அம்மா சுட்ட தோசை.
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை’.
மொபைலின் தொடுதிரையில் ஓடிய அந்தக் காணொளியைப் பார்த்துக்கொண்டிருந்த மூன்று வயதுக் குழந்தை, “அம்மா இங்க பாரு, தொட்டுப்பாரு தோசை” என்று சொல்லியபடியே, தன் பார்வையற்ற தாயின் விரலைப் பிடித்து தொடுதிரையில் வட்டமிடுகிறது.
“எனக்குக் கண்ணு தெரியாது, எல்லாத்தையும் தொட்டுத்தான் காட்டணுமுனு என் பொண்ணு இவ்ளோ சீக்கிரமாவே புரிஞ்சுக்கிட்டா. நிச்சயமா இந்தப் புரிதலை எல்லாப் பார்வையற்ற பெற்றோரும் தங்கள் குழந்தைங்ககிட்ட சின்ன வயசிலேயே ஏற்படுத்த வேண்டியது அவசியம்னு நினைக்கிறேன்” என தீர்க்கமாகப் பேசும் ஆசிரியை விசித்ரா ஒரு பார்வை மாற்றுத்திறனாளி.
“நான்கு வயது வரைக்கும் குழந்தையை வளர்க்கிறதுதான் பார்வையற்ற பெண்களுக்கு மிகப்பெரிய சவால்னு நான் நினைக்கிறேன். அதுலையும், தாய்ப்பால் கொடுக்கிற அந்த நாட்களில கூடுதல் கவனம் நமக்கு வேணும். சில நேரத்தில், மார்போடு ஒன்றிக்கிட்டு குடிக்கிற குழந்தைக்கு மூச்சு முட்டும். அதனால குழந்தையின் முகத்திற்கும் நமது மார்புக்கும் இடையே நுண்ணிய இடைவெளி இருக்கிறதை அவ்வப்போது தொட்டுப்பார்த்து உறுதி செஞ்சுக்கணும். பசியாறிய குழந்தையின் திருப்தி முகம் பார்க்க முடியாததும், அது முகம் பார்த்துச் சிரிக்கிறப்போ நம்மால அது முடியாதுங்கிறதும் வருத்தமாத்தான் இருக்கும்” என்றவரிடம், அவர் தாய்மைப்பேறு அடைந்த அந்த தருணங்கள் குறித்துக் கேட்டோம்.
“எல்லாப் பெண்களையும் போலவே எனக்கும் தாயாகப்போறேன்கிறதை நினைச்சா ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்துச்சு. ஆனா, பிரசவம் நெருங்க நெருங்க மனசளவில ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். பிரசவ வார்டு, வலி இதெல்லாம் ஒருவிதமான திகிலை எனக்குள்ள உண்டாக்கிடுச்சு.
எப்பவுமே எனக்கிருக்கிற ஒரே பிரச்சனை, என்னைப் பார்த்தா பார்வையற்றவள்னு அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாதுங்கிறதுதான். அதனால, ஹாஸ்பிட்டல்ல சேர்ந்ததுமே டாக்டர் நர்ஸுனு ஒருத்தர் விடாம எனக்குக் கண்ணு தெரியாதுனும், எதுவா இருந்தாலும் எனக்கு முன்கூட்டியே சொல்லிட்டு செய்யணுமுனும் அழுத்தம் திருத்தமாவே சொல்லிட்டேன். அவுங்களும் ஊசி போடுறதுல இருந்து எது செஞ்சாலும் எனக்கு முன்கூட்டியே சொல்லிடுவாங்க. நானும் என்னை அதுக்கு ஏற்ற மாதிரி தயார்படுத்திக்க முடிஞ்சது.
என் அம்மாதான் பிரசவ வார்டுல என் கூடவே இருந்தாங்க. அது எனக்கு மிகப்பெரிய தெம்பைக் கொடுத்துச்சு. உண்மையில் இதுபோன்ற நேரத்துல நம்மை, நமது குறைபாட்டை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட நமக்கு நெருக்கமானவுங்க நம்மகூட இருப்பது ரொம்ப அவசியம்னு நினைக்கிறேன். அது இந்த உலகத்தில் அம்மாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?” என்று பூரிக்கிறார்.
