22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகவும் எழுச்சியான போராட்டம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினால் (College Students and Graduates Association for the Blind - CSGAB) கடந்த மார்ச் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையற்றோரின் வளர்ச்சிக்கும், அவர்தம் உரிமைகளுக்கும் எண்ணற்ற போராட்டங்களை இந்த அமைப்பு தொடர்ச்சியாக முன்னெடுத்து வெற்றி கண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஏராளமான நோக்கங்களை இந்த அமைப்பு கொண்டிருந்தாலும், அது தனது இருப்பை மறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட அரசு சார் வேலைகளை, களம் கண்டு பார்வையற்ற பட்டதாரிகளுக்குப் பெற்றுத்தருவதன் மூலம் அழுத்தமாக பதித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் பணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வாய்ப்புகளையும் உரிமைகளையும் உறுதிசெய்துதந்த நீண்ட நெடிய வரலாற்றை தன்னகத்தே இந்த சங்கம் கொண்டிருக்கிறது என்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
அதன் வரிசையில், மேலும் ஒரு போராட்ட அத்தியாயம் மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் இந்த மதிப்புமிகு சங்க வரலாற்று ஏடுகளில் எழுதப்பட்டது. ஆம், இது பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய பெண்களின் தியாக தடம். சொற்ப நாட்களே ஆயினும், வியத்தகு விதத்தில் அவர்கள் உண்ணாவிரத தியாகிகளாய் அவதரித்தனர்.
மூன்று பெண்கள் உட்பட ஐவர் இந்த போராட்டத்திற்கு உந்துதலாகவும், ஊக்க சக்தியாகவும், மைய விசையாகவும் தங்களை அமைத்துக் கொண்டனர். ஒருநாள் காத்திருப்பு மற்றும் இரண்டுநாள் கவன ஈர்ப்பு சாலைமறியல் ஆகியவை இந்த ஐவரின் உள்ள உரத்தை பலப்படுத்துவதற்காகவே வீரியத்தோடு முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச பெண்கள் தினம் நெருங்கி வரும் தேதிக்கு முன்பாக, அதாவது மார்ச் எட்டுக்கு முன்னதாக, பார்வையற்ற பட்டதாரி பெண்கள் தன்னெழுச்சியாக உண்ணா நோன்பு இருந்தது, எதிர்காலத்தில் ஒரு பெண் இந்த அமைப்பின் தலைமைக்கு வரப்போவதை பிரகடனப்படுத்துவதாக இருந்தது. அதைத்தானே இந்த அமைப்பை ஈன்றெடுத்த ஆண் தாய், மதிப்புமிகு S.S. கண்ணன் ஐயா அவர்களும் விரும்பி இருப்பார்!
ஐந்து போராட்ட தியாகிகளும், வில்லிங்டன் வளாகத்தில் உள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக வளாகத்தினுள், அதிலும் குறிப்பாக, அந்த அலுவலக போர்டிகோ பகுதியில் இருந்த படிக்கட்டுகளில் உண்ணாவிரதம் இருக்கும்படி நேர்ந்தது. அந்த இடத்தைக்கூட மிகப்பெரிய வாக்குவாதத்திற்கு பிறகுதான் உறுதிசெய்ய முடிந்தது. காவல் துறை தனது கடமையை இங்கு செவ்வனே ஆற்ற தன்னால் இயன்றவரை முயன்று பார்த்தது; இறுதியில், திரண்டு கிடந்த போராட்ட குணத்தின் முன்னால் அது தோற்றுபோய் மண்டியிட நேர்ந்தது. அந்த வளாகத்தையே போராட்ட களமாக கட்டமைத்து, உரிமைத் தீ அங்கு போராளிகள் என்னும் உருவத்தில் கனலாய் பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. ஊடகங்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், எமது இளைய போராளிகள் அந்த களத்தை காணொளிகளாக தொகுத்து வெளியிட்டு நெருக்கடி கொடுக்கத் தவறவில்லை.
