- தலையங்கம்: ‘விரல்மொழியர்’-பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்
- கவர் ஸ்டோரி: பார்வையற்றோர் வாழ்வில் 2017 – ரா. பாலகணேசன்
- கவிதை: பார்வையற்றவன்
- ஜனவரி 4, பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்படுமா? – ப. சரவணமணிகண்டன்
- சினிமா: பத்மாவதிக்கு என்ன பிரச்சனை? – ராசு மகன்
- பேட்டி: டாப் 10 கணேஷ், யாசர் – ரா. பாலகணேசன்
- பெண்கள் பக்கம்: உயிர் தரும் முதல் உணவு – X. செலின்மேரி
- தொழில்நுட்பம்: இது எங்களுக்கான கண் – பொன். குமரவேல்
- இசை: ராகரதம் – ப. சரவணமணிகண்டன்
- அனுபவம்: பயணங்களின் நினைவுகளில் – ஜோ. யோகேஷ்
- புகழஞ்சலி: சதுரங்க நாயகன் பேரா. K. முத்துராமன் – ம. பாலகிருஷ்ணன்
- நூல் அறிமுகம்: சீதாயணம் – ரா. பாலகணேசன்
4 Comments
![]()
பார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காக பார்வையற்றவர்களே துவங்கும் முதல் தமிழ் மின்னிதழ் ‘விரல்மொழியர்’. இம்முயற்சியில் பங்கேற்க, இம்முயற்சியை ஆதரிக்க பார்வையற்ற படிப்பாளிகளையும் படைப்பாளிகளையும் வரவேற்கிறோம்.
பார்வையுள்ளவர்களுக்கு இணையாக இன்று பார்வையற்றவர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் அதன் பயன்பாடு பெரும்பாலும் படிப்பு, பொழுதுபோக்கு அல்லது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் என்கிற குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்கிறது என்பதைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இயல்பிலேயே அதிகமான சிந்தனை ஆற்றலையும் உயர்கல்வியில் மொழிப் பாடத்தைப் படிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் பார்வையற்றவர்கள், எழுத்துலகில் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டாதது சிந்திக்கவேண்டிய ஒன்று. அப்படியே வெகுசிலர் எழுதினாலும், அது பரவலாக வாசகர்களைச் சென்றடையாததும் அவர்களுக்கு சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்தியிருக்கும். இந்தச் சூழலை மாற்ற, பார்வையற்ற படைப்பாளிகளை ஒருங்கிணைக்க, அவர்களின் எழுத்துக்களை பார்வையற்ற வாசகர்களிடம் மட்டுமல்லாமல் பார்வையுள்ளவர்களிடையேயும் ஒரு தரமான மின்னிதழாக கொண்டுசேர்க்க ‘விரல்மொழியர்’ என்கிற எங்கள் இணைய இதழ் முயற்சியில் இணைந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம். இதழ் முழுக்க படைப்பாளிகளின் சொந்தப் படைப்புகளை மட்டுமே இடம்பெறச் செய்யவேண்டும் என்பது எங்களதுத் திட்டம். விளையாட்டு, சினிமா, அரசியல், தொழில்நுட்பம், சொந்த அனுபவப் பகிர்வுகள், கவிதைகள் மற்றும் கதைகள் என பார்வையற்றவர்களின் சொந்த படைப்புகள் அனைத்தும் இதழில் பிரசுரிக்கப்படும். இவைத் தவிர, கவர் ஸ்டோரி மற்றும் பேட்டிகளும் இடம்பெறும் வகையில் திட்டமிட்டிருக்கிறோம். எனவே, தங்களின் ஆக்கம் கவர் ஸ்டோரியாகவும், நம் பார்வையற்றோர் சமூகத்தில் குறிப்பிடத்தக்க நபராக நீங்கள் அடையாளம் காணும் நபரின் பேட்டியாகவும் இருக்கலாம். பார்வையுள்ளவர்களின் பார்வையற்றோரைப் பற்றிய படைப்புகளும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும். எந்த நிறுவனமும் சாராமல், முழுக்க நண்பர்கள் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி இது. இதில் தங்களையும் இணைத்துக்கொண்டு இதழியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வாருங்கள். ‘விழிச்சவால்’ பிரெயில் மாத இதழின் இணையாசிரியர் திரு. ரா. பாலகணேசன்; சமூக வலைதளங்களில் ‘அறவழிச்சாலை’ என்கிற குழுமத்தில் பார்வையற்றவர்களின் கல்வி தொடர்பாகவும், அரசியல் விமர்சனங்களையும், அன்றாட வாழ்க்கை அனுபவங்களையும் பதிவிட்டுவரும், புதுக்கோட்டை அரசு பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியின் ஆசிரியர் திரு. ப. சரவணமணிகண்டன்; ‘வெளையாட்டுப்பய’, ‘பார்வையற்றவன்’ போன்ற புனைபெயர்களில் சமூக வலைதளங்களில் எழுதிவரும் காந்திகிராம் பல்கலையின் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வன். பொன். சக்திவேல்; IAB நிறுவனத்தின் சென்னைக் கிளையில் பணியாற்றிவரும் செல்வன். பொன். குமரவேல்; இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றிவரும் செல்வன். ஜோ. யோகேஷ் மற்றும் செல்வன். ரா. சரவணன் ஆகியோர் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய படைப்புகளையும் இதழ் குறித்த தங்களின் எதிர்பார்ப்புகளையும் எங்களோடு பகிர்ந்து, பார்வையற்றவர்களுக்கான முதல் தமிழ் மின்னிதழ் முயற்சியில் இணைந்திட உங்கள் அனைவரையும் அழைக்கிறது உங்கள் ‘விரல்மொழியர்’. வாருங்கள்! நாம் உணர்ந்ததைச் சொல்வோம் உலகிற்கு! ![]() 2017 பார்வையற்றோருக்கு எப்படி இருந்தது? ஒரு சுருக்கமான பார்வை. தமிழகம் *மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் 2016இன் படி மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3%லிருந்து 4%ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இதில் பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீடு ஏற்கெனவே இருந்ததுபோல 1%ஆகவே தொடரும். *7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஊதிய விகிதங்களின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப் படி (Conveyance Allowance) ரூ.1000லிருந்து ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. *புதுக்கோட்டை அரசு பார்வையற்றோருக்கான தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. *மதுரை IAB நிறுவனத்தால் நடத்தப்படும் ’விழிச்சவால்’ பிரெயில் மாத இதழ் இணையத்திலும் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் இணையத்தில் வெளியிடப்படும் முதல் தமிழ் பிரெயில் இதழ் என்ற பெருமையைப் பெறுகிறது ‘விழிச்சவால்’. *மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கு என தனிப் பூங்கா மதுரையில் அமைக்கப்பட்டது. *மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக இந்த ஆண்டின் தேசிய விருது வழங்கப்பட்டது. *பார்வையற்றோருக்கான முதல் தமிழ் மின் நூலகமாக www.vaasippom.com தொடங்கப்பட்டது. தன்னார்வலர் ரவிக்குமார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் பல்வேறு வகைகளிலான தமிழ் நூல்கள் படிக்கக் கிடைக்கின்றன. இந்தியா *பார்வை இழப்பிற்கான வரையறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 6 மீ. தூரத்தில் கை விரல்களை எண்ணிக் கூற முடியாமையே பார்வை இன்மையாக இதுவரை கருதப்பட்டது. தற்போது 3 மீ. தூரத்தில் கை விரல்களை எண்ண முடியாதவர்களே பார்வை இழந்தவர்களாகக் கருதப்படுவர். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையின் அடிப்படையில் இம்மாற்றத்தை மைய அரசு அறிவித்துள்ளது. இந்த அடிப்படையில் பார்வையற்றோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. *புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட GST வரி விதிப்பில் பிரெயில் எழுதுபொருட்கள், வெண்கோல்கள் முதலியவற்றுக்கு 12% முதல் 18% வரை வரி விதிக்கப்பட்டது பார்வையற்றோருக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு வரி விகிதம் 5%ஆக குறைக்கப்பட்டது. *புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.50, ரூ.200 ஆகியவை பார்வையற்றோருக்கு ஒத்திசைவாக இல்லை என பலரும் கருதுகின்றனர். இதுகுறித்து தன்னார்வ அமைப்புகள் நீதிமன்றங்களை நாடியுள்ளன. *பிராச்சி சுக்வானி என்ற குஜராத்தைச் சேர்ந்த பார்வையற்றவர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM) உயர்கல்வி பெறுவதற்கான தகுதியைப் பெற்றார். *பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. NABயோடு இணைந்து ‘Blind Dreams’ என்ற அமைப்பு நடத்திய இப்போட்டியில் டெல்லியைச் சேர்ந்த சிம்ரன் சாவ்லா என்ற கல்லூரி மாணவி ‘Princes India’ பட்டம் பெற்றார். *பார்வையற்றோருக்குச் சிறப்புப் பள்ளிகளில் வழங்கப்படும் சிறப்புக் கல்வி அவசியம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. உலகம் *அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் லெப்டினென்ட் கவர்னர் என்ற உயர் பொறுப்பிற்கு சய்ரஸ் ஹபீப் என்ற பார்வையற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அறிவியல் *பார்வையற்றோரையும், அவர்களுக்கு உதவ விரும்பும் தன்னார்வலர்களையும் இணைத்திடும் ‘Be My Eyes’ என்ற செயலி தற்போது ஆண்டிராய்டு இயங்குதளத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் பார்வையற்றவர்கள் பார்வையுள்ளோரிடம் கேட்க விரும்பும் சின்னச் சின்ன ஐயங்களையும் கேட்டுத் தெளிவுபெறலாம். அதாவது பார்வையற்றவர்களின் கண்களாக செயல்பட விரும்பும் பார்வையுள்ளோர் இச்செயலியில் இணைந்திருப்பர். தமிழ் பேசும் பார்வையுள்ளோர் பலரும் இச்செயலியில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். *முகநூலில் உள்ள ஸ்டிக்கர்களைப் பார்வையற்றோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அதன் விவரணைகளை திரை வாசிப்பான் (Screen Reader) மூலம் கேட்கும் வசதி இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. *கூகுல் நிறுவனம் ‘Visual Position System (VPS)’ என்ற வசதியைத் தயாரித்துவருகிறது. இந்த செயலி பார்வையற்றோருக்குப் பொது இடங்களில் பயன்படும். பொது இடங்களில் உள்ள வசதிகள், அவை அமைந்திருக்கும் திசைகள் முதலியவற்றை இச்செயலி தெளிவுபடுத்தும். பொழுதுபோக்கு *இந்த ஆண்டு பார்வையற்றவரைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு ‘அதே கண்கள்’ என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தின் நாயகன் தொழில்நுட்ப அறிவு மிகுந்த பார்வையற்றவராகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். *ஜீ.