இந்நிலையில், நாயகி பெரிய கடன் தொல்லையில் சிக்கியிருப்பது நாயகனுக்குத் தெரிய வருகிறது. நாயகன் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்பதால், அவனிடம் எந்தவொரு பண உதவியையும் நாயகி கேட்கவில்லை. ஆனால், நாயகனோ தனக்கு ஓரளவிற்கு நிலையான வருமானமும் கணிசமான சேமிப்பும் இருப்பதால், நாயகிக்கு உதவ முன்வருகிறான். இருந்தாலும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நாயகி தயங்குகிறாள். ஆனாலும், நாயகன் அவளை ஏற்க வைக்கிறான். கூடவே தனது காதலைத் தெரியப்படுத்தி அதற்கும் சம்மதம் பெறுகிறான்.
இந்த சம்மதங்கள் பேசப்பட்ட அன்றைய இரவு நாயகன் ஒரு விபத்தில் சிக்குகிறான். நாயகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அறுவை சிகிச்சை செய்தால் பார்வை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார். இருக்கும் சேமிப்பு, மேலும் கடன் பெற்று அறுவை சிகிச்சை நடத்தப்படுகின்றது. இவையனைத்தும் நாயகன் விபத்தின் மயக்கத்தில் இருக்கும்போது நடக்கின்றன.
அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைத்தாலும், நாயகிக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்பதும் பணம் கிடைக்காமல் நாயகி என்னவானாள் என்பதுமே நாயகனுக்கு பெரும் கவலையாக இருக்கிறது. நாயகியை வேறு யாரும் பார்த்ததில்லை என்பதால், தேடவும் முடியவில்லை. நாயகிக்கு என்ன நடந்தது, தன்னைத் தவிர தானும்கூட பார்த்திராத நாயகியை நாயகன் எவ்வாறு தேடுகிறான், எந்தச் சூழலில் அவளைக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் ‘அதே கண்கள்’ திரைப்படம்.
இந்தத் திரைப்படத்தில் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். அதாவது ஏறக்குறைய திரைப்படத்தின் துவக்கத்திலேயே நாயகனுக்கு பார்வை கிடைத்துவிடும். அப்படியானால், இந்தத் திரைப்படம் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் குறித்துப் பேசுவதில் என்ன முக்கியத்துவம் பெறுகிறது?
திரைப்படத்தில் நாயகன் உட்பட மூன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ளனர். சமையல், களிமண் சிற்பங்கள் செய்யும் தொழில் என விதவிதமான தொழில் செய்பவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். ஆனாலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் இத்தகைய தொழில்கள் செய்வதை அரிதினும் அரிதான அதிசயம் போலக் காட்டவில்லை. ஆகவே, பார்வை மாற்றுத்திறனாளிகள் பல்வேறு விதமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், அது இயல்பான விசயம்தான் என்பதையும் காட்டிய இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் பாராட்டிற்கு உரியவர்.
அதே நேரத்தில், அவரவர் துறைகளைத் தவிர மற்ற விசயங்களில் மிகச் சாதாரண நபர்களாக இருக்கின்றனர்; அதாவது, அதீதமான சிறப்புத் திறன் கொண்டவர்களாக இல்லை. “ஒரு பார்வையற்றவன் சமைக்கிறான். அதைப் பார்க்கலாமே என்பதற்காகவே எனது ஹோட்டலுக்கு சற்று அதிகப்படியான புதிய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்” என்று தனது தொழில் குறித்து நாயகன் ஒருமுறை கூறுவான். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் பாராட்டும், அனுதாபமும் தவிர்க்க முடியாதவை. திறமை குறித்த கர்வமோ அல்லது அனுதாபம் குறித்த சங்கடமோ இல்லாமல் இருப்பதாகக் காட்டியிருப்பது மிக எதார்த்தமான, அசலான பாத்திர அமைப்பு மட்டுமின்றி, நம்பிக்கை ஊட்டும் பாத்திர அமைப்பு.
பார்வை உள்ளவர்கள் வெளித்தோற்றத்தை நம்பி ஏமாறுவது உண்டு. அத்தகைய பலவீனம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லை என்று காலங்காலமாக சொல்லப்படுவது உண்டு. ஆனால், வேறுவிதமான பலவீனம் அவர்களுக்கு உண்டு. ஒருவரின் குரலை அவர்கள் பிரதானமாக நம்புகின்றனர்; குரல்தான் ஒருவர் குறித்த கருத்தாக்கத்தை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறது. அத்தகைய குரலைப் பயன்படுத்திதான் இத்திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றப்படுகின்றனர். அதாவது, அவர்களின் பலவீனமான பார்வைக் குறைபாட்டை பயன்படுத்திக் கொள்ளாமல், ஆதார பலமான கேட்கும் திறனைப் பயன்படுத்தி அவர்களின் ஒப்புதலுடன் ஏமாற்றப்படுவது. அவர்களின் முக்கிய பலமான கேட்கும் திறனே அவர்களின் பலவீனமாகவும் இருப்பது காரண காரியங்களுடன் கச்சிதமான முறையில் காட்டப்பட்டிருக்கிறது.
