- தலையங்கம்: ஓர் இனிய உதயம்
- பட்ஜெட் 2018: ஊனமுற்றோரைப் புறக்கணித்துள்ள மற்றுமொரு நிதிநிலை அறிக்கை - முனைவர். கு. முருகானந்தன்
- கவிக்கொத்து: அ. கௌரி மற்றும் வ. கணேசன்
- உலகக் கோப்பை 2018: மீண்டும் வென்றது இந்தியா! - பாலகிருஷ்ணன் மருதமுத்து
- அனுபவம்: இந்த நாள் தேவையா? - மு. பார்த்திபன்
- சினிமா: தமிழ் சினிமாவில் பார்வையற்றவர்கள் - ஜெட்லி (எ) பாலகணேசன்
- சந்திப்பு: நாங்கள் கொள்கையால் இணைந்தோம்! - J. யோகேஷ்
- சிறுகதை: தேவ கிருபை - ப. சரவணமணிகண்டன்
- விவாதம்: அசலும் போலியும் - சோஃபியா சுரேஷ்
- நினைவுகள்: காதல் அட்றாசிட்டிஸ் – பார்வையற்றவன்
- நூல் அறிமுகம்: சுஜாதாவின் ‘பதவிக்காக’ - D. பாலநாகேந்திரன்
- இசை: ராகரதம் – ப. சரவணமணிகண்டன்
0 Comments
![]() வணக்கம் வாசகர்களே! எங்களது முதல் இதழுக்கு நீங்கள் அளித்த ஆதரவு மழையில் மனமார நனைந்ததில் பெருமகிழ்ச்சி. தொடர்ந்து எங்கள் இதழுக்கு ஆதரவு அளித்து புதியதோர் அனுபவத்தைப் பெற்றிட வாருங்கள். கடந்த ஜனவரி 27-ஆம் நாள் புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த ஓர் எளிய விழாவில் தொடங்கப்பட்டது நமது ‘விரல்மொழியர்’ மின்னிதழ். அறிவு தாகம் நிறைந்த பல பார்வையற்றவர்களின் சங்கமமான இணையத் தென்றல் மின் மடல் குழுவின் நெறியாளர் திரு. மு. பார்த்திபன் அவர்கள் இதழைத் தொடங்கிவைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி. விசித்திரா அவர்களின் தலைமையில் நடந்த லூயி பிரெயில் தின விழாவின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடந்தேறியது. விரல்மொழியரின் வருங்காலப் படைப்பாளிகளான அப்பள்ளிக் குழந்தைகளும், நாங்களும் இணைந்து மகிழ்ந்திருந்த பெருமி்தத் தருணம் அது. அன்று முதல் இன்று வரை தினந்தினம் எங்களுக்கு நீங்கள் உற்சாகம் அளித்துவருகிறீர்கள். எங்கள் இதழ் குறித்த செய்திகளை வெளியிட்ட பிற ஊடக நண்பர்களுக்கும், எங்கள் நலன் விரும்பிகளுக்கும் கோடானகோடி நன்றிகள். இதே மகிழ்ச்சியோடு, பிப்ரவரி மாத இதழைப் படிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். பிப்ரவரி என்றாலே நம் நினைவில் நிழலாடுவது காதலர் தினம்தான். இந்த மாத இதழ் காதலர் தின சிறப்பிதழாக மிளிர்ந்து உங்களைக் கிரங்கடிக்க இருக்கிறது. பார்வையற்றவர்களின் காதல் தொடர்பான விதவிதமான படைப்புகள் இந்த இதழில் இடம்பெற்றுளன. அவை தவிர பட்ஜெட் 2018, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி ஆகிய நடப்பு நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகளும் இதழில் இடம்பெற்றுள்ளன. படித்து மகிழுங்கள்; கருத்துகளைத் தெரிவியுங்கள். தலித்தியம், பெண்ணியம் முதலியவை போல பார்வையற்றோரின் வாழ்க்கை முறை, மன உணர்வுகள், சாதனைகள், பொது வெளி குறித்த அவர்களது கருத்துகள் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்யும் படைப்புகளைத் தாங்கி வரும் ஒரு புது இயத்தை உருவாக்கும் முயற்சியில் விரல்மொழியரோடு விரல் கோர்த்திட வாரீர்! உலகெங்கிலும் உள்ள காதலர்கள் அனைவருக்கும் விரல்மொழியரின் காதலர் தின வாழ்த்துக்கள்! பட்ஜெட் 2018: ஊனமுற்றோரைப் புறக்கணித்துள்ள மற்றுமொரு நிதிநிலை அறிக்கை- முனைவர். கு. முருகானந்தன்26/2/2018 ![]() வெற்றுச் சொற்களைக்கொண்டே நாட்டை மாற்றிவிட முடியுமென்று பிரதமர் நரேந்திர மோடி நம்புகிறார், அல்லது நம்மை நம்பச் சொல்கிறார் போலும். கடந்த ஓராண்டிற்கு முன்பு, திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை, வானொலியில் “இனி ஊனமுற்றவர்களை ‘விக்லாங்’ (ஊன உடல் கொண்டோர்) என்பதற்குப் பதிலாக ‘திவ்யங்’ (புனித உடல் கொண்டோர்) என்று அழைப்போம்” என்றார் நமது பிரதமர். இந்தச் சொல்லாட்சியைப் பயன்படுத்தி தங்களை அழைக்கக் கூடாது என்று நாடு முழுவதும் உள்ள ஊனமுற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் ‘புனித உடல்’ கொண்டோருக்கு ‘Accessible India Campaign’ (Sugamya Bharat Abhiyan) என்னும் திட்டம் தொடங்கப்பட்டு, அவர்களுக்கு இணையம், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கே சென்றுசேர வகை செய்யப்படும் என்று உறுதியளித்தது மத்திய அரசு. மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ‘ஊனமுற்றோர் உரிமைச் சட்டம்’ (Rights of Persons with Disability Act, 2016), ‘மனநலப் பாதுகாப்புச் சட்டம்’ (Mental Health Care Act, 2017) ஆகிய மிக முக்கியமான இரு சட்டங்கள் ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்காக நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தவும் பட்டுள்ளன. குறிப்பாக, முன்பு மொத்த ஊனமுற்றோர் பிரிவுகள் ஏழு மட்டுமே இருந்ததை மாற்றி, ‘ஊனமுற்றோர் உரிமைச்சட்டம் 2016’ ஊனமுற்றோர் என்ற வரம்புக்குள் மொத்தம் 21 பிரிவினரைக் கொண்டுவந்துள்ளது. ஊனமுற்றோருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடமை என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் ஊனமுற்றோர் பயன்படுத்தத்தக்க கழிப்பறைகள், டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் அரசு இணையதளங்களை அணுகும் வசதியை ஊனமுற்றோருக்கு எளிதாக்குவது போன்ற உறுதிகளும் மத்திய அரசால் வழங்கப்பட்டன. இந்த நிலையில், சென்ற மூன்று ஆண்டுகளைப்போல் இல்லாமல், இந்த நிதிநிலை அறிக்கையில் மேற்கண்ட அரசின் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி முதல் நாள் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கை நான்காவது ஆண்டாக மீண்டும் பெருத்த ஏமாற்றத்தையும், கடும் விரக்தியையும் ஊனமுற்றோர் மற்றும் அவர்களுக்காகப் பணியாற்றி வருவோரிடம் ஏற்படுத்தியுள்ளது. ஊனமுற்றோர் உரிமைச்சட்டத்தில் இடம்பெற்றுள்ள சரத்துகளை நிறைவேற்ற வெறும் 300 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் மொத்தம் 500 புதிய மின்படிகள் (Escalators) அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அவற்றின் எண்ணிக்கை 600-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் என்ற பிரிவில் ‘புனித உடல் கொண்டோரும்’ (ஊனமுற்றோர்) சேர்க்கப்பட்டுள்ளனர். இவை தவிர, கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களும், ஒதுக்கீடுகளும் அப்படியே தொடர்கின்றன. ஊனமுற்றோருக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மாதாந்திரப் பராமரிப்புத்தொகை பங்களிப்புகூட 300 ரூபாய் என்ற பழைய அளவிலேயே தொடர்கிறது. இந்தியா, கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அவை நிறைவேற்றியுள்ள ஊனமுற்றோர் உரிமைகள் பிரகடனத்தில் கையெழுத்திட்ட உறுப்பு நாடாக உள்ளது. அந்தப் பிரகடனத்தின்படியான ஊனமுற்றோர் உரிமைச்சட்டத்தை அமல்படுத்தவே இந்தியா முழு பத்தாண்டுகள் காலம் கடத்தியிருக்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவில் மொத்தம் 26,000,000 ஊனமுற்றோர் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதய ஊனமுற்றோர் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அரசு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே மொத்த மக்கள் தொகையில் ஊனமுற்றோர் 2.2 விழுக்காடு உள்ளனர். தரமான கல்வி, திறன் மேம்பாடு, ஊனமுற்ற பெண்களின் சிறப்புத் தேவைகள், ஊரகப் பகுதிகளில் வாழும் ஊனமுற்றோருக்குச் சிறப்புத் திட்டங்கள், தரமான சிறப்பு மருத்துவ வசதிகள், வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்றவற்றை ஊனமுற்றோருக்கு வழங்க பெருமளவிலான நிதி ஒதுக்கீடு தேவை. ஆனால், மொத்த நிதி ஒதுக்கீட்டில் ஊனமுற்றோர் நலனுக்கு என 0.02 விழுக்காடு என்ற சொற்ப அளவு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதே நமது முகத்தில் அறையும் உண்மையாக உள்ளது. இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்திலேயே ஊனமுற்றோருக்கான அரசு நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் 300 கோடியைத் தாண்டும்போது, மத்திய அரசு மொத்த நாட்டிற்கும் சுமார் 1000 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது ஊனமுற்றோர் மேம்பாடு குறித்து அரசு சொல்வதற்கும், செய்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதை தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. இந்த நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஊனமுற்றோர் மற்றும் அவர்களுக்கான அமைப்புகள் இடையே கடும் அதிருப்தியை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக, மின்படிகள் அமைக்கப்படுவது பற்றி கூறும் உடல் ஊனமுற்றோர், தாங்கள் அரசிடம் நீண்ட நாட்களாகக் கோரி வருவது மின்படிகள் அல்ல; மின்தூக்கிகள்தான் (Lifts) என்றும், மின்தூக்கியில்தான் ஒரு உடல் ஊனமுற்றவர் சக்கர நாற்காலியில் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலரும் மின்படிகளைப் பயன்படுத்துவதால், இந்தத் திட்டத்தை ஊனமுற்றோருக்கான செலவினத்தில் சேர்ப்பதே மோசடியானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் ஊனமுற்றோர் பயன்படுத்த வசதியான கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று 2016-17-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அது பற்றியும் எந்த அறிவிப்பும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் போன்ற ஊனமுற்ற பிரிவினருக்கு எந்த சிறப்பான திட்டமோ, ஒதுக்கீடோ அறிவிக்கப்படவில்லை என்று அவ்வப்பிரிவினைச் சார்ந்த ஊனமுற்றோரும் அவர்களின் அமைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றனர். தொடர்ந்து வரும் அரசுகளும், தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைகளும் ஊனமுற்றோருக்கு உண்மையில் நலம் பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதைவிட, தாங்கள் ஊனமுற்றோர்மீது கரிசனம் கொண்டவர்கள் என்ற பிம்பத்தை ஊனமுற்றோர் அல்லாத மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலேயே அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஊனமுற்றோர் நலன், மேம்பாடு குறித்த திட்டங்களும் ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளும்போது, பயனாளிகளின் கருத்தையோ பிரதிநிதித்துவத்தையோ அரசுகள் அங்கீகரிப்பதில்லை. எனவேதான், மின்படிகள் அமைப்பதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், ஊனமுற்றோரின் கல்வி, பணிவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு தரப்படவில்லை. சமூக வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன்பெற்ற சக குடிமக்களாக ஊனமுற்றோரைக் கருதும்போதுதான் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் நாம் எதிர்பார்க்க முடியும். ஊனமுற்றோர் குறிப்பிடத்தக்க வாக்குவங்கியாக இல்லாமலிருப்பதும், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டத்தில் நிலவும் ஊனமுற்றோர் குறித்த அறியாமையும், பிற காரணிகளும் சேர்ந்தே இவ்வாறான குறைந்த நிதி ஒதுக்கீட்டை ஊனமுற்றோர் நலனுக்கு அரசு ஒதுக்கவும், எதிர்கட்சிகளும் பொதுச் சமூகமும் அது பற்றிய பிரக்ஞை எதுவுமில்லாமல் கடந்துபோகவும் வைக்கின்றன. ஊனமுற்றோரின் உரிமைக்குரல்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கும் காலமிது. இனிமேலும், அரசுகளும் நிதிநிலை அறிக்கைகளும் ஊனமுற்றோரைப் புறக்கணிக்க முடியாது என்ற நிலையை ஊனமுற்றோர், அவர்களுக்கான அமைப்புகள், சட்டம் மற்றும் திட்டமிடல் சார்ந்த நிறுவனங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இணைந்து ஏற்படுத்த வேண்டும். ஊனமுற்றோருக்கு எது உண்மையான வளர்ச்சி, எவை அவர்களின் இன்றியமையாத் தேவை என்பது குறித்த சரியான புரிதல் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விரைவில் ஏற்பட்டாகவேண்டும். இது தொடர்பான மேலும் சில செய்திகளைப் படிக்க: http://www.thehindu.com/news/national/tamil-nadu/budget-leaves-out-persons-with-disabilities-yet-again/article22626384.ece http://indianculturalforum.in/2018/02/05/union-budget-2018-excludes-persons-with-disability-again/ http://indianexpress.com/article/business/budget/union-budget-2018-disability-rights-activists-say-jaitleys-budget-a-big-disappointment/ https://www.youtube.com/watch?v=NQwIiKj2hK8 __ கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தொடர்புக்கு: [email protected] காதலர் தினம் நகர்ப்புறத்திற்குதானா? நாட்டுப்புறத்திற்கு இல்லையா? - அ. கௌரி ஆண் - மஞ்சக் கெழங்கரச்சு மண மணன்னு தாங் குளிச்சு, கொஞ்சும் கிளி போல வந்து கொள்ளை கொண்டு போறியேடி, மனசத் தொறந்துவைய்யடி என் கண்ணம்மா மாமன் வந்து குடியிருக்க! பெண் - மலையும் மடுவும் இங்கே மணமும் முடிப்பதுண்டோ? மனச யந்திரமா மாறச்சொன்னா மாறிடுமா? மதியக் கொஞ்சம் கேளு - என்ன மறந்துவாழப் பாரு! ஆண் - பட்டம் வாங்கிப்புட்டா பதவிகளும் தேடிப்புட்டா, பவுசு கூடுமின்னு பகட்டும்வந்து சேருமின்னு, நெனப்பு நெசமும் இல்ல அன்பு நேசம் போதும் புள்ள! பெண் - எங்கவீட்டு வேலை செய்ய ஏழு எட்டு வேலையாளு, உங்களோட வீட்டுலதான் ஆரிருக்காநீயும் சொல்லு? எதுக்கு வெட்டிப் பேச்சு - என் நேரம் வீணாப் போச்சு! ஆண் - வேலைக்கெல்லாம் ஆளிருக்கும் வெளியில் போகக் காரிருக்கும், வெள்ளை மேனி பளபளக்கும் வியாதிகளும் நெறஞ்சிருக்கும். வேல செஞ்சு பாரு நீ வாழும் ஆயுள் நூறு! பெண் - பணங்காசு வசதிகளும் பஞ்சுமெத்தைப் படுக்கைகளும், பிறர் காணப் பொறுக்கலயே பிழைக்கும் வழி தெரியலையே, ஒன்னக் கட்டி நான்தான் - என்ன பண்ணப் போறேன் வீண்தான்! ஆண் - பணங்காசச் சேர்த்திருந்தா பாவமின்னு சொன்னதில்ல, குணத்தோடு அளந்திருந்தா கொள்கையில மறுப்புமில்ல, கொஞ்சம் யோசி பெண்ணே இது குழப்பமில்ல கண்ணே! பெண் - காசு வந்து எங்களோட கண்களையே மறைச்சிடுமா? கள்ளமெது கபடமெது கருத்தும் கூட அழிஞ்சிடுமா? கேலிப் பேச்சு வேணாம் - அந்த குத்தல் ஏச்சும் வேணாம்! ஆண் - சூதுமில்ல வெனையுமில்ல சூட்சுமமாம் நடிப்பு மில்ல, ஆச ரொம்ப அளவுமில்ல அத அளவு மீற விடுறதில்ல, படிக்கலதான் நானே ஆனா, பண்பானவன் தானே! பெண் - கல்லு நெஞ்சக் கரைச்சுப்புட்ட கருத்தாப் பேசிக் கலக்கிப்புட்ட, சொல்லும் படி சொல்லி என்ன சொக்க வெச்சு மயக்கிப்புட்ட, வெவரமான ஆளு - பரிசு வேணும் என்ன கேளு! ஆண் - பொன்னும் வேணாம் பொருளும் வேணாம் போட்டிருக்கும் நகையும் வேணாம், புன்னகையே போதுமடி புதுசா என்ன வேணுமடி? மனசு தாண்டி தங்கம் உண்மை மகிழ்ச்சி தான்டி செல்வம்! பெண் - கண்ணப் போலக் காத்திருப்பேன் காதலோட பாத்திருப்பேன், கட்டி முத்தந் தந்து ஒங்க கடமை செய்ய அனுப்பி வைப்பேன், கண் நெறஞ்ச மாமா - காலம் கனிஞ்சிருக்கு ஆமா! ஆண் - எம்மனசப் புரிஞ்சுக்கிட்ட எடுத்துச் சொன்னாத் தெரிஞ்சுக்கிட்ட, இப்பத் தாண்டி என்னுசிர எனக்குத் திருப்பித் தந்துப்புட்ட, ஒன்னப் போல ஒருத்தி வேறு எவளும் இல்ல ஒசத்தி! பெண் - உண்மை அன்பு புரிஞ்சிருச்சு உலகம் எது தெரிஞ்சிருச்சு, கண்களையே மறைச்சிருந்த கர்வமும்தான் விலகிருச்சு, கடவுள் துணை இருக்கு - இனி கவலை என்ன நமக்கு? -- தொடர்புக்கு: [email protected] ##### காதல் - வ. கணேசன்
முன்பின் தெரியா இருவர் சந்தித்து, முகமலர்ந்து கருத்தைப் பரிமாறி சிந்தித்து, செய்வினை மறந்து உளமார நேசிக்க, செழித்தோங்கும் காதலோ இருமனம் ஒருமிக்க. தம்மைப் பெற்றோரும் உற்றாரும் அருகிருக்க, தமக்குற்ற ஒருமனம் வேரெங்கோ தொலேவிருக்க, அக்கனமேதோ சிந்தையால் நான்குறு நகைபுரிய, அனைவரும் வினவினர் நானுமென் நிலையறிய, நெஞ்சிற்கினிய உரவொன்று சந்திக்கக் காத்திருக்க, நொடிப்பொழுதும் மணிப்பொழுதாகி நகராது நிலைத்திருக்க, கனிமுகம் கண்டதும் கூடிப்பேசிக் களித்திருக்கும், மணிப்பொழுதோ நொடிப்பொழுதாகி விமானம்போல் விரைந்திருக்கும். காதல் நோயால் தாக்குண்ட நெஞ்சம், பஞ்சணையில் படுத்தாலும் நோகடிக்கும் கொஞ்சம், அறுசுவை அமுது அருகிலே இருக்கும், அதைஉண்டு சுவைக்க பசியில்லா நிலையிருக்கும். திடமாய் ஊர்கூடி எதிர்க்கின்ற போது, திடமாகக் காதலும் இருக்கின்ற போது, உண்மைக் காதலை சுமக்கின்ற உள்ளம், உண்மையில் போராடி நிச்சயம் வெல்லும்! -- தொடர்புக்கு: [email protected] ![]() விளையாட்டு ஒரு மனிதனின் உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்துகிறது. அதனால்தான், பள்ளிகளில் உடற்கல்வி என்ற பாடத்தை வைத்து, அதற்கென நேரம் ஒதுக்கி, மாணவர்களின் மனதையும், உடலையும் பேணிக் காக்க அரசு முயல்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் உடற்கல்வி வகுப்புகள் அனைத்து பள்ளிகளிலும் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, கேள்விக் குறியே நமக்கு பதிலாக கிடைக்கிறது. அதேசமயம், மாணவர்களிடையே உங்களுக்குப் பிடித்த பாடவேளை எது என்ற ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டால் உடற்கல்வி என்ற விடை நமக்குக் கிடைக்கும். பிடித்த விளையாட்டு என்று கேட்டால் கிரிக்கெட் என்றும், பிடித்த வீரர் யார் என்றால் கோலி, தோனி, சச்சின் போன்ற வீரர்கள் பட்டியலும் நமக்குக் கிடைக்கும். இதே கேள்வியை எம்மைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் நீங்கள் கேட்டால் மேலே கொடுத்துள்ள அதே பதில்கள்தான் கிடைக்கும்; அதில் ஒன்றும் ஐயம் இல்லை. இந்த விஷயத்தில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் கர்வத்துடன் இங்கு பதிய விரும்புகிறேன். பார்வை உள்ளவர்களைப் போல எங்களால் விளையாடவும் முடியும்; அதேபோன்று, பார்வை உள்ளவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை எங்களால் விமர்சிக்கவும் முடியும். இதற்கு முக்கியமாக எங்களுக்கு உதவியது, அதன்மீது எங்களுக்கு இருக்கும் தீராத காதலும் அகில இந்திய வானொலியும்தான். இந்த வானொலிதான் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் கிரிக்கெட்டுக்கும் இடையே ஒரு நல்ல தூதுவனாக இருந்து காதலை வளர்த்தது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பார்வை உள்ளவர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கும் இடையில் பெரிதாக வேறுபாடுகள் இல்லை. கிரிக்கெட்டின் விதிகளில் பார்வையற்றவர்களுக்கு