ஆண்டு என்று கணக்கிடப்பட்டதாகவும் பழந்தமிழ் மரபு குறிப்பிடுகிறது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவை காலங்காலமாகத் தேர் போன்று தொடர்ந்து சுழன்றுகொண்டிருப்பதால், காலம் + தேர் = காலந்தேராகி, பின் ‘காலண்டர்’ என்ற சொல்வழக்கு உருவானது. தற்காலத் தமிழர்கள் நாட்களின் வரிசையையும், முக்கிய நிகழ்ச்சிகளையும், விடுமுறை நாட்களையும் குறித்துவைக்கப் பயன்படுத்தியதால் ‘நாட்காட்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ் மாதங்கள்
தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக்கொண்ட சூரியமான முறை மற்றும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சந்திரமான முறை என்ற இரு பெயர்களின் கீழ் வரையறுக்கப்படுகின்றன. சூரியமான முறை, சூரியன் உதித்து மறைதல், 12 ராசிகளுக்குள்ளும் நுழைந்து வெளியேறுதல் போன்ற சூரியனின் பூமிசார் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதோடு, ராசிகளின் பெயர்களே சூரிய மாதப் (Solar Months) பெயர்களாக வழங்கப்படுகின்றன. சந்திரமான முறையானது, சந்திரன் தேய்ந்து வளர்தல், சந்திரனின் நிழல் பூமியின்மீது விழுதல், பௌர்ணமி, அமாவாசை நிகழ்வுகள் போன்ற சந்திரனின் பூமிசார் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுவதோடு, சந்திரனின் பௌர்ணமி நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைகின்ற நட்சத்திரங்களின் பெயர்களையே சந்திர மாதப் (Lunar Months) பெயர்களாகக் குறிப்பிடுகிறது. கேரளாவில் சூரியமான முறையும், இந்தியாவின் பல பகுதிகளில் சந்திரமான முறையும் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, சூரியனை அடிப்படையாகக்கொண்ட சந்திர மாதப் பெயர்கள் வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிழமைகளைப் பொறுத்தவரை புதன், சனி நீங்கலான பிற 5 கிழமைகளுக்கும் தற்போதைய நடைமுறைப் பெயர்களே தனித்தமிழ்ப் பெயர்களாகும். புதனை அரிவன் என்றும், சனியைக் காரி என்றும் அழைப்பதைப் பழந்தமிழர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
தமிழ்ப் புத்தாண்டை தமிழர் புத்தாண்டாக்கிட
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம்’ நம் தமிழ் குடியின் பண்பாடும், பாரம்பரியமும் உலக அளவில் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த சான்றுகளாக, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பொறிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையின் சின்னமும், உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் (Harward University) தமிழ் இருக்கைகளுக்கான வெளிநாடுவாழ் தமிழர்களின் சமீபத்திய முன்னெடுப்புக்களும் விளங்குகின்றன. பிறமொழிக் கலப்பற்ற உயர்தனிச் செம்மொழி எனும் சிறப்புப் பெயர் பெற்ற நம் மொழிக்கு ஊறு விளைவிப்பதாகவும், சங்கம் அமைத்து வளர்த்த தமிழுக்கு பங்கம் வருவிப்பதாகவும் இருக்கக்கூடிய தமிழ்ப் புத்தாண்டுப் பெயர், காரணம் மற்றும் கொண்டாடப்படும் நேரத்தில் சில மாற்றங்களைப் புகுத்தி, உண்மையான தமிழர் புத்தாண்டை மலரச் செய்யலாம்.