வி. பிரகாஷ் இசை அமைக்கும் ‘அடங்காதே’ படத்தில் பாடுகிறார் ஜோதி என்ற 16 வயது நிரம்பிய பார்வையற்றவர்; இவர் மன வளர்ச்சி குன்றியவரும்கூட. *பார்வையற்றவரை முக்கியப் பாத்திரமாகக் கொண்ட ‘தங்கல்’ திரைப்படம் ஹிந்தி திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. *இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ‘தங்கல்’ திரைப்படம் ஒலி விவரிப்புடன் (Audio Description) ZEE தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது. *பிரபல பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமியின் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. *இந்த ஆண்டு ‘அறம்’ திரைப்படம் ரேடியோ மிர்ச்சி உள்ளிட்ட சில அமைப்புகளால் ஒலி விவரிப்புடன் திரையிடப்பட்டது. *விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் தனுஷ் என்ற பார்வையற்ற சிறுவன் பங்குபெற்று அசத்தினார். *சன் தொலைக்காட்சியின் ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியில் ஜீவிதா என்ற பார்வையற்ற சிறுமி பங்குபெற்றார். விளையாட்டு *9 நாடுகள் பங்கேற்ற பார்வையற்றோருக்கான 20-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வாகையர் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற பிறகு அரசு வழங்கிய பரிசுத் தொகை குறைவாக இருப்பதாக பல தளங்களில் சர்ச்சை எழுந்தது. *உலகளாவிய பிரபலம் பெற்ற பாஸ்டன் மாரத்தான் போட்டியில் சாகர் பஹேட்டி என்ற இந்தியர் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இறப்புகள் *பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் (College Students and Graduates Association for the Blind-CSGAB) உருவாகக் காரணமானவர்களுள் முதன்மையானவரான திரு. ச.சி. கண்ணன் அவர்கள் காலமானார். பொதுவுடைமைவாதியான இவர் பார்வையற்றோரிடையே போராட்ட உணர்வை விதைத்தவர். இன்று பல்வேறு அரசுப் பணிகளில் பார்வையற்றவர்கள் அமர்வதற்கான அடிப்படை வகுத்தவர். *தமிழகத்தின் முதல் பார்வையற்ற கிராண்ட் மாஸ்டரான திரு. முத்துராமன் அவர்கள் காலமானார். தமிழ்நாடு பார்வையற்றோருக்கான சதுரங்கச் சங்கம் (Tamilnadu Braille Chess Association-TNBCA) என்ற அமைப்பை நிறுவிய இவர் பல பார்வையற்றவர்களின் சதுரங்கக் கனவை நனவாக்கியவர். எதிர்பார்ப்பு *மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016இன் அடிப்படையில் தனது கொள்கை முடிவுகளைத் தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. 2018இல் அது அறிவிக்கப்படும் என நம்புவோம். *TET, முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்கள் பலருக்கு இன்னும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2018இல் அது நிகழும் என எதிர்பார்க்கிறோம். ![]() சிறுவயதில் வண்டித்தடத்தில் சைக்கிள் வந்தாலும் ஒதுங்கி நின்றேன்; வளர்ந்த பின்பு வாகனங்களின் ஊடேவூம் நடந்து சென்றேன். வெண்கோலின் உதவியால் என் கால்கள் சாலையில் நடக்கும், யாரும் உதவாமலே தங்க நாற்கரச் சாலையையும் அது கடக்கும். ஓட்டை வண்டியின் சத்தங்கேட்டு ஒதுங்கிக்கொள்வேன்; அருகில் வந்த பின்னே சத்தம் கேட்கும் வண்டிகளுக்கு மத்தியில் நான் என்ன செய்வேன்? உரசிப்போன லாரியில், பின் வந்து மோதிய பேருந்தில், குறுக்கேவரும் வாகனத்தில், விரைவாய் வந்து என் முன் பிரேக்கடித்த இருசக்கர வண்டியில் என் மரணம் அமர்ந்து வந்ததை கண்டிருக்கிறேன்! ஊருக்குச் செல்லும்போதெல்லாம் உடனழைத்துச் செல்கிறேன் மரணத்தை; எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், அது என் மீது கவியப்போகும் தருணத்தை! ஓ! வாகன ஓட்டிகளே! உங்கள் முன் வைக்கிறேன் ஒரு கோரிக்கையை. அடித்துவிட்டு போகாதீர்கள் அரைகுறையாய்; குறைஉடலோடு வாழ்வதெல்லாம் பெருந்துயரம். அதனால்தான் உங்களிடம் யாசிக்கிறேன், ஒரு மரணம்! ![]() பொதுவாகவே வரலாற்றைக் கற்பிப்பவர்கள் நமக்கு ஊக்கம் தரும்படி சொல்லும் ஒரு வாக்கியம், ‘இன்று நீ வரலாறு கற்றால், நாளை வரலாறு படைக்கலாம்’ என்பதைத்தான். ஆனால், நமது இந்தியக் கல்விக் கலாச்சாரம், ஒரு வரலாறு பற்றியோ அல்லது வரலாற்று நாயகர்கள் பற்றியோ நமது அறிதலை மட்டுமே சோதிக்க முற்பட்டு புரிதலைப் புறந்தள்ளுகிறது. காமராசரைப் பற்றிப் போதிக்கப்பட்ட ஒரு குழந்தையிடம், ‘காமராசர் எங்கு எப்போது பிறந்தார்?’, ‘அவரது தாய் தந்தை பெயரென்ன?’ போன்ற கேள்விகளால் குழந்தையின் விடைத்தாள் நாட்குறிப்பு ஏடாகவும், குழந்தையின் மனம் தகவல் சேமிக்கும் கணினி வன்தட்டாகவும் (Hard Disc) மாறிவிடுகிறது. காமராசரின் மதிய உணவுத் திட்டம், ஊர்தோறும் பள்ளிகள் போன்ற அளப்பரிய சாதனைகளின் பின்னணியில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை எந்தப் பாடப்புத்தகத்திலும் பார்க்க இயலவில்லை. இப்படித்தான் நாம் கொடையாளர்களைப் போற்றுவதில் காட்டும் அக்கறையை, அவர்களின் கொடைகளான கோட்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் காட்டுவதில்லை. ‘நாம் எப்போதும் இழிவாகவும் மலிவாகவும் நினைத்துக் கடக்கும் தொழிலாளியின் ஒரு குதிரைச்சேணம் தைக்கும் ஊசிக்குப் பின்னே ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஒரு சமூகம் தலைநிமிர்ந்திருக்கும் வரலாறு பிரெயிலினுடையது’ என குழந்தைகளுக்குப் போதித்து இருக்கிறோமா? மாறாக, லூயி பிரெயில் எங்கு எப்போது பிறந்தார், எப்போது மறைந்தார் போன்றவற்றை அறிவிக்க நாம் எதற்கு? கணினிப் பயிற்சி அளித்தால் கூகுல் மாமாவிடமே குழந்தைகள் கேட்டுக்கொள்ளுமே. 