பாவையர்க்கு உரமூட்ட பாரதி பகன்றான், ‘பாதகம் செய்பவரைக் கண்டால் பயம்கொள்ள லாகாது பாப்பா’.
மதம், இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடுகளை மறந்து, உலக மகளிர் அனைவரும் ஒரு தோட்டத்து மலர்களாக மகிழ்ந்து, இந்த மகளிர் தினத்தைக் கொண்டாடுவதாக மார்தட்டிக் கொண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் மனநிலையில் இன்றைய மகளிர் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
பெண்ணுரிமைக் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், அத்துமீறல்களும், தாக்குதல்களும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இந்த நொடி வரை தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பதை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. பெண்கள் பிறந்த நாள் முதல், இவ்வுலகில் வாழும் இறுதி நாள் வரை அவர்கள் படும் இன்னல்களும், சந்திக்கும் சோதனைகளும் ஏராளம் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் படம் பிடித்துக் காட்டுகிறது. இத்தகு சூழலில், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுவதன் காரணங்களை அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.
‘Woman’ என்ற ஆங்கிலச் சொல், ‘Wifman’ (Wif = வயிறு) என்ற ஜெர்மானிய மொழிச் சொல்லிலிருந்து உருவான சொல்லாகும். ‘Wifman’ பின்னர் ‘Wiman’-ஆக மாறி, பின் ‘Wumman’ என்ற சொல் வடிவத்தைப் பெற்று, இறுதியாக ‘Woman’ என்ற தற்போதைய எழுத்து வடிவத்தைப் பெற்றது. வயிறு என்ற சொல் இனப்பெருக்கத்திற்கு உதவும் கருவறையைச் சுட்ட, கருவறையை வரமாகப் பெற்ற எல்லா உயிரினங்களுக்கும் இது பொதுப் பெயராகியது குறிப்பிடத்தக்கது.
சந்ததியை வளர்த்த பெண்ணினம் சந்திரனில் கால் பதித்து சாகசங்கள் புரிந்ததும், ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று சொன்னவர்களுக்கு ‘யாரும் வேண்டாம் படிப்பிருக்கு’ என்று தங்கள் செயல்களால் பதிலடி கொடுக்கும் நிலைக்கு வளர்ந்ததும், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவர்கள் நாடாளப் புறப்பட்டு வெற்றி கண்டதும், மண்ணைப் பார்த்து நடந்தவர்கள் விண்வெளியில் பறந்ததும் விண்ணிலிருந்து இறங்கிவந்த அழகு தேவதை வழங்கிய அதிசய வரத்தால் நிகழ்ந்தது அல்ல. மாறாக, அன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த மூடப் பழக்கவழக்கங்கள், ஆணாதிக்கம், அடிமை முறைகள் மற்றும் அவர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்துவந்த சொல்லமுடியாத வேதனைகளை எதிர்த்தும் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம், பணிவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல், பெண் கல்வி மற்றும் சில அடிப்படை உரிமைகளைக் கேட்டு முன்னெடுக்கப்பட்ட எண்ணிலடங்காப் போராட்டங்களால் விளைந்ததேயாகும்.