தனித்து விடப்படுதல் என்கிற சவால்
விசித்ரா போல எல்லாப் பார்வையற்ற பெண்களுக்கும் அவர்களின் அம்மாக்களே உடனிருக்கும் கொடுப்பினை வாய்ப்பதில்லை. பொதுவாகவே, திருமண வயதை அடைந்துவிட்ட பார்வையற்றவர்களில் ஒரு பகுதியினர், தங்களைப் போன்ற பார்வையற்றவர்களையே தங்களின் இணையாகத் தெரிந்துகொள்வதை அதிகம் விரும்புகிறார்கள். பெற்றோர், சொந்தங்கள் என அனைவரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொள்ளும் பார்வையற்ற தம்பதிகள், யாருமற்றுத் தவிப்பது குழந்தைப்பேற்றின்போதுதான். அப்படித் தனித்துவிடப்பட்டதையே தங்களுக்கான சவாலாகக்கொண்டு, தங்கள் மகளைச் சிறப்பான முறையில் வளர்த்திருக்கிறார்கள் பார்த்திபன்-கமலேஷ் தம்பதி.
“குழந்தை உண்டாயிருக்குன்னு தெரிஞ்சப்போ நான் வேணாமுனுதான் நினைச்சேன். யாரு பார்த்துக்குவா, எப்படி வளர்க்கிறதுங்குற கவலை இருந்துச்சு. ஆனா, இது முதல் குழந்தைனு எல்லாரும் சொன்னதால, ஹஸ்பண்ட் கொடுத்த தைரியத்துல நானும் விட்டது” என்று தடுமாறும் தமிழிலும் தனது அந்நாட்களின் தவிப்பை நேர்த்தியாக விவரிக்கும் இல்லத்தரசியான திருமதி. கமலேஷ் ஹரியானாவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பார்த்திபன் சென்னை கனரா வங்கியின் ஊழியர்.
“லக்னவ்ல ஒரு ஹாஸ்பிட்டல்ல ஐந்து நாள் இருந்தேன். எனக்குத் துணையா யாரும் இல்ல. எங்க பாப்பாவ டாக்டர்ஸ், நர்ஸ்தான் பார்த்துக்கிட்டாங்க. அவருக்குத் தெரிஞ்ச ஒரு லேடி எனக்கு பால் கொடுக்கச் சொல்லித் தந்தாங்க.
ஒரு மாசம் மட்டும் பாப்பாவக் குளிக்கவைக்க ஒரு அம்மா வந்துட்டுப் போய்ட்டு இருந்தாங்க. அப்றம் நானும் அவரும் சேர்ந்து எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டோம். முதல்ல பயமாத்தான் இருந்துச்சு. அப்றம் பழகிடுச்சு. இப்போ சங்கீதாவோட பாப்பாவுக்கு நான்தான் குளிக்க வைக்கிறதிலிருந்து எல்லாம் செய்றேன்” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் கமலேஷ்.
“சின்னதிலிருந்தே சங்கீதாவுக்கு டிரஸ் செலெக்ட் பண்ணுறது, அவ ஸ்கூல் ஃபங்ஷன்ல கலந்துக்கிறதுனு எல்லாமே செஞ்சிருக்கேன். நான் பை பெர்த்துல இருந்தே ப்லைண்டுங்கிறதால அது நினைச்சு எப்பவும் ஃபீல் பண்ணுனதில்ல. என் பொண்ணோட டெலிவரி சமயத்துல ஹாஸ்பிட்டல்ல அவகூட இருக்க முடியலையேனு கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. எங்க சம்பந்தி, அவளோட மாமியார்தான் அவளைக் கூட இருந்து கவனிச்சுக்கிட்டாங்க” என்றார்.