2003ல் நான் மும்பையிலுள்ள பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தில் (NAB) சுருக்கெழுத்து பயின்றுகொண்டிருந்தேன். எனது மாலைநேரப் பொழுதுபோக்காக நானும் சில நண்பர்களும் அவ்வப்போது வொர்லி பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். அங்குதான் என்.ஏ.பி.யின் தலைமை அலுவலகமும் அமைந்திருக்கிறது. பார்வையற்றோர் எளிதாக நுழையும் வண்ணம் அதன் வாயிலின் இரு மருங்கிலும் ஒலிக்கும் பீப் சத்தத்தைக் கடந்து உள்ளே சென்றால், கம்பீரமான ஒரு சிலை நம்மை வரவேற்கிறது. எனக்கு அந்தச் சிலையைத் தடவிக்காட்டிய எனது மராத்திய நண்பன் தத்தா, “இதோ பார் நமது குலசாமி” என்றான். பத்தி பத்தியாய்ப் படித்தபோதெல்லாம் நான் உணராத லூயியின் மகத்துவத்தை நண்பனின் ஒரு வார்த்தை போகிறபோக்கில் உணர்த்தியது. லூயி, பள்ளத்தில் மேடுகளை உருவாக்கி பார்வையற்றோரைக் கல்விமூலம் இச்சமுகத்தோடு சமப்படுத்திய ஓர் சமூகப்போராளி. விரல்களில் கண்களைப் பொருத்திய விந்தையான பார்வையற்ற கண் மருத்துவர். “யாதும் ஊரே” என நமது பாட்டன் கணியன் சொன்னான். ‘உலகின் எல்லா மொழிகளும் பார்வையற்றோர் நம் வசமே’ என அகில மொழிகள் அனைத்தையும் அறுபத்து மூன்றே வடிவங்களில் அணைத்துக்கொண்ட அன்பாளன், உலகின் தலைசிறந்த ஒருமைப்பாட்டாளன் லூயி. ஈடில்லா இழப்புகளைச் சந்தித்தேனும் உலகத்தை உய்விக்க வேண்டும் என எண்ணியவர்களின் முயற்சியும் புரட்சியுமே, இருள் சூழ்ந்து இவ்வுலகம் அழிந்துபோகும் மட்டும், அழிந்திடாத, எந்த ஒரு கால மாறுபாட்டுக்கும் பொருந்திப்போய், தொடர்ந்து சமுகத்தை வழிநடத்திக்கொண்டே இருக்கும். காந்தி, தன்னுயிரை ஈந்துதான் இந்தியாவைச் சமுக நல்லிணக்கப் பாதைக்கு அழைத்து வந்தார். அவர் நமக்குத் தந்த அகிம்சை எனும் அழியாக் கொள்கையின் வெளிப்பாடுதான் பல்வேறு கோரிக்கைகளைச் சுமந்து நமது பார்வையற்ற மாணவர்கள் செய்யும் அவ்வப்போதைய வகுப்பறைப் புறக்கணிப்பும் உண்ண மறுத்தலும் என்ற உண்மையைக் காந்தியை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். அதுபோலத்தான் லூயி, ஈடுசெய்ய இயலாத தன் பார்வையை இழந்தும், இந்தப் பிரபஞ்சம் நிலைக்கும் மட்டும் பார்வையற்றோருக்கான நித்திய ஒளியைப் படைத்துவிட்டுப் போனார். அத்தகைய உயரிய தியாகத்தால் உருவான உன்னத பிரெயில் வடிவத்தைப் பார்வையற்றோராகிய நாம் போற்றிப் பேணுகிறோமா? காலப்பெருவெள்ள மாற்றத்தினால், பல்வேறு ஒலிவடிவங்களும் தொழில்நுட்பமும் நம் கற்கும் முறைகளில் மிகப்பெரும் ஆக்கிரமிப்புகளைச் செய்திருக்கின்றன என்றாலும், பிரெயில் அளவுக்கு அவை நம்மை மேம்படுத்தும் சாதனங்களாக இல்லை என்பதை ஒவ்வொரு பார்வையற்றவரும் தன் மனதளவில் உணர்ந்தே இருக்கிறோம். போட்டி நிறைந்த இக்காலகட்டத்தில், நாம் ஒரு துறையில் பாண்டித்தியம் பெற நமக்குப் பல்துறை அறிவு அவசியமாக உள்ளது. எனவே, காலமேலாண்மை என்ற கருத்து ஓங்கி ஒலிக்கும் இப்போது, பிரெயிலில் எழுதுவதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுக் கணினியில் தட்டச்சு செய்யப் பழகிவிட்டோம். இதைச் சொல்லும் இப்பொழுதுகூட, இக்கட்டுரையை நான் கணினியில்தான் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், வாசிக்கும் அனுபவம் அப்படிப்பட்டதல்ல; எலக்குவன்ஸ், ஈ-ஸ்பீக் என எத்தனை வாசிப்பான்கள் வரிசைகட்டினாலும், விரல்களின் ஸ்பரிசங்களே மூளையை விழிப்பாக வைத்திருந்தன; மேற்சொன்ன வாசிப்பான்களின் தாலாட்டால் தூங்கிப்போன நமது மூளைகளின் துன்பியல் கதைகள் நம்மிடம் ஏராளம் ஏராளம். அதனால்தான் பள்ளிப்பருவத்தில் ஒரு பார்வையற்ற மாணவனுக்குக் காணப்படும் கூர்ந்த மதி, கல்லூரிப் பருவத்தில் அவனிடம் காணக்கிடைப்பதில்லை. பிரெயில் எழுதுவதைத் தவிர்ப்பதில் நாம் சொல்லும் காலமேலாண்மை என்ற காரணத்தில்கூட சிறிதளவே உண்மை இருக்கிறது. நமது சோம்பேறித்தன மனநிலைதான் நம்மை பிரெயிலில் எழுதுவதைத் தவிர்க்கச் செய்கிறது. கொஞ்சம் காலச்சக்கரத்தைப் பின்னோக்கி நகர்த்தி யோசித்தால் இது புரியும். நம்மில் பலருக்கு நமது இளமைப்பருவத்தில் காதல் கடிதங்கள் எழுதிய அனுபவம் இருந்திருக்கும். எத்தனை எத்தனை தாள்களைக் குத்தி மேடாக்கி, மேன்மை தாங்கிய இலக்கியமாக மேம்படுத்தியிருக்கிறோம். அன்று, லூயி இராணுவ இரகசியங்களுக்கான வடிவத்தை பிரெயில் வடிவமாக மாற்றினார். இன்று, காதல் என்னும் இராணுவ இரகசியத்துக்காக பிரெயில் வடிவத்தைப் பயன்படுத்தி, வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கும் புரட்சியாளர்கள் நாம். உண்மையில் சிந்தியுங்கள்! வெறும் தகவல் பரிமாறும் நோக்கில்தான் நாம் இக்கடிதங்களை