ஆனால், இந்த சாதனைகளுக்கெல்லாம் சற்றும் குறைவில்லாததும், இன்னும் உடைத்துச் சொன்னால், இவற்றினும் மேலான சாதனையை அன்றாட வாழ்வியலாகக் கொண்டிருப்பவர்கள் இரயில்களில் வணிகம் செய்யும் பார்வையற்ற பெண்கள். நமது அன்றாட நகர்தல்களில், கண் முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கிற சாதனை இது என்பதாலோ என்னவோ ஒரு சராசரிக் கண்ணோட்டம் இதில் எல்லோருக்கும் வந்துவிடுகிறது.
உலகறியும் முயற்சியில் பெரும்பாலும் ஒலியையே நம்பியிருக்கிற பார்வையற்றோர், நெரிசலும் இரைச்சலும் நிறைந்த பெருநகரச் சாலைகளைக் கடந்து காரியமாற்றிட முனைவதே பெரும் சவால் என்கிறபோது, அசுர வேகமும் அலறலுமாய் ஓடிவரும் இரயில்களில் ஏறிட முந்தியடிக்கும் முன்னூறு பொதுஜனத்துடன் தன்னையும் பொருத்திக்கொண்டு முன்னேறத் துடிக்கிற இந்தப் பெண்களின் கம்பீரத்தை புறக்கணித்துவிட்டு, எதை எதையோ சாதனைகளாகப் பிதற்றிக்கொண்டிருக்கிறது பொதுச் சமூகம்.
இந்தப் பெண்களில் பலர் பணிக்குத் தகுதிபடைத்த பட்டதாரிகள். இன்னும் சிலர், பட்ட ஆய்வு மேற்படிப்புகளையும் முடித்திருக்கிறார்கள். சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளால் வாழ்வின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு, அன்றாடப் பிழைப்பு என்கிற சாகசத்தில் எந்தவிதப் பயிற்சியுமின்றி களமாடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
செண்ட்ரல் முதல் அரக்கோணம் வரை, கடற்கரை முதல் தாம்பரம் வரை கிட்டத்தட்ட 500 முதல் 600 பார்வையற்றோர் தொடர்புடைய குடும்பங்கள் இரயில் வணிகத்தை ஆதாரமாகக்கொண்டு வாழ்கின்றன. கணிசமான பார்வையற்ற தம்பதிகள், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காய் சேர்ந்தும், தனித்தும் இரயிலில் வியாபாரம் செய்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்கிற பார்வையற்ற கல்லூரி மாணவர்களில் சிலரும்கூட, தங்களின் படிப்புச் செலவுகளை சரிக்கட்டிக்கொள்ள, விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் இரயில் வணிகத்தில் ஈடுபடுகிறார்கள்.
பர்பி, இஞ்சி மிட்டாய், பாப்கார்ன் போன்ற தின்பண்டங்கள், செல்ஃபோன் கவர், சி.டி. கவர், காற்றடைக்கப்பட்ட தலையணைகள் என அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், தைலம் என பல்வேறு பொருட்களை இவர்கள் விற்பனை செய்கிறார்கள். வியாபாரம் செய்வதற்கான விற்பனைப் பொருட்களை, பெரும்பாலும் செண்ட்ரல் இரயில் நிலையத்தின் அல்லிகுலம் வணிகவளாகக் கடைகளிலும், பாரிமுனையின் மொத்த வியாபாரக் கடைகளிலிருந்தும் வாங்குகிறார்கள். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விற்பனைக்குத் தேவையான பொருட்களைத் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி வருகின்றன. அவற்றுள் நந்தினி வாய்ஸ் என்ற அறக்கட்டளை குறிப்பிடத்தக்க ஒன்று.
கத்தியின் மேல் நடக்கிறோம்
“இருபத்தைந்து வருஷமா ரயில்ல வியாபாரம் பண்றேன். சுத்தமா படிக்காத எனக்கு, இந்த ரயிலுதான் கைகொடுக்குது” என பெருமையுடன் சொல்கிறார் அரக்கோணம்-ஜோலார்ப்பேட்டை மார்க்கத்தில் வியாபாரம் செய்யும் சாந்தி என்கிற பெண்மணி. தற்போது சாந்தி தன்னைப்போல இரயிலில் வியாபாரம் செய்து பிழைப்போருக்கு விடுதி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இளங்கலை கல்வியியலில் தேர்ச்சி பெற்ற கரூரைச் சேர்ந்த பெண் ஜோதிமணி, அரசுப்பணியை எதிர்நோக்கியபடியே சென்னைப் பெருநகர இரயிலில் வியாபாரம் செய்கிறார். வியாபாரத்திற்கு வந்த தொடக்க நாட்களின் ஒருநாளில், நிறுத்தம் என்று நினைத்து, சிக்னலில் நின்றிருந்த இரயிலிலிருந்து தான் இறங்க முற்பட்டதையும், சக பயணிகளின் உதவியால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதையும் நன்றியோடு நினைவுகூர்கிறார்.