பிரெஞ்சுப் புரட்சி
பதினெட்டாம் நூற்றாண்டுவரை பெண்கள் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும், வீட்டு வேலை செய்யும் அடிமைகளாகவும், ஆண்கள் பலரின் மோகப் பொருளாகவும், குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் எந்திரங்களாகவுமே வாழ்ந்து வந்தனர். ஆரம்பக் கல்வி பெறவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கல்வி, கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, அறிவியல், அரசியல், பொருளாதாரம் மற்றும் அன்றாட நிகழ்வுகள் குறித்த அடிப்படை அறிவையும் பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில், 1750-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில்புரட்சி மெதுவாக பிற ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியது. பொருளாதார முன்னேற்றத்துக்காக எழுப்பப்பட்ட தொழிற்சாலைகள் பெண்களின் முன்னேற்றத்திற்கும் அடிகோலியதுதான் ஆச்சரியம். புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள், ஒதுக்கப்பட்டவர்களாக வீட்டுக்குள்ளேயே அடங்கி, ஒடுங்கி வாழ்ந்த பெண்களை பணிபுரிய வருமாறு அழைப்பு மடல்களை அனுப்பின; விழித்துக்கொண்டது பெண்கள் சமூகம். தொழிற்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட பெண்கள், தொழில்துறைப் பணிகளோடு உலக நடைமுறைகள் குறித்த அறிமுகமும் கிடைக்கப்பெற்றனர். குடும்பம் மற்றும் தொழிற்சாலைச் சூழலில் நிலவி வந்த இனப்பாகுபாடு மற்றும் அடிமை முறை குறித்து உணரத் தொடங்கினர். மேலும், இரண்டாம் பாலினமாகக் கருதப்பட்டு வாக்குரிமையும், அரசியலில் ஈடுபடும் உரிமையும் மறுக்கப்பட்டதையும் புரிந்துகொண்டனர். ஆண்களைவிட அதிகமான மன வலிமையைப் பெற்ற பெண்ணினம் தங்கள் ஆணாதிக்க எதிர்ப்பைத் தெரிவிக்கவும், அரசியலில் நுழையும் ஆர்வத்தைப் பதிவு செய்யவும் போராட்டத்தில் இறங்குவதாக முடிவெடுத்து, தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தது. அவர்களின் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளவும், எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ளவும் 1789-ஆம் ஆண்டு வெடித்த பிரெஞ்சுப் புரட்சி தகுந்த வடிகால் அமைத்துத் தந்தது என்றால் அது மிகையாகாது.
1789 ஜூன் 14-ஆம் நாள் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளோடு அரசியலில் ஈடுபடும் உரிமையையும் கேட்டு பெண்கள் பாரிஸ் நகர வீதிகளில் போர்க்கொடி உயர்த்தினர். பெண்களின் உரிமை கேட்புப் போரில், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் போராட்டத்தில் குதித்தனர். மக்கள் கூட்டம் அலைமோத, விழிப்புணர்வு கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கொட்டும் மழையில் போராளிகள் கூட்டம் அரசவை நோக்கி மிதந்து சென்றது. போராட்டத்தைச் சிறிதும் எதிர்பார்க்காத அப்போதைய பிரெஞ்சு அரசர் லூயி, புயலெனப் புறப்பட்ட பூவையரைத் தன் அதிகாரத்தைக் கொண்டு அடக்கப்போவதாக முழக்கமிட்டார். போராட்டக்காரர்களிடம் தம் இரு மெய்க்காப்பாளர்களைப் பறிகொடுத்ததால் பதறிப்போன அரசர், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்திரவாதம் அளித்து ஆர்ப்பாட்டத்திற்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார். கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மன்னர் முடி துறக்கவே, போராட்டத்தைத் தொடர்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
கிரீஸ் மாநகரில் வசிஸ்ட்ரடா என்பவரது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்மணிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போராட்டத்தில், மேற்சொன்ன கோரிக்கைகளோடு வேலைநேரக் குறைப்பும் முக்கியக் கோரிக்கையாக இணைத்துக்கொள்ளப்பட்டது. இத்தாலியப் பெண்களும் வாக்குரிமை கேட்டு கிளர்ச்சியில் இறங்கினர். இத்தகைய தொடர் போராட்டங்களின் வீரியத்தை அறிந்த ஆளும் வர்க்கம், சிறிது சிறிதாக செவிசாய்க்கத் தொடங்கியது. அவர்களுடைய தொடர் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்த நாள் மார்ச் 8, 1848. அப்போது, ஃபிரான்சின் புருஸ்ளியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய அரசர் லூயி பிளான்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதாகவும், அரசியலில் ஈடுபடும் உரிமை அளிப்பதாகவும் மேற்குறிப்பிட்ட நாளில் ஒப்புதல் அளித்தார். பெண்களின் நீண்டநாள் கோரிக்கைகளான இரு பெரும் உரிமைகளைப் பெற்றுத் தந்தமையால், மார்ச் 8 இன்றைய மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு வலிமையான அடித்தளத்தை அமைத்துத் தந்தது.
