வேற்றுமை நிறைந்த உலகினில் போற்றற்குரிய விடயங்களையும், தோற்றத்தில் மாறுபட்ட உருவங்களில் ஒற்றுமை பேசும் வடிவங்களையும், நம் மன அறைக்குள் நுழைவிக்கும் மிகச்சிறந்த சாளரங்களாகச் செயல்படக்கூடியவை நம் விழிகளும், செவிகளும்தான் என்பது நாம் அறிந்ததே. நாம் காண்பனவும் கேட்பனவுமாகிய நிகழ்வுகளை வெறும் செய்திகளாக அல்லாமல், நிஜம்போல் தோன்றும் நிழற்படங்களாகவும், பொருள் பல பொதிந்த விளக்கப் படங்களாகவும் நம் மனதில் பதிவிக்கப் பெரிதும் துணை நிற்பது நாம் கற்ற கல்வியே என்பது இன்றளவும் பரவலாக உணரப்பட்டு வரும் உண்மையாகும். இதைத்தான் நம் முன்னோர் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும், ‘கற்கைநன்றே கற்கைநன்றே பிச்சை புகினும் கற்கைநன்றே’ என்றும் வரையறுத்தார் போலும்.
கேடில் விழுச்செல்வமாகிய கல்வி பொருளாதார, வட்டார ஏற்றத் தாழ்வின்றி, இலவசமாக எல்லோரையும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) சென்றடையும் நோக்கோடு நமது அரசாங்கம் பல அரசுப் பள்ளிகளைத் திறந்து சிறப்புத் திட்டங்கள் மூலம் பல ஏழை, கிராமப்புறக் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது. அந்த வகையில் சாதாரண, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின், குறிப்பாக, பார்வை மாற்றுத்திறன் பெற்ற குழந்தைகளின் கல்வி குறித்த அரசு, சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பார்வையில் படாத சில அவலங்களை வெளிச்சத்திற்குக் கொணர்ந்து, புதிய சமூக மாற்றம் ஏற்படுவதற்கும், தரமான கல்வியின்மூலம் அவர்களின் கற்றல் அடைவுகள் பெருகுவதற்கும், வாழ்க்கைத் தரம் உயர்வதற்குமான வழிவகைகளை ஆராய்ந்து விளக்குகிறது இக்கட்டுரை.
உள்ளடங்கிய கல்வி (Inclusive Education)
இந்த முறை, சமீப காலமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களால் அதிகமாகச் சிந்திக்கப்படும், விவாதிக்கப்படும் முக்கியமான பொருள்களுள் ஒன்றாகும். இம்முறை அனைவருக்கும் கல்வி (SSA) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (RMSA) ஆகிய ஏழை, கிராமப்புற மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி, மாற்றுத்திறன் பெற்ற குழந்தைகள் அவரவர் ஊர்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில், அவரவர் வயதிற்கேற்ற வகுப்புகளில் சேர்க்கப்பட்டு, மற்ற மாணவர்களுடன் கல்வி பயில்கின்றனர். இம்முறை மத்திய அரசின் நிதியுதவி பெற்று பல அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது.
இம்முறையில், மாற்றுத்திறன் பெற்ற மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை முறைப்படுத்துவதோடு, அவர்களின் மனரீதியான உணர்வுகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் நடத்தைகளில் தனி கவனம் செலுத்துவதற்காக அவர்களுக்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் பயிலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாற்றுத்திறன் குழந்தைகள் சார்ந்த பயிற்சி வகுப்புகள் எஸ்.எஸ்.ஏ. மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ. மூலம் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. மேலும், பள்ளிக்கு வரவியலாத குழந்தைகளுக்கு வீடுசார் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இன்றைய நிலை என்ன?
மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிகளைத் தேடி அலையவேண்டிய அவசியம் இல்லை என்பதாலும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு தாங்கள் விரும்பும் பணிகளுக்குச் சென்று திரும்பும் வசதி இருப்பதாலும், பள்ளி நேரம் தவிர்த்த பிற நேரங்களில் தங்கள் கண்காணிப்பில் வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்பதாலும் கிராமப்புற பெற்றோரிடையில் இம்முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கள் குழந்தைகளை அவர்களது வாழ்விடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்துவிடும் பெற்றோர், அக்குழந்தைகளின் மனநலம், கல்வி, பழக்க வழக்கங்கள் என எவற்றின்மீதும் கவனம் செலுத்துவதாகவோ, ஏன் கண்டுகொள்வதாகவோகூடத் தெரியவில்லை. அக்குழந்தைகளுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பாசிரியர்கள் (Special Teachers) பள்ளிகளுக்கு வருகை தருவதுமில்லை; மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு கற்பிப்பதுமில்லை. அவ்வாசிரியர்கள் அவர்கள் பொறுப்பில் விடப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை ஒருமுறை நேரடியாகப் பள்ளிக்கு வந்தோ அல்லது அப்பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தொலைபேசியில் கேட்டுப் பெற்றுக் கொண்டோ பதிவேடுகளை நிறைக்கத் தவறுவதுமில்லை. மேலும், அவர்களுக்கு மாற்றுப்பணிகள் அவ்வப்போது வழங்கப்படுவதாலும் 2, 3 ஒன்றியங்களுக்கு ஒரே சிறப்பாசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாலும் அவர்களால் ஒவ்வொரு குழந்தையின்மீதும் தனி கவனம் செலுத்த முடிவதில்லை.
இம்முறையின்கீழ் பயிலும் மாணவர்கள் வகுப்பறைச் செயல்பாடுகளாகிய பாடங்களைக் கவனித்துக் குறிப்பெடுத்தல், எழுதுதல் மற்றும் வாசித்தல் பயிற்சிகளில் ஈடுபடுதல், கரும்பலகைகளைப் பின்பற்றுதல், வரைபடங்கள், விளக்கப் படங்கள் மற்றும் கணிதச் செயல்களைப் புரிந்துகொள்ளுதல் என எவற்றிலும் முழுமையான பங்களிப்பைச் செலுத்த முடிவதில்லை.
மேலும், பள்ளி வழிபாட்டுக் கூட்டங்கள், உடற்பயிற்சி வகுப்புக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சிகள் மற்றும் சிறப்பு விழாக்கள் என அனைத்து நிகழ்வுகளிலும் ஈடுபடும் ஆர்வமும், விருப்பமும் இருந்தும், கலந்துகொள்ள இயலாததால் தங்கள் எண்ணங்கள், ஏக்கங்கள் உள்ளிட்ட எல்லா உணர்வுகளையும் வெளிப்படவிடாமல் தங்களுக்குள்ளேயே அடக்கிக் கொள்பவர்களாகவும், தங்கள் கனவுகள், இலட்சியங்கள், எதிர்பார்ப்புக்களை மறந்த, தாழ்வு மனப்பான்மையே தன் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைச் சிறிதும் அறியாத குப்பைமேட்டுக் கழுகுகளாகவும், பெற்றோர், ஆசிரியர், சக மாணவர்கள், மேலதிகாரிகள், ஊர் பொதுமக்கள் என எல்லாத் தரப்பினரிடமும் இரக்கத்தையும், அனுதாபத்தையும் சம்பாதிப்பவர்களாகவும் மட்டுமே பள்ளிப் பருவத்தைச் செலவிடும் நிலையில் உள்ளனர். பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெயில் புத்தகங்கள் மற்றும் கணித உபகரணங்களுக்கென சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படாததாலும், தேர்வு சமயங்களில் முறையான வழிகாட்டலும், சரியான பதிலி எழுத்தர்களும் கிடைக்கப் பெறாததாலும் அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது.