தை முதல் நாள்
சங்க இலக்கியங்களில் தை மாதத்திற்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு சித்திரைக்குக் கொடுக்கப்படவில்லை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ ஆகிய தொடர்கள் தை மாதப் பெருமையைத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. பழையவற்றைக் களைவதற்கான போகிப் பண்டிகை இன்றளவும் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் காலத்தில் ஆவணி முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டதாகத் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
ஞாயிறை அடிப்படையாகக் கொண்ட தமிழர் வான சாஸ்திர முறைப்படி, சூரியன் முதல் 6 மாதங்கள் தென்திசையிலிருந்து வடதிசைக்கும் (உத்ராயணம்), அடுத்த 6 மாதங்கள் வடதிசையிலிருந்து தென்திசைக்கும் (தட்சினாயணம்) பயணிக்கிறது. தை முதல் நாள் சூரியன் தட்சினாயணத்தை முடித்துக்கொண்டு உத்ராயணத்திற்குள் நுழைகிறது. ராசிகளைக் கணக்கிட்டுச் சொல்வதென்றால், ஞாயிறு தனூர் ராசியிலிருந்து மகரத்திற்கு இடம் பெயர்கிறது. எனவே, இதுவே ஆண்டின் துவக்கமாக அறிவிக்க மிகவும் பொருத்தமான நாள் என்பதே தமிழ்ச் சான்றோர் மற்றும் தமிழறிஞர்களின் கூற்றாகும்.
திருவள்ளுவர் ஆண்டு
தமிழரின் சுப நிகழ்ச்சிகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களில் தொடங்கும் சமஸ்கிருத மொழியின் ஆதிக்கம், தமிழ்ப் புத்தாண்டுப் பெயர்களிலும் தொடர்ந்திருப்பது தமிழரின் வாழ்வு, மரபு, மாண்பு, மானம் ஆகியவற்றை இழிவுபடுத்துவதாக அமைகிறது. தமிழருக்கும், அவர்தம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கும் ஏற்பட்டிருக்கும் இழிவையும், அழிவையும் போக்கும் முகமாக, 1921-ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில், தமிழ் கடல் மறைமலை அடிகள் தலைமையில் பேரா. திரு. நமச்சிவாயம் முன்னிலையில் நடைபெற்ற அறிஞர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான சில முடிவுகள் வருமாறு:
- தொடர்ச்சியற்ற தமிழாண்டு வழக்கத்திற்கு மாற்றாக, தொடர்ச்சியான திருவள்ளுவர் ஆண்டு முறையைப் பின்பற்றுவது.
- திருவள்ளுவராண்டைத் தமிழராண்டாகக் கொண்டு வாழ்க்கை வரலாறுகளைக் கணிப்பது.
- தைத்திங்கள் முதல் நாளைத் திருவள்ளுவராண்டின் தொடக்கமாகக் கொள்வது.
- திருவள்ளுவர் பிறந்ததாகச் சொல்லப்படும் கி.மு. 31-ஆம் ஆண்டை முதன்மையாகக் கொண்டு, தற்போதைய கிரிகோரியன் நாட்காட்டியின்படி (Gregorian Calendar) நடைமுறையிலுள்ள ஆங்கில ஆண்டுடன் கூட்டி (2018 + 31 = 2049) கணக்கிடுவது.
இம்முடிவுகளை எடுத்ததில் தமிழ் தென்றல் திரு.வி.க., சைவப் பெரியார் சித்தானந்தம், தமிழ் நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ் நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார் மற்றும் தமிழின காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் ஆகியோர்க்கும் பங்குண்டு. இவர்கள் கூற்றுப்படி, திருவள்ளுவராண்டின் தொடக்கமாகிய தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகக் கொள்வோமேயானால்:
- 60 ஆண்டு சுழற்சி வராது.
- தமிழர் அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத, அருவருக்கத்தக்க வரலாறு முற்றிலுமாக அழிந்துவிடும்.
- தமிழ், தமிழரின் பெருமை மேம்படும்.
- நினைவில் கொள்வது எளிதாக இருக்கும்.
- சுமார் 80-க்கும் மேற்பட்ட உலக மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்ட உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய பொய்யில் புலவர் திருவள்ளுவரின் பெயர், புகழ் மற்றும் பெருமையை உலகறியச் செய்வதோடு, வரலாற்றிலும் நிலைபெறச் செய்யலாம்.