ரஷ்ய மகளிரின் எழுச்சி
முதல் உலகப்போர் மூண்ட சமயத்தில், போரை விரும்பாத ரஷ்யப் பெண்கள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமையை மகளிர் தினமாக அனுசரித்தனர். மற்ற ஐரோப்பியப் பெண்கள் ரஷ்யப் பெண்களுக்கு ஆதரவாக, மார்ச் 8-ஆம் தேதியை மகளிர் தினமாகக் கொண்டாடினர்.
இப்போரில், நாடுபிடிக்கும் கொள்கையை அடிப்படையாகக்கொண்ட ஜெர்மனி மேற்கொண்ட ஆக்ரோஷமான தாக்குதல்களால் பல நாடுகளைச் சேர்ந்த பல இலட்சம் இளம் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இலட்சக்கணக்கான வீரர்கள் பலத்த காயங்களுடனும், உடல் உறுப்புக்களை இழந்து உயிருக்குப் போராடிய நிலையிலும் இருந்தனர். பெண்களைப் பொறுத்தவரை, நெருங்கிய உறவுமுறைகளைப் பறிகொடுத்தும், பசி பட்டினியால் வாடியும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால் வாழ வழியின்றியும் திகைத்தனர்.
இச்சமயத்தில், அதுவரை பொறுமை காத்துவந்த ரஷ்யப் பெண்கள் பொங்கி எழுந்து, 1917 மார்ச் 8 அன்று, ரஷ்யாவிலுள்ள பெட்ரோகிராட் (தற்போதைய லெனின்கிராட்) என்ற இடத்தில், ஜெர்மனியின் தொடர் தாக்குதல்களைக் கண்டித்தும், ரஷ்யாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்தும், மகளிர்தினக் கொண்டாட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரியும் போராடத் தொடங்கினர். 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற அப்போராட்டம், முடியாட்சியை இறக்கிவிட்டு, லெனின் தலைமையிலான பொதுவுடைமைக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதும் முடிவுக்கு வந்தது.
1920-இல் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடைபெற்ற மகளிரின் போராட்டத்தில் கலந்துகொண்ட மிகச்சிறந்த பெண்ணியவாதியான அலெக்ஸாண்ட்ரா கெலன்ரா என்பவர், பெண்களின் ஆணித்தரமான மன உறுதியையும், துணிகரமான எழுச்சியையும், வெற்றிகரமான புரட்சியையும் உலகிற்கு உரைத்த மார்ச் 8-ஆம் நாளையே மகளிர் தினமாகக் கொண்டாடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றினார். 1921 முதல், பல உலக நாடுகளில், மார்ச் 8 அன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் அவை
இரண்டாம் உலகப்போரின் முடிவில் (1945) உலக அமைதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவை (United Nations Organization - UNO) சான்ஃபிரான்சிஸ்கோவில் செய்துகொண்ட உடன்படிக்கையில், பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பாலினப் பாகுபாடின்றிச் சமத்துவம் பேணப்படவும், பெண் கல்வியை முறைப்படுத்தி சாதனையாளர்களை உருவாக்கிடவும், பெண்ணியம், பெண் விடுதலையின் அவசியத்தை விவரித்து பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களின் லட்சியங்களை நிறைவேற்றவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு உகந்த, தடைகளற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தரவும் தகுந்த நடைமுறைகளை மேற்கொள்வதாக உறுதிமொழி அளித்து, செயல்படுத்தியும் வருகிறது. 1975-ஆம் ஆண்டை அகில உலக மகளிர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது.
தற்போது, ஆர்மேனியா, அஜர்பெய்ஜான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், மங்கோலியா, ரஷ்யா, கம்போடியா, ஆப்கானிஸ்தான், மால்டோவா, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 8 பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, மடகாஸ்கர், நேபாளம் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண்ணியமும் பெண் விடுதலையும்
பெண்ணியம் (Feminism) என்ற பதம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. இதன் பொருள், ஆண்களுக்குச் சட்டபூர்வமாக கிடைக்கப்பெறும் உரிமைகள் யாவும் பெண்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதாகும். முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட மார்க்சியப் போராட்டங்களில், ஆணாதிக்க வெறியர்கள் மற்றும் பெண்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த குரல்களே பெண்ணியம் என்ற சொல் உருவாவதற்கும், பின்னாளில் அது தனிப்பட்ட கோட்பாடாக வளர்வதற்கும் அடிப்படையாக அமைந்ததாக மார்க்சிய பெண்ணியவாதிகள் கூறுகின்றனர்.
பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்பவர் பெண்ணடிமை குறித்து சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். “உலகம் முழுவதும் பால்வகை என்பது, ஆண்கள் பெண்கள்மீது அதிகாரம் செலுத்தும் பான்மையில்தான் அமைந்துள்ளது. காரணம் என்னவெனில், இந்த பாலியல் வகைப்பாடுகள் ஆணாதிக்க சமூகத்தால் வகுக்கப்பட்டவையாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக் களமாக கல்வி, நிதி, அரசியல், தொழில்துறை, அறிவியல், இராணுவம் ஆகியவற்றை முதன்முதலாகத் தேடி, முறையாகக் கற்று, சிறப்பான நிபுணத்துவம் பெற்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டான்.
பெண்ணுக்கு இல்ல மேலாண்மை கொடுக்கப்பட்டு, அவளுடைய அதிகாரம் குடும்பம் என்ற குறுகிய எல்லைக்குள் வரையறுக்கப்பட்டிருந்தது. சமூகத்தில் அவளது பங்களிப்பு மறுக்கப்பட்டதால், சமூகத்தை அணுக விரும்பிய பெண்கள், தங்கள் துணையின் உதவியை நாட வேண்டியிருந்தது. அச்சூழலை ஆண்மகன் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். அதாவது, சமூக நோக்குடைய பெண்களை சுய சிந்தனையற்ற கருவிகளாகவும், தன் விருப்பத்தை மட்டும் நிறைவேற்றும் கைப்பாவைகளாகவும் மாற்றிவிட்டான். பால்வகை உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது”.
பால்வகை அடிப்படையில் உருவான பெண்ணடிமைத் தனமானது, கருத்துருவம் (Ideology), உயிரியல் (Biology), சமூகவியல் (Sociology), வர்க்கம் (Class), சக்தி (Force), பொருளாதாரமும் கல்வியும் (Economy & Education), மானுடவியல் (Anthrapology), உளவியல் (Psychology) என பல நிலைகளில் பல்கிப் பெருகியிருப்பதாக கேட் மில்லட் விவரிக்கிறார்.
பெண்ணியக் கோட்பாடுகளோடு, பெண் விடுதலை குறித்த கருத்துக்களும் உணரப்பட வேண்டிய, முக்கியமான, அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சொல் விளக்கமாகும். பெண்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப உணவு, உடை, கல்வி ஆகியவற்றைப் பெறுவதை முழுமையான பெண் விடுதலை என்று கூறவியலாது. மாறாக, பெண்களின் கல்வி, திருமணம், பணிவாய்ப்பு, பணியில் சமத்துவமின்மை தொடங்கி, சமையலறை, படுக்கையறை, மன உணர்வுகள் என எல்லாவற்றிலும் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுவதே முழுமையான, எட்டப்படவேண்டிய பெண் விடுதலை என்ற உண்மை பெண்கள், குடும்பம் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் என அனைவருக்கும் உரைக்கப்பட்டு, பெண் விடுதலையின் தார்ப்பரியத்தை உலகம் உணரச் செய்ய வேண்டும்.
இன்றைய நிலை என்ன?
உலகின் 63 நாடுகளைச் சேர்ந்த பணிபுரியும் மகளிர் 14 வார மகப்பேறு விடுப்பை அனுபவிக்கின்றனர். இவர்களில் 28% மகளிருக்கு மட்டுமே இது சம்பளத்துடன் கூடிய விடுப்பாக அமைகிறது. ஊதியமில்லாத வீட்டு வேலைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைந்தபட்சம் இரண்டரை மடங்காவது அதிகமாகச் செய்கின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படுவதில்லை. உலகில் 66% பெண்கள் பணிபுரியும் நிலை இருந்தும், உலக வருமானத்தில் 10% மட்டுமே பெறுகின்றனர். வெளிநாடுகளில் பணிவாய்ப்பைத் தேடிச் செல்லும் மகளிரில் 57% பேரின் பணிநேரம் வரையறுக்கப்படவில்லை. ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள பெண்களில் 55 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் 15 வயதை அடைவதற்குள் ஒருமுறையாவது பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இங்குள்ள பணிபுரியும் மகளிரில் 32% பேர் அடிக்கடி பாலியல் சார்ந்த தொல்லைகளுக்கு ஆட்படுத்தப் படுகின்றனர். .
