சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டியில் வாழ்ந்து வரும் திரு. ஜாஹீர் உசேன் அவர்களின் கறிக் கடைக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசுகிறார் நம் இதழின் வடிவமைப்பாளர் ராசு மகன்.
ராசு மகன்: அண்ணனுக்குச் சொந்த ஊர் எது?
ஜாஹீர் உசேன்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராதாப்புலிதான் என்னோட சொந்த ஊரு. நான் வளர்ந்தது காமன்கோட்டையில் உள்ள பாட்டி வீட்டில். அதே ஊரில்தான் படித்தேன்.
ரா: வழக்கமான பள்ளியில்தான் படித்தீர்களா?
ஜா: ஆமாம். சின்ன வயசில் வெளிச்சத்தில் படிக்கும் அளவிற்குப் பார்வை தெரியும். 5-ஆம் வகுப்பு வரை மரத்தடியில்தான் வகுப்பு நடந்தது. அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது. ஆனால், 6-ஆம் வகுப்புக்குச் சென்றால் அறையில் அமர்ந்து எழுதச் சொல்வார்களே என்ற பயத்தில் என்னை 5-ஆம் வகுப்பிலேயே ஃபெயிலாக்கச் சொல்லிவிடுவேன். இப்படியே 2 ஆண்டுகள் ஓடின. என்னை டியூஷனில் சேர்க்க என் பாட்டி முயற்சித்தார்கள்.
ஒரு வாத்தியார், ‘கண்ணு தெரியாதவனுக்கு சொல்லிக்கொடுக்க முடியாது’ என்று கூறிவிட்டார். ஆனால், கிருஷ்ணன் சாரிடம் சென்றபோது, 2 முதல் 10-ஆம் வாய்ப்பாடு வரை எழுதச் சொன்னார். ‘எனக்கு வெளிச்சத்தில்தான் எழுத முடியும்’ என்றேன். ‘உனக்கு வசதியான இடத்தில் அமர்ந்து எழுதித் தந்தால் போதும்’ என்றார். நான் எழுதியதைப் பார்த்து வியந்த அவர், என்னை டியூஷனில் சேர்த்துக்கொண்டதோடு, 6-ஆம் வகுப்பிலும் சேர வைத்தார்.
6-ஆம் வகுப்பிற்கு கிருஷ்ணன் சார்தான் வகுப்பு ஆசிரியர் என்பதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் படிப்பைத் தொடர்ந்தேன். தேர்வறையை மேற்பார்வை சேய்யும் ஆசிரியர் வினாக்களை வாசிக்க, நான் விடை எழுதுவேன்; இது கிருஷ்ணன் சார் ஏற்பாடு. நான் 7-ஆம் வகுப்பு படித்தபோது ஒரு சார், ‘வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த பேண்ட் துணி யாரிடமாவது இருக்குதா?’ என கேட்டார். எனது தாத்தா வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாக பசங்க சொன்னதும், என்னிடம் கேட்டார். ‘எங்க தாத்தா துணியெல்லாம் கொண்டுவர மாட்டார்’ என சொல்லிவிட்டேன். அதை மனதில் வைத்துக்கொண்டு என்னைப் பழிவாங்கக் காத்திருந்தார்.
முழுப் பரிட்சையின்போது, எனக்கு வினா வாசித்த ஆசிரியர் விடையைச் சொல்லிக்கொடுக்கிறார் என அவர் தலைமையாசிரியரிடம் சொல்ல, ‘நீயே வினாத்தாளைப் பார்த்து எழுது’ எனத் தலைமையாசிரியர் சொல்லிவிட்டார். ‘பொடி எழுத்தாய் இருப்பதால் என்னால் வினாத்தாளைப் படிக்க இயலாது’ என என் நிலைமையை எடுத்துச் சொன்னேன்; அவர் மனமிறங்கவில்லை. எவ்வளவோ அழுது, கெஞ்சி பார்த்தேன்; பலனில்லை. தேர்வறைக்குப் போய் விடைத்தாளைக் கொடுத்துவிட்டு, ‘படிச்சுப் பாழாப்போறதவிட, ஆடு மேச்சு ஆளாப் போகலாம்’ என சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன்பின் படிப்பைத் தொடரவில்லை.
ரா: உங்களுக்குக் கண்ணில் என்ன பாதிப்பு?
ஜா: மூளையிலிருந்து வரும் நரம்பு முடியை விட மெல்லியதாய் இருப்பதால் கண்ணுக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவில்லை. அதன் காரணமாகவே பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர். எனது தாத்தா மலேசிய பிரஜை என்பதால், முடிந்தவரை பணம் செலவு செய்து பார்த்தார். சரி செய்யமுடியாது என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
ரா: படிப்ப விட்டதுமே கறிக்கடை தொடங்கிட்டீங்களா?