இம்முறையில் கல்வி பயின்று பெறப்படும் பட்டங்கள் பொருளற்ற வெற்றுத் தாள்களாக மாறிவிடுவதோடு, போட்டிகள் நிறைந்த உலகில், தொடர்ந்து நடத்தப்படும் போட்டித் தேர்வுகளைச் சந்திக்கப் போதிய பொறுமையும், திறமையும் அற்றவர்களாகி, அரசின் சலுகைகள் மற்றும் உதவித் தொகைகளை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்த வேண்டிய பரிதாபமானதொரு நிலைக்குள்ளாவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மேலும், வீடுசார் பயிற்சி (Home Based Training) என்ற பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட உடற்குறைபாடுடைய (Multiple Disability) குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். சிறப்பாசிரியர்கள் அக்குழந்தைகளின் உறைவிடங்களுக்குச் செல்வதுமில்லை; சிறப்புப் பயிற்சி கொடுப்பதுமில்லை. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை (Strength) அதிகமாகக் காட்டும் நோக்கோடு, மாணவர் பெயர் பட்டியல்களிலும், மதிப்பெண் பட்டியல்களிலும், இன்னும் சில பதிவேடுகளிலும் அக்குழந்தைகளின் பெயர்கள் நீங்கா இடம் பெறத் தவறுவதில்லை. அத்தகையவர்கள் பள்ளிச் சூழல், பாடப் புத்தகங்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள் என எவற்றையும் கடந்து வராத, எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் எட்டாம் வகுப்புச் சான்றிதழைப் பெறுவதையே இந்த நடைமுறை ஊக்குவிக்கிறது.
ஒருங்கிணைந்த கல்வி (Integrated Education)
உள்ளடங்கிய கல்வி முறையின் முந்தைய வடிவம் ஒருங்கிணைந்த கல்வி முறை ஆகும். இதன்படி, பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் தம் வயதொத்த மற்ற மாணவர்களுடன் இணைந்து கல்வி பயின்றனர். ஒருசில அரசு சாரா அமைப்புக்கள் (NGO) மத்திய அரசின் நிதியைப் பெற்று, பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி, விடுதிகளில் இலவசமாக இடம் கொடுத்ததோடு, அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அவர்களுக்கான சிறப்புப் பயிற்சியை முறையாகப் பெற்ற திறமையான ஆதார ஆசிரியர்களை (Resource Teachers) ஒரு பள்ளிக்குக் குறைந்தது 2 பேர் வீதம் பணியமர்த்தி, இம்முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வந்தன. விடுதி வசதி இல்லாத பள்ளிகளில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கெனத் தனிப்பட்ட விடுதிகளும் சகல வசதிகளுடன் அமைத்துத் தரப்பட்டன. நான் என்னுடைய 9 மற்றும் 10-ஆம் வகுப்புக் கல்வியை செயிண்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒருங்கிணைந்த கல்வி முறையின்கீழ் பயில நேர்ந்தது என்பதை இவ்வேளையில் நன்றிப் பெருமிதத்தோடு நினைவு கூர்கிறேன். 8-ஆம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் பயின்ற எனக்கு, ஒருங்கிணைந்த கல்வி முறை புதிய நண்பர்களின் அறிமுகத்தையும், புதுமையான பல அனுபவங்களையும் அள்ளித் தந்தது.
இம்முறையில், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒரே வகுப்பறையில், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து, மாநில அரசின் பொதுப் பாடத்திட்டத்தின்படி நடைபெறும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பங்கு கொள்கின்றனர். பார்வை மாற்றுத்திறன் மாணவர்களின் கல்விக்குத் தடைகளாக விளங்கக்கூடிய சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் பாலினப் பாகுபாடுகளைக் களைந்து, உளவியல் சார்ந்த அணுகுமுறைகளை மேற்கொண்டு, அவர்களை முன்னேற்றப்பாதையில் வழிநடத்துவதையும், வகுப்பு, பாட ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதையுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆதார ஆசிரியர்கள், வகுப்பறையில் அம்மாணவர்கள் புரிந்துகொள்வதில் சிரமங்களைச் சந்திக்கும் கணிதப் பாடங்கள், அறிவியல் குறியீடுகள், சமூக அறிவியல் வரைபடங்கள், மேல்நிலை மாணவர்களுக்கான கணக்குப் பதிவியல் (Accountancy) பாடங்களை அவர்களுக்குப் புரியும் பாணியில் நேர்த்தியாகக் கற்றுத்தந்தனர்.
