இன்றைய அறிவியல் நெறிக் காலத்தின் முற்பகுதி, பார்வையற்றவர்கள் வாழ்வில் சோதனைகள் பலவற்றைக் கடந்து சாதனைகள் நிகழ்த்திய காலமாகும். உயர்கல்வி பெற, கற்ற கல்விக்குரிய பணிகளைப் பெற என அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கே பல போராட்டக் களங்களைச் சந்தித்து, பார்வையற்றோர் தங்கள் வாழ்வில் ஏற்றம் பெறவேண்டிய சூழல் நிலவிற்று.
இந்தச் சூழலில், உயர்கல்வி கற்றலுக்கான தேவை அதிகரித்தது. அன்றாடம் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடங்களைப் படித்துக் காட்டுவதற்கும், தேர்வுகளை எழுதுவதற்கும் வாசிப்பாளர்கள் தேவைப்பட்டனர். அந்தத் தேவையை நிறைவேற்றத் தோன்றியதே ‘Readers Association for the Blind’ என்ற வாசிப்பாளர்கள் சங்கம். திருமதி. அன்னம் நாராயணன் அவர்களால் முன்னெடுத்து நடத்தப்பட்ட இவ்வமைப்பின் மூலம் 1979-ஆம் ஆண்டு பார்வையற்றவர்களுக்கு அறிமுகமானவர்தான் திரு. எஸ்.எஸ். கண்ணன் என்று அழைக்கப்படும் சருக்கல் சீனிவாசன் கண்ணன் அவர்கள்.
அறிமுகமான காலம் தொடங்கி தனது இறுதிக் காலம் வரையிலும் பார்வையற்றவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தார் எனின், அது வெற்று வார்த்தை தான்! பார்வையற்றோரின் வழித்துணையாக, இல்லை இல்லை, வாழ்க்கைத் துணையாக விளங்கியவர் திரு. S.S. கண்ணன் அவர்கள். முகம் காண இயலாத பலருக்கு அவர்தான் முகவரி! அறிவையும், எதிர்கால வாழ்வையும் தேடி சென்னை வந்த நம்மவர்களுக்கு அவரது இல்லம்தான் சரணாலையம். பார்வையற்றோர் வாழ்க்கைத் தேரின் மேல்தட்டில் அமர்ந்து பயணிக்க, மிதிவண்டியின் மீதேறி மதி வளர்த்த சான்றோர் அவர்!
தமிழக மின் வாரியத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர் (Chief Superintendent of Tamil Nadu Electricity Board) பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், ஓய்வு நாட்களைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என எண்ணினார்.
அதன் அடிப்படையில் பார்வையற்றோருக்கு வாசிப்பாளராகத் தொண்டாற்றத் தொடங்கினார். பார்வையற்றவர்களைச் சந்தித்த சில வாரங்களிலேயே, அவர்கள் தங்கியிருந்த கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு நேரடியாகச் சென்று வாசிப்புப் பணிகளை மேற்கொண்ட அவர், நாளடைவில் தமது வீட்டிற்கே அவர்களை வரவழைத்து புத்தகங்களை வாசித்துக் காட்டத் தொடங்கினார். அவர்தம் குடும்பத்தினரும் இப்பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். திரு. கண்ணன் அவர்களுடைய தமக்கையார் திருமதி. பத்மா ராமசாமி அவர்கள் புத்தகங்களை ஒலிப்பதிவு செய்து கொடுத்ததோடு, திரு. கண்ணன் அவர்களின் இல்லத்திற்கு வரும் மாணவர்களுக்கு நேரடியாகவும் புத்தகங்களை வாசித்துக்காட்டினார்.
திரு. கண்ணன் அவர்களுடைய இல்லத்தரசியார் திருமதி. மைதிலி கண்ணன் அவர்களும் மாணவர்களுக்கு வாசிப்புப் பணியை மேற்கொண்டவர். அதோடு, பசித்த முகம் பார்த்து பார்வையற்றவர்களுக்குப் பண்போடு உணவளிக்கும் மாதரசியவர். ‘பழைய எண் 18/புதிய எண் 36, வடக்கு சாலை, மேற்கு C.I.T. நகர், நந்தனம், சென்னை - 35’ எனும் அவருடைய இல்ல முகவரி பார்வையற்றவர்களின் நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கும். மேற்கூரிய முகவரி, நூற்றுக்கணக்கான பார்வையற்றோரின் தொடர்பு முகவரியாக விளங்கிற்று.