ஜா: இல்ல தம்பி. எனக்கு இசையில ஆர்வம் அதிகமா இருந்ததால, கேசட் கடையாவது, மைக் செட்டாவது வச்சுத் தரச்சொல்லி அப்பாவிடம் கேட்டேன். ‘எவனாச்சும் பொருள தூக்கிட்டுப் போனா உனக்குத் தெரியாது’ன்னுட்டார். ‘டிராக்டர் வாங்கித்தாங்க, ஓட்டுறேன்’ என்றேன். ‘எதன் மீதாவது மோதினால் என்ன செய்வது?’ என்றார். ‘50,000 ரூபாய் தாரேன். ஃபைனான்ஸ் விட்டு பொழச்சுக்க” என்றார்.
அப்போதுதான் நாங்கள் பரமக்குடிக்குக் குடிபெயர்ந்திருந்தோம். அதனால் அந்த ஊர் பழக்கமில்லாததால், அதை என்னால் செய்ய முடியாது எனச் சொல்லிவிட்டேன். எனக்காக ஒரு வீடு கட்டிக்கொடுத்து பார்த்துக்கச் சொன்னார். அதில் கடன் வரவே, அப்பா வெளிநாடு சென்றுவிட்டார். அங்கு நடப்பு விசா இல்லாமல் மாட்டிக்கொண்டார்; சிறையில் அடைக்கப்பட்டார்.
அக்காலகட்டத்தில் மெக்கானிக் கடையில் சிறு வேலைகளைக் கற்றுக்கொண்டேன். அதில் கொஞ்சம் வருமானம் வந்தது. அப்படியே ஃபைனான்ஸ் தொழிலும் செய்யத் தொடங்கினேன். அதன்மூலம் கடன்களை அடைத்தேன். அம்மாவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஊரைவிட்டுக் கிளம்ப எண்ணினேன்.
அப்போது, அப்பாவின் நண்பர், ‘புழுதிப்பட்டிக்கு வா. ஃபைனான்ஸ் செய்வோம்’ என்றார். அவரை நம்பி நண்பரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி வந்தேன். அந்தக் காசை வாங்கி செலவழிச்சுட்டு, தராமல் ஏமாத்திட்டார். அந்த நேரத்தில், அந்த ஊரில் அவரை மட்டுமே தெரியும் என்பதால் கோழிப்பண்ணை அமைக்க அவர் உதவியையே நாடினேன். அப்போதும் காசைக் கொடுத்து ஏமாந்தேன்.
வாங்கின காசுக்கு வட்டி கட்டனும். என்ன செய்வதெனத் தவிக்கையில் இன்னொருவர் பக்கத்திலுள்ள துவரங்குறிச்சியில் கறிக் கடை வைக்க அழைத்தார். கடைக்குத் தேவையான பொருட்கள் வாங்க அவரிடம் 2000 ரூபாய் கொடுத்தேன். வழக்கம்போல அவரும் காசை வாங்கிக்கொண்டு ஏமாத்திவிட்டார். நானே துவரங்குறிச்சி சென்று, நாட்டாமையிடம் கடை வைக்க இடம் கேட்டேன். அவரோ, ‘வெளியூர்க்காரர்களுக்கு கடை தரமுடியாது’ என்று சொல்லிவிட்டார். அப்போது, ‘எனது இடத்தில் வாடகைக்குக் கடையை நடத்து’ என ஒருவர் இடம் கொடுத்தார்.
ரா: இது எப்போது நடந்தது?
ஜா: 1986-இல். துவரங்குறிச்சியில் கறிக்கடை, புழுதிப்பட்டியில் கோழிப்பண்ணை என இரண்டையும் நான் தனியாளாய் நடத்தி வந்தேன். மதுரையில் உள்ள ஒரு கம்பெனியில் 800 கோழிக்குஞ்சுகள் வாங்கினேன். என்னிடம் காக்ரோச் சிப்ஸ்களை ஏமாற்றி விற்றுவிட்டனர்.
ரா: காக்ரோச் சிப்ஸ் என்றால்?
ஜா: சிட்டுக்குருவி போல இருக்கும். சாதாரணக் கோழிக்குஞ்சு 40 நாட்களில் வளர்ந்துவிடும்; இது வளராது. அந்தக் கோழிக்குஞ்சுகளின் விலை 50 பைசாதான். ஆனால், என்னிடம் 8 ரூபாய்க்கு விற்றுவிட்டார்கள். 90 நாள் ஆகியும் குஞ்சுகள் வளராததால் பலமுறை அந்நிறுவனத்திற்கு சென்று நியாயம் கேட்டேன். ‘ஏதோ தவறு நடந்திருக்கு. அதனால குஞ்சுகள எரிச்சிருங்க’ என அந்த கம்பெனி அதிகாரி சொன்னார்.