வறுமை காரணமாக பன்னிரண்டாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்ட சரசு, திருமணத்திற்குப் பிறகே வியாபாரம் செய்ய வந்ததாகக் கூறுகிறார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், “வியாபாரம் முன்ன மாதிரிக் கிடையாது மேடம். இப்போ ரயிலோட வேகத்தைக் கூட்டிக்கிட்டே போறதால, ஒரு நிமிஷ கேப்பில ஒரு பெட்டியில இருந்து இன்னொரு பெட்டிக்கு மாறுறது கத்திமேல நடக்கிறது போலத்தான் இருக்கு” என்கிறார்.
வேண்டும் விழிப்புணர்வு
சரசைப் போலவே திருமணத்திற்குப் பிறகு இரயில் வணிகத்திற்கு வந்த திருச்சியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி வனிதா, இரயிலில் வியாபாரம் செய்வது தனக்கு மனநிறைவை அளிப்பதாகவும், அதற்குப் பொதுமக்களின் கண்ணியமான அணுகுமுறைதான் காரணம் என்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்திட மனமுவந்து முன்வருவதாக நெகிழ்கிறார் வனிதா.
பாலியல் சீண்டல்களைப் பொருத்தவரை, ஒரு பார்வையுள்ள பெண் எதிர்கொள்ளும் எல்லா அபத்தங்களையும் பார்வையற்ற பெண்ணும் எதிர்கொள்வதாகவும், விற்கும் பொருட்களை வாங்குவதான, சாலையைக் கடத்திவிட உதவுவதான பாவனையில் நீளும் சில கைகளின் பற்றுதலில், பார்வையற்ற பெண்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் கஸ்தூரி.
கஸ்தூரி நெடுந்தொலைவு செல்லும் விரைவு இரயில்களில் வியாபாரம் செய்பவர். வீட்டில் நிகழ்ந்த எதிர்பாராத தீவிபத்தில் தனது அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் பரிகொடுத்த இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இரயில் வணிகத்தில் உள்ளார். தனது அயராத உழைப்பாலும், நம்பிக்கையாலும் தன் மகளை எம்.பி.ஏ. படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
கஸ்தூரி, சரசு, ஜோதிமணி, வனிதா என பெரும்பாலான பெண்கள், தன்னைப் போலவே பார்வையற்ற ஆணையே திருமணம் செய்திருக்கிறார்கள். இரயில் வணிகத்தில் தங்கள் கணவர்களின் வருமானம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாத நிலையில், அவர்களை பின்பற்றியே இவர்களும் வியாபாரத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். வியாபாரம் செய்யும் பெரும்பாலான பார்வையற்ற பெண்களின் நிலையும் இதுதான்.
சொந்த வீடு என்பதெல்லாம் இவர்கள் கனவில்கூட கிட்டாத ஒன்று. பரந்து விரிந்துகொண்டிருக்கும் சென்னையின் புறநகர் பகுதிகளில், குறைந்த அளவு வசதிகொண்ட வாடகை வீடுகளில் இவர்கள் குடியேறுகிறார்கள். சினிமாக்காரர்கள், தனியாக வாழும் பெண், திருமணமாகாத ஆண் இவர்களின் வரிசையில் பார்வையற்ற தம்பதிகளுக்கும் சென்னையில் வாடகை வீடு மறுக்கப்படுவது வாடிக்கையான ஒன்று.
பன்னிரண்டு மணிநேர உழைப்பு
சாதாரணப் பெண்களைப்போல, வெறும் இல்லத்தரசிகளாக மட்டும் இருந்துவிட இவர்களின் சூழல் இடம் கொடுப்பதில்லை. ஆனால், குடும்பம், தொழில் என்கிற இருவேறு சூழல்களிலும் தங்களைச் சிறப்பாகப் பொருத்திக்கொண்டு உழைப்பதில் சாதாரணப் பெண்களுக்கு எந்த விதத்திலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை அன்றாடம் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பிறகு, இரவு சாப்பாட்டையும் தயார் செய்து வைத்துவிட்டு, காலை 10 மணியளவில் வியாபாரத்திற்கு செல்லும் இவர்கள், இரவு 11 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார்கள். இவர்களுள் பெரும்பாலான பெண்கள் மதிய உணவைப் பொருட்படுத்துவதில்லை என்பது அவர்கள் பேச்சில் வெளிப்பட்டது. கிட்டத்தட்ட 12 மணிநேர உழைப்பைக் கோருகிற இந்த வணிகத்தில், ஏற்ற இறக்கங்கள் என்பது மிகச்சாதாரணம் என்கிறார் வனிதா.