அப்பள்ளியில் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமான உணவு, உறைவிட வசதிகளை உறுதிப்படுத்துதல், சீருடைகள், பாடப்புத்தகங்கள் கிடைக்கச்செய்தல், விடுதியில் அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கும், அவர்கள் வாழ்வியல் சார்ந்த சந்தேகங்களுக்கும் உரிய நேரத்தில் தீர்வளித்தல், அரசின் சிறப்புச் சலுகைகளை அறிவித்தல், அரசு வழங்கும் உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகளைப் பெற்றுத்தருதல் எனப் பலவகையான பொறுப்புக்கள் ஆதார ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெயில் பாடப் புத்தகங்கள், பாடங்களைப் பதிவதற்கான ஒலிப்பேழை (Tape Recorder), பாடங்களடங்கிய ஒலிநாடாக்கள் (Cassettes), ‘Brailler’ எனப்படும் தட்டச்சு இயந்திரம் ஆகியவற்றையும், குறை பார்வையுடையோருக்கான கண்ணாடி, லென்ஸ் ஆகியவற்றையும், மற்ற மாணவர்களுடன் இணைந்து படிப்பதை அங்கீகரிக்கும் வாசிப்பாளர் நிதி (Readers Allowance) மற்றும் 10, 12-ஆம் வகுப்புகளில் பள்ளி, மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை உள்ளிட்ட பலவற்றை மாணவர்களின் தேவைக்கேற்ப, அவை கிடைக்கப்பெறும் இடங்களிலிருந்து சிரமங்களைப் பொருட்படுத்தாமல் பெற்றுத்தருதல் என எல்லாப் பணிகளையும் சிறப்பாக ஆற்றி வந்தனர். மேலும், பள்ளியில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்கள், சிறப்புக் கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் அவர்களின் சிறப்பாசிரியரின் வழிகாட்டுதலின்பேரில் மற்ற மாணவர்களுடன் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
இம்முறையில், பார்வையற்றோருக்கான பிரெயில் புத்தகங்களுக்காகச் சிறப்பு நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. செயிண்ட் ஜோசப்ஸ் பள்ளியில் பயின்ற பார்வையற்றோருக்கான பிரெயில் புத்தகங்கள், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா அமைப்பிலிருந்து பெறப்பட்டன. இப்புத்தகங்களின் சிறப்பம்சம் யாதெனில், பிரெயில் புத்தக எண்களோடு, பார்வையுள்ளோர் பயன்படுத்திப் படிக்கும் சாதாரணப் புத்தக எண்களும் அச்சிடப்பட்டிருந்ததால், சக மாணவியருடன் எளிதில் போட்டி போட்டு வெல்ல முடிந்தது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கும் என் போன்ற பெரும்பாலான பார்வையற்றோர் இம்முறையின்மூலம் கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைகள்
இம்முறை நகர்ப்புறங்களில், சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருந்ததால் ஏழை, கிராமப்புற மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர் பள்ளிகளைத் தேடி அலைய நேர்ந்ததோடு அதிக நேரத்தையும் செலவிட வேண்டியிருந்தது. மேலும், குழந்தைகள் பெற்றோரைப் பிரிந்து வாழும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
பள்ளிப் பாடங்களில் அம்மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறும்போது, அது முறையான அங்கீகாரமின்றி நிராகரிக்கப்பட்டதும் மறுப்பதற்கில்லை. அதற்குப் பதிலி எழுத்தர்களின் (Scribes) உதவியே காரணமாகச் சொல்லப்பட்டது. அதாவது, அவ்வெழுத்தர்கள் அவர்களின் அறிவு முதிர்ச்சியை விடைத்தாள்களை நிரப்புவதில் வெளிப்படுத்துவதால்தான் அதிக மதிப்பெண்கள் எடுப்பதாக பரவலாக சில கருத்துக்கள் நிலவும் பட்சத்தில், அதைக் கடைந்தெடுத்த பொய்யென்று முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியவில்லை.