ஏதுவாக சில சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும். உதாரணமாக, பார்வையற்றவர்களின் கிரிக்கெட் பந்து கனமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கும். உள்ளே பால்ரஸ் குண்டுகள் வைக்கப்பட்டு மோல்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த பால்ரஸ் குண்டுகள் சத்தத்தை எழுப்பி, பந்து வருவதை பார்வையற்ற வீரர்களுக்கு அறிவிக்கும். பந்து பவுன்ஸ் செய்வதற்குப் பதிலாக, பார்வையற்றவர்கள் பந்தை உருட்டிவிடுவோம். பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பார்வையின்மையின் பல்வேறு படிநிலைகளைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பர். B1 (முழுமையாக பார்வையற்றவர்கள்), B2 (40% வரை பார்வை உள்ளவர்கள்) மற்றும் B3 (60% வரை பார்வை உள்ளவர்கள்). ஒரு அணிக்குத் தேவையான 11 பேரில் B1 பிரிவைச் சேர்ந்தவர்கள் 4 பேர், B2 பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 3 பேரில் இருந்து அதிகபட்சம் 7 பேர் வரை மற்றும் B3 பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 பேர் என்ற விகிதத்தில் இடம்பிடிப்பர். இப்பிரிவுகளில், B1 (முழுமையாக பார்வையற்றவர்கள்) எடுக்கும் ஓட்டம் இரு மடங்காக கணக்கில் கொள்ளப்படும். அதாவது, ஒரு B1 எடுக்கும் 1 ஓட்டம் 2 ஓட்டமாகக் கருதப்படும்; மற்ற ஓட்டங்களும் அப்படியே. பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விதிமுறைகளை ஒழுங்குபடுத்த ‘World Blind Cricket Council’ (WBCC) என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இச்சங்கம் இதுவரை மூன்று T20 உலகக் கோப்பைப் போட்டிகளையும், 5 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளையும் நடத்தியுள்ளது. ‘Cricket Association for the Blind in India’ (CABI) என்ற அமைப்பு இந்தியாவில் பார்வையற்றோர் கிரிக்கெட்டை நிர்வகித்து வருகிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். பார்வையற்றோருக்கான 5-ஆவது ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜனவரி 8 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றன. இப்போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா ஆகிய 6 நாடுகள் இப்போட்டியில் கலந்துகொண்டன. இதில் நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தான் மண்ணில் விளையாட சம்மதித்தன. இந்திய வெளியுறவுத் துறையும், இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கமும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் சம்மதித்தது. போட்டிகள் அனைத்தும் குழு முறை அடிப்படையில் நடத்தப்பட்டன. மொத்தம் 15 லீக் ஆட்டங்களும், 2 அரையிறுதிப் போட்டிகளும், ஒரு இறுதிப் போட்டியும் என 18 போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் கட்டாஃபி (பாகிஸ்தான்), அஜ்மன் ஓவல் (UAE), MCC (UAE) மற்றும் ஷார்ஜா (UAE) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. இத்தொடரில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 563 ஓட்டங்களைப் பெற்றது. பார்வையற்றோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் பதிவான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுதான். இந்த ரன் குவிப்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெறப்பட்டது. இன்றைய இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் எப்படி கிரிக்கெட்டில் கோலோச்சுகின்றனவோ அதேபோல்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும். இதுவரை நடந்து முடிந்த பெரும்பாலான தொடர்களில் இந்த இரு அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதியிருக்கின்றன. இந்த உலகக் கோப்பையிலும் இதுதான் நடந்தது. அட்டவணையின்படி இறுதிப் போட்டி பாகிஸ்தானில்தான் நடைபெறவிருந்தது. இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடிய காரணத்தால், இப்போட்டி புகழ்பெற்ற ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 20-ஆம் தேதியன்று இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணித் தலைவர் அஜய்குமார் ரெட்டி நாணயச் சுழற்சியில் வென்று, பாகிஸ்தானை மட்டை வீச அழைத்தார். அதன்படி பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 308 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணி சார்பாக ஃபாதர் முனிர் 61 பந்துகளைச் சந்தித்து 57 ஓட்டங்களையும், ரியாஸ் கான் 48, நிசார் அலி 47 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி சார்பாக தீபக் மாலிக் மற்றும் ராம்பீர் தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் ரமேஷ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பின்பு, 309 என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, துவக்கத்தில் ஓவருக்கு 10 என்ற சராசரியில் ஓட்டங்களை எடுத்து வந்த நிலையில், 15-ஆவது ஓவரின்போது 111 ஓட்டம் பெற்று தனது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்த ஓவரிலேயே 116/3 என்ற நிலையில் தடுமாறிய இந்திய அணியை சுனில் ரமேஷ் [93] மற்றும் அணித் தலைவர் அஜய்குமார் ரெட்டி [62] இணை மீட்டது. ‘Death Overs’ என்று அழைக்கப்படும் இறுதி ஓவர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது என்றே சொல்லலாம். காரணம், இந்தக் கட்டத்தில்தான் இந்திய அணி தனது 4 வீரர்களை இழந்தது. ஆனாலும், சுதாரித்த இந்திய அணி, இறுதியில் 38.2 ஓவரில் 309 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி இரு T20 உலகக் கோப்பைகள், 4 ஒருதின உலகக் கோப்பைகள், ஒரு முறை ஆசியக் கோப்பையை வென்ற ஒரே அணியாக இருந்தாலும், நான் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளை வரை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) இன்னும் பார்வையற்றோர் கிரிக்கெட்டிற்கு முறையான அங்கீகாரம் அளிக்கவில்லை. பார்வையற்றோர் கிரிக்கெட்டுக்கான இந்தியச் சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டும் அதற்கு பலன் கிடைக்கவே இல்லை. பல நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் பார்வையற்றோர் கிரிக்கெட்டை அதன் ஒரு அங்கமாக அங்கீகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பார்வையற்றோருக்கான இந்திய அணியில் விளையாடும் 17 வீரர்களில் 12 வீரர்களுக்கு நிலையான வேலைகூட இல்லை. இது குறித்து குஜராத்தின் வல்சத் நகரைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் கணேஷ் முந்த்கர் கூறுகையில், "நான் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். என் பெற்றோர் விவசாயம் செய்கிறார்கள். நான் சிறிய மளிகைக் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று என் பெற்றோர் கூறியபோதிலும் எனது விருப்பம், ஆசை கிரிக்கெட் என்பதால் தொடர்ந்து விளையாடி வருகிறேன். 2014-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது குஜராத் அரசு எனக்கு வேலை தருவதாக உறுதியளித்தது. ஆனால், எந்த ஒரு வேலையும் எனக்கு வழங்கப்படவில்லை" என்கிறார். ஆந்திர மாநிலம் குர்னூல் பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் கூறுகையில், "பார்வை மாற்றுத்திறனாளிகள் நடத்தும் இசைக் கச்சேரிக் குழுவில் நான் பாடி வருகிறேன். ஒரு நிகழ்ச்சியில் 500 அல்லது 1000 ரூபாய் வரை கிடைக்கும். மாதத்துக்கு 10 நிகழ்ச்சிகள் வரை நடத்துகிறோம். இது என் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை என்கிற போதிலும், நாட்டுக்காக விளையாடுவது மனநிறைவாக இருக்கிறது" என தெரிவித்தார். குஜராத்தின் வல்சத் பகுதியைச் சேர்ந்த அனில் ஆர்யா எனும் வீரர் பால் வியாபாரம் செய்து வருகிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரா ராவ் ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் யாருக்கும் நிலையான வேலையும், உறுதியான வருமானமும் இல்லை. ஆனால், இவர்களுக்கும் கோலியைப் போல், தோனியைப் போல் நாட்டுப்பற்றும், கிரிக்கெட்டின் மீது காதலும் உண்டு. ஒவ்வொரு முறையும் வெற்றிபெற்ற பிறகு, இந்திய அணியை பாரதப் பிரதமர், முக்கிய அமைச்சர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். ஆனால், சிறிது நாட்களிலேயே அவர்கள் மறக்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டதே இல்லை. அண்மையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் BCCI தலைவர் வினோத் ராய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு அங்கீகாரம் தருவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள உதவலாம் என்றும், அவர்களது ஓய்வுக் காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் அவர்கள் நம்பிக்கையுடன் விளையாட முடியும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி 9 அன்று, பார்வையற்றோர் கிரிக்கெட்டுக்கான இந்தியச் சங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் CABI-க்கும் BCCI-க்கும் இடையில் சுமூக பேச்சுவார்த்தை நடந்துவருவதாக குறிப்பிட்டுள்ளனர். பேச்சுவார்த்தை வெற்றிபெற்று BCCI-யின் அங்கீகாரம் கிடைக்குமானால், இந்தியாவில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் என்பதில் ஐயமில்லை. அதோடு, எங்கள் வீரர்கள் மத்தியில் வேலையின்மையும் குறையும்; நாங்கள் பொருளாதார ரீதியிலும் முன்னேறுவோம். பார்க்கலாம், இந்த 2018-இல் இந்தியாவிற்கு பெருமைகளை சேர்த்துக் கொண்டிருக்கும் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களது வாழ்க்கை எவ்வாறு இருக்கப்போகிறது என்று. -- தொடர்புக்கு: [email protected] ![]() தட்டச்சு எந்திரம் தட்டிய பொத்தான்களின் தட்டலுக்கேற்ப நகர்ந்திருந்தால், இன்று இந்த கட்டுரைக்காக நான் கணிப்பொறியில் தட்டி இருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஒருவேளை, மாறுபட்ட கோணத்தில், மாறுபட்ட நபருக்காக, இதே கட்டுரையை வேறொரு பட்டறிவின் அடிப்படையில் எழுதி இருக்கலாமோ என்னவோ. ‘பருவம் படுத்தும் பாட்டில், பார்க்கும் இணைகளை எல்லாம், நமது துணைகளாக்கி மன அளவில் வாழ்ந்து, அது போய் அடுத்து வந்து, அதனையும் இதனையும் ஒப்பிட்டுப் பார்த்து, கூட்டிக் கழித்து, குறைகளை நிறைகளை சேர்த்துப் பார்த்து, சுழியத்தில் முடியும் கணக்கில் வெறுத்து, வெறுத்தும் சுழியம்தான் கணக்கில் வரத்து, என்பதை வாழ்வினில் சரியாய் அறிந்து, அறிந்ததில் நமக்கேது என்பதை புரிந்து, புரிந்தவர் புதிர் அது எதுவென உணர்ந்து, உணர்ந்ததில் நல்லது கெட்டது பகுத்து, பகுத்தலில் பெற்றதில் நல்வழி வகுத்து, வழி வரும் தளிராம் தலைமுறை எடுத்து, சேர்த்ததை எல்லாம் அவரிடம் விடுத்து, சேருவோம் இறையடி வாழ்வினை முடித்து’ என்று ஒரு நீண்ட மூச்சுக்கு பின் ஆன்மீகத்தையோ, துறவையோ விடுத்துப் போகலாம். ஆனால், நான் காதலிக்க பிறந்தவன்! அதிலும், அதில் பெருமிதம் உள்ளவன். ஏனெனில், ‘படைப்பதினால் என் பேர் இறைவன்’ என்னும் கண்ணதாசனின் வரிக்கேற்ப, இறைமை எதுவென பார்த்தால், துறவல்ல; காதல்தான். எப்படியெனில், காதல் உருவாக்கும்; துறவு உறவறுக்கும். காதல் வேண்டுமானால் துறவியைப் பிறப்பிக்கும்; உண்மைத் துறவறத்தில் காதல் பிறக்காது. துறவு முடிவை நோக்கி பயணிப்பது; காதல் துவக்கத்தை முதலீடாக்கி துளிர்ப்பது. துறவு இருப்பதை இழந்து உருவமற்றதைத் தேடுவது; காதல் உருவமற்றிருந்தும், உருவத்தில் திளைப்பது. மொத்தத்தில், துறவு துறப்பதை வலியுறுத்தும் எதிர்மறை; காதல் பெறுதலின் நேர்மறை. இந்த ஒப்பீடுகள் எதார்த்தவாதிகளுக்குப் பொருந்துமேயன்றி, போலிகளுக்குப் பொருந்தாது. நான் போலிகள் என்று குறிப்பிடுவது, எவர் எதை ஏற்றுக் கொள்கிறாரோ, அதற்கு எதிர்மறையாக வாழ்பவரை. இன்றைய இவ்வளவு இயக்கங்களுக்கும், பெருக்கங்களுக்கும் பாலியலும், காதலும்தான் அடிப்படை என்றால் எவரால் மறுக்க இயலும்? வரையறையில்தான் வேறுபாடு இருக்க முடியுமே அன்றி, தேவையில் இல்லை. பாலியல் பற்றி பெரிதாக பாடம் எடுக்கவேண்டிய தேவையை இயற்கையே நமக்கு வைக்கவில்லை. அது குழந்தை முதலே வெவ்வேறு வடிவங்களில், தானாகவே தரப்பட்டு விடுவதால், காதலைப் பற்றி மட்டுமே கொஞ்சம் ஆய்ந்து என் பட்டறிவை துவக்க விரும்புகிறேன். எது காதல்? இதைப் பற்றி எவ்வளவோ பேர், எவ்வளவோ எழுதியும் இது போதும் என்று இனி வருபவர்கள் எழுதாமல் நிறுத்திக்கொள்ள போவதில்லை என்பதிலிருந்தே இதன் வலிமை புலப்படும். ஆனால், ஒற்றை வரியில், என் வரையில் விளக்கம் கொடுப்பதானால், ‘எந்த அன்பில் முறையான பாலியல் அனுமதிக்கப் படுகிறதோ அது காதல்’. தாய், தமக்கை, மகள் என எந்த உறவிலும் இல்லாத நெருக்கத்தை மனைவியிடம் நிலைநிறுத்தும் ஒரு சக்திதான் காதல். பருவத்தில், பாலியலின் குழந்தையாம் காதல். எனக்கும் காதலுக்கும் தொடர்பு பெற்ற என் வயது எது என்று சரியாக சொல்லிவிடும் அளவிற்கு என் நினைவில் இல்லை. ஆனால், பாலியல் முற்றிலும் பாவம் என்றும், அது ஆன்மீகத்திற்கு நேர் எதிரானது என்றும் நான் நினைத்துக் கொண்டிருந்த வயதிலேயே, என் வயதே உடைய என் நண்பன் ஒருவனால் பாலியல் பாடம் பெற்றேன் என்பதும், அவனால்தான் திருமணம் என்பதே பாலியலை பெறதான் என்றும் அறிந்தேன் என்பதும் இன்று நினைத்தாலும் வேடிக்கையாகத்தான் உள்ளது. அழகான பெண்களைப் பார்வையுள்ள ஆண்கள் தன்னவளாகக் கற்பனை செய்துகொள்வதெப்படியோ, அப்படியே பார்வையற்ற ஆண்களும் குரலில் இனிய பெண்களை தன்னவளாக கற்பனை செய்வது இயல்புதான். அவ்வகையில், அக்காலச் சூழலில், அந்த வயதில், அப்போதைய அறிவில் நானும் மனதளவில் பலரைத் தேடி இருக்கிறேன். இசை என் வாழ்வில் ஒரு பகுதி என்பதால், நன்கு பாடும் திறம் பெற்ற பெண்கள் என் பட்டியலில் இருந்திருக்கிறார்கள்தான். அதனையும் கடந்து அடக்கம், படிப்பு, பண்பு, பக்குவம், நடைமுறை என இன்ன பிறவற்றை உள்ளடக்கிய அன்றையத் தேடலுக்கு யார்யாரெல்லாம் என் பட்டியலில் இடம் பெற்றார்கள் என்பதை, இன்று அவர்களில் பலர் பிறர் மனைவிகள் ஆகிவிட்டனர் என்பதால், எழுதுவது முறையாகாது. நான் 10-ஆம் வகுப்பை முடித்த போது, நேரடியாகவே கடிதம் தந்த அந்த இரு பெண்களும், ‘என்னை நிலைப்படுத்திக் கொண்ட பிறகுதான் இதைப் பற்றி யோசிக்கவேகூட முடியும் என்பதால் காத்திருக்கவும்’ என்ற என் வாய்வழி பதிலுக்கேற்ப, எனக்கு வேலை கிடைக்கும் வரை காத்திருக்கவில்லை என்பதாலும், எனக்கு வேலை கிடைத்தபோது அந்த இருவரையும் உடனடியாக சந்திக்க முடியாமல் என் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் செய்துவிட்டன என்னும்போது பொருளற்றவையே. என் போன்ற வயதில் இருப்பவர்கள், அதிலும் இங்கு என் பிள்ளைகளுக்குரிய வயதில் இருக்கும் வாசகர்களுக்கு இதைப் பற்றி எழுதும்போது, எவ்வளவு கவனத்துடன் எழுத வேண்டும் என்பதை நான் முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு பொறுப்புள்ள எழுத்தாளன் என்னும் தகுதியிலிருந்து இறங்காமலும், வாசகர் நலன் என்னும் பொறுப்பிலிருந்து பிறழாமலும் பதிவு செய்வதென்பது மிகமிகக் கட்டாயம். முடிந்தவரை மிகைகளைத் தவிர்த்து, உண்மையை உதிர்க்கவே முயற்சித்திருக்கிறேன். என் காதல் அனுபவத்தை எழுதும்படி ஏற்கெனவே பலர் வேண்டி விரும்பிக் கேட்டு வந்ததை நினைவில் கொண்டு, ஒரு வரையறைக்குள் எனது 30 ஆண்டுக்கு முன்பான வாழ்க்கையின் நினைவுகளை அசைபோட முயற்சிக்கிறேன். வாருங்கள்! தேசிய பார்வையற்றோர் பயிற்சி நிலையம், டேராடூன் போய் வருவோம்! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், குறைத்துக் கூறினாலும் நிறை என்று மகிழ்ந்தாலும் இந்நிலையம் எனக்கு மட்டுமல்ல; என் போன்ற பல பார்வையற்றவர்களுக்கும் மையப் பெயராக அமைந்துவிட்டதில் வியப்பில்லை. என் வேலைக்கும், காதலுக்கும் இந்நிலையம்தான் அடிப்படையாக இருந்தது. உறுதுணையாய் இருந்த இறைவனுக்கும், உதவி புரிந்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளுடன் இன்னொன்றையும் இங்கு எழுதிவிட விரும்புகிறேன். நாங்களும் இந்த 30 ஆண்டுகளில், மண விலக்கை பற்றி பலமுறை பேசி இருக்கிறோம். அதற்கு, என்னிடம் இருக்கும் ஒரு குறையும் காரணம். பொதுவாக, காதல் என்பது இருவழிப் பயணம் என்பதும், இங்கு நான் என் வழியை மட்டுமே வெளிப்படையாக எழுத உரிமை உள்ளவன் என்பதாலும் இப்படி எழுதுகிறேன். தேசிய பார்வையற்றோர் நிலையத்தில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தனித்தனி பயிற்சி நிலையங்கள் மற்றும் விடுதிகள் இருப்பதால், இருபாலரும் சந்திப்பது என்பது இயலாதது. இது ஏனைய பயிற்சிகளுக்குப் பொருந்துமேயன்றி சுருக்கெழுத்து பயிற்சிக்குப் பொருந்தாது. ஏனெனில், இருபாலரும் ஒரே இடத்தில்தான் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். அது ஆண்கள் பயிற்சி நிலையத்தில் இருந்ததால், பெண்கள் அங்கு வந்து போவார்கள். மாதத்திற்கு ஒருமுறை, மனமகிழ் நிகழ்ச்சி (Cultural Programme) நடைபெறும். அது ஓரிரு மணிநேரம் இருக்கலாம். அந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் எங்களது நிகழ்ச்சி அரங்கத்திற்கு அழைத்துவரப்படுவார்கள். அந்நிகழ்ச்சியில், எவரால் எதுவெல்லாம் முடியுமோ அவற்றை முயற்சிப்பது வழக்கம். அந்த வகையில், ஒருவரை ஒருவர் கவர, முடிந்தவரை தத்தமது பெயரை எதிர்பாலருக்குத் தெரியப்படுத்த முயன்றவரை முயற்சிப்பதென்பது எதார்த்தமே. ஹிந்தி பேசும் அப்பகுதியில் தமிழர்களால் என்ன முடியும்? பொதுவாக இசைக்கு மொழி இல்லை என்பார்கள். எனவே இசையை முயற்சிக்கலாம்தான். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கும். நாம் தென்னிந்தியர்கள், ஏற்கெனவே ஹிந்தி மற்றும் ஏனைய மொழிப் பாடல்களை மொழி தெரியாமலேயே கேட்டு இசைக்காக ரசிப்பதுபோல வட இந்தியர்கள் ரசிப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அதற்காக, வேறு வழி இல்லை என்னும்போது அதைதான் முயற்சித்தாக வேண்டும். நானும் தமிழ் பாடல்களை சில மாதங்கள் பாடிவந்தேன். இதற்குள், ஹிந்தியை பேசும் அளவிற்கு கற்றுக்கொண்டேன். ஆகையால், ஒரு வட இந்திய நண்பன் என்னிடம் வந்து, “நீ பாடுவது நன்றாகதான் இருக்கிறது, ஆனால் மொழிதான் புரியவில்லை. நீ ஏன் எனக்காக ஒரு ஹிந்திப் பாடலை முயற்சிக்க கூடாது?” என்றான். முதல் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். உச்சரிப்பு மற்றும் சொற்கள் இரண்டையுமே ஒருசேர என்னால் நினைவில் வைத்து பாடமுடியாது என்பது நன்கு தெரியவந்தது. எனவே, ஒரு தாளில் நான் பாட விரும்பிய பாடலை குமிழெழுத்தில் (பிரெயில்) எழுதிக்கொண்டேன். அந்த பாடலின் துவக்கம், ஒரு குரலிசையுடன் (Humming) துவங்கும். என் குரலிசை துவங்கியதும், “ஹே, ஹிந்தி பாடல்!” என்று பல குரல்கள் கேட்டன. அது போதாதா எனக்கு? பள்ளியில் தேர்ந்த பாடகர்கள் வராதபோது, உதிரி பாடகனாக பள்ளிக்காக மேடையில் பாடி பாராட்டை பெற்றிருக்கும் அனுபவம் இருந்ததாலும், ஊக்கப்படுத்தலாலும் அப்பாடலை தரமாகவே பாடி முடித்தேன். என்னை ஹிந்தி பாடல் பாடச் சொன்ன நண்பனுக்கு மிகவும் மகிழ்ச்சி. அடுத்த மாதம் ‘கோரி தேராகாவும் படா ப்யாரா’ என்ற ஜேசுதாசின் பாடலை முயற்சிக்க, அது ஏக வரவேற்பை பெற்றது. பெண்கள் பகுதியில், கைகளைத் தலைக்குமேல் தூக்கி தட்டியதாகவும் தனக்கு அப்படி வாய்க்கவில்லையே என்றும் குறைப்பார்வையுள்ள நண்பன் ஒருவன் சொல்லக் கேட்டேன். அவ்வளவுதான், என் பெயர் பயிற்சி நிலையமெங்கும் அன்று அடிக்கடி சொல்லப்பட்ட பெயராகியது. சற்றேறக்குறைய எல்லா மாதங்களிலும் நான் ஹிந்தி பாடல் பாட எதிர்பார்க்கப்பட்டேன். அதன் உச்சகட்டமாக, கௌரி என்ற மேற்குவங்கப் பெண், “அவர் விரும்பினால் நான் அவரை மணக்க விரும்புகிறேன்” என்று விருப்பம் தெரிவித்தது என்னுள் அவ்வயதிற்குரிய கிளுகிளுப்பை ஊட்டியது. அங்கே பெயர்களை எழுதாத நீ, இங்கே எழுதுவதெப்படி என்கிறீர்களா? இதைப் படிக்கும் யாரும், எழுதப்பட்ட பெயருக்குச் சொந்தக்காரரைப் பார்க்கக்கூட போவதில்லை என்கிற நம்பிக்கையில்தான். ஆனால், ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்’ என்னும் வரிகள் எனக்குள், என்னை நிலைப்படுத்தியது மட்டுமல்ல, நான் இப்போதும் பயிற்சியில்தான் இருக்கிறேனேயன்றி, வேலை கிடைக்கவில்லையே! இதில் வேடிக்கை என்னவென்றால், என்னை விரும்பிய அந்த கௌரி ஒரு ஹரியானாவைச் சேர்ந்தவரைதான் பின்னர் மணந்தார் என்பதும், நானும் இன்னொரு ஹரியானாவைச் சேர்ந்தவரைதான் மணக்க நேர்ந்தது என்பதும். புகழ் ஒரு போதை; அது பொல்லாதது சாமி. அதன் உச்சத்தை தொட விரும்பி சகட்டு மேனிக்கு ஒருமுறை முயற்சிக்க, அங்கிருந்தவர்களில் 15 விழுக்காட்டினர்கூட கைகளைத் தட்டாத மோசமான பதிலையும் பெற்றேன். நின்று நிதானித்துக் கொண்டேன்; கிடைப்பதெதுவோ அதில் நிறைவுபெறும் நிலை அது. அடுத்து வந்த மாதங்களில், என்னால் ஈடு செய்துகொள்ள முடிந்தது. வகுப்புத் தோழிகளை வளைத்துப் போடவோ, வளைந்து போகவோ வாய்ப்புகள் எனக்குக் கிட்டியதில்லை. கல்லூரி கதவுகளைக்கூடத் தட்டியிராத நான், நேராக அப்படி நினைக்க முடிந்ததோ, கனவு கண்டதோ இந்த வகுப்பில்தான். சுருக்கெழுத்துப் பயிற்சி ஒரு வகுப்பிலும், தட்டச்சுப் பயிற்சி இன்னொரு வகுப்பிலும் நடந்து வந்தன. காரணம், ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கு தனித்தனியே சுருக்கெழுத்துக்கு வகுப்பறைகள் தேவைப்பட்ட மாதிரி, தட்டச்சுக்கு தேவை இல்லை. ஆகவே, தட்டச்சு வகுப்புதான் தனிமனித நிலையில் இருந்த எனக்குத் துணையென ஒருவரை தேடித்தரும் தடத்தைப் பதித்துத் தந்தது எனலாம். 1985-ல் நான் சேர்ந்தபோது, வகுப்பில் இருந்த பெண் என்னிடம் பேசமாட்டார். முயற்சித்தாலும், பதில் ஓரிரு வார்த்தைகளில் இருக்கும். பொதுவாக இம்மாதிரிப் பெண்களை உடனடியாக தவிர்த்துவிடுவது என் பழக்கம். அடுத்து, 1986-இன் பிற்பகுதியில் வந்தவர் நன்கு பேசுவார். ஆனால், பேச்சு ஒரு அளவிற்கு உட்பட்டே இருக்கும். இவர்கள் இருவருடனும், இன்றும் குடும்பரீதியான நட்பு தொடர்கிறது என்பதும், என் மனைவி உட்பட இம்மூவரும் பள்ளித் தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து 1987-ல் வந்தவர்தான் இன்றளவும் என் வாழ்க்கையிலும் துணையாக வந்துகொண்டிருப்பவர்! எவ்வளவுதான் நீட்டி முழக்கி எழுதினாலும், மையத்தை தொடாமல் போக முடியாது இல்லையா? இதோ, மையத்திற்குள் நான் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். 1987 ஜனவரி மாதம்; நாள் நினைவில் இல்லை! அவரைப் பார்த்ததும் எல்லாம் மறந்த மாதிரி, நாளும் மறந்து விட்டதா? அப்படித்தான் என்று நினைக்கிறேன்! அன்று ஆசிரியர் வரவில்லை. எப்போதும் உடன் வரும் வகுப்புத் தோழியும் ஏனோ அன்று வரவில்லை; வகுப்பில் நாங்கள் இருவரும்தான். ஆனால், நாங்கள் இருவருமே உண்மையில் ரொம்ப நல்லவங்க. உருப்படியாக உட்கார்ந்து தட்டச்சுப் பயிற்சியில்தான் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். எவ்வளவு நேரம் அப்படி? தெரியாது! தெரிந்தது எதுவெனில், திடீரென எதிர்புற தட்டச்சு எந்திரம் நகராமல் நின்றுவிட்டது என்பதுதான். என் தட்டச்சு எந்திரமும் சரி, நான் அவர்களைக் கவனிப்பதும் சரி, தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஒரு நிலையில், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை என்றதும், ‘உச்’ என்ற ஒலி என்னை உதவிக்கு அழைத்தது. அது அழைப்பா, சலிப்பா? அந்த வயதில் அது அழைப்புதான். இப்போது நான் நிறுத்தியதால், என் தட்டச்சும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. நிமிர்ந்து உட்கார்ந்து சில வினாடிகள் யோசித்தேன். என்னவென்று கேட்கலாமா, வேண்டாமா? ஆசிரியர் வேறு இல்லை! இதைவிட நல்ல வாய்ப்பு பின் எப்போது கிடைக்கும் என்றெல்லாம் யோசித்து, கேட்டு விட்டேனோ என்னவோ, நினைவில் இல்லை! “என்ன?” என்றேன் ஒற்றைச் சொல்லில். முதல் முறையாக என்னிடம் பேசினார் என் திருமதி. என்ன சொல்லி இருப்பார்? அதுதான் உங்களாலேயே கணிக்க முடியுமே! எழுந்து போனேன். வெவ்வேறு மாறுபட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தள்ளுருளையை (Carriage) தள்ளிப் பார்த்தேன். இயக்கம் பெற்றது எந்திரம். என் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் இயக்கம் தடைபட, அதே முயற்சி. மூன்றாம் முறையும் என் உதவிக்கு வந்தது எந்திரம். இம்முறை, எழுந்து போய், அவரது கையை நீட்டச் சொல்லி, கையை பிடித்து, எப்படி தள்ளுருளையை தள்ளினால் இயக்கம் பெறும் என்பதைக் காட்டினேன். எந்திரம் இயங்கியதுதான்! ஆனால், என்னுள் அன்று இயங்கிய மன இயக்கங்கள், இவ்வளவு நீண்ட, இன்ன பிற உடல் மற்றும் மனம் சார்ந்த இயக்கங்களுக்கு வழிவகுக்கும் என்பதை நான் நினைத்திருக்கவும் இல்லை. ‘தொடலதில் துவங்கி, தழுவலில் திளைத்து, என் தலைமுறை தழைக்கும், துவக்கம் அதுவென எழுதிடும் பேரை, எனக்கெழுதிய இறைவன்’ என்றோ ஒருநாள் நான் இப்படி எழுத, அன்று நிகழ்ந்த எதிர்பாரா தொடலது. எந்திர மறுப்பு, எங்களது ஈர்ப்புக்கு வழிவகுத்தது. அடுத்தடுத்து அடம்பிடித்த எந்திரத்தை விடுத்து, அவராகவே பேசத் துவங்கினார். ஆசிரியர் இல்லாதபோதெல்லாம் பேசத் துவங்கிய நாங்கள், இன்றுவரை பேசிக்கொண்டே இருக்கிறோம். படிப்பு, குடும்பம், உடன் பிறந்தோர், விருப்பு, வெறுப்பு, நண்பர்கள், பழக்க வழக்கம், கலாச்சாரம், காலநிலை, உணவு, இட அமைப்பு போன்ற பல பொதுவானவற்றைப் பேசினோம். இருவேறு மாநிலத்தவர் என்பதால், பேச நிறைய தலைப்புகள் கிடைத்தன. பேசியவை பொதுவானவைதான் என்றாலும், முதன்முறையாக, நான் படித்த இடத்தில் வேறு மாநிலப் பெண்ணோடு நீண்ட நேரம் பேசிவிட்ட மகிழ்ச்சி. பேசிய மகிழ்ச்சியுடனும், வகுப்பு முடிந்துவிட்ட வருத்தத்துடனும் அன்றைய தினம் என்னை வகுப்பறையிலிருந்து வழியனுப்பி வைத்தது. நமது எண்ணங்களை பகிர்ந்துகொள்ள, அவரவர் நிலையில் எவருக்கும் இருக்கும் நண்பர்கள்போல, எனக்குமிருந்த நண்பர்களிடம் எனது இனிமையைப் பகிர்ந்துகொண்டேன். சுண்டிய குதிரையாய், நாலு கால் பாய்ச்சலுக்கு ஆயத்தமான என் மனதை எந்தக் கடிவாளம் கொண்டு அடக்க? இருந்தது! என்னைப் பற்றி எப்போதுமே நன்கு அறிந்திருந்தேன். எங்களது வேறுபாடுகளும் என்னை எச்சரித்தன. என்ன அவை? பிறிதொரு சரியான இடத்தில் குறிப்பிட விரும்புவதால், அவற்றை இப்போதைக்கு விடுத்துப் போகிறேன். முன்பெல்லாம் ஊனமுற்றோர் விழா மார்ச் மாதங்களில் கொண்டாடப்பட்டது. ஊனமுற்றோர் விழாவிற்கான விளையாட்டுப் போட்டிகளுக்கென்று பயிற்சிக்காக மாணவர்களும், ஆசிரியர்களும் திறந்தவெளி அரங்கத்திற்குச் சென்றுவிட்டதால் தனிமை வேண்டிய அளவிற்கு கிடைக்கப் பெற்றோம். நான் பயிற்சியை முடிக்கும் நிலையில் இருந்ததாலும், எண்ணெய் நிலவாயுக் கழகத்தில் நேர்காணலுக்கு வாய்ப்பு பெற்றிருந்ததாலும் மாணவர்களுடன் சேர கட்டாயப்படுத்தப் படவில்லை; விரும்பினால் போகலாம், அவ்வளவே. எப்போதுமே நட்பு ரீதியான பேச்சுகளைத் தாண்டி வரையறை கடந்ததில்லை. இருப்பினும், ஒருவரோடொருவர் பேசுவதிலிருந்த ஈர்ப்பும் குறைந்ததில்லை. சக தோழி இருக்கும்போதெல்லாம் அவரும் பேச்சில் இணைந்துகொண்டது கூடுதல் சுவாரசியம்தான். நகர்ந்துகொண்டிருந்த நாட்கள், நழுவத் துவங்கின. மளமளவென கழிந்த மாதங்கள் ஒருமையைத் தொட, வாரமும் அப்படியே இறுதி என்னும் இலக்கில் வந்து நின்று, எங்களை இறுத்தியது. இறுதி நிகழ்வைக் குறிக்கும் பொருட்டு, இரு தோழிகளாலும் சிற்றுண்டிச் சாலை அழைக்கப்பட்டு வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டேன். ஆனால், எப்போதுமே அங்கு தரப்பட்ட உதவித் தொகையிலேயே திட்டமிட்டு செலவு செய்யும் என்னால், இவர்கள் அளவிற்கு செலவழிக்க எப்படி பணத்தை திரட்ட முடியும்? என் வரையறைக்குட்பட்டத் தொகையை நண்பர்களிடம் கடனாகப் பெற்றுக்கொண்டு, ஆசிரியரிடம் சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினோம். போகும் வழியிலேயே திட்டமிட்டுக் கொண்டேன். அவர்கள் தருவிக்கும் வகைகளை முடிந்தவரை ஏதாவது சாக்கு சொல்லி குறைத்து, என்னிடமிருக்கும் தொகைக்குள்ளாக வைத்துக் கொள்வது எனவும், காரணம் கேட்டால், நண்பர்களோடு ஏற்கெனவே இம்மாதிரி வந்து போய் விட்டதாகக் கதை விடுவது எனவும் முடிவு. சில சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானத்துடன் நிறைந்தது வயிறு; பிரியப் போவதை எண்ணி கனத்தது மனது. ஒரே ஒரு நம்பிக்கை என்னவெனில், நான் மீண்டும் எண்ணெய் நிலவாயு மகளிர் மனமகிழ் மன்றம் மூலம் டேராடூன் அழைக்கப்படலாம் என்பதும், அப்படி வர நேர்ந்தால் கட்டாயம் இவர்களைச் சந்திக்க முடியும் என்பதுமே. இதற்கிடையில், ஒருவருக்கொருவர் விலாசங்களும், குரல்கள் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இறுதி நாளைத் தொட்டது என் பயிற்சிக் காலம். 18 மாதங்கள் ஓடி, ஆடி, விளையாடி, முரண்பட்டு, ஒருமித்து, சண்டையிட்டு, நட்பு பாராட்டி என எத்தனையோ உணர்வுகளைத் தந்த நண்பர்களைப் பிரியவும், இவர்களை உள்ளடக்கிய வளாகத்தை விட்டு வெளியேறவும் என வலிந்து வந்த காலம், மௌன அழுகையாய், இறுதி உணவின் போதும் சரி, இவர்கள் இருவரிடமும் கிளம்புவதை சொல்லிவிட்டு வந்தபோதும் சரி, எவருக்கும் தெரியாமல் சில கண்ணீர் துளிகளைத் துடைக்க வைத்தது. தமிழ்நாடு திரும்பி வந்துவிட்டேன். அடுத்து என்ன செய்வதென்பதில் எந்தத் தெளிவும் இல்லை. எனினும், எதுவும் கைகூடாதபோது சென்னையிலுள்ள புனித லூயி பார்வையற்றோர் இசைக்குழுவில் சேர்ந்து விடுவதற்கான வாய்ப்பை ஒரு நண்பர் மூலம் பெற்றிருந்தேன். என் குடும்பம் ஓரிரு திருமணங்களைக் கண்டிருந்ததால், முன் போல் என்னால் வெட்டியாக இருக்க முடியாது. இதற்கிடையே, அந்த இருவரிடமிருந்தும் கடிதங்கள் கிடைக்கப் பெற்றேன்; எங்கும் படித்துக் காட்ட கூடியவைதான். எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால், ஒலிநாடா அவர்களின் குரலை ஒலிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்தை வரையறுத்துக் கொண்டேன். அதற்குள் டேராடூனிலிருந்து அழைப்பு வந்தால் புறப்படுவது, இல்லையேல் சென்னை இசைக் குழுவிற்கு பயணப் படுவதென முடிவு. என் வரையறையின் கடைசிநாள் ஒரு வெள்ளிக்கிழமை. கடிதக்காரரின் வருகைக்காகக் காத்திருந்தேன். அவர் வராத நிலையில், அன்றிரவு சென்னை புறப்படுவதாக திட்டம். ஆனால், இசைக் குழுவிற்காக புறப்படவேண்டிய தேவை நேரவில்லை. அன்று காலை 11 மணிக்கு அழைப்புக் கடிதம் கிடைத்துவிட்டது. இப்போதும் சென்னைதான் புறப்பட்டேன்; டேராடூனுக்கு பயணச் சீட்டு பதிவதற்காக. கணிப்பொறி இல்லாத அந்தக் காலங்களில், எங்கிருந்து வண்டி கிளம்புகிறதோ அங்கிருந்துதான் பதிவு செய்ய முடியும். பயணப் பதிவு கிடைக்காததால், சென்னையிலிருந்து டெல்லி வரை 36 மணிநேரம் என் பெட்டியைக் கீழே வைத்து, அதன்மீது அமர்ந்து பயணம் செய்த முதல் பட்டறிவையும் அப்போதுதான் பெற்றேன். வேலை என்னும் வேட்கையும், அவர்களைச் சந்திக்கப் போகும் ஆவலும் இதெல்லாம் ஒரு பொருட்டில்லை என்னும் நிலையைத் தந்திருக்கலாம். வளாகம் மீண்டும் வரவேற்றது. கூடுதல் இயக்குனரைப் போய் பார்த்தேன். நான் வேலையை ஏற்கவேண்டிய இடத்தில் அலுவலர் ஒரு வாரம் இல்லை என்றும் அதனால், அதுவரை நான் போய் வகுப்பறையில் பயிற்சியைத் தொடரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டேன்; பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி! நேரடியாக வகுப்பிற்குப் போனேன். பாலில் விழுந்த பழம் நழுவி என் வாயிலும் விழுந்த மாதிரி, அந்த ஆசிரியரும் ஒரு வாரம் விடுமுறை என்றனர். எங்களின் மகிழ்ச்சிக்கு ஏது எல்லை? காதல் என்னும் ஒற்றைச் சொல் என்னைப் படுத்தும்போதெல்லாம், இவர்களை பொறுத்தவரை நட்பு மட்டுமே இயலும் என்றும், ஒருவேளை குடும்பங்களாக ஒருவரை ஒருவர் சந்திப்பது வேண்டுமானால் கைக்கூடலாம் என்று அடங்கிக் கிடந்த மனம், இந்த காலகட்டத்தில்தான் கட்டவிழ்ந்து விட்டதோ என்னவோ? அதிலும், ஒருவேளை முன்மொழிவு வருமானால், நான் இரண்டாவதாக குறிப்பிட்டிருந்தவரிடமிருந்தே வரலாம் எனக் கருதியதுண்டு. ஆனால், இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்த தேவன், எவரை எனக்காக எழுதி இருந்தாரோ, அவரையே எழுத வைத்ததில் வியப்பொன்றும் இல்லை. குறித்த காலத்தில் என் வேலை இடத்திற்கு அனுப்பப்பட்டு விட்டேன். வாரம் ஒருமுறை பயிற்சி நிலையம் வருவது வாடிக்கை. வரும்போதெல்லாம் நிகழ்ச்சிக் குறிப்பில் சந்திப்பும் இடம்பெறும். இருப்பினும், அடிக்கடி நிகழ்ந்தக் கடிதப் பரிமாற்றத்தை இப்போது நினைத்தாலும் எனக்கே வேடிக்கை. நான் வேலை செய்த இடத்தில், ஊழியர்களுக்கு வரும் கடிதங்கள் படிக்கப்பட்ட பிறகே உரியவர்களுக்குத் தரப்படும். ஆனால், எனக்கு வரும் கடிதம் பிரெயிலில் இருந்ததால், அந்த வசதியை அவர்களுக்குத் தரவில்லை. அவை, அலுவலர்களால் மேலும் கீழும் பார்க்கப்பட்டு, முன்னும் பின்னும் திருப்பப்பட்டு, பிரிக்கக்கூடப்படாமல் என்னிடமே தரப்பட்டுவிடும். இதை பார்வையுள்ள சக ஊழியர்கள் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள். பெரும்பாலும் கடிதங்கள் என் திருமதியிடமிருந்தே வரும். முதலில் நட்பிலேயே துவங்கியது. திடீரென ஒருநாள், ‘நீங்கள் அன்புள்ள என்று துவங்கி இருக்கிறீர்களே, இத்துவக்கம் இப்போதைக்கு மட்டுமா? இல்லை எப்போதைக்குமா?’ என்று கேட்டு, அவர்களது வீட்டில் அவர்களின் திருமணத்தின் நிலைப்பாடு மற்றும் என்னை மணக்க விரும்பும் அவரது சொந்த விருப்பத்தையும் வெளியிட்டிருந்தார். என் நண்பர்களிடம் வேடிக்கையாக ஒன்றைக் குறிப்பிடுவதுண்டு. ‘வேலை கிடைக்காதபோது, வேலை கிடைக்கவில்லை என்னும் ஒரே வருத்தம்தான். வேலை கிடைத்துவிட்டாலோ குடும்பம், திருமணம், அலுவலகம், பொருளாதாரம், கடன் போன்ற எவ்வளவோ கவலை வந்துவிடுகிறது’ என்று. அதே மாதிரிதான், பொதுவாக பேசிக் கொண்டிருந்த வரையில் பெரிதாக எதுவும் இல்லை. முன்மொழிவு என்று வந்துவிட்டப் பிறகு பொருத்திப் பார்த்தல், சீர் தூக்கல் என்னும் சிக்கலான கோணங்களை நோக்கி மனம் மருளுவது எதார்த்தவாதிகளுக்கு உரியதுதான். என் வீட்டிலிருந்து எந்த உதவியும் பெரிய அளவில் கிடைக்காது என்பதால்தான் கல்லூரிப் படிப்பையே நான் நினைக்கவில்லை. நிறுவனத்தில் எந்த உடைகள் கொடுக்கப்பட்டனவோ, அந்த உடைகளைத்தான் நிறுவனத்திற்குள் இருக்கும்போது, நிறம் மங்கியே போனாலும் சரி, வேறு வழி இல்லாமல் உடுத்துவேன். மொத்தத்தில், என் மொத்தத் தேவைகளுக்கும் இருந்த பொருளாதார அடிப்படை மிகமிகக் குறுகியது. அவர்களைப் பொறுத்தவரை, அந்தக் காலத்திலேயே அவர்கள் வீட்டிலிருந்து ரூ. 300 கூட பணவிடை மூலம் மாதம்தோறும் அனுப்பப்படும். அவர்கள் வகுப்பறை வரும்போதே அவர்கள் பயன்படுத்தும் அலங்காரப் பொருட்களின் வாசனை அவர்களது வருகையை அறிவித்துவிடும். கற்பனைச் சிறகு கட்டி மனம் பறந்தபோதெல்லாம், நான் அவர்களை அன்னாந்துதான் பார்த்திருக்கிறேன். எனில், நான் இப்போது செய்யவேண்டியது என்ன? எனக்கும் அவர்களுக்கும் இடையிலிருந்த வேறுபாடுகளின் பட்டியலைதான் எழுதினேன். நான் கருப்பு; அவர்கள் சிவப்பு. நான் பத்தாம் வகுப்பு; அவர்கள் பட்டதாரி. பொருளாதாரத்தில் என் நிலை மோசம்; அவர்கள் நிலை போதுமானதாக இருந்தது. நான் தென்னிந்தியன் என்பதால் சென்னை வாசத்தையே விரும்புவேன்; அவர்கள் வட இந்தியர் என்பதால் அவர்கள் இலக்கு டெல்லியே. இன்னும் நான் எழுதிய சிலவற்றை என் நினைவு தொலைத்துவிட்டது. விரைந்தது பதில். எல்லாம் நான் விரும்பிய வகையிலேயே இருந்தது; ஒன்றே ஒன்றைத் தவிர. ஆனால், அந்த விரும்பாத ஒன்று என்னை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அது வேரொன்றுமில்லை; எல்லாவற்றிற்கும் சாதகமாக எழுதியவர் சென்னை மட்டும் வரமுடியாது என்று எழுதி இருந்தார். என் மனமோ, அவர்களைவிட சென்னையை அதிகமாக கட்டிக்கொண்டு அழுதது. அன்றுதான் புரிந்தது, நானும் அவர்களை மிகவும் விரும்பி இருக்கிறேன் என்பது. ஏனென்றால், அவர்கள் எனக்கு கிடைக்கப் போவதில்லை என்று என் வரையில் முடிவு செய்ததும், வருத்தத்தின் உச்சமெதுவோ அங்கு மனம் ஏறி நின்றுகொண்டு கீழே இறங்க மறுத்துவிட்டது. சில உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் என்றுமே சொற்கள் முழுமையாக விளக்கியதில்லை. தனக்கு அந்நிலை வரும் வரை, எவருக்கும் அது முழுமையாக விளங்கியதுமில்லை. பக்கம்பக்கமாக எழுதித் தீர்த்தாலும், ‘அடடா!’ அல்லது ‘ஓஹோ!’ என்பதற்கு மேல் மிகப் போவதும் இல்லை. இருந்தாலும், எழுதவென கிளம்பிவிட்டப் பிறகு, இயன்றவரை எடுத்துச் சொல்வது எனது கட்டாயம் ஆகையால் இரண்டு நிகழ்வுகளை குறிப்பிட விரும்புகிறேன். என் நிலையைப் பார்த்து, நான் தங்கியிருந்த குடியிருப்பின் பக்கத்திலிருந்த காஞ்ச்சி என்ற பெண்மணி எனக்காகப் பேச பயிற்சி நிலையம் வந்தார். எங்கள் இருவருக்குமே தேடல் இருந்ததால், விட்டுவிட மனமில்லை. அதனால், தற்காலிக தீர்வு ஒன்று கிடைத்தது. அத்தீர்வு பின்னர் என் மனைவிக்கு விருப்பம் இல்லை எனினும் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. அதற்கும் முன்னால், கவலையை மறக்க மது உதவும் என்று நண்பர்களில் சிலர் கூற, அப்போதைக்கு மாணவர்களுடன் சகஜமாக பழகிய சுருக்கெழுத்து ஆசிரியரிடம் அதைக் கூறினேன். இன்றும் அவர் சொன்னது பசுமையாக நினைவில் இருக்கிறது. “கொஞ்ச நேரம் மறந்துவிடும் வாய்ப்பு இருக்கலாம்தான். ஆனால், அதற்குப் பிறகு மீண்டும் அக்கவலைக்கு நாம்தானே முகம் கொடுக்கப்போகிறோம்?” என்றார். அதுவரையில் நான் ருசித்ததுகூட இல்லை என்பதும், எனது 45 வயது வரை அதை ருசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்பதும் ஒருவேளை நான் அதற்கு அடிமைப்படாததற்கு அந்த நண்பரும் காரணமோ என்னும் நன்றி உணர்வை, இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். ஒலிநாடா பதிவுகள் மீண்டும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதில் இடையோடிக் கிடந்த என் சோகம், என் மனைவியால் திருமணத்திற்குப் பின் நையாண்டி செய்யப்பட்டதை உங்களைத் தவிர யாரிடம் சொல்ல முடியும்? என் கிறித்துவ நம்பிக்கையின்படி நான் இறைவனிடம் வேண்டிக்கொண்டேன். இதிலிருக்கும் நன்மை, தீமை பற்றி மனிதனாகிய எனக்குத் தெரியாது ஆகையால் அவரது விருப்பப்படி எது நிகழ வேண்டுமோ அதை நிகழ்த்தும்படி தனிமையில் வேண்டுவேன். எனக்கும் தீவிர விருப்பம் இருந்தது உண்மைதான். ஆனால், அதை நான் என் பொறுப்புகளின் அடிப்படையில் பொருத்திப் பார்த்து நிதானித்தேன். ஆனால், அவர்கள் தங்களது பொறுப்புகளை என்மீது முழுதும் சுமத்திவிடும் நம்பிக்கையில், நிறைய விட்டுக் கொடுத்திருக்கலாம். அது அவர்களைப் பொறுத்தவரை இழப்பு, பிரிவு, நிறைவின்மை போன்றவற்றை தந்திருக்கலாம். ஆனால், எனக்கு வாழ்க்கையில் நல்ல துணையென மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த சமுதாயத்திற்கு உதவும் குடும்பமாக எங்களை அடையாளப்படுத்தியதில் அவர்களது பொறுப்பு மிகமிகக் கூடுதல் என்றே கருதுகிறேன். காஞ்ச்சி என்னை மகிழ்ச்சியூட்டும் செய்தியுடன் திரும்பி வந்தார். சென்னையில் இருக்க முயற்சித்துப் பார்க்கலாம் என்றும், நடைமுறை சிக்கல் இருந்தால் மாற்று இடங்களைப் பற்றி யோசிப்பது கட்டாயம் எனவும் கருத்தொற்றுமை ஏற்பட்டது. ஆனால், நான் சென்னைக்கு மாற்றலாகி வந்தவுடன், வீடு போன்ற அசையாச் சொத்துகளில் இறைவன் எனக்கு கைமேல் பலன் தந்ததால், என் மனைவி பலமுறை விரும்பி வற்புறுத்தியும் சென்னையை விட்டு மாற்றலாகி வட இந்தியா போகவில்லை என்பது இன்றளவும் என் பேரில் என் மனைவிக்கு இருக்கும் நிறைவின்மைகளில் முதன்மையானது. சரி, கொஞ்சம் இவர்களை விடுத்து என் அம்மா பக்கம் திரும்புவோம். திருமணம் என்னும் சொல் என்னால் விரும்பப்பட்ட காலத்திலிருந்தே அது ஒரு பார்வையற்றவருடன்தான் என்பதில் எப்போதுமே எனக்கு மாறுபட்ட கருத்து இருந்ததில்லை. எதையும் பலமுறை யோசித்தே செயல்படும் இயல்புடைய எனக்கு, இதில் சரியான தெளிவு இருந்து வந்திருக்கிறது. என் நிலையில் இருக்கும் எந்தப் பெண்ணும் என்னை மணக்க விரும்பாதபோது, என்னை மணக்க விரும்பும் பெண் இல்லாமையை அல்லது இயலாமையைச் சரிசெய்துகொள்ளும் பொருட்டே அந்த முடிவிற்கு வருவதாகத் தோன்றியது. அதிலும், பாலியல் என்பது உடலையும் கடந்து, ஒரு பெண் பார்க்கும்போது பதிலுக்கு பார்க்கப்படும் ஆணின் பார்வையில்தான் நிறைவு என்பது குறிப்பிட்ட விழுக்காடு அடங்கியிருக்கிறது என்னும் உளவியல், என்னை என் கருத்தில் உறுதிபடச் செய்தது. ஆனால், என் அம்மாவின் விருப்பம் வேறு. அவர்களின் தமயன்வழிப் பெண்கள் இருந்ததால், அவர்களில் ஒருவரை எனக்குப் பேசி முடிக்க மிகவும் விரும்பினார்கள்; எல்லா சராசரி பெற்றோர்கள் மாதிரிதான். எனக்கு கனரா வங்கியில் வேலை கிடைத்தது, அவர்களின் ஆவலைக் கூட்டி இருக்கலாம். வேலையில் சேரும் முன், வீட்டிற்குப் போயிருந்தேன். என் அம்மா இதைப் பற்றி பேசும்போதெல்லாம், நான் வேலையில் சேர்ந்த பிறகு திரும்பி வருவதாகவும், வந்த பின் பேசலாம் என்றும் விடைபெற்றுக் கொண்டேன். ஆனால், எனக்கு வேலைக்கான உத்தரவை வங்கியிலிருந்து பெற்ற உடனேயே, என் மனைவிக்கு நான் என் உறுதிமொழியைத் தந்துவிட்டேன். அதன் பிறகே, என் தட்டச்சு ஆசிரியருக்கு தகவலைச் சொன்னேன். அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? இது அவருக்கு, அதாவது என் மனைவிக்குத் தெரியுமா என்றுதான் கேட்டார். அவரது வகுப்பில்தான் இதற்கான அடிப்படை அமைந்திருந்தாலும், அதை அவர் முற்றிலும் அறிந்திருக்கவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் எங்களது வரம்பை நாங்கள் கடந்ததில்லை. எங்களது உறவு மிகத் தாமதமாகவே பயிற்சி நிலையத்திற்கு தெரியவந்தது. இதனால்தான், இக்கட்டுரையைக் காதலர் தின சிறப்பிதழில் எழுதியிருக்கிறேன். காதலித்தவர்கள் திருமணம் செய்ய உதவிய வேலண்டைன் அவர்களது நினைவாகத்தான் காதலர் தினத்தைக் கடைப்பிடிக்க உலகம் துவங்கியது. ஆனால், பாலியலை முன்னிலைப்படுத்தும் வகையில் இன்றையக் கொண்டாட்டங்கள் இளைஞர்களால் வகைப்படுத்திக் கொள்ளப்படுவது வருத்தத்திலும் வருத்தம். நான் அடிக்கடி வலியுறுத்துவது, காதலும் பக்தியும் உயர்வான உறவுகள் மட்டுமல்ல; மறைவானதும்கூட. அது அடையாளப்படுத்தப்படும்போது போலியாகிவிடுகிறது. எனவே, பிறர் அறிய பச்சை குத்துவது, ஒருவரை அன்பு பாராட்டுவதாக விளம்பரப்படுத்துவது, பரிசுகளை முன்னிலைப்படுத்துவது போன்றவை வலுவான காதல் அடிப்படைகளாகமாட்டா. உண்மையில் காதலித்தவர்களுக்குத் தெரியும், அவர்களுக்கான நாளாக ஒரு நாளைக் குறிப்பிடுவது எவ்வளவு பொறுப்பற்றது என்பது. உருகி உருகி உருக்குலைந்து. அன்பால் பெருகி அதை நினைந்து, வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு, யுகமென எதையும் கடந்து நிற்கும் இதயத்திற்கு குறிப்பிட்ட நாள் என்பதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனமானது! அவர்கள் செலவு செய்யும் தொகைக்கு ஈடாகச் செலவு செய்ய விரும்பிய என் செயலும் சரி, நான் சேலை ஒன்றைத் தர விரும்பியபோது, திருமண வாக்குறுதியைத் தந்தாலொழிய பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று உறுதியாய் அவர் நின்றபோதும் சரி, காதலில் கொள்கைப் பிடிப்புகள் இருந்ததாகவே தோன்றும். சரியான வேலை கிடைக்காவிட்டால் என்னை மணக்க முடியாது என்று வெளிப்படையாக அவர் கூறியபோது, துவக்கத்தில் சலிப்புத் தட்டினாலும் அதிலிருந்த எதார்த்தத்தை என்னால் புறந்தள்ள முடியவில்லை. ‘கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா அவன்வாயிற் சொல்’ என்னும் ஔவையின் வாழ்வியலை எவர்தான் மறுக்க இயலும்? டெல்லியில் வேலை உத்தரவைப் பெற இருந்தபோது ஆக்ரா, மீரட், அலிகட் மற்றும் லக்னோ போன்ற நான்கு உ.பி.யின் நகரங்களில் ஒன்றில் தருவதாகக் கூறினர். லக்னோ தவிர ஏனைய நகரங்கள் டெல்லிக்கு பக்கத்தில் இருந்ததால், அவற்றில் ஒன்றிலேயே உத்தரவு தரப்பட்டால் நல்லது என நினைத்தேன். ஆனால், லக்னோவிற்குதான் அனுப்பப்பட்டேன். எனக்கு வருபவர் வேலையில் இருக்கவேண்டிய தேவை இல்லை என்பதை அவ்வப்போது நான் வலியுறுத்தி வந்ததால், வேலைக்கான ஓரிரு முயற்சிகளுடன் 1988 ஜனவரி மாதத்தில் அவரின் பயிற்சிக் காலமும் முடிவுக்கு வந்துவிட்டது. அம்முயற்சிகளும், அவர்தம் தந்தையின் விருப்பத்தை நிறைவு செய்யதான். பயிற்சியை முடித்துப் போனவர், கடைசி நேரத்தில் ஒரு அதிர்ச்சி தந்து போனார். எங்களுக்குள் இருந்த ஒரு பிணக்கைக் காரணம் காட்டி, முருகல் நிலையின் கடிதம் ஒன்றை என் அலுவலக விலாசத்திற்கு அனுப்பி இருந்தார். நிலை கொள்ளுமா எனக்கு? லக்னோவிலிருந்து டேராடூனுக்கு சுமார் 540 கி.மீ. இருக்கலாம். பயண முன் பதிவுக்காக முயற்சித்துப் பார்த்தேன். அன்றே போகவேண்டுமானால் வாய்ப்பில்லைதான். ஆனால், விடுவதாக இல்லை. டேராடூனுக்கு நேரடி வண்டி இருந்தாலும் அதில் தாமதமாகுமென நான் கருதியதால், அலுவலகம் முடிந்ததும் அடுத்த நாளுக்கு விடுமுறை பெற்றுக்கொண்டு, உடனடியாக தொடர்வண்டி நிலையம் சென்று, உடனடி தொடர்வண்டி எந்த வழியில் எனப் பார்த்தேன். 6 மணி வாக்கில் கிளம்பிய பஞ்சாப் மெயில் கிடைத்தது. அதில் ஏதோ ஒரு பெட்டியில் கீழே அமர்ந்து, சாரங்பூர் வழியாக லுக்சர் என்னும் சந்திப்பு வரை போனேன். அங்கிருந்து இன்னொரு வண்டி டேராடூனுக்கு இருப்பதாக அறிந்தேன்; லுக்சரில் இறங்கிக் கொண்டேன். இரவு மணி 3 இருக்கலாம். ஜனவரி மாதமாகையால் கடுங்குளிர். அதனால், ஆள் நடமாட்டம் மிகக் குறைவு. வரவேண்டிய வண்டியின் நேரம் 5 மணிதான். நிலையத்திலிருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். நான் உடுத்தியிருந்த குளிருக்கான உடைகள், அன்றைய குளிருக்குப் போதுமானதாக இல்லை. அதிலும், அலுவலகத்திலிருந்து நேரடியாகக் கிளம்பியதால், முன்னேற்பாடு என்பதெல்லாம் எதுவுமில்லை. டேராடூன் நோக்கி போகப்போக குளிரும் கடுமையாகிவிடும். இருக்கையில் அமர்ந்த என் உடல், உதறல் கண்டுவிட்டது. குளிரைச் சமாளிக்க முடியவில்லை; தனிமை சலிப்பூட்டியது; உறக்கமும் இல்லை. கிளம்பும் பரபரப்பில் சாப்பிடவும் இல்லையாகையால், உடலும் சோர்வு கண்டுவிட்டது. எனக்குள் இருந்த எதிர்மறை, என்னைக் கேள்வி கேட்டது. ‘அட முட்டாளே! எந்த இலக்குக்காக இவ்வளவு போராட்டங்கள்?’ என் எதிர்மறைக்குத் தெரியுமா, ‘கண்ணியர்க் கடைக் கண்ணை காட்டிவிட்டால், மண்ணில் மா மலையும் ஓர் கடுகாம், காளையர்க்கு’ என்பது? ஒரு வழியாக, அவரைப் போய் பார்த்தேன். “நீங்கள் நேரில் வந்து என்னை பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. அக்கடிதம் என் குழம்பிய நிலையில் எழுதப்பட்ட ஒன்று. வேண்டுமானால், அங்கிருந்தே இன்னொரு கடிதத்தை நீங்கள் அனுப்பியிருக்கலாம். உங்களை யார் இப்படிக் குழம்பச் சொன்னது?” என்றாரே பார்க்கனும்! ஆனால் ஒன்று, பின்னர் பயணங்கள் சுகமோ சுகம். வேலையில் இல்லாதபோது பலமுறை பயணச்சீட்டு இல்லாமல் பயணித்திருக்கும் நான், அங்கிருந்து திரும்பும்போதுதான் முதல்முறையாக லக்னோ வரை இரண்டாம் குளிர்சாதனப் பெட்டியில் பயணிக்கும் பட்டறிவைப் பெற்றேன். முதல் மாத ஊதியம் வாங்கியிருந்ததால், முதல் வகுப்பில் முயற்சிக்கப் போனேன். முதல் வகுப்பில் காத்திருப்போர் பட்டியல் என்றும், இன்னும் ரூ. 8 கூடுதலாகக் கொடுத்தால் இரண்டாம் குளிர்சாதன வகுப்பில் பயணிக்கலாம் என்றும் பதிவாளர் கூறினார். இப்போது எட்டு ரூபாய் எல்லாம் ஒரு பொருட்டில்லை. மனமார்ந்த நன்றிகளுடன் பயணச் சீட்டை பெற்றுக்கொண்டேன். எனக்காக எழுதப்பட்டிருந்த கடிதமும், நான் நேரடியாக போகவே, கையிலேயே தரப்பட்டுவிட்டது. பிறகென்ன? என் பயணத்தின்போதே பலமுறை என் நெஞ்சில் இளைப்பாறிய அக்கடிதம், என் விரல்களாலும் வருடப்பட்டதால், இனிய பயணத்திற்கும் வழிவகுத்தது. அடுத்த பயணம், அவரது வீட்டிற்குத்தான் என்பதை நான் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை. மார்ச் மாதத்தில், பெற்றோரைப் பார்க்க வீட்டிற்கு வரும்படி அவரிடமிருந்து அழைப்பு வந்தது. மீண்டும் டேராடூன் போய், என் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, டெல்லி வழியாக, முதல்முறையாக ஹரியானாவில் போய் அவர்கள் சொல்லிய நிறுத்தத்தில் இறங்கி, அவர்களது சிற்றூருக்கு வாகனம் எதுவும் கிடைக்காததால், எவ்வளவு தொலைவு என்பது தெரியாமலேயே நடக்கத் துவங்கிவிட்டோம். கிட்டத்தட்ட 7 கி.மீ. நடக்க வேண்டியிருந்தது என்பது பின்னர்தான் தெரிந்தது. அப்போதுதான் எண்ணிப் பார்த்தேன் இயற்கையின் விளையாட்டை. எங்கு பிறந்தேன்? எங்கெல்லாம் வளர்ந்தேன்? இப்போது வாழ்க்கைத் துணைக்காக எங்கு நடந்துகொண்டிருக்கிறேன்? இயற்கை, எவரை எவருடன் சேர்க்கும் என்பது எவருக்கு அத்துப்படி? திருமணம் என்னும் திருப்பம் என்னை இங்கு கொண்டுவந்து நடக்க வைக்குமென வேடிக்கைக்காகக்கூட எண்ணியதுண்டா? என் ஊர் எங்கே, இவர் ஊர் எங்கே? இருவரையும் இணைக்கவிருக்கும் இறைவன்தான் எங்கே? ‘பூஜியத்தை உள்ளே வைத்து, ராஜியத்தை ஆண்டுகொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்துகொண்டால், அவன்தான் இறைவன்’ என்னும் கண்ணதாசனின் வரிகள் எனக்குள் நினைவாய் முணுமுணுத்தன. என் மனைவியின் தந்தைக்கு என்னைப் பார்த்ததில் வருத்தமோ வருத்தம். எனக்குப் பெண் தர அவருக்கு முற்றிலும் விருப்பம் இல்லை. அதை என்னிடம் வெளிப்படுத்தவில்லையே தவிர, தன் பெண்ணிடம் முடிந்தவரை அதற்கான காரணங்களை விளக்கிப் பார்த்தார். காரணமா? நிறம், தோற்றம், அழகு, கவர்ச்சி போன்ற எந்த உடலியல் ஈர்ப்பும் அவர் வரையில் என்னிடம் இல்லாததும், நான் தொலைவிற்குச் சொந்தக்காரன் என்பதும்தான். ஆனால், ‘வயது வந்து வலையை விரிக்கும், மாட்டிக்கொண்டு நீ ரசி’ என்னும் கவி வரி அவர் பெண்ணுக்குப் பொருந்தி வர, இதையெல்லாம் அவர் ஏற்பதாக இல்லை என்பதோடு, என்னை மணக்கவே உறுதி காட்டியதால், வேறு வழி இல்லாமல் விருப்பமின்றியே ஏற்பாடுகள் துவங்கின. ஏப்ரல் 7, 1988. இக்கட்டுரையை எழுதுவதற்கான அடிப்படையை உருவாக்கிய தீர்மானத் தேதியாக முடிவு செய்யப்பட்டு, என் மனைவியால் கடிதம் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டது. அடடா! என் அம்மா, அப்பா இல்லை; அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இல்லை; என் ஊர் மக்கள் இல்லை; வேலையில் சேர்ந்து 4 மாதங்களே முடிந்திருந்ததால், அலுவலகத்திலிருந்தும் யாரையும் அழைக்கப்போவதுமில்லை. ஏப்ரல் 6-ஆம் நாள் அலுவலகத்தில் வேலை செய்தேன். ஒரே ஒருநாள் விடுப்பு பெற்றுக்கொண்டு, சிற்றுண்டி விடுதி நடத்திவந்த நண்பர் ஒருவருடன் இரவு டெல்லிக்குப் புறப்பட்டேன். கையில் இருந்ததெல்லாம் ஒரு ஆயிரம் ரூபாய்தான். சேலை மற்றும் சில பொருட்களை நண்பரின் அம்மாவின் அறிவுரைப்படி வாங்கிக்கொண்டேன். தொடர்வண்டியில் முன்பதிவு செய்திருந்தாலும், பெட்டியைக் கண்டுபிடிக்க முடியாமல், இரவு முழுதும் பொதுப் பெட்டியில் அமர்ந்து டெல்லிக்குப் பயணம் செய்தோம். டேராடூனிலிருந்து வந்த சில நண்பர்கள் டெல்லியில் இணைந்துகொள்ள, ஹரியானா போய் சேர்ந்தோம். முதலில் என்னுடன் வந்திருந்த இப்ராஹிம் மூசா, பாண்டியன், கருப்பையா, ஸ்ரீதர், மனோகரன், அப்போதைக்கு சுருக்கெழுத்து ஆசிரியராக அங்கு இருந்த திரு. கோபாலகிருஷ்ணன் மற்றும் பெயர் நினைவிற்கு வராத இன்னும் ஒருவரென மொத்தம் 7 பேர்தான் என் திருமண நாளன்று என் உறவுகளாய் வந்த வரவுகள். மாலை 3 மணிக்கு திருமணம் முடிந்தது! திருமணமென்றால் எப்படி என்றா கேட்கிறீர்கள்? 5 ரூபாய் புத்தம் புதிய தாள்கள் மாலையாக தொடுக்கப்பட்டு, என் மனைவியால் என் கழுத்தில் அணிவிக்கப்பட்டது, அவ்வளவுதான். சரி, நமக்கு அதெல்லாமா முக்கியம்? உடனே உணவு, பின்பு புறப்பாடு. காலையில், நிறுத்தத்திலிருந்து என் மனைவியின் சிற்றூருக்கு போகும்போது எங்களை கொண்டுபோன ஊர்திக்காரரிடமே மாலை 4 மணிக்கு வரும்படி சொல்லியிருந்தோம். சரியாக 4 மணிக்கு அவரும் வந்துவிட, என் மனைவியை அழைத்துக்கொண்டு, தரப்பட்ட வீட்டுப் பயன்பாட்டு பொருட்களுடன் டெல்லி வந்து, நண்பர்களை டேராடூனுக்கு வழி அனுப்பிவிட்டு, லக்னோ கிளம்பினோம். ஏன் முன்பதிவு செய்யத் தோன்றவில்லை என்று தெரியவில்லை. மீண்டும் இரவு முழுதும் பயணம். 8-ஆம் தேதி காலையில் லக்னோ வந்து, உடன் வந்த நண்பரின் வீட்டில் மனைவியை விட்டுவிட்டு, அலுவலகம் சென்றுவிட்டேன். யாருக்கும் எனக்குத் திருமணம் நடந்ததே தெரியாது. அப்போது என்னுடன் மேலாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த ஒரு தமிழருக்கு மட்டும் தெரியும். அவர்தான், அன்று மாலை மூன்றரை மணிக்கு, கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்தார். நண்பரின் வீட்டிலிருந்த மனைவியை அழைத்துக்கொண்டு, நான் குடியிருந்த வீட்டிற்குப் போனேன். அன்று இரவு தூங்கி இருக்க முடியுமா? எனவே, தொடர்ந்து மூன்று இரவுகள் தூங்கா இரவுகளாகக் கழிந்த முதல் அனுபவமும் அப்போதுதான். இறைவன் திருவருளால், எல்லாம் எனக்கு தாமதமின்றிக் கிட்டியதாக உணர்கிறேன். எனக்குத் திருமணமானபோது, வயது 24 கூட முடியவில்லை. என் குழந்தை என் கைகளில் தவழ்ந்தபோது, எனக்கு வயது 25 கூட இல்லை! 