I’am Really Wonder
“அப்பா அம்மாவுக்குக் கண்ணு தெரியாததை நான் எப்பவுமே ஒரு பிரச்சனையா ஃபீல் பண்ணுனதே இல்ல. சின்னதிலிருந்தே நிறைய சுதந்திரமும் நம்பிக்கையும் கொடுத்துதான் என்னை வளர்த்தாங்க. தனியாகவே ஸ்கூலுக்குப் போறது, கடைக்குப் போறதெல்லாம் சின்னதிலிருந்தே எனக்குப் பழக்கமாயிட்டதால, இப்பவும் ஒரு இடத்துக்குத் தைரியமாப் போறது, ஒருத்தரை நேருக்குநேரா ஃபேஸ் பண்ணுறது, அதிலும் குறிப்பா அந்த மேப்பிங் ஸ்கில்னு (Mapping Skill) சொல்வாங்களே, ஒரு இடத்துக்கான வழியை ஒருதடவை பார்த்தாலே அப்படியே மனசில கிரகிச்சுக்கிறது இதெல்லாம் ஒரு விஷுவலி சேலஞ்ச்ட் பெற்றோரா அவுங்க எனக்குக் கொடுத்த கொடைனுதான் நான் நினைக்கிறேன்” என்று சிலாகிக்கும் பார்த்திபன்-கமலேஷ் தம்பதியின் ஒரே மகளான சங்கீதா, கிளீனிக்கல் சைக்காலஜிஸ்டாக (Cleanical Psychologist) சென்னை செட்டிநாடு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
“சின்ன வயசிலிருந்தே அம்மா பற்றி ரொம்ப இயல்பா, சகஜமாத்தான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா இப்போ, நான் என் குழந்தைக்கு ஒன்னொன்னும் பார்த்துப் பார்த்து செய்யுறப்போ எனக்கே எங்க அம்மாவ நினைச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இப்பவும் என் குழந்தைக்கு நகம் வெட்டணும்னா என் கை அப்படியே உதறும். குளிக்க வைக்கிறதுக்குள்ள சோப்பு கண்ணுல பட்டிடுமோனு பயமா இருக்கும். ஆனா, இது எல்லாத்தையும் ஒரு விஷுவலி சேலஞ்ச்ட் அம்மாவா எனக்கு எப்படி செஞ்சிருப்பாங்கனு நினைக்கும்போது I’am really wonder about my mother” என்று சிலிர்க்கிறார்.
ஒரே இலட்சியம்
பெரும்பாலான பார்வையற்ற பெண்கள் தங்கள் தாய்மைச் சூழலை அதற்கே உரிய கண்ணியத்தோடும், கம்பீரத்தோடும் கடந்து வந்திருக்கிறார்கள் என்பது அவர்களின் நம்பிக்கையும் உறுதியும் கலந்த பேச்சிலேயே வெளிப்படுகிறது. குழந்தை வளர்ப்பு பற்றி கேட்டால், “நமக்கு முன்னோடிகளாக இருப்பவர்களிடம் கற்றுக்கொண்டு நாம் பின்பற்ற வேண்டியதுதான்” என்று மிகச்சாதாரணமாகச் சொல்கிறார் பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் துணை முதல்வர் திரு. அமல்ராஜ் அவர்களின் மனைவியும், ஏழு பிள்ளைகளைப் பெற்று நன்முறையில் அவர்களை வளர்த்தெடுத்த பார்வையற்ற தாயுமான தனம்.
தான் பார்வையற்றோர் குடும்பங்கள் சூழ கோடம்பாக்கத்தில் வாழ்ந்தது, மகப்பேற்றின்போது பார்வையற்ற தோழர்களும் மறைந்த கண்ணனையா அவர்களும் தனக்குச் செய்த உதவிகள் குறித்து நெகிழ்ந்த பார்வையற்ற ஆசிரியை திருமதி. குப்பாயி, குழந்தை வளர்ப்பில் தன்னைப்போலவே பார்வையற்றவரான தனது கணவர் தனக்கு பக்கபலமாக இருந்ததையும் நினைவுகூர்கிறார்.
“எத்தனையோ சோதனைக்கு நடுவுலயும் என்னையும் எங்க அக்காவையும் அம்மா இவ்ளோ தூரம் வளர்த்து ஆளாக்கியதை நினைச்சா ரொம்ப பிரமிப்பா இருக்கு” என்று வியக்கும் குப்பாயி அவர்களின் மகள் ஜீவிதாவிற்கும், இரயிலில் வணிகம் செய்து தன்னை எம்.பி.ஏ. படிக்கவைக்கிற தன் அம்மா கஸ்தூரி குறித்து வியக்கிற மகள் பவித்ராவிற்கும் இருக்கிற ஒரே இலட்சியம், வாழ்நாள் முழுக்க தங்கள் அம்மாக்களைத் தங்களோடே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். அதற்கு சம்மதிக்கும் ஒருவரைத்தான் கணவராக ஏற்றுக்கொள்ள முடியும் என உறுதியாகக் கூறுகிறார் பவித்ரா.