தேர்வு நேரங்களில், தங்கள் எழுத்தர்களிடம் பாடப் புத்தகங்களைக் கொடுத்து, படித்துவரச் சொல்லி, தேர்வெழுதப் பணிக்கும் அயோக்கியர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அ்தே நேரம், நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவர் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.
நான் 9-ஆம் வகுப்பு மூன்றாம் இடைப்பருவத் தேர்வில், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றபோது, பள்ளி மாணவியரும், ஆசிரியரும் மனமுவந்து பாராட்டி, கை குலுக்கித் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். விடுதியைப் பொறுத்தவரை, 9-ஆம் வகுப்பில் விடுதி அளவில் முதல் மாணவியாகத் திகழ்ந்த போதிலும், மாணவியர் பலருக்கு அதை ஏற்க மனமில்லாமல் பரிசோதித்து அறியும் எண்ணம் ஏற்பட்டதுதான் நான் பெற்ற தாங்க முடியாத, இன்றும் மறக்க முடியாத ஏமாற்றம்!
அரசின் பார்வையில் படாமல், பாழடைந்த பங்களாவில், பழைய பரம்பரைக் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் பார்வையற்றோர் கல்வியை, புதுப்பொலிவுடன் கட்டப்பெற்ற அரச மாளிகையில், பலரது கவனத்தைக் கவர்ந்திழுக்கும் விலைமதிப்பிட்டுச் சொல்ல இயலாத, அழகிய சிம்மாசனத்தில் அமர்த்திட என்னென்ன செய்யலாம்?
சிறப்புக் கல்வி (Special Education)
சிறப்புக் கல்வி என்பது, பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் முறையாகும். இப்பள்ளிகள் தனிப்பட்ட, தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடனும், மாணவ மாணவியர் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக விடுதி வசதிகளுடனும் அமையப் பெற்றிருக்கும். இப்பள்ளிகளில் சிறப்புப் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இங்கு, கற்பித்தல் செயல்பாடுகள் பிரெயில் முறையில் (Braille Method) நடைபெறுகின்றன. இந்த பிரெயில் முறை 6 புள்ளிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்பதால், முதல் வகுப்பு மாணவர்கள் முதலில் தமிழ், ஆங்கில எழுத்துக்களுக்கான புள்ளிகளை மனனம் செய்துகொண்டு, பின் அவற்றைப் பயன்படுத்தி எழுதவும், வாசிக்கவும் பழகிக் கொள்கின்றனர். கணிதச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, உருவங்கள் மற்றும் வடிவங்களை அவர்கள் தங்கள் விரல்களால் தொட்டுப் புரிந்துகொண்டு கற்கின்றனர்.
இங்கு புத்தக பாடங்களோடு தனிமனித ஒழுக்கம், நாட்டுநடப்புச் செய்திகள், நன்னடத்தை வகுப்புக்கள், கலை, கணிப்பொறி, விளையாட்டுப் பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் (Mobility Training), பெண்களுக்கான சிறப்புப் பராமரிப்புக் கல்வி ஆகியவை சிறு வயதிலிருந்தே அளிக்கப்படுகின்றன. மேலும், மாணவ-ஆசிரியர் விகிதமும் மிகக் குறைவாக இருப்பதால் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களின் கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சியிலும், ஒழுக்கம் மற்றும் உளவியல்சார் முதிர்ச்சியிலும் தனி கவனம் செலுத்தி, அவர்களுக்கு உலக நடைமுறைகளையும், போட்டிகள் நிறைந்த உலகினில் அவர்களது வாழ்க்கைச் சவால்களைத் திறமையாக எதிர்கொண்டு, அவர்கள் விரும்பும் உயரத்தை அடையும் வழிமுறைகளையும் முறையாகப் பயிற்றுவிக்கின்றனர். மேலும், அம்மாணவர்களின் தனித் திறன்களைச் சிறுவயதிலேயே அடையாளம் கண்டு, அவற்றை வளர்த்தெடுக்கும் முனைப்புடன் அவ்வாசிரியர்கள் செயல்படுவதோடு அவற்றை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.