எழுதித் தள்ளினோமா? இல்லை. ‘இது காதலைப் போன்றே, நானும் அவளும் மட்டுமே உணர்ந்து புரிந்துகொள்ளும் புரட்சிமொழி’ என்ற பெருமித மனநிலைதானே முக்கிய உந்துசக்தியாக இருந்தது. மழைக்காலத்தில் வெளிவரும் புற்றீசல்கள்போல, மறுவாழ்வு என்ற போர்வையில் முளைத்திருக்கும் சில பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனங்கள், அதன் அமைப்பாளர் இயல்பிலும், எண்ணத்திலும் குறைபார்வை (low-vision) உடையவராக இருப்பதால், பிரெயிலின் இடத்தைத் தொழில்நுட்பம் நிரப்பிவிட்டதாகக் கூறி, பிரெயிலின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுக் கூச்சலிடலாம். “அனைவருக்கும் கல்வித்திட்டம்” என்ற மாற்றுத்திறனாளிகளின் அதிலும் குறிப்பாகப் பார்வையற்றவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசால் ஊதப்பட்டிருக்கும் சாவுச்சங்கு அக்கருத்தை ஆராதிக்கலாம். அத்தகைய இக்கட்டான காலங்களில், பிரெயிலைக் காப்பாற்ற பார்வையற்றோராகிய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம். முதலில், ஜனவரி 4 இந்த நாளை அகில உலகப் பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாளாக உலக நாடுகள் அறிவித்திட பார்வையற்றோராகிய நாம் வலியுறுத்திட வேண்டும். படைப்புச் சமூகத்தின் அங்கங்களான எழுத்தாளன், பதிப்பாளன், அச்சு ஊடகம் என அனைவரும் தனது படைப்புகளின் பிரதிகளை பிரெயிலிளும் அச்சிட ஆர்வம் கொள்ளவேண்டும். அத்தகைய விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்துவதும், படைப்புச் சமுகத்தின் அத்தகைய முயற்சியை ஊக்குவிக்கும் பொருளாதாரப் பாளமாய்த் திகழ அரசை வலியுறுத்துவதும் படித்த நம் ஒவ்வொரு பார்வையற்றவரின் கடமை. இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) முயற்சியால் வெளியிடப்பட்டுள்ள 53 தொகுதிகளைக்கொண்ட க்ரியா என்ற தமிழ் அகராதி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒரு பார்வையற்ற நண்பர், ‘பதினைந்தாயிரம் கொடுத்து நாங்கள் இந்த அகராதியை வாங்கினால் எங்களுக்கு அதைப் பராமரிக்க நிறுவனம் இலவசமாக ஒரு அறையைக் கட்டித்தரவேண்டும்’ என நகைச்சுவையாகக் கேட்டுள்ளார். அவரின் கேள்வியில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்குத் தீர்வாக நாம் முன்வைப்பது, மாவட்டவாரி பிரெயில் நூலகம். இன்று நம்மில் பல பார்வையற்றவர்கள் அரசு வேலை என்ற நல்ல நிலையில் அமர்ந்திருக்கக் காரணம் பிரெயில் என்பதுதானே உண்மை. அரசு வேலையிலுள்ள பார்வையற்றவர்கள் அனைவரும் மாவட்ட வாரியாக இணைந்து, மாவட்டந்தோறும் பிரெயில் நூலகங்களைக் கட்டமைக்களாமே! அரசு வேலைக் கிடைத்ததும் திருமணம், சொந்தவீடு என்றெல்லாம் விரியும் நம் இலக்குகளில், அந்த வீட்டிற்காகும் செங்கற்களில் ஒன்றையாவது இத்தகைய நூலகம் அமைக்கப் பங்களிக்கலாமே. நாம் தாமாக முன்வந்து இணையும்போது அரசைத் தீவிரமாக வலியுறுத்தும் தார்மீக உரிமையைப் பெறலாம். அரசும் கருப்புக் கண்ணாடிகளையும், வெண்கோள்களையும் வழங்குவதோடு தம் கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காணப்படும் பல்வேறு நூல்களை பிரெயில் வடிவில் மாற்றி, நாம் வாசிக்க உதவும் பிரெயில் டிஸ்ப்லேக்களை இலவசமாகவோ மானிய விலையிலோ வழங்க முன்வரவேண்டும். இத்தகைய கோரிக்கைகளோடு அரசை அணுகும் கடமை நம் பார்வையற்ற சமூகத்துக்கு இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சட்டைப்பைச் சில்லறைகளை வகைபிரித்துத் தந்த எனது தந்தை, “இது லூயி பிரெயில் உருவம் பொறித்த காசு” என ஒரு நாணயத்தை எடுத்துத் தந்தபோது, ‘இது வெறும் உருவம் அல்ல. என் வளர்ச்சியைச் சொல்லும் ஒரு குறியீடு’ என மனதால் பிரெயிலின் பெருமையை சிலாகிப்பதில் மட்டும் பிரெயில் என்கிற உன்னத மொழி மேன்மை பெற்றுவிடாது என்பது புரிகிறது. அனைவருக்கும் லூயி பிரெயில் தின, இல்லை இல்லை “பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாள்” வாழ்த்துக்கள். ![]() சமீப காலமாக திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்கப்படாமல் அரசியல் உள்நோக்கத்தோடு சர்ச்சைக்குள்ளாக்கப்படுவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அண்மையில் சேர்ந்திருக்கும் படம் பத்மாவதி. இந்தி மொழியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் தீபிகா படுகோனே (ராணி பத்மாவதி), ஷாகித் கபூர் (ரத்தன் சிங்), ரன்வீர் சிங் (அலாவுதின் கில்ஜி) ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 200 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம்தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தி படம். படப்பிடிப்பு துவங்கிய நாளிலிருந்தே இப்படத்தின்மீதான சர்ச்சைகளும் துவங்கிவிட்டன. படப்பிடிப்பு வேலைகள் முடிந்து, வெளியீட்டு தேதிகள் பலமுறை மாற்றப்பட்டு, ஒருவழியாக தற்போது படம் வெளியிடப்படவேபோகிறது. ஆனால், இப்படத்தின்மீதான சர்ச்சைகள் மட்டும் இன்னும் ஓயவில்லை. ஏன் இப்படத்தின்மீது இத்தனை