நாயகி முதலில் நாயகனிடம் தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சியில் கை குலுக்குவதற்காகத் தனது கையை நீட்டுகிறாள். இதைத் தெரிந்துகொள்ள முடியாத பார்வை மாற்றுத்திறனாளியான நாயகன், பதிலுக்கு தனது கையை நீட்டாமல் வெறுமனே அறிமுகப்படுத்திக் கொள்கிறான். சில வினாடிகளில் தவறை உணர்ந்த நாயகன் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் தனது கையை நீட்டி அவளுடன் கை குலுக்குகிறான். நாயகனின் நிலையை உணர்ந்த நாயகியும் புன்முறுவலுடன் கை குலுக்குகிறாள். ஆனாலும், நாயகி முதலில் தனது கையை நீட்டியபோது பதிலுக்கு கை கொடுக்காமல் நாயகன் பேசிக்கொண்டே இருப்பதைப் பார்க்கும் நாயகியின் முகத்தில் ஒரு வினாடி தோன்றி மறையும் ஏமாற்றம் மிக முக்கியமானது.
பார்வையின் கேள்விகளை புரிந்துகொண்டு தலையசைப்பது, புன்னகைப்பது போன்ற உடல் மொழிகள் ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு மிகவும் அவசியமானவை. இத்தகைய உடல் மொழிகள் வெளிப்படாதபோது, பேசுபவருக்கு அவமானமோ அல்லது ஏமாற்றமோ உடனடியாக ஏற்படும். அந்த அவமானமும் ஏமாற்றமும் அப்போதைய உரையாடலை மட்டுமின்றி அடுத்தடுத்த சந்திப்புகளையும் பாதிக்கக்கூடும். இந்த தேக்க நிலைதான் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய திறன்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. உரையாடலின்போது உடல் மொழிகளை வெளிப்படுத்துவது அவசியம் என்பதை பார்வை மாற்றுத்திறனாளிகள் உணர்ந்தாக வேண்டும். அதே நேரத்தில், இயல்பான உடல் மொழிகளை வெளிப்படுத்துவதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள சிக்கல்களை பொதுச் சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட சிக்கல்களைச் சந்திக்கின்றனர் என்பது அதே கண்கள் திரைப்படத்தின் மையக் கருத்து அல்ல. இருந்தாலும், இவற்றை சில காட்சிகளாகவும், பார்வை மாற்றுத்திறனாளிகள் பல்வேறு விதமான பணிகள் செய்பவர்களாகவும் காட்டியிருப்பதை நிச்சயம் வரவேற்கலாம். தனது தாயை ஏமாற்றிய தந்தையைப் பழிவாங்கும் கதை என்ற அடிப்படையில் ‘மிஸ்டர் பாரத்’, ‘அமைதிப்படை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒன்றுதான். ஆனாலும், அரசியல் விழிப்புணர்வு என்ற அடிப்படையில் ‘அமைதிப்படை’ திரைப்படம் உயர்ந்து நிற்பதை மறுக்க முடியாது.
அதே போல, தெரிந்த கதையினைக் கொண்டு பொதுச் சமூகத்திற்குத் தெரியாத வாழ்வியலை திரையில் காட்டிய இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள். இனி வரும் திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆசிரியராக, அலுவலராக, மென்பொருள் பணியாளராக மற்றும் இன்னும் பிற தொழில் செய்பவர்களாகக் காட்டப்படும்போது, ‘இதற்கான விதை நாங்கள் போட்டது!’ என அதே கண்கள் திரைப்படக் குழுவினர் நிச்சயமாக உரிமையுடன் பெருமிதம் கொள்ளலாம்.
அடுத்த பகுதிக்கான டீசர் இதோ; ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுமையான கதாபாத்திரம் என்று சொல்லிக்கொண்டே காவலர், ரவுடி, கல்லூரி மாணவர், ஊர் சுற்றுபவர் போன்ற கதாபாத்திரங்களில் பலரும் திரும்பத் திரும்ப நடிக்கின்றனர். ஆனால், ஒரு திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்தவர்கள் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் அரிது. இரண்டு திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்தவர் அவர். மேலும், இரண்டிலுமே ஒரே மாதிரியான கதாபாத்திரம், ஒரே மாதிரியான நடிப்பு. இருந்தாலும் கெட்டப், மேக்கப் போன்ற கோணங்கித்தனங்கள் எதுவும் இல்லாமல், தனது இயல்பான நடிப்பால் சாதித்த அந்த நடிகரைப் பற்றி மற்றும் அந்தத் திரைப்படங்கள் பற்றி, அடுத்த இதழில்.
...வெளிச்சம் பாய்ச்சுவோம்
--
கட்டுரையாளர் ஈரோட்டிலுள்ள காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல.
தொடர்புக்கு: [email protected]