உலகளவில் 61.5% பெண்கள் சேவைத் துறையிலும், 25% பெண்கள் விவசாயத் துறையிலும், 23% பெண்கள் பாராளுமன்றங்களிலும், 13% பெண்கள் தொழில்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். உலகின் 4% பெண்கள் மட்டுமே உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்றுள்ளனர். 67 நாடுகளில் மட்டுமே பெண்கள் சந்திக்கும் எதிர்பாராத வன்முறைகள் மற்றும் அத்துமீறல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. 18 நாடுகளைச் சேர்ந்த கணவர்கள், தங்கள் பணிபுரியும் மனைவியரைச் சட்டத்தின் துணை கொண்டு எதிர்த்து, அவர்களின் பணி வாய்ப்பைத் தடை செய்யலாம். சர்வதேச அளவில் வேலையில்லாத இளைஞர்கள் 12.5% பேரும், இளம்பெண்கள் 13.9% பேரும் உள்ளனர். உலகின் பணி ஓய்வுக்குப்பின் ஓய்வூதியம் பெறும் ஆண்களின் அளவு 65% ஆக இருக்கின்றது. பெண்களைப் பொறுத்தவரை இது 35%-கும் குறைவாகவே உள்ளது. இன்னும் சமத்துவம் நிலவாமைக்கு என்ன காரணம்? சிந்திப்போம்.
என்ன செய்ய வேண்டும்?
ஆதிகாலத்தில் பருவமடைந்த, கருவுற்ற, பேறுகாலப் பெண்கள் தங்களது குருதி, பால் வாசனையை மோப்பம் பிடித்துத் தங்களைத் தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கூர்மையான ஆயுதங்களுடன் தங்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டனர். அப்போதுதான் பெண்ணடிமைத்தனம் முளைவிடத் தொடங்கியிருக்க வேண்டும். இன்றும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், மாற்றுத்திறனாளி பெண்கள் உட்பட பருவமடைந்த அனைத்து மகளிரும், தங்கள் மாதவிலக்குக் காலங்களில் வீட்டிற்கு வெளியே தனிமைப்படுத்தப்படுவதும், பேய், பிசாசுகளைக் காரணம் காட்டி இரும்பு பொருட்களைக் கையில் வைத்திருப்பதுமான இழிசெயல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச்சியின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்போதும், வலிமையான விலங்குகளை மிருகக்காட்சி சாலைகளில் மட்டுமே காணக்கூடிய நிலை இருந்தும், பெண் விடுதலை அங்கீகரிக்கப்பட்டதோடு, பெண்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதைத் தங்கள் கடமையாக்கிக்கொண்ட சமூக அமைப்புகள் பெருகிவிட்ட போதிலும் இதுபோன்ற சமூகத்தைப் பாழ்படுத்துகின்ற, பெண் விடுதலைக்கு எதிரான, முட்டாள்தனமான மூடப்பழக்கங்களாகிய களைச் செடிகள் இன்னும் வேரோடு வெட்டி எறியப்படாமல் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாவேந்தரால் தெய்வீகத் தன்மை கொண்டதாக மதித்துப் போற்றப்பட்ட மகளிர் சமூகம், இன்று சிறிதும் மனித நேயமில்லாத மிருகச் சித்திரவதையர்களால் துச்சமெனக் கருதப்பட்டு, மிதித்து, சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதுதான் ஏமாற்றம் கலந்த எதார்த்தம். எல்லார்க்கும் எல்லாமும் அளித்திடும் சமூகமாய், குறிப்பாக பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை பாலினப் பாகுபாடின்றி உறுதிப்படுத்தும் சமூகமாய் மாற்ற என்னென்ன செய்யலாம்?