அம்மாதான் எல்லோருக்கும் முன்னோடி
“பிரசவத்தப்போ எனக்குக் கொஞ்சம் பார்வை இருந்துச்சு. போகப்போகத்தான் கொஞ்சம் கொஞ்சமா மங்கத் தொடங்கிருச்சு” என்று அங்கலாய்க்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியை நளாயினி, சிறுவயதில் தன் மகன்களுக்குக் கைப்பிடித்து எழுதச் சொல்லித்தர முடியாமல் போனது குறித்து வேதனையடைகிறார்.
“ஐந்தாம் வகுப்பு வரைக்கும் நான் இங்கிலீஷ் மீடியத்துலதான் படிச்சேன். ஆறாம் வகுப்புலதான் என்னைத் தமிழ் மீடியத்துல சேர்த்தாங்க. அங்க என் வகுப்புப் பசங்க அவ்ளோ வேகமா, தெளிவா தமிழ் எழுதுறதையும் படிக்கிறதையும் பார்க்கிறப்போ, எல்லாப் பசங்களுக்கும் அவுங்க அம்மாதானே கையைப் பிடிச்சுச் சொல்லிக்கொடுத்திருப்பாங்கனு அந்த வயசில வருத்தமா இருந்துச்சு” என்று இயல்பாகச் சொல்லும் நளாயினியின் மகன் சாம், தன் அம்மா பணியாற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு விழாக்களை ஒருங்கிணைத்து நடத்துவதில் அம்மாதான் எல்லோருக்கும் முன்னோடியாக இருக்கிறார் எனப் பெருமிதத்தோடு சொல்கிறார்.
கண் தெரிஞ்சா போதும்
தனது பதினான்காவது வயதில் பார்வையை இழந்த இசை ஆசிரியை பார்வதிக்கு, குழந்தை பிறந்த எட்டாம் மாதத்தில் தவறான சிகிச்சை காரணமாக அவருடைய இரண்டு கால்களும் செயலற்றுப் போய்விட்டன. இத்தகைய கடினமான சூழலில், தன் பார்வையுள்ள கணவரின் கரத்தை இன்னும் அழுந்தப் பற்றிக்கொண்டு, தன் பெண் குழந்தையை வெற்றிகரமாக வளர்த்துத் திருமணம் செய்வித்து, இரண்டு பேரக்குழந்தைகளோடு வசிக்கும் ஆசிரியையின் மன உறுதி அபாரமானது.
“எல்லாப் பார்வயற்ற அம்மாக்களைப் போலவே, எனக்கும் என் குழந்தையின் முகத்தைப் பார்க்கணுமுனு ரொம்ப ஆசையா இருக்கும். அதிலும், ஒவ்வொரு தடவையும் ஸ்கேன் பண்ணிப் பார்க்கிறப்போ, குழந்தை இப்படி மிதக்குது, உறுப்புகள் வளர்ந்திருக்குனு டாக்டரும் எனது கணவரும் பேசிக்கும்போதெல்லாம், ‘ஐயோ! பார்க்க முடியலையே’னு ஏக்கமா இருக்கும்.
விவரம் தெரிஞ்ச பிறகு பிரச்சனை இல்ல. ஆனா ஒரு குழந்தையா, “அம்மா நான் இந்த டிரஸ்ல எப்படி இருக்கேன்”னு கேட்டா, “அம்மா! இங்க பாரு, நான் எப்படி வரைஞ்சு இருக்கேன்”னு காட்டுனா மனசே வலிக்கும். ஆனாலும், நீ அழகுடா, அருமையா வரைஞ்சிருக்கடா அப்படினுதான் பாராட்டனும். நிஜமாவே சொல்றேன், எனக்கு இப்பகூட கால் வேணுமா கண் வேணுமானு கேட்டா, கண் தெரிஞ்சாப் போதும்னுதான் சொல்வேன்” என்கிறார் அழுத்தமாக.