மாணவர்களின் பெருக்கத்திற்கேற்ப வாசிப்பாளர்களின் தேவை அதிகரிப்பதனை உணந்த திரு. கண்ணன் அவர்கள், சென்னை மாநகரில் உள்ள வாசிப்பாளர்களைக் கண்டறிய மிதிவண்டியிலேயே பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தார். வாசிப்பாளர்களை பார்வையற்றோருக்கு அறிமுகப்படுத்தியதோடன்றி, வாசிப்பாளர்களின் இல்லத்திற்கு மாணவர்கள் செல்லும்போது ஏற்படும் சிக்கல்களை நன்கு ஆராய்ந்து, தக்க மாணவர்களைத் தக்க வாசிப்பாளர்களின் இல்லத்திற்கு அனுப்புவதனை வழக்கமாகக் கொண்டிருந்தார். பார்வையற்றோரின் இயல்புகளை வாசிப்பாளர்களுக்கு நன்கு எடுத்துரைத்து, இரு தரப்பினருக்கும் இடையே நல்ல புரிதலை ஏற்படுத்தினார்.
திரு. ச.சீ. கண்ணன் அவர்கள், பொதுவுடைமை இயக்கத்தின் தீவிரப் பற்றாளராக விளங்கினார். பொதுவுடைமைக் கொள்கைகள் சார்ந்த நூல்கள் பலவற்றைச் சேகரித்த இவர், ‘கார்ல் மார்க்ஸ் நூலகம்’ என்ற பெயரில் தன் வீட்டிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்தினார். அதில் பல்லாயிரக்கணக்கான முற்போக்குச் சிந்தனை நூல்களும், பொதுவுடமை இயக்கம் பற்றிய நூல்களும் இருந்தன. அவற்றை பார்வையற்றவர்களுக்கு படித்துக் காட்டுவார்.
அவரது உதவியால் பல முனைவர் பட்ட ஆய்வாளர்களும் ஆய்வியல் நிரைஞர்களும் உருவாகினர்.
விதைகளுக்கோர் விளைநிலம்
பார்வையற்றவர்களுக்கு உயர்கல்வி கற்றலில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வலுவான ஓர் அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினர் சிலர். அந்த ஆலோசனையை திரு. கண்ணன் அவர்களிடம் கொண்டு சென்றபோது அதை வரவேற்ற அவர், அதற்கு உடனடியாக செயல்வடிவம் கொடுத்தார். அதன் விளைவாக, 1980-ல் ‘பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்’ (College Students & Graduates Association for the Blind - CSGAB) உதயமானது. அதன் அலுவலகச் செயல்பாட்டிற்கென தன் வீட்டில் ஓர் அறையை ஒதுக்கிக் கொடுத்து, சங்கம் சிறப்பாக செயல்படப் பேருதவி புரிந்தார். சங்கத்திற்கு, ‘சுய மரியாதை’ (Self-Respect), ‘தன்னேற்பு’ (Self-Acceptance), ‘தற்சார்பு’ (Self-Reliance) ஆகிய குறிக்கோள்களை உருவாக்கிக் கொடுத்தார்.
பார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காகவே தொடங்கப்பட்ட இவ்வமைப்பில் திரு. கண்ணன் அவர்கள் ‘கௌரவ நிர்வாக செயல் இயக்குனராக’ (Honorary Executive Director) செயலாற்றினார். காலப்போக்கில் பார்வையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், சங்கத்திற்கு ஒரு தனியான அலுவலகம் தேவைப்பட்டதனை உணர்ந்து, 1986-ஆம் ஆண்டு, சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தக்கர்பாபா வளாகத்தில் சங்கத்திற்கு ஓர் அறையினை அலுவலகமாகப் பெற்றுத் தந்தார். அந்த அறையில்தான் இன்றும் சங்கம் செயல்பட்டு வருகிறது.
உயர்கல்வி பெறுவதில் பார்வையற்றோருக்கு அப்போது பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. அரசுக் கல்லூரிகளில் பார்வையற்றவர்களுக்கு கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இவற்றைக் கண்டித்து அரசுக்கு கடிதங்கள் மூலமாக எதிர்ப்புகளைச் சங்கத்தின் மூலம் தெரிவித்தார். அரசுக் கல்லூரிகளுக்கு நேரில் சென்று கல்லூரி முதல்வர்களோடு வாதிட்டு உயர்கல்வி வாய்ப்பினைப் பெறுவதில் பெரும் பங்காற்றினார். லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் திருமதி. சந்திரிகா என்ற பார்வையற்ற பெண்மணிக்கு இடம் மறுக்கப்பட்டபோது, சங்கப் பொறுப்பாளர்களுடன் சென்று தமிழக ஆளுனரைச் சந்தித்து சிறப்பு அனுமதி பெற மிகவும் பாடுபட்டார். பார்வையற்றவர்களோடு தொடர்புடைய துறை அமைச்சர்களைச் சந்திக்க தலைமைச் செயலகம் வரை சங்கப் பிரதிநிதிகளோடு சென்று பார்வையற்றவர்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் அமைச்சர்களே வியக்கும் வண்ணம் ஆணித்தரமாக எடுத்துரைப்பார். இதற்குப் பிறகுதான் அரசுக் கல்லூரிகளில் நம்மவர்கள் உயர்கல்வி பெற இடம் எளிதாகக் கிடைக்கத் தொடங்கியது. இவ்வாறு இவர் சங்கத்திற்கு ஆற்றிய அரும்பணிகளால் சங்கத்தின் பிரிக்கவியலா ஓர் அங்கமெனத் திகழ்ந்தார்.