கண்ணகி, தமயந்தி, சகுந்தலா, சீதா ஆகிய கற்புக்கரசியரும், ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற விடுதலை வேட்கையுள்ள வீரப் பெண்மணிகளும், சரோஜினி நாயுடு போன்ற அறிவில் சிறந்த எழுத்தாளர்களும், கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற சாதனைப் பெண்மணிகளும், அன்னைத் தெரசா போன்ற அர்ப்பணிப்பு மனப்பான்மையுள்ள சமூக சேவகியரும், பல்கலை வித்தகியர் மற்றும் பல்துறை வல்லுனர்களும் வாழ்ந்து புகழ்பெற்ற புண்ணிய பூமி இது.
மேலும், பெண் கல்வி, பெண் விடுதலைக்காகப் பாடுபட்ட பாரதியார், பாரதிதாசன் போன்ற மகா கவிஞர்களையும், சதி ஒழிப்புக்கு வித்திட்ட ராஜாராம் மோகன் ராய் போன்ற சீர்திருத்தவாதிகளையும், தீண்டாமையை ஒழித்த மகாத்மா காந்தியடிகள், தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காய் உழைத்த அண்ணல் அம்பேத்கர் போன்ற தேசத் தலைவர்களையும், உயர்ந்த பெண்ணியச் சிந்தனையாளராகத் திகழ்ந்ததோடு சமூக சீர்திருத்தங்களைத் தம் வீட்டு மகளிரிடமிருந்தே தொடங்கிய தந்தை பெரியார் போன்ற மகான்களையும் பெற்று வளர்த்த பெருமைக்குரிய நாடு இது.
‘மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்துவோம்’,
‘பெண்கள் நாட்டின் கண்கள்’,
‘பெண்கள் அணு அளவு அடக்குமுறைக்கு ஆளாக நேர்ந்தாலும், அத்தேசத்தின் முன்னேற்றம் முற்றிலுமாக பாதிக்கப்படும்’,
‘வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி;
சாதம் படைக்கவும் செய்திடுவோம்; - தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்’,
‘கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம்;
கல்வியுடைய பெண்கள் திருந்திய கழனி’
போன்ற வாக்கியங்கள் வெறும் வார்த்தை ஜாலங்களாகி போகிறபோக்கில் தொலைந்துவிடாமல், வரலாற்றைப் பறைசாற்றும் சின்னங்களாகவும், பாதகம் செய்வோரைப் பயமுறுத்தும் பானங்களாகவும், நிகழ்காலத்தின் நிழலோட்டங்களாகவும், வருங்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டும் வாசகங்களாகவும் என்றென்றும் நிலைபெறட்டும்!
--
கட்டுரையாளர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]

- பெண்கள் சுயமாகச் சிந்தித்து முடிவுகளை எடுக்க உரிமை வழங்கப்பட வேண்டும்.
- பெண் குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிக்கப்படுவதோடு, அவர்களின் சுதந்திரம், சமத்துவம், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், தனிமனித ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த தெளிவான புரிந்துணர்வை சிறுவயதிலேயே ஏற்படுத்தும் பொறுப்பை பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் விரும்பி ஏற்றுச் செயல்படுத்த முற்பட வேண்டும்.
- குழந்தைகளுக்கு Good Touch & Bad Touch குறித்து விவரிப்பதோடு, தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் அவர்கள் எதிர்பாராமல் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்களைச் சமாளிக்க தேவையான தற்காப்பு முறைகளையும் பயிற்றுவிக்கவேண்டும்.
- பசு வதையைத் தடுக்க பசுக்களுக்கு ஆதார் அட்டைகள் அறிமுகமானதுபோல, பசுவினும் மென்மையான பெண் சிசு வதையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பெண்ணுறுப்பு சிதைப்பு, காமவெறியர்களின் பாலியல் தொந்தரவுகள் போன்ற கொடுமைகளிலிருந்து பெண்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
- பெண்கள் பருவமடையும் சமயங்களில், அவர்களுக்குத் தேவையான சத்துள்ள உணவுப் பொருட்களோடு, சானிட்டரி நாப்கின்களும் அவரவர் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
- சுயமரியாதைத் திருமணங்கள் மற்றும் விதவை மறுமணங்கள் ஆதரிக்கப்படவேண்டும்.