விமர்சனங்கள், தாக்குதல்கள்? இத்திரைப்படம் 1540ஆம் ஆண்டு சூஃபி கவிஞர் மாலிக் முகமது ஜெயசி என்பவர் அவதி மொழியில் எழுதிய ‘பத்மாவத்’ என்ற கவிதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அக்கவிதையின்படி, ராணி பத்மாவதி 14ஆம் நூற்றாண்டில் மேவாரை ஆட்சி செய்த இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அரசன் ரத்தன் சிங்கின் பேரழகு மனைவி. பத்மாவதியின் அழகைப் பற்றி அறிந்த டெல்லி சுல்தான் மாவீரன் அலாவுதின் கில்ஜி அவளை அடையவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மேவாரின்மீது படையெடுக்கிறான். கண்ணில் பட்டதையெல்லாம் வெறித்தனமாக வேட்டையாடிய அலாவுதின் கில்ஜி, மேவாரின் தலைநகரான சித்தூரை நோக்கி முன்னேறினான். கண்டிப்பாக அலாவுதின் கில்ஜி வெற்றிபெற்று தன்னைக் கைப்பற்றிவிடுவான் என்பதை அறிந்த ராணி பத்மாவதி, தனது கற்பையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு, கோட்டைக்குள் இருந்த அனைத்து பெண்களோடும் சேர்ந்து தீயில் இறங்கி தன்னை மாய்த்துக்கொள்கிறாள். நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றின்படி, 1303ஆம் ஆண்டு டெல்லி சுல்தானியத்தின் வலிமையான அரசனான அலாவுதின் கில்ஜி மேவாரின்மீது படையெடுத்து வெற்றிபெற்றான் என்பதும் மாபெரும் அழிவை ஏற்படுத்தினான் என்பதும் உண்மைதான். ஆனால், ராணி பத்மாவதிக்காக இந்த படையெடுப்பு நிகழ்ந்ததாக எந்த ஒரு ஆவணமும் இல்லை. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் ராணி பத்மாவதியைப் பற்றிய எந்த ஒரு குறிப்புமேகூட வரலாற்றில் இல்லை. பத்மாவத்தை எழுதிய ஜெயசியும், கவிதையின் முடிவில், தான் ஒரு கதையை உருவாக்கி அதை வரலாற்றோடு தொடர்புபடுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். ராணி பத்மாவதியின் இருப்பு வரலாற்றின் அடிப்படையில் நிரூபிக்கப்படாததால் ராணி பத்மாவதி என்ற கதாபாத்திரமே கற்பனையானதுதான். சரி, அதனால் என்ன பிரச்சனை என்கிறீர்களா? அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், படத்தில் அலாவுதின் கில்ஜியும் பத்மாவதியும் காதலிப்பது போன்ற கனவுப் பாடல் காட்சியும், போரில் தோற்ற ராஜபுத்திர அரசன் ரத்தன் சிங் வேறு வழியின்றி தனது மனைவியை அலாவுதின் கில்ஜிக்கு நேரடியாக அல்லாமல் அவளின் பிம்பத்தை கண்ணாடியின்வழியே காட்டுவதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுதான் இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம். ஏனெனில், ராமாயண சீதையைப் போல, இன்றளவும் ராஜபுத்திரர்கள் பத்மாவதியைக் கடவுளாக வழிபடுகின்றனர். தங்கள் கடவுள், அதுவும் தனது கற்பை காப்பாற்றிக்கொள்ள தனது உயிரையே விட்ட தங்கள் கடவுள் பத்மாவதி, வேறு ஒரு ஆணை, அதுவும் ஒரு இஸ்லாமிய ஆணைக் காதலிப்பதான காட்சிகள் தங்களது மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருப்பதாக வலதுசாரி இந்து அமைப்புகள், ராஜபுத்திர கர்ணி சேனா, ராஜபுத்திர சமூக அமைப்பு உட்பட அனைத்து இந்து அமைப்புகளும் கொடி உயர்த்தத் துவங்கின. இத்தகைய காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை என பன்சாலி மறுத்திருக்கிறார். ஆனாலும் இந்து அமைப்புகள் அவரை விடுவதாக இல்லை. துவக்கத்தில் படக்குழுவுக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பின், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் கண்டேல்வால் என்பவர் பன்சாலியைச் செருப்பால் அடிப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்று முகநூலில் அறிவித்தது; அதைத் தொடர்ந்து ராஜபுத்திர கர்ணி சேனா அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு பன்சாலியை படப்பிடிப்புத் தளத்தில் வைத்தே தாக்கியது; பின்னர் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் அதே அமைப்பைச் சேர்ந்தவர்களால் தகர்க்கப்பட்டது; பாரதிய காத்ரிய சமாஜம் என்ற மத அமைப்பு தீபிகா மற்றும் பன்சாலியின் தலைகளுக்கு 5 கோடி ரூபாயும் ஹரியானாவைச் சேர்ந்த சுராஜ் பால் அவ்விருவரின் தலைகளுக்கும் 10 கோடி ரூபாயும் சன்மானமாக அறிவித்தது; பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ் புரோகித் இத்திரைப்படத்தைத் திரையிடத் தடைவிதிக்கவேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணியை வலியுறுத்தியது; சாதியக் கட்சிகளின் ஆதரவில் சிறுசிறு சாதிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது; அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களின் முதல்வர்கள் இத்திரைப்படத்தை தங்களது மாநிலத்தில் திரையிட அனுமதி அளிக்க மாட்டோம் என அறிவித்தது; அதற்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் தானாக முன்வந்து இப்படத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அனுமதி மறுத்தாலும் மேற்குவங்கத்தில் இப்படத்தை வெளியிட சிறப்பு ஏற்பாடுகளைத் தான் செய்துதருவதாக உறுதியளித்தது; அதனால் சூர்ப்பனகையைப் போல