குடும்பத்தைத் தாங்கும் தூண்
“என் அம்மாவ நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையாவும் ஆச்சரியமாவும் இருக்கு. சின்ன வயசுல அம்மாவுக்கு அப்பா எதுவா இருந்தாலும் தொட்டுக்காட்டுறதைப் பார்த்துதான் அவுங்களுக்கு கண்ணு தெரியாதுன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். ஸ்கூல் டைம்ல டான்ஸ், டிராமாவிலெல்லாம் கலந்துக்கிறப்போ மற்ற பிள்ளைங்களோட அம்மாக்கள் மேக்அப் போட்டு விடுறது, பார்த்துப் பார்த்துத் தலை சீவி விடுறதெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் ஃபீலிங்ஸா இருக்கும். ஆனா அது எல்லாமே கொஞ்ச நேரம்தான்” என்று இயல்பாகச் சொல்லும் ஆசிரியை பார்வதியின் மகள் கிரேஸ் ஓர் இல்லத்தரசி.
“என்னோட டெலிவரி நேரத்திலதான் ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. லேபர் வார்டுல ஜென்ஸை அனுமதிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அம்மா விஷுவலி சேலஞ்ச்டுனு சொன்னா, வேற யாருமே லேடிஸ் இல்லையானு கேட்கிறாங்க. அந்த டைம்லதான் அம்மாவ நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்” என்று கண் கலங்கியவரிடம், “உங்கள் அம்மாவிடம் நீங்கள் கோபப்பட்ட தருணங்கள் ஏதேனும்?” என்று கேட்டால், “என் பையனுக்கு சின்னதா உடம்பு சரியில்லாமப் போயிட்டாலும், அம்மா தானும் ரொம்ப பரபரப்பாகி, என்னையும் பரபரப்பாக்கிடுவாங்க. அதுபோல யாராவது அம்மாகிட்ட நல்லாப் பேசிட்டா, முன்பின் யோசிக்காம அவுங்க வார்த்தைகளை அப்படியே நம்பிடுவாங்க. பேசுறவுங்க முகபாவனை, பாடி லாங்குவேஜெல்லாம் நேரடியாப் பார்க்கிற எனக்குத்தான் தெரியும் அவுங்க சொல்லுறது பொய்யின்னு. இதுபோல சின்னச்சின்ன விஷயங்கள்ல எங்களுக்குள்ள அவ்வப்போது வாக்குவாதங்கள் வரும். மற்றபடி, அம்மாதான் எங்க மொத்த குடும்பத்தையும் தாங்கும் தூண்” என்று தன் அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறார் கிரேஸ்.
விடாமல் துரத்திய அந்த பயம்
“நான் தாயாகப்போறேன்கிற செய்தியைக் கேட்ட அந்த நாளிலிருந்து என்னை ஒரு பயம் விடாமத் துரத்துச்சு. என் குழந்தைக்கும் என்னைப் போலவே கண் தெரியாமப் போயிடுமோனு ஒவ்வொரு நொடியும் பயந்துட்டேதான் இருந்தேன். டாக்டர்கள், என் நண்பர்கள் என எல்லோருமே எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நான் கேட்கிற நிலையிலில்ல. சிசேரியன் முடிச்சு நான் கண் விழிச்சதும் கேட்ட முதல் கேள்வியே, ‘என் குழந்தைக்குக் கண்ணில் எதுவும் பிரச்சனை இல்லையா’னுதான். ஒரு குறையும் இல்லைனு தெரிஞ்சதும்தான் நிம்மதியானேன்” என்று முகம் மலர்ந்து பேசுகிறார் ஓய்வுபெற்ற பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியை சந்திரிகா.
“என் குடும்பத்துல என்னையும் சேர்த்து மொத்தம் மூன்று பேர் பார்வையற்றவர்கள். அதனால என் பாட்டியும், அம்மாவும் எந்த விஷயத்துக்கும் என்ன ஒதுக்கி வைக்கவோ, என்மேல பரிதாபம் காட்டவோ இல்ல. குழந்தைக்கு எப்படி சாம்பிராணி காட்டுறது, எப்படி குழந்தையைக் குளிக்க வைக்கிறதுன்னு ஒன்னொன்னையும் சொல்லித்தந்தாங்க. இப்போ எனக்கு 65 வயசாகுது. இப்பவும் என்கிட்ட ஒரு கைக்குழந்தையக் கொடுத்தா, சிறப்பா வளர்த்துக்கொடுக்க என்னால முடியும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.