- குழந்தைத் திருமணம், அதிகரித்துவரும் ஆணவக் கொலைகள், விபச்சாரம், கொத்தடிமைத்தனம், பாலியல் வல்லுறவு மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும்.
- பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வீட்டுக்குள்ளேயே வகுக்கப்பட்டிருக்கும் எழுதப்படாத சட்டங்கள் எடுத்தெறியப்பட வேண்டும்.
- திருமணம் என்ற பெயரில் அரங்கேறும் வரதட்சணைக் கொடுமைகள், தந்தைவழி மரபு, கர்ப்பகாலப் பணிச்சுமை, மதமாற்ற நடைமுறைகள் மற்றும் முன்னெழுத்து (Initial) மாற்றங்கள் ஆகிய வெறுக்கத்தக்க செயல்முறைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதோடு, திருமணத்திற்குப் பின் பெண்கள் விரும்பினால் அவர்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
- புலம்பெயர் பெண்களின் பணிச் சூழல், பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நேரம் ஆகியவை வரையறுக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட வேண்டும்.
- அபரிமிதமான வளர்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் சமூக வலைதளங்கள் பெண்களுக்கு எதிராகிவிடும் வாய்ப்புகள் மிகுதியாக இருப்பதால் ஆண், பெண் இருபாலரும் அளவறிந்து அவற்றை பயன்படுத்தவேண்டும்.
- பெண்களை ஆபாசமாகக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படாமல் தடுக்கப்பட வேண்டும்.
- ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு, உடுத்தும் உடையிலும், தங்களுடைய கருத்துக்களைப் பகிர மற்றும் பதிவிடவும் சுதந்திரம் அளிக்கப்படுவதோடு, பாலியல் மிரட்டல்களற்ற பாதுகாப்பான பணிச்சூழல் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
- திருவிளையாடல் புராணத்தில் ஆணானப்பட்ட சிவபெருமானே அடிமைப்படுத்தினார் என்பதற்காக இன்றைய சினிமாக்களிலும், ராஜா ராணி, செம்பருத்தி முதலிய தொலைக்காட்சி தொடர்களிலும், சில விளம்பரப் பொருட்களிலும் பெண்கள் அடிமைகளாகச் சித்தரிக்கப்படவேண்டிய அவசியமில்லை. குடும்பம், சமூகம், வலைதளங்கள், சினிமாக்கள் மற்றும் இதர ஊடகங்கள் பெண்மை குறித்த சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்து, அவர்களைப் பண்படுத்திப் பாதுகாக்கும் வேலியாக இருக்க வேண்டுமே தவிர, வேலியே பயிரை மேய்வது முறையல்ல என்பதால் இந்த நிலையை மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
- கருவறை முதல் கல்லறைவரை சவால்களையே வாழ்க்கையாய் பெற்ற மாற்றுத்திறனாளி மகளிருக்கு தரமான கல்வி, முறையான வழிகாட்டுதல், சிறப்புச் சலுகைகள், தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு, பாதுகாப்பான பயணம் மற்றும் பணிச்சூழல் ஆகியவை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதோடு, அவர்களின் சரித்திரச் சாதனைகள் முறையான அங்கீகாரத்தைப் பெற, தகுந்த வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.
- இஸ்லாமியர்களின் உயரிய கொள்கைகளான மணக்கொடை, பேறுகால உதவி ஆகியவை உலகம் முழுவதும் பரப்பப்பட்டு, ஏழை எளிய மற்றும் கிராமப்புற மகளிரின் திருமணம் மற்றும் பிரசவத்திற்குத் தேவையான நிதியுதவி கிடைக்கச் செய்வதோடு, அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும் வழிகாட்டலாம்.
- மணமான பெண்கள் கணவரை இழந்த ஒரே காரணத்துக்காக கைம்பெண்கள் என்று கூறுதல், தாலி, மஞ்சள், பூ, பொட்டு ஆகியவை மறுக்கப்படுதல், சுப நிகழ்ச்சிகளில் அனுமதி மறுக்கப்படுதல், ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுதல் ஆகிய நடைமுறைகள் நிச்சயமாக மாற்றத்திற்கு உட்பட வேண்டியவையாகும்.