தைப்புத்தாண்டுச் சட்டம்
தமிழறிஞர்களின் மேற்சொன்ன எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, 1967 முதல் 2011 வரை தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சியினர் தை முதல் நாளைத் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவாகவும், அடுத்த நாளைத் திருவள்ளுவராண்டின் தொடக்கமாகவும் அறிவித்து அமல்படுத்தினர்.
2008 ஜனவரி 28-ஆம் நாள் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பிறப்பித்த, ‘தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடவேண்டும்’ என்ற சட்டம் எதிர்க்கட்சியினரின் முழு ஆதரவோடு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பின், 2011-இல் தமிழக முதல்வரான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள், ‘இந்த தைப்புத்தாண்டுச் சட்டம் இந்து தர்மத்தை அடிப்படையாகக்கொண்ட தமிழர் வாழ்க்கை முறைக்குப் புறம்பானது, பொருத்தமற்றது’ என்றும், ‘கலைஞர் அவர்களின் சுய விளம்பரத்திற்கான முன்னெடுப்பு’ என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி அச்சட்டத்தை நிராகரித்துவிட்டதுதான் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது.
முடிவாக
தமிழ்நாடு என்ற நமது மாநிலப் பெயரை எப்படி எவராலும் மாற்றவியலாதோ அதுபோல, தமிழரின் புத்தாண்டு வழக்கத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழாமலிருக்க என்ன செய்யலாம்?
- ஓர் இனத்தார் பல நூற்றாண்டுகளாகக் கடைபிடித்துவரும் மரபுசார் வழக்கங்கள் நவீனகால வாழ்க்கை முறையோடு பொருந்தாத பட்சத்தில், அவற்றை மாற்றி அமைப்பதாலோ அல்லது தவிர்த்துவிடுவதாலோ தவறேதும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. அந்த வகையில், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் சட்டத்தின் துணைகொண்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதுபோல, தமிழரின் நடைமுறைக்குச் சற்றும் பொருந்தாத அறுபதாண்டுப் புராணப் புனைகதைகள் அடியோடு அழிக்கப்பட வேண்டும்.
- தமிழ் கிறிஸ்தவர்கள் ஜனவரி முதல் நாளைத் தங்களுக்குரிய புத்தாண்டாகவும், இந்துக்கள் சித்திரை முதல் நாளைத் தங்களுக்குரிய புத்தாண்டாகவும் கொண்டாடி இன்புறட்டும். தமிழர்களின் மதச்சார்பற்ற பொது விழாவாக தைப்புத்தாண்டு அமையட்டும். அதை ஊக்குவிக்க, கலைஞர் வகுத்த மேற்சொன்ன சட்டம் புத்துயிர் பெறட்டும்.
- திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய செம்மொழியாம் நம் தமிழ் மொழியின் இனிமை, தமிழரின் உயர் பண்புகளை கருத்துச் செறிந்த இரண்டடிக் குறள்களாக வகுத்து, காலம் கடந்து புது வரலாறு படைத்திருக்கும் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சர்ச்சைகள் இருப்பினும், கருத்துப் பெரும்பான்மை பெற்ற கி.மு. 31-ஐ அடிப்படையாகக்கொண்டு, தமிழ் ஆண்டுகள் வழங்கப்பட வேண்டும்.
- வழக்கம்போல் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாளும் மாற்றமின்றித் தொடரட்டும்.
ஆக, தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவராண்டுத் தொடக்கம் என முப்பெரும் விழாக்களின் பிறப்பிடமாகவும், சிறப்பிடமாகவும், தமிழர் பண்பாட்டின் வளர்ப்பிடமாகவும் தை மாதத்தின் முதல் நாள் அமையும் நிலை உருவாகட்டும்!
‘தையே முதற்றிங்கள் தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதலே பொங்கல் நன்னாள்!’
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கனவு விரைவில் நனவாய் மாறட்டும். தமிழ்ப் புத்தாண்டு உண்மையான தமிழர் புத்தாண்டாய் மலரட்டும்!
--
கட்டுரையாளர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]