என் கடைக்கு பக்கத்தில் கடை வைத்திருந்த ஜெயின் பாய் எனக்கொரு ஆலோசனை சொன்னார். அதன்படி, அந்த கம்பெனியின் தலைமையகத்திற்கு ஒரு அவசரக் கடிதம் எழுதினேன். அதில், ‘உங்கள் அதிகாரி குஞ்சுகளை எரிக்கச் சொல்கிறார். அதனுடன் சேர்த்து, உங்கள் அலுவலகம் முன்பு குறித்த தேதியில் என்னையும் எரித்துக்கொள்வேன்’ என்று எழுதி அனுப்பினேன். அக்கடிதத்தைக் கண்டு பதறிய தலைமை அதிகாரி, நேரே வந்து பேசி இழப்பீட்டை அளித்தார். அதிக இழப்பு ஏற்பட்டதால் கோழிப்பண்ணையை நிறுத்திவிட்டேன்.
ரா: கோழிக்கறியை நீங்களே வெட்டி சுத்தம் செய்வீர்களா?
ஜா: தொடக்கத்தில் கோழியைப் பார்த்தாலே பயமாய் இருக்கும். என் கறிக்கடைக்கு அருகில் இருந்த ஆட்டுக்கறிக் கடைக்காரர்தான் கறியை வெட்டிக் கொடுப்பார். ஒருநாள், முதல் கஸ்டமர் வந்து அரை கிலோ கறி கேட்டார். பக்கத்துக் கடையில் அதிக கூட்டம். எனவே அவரால் வந்து வெட்டித் தர முடியவில்லை. வந்தவரும் ‘தர்றீங்களா? இல்லை, வேறு கடைக்குப் போகவா?’ என்று கேட்டதும், வைராக்கியத்தில் கோழியை வகுந்துவிட்டேன். பக்கத்திலிருந்த கடைக்காரர்கள் வந்து பார்த்துவிட்டு, ‘மிகச் சிறப்பாக வெட்டியிருக்கிறாய்’ என்று பாராட்டினார்கள். அன்றிலிருந்து நானேதான் கறியை வெட்டிக்கொடுக்கிறேன்.
என் தொழில் நேர்த்தியைப் பார்த்த 2 பேர், ‘நாம் மூவரும் சேர்ந்து கோழிக்கறி மொத்த வியாபாரம் செய்வோம்’ என்றனர். ‘எனக்கு சரிவராது’ என்று சொன்னேன். அவர்களோ பேசி சம்மதிக்க வைத்துவிட்டனர். வியாபாரம் பெருகத்தொடங்கியது. ஒருநாள் கறி வெட்டிக்கொண்டிருக்கையில் பார்ட்னர் கல்லா சாவியைக் கேட்க, இடுப்பிலிருந்த சாவியை எடுக்க முயலும்போது கத்தி விரலில் வெட்டி சதை தனியே சென்று விழுந்துவிட்டது. அதுதான் எனக்கு ஏற்பட்ட பெரிய காயம்.
ரா: சரி, எப்போது புழுதிப்பட்டியில் கடை வைத்தீர்கள்?
ஜா: கடையை வாடகைக்குக் கொடுத்தவர், கறியை தனக்கு மட்டும் 10 ரூபாய் குறைத்துத் தரவேண்டும் என்றார். நானும் கொடுத்தேன். அவர் தன் தெருக்காரர்களுக்கு அதிக விலைக்கு கறியை விற்றுச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார். அதனால் விலையைக் குறைத்துத் தரமுடியாது என்றதும் கடையை காலி செய்யச் சொல்லிவிட்டார். மறுநாளே வேறு இடத்தில் கடையைத் தொடங்கிவிட்டேன். ஆனால், சாலை விரிவாக்கத்தின்போது என் கடையை எடுத்துவிட்டார்கள். பார்ட்னர்களும் கை விரித்துவிட்டனர். அதற்குப் பிறகுதான் இங்கு வந்து கடை வைத்தேன்.
ரா: எந்த வயதில் இங்கு வந்து கடை வைத்தீர்கள்?
ஜா: நான் பிறந்தது 1972. இங்கு 1989-இல் கடை வைத்தேன்.
ரா: சிறு வயதிலேயே இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்களே!