30 வயது முடிந்தபோது, என் சொந்த வீட்டிற்கு குடிவந்துவிட்டேன். எப்போதாவது நினைக்கும்போது நிறைவு தரும் நிகழ்வுகளாக இவைகளெல்லாம் என்னை மகிழ்வித்தாலும், திருமணத்தை மட்டும் என் அம்மாவிற்கும் என் வீட்டாருக்கும் தெரியாமல் செய்யவேண்டிய கட்டாயம், நான் பார்வையுள்ள பெண்ணைதான் மணக்க வேண்டும் என்னும் அவர்களது கட்டாயம்தான். என் மனைவி கருத்தரித்த ஐந்தாம் மாதத்தில்தான் என் அம்மாவிற்குக் கடிதம் எழுதி, என் மனைவியின் புகைப்படத்தை இணைத்து அனுப்பினேன். எதிர்பார்த்தபடியே ஏமாற்றம், இயலாமை, சலிப்பு அனைத்தையும் தாங்கி வந்தது பதில். என் இரண்டாவது அண்ணனுக்கு முன்பே நான் திருமணம் செய்துகொண்டேன் என்பதால், அவரது திருமணத்திற்கு நான் போகவில்லை. இரு வீட்டாரும் எங்கள் திருமணத்தை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை என்பதால், எங்கள் குழந்தை பிறப்பின்போது எங்கள் சுமைகளை நாங்களே சுமக்க நேர்ந்தது. என் சொந்த முடிவுகளில், ஆய்ந்து முடிவெடுத்த பின் எப்போதும் பின்வாங்கியதில்லை. எனவே, காலத்திற்காக காத்திருந்தேன். முதலில் என் மனைவியின் வீட்டாரிடமிருந்து அழைப்பைப் பெற்றோம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து என் வீட்டிலிருந்தும் அழைப்பின் கடிதம் கிடைக்கப் பெற்றோம். மெல்ல மெல்ல முருகல் தளர்ந்து, மெருகேறத் துவங்கிய உறவுகளின் உருக்கத்தில் கரையத் துவங்கின மனங்கள். அம்மாவையும் மனைவியையும் ஒருசேர வைத்து சமாளிக்கும்போது ஏற்படும் சிக்கல்களை மொழி தெரியாததால், என்னை சார வேண்டியதாயிற்று. எனவே, அது என் மொழிபெயர்ப்புக்குட்பட்டது. அதனால், என் வசதிக்கேற்ப மாற்றிச் சொல்லி பல நேரங்களில் பிணக்குகளை தவிர்க்கும் வசதியை, என் மனைவி தமிழ் கற்கும்வரை பெற்றிருந்தேன். எது எப்படியோ, எங்கள் குடும்பம் பல நிலைகளில் பார்வையற்ற இணைகளைத் தேடும் பார்வையற்றவர்களின் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கும் குடும்பமாக பலருக்கு திகழ்ந்திருக்கிறது. யாருக்காவது குழப்பம் இருந்தால், அவர்களது பெற்றோரை எங்கள் வீட்டிற்கு அழைத்து, எங்களோடு ஒருநாள் இருக்கச் சொல்லி, எங்களது நடைமுறைகளைக் கவனிக்க வைத்திருக்கிறோம். அப்படி பார்த்து போய், ஒரு ஐந்தாறு திருமணங்கள் பார்வையற்றவர்களுக்கிடையே நடைபெற்றிருப்பது எங்களின் குடும்ப வாழ்க்கையின் வெற்றியாகவே கருதுகிறோம். கலப்புத் திருமணம் புரிபவர்கள், ஒருவருக்கொருவர் அடுத்தவருடைய நடைமுறை, கலாச்சாரம் போன்றவற்றை மதிப்பதென்பது கட்டாயத்திலும் கட்டாயம். என் மனைவியின் வீட்டிற்குப் போகும்போது, முதலில் பெண் வாங்கி வரும் எதையும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சாப்பிட மாட்டார்கள். இதை, ஒரு கௌரவக் குறைச்சலாக எண்ணி நானும் பலமுறை உள்ளுக்குள் முருகி இருக்கிறேன். ஆனால், அது எனக்கு மட்டுமில்லை; எந்த மருமகனுக்கும் பொருந்தும் என்னும்போது நாளடைவில் பழகிக்கொண்டேன். அடுத்தது, வீட்டிற்குள் நுழைந்ததும், மனைவியையும் கணவனையும் வெவ்வேறு அறைகளுக்கு பிரித்துவிடுவார்கள். நமது சமூகத்தில், உணவு பரிமாறுவது போன்றவற்றை பெண் வீட்டிற்குப் போகும்போது, மனைவிக்குதான் கணவனின் விருப்பு வெறுப்புகள் தெரியும் என்பதால், மனைவியை அனுப்புவார்கள். ஆனால், அங்கு அதெல்லாம் கிடையாது. வீட்டிலுள்ள வேறு யாராவதுதான் உணவு கொண்டுவந்து தருவார்கள். பெரும்பாலும் என் மனைவியின் வீட்டிற்குப் போகும்போது, மீண்டும் அவர்களை பார்க்க முடிவது திரும்பி வரும்போது ஏறும் பேருந்தில்தான் இருக்கும். கால மாற்றத்தால் இவையெல்லாம் கொஞ்சம் இப்போது மாறி இருந்தாலும், துவக்க நிலையில் இவை எல்லாம் வியப்பையும் சலிப்பையும் தந்தது உண்மைதான். நானும் என் மனைவியும் உணவு, கலாச்சாரம், நடைமுறை, சமயம், பழக்கவழக்கம், உடைகள், வாழ்க்கை முறை என அனைத்திலும் திருமணத்திற்கு முன் மாறுபட்டிருந்தவர்கள்; அதற்கு பின் ஒருவரோடொருவர் அனுசரித்துக் கொண்டவர்கள். மாற முடியாத இடங்களில், அடுத்தவர் உணர்வுகளை குறைத்து மதித்ததில்லை. இப்போதும் எங்கள் வீட்டிற்கு வருபவர்கள், தென் வட இந்திய உணவுகளைக் கேட்டு உண்ணுவதுமுண்டு. விட்டுக் கொடுத்தல் மற்றும் அனுசரித்தலைப் பொறுத்தவரை, நான் என் மனைவிக்கே மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மொழி கூடத் தெரியாமல், என்னோடு இணைந்து, இன்றளவும் எனது தேவைகளை உள்வாங்கி, எனக்காகவும், பிள்ளைக்காகவும், தன்னைக் கரைத்துக்கொண்டவர். சரி, நீங்கள் காதல் திருமணங்களை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால், காதலில் பல வகை உண்டு. அவற்றில் இரண்டை முக்கியமாக நான் கருதுகிறேன். ஒன்று, உணர்வுவயப்பட்டது; இன்னொன்று, உணர்ச்சிவயப்பட்டது. இதில், முதலாமதில் பெரும்பாலும் வெற்றி என்பது சாத்தியம்தான். ஆனால், இரண்டாமதில் வெற்றி என்பது எப்போதும் கேள்விக்குறியே. காதலிக்கும்போது, விட்டுக் கொடுத்தல் இரு நிலைகளிலும் அபாரமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு, உரிமை நிலைநாட்டல் அபாரமாக இருக்கும். பல குடும்பங்களில், தோல்வியின் துவக்கப்படி இதில்தான் துவங்கும். சரியான துவக்கமிருந்தால், முடிவும் சரியாகவே இருக்கும். திருமணம் என்பது ஆடுகளம் அல்ல; முடிந்தவரை விளையாடி, முடியாதபோது வெளியேற. அதிலும், அரசாங்க ஊழியர்களுக்கு அதில் பொறுப்புகள் இன்னும் அதிகம்தான். எனவே, காதலிப்பது ஒரு அருமையான அனுபவம். அது நமது குடும்பமாகும்போது, வாழ்க்கையின் வெற்றி. அவ்வெற்றி அடுத்த தலைமுறைக்கு பாடமாகும்போது, அதுவே சமூகத்தின் வரலாறு. நீங்கள் வரலாறாக விரும்பினால், காதலிக்கும்போது உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் தெரிவியுங்கள். எவையெல்லாம் உங்களால் முடியுமோ அதை மகிழ்ச்சியோடு அறிவியுங்கள்; எவை எல்லாம் முடியாதோ, அவற்றை வருத்தத்தோடு பதிவு செய்துவிடுங்கள். முடியும் அல்லது முடியாது என்னும் இடைவெளியை உணர்ந்து, முடிவெடுக்கும் முழு உரிமையை உங்கள் இணைக்கு உருவாக்கித் தந்தால், பிணக்குகள் பெருமளவு பிற்காலங்களில் குறையும். உணர்ச்சியை முன்னிலைப்படுத்தாமல், இளைஞர்கள் நிதானித்து காதலில் முடிவெடுத்தால், அல்லது நல்ல நபரை தெரிந்துகொண்டால், பெரும்பாலும் பெற்றொர்கள் பிள்ளைகளின் விருப்பங்களை மறுக்கமாட்டார்கள். காதலிப்பவர்களிடம் பேசிப் பாருங்கள், குறைகளைச் சுட்டும்போது, அதெல்லாம் நாங்கள் திருமணத்திற்கு பின் சரிசெய்து கொள்வோம் என்பார்கள். குறைகளைப் பழகிக்கொள்வோம் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, எப்படி உங்களால் சரிசெய்ய முடியும்? அவராக மாறாத வரை, எவரையும் எவராலும் மாற்ற முடியாது. ‘வாழுகின்ற மக்களுக்கு, வாழ்ந்தவர்கள் பாடமடி’ என்ற கவிஞனின் வரி, நம் வரையிலும் வெற்றிபெற, வாழ்வாங்கு வாழ்த்தி விடைபெற்றுக் கொள்கிறேன். (நன்றி: இணையத் தென்றல் மின்மடல் குழு) குறிப்பு: ஒன்றின் வெற்றி இன்னொன்றின் தொடர்ச்சியில் இருக்குமானால், காதலின் வெற்றி குடும்பத்தில் இருந்தாக வேண்டும்! 30 ஆண்டு குடும்ப வாழ்க்கையின் வெற்றியின் மகிழ்ச்சியில், நமது பார்வையற்ற நண்பர்களின் குடும்ப அமைப்புகள், சிக்கல்கள், சுவாரசியங்கள் ஆகியவை நிறைந்த தொடர் ஒன்றை அடுத்த மாதத்திலிருந்து எழுதவிருக்கிறேன். படியுங்கள்; கருத்துகளைப் பகிருங்கள். -- கட்டுரையாளர் சென்னை கனரா வங்கியில் பணியாற்றிவருகிறார். தொடர்புக்கு: [email protected] ![]() தமிழ் சினிமா தோன்றிய நாளில் இருந்தே, உடல் ஊனமுற்றவர்கள் கதாநாயகனாக தோன்றும் கதைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கதாநாயகன் என்பவன் வெள்ளைத்தோல் கொண்ட, அதிபராக்கிரமசாலியாக, நன்கு ஆடக்கூடிய, சண்டையிடக்கூடிய பிம்பமாக பெரும்பாலும் தோன்றினாலும்கூட, உடல் ஊனமுள்ள கதாபாத்திரம் படத்தின் கதாநாயகனாக இல்லாமல், கதைநாயகனாகவே தமிழ் சினிமாவில் பாவிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில் எந்தப் படத்திலும் நடித்ததில்லை. ஆனால் நடிகர் திலகமாகவும், கதைக்கு ஏற்ற நடிப்பை வழங்குபவர் என்றும் போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்கள் தொடர்ந்து பல படங்களில் உடல் ஊனமுற்றவர் கதாபாத்திரத்தை மிகத் திறம்பட கையாண்டிருக்கிறார். ‘பாகப்பிரிவினை’ படத்தில் உடல் ஊனமுற்றவராக நடித்திருப்பார் சிவாஜி. அதேபோல், ‘பாசமலர்’ படத்தில் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் இறுதியில் பார்வை பறிபோனவராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பார்வையற்றவராக நடிப்பது என்பது எளிதான விஷயமில்லை. ஏனெனில், பார்வையற்றவராக நடிக்கும்பொழுது அருகில் இருக்கும் எந்த பொருளையும் பார்க்கக் கூடாது. பார்வை ஒரே பக்கம் நிலைத்திருக்கவேண்டும் போன்ற பல சிக்கல்கள் உள்ளன. எந்த ஒரு படமும் பார்வையற்று இருப்பதன் பல்வேறு படிநிலைகளைப் பற்றி விரிவாக பேசவில்லை என்றாலும்கூட, அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்வைக் குறைபாடுகளின் பல்வேறு தன்மைகள் பற்றி தமிழ் சினிமாவில் காண்பித்துக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள். சிவாஜி முக்கிய கதாபாத்திரத்தில் பார்வையற்றவராக நடித்ததற்குப் பிறகு, பல கதாநாயகிகள் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை உணரலாம். ‘குமுதம்’ திரைப்படத்தில் சவுகார் ஜானகி பார்வையற்றவராக சிறப்பாக நடித்திருப்பார், இயக்குனர் மகேந்திரனின் ‘கை கொடுக்கும் கை’ படத்தில் ரேவதி அவர்கள் பார்வையற்றவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த். அவரின் மனைவி கதாபாத்திரத்தில் ரேவதி வருவார். ரஜினி போன்ற மிகப்பெரிய கதாநாயகன் ஒருவரின் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் பார்வையற்றவராக வருவது அந்த கதாபாத்திரத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கும். அது இப்படத்தில் செவ்வனே நிகழ்ந்தது. மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் ‘மேஜர் சந்திரகாந்த்’ என்கிற படத்தில் ஒரு பார்வையற்ற, கம்பீரமான, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். அவரது உடல்மொழி இப்போது பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும். இயக்குனர் கே. பாலச்சந்தரின் கற்பனையில் உருவான இந்த படம், முதலில் மேடை நாடகமாக வெற்றிகரமாக பலமுறை நடத்தப்பட்டு, பின்னர் திரைப்படமானது. ஒரு ஆங்கிலப் படத்தில் வரும் பார்வையற்ற ஒருவரின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போக, அதன் பாதிப்பில் இயக்குனர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இன்றளவும் மிகவும் முக்கியமான ஒரு படம் அது. சிவாஜிக்குப் பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை நாடிச் சென்ற திரு. கமல்ஹாசன், அவரின் நூறாவது படமான ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் பார்வையற்றவராக தோன்றியது குறிப்பிடத்தக்கது. பார்வையற்றவர் என்பதற்காக கருணை வேண்டி நிற்பவராக அல்லாமல், அவர்களும் இயல்பான மனிதர்களே என்னும் ஒரு விஷயத்தை ஆழமாக பதிக்க முயன்று அதில் வெற்றியும் கண்டிருந்தார் கமல். மேலும், ‘அந்தி மழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ என்கிற கவித்துவமான வரிகளை அந்தப் படத்தில் வைத்து, ஒரு இலக்கிய விவாதத்தையே உருவாக்கியிருப்பார். காரணம், நாயகனுக்கு கண்கள் கிடையாது. அவன் ஒவ்வொரு துளியிலும் அவள் முகத்தை காண்பது என்பது என்னவொரு உயர்தரச் சிந்தனை! அந்த வகையில் கமல் செய்தது மிகப்பெரிய புரட்சி என்றே சொல்லலாம். ‘இரவு சூரியன்’ என்கிற படத்தில் நடிகர் முரளி பார்வையற்ற நாயகனாக வருவார். இந்தப் படத்தின் சிறப்பம்சம், இது ஒரு ஆக்ஷன் படம் என்பதே. பார்வையற்றுப் போனாலும், கதாநாயகன் தன் எதிரிகளை பழிவாங்கும் கதை. பார்வைக் குறைபாடு என்பது ஒரு குறையாக இருந்தாலும், அவர்களின் மற்ற புலன்களின் கூர்மை அவர்களை பல அரிய செயல்களை செய்ய வைக்கும் என்பதை பல காட்சிகளின்மூலம் இதில் சொல்லியிருப்பார்கள். அதே போல், சமீபத்தில் வெளிவந்த ‘தாண்டவம்’ படத்தில் நடிகர் விக்ரம் பார்வையற்றவராக இருந்தாலும், தன் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கியும், துரோகியான தன் நண்பனை அழிக்கவும் செய்வார். மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படங்கள் தோல்வியடைந்தது வருத்தமே. ஏனெனில் முரளி, விக்ரம் இருவருமே நல்ல நடிப்பை வழங்கி இருப்பார்கள். ஆனால், விக்ரம் அவர்கள் பார்வையற்றவராக நடித்து பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ஒன்று உண்டு; அது ‘காசி’. இயக்குனர் வினயன் மலையாளத்தில் கலாபவன் மணி அவர்களை வைத்து எடுத்த ‘வசந்தியும், லக்ஷ்மியும் பின்னே ஞானும்’ என்கிற படத்தின் மறு உருவாக்கமே இந்தப் படம். மலையாளத்தில் கலாபவன் மணி மிகத் திறமையாக இந்த பாத்திரத்தை கையாண்டிருப்பார். உண்மையிலேயே பார்வையற்ற ஒருவரைப்போல, கருவிழிகளை மேல்நோக்கி செலுத்திவிட்டு, வெறும் வெள்ளைப் படலத்தை மட்டும் வெளியில் காண்பித்திருப்பார். தமிழில் விக்ரமும் அதையே செய்தார். இப்படி தொடர்ந்து பலநாட்கள் படப்பிடிப்பில் செய்ததால், கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் தங்களின் இயல்பான பார்வைத்திறனை இழந்து, இருவரும் தவித்ததாக ஒரு காணொளியில் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நடிப்புக்காக இவ்வளவு சிரத்தை எடுத்த விக்ரம், கலாபவன் மணி இருவரும் மிகப்பெரிய பாராட்டுக்கு உரியவர்கள். சமீபத்தில் வெளிவந்த ‘குக்கூ’ திரைப்படம் இந்தப் பட்டியலில் மிக முக்கியமான ஒரு திரைப்படம். அதற்கு காரணம், இந்தப் படம் பதிவு செய்த அளவு வேறெந்த தமிழ் படமும் பார்வையற்றவர்கள் பற்றி பதிவு செய்யவில்லை என்பதே. இதற்கு முன், தமிழ் சினிமாவில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பவர்களாகவும், காமெடி நடிகர்கள் பார்வையற்றவராக நடித்து பணம் பறிப்பவர்கள் போலவும் மட்டுமே சித்தரிக்கப்பட்டனர். ஆனால், இந்தப் படம் உண்மையில் பெருநகரத்தில் வசிக்கும் பார்வையற்ற மனிதர்கள் சக மனிதர்களைப்போல எப்படிப்பட்ட இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை மிகவும் அட்டகாசமாக பதிவு செய்தது. அவர்களின் அன்றாடத் தொழில், அவர்களின் ரயில் பயணம், அவர்களின் நகைச்சுவை, அவர்களின் நட்பு, உறவு, காதல் உணர்வு என எல்லாமே மிகச்சிறப்பாக இப்படத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது. அவர்களின் பாடும் திறமை முதல் அவர்களின் கற்பித்தல் திறமை வரை படத்தில் போகிற போக்கில் இடம்பெறச் செய்தது இன்னும் சிறப்பு. அந்த வகையில் ‘குக்கூ’ படம், ‘மனிதர்களே! கண்கள் மட்டும் நாம் இயல்பான மனிதர்கள் என்பதை தீர்மானித்துவிடாது. மனிதத்தன்மையும், சக மனிதன் மீது வைக்கும் நேசமும் மட்டுமே யார் பூரணமான மனிதன் என்பதை தீர்மானிக்கும்’ என்று அழுத்தமாக சொல்லியிருப்பார் இயக்குனர் ராஜு முருகன். அதேபோல், அட்டகத்தி தினேஷ் மற்றும் நாயகி மாளவிகா இருவருமே நன்றாக நடித்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் இன்னும் பல படங்களில் நாம் பார்வையற்ற கதாபாத்திரங்களைக் கண்டிருந்தாலும்கூட மேற்கண்ட படங்களே என்னைப் பொறுத்தவரை தமிழில் மிக முக்கியமான படங்கள் என்று தோன்றுகிறது. இவற்றுள் உங்களுக்குப் பிடித்த படம் எது? -- கட்டுரையாளர் பிரபல முகநூல் பதிவர். சினிமா குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். தொடர்புக்கு: [email protected] ![]() திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. அது உண்மையென்றால், மணமாகக் காத்திருக்கும் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளின் திருமணங்கள் ஏன் இன்னும் நிச்சயிக்கப்படவில்லை என்பதன் மர்மம் புரியவில்லை. திருமணங்களில் மனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணம், கௌரவம் முதலியவை முதலிடத்தைப் பிடித்துவிட்டதும், பெண்களின் நிபந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் ஜி.எஸ்.டி. மாதிரி எகிறிவிட்டதும் காரணமாக இருக்கலாம். பல பார்வையுள்ள காளைகளே திருமணச் சந்தையில் விலைபோகாமல் காத்திருக்க, ஒரு பார்வையற்ற ஜல்லிக்கட்டுக் காளையை பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கரம் பிடித்திருக்கிறார் சக்தி பிருந்தா என்கிற பார்வையுள்ள பேராசிரியர்! பார்வையற்றோர் குறித்த போதிய விழிப்புணர்வில்லாத சமூகத்தின் கடுமையான எதிர்மறை விமர்சனங்களையும் கருத்துக்களையும் மிகுந்த மன வலிமையோடு எதிர்கொண்டு, திருமண வாழ்வில் இணைந்திருக்கும் பேராசிரியர் திரு. முருகானந்தன், பேராசிரியை திருமதி. சக்தி பிருந்தா இணையரை விரல்மொழியர் காதலர்தின சிறப்பிதழுக்காக சந்தித்தோம். பேராசிரியரே பேச்சைத் தொடங்கினார். “என்னோட பள்ளிப்படிப்பு முழுக்க கரூர்ல ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் பார்வையுள்ள மாணவர்களோடு சேர்ந்தே படிச்சேன். அதுக்கப்புறம் சென்னை மாநிலக் கல்லூரியில இளங்கலை ஆங்கிலம், அடுத்து முதுகலையிலிருந்து Ph.D. வரைக்கும் 7 வருஷம் புதுவையிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துல படிச்சேன். Ph.D. படிக்கும்போதுதான் கரூர்ல உள்ள ஒரு பேராசிரிய நண்பர் மூலமா எனக்கு பிருந்தாவோட அறிமுகம் கெடச்சதுங்க. 2011-ல இதே பல்கலைக்கழகத்துல கரூர்ல இருந்து முதுகலை ஆங்கிலத்துல ஜாயிண்ட் பண்ணின பிருந்தாவுக்கு, பாடம் தொடர்பான கைடன்ஸ் கொடுக்கச்சொல்லி என் நண்பன் கேட்டுக்கிட்டதால ஆரம்பிச்ச எங்க நட்பு, இப்ப வாழ்க்கை முழுக்க என்ன அவங்களும் அவங்கள நானும் கைட் பண்ணிக்கிற திருமண பந்தமா தொடருது. கைட் பண்றதுன்னா முழுசா கடைசிவரைக்கும் பண்ணனுமில்லையா?” சொல்லிக்கொண்டே சிரிக்கிறார் முருகானந்தன். சரி. உங்களுக்கிடையிலான காதலை யார் முதல்ல ப்ரோப்போஸ் பண்ணினது? “நான்தானுங்க” என்று உற்சாகமாக பதில் சொல்லத் தொடங்கிய முருகானந்தனை இடைமறித்து, “நான் சொல்றேன்” என்றார் பிருந்தா. “அந்த ஸ்வீட் மெமரீஸ நானே சொல்றேன். புதுவை பல்கலைக்கழகத்துல நான் முதுகலை படிச்ச ரெண்டு வருஷமும், எங்களுக்கிடையிலான உறவு நட்பு ரீதியிலதான் இருந்துச்சு. பாடம் தொடர்பான டிஸ்கஷன்ஸ், எங்களோட நட்பு வட்டத்தோட அறிமுகம், அப்பப்ப பல்கலைக்கழகத்துக்கு எதிர்ல இருக்கிற ஜூஸ் கடை வரைக்கும் ஒன்னா சேர்ந்து ஒரு அவுட்டிங், இவ்ளோதான். முதுகலை முடிச்சு, 2013-ல கோவையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில M.Phil. ஜாயிண்ட் பண்ணினதுக்கப்புறமா அவங்கள ரொம்ப மிஸ் பண்ணினேன். ‘காதலை யாரது முதலில் சொல்வது நீயா இல்லை நானா’ன்னு, நான் யாருக்கும் கேட்காதமாதிரி மனசுக்குள்ள பாடிக்கிட்டிருந்தப்ப, அவங்க கொஞ்சம் தைரியமா ஃபோன் பண்ணி என் காதுக்குள்ளேயே பாடிட்டாங்க. ஆனாலும் எங்க வீட்ட நெனச்சு எனக்குக் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு”. உயர் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த உங்களுக்கு, ஒரு பார்வையற்றவர திருமணம் செஞ்சுக்கிறதுல குடும்பத்திலிருந்தும் பொதுச்சமூகத்திடமிருந்தும் நிறைய சிக்கல்கள் இருந்திருக்குமே? “நிச்சயமா நிறைய சிக்கல்கள் இருந்துச்சு. எங்க லவ் பத்தி தெரிஞ்ச சிலர், ஒனக்கென்ன குறைச்சல்? நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமே? நல்லா யோசிச்சுதான் முடிவு பண்ணியிருக்கியா? இந்த மாதிரியெல்லாம் கேட்டாங்க. கடைசி வரைக்கும் கல்யாணத்துக்கு எங்க வீட்டுல ஒத்துக்கவே இல்ல. எங்களோட நண்பர்கள் முன்னிலையிலதான் எங்க கல்யாணமே நடந்துச்சு. ஆனா, கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துக்குள்ள என்னோட குடும்பம் எங்களப் புரிஞ்சு ஏத்துக்கிட்டாங்க. இப்போ எங்க குடும்ப விழாக்களுக்குப் போனா, எங்க அண்ணன்தான் முருகானந்தன் கூடவே இருக்காங்க”. பார்வையற்றவர்கள் அரசுப்பணி, கைநிறைய சம்பளம்னு நல்ல நிலையில இருந்தாலும், திருமணம்னு வரும்போது பார்வையுள்ளவர்களோடு ஒப்பிடும்போது நிறைய சிக்கல்கள் வருது. அதற்கான காரணங்களா நீங்க எதை நினைக்கறீங்க? “ஒரு பார்வையற்றவன் எந்த சாதியில பிறந்தாலும், திருமணம்னு