53 பஸ் வந்துடுச்சு
“எனக்குப் பார்வையில்லைங்கிற விஷயத்தை என் பையனுக்குக் குழந்தையிலிருந்தே சொல்லிச் சொல்லித்தான் வளர்த்தேன். ‘கண்ணா! அம்மாவ நீதான் பத்திரமா கை பிடிச்சுக் கூட்டிப்போகனும்; எல்லாத்தையும் பொறுமையாத் தொட்டுக்காட்டணு’முனு சொல்லிக்கிட்டே இருப்பேன். அவனும் நல்லாவே அதைப் புரிஞ்சிக்கிட்டான்.
ஒருமுறை நானும் அவனும் என் அம்மா வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாப்புல நின்னுட்டிருந்தோம். ‘அம்மா கூக்கு, கூக்கு’னு கத்துறான். கூக்குன்னா தூக்குன்னு அர்த்தம். நான் தூக்கிக்கிட்டதும் அஞ்சு, மூனுனு விரல்களைக் காட்டி 53 பஸ் வந்திருச்சுனு சொன்னான். அப்போ அவனுக்கு மூன்றரை வயசு. கண்டக்டர்கள்கூட, ‘ஏன்மா சக்கரம் உயரங்கூட இல்லாத குழந்தையைக் கூட்டிட்டு வாரியே’னு கேட்பாங்க” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னவரிடம், “இத்தனை புத்தி கூர்மையுள்ள மகனின் விடலைப்பருவத்தை ஒரு தாயாக எப்படி எதிர்கொண்டீர்கள்?” என்று கேட்டோம்.
“ரொம்பச் சேட்டையெல்லாம் செய்யமாட்டான். எப்போவாவது என்னை ஏமாத்திட்டு கிரிக்கெட் விளையாடப் போயிடுவான். அப்படி ஒருமுறை காலையில போனவன் சாயங்காலம்தான் வந்தான். அன்னக்கித்தான் என் பிள்ளையை நான் செமத்தியா அடிச்சுட்டேன். அதுவும், வசதியா டேபிலுக்கும் சுவருக்கும் இடையே மாட்டிக்கிட்டான்” என்று அவர் அந்த நாளை தழுதழுத்த குரலில் நினைவுகூர்ந்தார்.
“அவனுக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கிடையாது. மூனு, நாளு பேர்தான். எல்லோரும் வீட்டுக்கு வருவாங்க. என் சமையல் அவுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அவுங்களையும் நான் என் பையனைப் போலத்தான் கவனிச்சுக்குவேன்.
இன்னக்கி என் பையன் கலிஃபோர்னியாவில நல்ல பணியில இருக்கான். என் மருமகளும் கலிஃபோர்னியாவுலதான் வேலை பார்க்கிறாள். ஒரு தாயா நான் என் கடமையை நிறைவாகவே செஞ்சிருக்கேனு நினைக்கிறேன். இத்தனைக்குப் பிறகும் ஒரு தீராத வலி என் உள்ளத்தில இருக்கு; சாகும்வரை அது ஒரு ஏக்கமாகவே இருக்கும். என்னைப் பெத்தவள் முகத்தையும் நான் பார்க்கல, நான் பெற்ற மகன் முகத்தையும் பார்க்கலங்கிறதுதான் அது”.
அவர் சொன்ன அந்த இறுதி வாக்கியம், நமக்குள் ஆறாத வடுவாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது. எல்லாக் காயங்களையும் காலம் ஆற்றும் என்பார்கள். அவரின் இந்தக் காயத்தை ஆற்றுகிற அருமருந்து காலத்திடமும் இல்லை என்கிறபோது, இயற்கையின் சவாலை எதிர்கொண்டு, வாழ்வின் முழுமையை வசப்படுத்தியிருக்கிற இந்த அம்மாக்கள் காலத்தை வென்று நிற்கும் கண் கண்ட தெய்வங்கள் அன்றோ?
--
தொடர்புக்கு: [email protected]