ஜா: இங்கு வந்தும் கஷ்டங்கள் தீரவில்லை தம்பி. தொல்லைகள் என்னைத் தொடர்ந்து வந்தன. R.I.-யிடம் சொல்லி கடையை மூட முயன்றார்கள். அந்த R.I.-யோ, நான் பார்வையற்றவன் என தெரிந்ததுமே சாலையோரத்தில் கடை வைத்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார். அடுத்து வந்த R.I. என்னிடம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி தினத்தந்தி நிருபர் கந்தசாமி சாரிடம் சொன்னேன். அவர் அதற்குறிய அலுவலகம் சென்று இதுபற்றி கேட்டதும், ‘இனி அப்படி நடக்காது’ என்று சொல்லி மன்னிப்பு கேட்டனர்.
ரா: உங்கள் கடைக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
ஜா: இங்குள்ள உணவகங்களுக்கு என் கடையிலிருந்துதான் கறி போகிறது. இல்லத்தரசிகள் என் கடையில் கறி வாங்கி வந்தால்தான் சமைத்துத் தருவேன் என்று சொல்லும் அளவிற்கு நம்ம கடை ஃபேமஸ் தம்பி.
ரா: உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்க அண்ணே?
ஜா: பார்வை தெரிந்த பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். நான் பல இடங்களில் பெண் தேடி அலைந்தேன். என் பார்ட்னரின் மனைவி சொல்லி, பெண் குடும்பத்தார் என் கடைக்கு வந்திருந்தனர். எனக்கோ வந்திருப்பவர்கள் பெண் வீட்டார் என்று தெரியாது. அச்சமயம் ஒரு வாடிக்கையாளர் வர, நானே கறியை வெட்டி, சுத்தம் செய்து, அளந்து போடுவதைப் பார்த்து வியந்த அவர்கள் பெண்ணைத் தர சம்மதித்தனர். தொழில் திறமையைக் கேட்டதுமே, விரும்பி என்னைக் கணவனாக ஏற்றுக்கொண்டார் என் மனைவி. எனக்கு நசீர் அகமது, ஃபரித் அகமது என்று இரு பையன்கள். எங்கள் இல்லறம் சிறப்பாகவே செல்கிறது. பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைத் தரவே நான் உழைக்கிறேன்.
ரா: மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் சலுகைகள், கடன் வசதிகள் ஏதேனும் பெற்றிருக்கிறீர்களா?
ஜா: புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் கடன் வசதியைப் பெற்றிருக்கிறேன். பிற சலுகைகளைப் பெற்றதில்லை. கடன் பெரும் வழிமுறைகள் எளிமையாக இல்லை; அவை எளிமையாக்கப்பட வேண்டும். ஏனேனில், தினசரி வருவாயை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். கடன் வசதிகளைப் பெற நீண்ட நாட்கள் அலைய வேண்டியிருக்கிறது. அதிலும் நம்முடைய நிலைமை இன்னும் சிரமம். உடன் ஒருவரை அழைத்துச் செல்லவேண்டும். அவருக்கான செலவையும் நாம்தான் செய்கிறோம். அதனால், கூடுதலாக ஒரு கடன் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
ரா: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நீங்கள் சொல்லும் அனுபவப் பாடம்?
ஜா: முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். பிறர் உங்கள் மீது வைக்கும் அவநம்பிக்கை தானாய் தகர்ந்துவிடும்!
ரா: பார்வையற்றோரால் கோழிக்கறியை வைத்து எளிமையாய் செய்யக்கூடிய உணவுப்பதார்த்தம் ஒன்றின் செய்முறையை வாசகர்களுக்குச் சொல்லலாமே!
ஜா: சிக்கன் கிரேவி செய்றது எப்படினு சொல்றேன். அரை கிலோ சிக்கன், 50 கிராம் சின்ன வெங்காயம், 50 கிராம் சிக்கன் பொடி, தக்காளி, இஞ்சி, பூண்டு எல்லாம் சிறிதளவு எடுத்துக்கனும்.
முதலில், 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும். பின் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு, தக்காளியையும் அதில் கொட்டி அடி பிடிக்காமல் கிளறவும். அதில் கறியைக் கொட்டி கறியை விடக் கால் இன்ச் மேலே வருமளவு தண்ணீர் விட வேண்டும். தண்ணீரில் கறி வேகும்போது, தேவையான அளவு உப்பைச் சேர்க்கவேண்டும். பின் சிக்கன் பொடியைக் கரைத்து அதனுடன் சேர்த்து கிளரி இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி ரெடி.
ராசு மகன்: உங்களைச் சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. தொடர்ந்து நீங்கள் வெற்றிகரமா இன்னும் நிறைய வேலைகள் செய்யனும்.
ஜாஹீர் உசேன்: உங்களுக்கும், என்னை உலகறியச் செய்யவிருக்கும் விரல்மொழியர் இதழுக்கும் மிக்க நன்றி.
--
ஜாஹீர் உசேன் அவர்களைத் தொடர்புகொள்ள: 9629565633
தொகுப்பு: பொன். சக்திவேல்