சுருங்கக் கூறின், 8-ஆம் வகுப்பை முடித்த ஒரு மாணவன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவனாகவும், ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாகப் பேசத் தெரிந்தவனாகவும், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை அறிந்தவனாகவும், தனித்து விடப்படும் சமயத்திலும் அதைச் சமாளிக்கத் தேவையான மன வலிமை, அருகில் இருப்போரிடம் தன் கருத்துக்களை எடுத்துரைத்து வேண்டியதைக் கேட்டுப் பெறும் முறைமையை அறிந்தவனாகவும், கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், பொருளாதாரம் குறித்த அறிமுகம் பெற்றவனாகவும் வெளிவருவான். மொத்தத்தில், வாழ்க்கையின் அடிப்படைத் திறன்களையும், அடுத்த நிலைக்குச் செல்வதற்கான தகுதிகளையும் பெற்றவனாக வளரும் நிலை உருவாகும். எனவே, பார்வை மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் 1 முதல் 8 வரையிலான வகுப்புக்களை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மேல்நிலைக் கல்வி (Higher Secondary Education)
9-ஆம் வகுப்பு முதல் பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் தம் வயதுள்ள மற்ற மாணவர்களுடன் இணைந்து கல்வி பெறுதல் நலம். அவர்களின் கற்றலை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக சிறப்பாசிரியர்கள் அவசியம் நியமிக்கப்பட வேண்டும்.
பதிலி எழுத்தர்கள் ஒதுக்கீடு (Scribes Allotment)
பதிலி எழுத்தர்களின் ஒதுக்கீட்டிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். தேர்வெழுத வரும் பதிலி எழுத்தர்கள் அந்தந்தப் பாடங்கள் குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருத்தல் அவசியம். ஆங்கில வழியில் பயின்றவர்களால் தமிழ் மொழித் தேர்வர்களுக்குத் திறம்பட உதவமுடியாது. மேலும், கணிதம் மற்றும் கணக்குப்பதிவியல் பாடத் தேர்வுகளைச் சந்திக்க, கணிதம் பயின்ற அல்லது கணிதச் செயல்பாடுகளை விரைவாகச் செய்யக்கூடிய எழுத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே குறித்த நேரத்திற்குள் தேர்வை எழுதி முடிப்பது சாத்தியப்படும்.
சிறப்புப் பயிற்சி (Special Training)
இளங்கலைக் கல்வியியல் (B.Ed) மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு (DT.Ed) போன்ற ஆசிரியர் கல்விக்கான பாடத்திட்டத்தில் சிறப்புக் குழந்தைகளுக்குக் கற்பித்தல் சார்ந்த சிறப்புப் பயிற்சிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அதாவது, 2 ஆண்டுப் பாடத்திட்டத்தில், முதலாம் ஆண்டில் கல்விசார் பாடங்களும், 2-ஆம் ஆண்டில் சிறப்புக் குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தல் குறித்த சிறப்புப் பயிற்சிகளை உள்ளடக்கிய தொழில்சார் பாடங்களும் இணைக்கப்படும் பட்சத்தில், இன்றைய உள்ளடங்கிய கல்விக்கான சிறப்பாசிரியரைத் தேடவேண்டிய தேவை இருக்காது. அம்முறையின்மூலம் கல்வி பெற்ற ஆசிரியர், தன் வகுப்பறையில் உள்ள எல்லா மாணவர்கள்மீதும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின்மீதும் சிறப்புக் கவனம் செலுத்த முடியும்.