கோடைகாலங்களைவிட மழைக்காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்றாலும், அதுபோன்ற சமயங்களில் ஒரு பார்வையற்ற பெண்ணாக, நீர் நிரம்பி ஓடும் நகரச்சாலைகளை எதிர்கொள்வதில் இருக்கிற சிக்கல் பற்றிய வனிதாவின் சிலாகிப்பை செவிமடுத்தால், மோசமான அடிப்படை உட்கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிற ஒரு தேசத்தின் வல்லரசுக் கனவின்மீது நமக்கு நகைப்பே மிஞ்சுகிறது.
வைப்புத்தொகை செலுத்துங்கள்
எந்தவித அடிப்படை வாழ்வாதாரப் பாதுகாப்பும் இல்லாமல், உறுதியற்ற சூழலில் தங்கள் அன்றாடத்தை நகர்த்திக்கொண்டிருக்கும் இந்தப் பெண்களின் முதலும் இறுதியுமான புகலிடம் அரசாங்கம்தான். அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற இயலாமல் தேர்ச்சி வாய்ப்பை இழந்திருக்கும் வனிதா, மீண்டும் பார்வையற்றோருக்கென்று சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பினாலே, பெரும்பாலான பார்வையற்றவர்கள் அரசுப்பணி பெற்றுவிடுவார்கள் என்கிறார் அவர்.
படித்த பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பும், படிக்காத அல்லது படிப்பை பாதியில் கைவிட்ட பெண்களுக்குத் தொழில் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே வியாபாரம் செய்யும் அனைத்து பார்வையற்ற பெண்களின் கோரிக்கையாக இருக்கிறது. தங்களுக்குக் கூடை முடைதல், நாற்காலி பின்னுதல், மெழுகுவர்த்தி செய்தல் என பல கைத்தொழில்கள் தெரியும் என்றும், முறையான பயிற்சி வழங்கப்பட்டால் எல்லாவிதமான தொழிலிலும் தாங்கள் வெற்றிகரமாக இயங்க முடியும் என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் கஸ்தூரி.
அமைப்பு சாராத் தொழிலாளர்களாகக்கூட அங்கீகாரம் பெற இயலாமல் தடுமாறுகிறார்கள் பார்வையற்ற இரயில் வியாபாரிகள். இரயில் வியாபாரத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் தங்களைப் போன்ற பார்வையற்றோருக்கு, பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர அரசு முன்வர வேண்டும். அதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்திட வேண்டும் என்கிறார் சரசு.
“கை, கால் முடியாதவுங்களுக்கு அரசாங்கம் இலவசமா மோட்டார் சைக்கிள் கொடுக்குது. அதுபோல, என்னை மாதிரி ரெண்டு கண்ணும் தெரியாதவுங்களுக்கு ஒரு திட்டம் கொண்டாந்து, படிக்காத வியாபாரம் செய்யுற அன்னாடங்காட்சிங்க பேருள பேங்க்ல பெரிய தொகையை அரசாங்கமே போடலாமே. என்ன தங்கச்சி நான் சொல்றது சரிதானே?” என அப்பாவியாகக் கேட்கும் சாந்தியக்காவின் நியாயமான கோரிக்கையில் ஒருவித ஏக்கமும், எதிர்காலம் குறித்த அச்சமும் இருப்பதை உணரமுடிந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பல்வேறு திட்டங்களைத் தீட்டும் அரசு, அவர்களின் சுயதொழில் தொடர்பாக எவ்வகையில் செயலாற்றுகிறது என்று தேடினால், மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி சார்ந்தும், நிதி சார்ந்தும் பல திட்டங்களைத் தீட்டியுள்ளன நடுவண் மற்றும் மாநில அரசுகள். ஆனால், திட்டங்களுக்கும் அமல்ப்படுத்தலுக்குமான வழக்கமான பெரிய இடைவெளிகளில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளின் அன்றாடம்.