இந்த களப் போராளிகளையும், உண்ணாவிரதத் தியாகிகளையும், சங்கத்தையும் ஒற்றை புள்ளியில் இணைத்து வழிநடத்திச் செல்ல, ஒரு போராட்டக் குழு சங்கத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், போராட்ட அனுபவம் கொண்ட உறுப்பினர்களும், மாணவர்கள் தங்கி பயிலும் விடுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக, பிரதான விடுதிகளில் இருந்து ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்வரும் போராட்டக் களத்தை கலந்து பேசி உறுதிப்படுத்துவதில் தொடங்கி, அடுத்த நாள் மாணவர்கள் மற்றும் பணியில் இல்லாத பார்வையற்ற பட்டதாரிகளை ஒருங்கிணைத்தது, அவர்களை உணர்வு ததும்ப வினைபுரிய வைத்தது, இறுதியில் அவை செய்தி வடிவம் பெற ஊடகத்தாரை திரளாக வரச்செய்தது என்பது மட்டுமின்றி இன்னும் ஏராளம் என்கிற அளவில் அவர்களின் பணி நீண்டு செல்கிறது. அது மிகவும் சிக்கல் நிறைந்த பொறுப்பும் கூட. ஏனெனில், இந்த போர் குணம் மிக்க களப் போராளிகளை இந்த போராட்டக் குழு கையாளுவதை பொறுத்துதான், மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் வெற்றியே தீர்மானிக்கப்படுகிறது. அதை இம்முறை அமைக்கப்பட்ட குழு மிக நேர்த்தியாக செய்து முடித்தது என்பது மிகவும் போற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரியது.
எல்லாவற்றையும்விட, மாணவர்கள் மற்றும் வேலையில் இல்லாத தோழமைகள் அளித்த பங்களிப்பு தனித்துவம் வாய்ந்தது. அதிலும் இம்முறை, பெண்கள் எழுச்சியோடு உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடுமையாக போராடியது இந்த உரிமை யுத்தத்திற்கு புதிய இரத்தம் பாய்ச்சுவதாக அமைந்திருந்தது. படித்து, பலகட்ட தகுதித் தேர்வுகளை முடித்தும் வேலை கிடைக்காததால், எரிந்துகிடந்த மனக் கொதிப்பு இந்த போராட்ட வீரர்களை, வெயில் ஏறி கொதித்துக்கிடந்த சாலையில் அமர்ந்து போராட வைத்தது. அதிலும், படித்துக்கொண்டிருக்கும் தம்பி தங்கைகள், படித்து முடித்து பணியை எதிர்நோக்கி காத்திருக்கிற தோழமைகளுக்காக போராடியது, இந்த உரிமை மீட்பு இயக்கத்திற்கு கிடைத்த இணையில்லா பெரும்பேறு. சாலையில் அமர்ந்தபடி அவர்கள் எழுப்பிய உணர்ச்சிமிகு உரிமை கோஷங்கள், அதிகாரச் செவிகளுக்குள் ஈட்டிபோல் பாய்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் காவலர்களைக் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டாம் அல்லவா? அரசை காக்கவே கட்டி அமைக்கப்பட்ட காவல் துறை, 6, 7-ஆம் தேதிகளில் எமது போராட்ட வீரர்களை கைது செய்து அடைத்து ஓய்ந்து போனது.
மேலே குறிப்பிடப்பட்டது போல, இந்த போராட்டம் ஆளுமைமிகு இளம் போராளிகளை அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறது. இந்த சுட்டிக்காட்டல் இருபாலரையும் உள்ளடக்கியது. பெண்கள் உண்ணாவிரதம் இருந்ததால், அவர்களோடு சில தோழிகள் அவர்களை கவனித்துக்கொள்ள இரவு பகல் பாராமல் இருக்க வேண்டியதாயிற்று. அந்த முக்கிய பொறுப்பை, வில்லிங்டன் அரசு விடுதியில் இருந்த தங்கைகள் சற்றும் முகம் சுழிக்காமல் ஏற்றுக்கொண்டனர். அதிலும் சிலர், இரவில் அங்கு காவல் இருப்பது, அடுத்தநாளே இதர மாணவிகளை அழைத்துக்கொண்டு போராட்டக் களம் காணச் செல்வது என தங்களை அந்த உரிமை வேள்விக்கு ஒப்புவித்திருந்தனர். தம்பிகளும், தோழர்களும் மிகவும் வியக்கத்தகு ஈடுபாட்டோடு, பெருந்திரளாக பங்கேற்று இந்த உரிமை பாதுகாப்பு முன்னெடுப்பிற்கு வலுவான ஆற்றலை வழங்கினர் என்பது நெகிழ்ச்சியைத் தந்தது.
எமது குறைகளைப் போக்கும் மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட ஆதிக்கத்தனமான கட்டுப்பாடு, அவர்களுக்குள் போராடியே தீரவேண்டும் என்கிற உத்வேகத்தை பாய்ச்சியது. ஆம், அவர்களின் போராட்ட ஆயுதத்தை தீர்மானித்து அளிக்கும் பொறுப்பை அடக்க பரிதவித்த மாற்றுத்திறனாளிகள் துறை ஏற்றுக்கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் போராடினார்கள் என்பதைவிட போராடியே தீரவேண்டும் என்கிற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர் என்பதே மறுதலிக்க இயலாத உண்மை.