பயிற்சியில் மாற்றம்
தற்போது, உள்ளடங்கிய கல்வி முறையின்கீழ் அரசுப் பள்ளிகளில் அனுமதிக்கப்படும் மாற்றுத்திறன் பெற்ற குழந்தைகளைக் கையாளும் முறைகள் குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்புக்கள் பாட, வகுப்பு ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ. மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ.க்கள் மூலம் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புக்களை நடத்தும் பொறுப்பு சிறப்புப் பயிற்சி பெற்ற, சிறப்புப் பள்ளிகளில் பணிபுரிகின்ற, அனுபவமிக்க, திறமையான ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தனிவகைப் பாடத்திட்டம் (Individualized Education Plan)
வீடுசார் பயிற்சி பெறும் குழந்தைகளுக்கென தனிவகைப் பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். பயிற்றுவிப்பாளர்கள் அவர்களுக்கான குழந்தைகளின் வீடுகளுக்கு அடிக்கடிச் சென்று முறையான பயிற்சியைத் தவறாமல், தொடர்ச்சியாக அளிக்க வேண்டும். மிகவும் பாதிக்கப்பட்ட குழந்தை எனில், மிகுந்த அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்படுவதோடு, அவரவர் அன்றாட வேலைகளைச் செய்யப் பழகும்வரைப் பொறுமையாகப் பயிற்றுவிக்க வேண்டும். அவர்களது பெற்றோருக்கும் தைரியமூட்டுவதாக அவ்வாசிரியர்களது உழைப்பு மற்றும் திறமை அமைந்திருத்தல் அவசியம்.
‘அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’.
இக்கட்டுரையைப் பொறுத்தவரை, பார்வையற்ற ஒருவருக்கு பிரெயில் எழுத்துக்களைக் கற்பிப்பதே மேற்சொன்ன யாவற்றிலும் மிகச்சிறந்த புண்ணியமாகும். பிறவிப் பார்வையற்றவரானாலும் சரி, தவிர்க்க இயலாத நோய்கள், எதிர்பாராத விபத்துக்கள் உள்ளிட்ட பிற காரணங்களால் உடனடியாகவோ, படிப்படியாகவோ பார்வையைப் பறிகொடுத்தவரானாலும் சரி, பிரெயில் கல்வி எல்லோருக்குமே கட்டாயமாக்கப்படுதல் வேண்டும். பிரெயில் புத்தகப் பயன்பாடும், பிரெயில் அச்சகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். சிறப்புப் பள்ளிகளும், சிறப்பாசிரியருக்கான பணியிடங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போதைய உள்ளடங்கிய கல்வி முறையின்படி முதல் வகுப்பில் சேரும் பார்வை மாற்றுத்திறன் பெற்ற மாணவனுக்கு அவனுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பிரெயில் எழுத்துக்கள் அறிமுகப் பாடமாக கற்பிக்கப்படுவதில்லை. எழுத்துக்களை அறிவிக்கும் கடவுளர்களாகச் செயல்பட வேண்டிய சிறப்பாசிரியர்களுக்கே பிரெயில் முறை தெரியாது என்பதுதான் வேதனையிலும் பெரிய வேதனை.
தற்போது எவரது பார்வையிலும் படாமல் பின்தங்கிய நிலையில் இருக்கும் பிரெயில் முறையை அடிப்படையாகக் கொண்ட பார்வையற்றோருக்கான கல்வி எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ. இணைந்து புதிதாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அமைப்பிலாவது புதுப்பொலிவு பெறவேண்டும். 24 மணிநேரமும் இணையத்தில் உலவினாலும், ஐ.டி. துறையில் ஐக்கியமானாலும், தொடர்ச்சியான தொடுதிரைப் பயன்பாட்டில் தொலையாமல் தொலைந்தாலும் பிரெயில் எழுத்துக்களைத் தொட்டுப் படிப்பதையே திருப்திகரமானதாக, கௌரவமானதாக, சிறந்த அனுபவமாகக் கருதுவதோடு, இன்றைய இளைய சமுதாயத்திற்கும் அதை உணர்த்த விழைகின்ற என் போன்ற பிரெயில் பிரியர்களின் எதிர்பார்ப்பு இதுதான். வருங்காலப் பார்வையற்ற சாதனையாளர்களின் பட்டியலில், இன்றைய மாணவர்களின் பெயர்களும் இடம்பெற அரசு, சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பட்டும்.
--
கட்டுரையாளர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]