வரும்போது அந்த சாதிக்குள்ளாகவே அவன் மிகவும் தாழ்த்தப்பட்டவனாகத்தான் பார்க்கப்படுகிறான். அது தவிர, பார்வையற்றவர்கள் பத்தின நிறைய தவறான புரிதல் இந்த பொதுச்சமூகத்துல இருக்கு. அதனால யாரும் பார்வையற்றவர்களுக்கு தன்னோட பெண்ணையோ பையனையோ திருமணம் பண்ணிக்கொடுக்க சம்மதிக்க மாட்டேங்கிறாங்க. பார்வையற்றவர்கள் குறித்த போதிய விழிப்புணர்வையும், புரிதல்களையும் பொதுச் சமூகத்திடம் நாமதான் கொண்டு சேர்க்கணும். அந்த வகையில விரல்மொழியர் மின்னிதழின் முயற்சி பாராட்டத்தக்கது” என நமக்கு தன் பாராட்டுகளைப் பகிர்ந்துகொண்டார் முருகானந்தன். அப்போது, இந்தக் காதல் இணையின் பத்துமாத ஆண் குழந்தை இளமுகிலன் சிணுங்கத் தொடங்கிவிட்டான். உடனே சமையலறைக்கு விரைந்த பேராசிரியர், தன் மனைவியிடம் பால் இருக்கும் இடத்தைக் கேட்டார். அப்போது பேராசிரியை, பால் இருக்கும் இடத்தை அவருக்குப் புரியும்படி தெளிவாகச் சொன்னார். எந்த இடத்தில் இருக்கிறது, எந்தக் கை பக்கமாக இருக்கிறது, எந்தப் பொருளுக்கு அருகில் இருக்கிறது என்றெல்லாம் அவர் இயல்பாக, மடமடவென சொன்னது வியப்பாக இருந்தது. “அத கொஞ்சம் சூடு பண்ணி எடுத்துட்டு வாங்க” என்று உரிமையோடு வேலையும் வாங்கினார். இவர்களின் செயல்பாடுகள் வியப்பையும், பெருமிதத்தையும் தந்தன. நம்முடைய ரியாக்ஷனைப் புரிந்துகொண்ட பேராசிரியர், “இதுல நீங்க ஆச்சரியப்பட ஒண்ணுமில்லைங்க. அவங்க கள்ளக்குறிச்சியில ஒரு தனியார் கல்லூரியில ஆங்கிலத்துறை விரிவுரையாளரா இருக்காங்க. நானும் கள்ளக்குறிச்சியில திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரா இருக்கேன். ரெண்டு பேருமே வேலைக்குப் போறதால, பிருந்தாவோட பணிச் சுமையக் குறைக்க, என்னால முடிஞ்ச அளவுக்கு வீட்டுவேலைகள்ல பங்கெடுத்துக்குவேனுங்க” என்றார். சரி. அவர் வேலையைப் பார்க்கட்டும். தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து, பேராசிரியை பக்கம் திரும்பினோம். இளமுகிலன் அப்படிங்கிற உங்க பையனோட பேருக்கு எதும் காரணமிருக்கா? “எனக்கும் முருகானந்தன் மாதிரியே பெரியாரியக் கொள்கைகள், பெண்ணியம், ஆங்கிலத்துறையில வேலை பார்த்தாலும் தாய்மொழிப் பற்று முதலிய கொள்கைகளில் பிடிப்பு உண்டு. அதனால, பிறந்த நேரம், நியூமராலஜி இந்த மாதிரி எதுவும் பாக்காம நல்ல தமிழ் பெயரா வைக்கணும்னு யோசிச்சப்ப தோணினதுதாங்க இந்தப் பெயர்”. “அன்பையும் தாண்டி, எங்க ரெண்டுபேரோட ஐடியாலஜியும் ஒத்துப்போறதுதான் இந்தக் காதல் கல்யாணத்தோட வெற்றி” என்று தீர்க்கமாய் சொன்னார் முருகானந்தன். வாழ்க்கை முழுவதும் இணைந்திருக்கும் அந்தக் கொள்கைக் கூட்டணி வாழ்விணையர்களை வாழ்த்தி விடைபெற்றோம். ![]() பள்ளியின் ஓர் உணவு இடைவேளையின்போது சந்தானம் சார் ஃபோன் செய்தார். “தம்பி தமிழ்வாணா! புதுக்கோட்டைல ஃபிலிப்ஸ் சர்வீஸ் சென்டர் இருக்கா?” “ஏன் சார் என்ன விஷயம்?” “ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ வாங்கனும் தம்பி”. “என்ன சார் இன்னமுமா ரேடியோ கேட்குறீங்க?” “அட எனக்கில்லப்பா. மார்க் அக்காவுக்கு. உனக்கு நியாபகம் இருக்கா? ஹெலன் ஹோம்ல இருந்தாங்களே. அவங்க ரொம்ப நாளா ரேடியோ ஒன்னு வேணும்னு கேட்டுட்டே இருக்காங்க. ஃபிலிப்ஸ்தான் நல்ல தரமாவும் சரியாவும் இருக்கும். நீ புதுக்கோட்டைல இருக்கானு விசாரிச்சு சொல்லு. நான் வந்து அவங்களுக்கு வாங்கிக் கொடுத்துட்டு வந்துடுறேன். இல்லைனா, நான் மதுரை டவுன் ஹால்தான் போய்ட்டு வரனும். போறதப் பற்றியெல்லாம் பிரச்சனையில்லை” என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, “புதுக்கோட்டைல அவங்க எங்க சார் இருக்காங்க?” என்றான் தமிழ். “மச்சுவாடில ஒரு ஹாஸ்டலுல இருக்காங்களாம். நானும் போனதில்ல. ஃபோன்லதான் பேசிட்டிருக்கேன். ரொம்ப போரடிக்குதாம். அதான் ஒரு ரேடியோ வாங்கித்தரலாம்னு” எனப் பொறுப்பை அவனிடம் கொடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார். சந்தானம் சார் பார்வையற்றவர்; ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர். 90-களில், ஒரு கிறித்துவ சபையினால் நடத்தப்படும் பார்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியில் தமிழ்வாணன் படித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஊரின் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவரைப்போலவே, இப்போது தமிழ்வாணனும் ஒரு பட்டதாரி ஆசிரியர். தமிழ்வாணன் படித்த அந்தப் பள்ளியின் பின்னாலிருந்த சுற்றுச்சுவரைத் தாண்டினால், சந்தானம் சார் வீடு இருந்ததாக ஒரு மங்கலான நினைவு. ஆனால், அவர் சொன்ன ஹெலன் ஹோம் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது அவனுடைய பள்ளி வளாகத்தின் மற்றொரு மூலையில், ‘குட்டிக்கிளாஸ்’ என்று அழைக்கப்பட்ட பார்வையற்ற குழந்தைகளுக்கான நர்சரி பள்ளி சகிதம் இயங்கிக்கொண்டிருந்தது. எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பு வராத அக்காள்மார்கள், தன் ஊனத்தின் காரணமாக உறவுகளால் புறக்கணிக்கப்பட்ட வயதான பார்வையற்ற பெண்கள் ஹெலன் ஹோமில் இருந்தார்கள். ஹெலன் ஹோம் போலவே, பார்வையற்ற அண்ணன்மார்கள், வயதான பார்வையற்ற ஆண்களுக்கு ஜான்சன் ஹோம் அவனது விடுதிக்கு அருகிலேயே இருந்தது. இருபது வயதிற்கு மேற்பட்ட இருபாலரும் தங்கி, தறி நெய்யும் பணி செய்துகொண்டிருந்தார்கள். பள்ளி சகிதம் அனைத்தும் திருச்சபையின் நிர்வாகத்தின்கீழ் இயங்கியது. பையன் என்பதாலும், தூரம் காரணத்தாலும் அவன் ஹெலன் ஹோம் சென்றதில்லை. ஒருவேளை ஒன்றிரண்டு முறை சென்றிருந்தால்கூட அவனுக்கு அது இப்போது நியாபகத்தில் இல்லை. ஆனால், ஜான்சன் ஹோம் அப்படியல்ல. தனது விடுதிக்கு அருகிலேயே இருந்ததால், தமிழைப்போலவே பெரும்பாலான பையன்கள் தங்கள் மாலை நேரங்களை அங்குதான் கழித்திருக்கிறார்கள். பள்ளிக்கான விடுதியில், பதினைந்து பேர் கூட்டமாக ஓர் அறையில் தங்கி, தரையில் பாய்களை வரிசையாக விரித்து, இரண்டு பாய்களுக்கு மூன்று பேர் என்று புழங்கியதாலோ என்னவோ, ஜான்சன் ஹோமில், இரண்டு அல்லது மூன்று பேருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகள், அங்கு போடப்பட்டிருந்த நாடாக் கட்டில்கள், படிப்பு, வீட்டுப்பாடம் என்ற சுமைகள் ஏதுமின்றித் தங்களுக்கே சொந்தமான வானொலிப்பெட்டிகளில் சுதந்திரமாக அண்ணன்மார்கள் பாடல் கேட்டது எனப் பையன்களை அந்தப் பக்கமாய் ஈர்த்த காரணங்கள் அனேகம். இது குறித்து மாணவர்கள் ஆசிரியர்களால் பலமுறை கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களின் வலசைபோதல் தொடரவே செய்தது. மாணவர்கள் மட்டுமல்ல; அண்ணன்மார்களும் அவர்களின் வரவை அதிகம் விரும்பினார்கள். மாணவர்களின் உறைதலில் தங்கள் மடியும், உரையாடலில் மனமும் நிறையக் கண்டிருப்பார்கள் போலும். தோள்களில் அவர்களைத் தூக்கிக்கொண்டு, பலராம் அண்ணனின் அலமாரிக்கடையில் அண்ணன்மார் வாங்கித்தந்த சூடமிட்டாய்களின் சுகந்தம் நீர்த்துப்போகாது. இப்போதும் நினைவடுக்குகளை நிறைப்பதில் நெகிழ்ந்துபோகிறான் தமிழ். ‘அது, புறக்கணிப்பால் அவர்களுக்குள் சீழ்கட்டி புரையோடிப் போயிருந்த அகப்புண்களைப் பிதுக்கி, எங்களை அறியாமலேயே நாங்கள் களிம்பு தடவிக்கொண்டிருந்த பேரன்பின் பொற்காலம்’ எனத் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்கிறான் தமிழ். காலம் அந்த இரு இல்லங்களையும் இன்று இல்லாமல் செய்துவிட்டது குறித்து தமிழ் வேதனையடைகிறான். எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? பலர் இறந்திருக்கக்கூடும். அப்போதே பலராம் அண்ணனுக்கு ஐம்பது வயதாகி இருந்தது என மனம் காலத்தால் பின்னோக்கி நடக்கத் தொடங்குகிறது. அவனுக்கு மார்க் அக்காவெல்லாம் நினைவில் இல்லை. ஹெலன் ஹோம் என்றாலே, அவன் நினைவுகளில் நெருஞ்சி தூவும் பெயர் ‘தேவகிருபை’. எல்லோரும் கிருபா என்றே அழைத்தார்கள். மார்க் அக்கா, வேர் முரிந்து வீழ்ந்த மரங்களினூடே வனம் அகன்றவள். ஆனால் கிருபா அக்கா, அவள் காலத்திலேயே செழித்துக்கிடந்த சோலையிலிருந்து சிறகொடிக்கப்பட்டு கூடுகடத்தப்பட்டவள். கிருபா தேவனின் குழந்தை. அவள் சிறுவயதிலிருந்தே அந்தப் பள்ளியால் வளர்க்கப்பட்டவள். தாயின் மடியறியாதவள். தாதிகளின் அழுத்தமான வறண்ட சொற்களினூடே தன் சிறுபிராயம் கழித்தவள். அன்பு, அரவணைப்பு, சுற்றம் என வாழ்வு தனக்கு மறுதலித்த எது பற்றியும் பிரக்ஞை இல்லாதவளாய், இயேசுவின் சுவிசேஷ வார்த்தைகளைப் பற்றிக்கொண்டே தன் இருபதைக் கடந்திருந்தாள். தறியின் ‘கடக் கடக்’ சத்தத்திற்கிடையே, கிருபா அக்காவைத் தவிர எல்லா அக்காள்களும் அண்ணன்களும் பேசிக்கொண்டிருப்பார்கள். இயலாமைகளை எள்ளல் கலந்து பெருசுகள் சிலாகித்துக்கொண்டிருக்க, விடலைகளுக்கோ பேசாமல் மிக அழுத்தமாய் காரியமாற்றிக்கொண்டிருக்கும் கிருபா அக்காவின்மீதே கவனம் குவிந்திருக்கும். அதிலும், செல்வம் அண்ணன் எப்போதும் கிருபா அக்காவை சீண்டிக்கொண்டே இருப்பார். கிருபா இருவரிடம் மட்டுமே மனம் விட்டுப் பேசுவாள். ஒருவர் தேவனாகிய கர்த்தர். இன்னொருவர், மூப்பு காரணமாகப் படுத்த படுக்கையாகிவிட்ட, தன் இல்லத்தைச் சேர்ந்த தேசம்மாள் ஆயா. தேசம்மாளுக்குப் பணிவிடை செய்வதைத் தனது அன்றாடக் கடமையாக்கிக்கொண்டிருந்தாள் கிருபா. பணி நேரத்தில் நடந்த எல்லாவற்றையும் தேசம்மாளிடம் கிருபா சொல்வாள். குறிப்பாக, செல்வத்தின் சீண்டலும், அவளடையும் எரிச்சல் பற்றியும் கடுகடுத்துக்கொள்வாள். தேசம்மாள்தான் அவளை ஆற்றுப்படுத்துவாள். ‘உன்னைப்போல் பிறரையும் நேசி, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு’ போன்ற தேவ வாக்கியங்களைச் சொல்லி, கிருபாவை அமைதிப்படுத்தும் வழிமுறை தேசம்மாளுக்குத் தெரிந்திருந்தது. செல்வத்திற்கு இப்போது வயது 25. கிருபாவின் நிலையைவிட மோசமானது செல்வத்தின் சூழல். அன்புகாட்டிய பெற்றோர், செழித்துக்கிடந்த செல்வம், ஒட்டிக்கொண்டு உறவாடிய உறவுகள் என அத்தனையையும் ஒன்றன் பின் ஒன்றாக இழந்து, தனது ஏழாம் வயதில் நிற்கதியாக நின்றான் செல்வம். கூடவே பார்வையின்மை என்ற பிரச்சனை வேறு. ஆனாலும், அவன் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான். அவன் இருக்கும் இடங்களில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால், எப்போதும் அவனைச் சுற்றியே ஒரு கூட்டம் நிலைகொண்டிருந்தது. சில நாட்களாகவே அந்தத் தொழிற்கூடத்தில் எல்லோரும் தங்கள் சகாக்களான மாயாண்டி கச்சம்மாவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். உவப்பத் தலைகூடி அவர்கள் மேற்கொண்ட உடன்போக்கு சிலருக்கு வீரச்செயலாகவும், சிலருக்குக் கீழ்ப்படியாத்தனமாகவும் பட்டது. இவர்களுள் கிருபா இரண்டாம் தரப்போடு உடன்பட்டாள். அவளைப் பொறுத்தவரை, நிறுவனத்திற்கு விசுவாசமாக இல்லாத தன் தோழி கச்சமாளின் செயல் அருவருப்பாகத் தோன்றிற்று. இருவருக்கும் தைரியம் கொடுத்து, அவர்களைப் பத்திரமாக வழியனுப்பி வைத்ததே செல்வம்தான் என எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதனால் கிருபாவுக்கு செல்வம் மீதிருந்த வெறுப்பு மேலும் அதிகமானது. “அண்ணே! பெரிய ஆளுணே நீ. கூடவே இருக்கேன். எனக்கே தெரியாம எம்புட்டு பெரிய காரியம் பண்ணிறுக்க?” ஜோஷ்வா கேட்டான். “டேய்! நீ சின்னப்பயடா”, செல்வம் சிரித்தான். “அதேதான்ணே நம்ம பெருசு ராமண்ணனும் சொன்னுச்சு. ‘செல்வத்த நாம என்னவோ நெனச்சோம். எவ்லோ பெரிய காரியம் பண்ணிட்டான் பாத்தியா’னு ராமண்ணே சொல்ல, ‘இளங்கன்றுப்பா’னு சொல்லிக்கிட்டே நம்ம திருமாறண்ணன் சிரிக்கிறாரு. பாஸ்டர் உன்மேல ரொம்பக் கோபமா இருக்காறாம்; நம்ம ஞானமுத்து அண்ணன் சொன்னாரு. அக்காங்க எல்லாரும்கூட உன்னப்பத்தித்தான்ணே பேசிக்கிறாங்க”. “அக்காங்கனா யார்யாருடா?” என்று எதையோ எதிர்பார்த்துக் கேட்டான் செல்வம். “எல்லாரும்தான்ணே. டெய்சி அக்கா, சாந்தி அக்கா. அதுலயும் சாந்தி அக்காவோட முகத்தப் பார்க்கனுமே! எனக்கென்னவோ உன்னோட உதவி அடுத்து சாந்தி அக்காவுக்குத்தான் தேவைப்படுமுனு நெனக்கிறேன்”. “டேய்! அன்பு, தேவகிருபை இதுங்கலாம் எதுவும் சொல்லலையோ?” ஆர்வத்தில் கேட்டான் செல்வம். “யாரு அந்த அமுக்கினிகளா? அதுக பேசுறது அதுகளுக்கே கேக்காது. கிருபாகூட பாட்டு, வசனமுனா சத்தம் வருது. இந்த அன்பு, பாடுனாக்கூட கிணத்துல இருந்து பாடுற மாதிரிதான கேக்குது. ரொம்ப அழுத்தம் புடுச்சதுக. அதுகலாம் சபையோட பிள்ளைகள். நிச்சயம் சபைக்குத்தான் விசுவாசம் காட்டும். அதுலயும் இந்த கிருபாக்கா, எப்பப் பாத்தாலும் பாட்டு ஜெபமுனு. சே, சே”, கடிந்துகொண்டான் ஜோஷ்வா. “டேய்! பெரிய மனுஷா! ரொம்பப் பேசாத, வேலையப்பாரு” என்று கொஞ்சம் சில்லறைகள் தந்து, பலராம் அண்ணன் கடைக்கு அனுப்பி வைத்தான் செல்வம். ‘அமுக்கினிக, அழுத்தம் புடுச்சதுக’, ஜோஷ்வாவின் வார்த்தைகள் அவனுக்குள் எதிரொளித்துக்கொண்டிருந்தன. சிவப்பா, அழகா இருந்தாலே அழுத்தமும் கர்வமும் இருக்கத்தானே செய்யும். கிருபாவைத் தனக்குள்ளாகவே வரைந்துகொண்டான் செல்வம். தான் நிறங்கள் அறியாதவன் என்றாலும், சிவப்புதான் அழகு என்பது கேள்வியின் பயனால் அவனுக்கு விளைந்த ஞானம். ஆனால், கிருபா சிவப்பு, அழகு என்று அவன் நினைத்துக்கொள்வதெல்லாம் அவளுடைய குரலை வைத்துதான். எத்தனை மென்மையான, பளிச்சென்ற குரல். அதிலும், அந்த ‘ஸ்தோத்திரம்’ என்கிற பதம், அவள் தொண்டை கடந்து இதழ் பிரிக்கும்போது, அடடா! அந்த ‘இஸ்’ஸுக்கு மட்டும் இந்த உலகத்தையே எழுதித் தந்தாலும் தகாது. மனிதர்களை ஸ்தோத்திரம் என்ற சொல்லை அடிக்கடி ஜெபிக்குமாறு பண்ணின கர்த்தருக்கு அவன் ஸ்தோத்திரம் சொன்னான். “இவனுக்கு எவ்லோ தைரியம் பாத்தியா?” பல்லைக் கடித்தாள் கிருபா. “யாருக்கு?” அசட்டையாகக் கேட்டாள் தேசம்மாள். “அதான் அந்த செல்வம். கொஞ்சம்கூட கீழ்ப்படிதல் இல்லை ஆயா. கச்சம்மாவையும் மாயாண்டியையும் இவன்தான் தூண்டிவிட்டிருக்கான்; உதவியும் செஞ்சிருக்கான். கத்திக்கத்தி ஜெபம் பண்ணிட்டா போதுமா? இதுலவேற இன்னக்கி பிரேயர்ல என்ன வசனம் சொன்னான் தெரியுமா?” “என்ன சொன்னான்?” தேசம்மாள் கேட்டாள். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். இதைச் சொல்ல இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு? கர்த்தருக்கும் அவர் உண்டு பண்ணின சபைக்கும் கீழ்ப்படியாம நடந்துக்கிற இவனையெல்லாம் உடனே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளனும்” என்று மீண்டும் பல்லைக் கடித்தாள் கிருபா. “கிருபா! தேவன் நூறு நீதிமான்களுக்காக அல்ல, மனம் திருந்தும் ஒரே ஒரு பாவிக்காகத்தான் உலகத்தில் வந்தார். இந்த வசனத்தை மறந்துட்டியா?” என்று தனது தளர்ந்த குரலில் கேட்டு, கிருபாவை அமைதிப்படுத்திய தேசம்மாளின் உடல்நிலை திடீரென மோசமானது. அருகிலுள்ள சபை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஹெலன் ஹோம் வார்டன் எஸ்தர் அக்காவோடு, தானாகவே முன்வந்து தேசம்மாளுக்குப் பணிவிடைகள் செய்தான் செல்வம். இப்போது தனது அறையில் தேசம்மாளின்றித் தனித்து விடப்பட்டிருந்தாள் கிருபா. அவளுக்கு அழத் தோன்றியது. உடனே தேசம்மாளைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. ‘சும்மாவே எஸ்தர் எரிஞ்சு விழும். இப்போ தேசம்மாளை என்னவெல்லாம் பாடுபடுத்துதோ?’ என மருகிக்கொண்டே, குறைப்பார்வையுடைய தன் சக தோழியோடு மருத்துவமனை வந்த கிருபாவிடம், செல்வம் தனக்குச் செய்யும் பணிவிடைகள் பற்றி தேசம்மாள் ஒடுங்கிய குரலில் சிலாகித்தார். உயிர்த்தெழுதலின்போது இயேசுவின் கைகளையும் கால்களையும் பிணைத்திருந்த சங்கிலிகள் போன்று, அவனைப் பற்றிய கிருபாவின் அபிப்பிராயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் பொடிந்து நொறுங்கத் தொடங்கியது. அக்கறையின்மை, சகிப்பின்மை காரணமாக தனது பொறுப்புகளினின்று அவ்வப்போது நழுவிக்கொள்ளும் எஸ்தர் வார்டனின் செயலால், கிருபா தேசம்மாளோடு மருத்துவமனையில் தங்க நேர்ந்தது. புதிய இடத்தில், அறிமுகமற்ற சூழலில் தனியாக ஒரு அடிகூட எடுத்து வைத்திராத அவளுக்கு, அதெல்லாம் தொடக்கத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால், தன்னைப்போலவே பார்வையில்லாத செல்வம் எதற்கும் தயங்காமல் நடமாடுவது அவளிடம் புது உத்வேகத்தை அளித்தது. “எஸ்தர் அக்கா என்னையே தங்கச் சொல்லிட்டாங்க”, கிருபா முதன்முறையாக அவனோடு பேசினாள். அவனுக்குள் சொல்ல முடியாத பரவசம் ஏற்பட்டது. இப்போது அவனை ஏதோ ஒரு தேவச்செயல் ஆண்டுகொண்டிருப்பதாகவே உணர்ந்தான் செல்வம். ஆடு மேய்ப்பவர்களுக்கு மேசியாவின் பிறப்பை அறிவித்த தேவதூதனின் குரலாகவே அவள் குரலைக் கண்டுகொண்டான். தான் சொன்னது கேட்கவில்லையோ என்ற ஐயத்தில், கொஞ்சம் தொண்டையை செருமியபடி, “எஸ்தர் அக்கா” என்று அவள் தொடங்கிய மாத்திரத்திலேயே, “ஆமா. அவுங்களுக்கு சர்ச் போகனும், பிரேயர் பண்ணனுமுனு ஏகப்பட்ட வேலை இருக்கே”, பதில் சொன்னான் செல்வம். அவனது கிண்டல் அவளுக்குப் புரிந்தது. “ஏன் இப்படி இரக்கம் இல்லாம இருக்காங்க?” அவள் கேட்டாள். “அதான், ஏழு எழுபதுதடவை தேவன் மன்னிப்பாருல்ல. அந்த தைரியம்தான்”. அவன் பதில் கேட்டுக் குலுங்கிச் சிரித்தாள் கிருபா. ‘கிருபா! நீயா சிரிக்கிறாய்? உனக்கு சிரிக்கக்கூடத் தெரியுமா?’ தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான் செல்வம். நிகழ்வதெல்லாம் அவனுக்கு விருப்பமானதாகவும், ஆனால் வியப்பானதாகவும் இருந்தது. அந்த கணத்தில் உலகத்திலுள்ள சகல மனிதரினின்றும் தன் ஒருவன்மீதுதான் தேவகுமாரனின் நித்தியப் பார்வை நிலைகுத்தி நிற்பதாக உணர்ந்தான் அவன். தேசம்மாளின் மரணம் இழுத்துக்கொண்டே போனது. அவளது படுக்கையைச் சுத்தம் செய்வது, மலம் அள்ளுவது என எல்லாவற்றையும் மிகுந்த சிரத்தையோடு செய்தான் செல்வம். இதுவரை தனக்குச் சுவிசேஷிக்கப்பட்ட வார்த்தைகளுக்குத் தனது செயல்களால் உருவம் கொடுத்துக்கொண்டிருந்த செல்வத்தின்மீது கிருபாவுக்குப் பிரியம் உண்டானது. அந்தப் பிரியமும், செல்வத்தின் ஆறுதலான வார்த்தைகளும் தேசம்மாளின் இழப்பிலிருந்து கிருபாவை மீட்டது. தேசம்மாளின் இறப்பிற்கு வந்திருந்த மாயாண்டி கச்சம்மாள் ஜோடியிடம் சகஜமாகப் பேசினாள் கிருபா. அவர்கள் இருவரின் அன்யோன்யத்தோடு தன்னையும் செல்வத்தையும் பொருத்திப் பார்ப்பது அவளுக்கு உவப்பாக இருந்தது. தேசம்மாவைத் தன்னிடம் அழைத்துக்கொண்ட தேவனாகிய கர்த்தர், ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. இதோ! மரண பரியந்தம் மட்டும் நான் உன்னுடனேகூட இருப்பேன்’ என்று சொன்ன தனது வாக்குத்தத்தம் நிறைவேறும்படியாக, செல்வத்தைத் தனக்காக அனுப்பியிருப்பதாகவே அவள் முழுமையாக நம்பினாள். தனது காதல் குறித்து மனம் திறக்க, அடுத்த வாரத்தில் வரவிருக்கிற புனிதவெள்ளி நாளைத் தேர்ந்தெடுத்தாள் கிருபா. அவளுக்கு ஒருவாரம் ஒரு யுகமாகக் கடந்தது. புனிதவெள்ளி நாளில், சிலுவைப்பாதை தியானத்திற்குச் செல்ல ஆயத்தமான அவளுடைய சக தோழிகளிடம், தான் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லி அவர்களை தேவாலயம் அனுப்பி வைத்தாள். தன் விடுதி அறைக்கு அழைத்து, தனியே யாருமற்ற சூழலில் செல்வத்தைச் சந்தித்தாள். விடுதியின் வராண்டா தூணில் சாய்ந்தபடி செல்வம் நின்றுகொண்டான். அவன் எதிரே நின்றிருந்த கிருபா, உயரத்தில் தன்னைவிட கொஞ்சம் சிறியவள் என்பதைத் தெரிந்துகொண்டான். “எல்லாரும் போயாச்சா?” செல்வம் கேட்டான். “ஆமா. எஸ்தர்கூட போயிடுச்சு”. “நீ போகல?” வியப்பாகக் கேட்டான் செல்வம். “உடம்பு சரியில்லைனு பொய் சொல்லிட்டேன். நான் சிலுவைப்பாதை தியானத்துக்குப் போகாதது வாழ்க்கையிலே இதுதான் முதல் தடவை”. எல்லாம் தனக்காகத்தான் என்பதில் ஒருவித பெருமிதமும், பூரிப்பும் கொண்டான் செல்வம். ஒரு பெண்ணின் அன்பையும், கருணையையும் இத்தனை நெருக்கத்தில் தரிசிப்பது அவனுக்கும் அதுதான் முதல் தடவை. அவள் மனம் திறந்து பேசத் தொடங்கினாள். “நாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா மாயாண்டி கச்சம்மா போல இல்ல. இதே சர்ச்சில பண்ணிக்கலாம்”, மிகுந்த நம்பிக்கையோடும், உறுதியோடும் சாந்தமான குரலில் சொன்னாள் கிருபா. செல்வத்திற்கு எல்லாம் வியப்பாக இருந்தது. முழங்காலிட்டு தேவனாகிய கர்த்தருக்கு நன்றி சொல்லத் தோன்றிற்று. அவன் பதில் பேசுவதற்குள் தொடர்ந்து பேசத் தொடங்கினாள் கிருபா. “உனக்குத் தெரியுமோ, தெரியாதோ. நான் இந்த சபையால தூக்கி வளர்க்கப்பட்டிருக்கேன். இங்கேயே என்னைப்போல இன்னும் ஐந்தாறு பிள்ளைகள் வளர்க்கப்படுறாங்க. அப்பா, அம்மா இல்லைனாலும், சொந்தமுனு சொல்லிக்கவாவது உனக்கு யாராவது இருப்பாங்க. ஆனா, எங்களுக்கு எல்லாமே இந்த இடம்தான்”, மிகுந்த முதிர்ச்சியோடும் நிதானமாகவும் பேசினாள். “நம்ம பள்ளித் தாளாளர் கிலாடியம்மா, எங்க மேல நிறைய பிரியமும் அன்பும் வச்சிருக்காங்க. அவங்க வெளிநாட்டுல இருந்து இன்னும் ஒருவாரத்துல திரும்பினதும், நாம ரெண்டுபேரும் அவங்களைச் சந்திச்சுப் பேசுவோம். நிச்சயம் அவங்க புரிஞ்சிக்குவாங்க” என்றாள் தீர்க்கமாக. செல்வத்திற்கும் அது சரியென்று பட்டது; சம்மதித்தான். “நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும்” என்றான் செல்வம். “எப்படிச் சொல்லுற?” கிருபா கேட்டாள். “தேவ கிருபை என் கூடவே இருக்கே”. அவனது பதிலை சிலாகித்து, சிரித்து, சிலிர்த்தாள். பளிங்குத் தரையில் முத்துப் பரல்கள் சிதறி ஓடுவதாகவே உணர்ந்தான் செல்வம். அவனுக்கு அவளைத் தொட்டுப்பார்க்க வேண்டும்போல் இருந்தது. மருத்துவமனை திண்ணையில் எத்தனையோ தடவை இருவரும் கைப்பிடித்து நடந்திருந்தாலும், இப்போது அந்தக் கைகளும், கைவிரல்களும் அவனுக்கு உரிமையாகிவிட்டதில் எழுந்த ஆசை அது. ஆனால், எப்படிக் கேட்பது? தயங்கிய அவனுக்குள் இன்னொரு கேள்வியும் எழுந்தது. இப்போது அவள் மனதிலும் இதே ஆசை துளிர்த்திருக்குமா என்பதுதான் அது. இப்படி அவன் யோசித்துக்கொண்டிருக்கையில், கிருபா தன் அறை நோக்கி நடந்தாள். அறையின் பாதி வழியை அடைத்தவாறு மூடியிருந்த கதவில் அவள் நெற்றி உரசியதில் செல்வத்திற்கு வலித்தது. தன் வலக்கையில் எதையோ பிடித்தபடி, இடக்கையை நீட்டி, கதவு தன்மேல் மீண்டும் உரசிடாதபடிக்கு மெதுவாக அறையைவிட்டு வெளியேறி, அவனிடம் ஒரு காராச்சேவு பாக்கெட்டை நீட்டினாள். “என்ன இது?” செல்வம் கேட்டான். “சேவு. இன்னக்கிப் புனிதவெள்ளியாச்சே. மதியம் அகத்திக்கீரைக்குப் பதிலா இதைக் கடிச்சுக்கோ. உனக்குத்தான் அகத்திக்கீரை பிடிக்காதே. அதான் கடைக்குப்போன ரூத் அக்காகிட்ட வாங்கிட்டு வரச் சொன்னேன். என்ன யோசிக்கிற? நேத்து நீ தறிக்கூடத்துல சின்னையாகிட்ட பேசிட்டிருந்ததைக் கேட்டேன். பட்டினியாலாம் இருக்காதே. அப்புறம் நானும் பட்டினி கிடப்பேன்”, நாணமும் கொஞ்சலுமாகச் சிணுங்கினாள் கிருபா. சிலிர்த்துப்போன செல்வம், சேவோடு அவளின் கையையும் அழுந்தப் பற்றினான். தன் பக்கமாக அவளை இழுத்தான். “ஹேய் லூசு! விடு”, ஒப்புக்குச் சொல்லி விருப்பத்தோடே சிறைபட்டு நின்றாள் கிருபா. சில வினாடிகளே என்றாலும் இருவருக்குள்ளும் ஏதேதோ ஒளிவட்டங்கள் தோன்ற, அவர்கள் புதிய வெளிச்சத்தைக் கண்டுகொண்டிருந்தார்கள். “கிருபா!” திடீரென ஒரு குரல். வார்டன் எஸ்தர் என்று அறிந்துகொண்ட இருவரும் திடுக்கிட்டார்கள். “என்ன இது? சர்ச்சுக்குப் போகாம இங்க என்ன பண்ணுறீங்க. என்ன செல்வம், தியானத்துக்குப் போகல? எத்தனை நாளா இது நடக்குது?” அதட்டலும் அதிகாரமுமாய் கேட்டாள் எஸ்தர். இருவரும் பதிலேதும் சொல்லாமல் மிரட்சியோடே நின்றார்கள். அவர்களை அங்கேயே வைத்துப் பூட்டிவிட்டு, விஷயத்தை நிறுவனத்தின் பொறுப்புகளைத் தற்காலிகமாகக் கவனித்துவரும் பாஸ்டர் பீட்டரிடம் சொல்ல சர்ச் நோக்கி ஓடினாள் எஸ்தர். கிருபா தேம்பினாள். இனி என்ன நிகழும் என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு தாங்க முடியாமல் அழுகை பீரிட்டது. செல்வத்திற்கு ஒன்றும் புரியவில்லை. நிச்சயம் ஏதோ பயங்கரம் நடக்கப்போவதை மட்டும் அவன் உணர்ந்தான். இருந்தும் கிருபாவை சமாதானம் செய்துகொண்டு இருந்தான். வாசலில், எஸ்தரோடு ஐந்தாறு இளைஞர்களின் குரல்கள் கேட்டது. சில குரல்கள் செல்வத்திற்குப் பரிட்சயமானவை. அவர்கள் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களின் மகன்கள். ஏற்கெனவே அவன்மீது கடுமையான கோபத்தில் இருக்கிற பாஸ்டர்தான், தியானத்திற்குச் சென்றிருந்த அவர்களை இங்கு அனுப்பியிருக்க வேண்டும். கதவைத் திறந்துகொண்டு செல்வத்தை நோக்கிப் பாய்ந்தான் ஜார்ஜ். அவன் கோவில் பிள்ளையின் மகன்; வெளியூரில் போலீசாக இருக்கிறான். அவர்கள் செல்வத்தை இழுத்துக்கொண்டு போனார்கள். கிருபா கதறினாள். அப்போது சிலுவைப்பாதை தியானத்திற்கான முதல் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அந்த ஓசையில் அன்று கருணைக்குப் பதிலாக அபாயம் உறைந்திருப்பதாக உணர்ந்தாள் கிருபா. எஸ்தர் கிருபாவை இழுத்துக்கொண்டு போனாள். சிலுவைப்பாதை தியானம் தொடங்கிற்று. “ஏன்டி குருட்டுச் சனியனே! போடுற சாப்பாட்டைத் தின்னுட்டுக் கெடக்க முடியலையோ? கொழுத்துப்போய் திரியுற. நானும் உன்னை கவனிச்சிட்டுதான்டி இருக்கேன்” என்று கிருபாவின் கன்னத்திலும் முதுகிலுமாக மாறிமாறி அடித்தாள் எஸ்தர். அவள் கை ஓங்கும் திசைகூட அறிய இயலாத கிருபாவின் உடல் முழுதும் அச்சம் படர்ந்தது. அழுதுகொண்டே தரையில் சரிந்துகிடந்தாள் கிருபா. ‘இதோ! தேவகுமாரன் நம்முடைய பாவச்சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கதா மலையைக் கடந்துபோகிறார்’ என்று பாஸ்டர் பிரசங்கித்துக்கொண்டிருப்பது அவளுக்குக் கேட்டது. அவள் செல்வத்தை நினைத்தாள். இப்போது அவன் அவர்களால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பான் என்று நினைத்தபோது, அவள் மேலும் கலங்கினாள். தான் செல்வத்திற்கு சுமக்கமுடியாத ஒரு சிலுவையாகிவிட்டதாக அவள் எண்ணினாள். ஒரு பூட்டிய அறைக்குள் வைத்து அந்த இளைஞர்களால் செல்வம் கடுமையாகத் தாக்கப்பட்டான். எல்லாத் திசைகளிலுமிருந்து அவனுக்கு அடி விழுந்தது. “அனாதைப் பயலுக்குத் திமிரப்பாரு” என்று உதைத்தான் ஞானமுத்துவின் மகன். “எல்லாம் குருட்டுக் குசும்பு. இவனால பாஸ்டருக்கு எவ்லோ கெட்ட பெயர்” என்று சொல்லியபடி கன்னத்தில் அறைந்தான் இன்னொருவன். ‘பிதாவே! இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்!’ ஆலயத்தில், இயேசு சிலுவையில் உதிர்த்த முதல் வாக்கியம் தியானிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ‘நான் தாகமாய் இருக்கிறேன்’ என்று கேட்கக்கூட திராணியற்றவனாய் மயங்கிக்கிடந்தான் செல்வம். “எங்களை விட்டுடுங்க. நாங்க போறோம்” என்று எஸ்தரிடம் கெஞ்சினாள் கிருபா. “எங்க போவ? அந்தப் பயலோடவா? அவன் திருடனாச்சே. நம்ம வார்டன் சேவியர் சாரோட செயின் காணாமப்போச்சுனு சொன்னாங்களே; திருடுனது அவன்தானாம். இந்நேரம் அவனை ஸ்டேஷன்ல அடைச்சிருப்பாங்க. இனி அவன் வெளிய வரவே முடியாது”. எஸ்தரின் வார்த்தைகள் எதையும் கிருபா நம்பத் தயாராக இல்லை. அவள் தன்னையும் செல்வத்தையும் நினைத்து மேலும் மேலும் அழுதாள். ஏற்கெனவே மாயாண்டி கச்சம்மா விவகாரம்; இப்போது செல்வம் கிருபா; நிர்வாகத்திலும் ஏகப்பட்ட பிரச்சனைகள். தன்னிடம் பொறுப்பைக் கையளித்து வெளிநாடு சென்றிருக்கும் கிலாடியம்மாவிற்கு இவையெல்லாம் தெரிந்தால் சிக்கல் என்பதை பாஸ்டர் உணர்ந்தார். அவர் நாடு திரும்புவதற்குள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவர நினைத்த பாஸ்டர், இதே சபையால் நடத்தப்படும் வேறொரு நிறுவனத்திற்கு கிருபாவை அனுப்பிவிடுவது என முடிவு செய்தார். தனது முடிவை எஸ்தருக்குச் சொல்லியதோடு, அவர்தான் சில இளைஞர்களையும் எஸ்தரோடு அனுப்பியிருந்தார். இனி செல்வம் வரமாட்டான்; தானும் இங்கிருக்கப்போவதில்லை என்று கிருபா அறிந்தபோது, வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற உலகம் முடியும் நாளில் கவியப்போகிற அந்தகார இருளை அவள் இப்போதே உணர்ந்தாள். ‘என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?’ அவளுக்காகக் காற்றில் கரைந்துகொண்டிருந்தது தேவகுமாரனின் சிலுவை வாக்கியம். இதோ! கிருபா கூடுகடத்தப்படுகிறாள். ஆசை, விருப்பம், காதல், திருமணம், குடும்பம் என வாழ்வு தனக்கு மறுதலிக்கிற இவை எல்லாவற்றைப் பற்றியும் பிரக்ஞை கொண்டவளாகவே இப்போது போகிறாள். இரண்டு மணிநேரமாக நடந்த சிலுவைப்பாதை தியானம் முடிவுக்கு வந்தது. ‘எல்லாம் முடிந்தது’ என பாஸ்டருக்குச் சொல்லப்பட்டது. சில ஆண்டுகளில் திருமணம், குழந்தை என செல்வம் இயல்பானான். பார்வையற்றவன் என்றாலும் அவன் ஓர் ஆண். ஆனால், கிருபாவுக்கு நிச்சயம் அது சாத்தியமில்லை. பெண் என்பதைவிட, அவள் கதியற்றவள்; பார்வையற்றவள். வேறொரு நிறுவனத்தில், பிறிதொரு தேவாலய ஆராதனைகளில் அவள் பங்கேற்றுக்கொண்டிருப்பாள். இனி அவள் சிலுவைப்பாதை தியானத்திற்கு போகாமல் இருக்க வாய்ப்பில்லை. தன் உதடுகள் தேவ வசனங்களை ஜெபிப்பதற்கும், தன் மார்பு தேவ சிலுவையை ஏந்தவுமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன; அதுவே தேவனின் சித்தம் என்று தன்னைத் தேற்றியபடி, நிச்சயம் பிழைத்திருப்பாள் தேவ கிருபை. -- தொடர்புக்கு: [email protected] ![]() கடந்த வாரம் தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்தபடி என் மகளுடன் அமர்ந்திருந்தேன். சட்டென ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது. ‘கள்ளக் காதலால் பெண் தன் ஒன்றரை வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு போட்டதாக கணவன் காவல் துறையில் புகார்’ என்ற செய்திதான் அது. பார்த்ததும் பகீர் என்றிருந்தது. ஆனாலும் எனக்குள் சில கேள்விகள் உதிக்கத் துவங்கியதன் விளைவே இந்தக் கட்டுரை. ‘காதல்’ - அது பிரபஞ்சத்தின் சுவாசம், உயிர்களின் தேடல் என்றெல்லாம் காதலை கலைத் திட்டம் போட்டு, கவிகள்தம் மொழிவழி பிரகடனம் செய்து வரும் வேளையில், காதல் எங்கு கள்ளக் காதலாய் மாறிப்போனது? காதல் என்றால் அன்பு என்று கற்றுத்தரும் ஆசான்களே! அன்பில் போலி உண்டோ? காதல் என்றால் அன்பென்று கூறிக்கொள்ளும் நாம், அதனோடு காமத்தை இணைத்ததை ஏனோ மறைத்துக் கூற முற்படுகிறோம்? காதல் உலகை கட்டியமைக்கும் கயிறு என்றால், அந்தக் கயிறு ஒரு குடும்பத்தை ஏன் கட்டவிழ விடுகிறது? குடும்பச் சூழலில் போலிகளாய் நாம் மாறிப்போன பின்னர், காதலை மட்டும் உண்மையை அரிதாரமாய் பூசிக்கொள்ளும்படி அழைப்பது நம் முட்டாள்தனம் அல்லவா? ஆக, அன்பும் காமமும் இணைந்ததுதான் காதல் என்றால், அதை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதில் என்ன தடை இருக்க முடியும்? அன்பு அனைத்தையும் மாற்ற வல்லது எனில், கோபங்களையும் குறைகளையும் அது மறக்கவைக்கும் வஸ்துவாக மாறாதோ? பின், குடும்பங்களில் ஏது போர்? அன்பால் நாடுகளையே இணைக்கமுடியும் என்றால், காதல் கண் சிமிட்டும் வேளையில் எதையும் மாற்றி புது அன்பு அரணை ஏற்படுத்திடலாமே? காதல், அதாவது அன்பு எங்கு தோற்றுப் போகிறது? இதைப் பற்றி ஒரு பெண்ணாக நான் விமர்சிப்பது என் கடமை, உரிமை என நம்புகிறேன். காதலனுக்காகவோ காதலிக்காகவோ கால் கடுக்க நின்றவர்கள், நீதிமன்றங்களில் கலவரத்தோடு நிற்கிறார்களாம் - கூறுகிறது புள்ளி விவரம். அன்று கண்கள் வழங்கிய காதலுக்காகக் காத்துக் கிடந்தவர்கள், திருமணத்திற்குப் பிறகு பொறுப்புகளோடும் கடமைகளோடும் புதிய வடிவம் கொள்ளும் காதலுக்காகக் காத்திருக்க முடிவதில்லை. இதுவே ‘கள்ளக் காதல்’ என்ற சொல் அகராதியில் இடம்பிடிக்க முதல் காரணம் என்பேன் நான். அருகிருக்கும் களாக்காயைவிட, தொலைவில் இருக்கும் பலாக்காயின்மீது நமக்கு ஈர்ப்பு எப்போதுமே உண்டு. அதுபோலதான், மனைவியோ கணவனோ காதலனாகவோ காதலியாகவோ இருந்தவரை காணப்பட்ட ஈர்ப்பு, நாம் அளித்த முக்கியத்துவம் எல்லாம், கணவன் மனைவி என்றானபிறகு மெல்லக் குறையத் தொடங்குகின்றன. பல உறவுகளோடு பகிர்ந்த தன் அன்பை, பாசத்தை ஒருவரோடு சுருக்கி, தன் உலகமே இவர் என்று கருதி, புது மணவாழ்வைத் துவக்கும் இருபாலரும், பிழைப்பிற்கான தேடலில் காதல் தொலைந்துபோவது பற்றி மறந்துபோகின்றனர். வாய் ஜாலங்கள் மட்டுமே மனித வாழ்வை நிறைவு செய்துவிடாது. சாப்பிடு என்று சொல்வதால் பசி அடங்கி விடுமா என்ன? அதுபோலத்தான், ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்றதும் மனம் நிறைந்துவிடாது. உற்ற காலத்தில் வெளிப்படுத்தாத எந்த உணர்விற்கும் அர்த்தம் இல்லை. மனிதனது வாழ்வு ஒருமுறைதான். இதில் பலதரப்பட்ட கடமைகளும் தேடல்களும் நம்மை விடாமல் துரத்திக்கொண்டிருக்கின்றன. ஒருவருக்கொருவர் சார்ந்து வாழக் கற்றுக்கொண்ட மனிதகுலத்தின் இருபெரும் பிரிவுகளும், தன் எதிரிணையை தனக்குத் துணையாக வரித்துக்கொண்டு வாழ்க்கையைச் செலுத்துதல் என்பது இயற்கையின் நியதி. அதனால்தான், ஆணின் பலமாக பெண்ணையும், பெண்ணின் பலமாக ஆணையும் இயற்கை நியமித்தது. இயற்கையின் இத்தகைய விதியை மறுதலித்து, காலத்தோடு போராடியபடி அன்பையும் காதலையும் பகிர மறந்து, பணத்தோடும் புகழோடும் குடும்பம் நடத்த ஓடிக்கொண்டிருக்கிற ஒரு தரப்பினர், தனது இணைக்குத் தந்துவிட்டதென்னவோ தனிமை, மன அழுத்தம், போராட்டம், வெறுமை இவைகள்தாம். இத்தகைய மனச்சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ தன்னை நோக்கி வரும் ஆறுதலை ஏற்கவே விரும்புகிறார்கள். ஆறுதலாய் கிடைக்கும் அன்பு, அழும் மனங்களை மெல்ல அசைக்கிறது. அன்பின் அளவு, ஆறுதலின் நெருக்கம் அதிகரிக்கும்போது, நட்போடு காமம் கலக்க, மீண்டும் காதல் பிறக்கிறது. ‘காதல் ஒருமுறைக்கு மேல் எவர்மீதும் மலராது’ என்று வசனம் பேச வாழ்க்கை சினிமா அல்லவே. அப்படியெனில், உலகில் எந்த உயிரும் நிம்மதி இன்றி, சாவின் விளிம்பில் நிற்பதே இயல்பாகிப் போயிருக்கும். நட்பாகவோ, காதலாகவோ பரிணமிக்கிற இதுபோன்ற நிகழ்வுகள், குடும்பம் என்ற பாரம்பரிய அமைப்பின் மீதான தாக்குதலாய் பார்க்கப்படுகிறது. இது அன்பின் அதீதம்; இயலாமையின் இலக்கணமாகக் கூட இருக்கலாம். எதுவாகினும், அதுபோன்ற உறவுகளை இச்சமுதாயம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. ‘கள்ளக் காதல்’ என்ற பதத்தால், பாதை புதிது தெரிவோரை பதம் பார்க்கவே முயலும். இதற்கெல்லாம் தீர்வாக, எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்ந்தால் பிரச்சனையே இல்லை என்கிறார்கள் சில அறிவுஜீவிகள். எதிர்பார்ப்புகள் இல்லாமல், விட்டுக் கொடுத்து, நம் வாழ்வை பிறர் வாழ ஒப்புக்கொடுத்து, ஜடமாய் நாம் வாழ்ந்து என்ன பயன்? அப்படியானால் தீர்வுதான் என்ன? வெறும் ஹார்மோன்களின் தூண்டல்களைக் காதல் என்று புரிந்துகொள்கிற மனதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஆதிமூலம். இதே போலிப் புரிதலோடு குடும்பம் என்கிற அகண்ட நிலத்தில் கால்வைக்கும் எவரும் இத்தகைய எதிர்வினைகளைச் சந்தித்தே ஆகவேண்டும். காதலில் இணைதலில் இருக்கிற சுதந்திரமும், ஏற்பும் விலகலிலும் இருத்தல் அவசியம். அதற்கு முதலில் காதல், கற்பு, தாலி, குடும்பம் போன்றவையெல்லாம் புனிதம் என்கிற நம் மனநிலை மாறவேண்டும். இதன்வழி, கள்ளக் காதல்களால் குற்றங்களே நிகழவில்லை என்பது என் கூற்று அன்று. உரியவர் தம் காதலை தந்துவிட்டாள் ‘கள்ளக் காதல்’ என்ற சொல் நிரந்தரமாய் ஒழியும்; தர இயலாதவர் தாம் சாகும்வரை இதுபோல் குற்றம் பேசியே மடிவர். ‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்கிறார்கள். ஆனால், அவை சொர்க்கமாக அமைகிறதா என்பது வினாக் குறி. காதல் போலியாகும்போது, மீண்டும் பிறக்கும் காதல் எப்படி ‘கள்ளக் காதல்’ ஆகும்? உங்கள் மனதையும் சற்று பேசவிடுங்கள். அது சொல்லட்டும், உங்கள் காதலின் அசல் மற்றும் போலிப் பட்டியல்களை. -- கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். தொடர்புக்கு: [email protected] ![]() எங்கள் விடுதியில் காதலிக்க அனுமதி இல்லை என்றாலும், காதலோ யார் அனுமதியையும் கேட்காமல் வந்துகொண்டுதான் இருந்தது. அங்கு பலரும் அதன் மாயக் கரங்களால் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். கால ஓட்டத்தில் காட்சிகள் மாறிவிட்டன. ஆனால், நினைவுகளோ நிலைத்துவிட்டன. நான் 6-ஆம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் எங்கள் வகுப்பில் அமைதியாகத்தான் இருப்பேன். நொண்டிச்சாமி, வேலுச்சாமி, பாண்டிமல்லையன், காளிரத்தினம் என ஒரு பையன்கள் பட்டாளம் எங்கள் வகுப்பில் இருந்த ஒரு பெண்ணின் மனதில் முட்டி மோதி இடம்பிடிக்கப் போராடிக்கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் பெயர் வரும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து வகுப்பில் பாடுவது, ஹரிஹரன் பாடல் வரிகளை கவிதையாய் ஒப்பிப்பது என அவர்களது