போராளிகளை அடையாளப்படுத்தியதோடு மட்டும் இந்த மார்ச் புரட்சி நின்றுவிடவில்லை. புதியதொரு பரிமாணத்தை பரிசோதித்து, அதில் இவ்வமைப்பு வெற்றி கண்டது. இதற்கு முன் ஒருங்கிணைக்கப்பட்ட சங்கப் போராட்டங்கள் தொலைபேசி வழியேயும், நேரடியாக தொடர்பு கொண்டு அழைத்து வரல், புரிதலை ஏற்படுத்துதல் என்கிற அடிப்படையில் நிகழ்த்தப் பெற்றது. இம்முறை, சமூக ஊடகத்தின் சாலச்சிறந்த அங்கமாக திகழும் வாட்ஸ்அப் துணைகொண்டு இப்போராட்டம் சங்க பொறுப்பாளர்களால் கட்டமைக்கப்பட்டது. போராட்ட தேதிக்கு ஒருசில வாரங்களுக்கு முன்பாக, உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பொருட்டு இரு வாட்ஸ்அப் குழுமங்கள் C.S.G.A.B. செய்தி 1, 2 என்கிற பெயரில் தொடங்கப்பட்டன. இந்த குழுக்கள், அதில் பங்கேற்று கருத்துகளை வழங்கிய உறுப்பினர்கள் வழியே ஒரு அதி தீவிர போராட்டத்திற்கான அவசியத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது. எண்ணற்ற ஆலோசனைகளும், கருத்துப் பரிமாற்றங்களும், ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல்களும் தனிமைப்பட்டுக் கிடந்த உணர்வுகளை ஒருங்கிணைப்பதற்கான வடிகாலாகவும் இந்த தொழில்நுட்பச் செயலி செயல்புரிந்தது. நொடிப்பொழுதில் போராட்டம் பற்றிய செய்தி ஒவ்வொருவரையும் அடைந்து, ஆட்கொண்டது.
பணியில் உள்ள அன்பு உறவுகள் நிதி வழங்கத் தொடங்கினர். அவர்கள் வந்து கலந்துகொள்ள இயலாச் சூழலை வருத்தத்தோடு பதிவிட்டதோடு நிற்காமல் பொருளாதாரத்தையும், உத்வேகத்தையும் தொடர்ச்சியாக வழங்கிய வண்ணம் இருந்தனர். வாட்ஸ்அப்பில் இருக்கிற குரல் பதிவிடும் அம்சம் இவர்களை அதிகம் கவர்ந்த ஒன்று. குரல் என்கிற அடையாளத்தால் கூடி களிப்புறும் அன்பிற்கினிய கூட்டம் ஆயிற்றே! அந்த விதத்தில், குரல் பதிவுகள் போராட்டம் தொடர்பாக குவிந்த வண்ணம் இருந்தன!
சங்கத் தலைமை, “முதல்வரை சந்தித்துவிட்டோம். தொடர்ச்சியாக கண்காணித்து, பல சுற்று பேச்சுவார்த்தைகளை அமைச்சர் மற்றும் செயலாளர்கள் மட்டத்தில் நடத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வென்றெடுக்கலாம்” என்று தெரிவித்து இந்த போராட்டத்தை முடித்துக் கொண்டதால், இந்த எழுச்சித் தீ பிழம்பு அணைக்கப்பட்டிருக்கிறது.
இதில், சில விடையங்கள் மட்டும் அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டன. அவை யாதெனில், நமது உரிமைகள் நசுக்கப்படுகின்றன; சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன; அருவருக்கத்தக்க அலட்சியத்தால் அரசு தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வருகிறது என்பனவற்றைப் போராட்டத்தில் உணர்வோடு பங்கேற்ற ஒவ்வொருவரும் புரிந்துகொண்டனர். இதை உணர்ந்து, மீளா உறக்கத்தில் கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு அமைச்சகம் அரசை தொடர்ந்து அணுகி, இந்த சட்ட விதிமீறலுக்கு உடனடியாக முடிவு காணவேண்டும். அப்படி இல்லையெனில், இதைவிட மிகவும் பலம் பொருந்திய போராட்டத்தை அரசுக்கு எதிராக கையில் எடுக்கும் நிர்பந்தத்திற்கு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தள்ளப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை!
--
கட்டுரையாளர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: [email protected]