உறுதுணை நின்ற உத்தமர்
பார்வையற்றோர் கல்வி பெற உதவியதோடு இவரது பணிகள் நின்றுவிடவில்லை! தன்னை நாடிய அனைவரையும் ஒன்றாய் கருதியும் மதித்தும் வந்த திரு. கண்ணன் அவர்கள், பார்வையற்றோரின் பொருளாதாரத் தேவைகளையும் நிறைவு செய்து தந்திருக்கிறார். கல்வி, உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட எல்லாத் தேவைகளிலும் பொருளாதார ரீதியாக இவர் துணை நின்றார். பார்வையற்றோருக்குத் தேவையான கல்லூரிப் பாடப் புத்தகங்களைத் தன் சொந்த செலவில் வாங்கித் தருவார். பார்வையற்றோர் தங்களுக்குள் மனமொன்றித் திருமணம் செய்துகொள்ள எண்ணியபோது அதனை வரவேற்றதோடு, அவர்கள் குடும்பத்தில் எழுந்த எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு திருமணம் செய்து வைத்தார்.
பார்வையற்றவர்களின் அறிவும், உழைப்பும் வீணாகக் கூடாது என்ற எண்ணமுடையவர் திரு. கண்ணன் அவர்கள். அதன் அடிப்படையில், பார்வையற்றோரின் எழுத்துகள் நூலாய் வெளிவரத் துணை நின்றார். காலஞ்சென்ற பேரா. முனைவர் திரு. வீரராகவன் அவர்களின் ‘சென்னை தொழிற்சங்க வரலாறு’ எனும் முனைவர் பட்டப் பேற்றிற்கான ஆய்வேடு, பேரா. திரு. மா. உத்திராபதி அவர்கள் எழுதிய ‘காலந்தோரும் நந்தன் கதை’ என்ற ஆய்வியல் நிரைஞர் பட்டப் பேற்றிற்கான ஆய்வேடு, பேரா. முனைவர் திரு. க. வேலு அவர்கள் எழுதிய ‘இதய வேதனை’ கவிதைத் தொகுப்பு ஆகியவற்றை ‘நேத்ரம்’ என்ற தனது சொந்தப் பதிப்பகத்தின் மூலம் நூலாய் வெளியிட்டு உறுதுணை புரிந்தார். மேலும், அவரே பார்வையற்றோரின் வாழ்வியலைக் களமாகக் கொண்டு ‘போராட்டம் ஏன்?’, ‘விழிகள்’ ஆகிய நூல்களை எழுதினார்.
ஒரு வாசிப்பாளராக நமக்கு அறிமுகமான திரு. ச.சீ. கண்ணன் அவர்கள், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினைத் தோற்றுவித்து, நம்மவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர். ‘பார்வையற்றோரின் தந்தை’ என்று சொல்லும் அளவிற்கு அவரது அரும்பணிகள் அமைந்தன. நாம் வாழ்வில் ஏற்றம் காண ஏணியாய் நின்றவர். பொதுவுடைமைப் பொருளை நாமும் உணரத் துணை நின்றவர். நம்முடைய அறிவுத் தேடலுக்கு உரமூட்டி அவற்றை நூலாக்கியதோடு தானே ஒரு படைப்பாளியாகவும் விளங்கியவர்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ எனும் வள்ளுவரின் இலக்கியத்திற்கு இலக்கணமாய் நின்ற திரு. கண்ணன் அவர்கள், 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார் எனினும் ஒவ்வொரு பார்வையற்றவரின் நெஞ்சத்திலும் இடம் பெற்றுவிட்டார்.
பார்வையற்றவர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட அவருடைய பிறந்த நாளை, இவ்வாண்டு முதல் ‘பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாள்’-ஆக கொண்டாடுவதென பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்து, இவ்வாண்டு நடத்தியும் காட்டியிருக்கிறது. அதுமட்டுமன்றி, அவரது நினைவாக ‘CSGABSSK Library’ என்னும் பெயரில் நூலகம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட புற அங்கீகாரங்களை எழுத்தாக்கம் செய்ய இயலும். ஆனால், பார்வையற்றவர்களின் அறிவுப் பசிக்கு உணவூட்டியதுடன், அவர்கள் வாழ்க்கைக் கடலைக் கடக்கத் தக்கதோர் கலங்கரை விளக்காய் திகழ்ந்த திரு. எஸ்.எஸ். கண்ணன் அவர்களுக்குப் பார்வையற்றவர்கள் தங்கள் உள்ளத்தில் கொடுத்திருக்கும் அக அங்கீகாரத்தினை எப்படி எழுத்தில் கொண்டுவர இயலும்?
--
கட்டுரையாளர் பொன்னேரி உ.நா. அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ் துறை உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: [email protected]