அத்தனையும் வேண்டாமென விலக்கிவிட்டு அசலான, இயல்பான பார்வை மாற்றுத்திறனாளியாக உலா வந்த நட்சத்திரம் நடிகை ரேவதி அவர்கள். இதற்கான வாய்ப்பை உருவாக்கி அளித்த இயக்குனர்கள் மகேந்திரன், நாசர் ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ரேவதி அவர்கள், ‘கை கொடுக்கும் கை’, ‘அவதாரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார். இரண்டிலுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான கதாபாத்திரம்தான். வீட்டிலேயே இருக்கும் எளிய கிராமத்துப் பெண்; இறுதியில் பாலியல் வல்லுறவு செய்யப்படும் பெண்.
தன்னைப் பார்வை மாற்றுத்திறனாளியாகக் காட்டிக்கொள்ள ரேவதி மிகையான உடல்மொழியை வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலான நேரங்களில் ஏதேனும் ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கிறார். எதையாவது கவனிக்கும்போது சற்றே தலையைச் சாய்த்து உற்றுக் கேட்கிறார். எதையாவது பெற்றுக்கொள்ளும் போது கொடுப்பவர் தனது கையைத் தொட்டுத் தரும்வரை நிதானமாகக் காத்திருக்கிறார். அதாவது, மிகையான வகையில் தடுமாற்றத்தைக் காட்டாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ரேவதி.
இரண்டு திரைப்படங்களிலும் கதைப்படி ரேவதியைத் தவிர வேறு பெண்கள் அவரது வீட்டில் இல்லை. ஆகவே, சமையல் முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் பார்வை மாற்றுத்திறனாளியான ரேவதியே செய்கிறார். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘ராஜ பார்வை’ முதல் ‘அதே கண்கள்’ வரை பார்வை மாற்றுத்திறனாளியாக வருகின்ற ஆண் கதாபாத்திரங்கள் எவ்வாறு நடமாடுகின்றனர், எவ்வாறு தங்களது பணிகளைச் செய்கின்றனர் என்று மற்றவர்கள் வியந்து கேட்பதாக ஒருசில காட்சிகள் உள்ளன. அதே நேரத்தில், பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்துகொண்டே அனைத்து வீட்டு வேலைகளையும் செய்கின்ற ரேவதியிடம், எப்படி இவ்வளவும் முடிகிறது என யாரும் கேட்பதாக ஒரு காட்சி கூட இல்லை!
அதாவது, வெறுமனே நடமாடுகின்ற ஆண் கதாபாத்திரங்கள்மீது அக்கறை காட்டுகின்ற திரைக்கதை, பலவகையான வீட்டு வேலைகளைச் செய்யும் ரேவதியிடம் துளியளவு அக்கறை கூட காட்டவில்லை! பெண் பார்வை மாற்றுத்திறனாளிகள் வீட்டு வேலைகளை மேற்கொள்வதில் உள்ள இடர்களை இந்தத் திரைப்படங்கள் ஓரளவிற்கேனும் காட்சிப்படுத்தி இருக்கலாம்.
‘கை கொடுக்கும் கை’ திரைப்படத்தில் கவர்ச்சியான உடை அணிந்து பாலியல் தொழில் மற்றும் சாராயம் விற்பவராக ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கும். விடலைப் பையன் ஒருவன் அவளை ஏக்கத்துடனும் ஆசையுடனும் பார்த்துக்கொண்டே இருப்பான். அதே பையன், ரேவதி வேறொருவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பின்னர் ஆசையுடன் ரேவதியின் தோளில் கை வைப்பான். பாலியல் தொழிலையே தனது தொழிலாக வைத்திருக்கும் பெண்ணைத் தொடுவதற்குத் தயங்கி, அஞ்சி இறுதிவரை பார்த்துக்கொண்டே இருந்த அவன், பார்வை மாற்றுத்திறனாளி என்பதால் ரேவதி மீது தயக்கமின்றி, அச்சமின்றி கை வைக்கிறான். பார்வை மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் ஒவ்வொரு இடத்திலும் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய அவலம் இது.
அந்த விடலைப் பையன் ரேவதிக்கு துணையாக அவள் வீட்டில் இருப்பவன்தான். அவன்தான் ரேவதியை வேறொருவர் பாலியல் வல்லுறவு செய்வதற்கு உதவியும் செய்கிறான். ரேவதி அந்தப் பையனிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்காமல், தன்னைப் பாலியல் வல்லுறவு செய்தது யார் என்றுதான் முதலில் கேட்கிறாள். தன்னை வஞ்சித்தது யார் என அடையாளம் காண்பதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள சிக்கல் இது. இதனால்தான் மாற்றுத்திறனாளி சமூகம் ஒடுக்கப்பட்ட சமூகமாகவும் வாழ வேண்டியிருக்கிறது.
அப்படி அடையாளம் கண்டுகொண்டே இருந்தாலும், விசாரணையில் அவளால் அடையாளம் காட்ட முடியுமா? அடையாளம் காட்டினாலுமே அவளது கூற்றை சட்ட நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளுமா? பாலியல் ரீதியான வழக்குகள் மட்டுமின்றி அனைத்து வழக்குகளிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களைப் பாதிக்கப்பட்டவர்களாக, சாட்சிகளாக நிலைநிறுத்த முடிகிறதா? ‘விதி’ திரைப்படம் போன்று மேற்குறிப்பிட்ட கேள்விகளை விவாதிப்பதாக இந்தத் திரைப்படங்கள் இருந்திருக்கலாம் அல்லது வருங்காலத்தில் அத்தகைய படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
அடுத்த பகுதிக்கான டீசர் இதோ: நடனம், சண்டை, உடல்மொழியுடன் கூடிய நகைச்சுவை போன்ற காட்சிகளைப் பார்வை மாற்றுத்திறனாளி கதாபாத்திரங்கள் மூலமாக காண்பிக்க இயலாது. இவைதான் பார்வை மாற்றுத்திறனாளிகளை முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட படைப்புகள் உருவாவதற்குத் தடையாக உள்ளன. இந்தத் தடைகளை உடைக்கும் முன்மாதிரியாக உருவான திரைப்படம் அது. ஆனால், பார்வை மாற்றுத்திறனாளிகளை முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட திரைப்படங்கள் சரளமாக உருவாகாமல் போனதற்கும் அதே திரைப்படம் காரணமாக அமைந்துவிட்டதும் ஒரு சோக முரண் தான். அந்தத் திரைப்படம் அடுத்த இதழில்...
...வெளிச்சம் பாய்ச்சுவோம்
--
கட்டுரையாளர் ஈரோட்டிலுள்ள காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல.
தொடர்புக்கு: [email protected]