ஊனமுற்றோருக்கான தேசிய நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம்
நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகளில் ஏறத்தாழ 95 விழுக்காட்டினர் வறுமைசூழ் குடும்ப பின்னணியைச் சார்ந்தவர்கள். இதனைக் கருத்தில் கொண்டு, ஊனமுற்றோருக்கான சட்டம் (Persons with Disability Act) 1995-ன்படி, மாற்றுத்திறனாளிகள் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகள் பெறுவதில் நிதி ஒரு தடையாக இருப்பதைக் களையும் நோக்கில், இந்திய அரசு தேசிய அளவில் ஊனமுற்றோருக்கான தேசிய நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (National Handicapped Finance and Development Corporation - NHFDC) என்ற நிதியத்தினை 1997-ல் நிறுவியது. ஒவ்வோர் ஆண்டும் இந்த நிதியமானது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையினை வழங்கி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி உதவித்தொகைகள், கல்விக்கடன்கள், சுயதொழில் முனைவோருக்குக் கடன்கள் மற்றும் மானியங்கள் கிடைக்க வகைசெய்கிறது.
ஒவ்வொரு மாநிலமும் இதே நோக்கத்தினைச் செயல்படுத்த ஒரு முகமையினை நிறுவி, இந்த நிதியினைக் கையாளுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மாநில ஏபெக்ஸ் கூட்டுறவு வங்கி (Tamilnadu State Apex Co-operative Bank Limited) என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 141 கோடியே 72 இலட்சம் ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியினை சுமார் 49900 பேர் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். 2017-18 நிதியாண்டில் 28 டிசம்பர் 2017 வரை, தமிழகத்திற்கு 7 கோடி வழங்கப்பட்டு 700 பேர் பயன்பெற்றிருப்பதாகக் கூறுகிறது தேசிய நிதியத்தின் புள்ளிவிவரம்.
சுயதொழில் செய்ய விரும்பும் பார்வையற்றோருக்கு அரசு மானியங்கள் கிடைக்கும் என்றாலும், அதனைப் பெறுவது அத்தனை எளிதான செயல் அல்ல என்பதே பெரும்பாலான பார்வையற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. இது குறித்து, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையற்றோரின் பல்வேறு உரிமைகளுக்காகப் போராடிவரும் ஓய்வுபெற்ற பேராசிரியரும், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான திரு. சகாதேவன் அவர்களிடம் பேசினேன்.
உறுதிச்சான்று என்கிற நிபந்தனை
“மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்கிடும் வகையில் தமிழக அரசின் சார்பாக ரூ. 30000 மற்றும் ரூ. 50000 என்ற அளவில் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன. பெறுகிற கடன்தொகையில் 30 விழுக்காடு மானியம் என்பது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிற மாவட்ட மறுவாழ்வு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இந்தக் கடனைப் பெறலாம்” என்று சொன்ன திரு. சகாதேவன் அவர்கள், படிப்படியாக ஒவ்வொரு திட்டமாக விளக்கினார்.
“ஊனமுற்றோருக்கான தேசிய நிதியத்தின் வாயிலாக, சுயதொழில் செய்ய விரும்பும் ஒரு மாற்றுத்திறனாளி ரூ. 1 இலட்சம் முதல் ரூ. 5 இலட்சம் வரை தனிநபர் கடனாகப் பெறலாம். ஒரு குழுவாக இருக்கும் பட்சத்தில் ரூ. 25 இலட்சம் வரை கடன் பெறலாம். இந்தக் கடனுக்கு வெறும் 4 விழுக்காடு மட்டுமே வட்டியாகப் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், இதுபோன்ற தனிநபர் கடன்களுக்கு இரண்டு அரசு ஊழியர்கள் உறுதிச்சான்றளித்து (Guarantee) ஒப்பமிடவேண்டும் என்ற வங்கியின் நிபந்தனையைத் தளர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்புடையவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். நிச்சயம் நல்ல தீர்வை எட்டிவிடுவோம்” என்கிறார் நம்பிக்கையுடன்.
அதிகம் அறியப்படாத வாரிய நலத்திட்டங்கள்
“தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியத்தின் மூலமாக ரூ. 50000 அளவிலான ஒரு கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, ரூ. 27 ஆயிரத்திற்குக் கடைக்கான பெட்டி செய்து தந்துவிடுவார்கள். எஞ்சிய ரூ. 23 ஆயிரத்திற்கு விற்பனைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துவிடுவார்கள். அந்தப் பெட்டிக்கடை வைப்பதற்கான இடத்தைத் தேடித்தருவது விண்ணப்பதாரரின் பொறுப்பு என்பது இந்த திட்டத்தில் காணப்படும் முக்கிய குறைபாடு” என்று சொன்ன அவர், நலவாரியத்தின் பல்வேறு திட்டங்களை மேலும் பட்டியலிட்டார்.
“மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியத்தின் சார்பாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதாவது, ஒரு மாற்றுத்திறனாளி விபத்தில் சிக்கி இறந்துவிட்டால், அவர் குடும்பத்திற்கு அரசு ரூ. 1 இலட்சம் வழங்குகிறது. விபத்தின் காரணமாக ஊனத்தின் தன்மை அதிகரிப்பின், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. நோயால் மரணமடையும் ஒரு மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வாரியத்தின் மூலமாக ரூ. 15 ஆயிரமும், அவருடைய இறுதிச் சடங்கினை மேற்கொள்ள ரூ. 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
இவை தவிர, கருவுற்ற மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு கருவுற்ற ஐந்தாம் மாதத்திலிருந்து 12 மாதங்களுக்கு மாதம் ரூ. 2000 வீதம் ரூ. 24000 அரசால் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி தம்பதிகளின் இரண்டு குழந்தைகளுக்கு, அவர்களின் உயர்நிலைக்கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளிடம் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது” என்றார் விரிவாக.
மேலும் அவர் கூறும்போது, “சுயதொழிலைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் குறிப்பிட்ட விழுக்காடு பொருட்களை அரசே வாங்கிட முன்வர வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தற்போது திருச்சியில் செயல்படும் ஒரு மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழு முன்னெடுத்து வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் அது முன்னுதாரணமாக அமையும்” என முத்தாய்ப்பாக முடித்தார்.
நந்தினி வாய்ஸ் (Nanthini Voice)
பார்வையற்ற மகளிருக்கு விற்பனைப் பொருட்களை வாங்கித் தருவதோடு நின்றுவிடாமல், அவர்களுக்கான உரிமைகள், அது தொடர்பான அரசின் கடமைகள் குறித்து பல்வேறு தளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார் நந்தினி கெமிக்கல்ஸ் உரிமையாளர் திரு. வெங்கட்ராமன் அவர்கள். தனது ‘நந்தினி வாய்ஸ்’ என்ற அறக்கட்டளையின் மூலம் கடந்த மாதம் இது தொடர்பாக அவர் பார்வையற்ற மகளிரின் பங்கேற்பில் ஒரு கருத்தரங்கை நடத்தி, அதில் பேசப்பட்ட முக்கிய கருத்துகளைப் பிரதமர் அலுவலகம், தமிழக அரசு என அனைவருக்கும் கடிதங்களாக அனுப்பியுள்ளார். நந்தினி வாய்ஸ் செயல்பாடுகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்புவோர் http://nandinivoice.com/ என்ற தளத்தை அணுகலாம்.
வேண்டும் மகளிர் விடுதிகள்
“இன்றைய சூழலில் சாதாரணப் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், பார்வையற்ற மகளிரின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய முழுமுதல் பொறுப்பு அரசுக்கே உண்டு. எனவே, பார்வையற்ற மகளிருக்கென பிரத்யேகமான இலவச தங்கும் விடுதிகளை அரசு மாவட்டந்தோறும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். படித்து, நல்ல நிலையில் பணியிலுள்ள பார்வையற்றவர்கள் தன் பிள்ளை, தன் பெண்டு, சோறு, வீடு என்றிராமல், பார்வையற்ற மகளிரின் மேம்பாட்டில் அக்கறைகொண்டு செயலாற்றிட வேண்டும்” என்றார் திரு. வெங்கட்ராமன்.
அவரது அந்த கடைசி வாக்கியம் எனக்குள் மிகப்பெரிய குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. நிச்சயமற்ற வருமானம், நிழலாகத் தொடரும் ஆபத்து என தங்களின் இடர் நிறைந்த சூழலையும் எளிதாகக் கடந்துசெல்கிற இந்தப் பெண்களிடமிருந்து, படித்துப் பணியிலுள்ள என்னைப் போன்ற பார்வையற்ற பெண்கள் கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது என்ற மனத்தெளிவுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றேன். எனக்கு விடை கொடுத்தபடி, வந்துகொண்டிருந்த இரயிலை நோக்கி முன்னேறிய பெண்களில் ஒருவருக்கு வந்த அழைப்பினால் அவரது செல்பேசி இப்படிச் சிணுங்கியது:
'பார்க்கத் தெரிந்தால், பாதை தெரியும்.
பாதை தெரிந்தால், பயணம் தொடரும்.
பயணம் தொடர்ந்தால், கதவு திறக்கும்.
கதவு திறந்தால், காட்சி கிடைக்கும்.
காட்சி கிடைத்தால், கவலை தீரும்.
கவலை தீர்ந்தால், வாழலாம்'.
எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்
--
கட்டுரையாளர் பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.
தொடர்புக்கு; [email protected]