பெர்ஃபாமன்சுகள் தூள் பறந்தன. நானோ, காதலென்றால் காத தூரம் தள்ளி ஓடிவிடுவேன். காதலை ஒரு கெட்ட வார்த்தையாகவே நான் கருதினேன். அந்த நேரத்தில் நான் எவ்வளவு வெகுளியாக இருந்தேன் என்றால், என் வகுப்பில் ஒரு பையன் பேச்சுவாக்கில் ‘புருசன் பொண்டாட்டி’ என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டான். உடனே நான், நரம்புகள் புடைக்க, “டீச்சர்! இவன் புருசன் பொண்டாட்டினெள்ளாம் சொல்லுறான்” என கம்ப்ளைண்ட் செய்தேன். உடனே அந்த டீச்சரும், இந்த வயசுல பேசுற பேச்சானு அவனை அடி வெளுத்துக் கட்டிட்டாங்க. பின் எனது பெருமையை விடுதி முழுவதும் பரப்பினேன். அதில் கொடுமை என்னவென்றால், அவன் ஒருமுறை சொன்ன ‘புருசன் பொண்டாட்டி’ என்ற சொற்களை, நான் அன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட முறை சொல்லியிருப்பேன். அமைதியாய், அதிர்ந்து பேசினால் அழுதுவிடுபவனாய், எந்நேரமும் புத்தகமும் கையுமாய், வகுப்பின் மூலையில் அப்பாவியாய் அமர்ந்திருப்பேன். ஆனால், அந்தப் பெண் என்னிடம்தான் பேசினாள்! அப்படியே காதலும் மலர்ந்தது. நான் காதலில் மிதக்கத் தொடங்கிய உடனே, அந்த பெண்ணோட பெயரை என்னோட நோட்டுல எழுதிப்பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அங்கேதான் எனக்கொரு சந்தேகம் வந்தது. அந்தப் பெண்ணோட பேருக்கு, சின்ன ‘ரா’ வருமா, பெரிய ‘றா’ வருமா? அந்த சந்தேகத்த எப்படித் தீர்ப்பது என யோசித்துக் கொண்டிருந்தேன். அன்று இரவு எங்கள் விடுதியின் வழிபாட்டுக் கூட்டத்தில், தன்னிடம் தெரிவிக்கப்பட்ட புகார்களை வார்டன் விசாரிக்கத் தொடங்கினார். அந்தப் புகார் என்னவென்றால், கண்ணதாசன் அண்ணன் தன்னோட காதலியின் பிறந்தநாள், வயது போன்ற விவரங்களை அறிந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். பார்வையற்றவர்கள் தொடர்வண்டியில் கட்டணச் சலுகையைப் பெற ஒரு அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். அந்த அட்டையை, அந்த அக்கா வகுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார். பார்த்துவிட்டுத் தருவதாக அதை வாங்கிய கண்ணதாசன் அண்ணன், அதில் உள்ள பிறந்தநாள் விவரங்களை பார்த்துவிட்டு, சொன்னது போலவே திருப்பிக் கொடுத்துவிட்டார். இங்க பிரச்சன என்னனா, இவர் நோட் செய்ததை இன்னொருத்தனும் நோட் செய்திருக்கிறான். அப்படியென்றால், ஒரே பெண்ணை இரண்டு பேர் காதலிச்சாங்களானு கேட்கக் கூடாது. அவர் அந்த அட்டையை வாங்கி என்ன செய்தார் என்பதை இன்னொருத்தன் நோட் செய்து, வார்டன் காதுல ஓதிட்டான். நியாயமா அவர் என்ன சொல்லியிருக்கணும்? ‘பள்ளிக்கூடம் என்னோட கண்ட்ரோலுல வராது. விடுதிதான் நம்ம லிமிட்டு’னு சொல்லியிருக்கணும். ஆனால் அவரோ, ஒரு ஆக்ஷன் பிளாக் மாட்டிருச்சுன்னு வெளுத்து வாங்கிட்டாரு. இந்தக் கம்ப்ளைண்டிலிருந்து எனக்கான ஐடியாவப் புடிச்சேன். வகுப்பில் ஒரு மதிப்பெண் தேர்வு வைக்கப்பட்டால் பாண்டிமல்லையன்தான் விடைத்தாள்களை வாங்கி ஆசிரியரின் மேசையில் அடுக்குவான். “எத்தன நாளுதாண்டா நீயே வாங்கி அடுக்கி சிரமப்படுவ? இனிமே, நீ ஒரு மாசம்; நான் ஒரு மாசம் பொறுப்ப எடுத்துக்குவோம்” எனக் கூறி, அவனை ஐஸ் வைத்து, பொறுப்பை வாங்கி, அந்த பிள்ளையோட பேருக்கு என்ன ‘ரா’ வரும் என்பதை கண்டுபிடித்துவிட்டேன். அந்த சமயத்தில் ஃபிலேம் போட்டுப் பார்ப்பது பிரபலமாய் இருந்தது. எனக்குத் தமிழே ததீங்கினத்தோம் போடுது; ஆங்கில அறிவு சுத்தம். பாண்டிமல்லையனிடமிருந்து வாங்கிய அந்த பொறுப்பை தொடர்ந்து செவ்வனே ஆற்றியதால், அந்தப் பெண்ணின் பெயருக்கான ஸ்பெல்லிங்கையும் கண்டுபிடித்துவிட்டேன். ஃபிலேம் போட்டுப் பார்த்ததில் மேரேஜ் என ரிசல்ட்டும் வந்தது. அப்படியே காலங்கள் உருண்டோடின. “சக்தி இங்க வாயா” என அழைத்த காந்த ரூபன், கடச்சனேந்தலிலிருந்து வாங்கி வந்த சிக்கன், கொத்துப் புரோட்டா என அனைத்தையும் என்னிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான். ஒன்றும் புரியாமல் அதை வாங்கியபோது, “ஒரு புள்ள என்ன காதலிக்கிறேனு சொல்லிருச்சுயா. இன்னைக்கி நீ என்ன வேணுமோ கேளு. நான் வாங்கித்தாரேன்” எனச் சொல்லியவன், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்த பின், மொட்டை மாடிக்குச் சென்று நண்பர்களிடம் இதை விவரித்துக் கொண்டிருந்தேன். கூட்டத்திலிருந்த சசிக்குமார் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தான். காரணம் கேட்டபோது, “நான்தான்டா அவன்கிட்ட ஃபோனுல பொம்பள குரலுல பேசுனேன். அந்த கண்றாவிக் குரலயுமா அவன் கண்டுபுடிக்கல? என்ன செய்றது சக்தி, காதல் கண்ண மறச்சுருச்சுபோல; இல்ல, இல்ல காத அடச்சுருச்சு போல. ஆனா, நீ எல்லாம் நல்லா இருக்க மாட்டடா. வெத போடுறவன் ஒருத்தன்; பழம் திங்கிறது நீயா?” என நொந்துகொண்டான். எங்கள் விடுதியில் எத்தனை காதல் ஜோடிகள் இருக்கின்றன என்பதை விருந்து சாப்பாட்டின்போது கண்டுபிடித்துவிடலாம். விருந்தில் பரிமாறப்படும் லட்டு, வாழைப்பழம், ஐஸ்கிரீம் என எல்லாவற்றையுமோ அல்லது அதில் சிலவற்றையோ தங்கள் காதலனுக்கு 6, 7-ஆம் வகுப்பு சிறுவர்களிடம் கொடுத்து கொடுக்கச் சொல்வார்கள். இப்படித்தான் எங்கள் விடுதிப் பிள்ளைகள் உச்சபட்ச அன்பை பரிமாறிக்கொண்டனர். அந்த சிறுவர்களை கண்காணித்தும், நேரடியாகக் கண்டவற்றையும், செவிவழியாய் கேட்டவற்றையும் கொண்டு ‘டாப் 10’ ஜோடிகளை வரிசைப்படுத்தி, நாங்கள் மாதந்தோறும் வெளியிட்டு வந்தோம். அதில் ஒவ்வொரு மாதமும் ‘ஃபோக்கஸ் லைட்’ ஜோடிதான் முதலிடம் பிடிக்கும். எங்கள் நிறுவனத்தின் பெயர் பதித்த கோபுரம் ஒன்று இருக்கும். அதன் இரண்டு பக்கமும் ஃபோக்கஸ் லைட் போடப்பட்டிருக்கும். அதற்கு கீழே இருக்கும் பெஞ்சில்தான் அந்த ஜோடி எப்போதும் அமர்ந்து பேசிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருக்கும். அதனால்தான் அந்த ஜோடிக்கு அப்பெயர். இருவரும் சிறப்பாக படிக்கக் கூடியவர்கள். நாங்கள் கொடுத்த முதலிடம் சரி என்பது போல்தான் அவர்களது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அமைந்திருந்தன. இருவருமே ஒரே மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடிப்பவர்களின் பெயர்கள் ஒரு பெரிய பலகையில் எழுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். அப்படி அந்தப் பலகையில் இருவரது பெயரும் அருகருகே இடம்பிடித்துவிட்டது. அவர்களைத் தவிர வேறு யாரும் I.A.B. பள்ளி வரலாற்றில் இதுவரை இருவராக முதல் மதிப்பெண் எடுத்ததில்லை! மதுரை சுந்தரராஜன்பட்டியில் உள்ள I.A.B. பள்ளிக்குச் சென்றால் நீங்கள் அவர்களது பெயர்களைப் பார்க்கலாம். I.A.B. இருக்கும்வரை அவர்களது பெயர்கள் நிலைத்திருக்கும். -- தொடர்புக்கு: [email protected] ![]() வரும் பிப்ரவரி 27-ஆம் தேதியோடு எழுத்தாளர் சுஜாதா அமரராகி 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தமிழிலக்கியத்தில் அறிவியலுக்கு வடிகாலமைத்துத்தந்த சீரிய சிந்தனையாளரது படைப்பை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள், சுஜாதா எத்தகைய சீரிய சிந்தனையாளர் மற்றும் அரசியல் அறிஞரென்பதைப் பார்க்கலாம். பேரைக் கேட்கும்போதே நம்மை எதிர்பார்ப்புக்கு ஆட்படுத்தும் தலைப்பு, ‘பதவிக்காக’. ஆம், படிக்கத் துவங்கும்போதே தேர்தல் முடிவுகள். இங்கே தொடங்கும் நம் பயணத்தை, புத்தகத்தின் இறுதி பாகத்தை, இறுதிப் பத்தியை, இறுதி வரியை, இறுதிச் சொல்லைப் படித்தும் நம்பாமல், அடுத்த பக்கம் இருக்கிறதா அல்லது நாம் படிக்கும் புத்தகம் பாதியிலேயே நிறைவுற்றதா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பது அமரர் சுஜாதாவின் தனித்தன்மை. நூல் முழுவதும், அரசியல் சதுரங்கத்தின் அத்துனை அம்சங்களையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இக்கதையின் மூலப் பாத்திரம் தன்ராஜ் என்கிற இராஜ்குமார். இருபத்தொன்பது வயது நிறைவுபெற்ற இவர், இராமராஜபுரம் எனும் சட்டமன்றத் தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியடைகிறார். இந்தப் பாத்திரம் ஒரு புரிந்துகொள்ளமுடியாத, சுவாரசியம் நிறைந்த ஒன்று. நீங்க நல்லவரா, இல்ல கெட்டவரா? எனக் கேட்கும் அளவிற்கு குழப்பமும், அதே அளவு அனைவரும் இரசிக்கும்படியான பாத்திரமாகவும் அமைந்திருக்கும். கிட்டத்தட்ட அமைதிப்படை அமாவாசையை தன்ராஜ் வார்த்தைகளின்மூலம் கண் முன்னே கொண்டு வருவார் ஆசிரியர். ஒரு சிறு வித்தியாசம், இவர் அல்வா கொடுக்கவில்லை; மாறாக வீட்டை வாடகைக்குக் கொடுப்பார். யாருக்கு என்றால், தனது முன்னாள் காதலிக்கு! ஜமுனா என்கிற அந்தப் பெண்ணை படிக்கும் பருவத்திலேயே காதலித்து, திருமணத்திற்குப் பின்பு கிடைக்கவேண்டிய இன்பங்களின் எல்லைக்கு திருமணத்திற்கு முன்பே கொண்டுசென்றுவிட்ட காரணத்தால், ஜமுனாவின் தந்தை இடமாறுதல் கோரி ஓடவேண்டி வந்தது. அவர்களது அந்தப் பிரிவு இந்தத் தேர்தல் வெற்றி மூலம் முடிவுக்கு வருகிறது. அதுவும் யாரால் என்றால், தன்னால் தோற்கடிக்கப்பட்ட சின்னப்பன் என்கிற ஆளுங்கட்சி உறுப்பினரால். ஆச்சரியமாக உள்ளதா? ஆம். இங்கேதான் அரசியல் போர் துவங்குகிறது. ‘அரசியல் ஒரு இரத்தம் சிந்தா யுத்தம்’ எனும் ஆங்கில பொன்மொழியின் உண்மை, இங்கிருந்து நமக்குப் புலப்படும். தன்ராஜின் மனைவி திலகவதி. பெயருக்கேற்றார்போலவே மிகவும் அமைதியான, பக்திமார்க்கமான பாத்திரம். ஆனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரம். சட்டமன்றத்தில் பதவியேற்கச் செல்லும் தன்ராஜ், அனைவராலும் வியப்போடு பார்க்கப்படுகிறார். முதல்வர் துவங்கி, ஆளுங்கட்சியின் கடைக்கோடி கேடுகெட்ட உறுப்பினர் வரையில் தன்ராஜ் தேவைப்படுகிறார். சிலருக்கு ஆட்சியில் மாறுதல் கொண்டுவர, சிலருக்குக் குழி பரிக்க என ஆசிரியர் பல கோணங்களில் அவரது தேவையின் வீரியத்தை காட்டியிருப்பது சிறப்பு. இங்கே அறிமுகமாகிறது அரங்க ராமானுஜம் எனும் அரசியல் பூதமொன்று. அவன் ‘க்காத பெண்களில்லை’ என முதல்வரே தன்ராஜிடம் கூறுவது, இராமானுஜத்தின் முகத்திரையை நன்றாய் வெளிப்படுத்தும். இங்கிருந்து ஒரு முக்கோண அரசியல் விளையாட்டிற்குள் நாமனைவரும் இழுத்துச் செல்லப்படுவோம்; நம் விருப்பத்தோடுதான். ஒருபக்கம் அரங்க இராமானுஜத்தின் மன்மத லீலைகள், மறுபக்கம் அரசியல் சதுரங்கத்தின் கூரிய நகர்தல்கள், மற்றொருபக்கம் தன்ராஜ், ஜமுனாவின் புதுப்பிக்கப்பட்ட உறவு என்ற ஆசிரியரின் பாணி அருமை. இந்த சுவாரசியங்களுக்கிடையே வருகிறார், ஜமுனாவின் ஆண்மைக் குறைபாடுள்ள கணவரான கோவிந்தராவ். படிக்கும்போது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவர் இந்த கோவிந்தராவ். இறுதியில் அவர் செய்யும் அந்தக் கொடூரத்திற்கு நாம் அவரை குற்றவாளியாக்கவும் முடியாது; அதை ஞாயப்படுத்தவும் முடியாது. வீட்டுக்கு வரும் கோவிந்தராவ், அடுப்பில் பருப்பு தீய்ந்துக்கொண்டிருப்பதைப் பார்த்து ஜமுனாவைத் தேடி கீழே இறங்கி வருகிறார். சாளரத்தின் வழியே ஏதோ சத்தம் கேட்க, சற்று தலையை நீட்டிப் பார்க்கிறார். ஆணா, பெண்ணா எனத் தெரியாத இரு உடல்கள் பின்னிப் பிணைந்திருப்பதைப் பார்க்கிறார். “நீங்க முன்ன மாதிரியில்ல, வெய்ட் கூடிட்டேள்" எனும் குரலைக்கேட்டு, அவர் விரல் நகங்கள் அவரையே அறியாமல் கடையிலிருந்து வாங்கிவந்த வாழைக்காயில் பதிகின்றன. நடந்த சம்பவத்தைப் பற்றி ஜமுனா கூறியபோது, ஒன்றும் நடவாததுபோல் இயல்பாக அடுத்த வேலையை பார்க்கிறார் கோவிந்தராவ். தன் மனைவி வேறொரு ஆணால் கர்ப்பமாகியிருக்கிறாள் எனும் தகவல் அறிந்தபோதும் ஒன்றும் நடவாததுபோல் இருக்கிறார். இது நம்மைச் சிந்திக்கவும், சினம் கொள்ளவும் செய்யும் அதே தருணத்தில், அந்த அமைதிக்குப் பின்னால் இருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அந்த அமைதி, பின்னால் வெடிக்கவிருக்கும் எரிமலையின் அமைதியென்பதை யூகிக்க இயலாதவாறு கதை நகரும். இதற்கிடையே, அரங்க இராமானுஜத்திற்கும் தன்ராஜுக்கும் பகை வளர, இராமானுஜத்தின் ஒரு சாமியார் சீடியை தேடி தன்ராஜ் பயணிக்கிறார். அவரோடு மூன்று பத்திரிக்கையாளர்கள் இணைகின்றனர். அங்கிருந்து, கதை பலகோணப் போட்டியில் அசுர வேகமெடுக்கிறது. இறுதியில் இந்த பலகோணப் போட்டி நாம் எதிர்பார்க்காத ஒரு இடத்திலேயே முடிகிறது. இங்கு ஆசிரியர் சுஜாதா மீது நமக்குச் சற்று கோபம் வருவதற்கும் வாய்ப்புண்டு. ஆனால் என்ன செய்வது? அதுதான் அரசியலின் அபரிமிதமான முகம். எப்படி ஆசிரியர் பின்வரப்போகும் அரசியல் நிகழ்வுகளை அப்போதே உணர்ந்திருக்கிறாரென நினைக்கையில் வியப்பாய் உள்ளது. ஆட்சி கவிழப்போகிறது என்ற தருணத்தில், முதல்வர் ஆறுமுகமும் பகை கொண்ட அரங்க இராமானுஜமும் கட்சி உறுப்பினர்களை தத்தம் இடத்தில் அடைத்துவைப்பது போன்ற காட்சியின்மூலம் கடந்த ஆண்டு கூவத்தூரில் நடந்த கேளிக்கையை அப்படியே நம் முன் கொண்டுவந்திருப்பார் ஆசிரியர். பதவிக்கு வந்தா ஆறு மாசத்துல தமிழ்நாட்டோட தண்ணிப் பஞ்சத்த போக்கிடுவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, காரில் ஏறியதும், “ஏலே! ஆறு மாசத்துல மழ வந்திடாது?” எனக் கேட்பது, நம் தலைவர்கள் நம்மீது கொண்டிருக்கும் மனப்பான்மையைப் பரிபூரணமாய் காட்டுகிறது. அனைவரும் படித்து இன்புற வேண்டிய புத்தகம் ‘பதவிக்காக’. படித்து முடித்ததும் அரசியலின் ஆழத்திற்கே சென்று முத்தெடுத்து வந்தது போன்ற உணர்வு ஏற்படும். அத்தகைய உணர்வு ஆசிரியருக்கான வெற்றியென்றால் அது மிகையாகா. ‘தவறுகள் செய்வது மனித இயல்பு; துரோகம் செய்வதும்தான்’ என ஆசிரியர் கூற சுருங்கக் கூறின், அரசியலைப் படிக்க வேண்டுமா? படியுங்கள், ‘பதவிக்காக’. -- தொடர்புக்கு: [email protected] ![]() சில பாடல்களைக் கேட்டால், உங்கள் வாழ்வின் ஏதோ ஒரு முக்கியமான நாள் நினைவுக்கு வரலாம். திரு. திண்டுக்கல் I. லியோனி ஐயா தன் கற்பனை கலந்து நகைச்சுவையாக ஒரு நிகழ்வைச் சொல்வார். பழைய பாடல்களை ஒலிக்கவிட்டபடியே தன் காரை ஒருவர் ஓட்டிச் செல்கிறார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ என்ற பாடல் ஒலிக்க, தன் வாகனத்தைக் குதிரையாகக் கருதிக்கொண்டு இன்னும் வேகம் பிடிக்கிறான். இப்படி வேகத்திற்கு அடுத்தடுத்து சில உதாரணங்களைச் சொல்லிவிட்டு, இறுதியில், வண்டி ஒரு மரத்தில் மோதி கவிழும்போது, காரில் மிகச்சரியாக அந்தப் பாடல் ஒலிப்பதாகத் தனக்கே உரிய பாணியில் வரிக்கு வரியாய் விவரிப்பார் லியோனி. அந்தப் பாடல், ‘ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? பிறந்ததோர் குற்றம் என்ன?’ இப்படி நம் வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு பொருந்திப்போகிற சில பாடல்களையும், சில நிகழ்வுகளின்போது எங்கோ ஒரு மூலையிலிருந்து அசரீரியாய், சூழலுக்குப் பொருத்தமாக ஒலிக்கிற பாடல்களையும் நம்மால் வாழ்நாள் முழுக்க மறக்கவே இயலாது. அப்படி எனக்குள்ளும், அந்த ஒரு நாளை எப்போதும் ஒரு சுவையான நினைவாக மாற்றிவைத்திருக்கிற பாடல் ஒன்று இருக்கிறது. அது என்ன நாள்? அது என்ன பாடல்? உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு விடையாக விரிகிறது 2005 மார்ச் 27-ஆம் தேதியான சென்னையின் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நண்பன் காதலில் விழுந்தால் நமக்கும் ஒரு காதல் இலவசம் என்பதைப்போல, நண்பன் காதலியின் தோழிக்கு நான் தோழன். ஒரு கட்டத்திற்கு மேல், தோழமை காதலாக இருவர் உள்ளத்திலும் பரிணாம வளர்ச்சி பெற்றிருந்ததில் இருவருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால், வெளிப்படுத்துவதில்தான் அதே பழைய சிக்கல். யார் முதலில் சொல்வது? மிகச்சரியாக அந்த மாதத்தில், திரு. சுந்தர் சி. அவர்களின் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘தக திமி தா’ என்ற படத்தின் ‘காதலை யாரடி முதலில் சொல்வது நீயா, இல்லை நானா?’ என்ற பாடல்தான் என் மனதில் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால், இங்கு நான் குறிப்பிடப்போவது அந்தப் பாடலை அல்ல. ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்கொள்ளாமலேயே, பேசியும் பழகியும் வந்த எங்களின் சந்திப்பிடங்கள் பிரத்தியேகமானதில்லை. பெரும்பாலும் பயிற்சி மைய வளாகம் அல்லது அருகருகே அமர்ந்து பயணிக்கிற 66-ஆம் எண் கொண்ட பேருந்து. எனவே, மார்ச் மாத கடைசி ஞாயிறு அன்று மெரினா செல்வதெனத் திட்டம். நடந்துகொண்டிருக்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தை மனம் விட்டுப் பேசி, ஒரு முடிவுக்குக் கொண்டுவர அப்படி ஒரு இடம் எங்களுக்குத் தேவைப்பட்டது. நோக்கம் பொதுவானது என்றாலும், இதையும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவில்லை. பிற்பகல் வெயிலில் கைபிடித்துக் கடற்கரை மணலில் நடந்துகொண்டிருந்தோம். மணல் பரப்பிற்குள் அமிழ்ந்து வெளிவரும் எங்கள் கால்களைப்போல, இருவரின் மனமும் வினாடிக்கு வினாடி தைரியத்தை வரவழைப்பதும், பின் துரத்துவதுமாக இயங்கிக்கொண்டிருந்தது. முற்றிலும் நோக்கத்திற்குத் தொடர்பில்லாத ஏதேதோ பொருள்களின்மீது பேச்சு சென்றுகொண்டிருந்தது. எப்படி ஆரம்பிப்பது என்பதில் இருவருக்குமே தயக்கம். எல்லாவற்றையும் ஒரே வினாடியில் உடைத்துப்போட்டது எங்கோ ஒரு கடையின் கூடாரத்தைத் தாண்டி ஒலித்த அந்தப் பாடலின் வரிகள். ‘பூவென்ன சொல்லும் என்று காற்றறியும் காற்றென்ன சொல்லும் என்று பூவறியும் நான் என்ன சொல்ல வந்தேன் நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தான் அறியும். வானவில் என்ன சொல்ல வந்ததென்று மேகமே உனக்கென்ன தெரியாதா? அல்லிப்பூ மலர்ந்தது ஏன் என்று வெண்ணிலவே உனக்கென்ன தெரியாதா?’ ஹரிஹரனோடு நானும் சேர்ந்துகொள்ள, கைப்பற்றி நடந்துகொண்டிருந்த அவளின் பிடி கொஞ்சம் இறுகத் தொடங்கியதில் எல்லாம் தொடங்கியது; இன்றும் தொடர்கிறது. ஆம்! ‘செம்பருத்திப் பூவே! செம்பருத்திப் பூவே! உள்ளம் அள்ளிப் போனாய் நினைவில்லையா?’ என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படமான ‘காதல் சொல்ல வந்தேன்’ இதுவரை வெளியானதாக நினைவில்லை. ஆனால், அதே தலைப்பில், எங்களின் திரைக்கதையில், காதல், திருமணம், குழந்தை என இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துவிட்டன. முதல் பாகத்தை அசைபோடுகிற ஆசையில், இதோ பாடலை ஒலிக்கவிட்டு உங்களோடு நானும் கேட்கப்போகிறேன். (பாடலைக் கேட்க) ...ரதம் பயணிக்கும் -- தொடர்புக்கு: [email protected] |