மம்தாவின் மூக்கும் அறுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது; அனைத்தையும் தாண்டி படம் திரையிடப்படும் அனைத்துத் திரையரங்குகளும் சூரையாடப்படும் என்று மிரட்டப்பட்டது; வெளியீட்டிற்கு முன்பு தங்களுக்கு படம் காண்பிக்கப்படவேண்டும் என்று சில இந்து அமைப்புகள் நிர்பந்தித்தது; டிசம்பர் 1 அன்று திரைப்படம் வெளியிடப்படவிருந்த நிலையில் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தியது என அரசியல் விளையாட்டுகள் தூள் பரந்தன. எனவே படத்தை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் 2018 பிப்ரவரி 9 அன்று வெளியிட படக்குழுவினர் தீர்மானித்திருந்தனர். ஒருவழியாக தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, பல கத்தரிப்புகள் செய்யப்படவேண்டும், மேலும் சில டிக்ளமைர்கள் சேர்க்கப்படவேண்டும், படத்தின் பெயர் பத்மாவத் என மாற்றப்படவேண்டும் போன்ற கட்டுப்பாடுகளோடு படத்தை வெளியிட மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. எனவே பத்மாவதி, பத்மாவத் என்ற பெயரில் 2018 ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டுவிட்டது. படத்தைப் பார்த்துவிட்டு வரும் இதழ்களில் தொடர்ந்து பேசுவோம்… ![]() ஆண்டு இறுதி என்றாலே, டாப் 10 பாடல்கள் நம் நினைவிற்கு வரும். மெல்லிசை, துள்ளலிசை என இருவகை பாடல் போல இணைந்தே டாப் 10 பாடல்களை கடந்த மூன்று ஆண்டுகளாக தொகுத்து வாட்ஸ்அப் வழியாக வெளியிட்டு வருகிறார்கள் இரு பார்வையற்ற இளைஞர்கள். கல்லூரிப் படிப்பைத் தற்போதுதான் முடித்திருக்கும் அந்த இரு நண்பர்கள் கணேஷ் மற்றும் யாசர். அந்த இரட்டையர்களை விரல்மொழியருக்காகப் பேட்டி காண்கிறார், ரா. பாலகணேசன். பாலகணேசன்: உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை வாசகர்களுக்குச் சொல்லலாமே? யாசர்: எனது சொந்த ஊர் ராமநாதபுரம். தற்போது சென்னையில் வசிக்கிறேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் M.A., English படித்துவிட்டு வேலைக்கு முயன்றுக் கொண்டிருக்கிறேன். கணேஷ்: எனது சொந்த ஊர் சென்னை. மாநிலக் கல்லூரியில் M.A., முடித்துவிட்டு, அங்கேயே M.Phil. பயின்று வருகிறேன். பா: டாப் 10 பாடல் வெளியிட வேண்டுமென்ற எண்ணம் எப்படித் தோன்றியது உங்களுக்கு? க: முன்பெல்லாம் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இது மிகவும் பிரபலமாய் இருந்தது. இப்போது இதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. எனவே, அந்த வெற்றிடத்தை நாம் நிரப்பலாமே என்ற எண்ணம் எங்களுக்குள் உதித்ததன் விளைவுதான் இது. 2015இல் தான் நாங்கள் வாட்ஸ்அப்புக்கு வந்தோம். அந்த ஆண்டின் இறுதியிலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக டாப் 10 பாடல்களை வெளியிட்டு வருகிறோம். பா: எந்த நடைமுறையில் 10 பாடல்களைத் தெரிவு செய்கிறீர்கள்? யா: நண்பர்களிடம் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த 10 பாடல்களை அனுப்பச் சொல்லுவோம். பின் வாட்ஸ்அப்பிலும், தெரிந்தவர்கள் தொலைபேசியிலும் சொல்லும் பாடல்களையும் பரிசீலித்து, அதிலிருந்து பாடல்களைத் தேர்ந்தெடுப்போம். மேலும், அப்பாடல்கள் மக்களிடம் பெற்ற வரவேற்பையும் நாங்கள் கணக்கில் கொண்டு பாடல்களை வரிசைப்படுத்துவோம். பா: முன்பைவிட மின்னஞ்சல் அதிகம் வருகிறதா? க: வரவேற்பு அதிகமா இருக்கு. ஆனால், மின்னஞ்சலைவிட வாட்ஸ்அப்பில்தான் அதிகம் பாடல்களை அனுப்புகின்றனர். பா: பிரபலங்களை எப்படி இதில் பேசவைக்கிறீர்கள்? யா: கணேஷ் மிகவும் சிரமமான எடிட்டிங் பொறுப்பை எடுத்துக்கொள்வார். நானும் அதற்கு நிகராக ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவுதான் செலிபிரிட்டிகளை பேச வைத்தது. சூப்பர் சிங்கரில் கலந்துகொண்ட இர்வின் விக்டோரியாவிடம் தொலைபேசி எண்களை வாங்கி சூப்பர் சிங்கர் பிரபலங்களையும், நானே முயன்று தேடி பிற பாடகர்களின் தொடர்புகளையும் பெற்று இந்நிகழ்ச்சியில் பேச வைத்தேன். பா: பண்பலைகளுக்கு நிகராக உங்களது எடிட்டிங் மிகவும் தரமாக இருக்கிறது! இதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பைப் பற்றி சொல்லுங்களேன்? க: எடிட்டிங் செய்ய கோல்டுவேவ் (Gold Wave) எனும் மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறேன். இதைவிட மேம்பட்ட மென்பொருட்கள் இருந்தாலும் இதுதான் பார்வையற்றோர் பயன்படுத்த எளிமையாக இருக்கிறது. எடிட்டிங்கிற்காக மட்டும் எப்படியும் ஒரு வாரம் வேலை செய்யவேண்டும். அந்த அர்ப்பணிப்புதான் நீங்கள் கேட்டு வியக்கக் காரணம்! பா: பிற மென்பொருட்களைப் பயன்படுத்துவதில் என்ன சிக்கல்? க: அதைப் பற்றிய அறிவு நமக்கு கொஞ்சமாவது இருக்க வேண்டுமல்லவா? அதுதான் சிக்கல். யாரேனும் சொல்லிக்கொடுத்தால் நாமும் திறம்படச் செயலாற்றலாம். ரேடியோ சிட்டியில் உள்ள லவ் குரு எங்களுக்கு பிற எடிட்டிங் மென்பொருட்கள் பற்றி கற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார். இன்னுமொன்றையும் நான் இங்கே சொல்லவேண்டும். இன்னும் பார்வையற்றோருக்கான கணினிப் பயிற்சிப் பட்டறைகள் அடிப்படைகளை போதிப்பதாகவே இருக்கின்றன. அதைத் தாண்டி புதிய மென்பொருட்கள் பற்றி கற்றுக்கொடுப்பதாய் மாறவேண்டும். நான் புதியனவற்றை கற்றுக்கொள்ளவும், தெரிந்ததைக் கற்றுத்தரவும் தயாராக இருக்கிறேன். பா: பாடல்களை யார் தெரிவு செய்வது? ‘ஏண்டா இப்படி?’ போன்ற வித்தியாசமான பாடலும் டாப் 10 பாடல்களுக்குள் இடம்பிடித்திருக்கிறதே? யா: இருவரும் கலந்து பேசிதான் முடிவெடுப்போம். வித்தியாசமான பாடல்களை கணேஷ்தான் பரிந்துரைப்பார். க: ரசனையான பாடல்களுக்கு நாம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். ஊடகங்கள் பணத்தை மையமாக வைத்து இயங்குவதால் சில முக்கியமான பாடல்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விடுகின்றன. பா: உங்களை ஒன்று சேர்த்த நிகழ்வு எது? யா: நான் மதுரையில் உள்ள புனித வளனார் பார்வையற்றோர் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பிற்கு சென்னையில் உள்ள தூய லூயி பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் பள்ளியில் சேர்ந்தேன். விடுதியில் கலை நிகழ்ச்சிகளுக்காக குழு பிரிப்பார்கள். அதில் நாங்கள் இருவரும் ஒரே குழுவில் இடம்பிடித்திருந்தோம். அதற்குப் பின் இசைக்குழு, லொயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம், SRMஇல் பி.எட்., என பயணம் ஒன்றாய் அமைந்ததும் எங்களது நெருக்கத்திற்குக் காரணம். பா: ஓஹோ! இசைக்குழுவிலெல்லாம் இருந்திருக்கிறீர்களா? யா: நான் டிரம்ஸ் பிளேயர், கணேஷ் நல்ல பாடகர். பா: எந்த வகையான பாடல்களைப் பாடுவீர்கள் கணேஷ்? க: மெலடிப் பாடல்களை நான் சிறப்பாகப் பாடுவேன். ‘ஆப்பில் பெண்ணே நீ யாரோ?’ என்ற பாடல் எனக்கு பெரும்புகழை பெற்றுத்தந்தது. பா: பாடல்களைப் பற்றி நீங்கள் சொல்லும் விடயங்களை எவ்வாறு தயாரிக்கிறீர்கள்? க: எதுவும் எழுதுவதெல்லாம் இல்லை. பதிவு செய்யும்போது நாங்களே கலந்து பேசிக்கொள்வதுதான். கேட்டதும் பிடிப்பது மாதிரியான வாக்கியங்களை அமைத்துக் கொள்வோம். வார்த்தைகளைக் கொஞ்சம் கவனமாகக் கையாளுவோம். பா: சரளமாகவும் பேசுகிறீர்கள், வாழ்த்துக்கள்! க: நான் இசைக் குழுவில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அந்த அனுபவம் இங்கே கை கொடுக்கிறது. அதனால்தான் எனது பேச்சு சுத்தத் தமிழில் இருப்பது போன்றும், யாசரின் பேச்சு பக்கத்து வீட்டுப் பையன் பேசுவது போன்றும் இருக்கும். பா: தொகுப்பைப் பற்றி யாரேனும் எதுவும் சொல்லி இருக்கிறார்களா? க: சுத்தத் தமிழில் நீங்கள் மட்டும் தொகுத்து வழங்கலாமே என பலர் சொல்லி இருக்கிறார்கள். இதில் என்ன வேறுபாடு? எல்லாமே தமிழ்தானே? ஒருவர் மட்டும் தொகுத்து வழங்கினால் சிறிது அயர்ச்சியும் தோன்றும். அதனால்தான் இருவரும் சேர்ந்தே தொகுத்து வழங்குகிறோம். பா: உங்களுக்கு பார்வை எந்த அளவு தெரியும்? யா: இருவருமே முழுப் பார்வையற்றவர்கள்தான். ஆனால், நாங்கள் அதை எங்கும் குறிப்பிடுவதில்லை. அனுதாபத்தால் எங்களை அங்கீகரிப்பதைவிட திறமையால் கிடைக்கும் அங்கீகாரத்தையே விரும்புகிறோம்! “பார்வையற்ற இவர்களா சினிமாவைப் பற்றி அதிக செய்திகளை கூறுகிறார்கள்” என பலர் வியந்துள்ளனர். பா: சத்ய பிரகாஷ், திப்பு போன்ற பாடகர்களை இதில் பேச வைத்திருக்கிறீர்கள். அவர்களுக்கு நீங்கள் பார்வையற்றவர்கள் எனத் தெரியுமா? யா: திப்பு சார் பார்வையற்றவர்களுடன் ஆல்பங்களில் பணியாற்றியுள்ளார். அதனால் அவருக்குத் தெரியும். சத்ய பிரகாஷுக்குத் தெரியாது. பா: உங்களுக்குக் கிடைத்த பெரிய பாராட்டு எது? க: கேட்டுவிட்டு அனைவரும் சொல்லும் பாராட்டுகளே பெரியதுதான்! உங்கள் முதல் இதழில் எங்கள் பேட்டி வருவதையும் பெரிய பாராட்டாகவே கருதுகிறோம்! யா: சூப்பர் சிங்கர் பிரியங்கா, திப்பு சார் போன்றோரும் எங்களை பாராட்டியுள்ளனர்! பா: டாப் 10 பாடல்கள் தயாரிப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்ன? க: வாட்ஸ்அப்பில் 16 MB அளவு ஒலிக்கோப்புகளை மட்டுமே அனுப்ப முடிகிறது. இதனால், நாங்கள் குறிப்பிட்ட அளவு நேரத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகிறோம். இங்கே விளம்பரங்களுக்கு எழுதும் பார்வையற்றவர்களும் இருக்கின்றனர். அவர்களது படைப்பாற்றலையும் இதில் பயன்படுத்த நினைக்கிறோம்; கால அளவுதான் நெருக்கடியாக இருக்கிறது. இரண்டு பகுதிகளாக வெளியிடலாம். சிலர் ஒன்றை மட்டும் கேட்டுவிட்டு இன்னொன்றை தவறவிடக்கூடும். அதனால்தான் ஒரே பகுதியாய் வெளியிடுகிறோம். மேலும், இதை ஒரு தொழிலாக நம்மால் மாற்ற முடிவதில்லை. வானொலிகளில் நமக்குப் பணிகளை வழங்கலாம். ஆனால், அது மறுக்கப்படுகிறது. அந்தப் புறக்கணிப்புதான் இன்னும் வெறியோடு இயங்கவைக்கிறது. இதை கேட்டுவிட்டு நமக்குப் பணி வாய்ப்புகள் கிடைத்தால் மகிழ்வேன். யா: செலிபிரிட்டிகளை பேட்டியெடுப்பதை காணொலியாக வெளியிட்டால் இன்னும் அதிகம் பேரை சென்றடையுமென்று நினைக்கிறோம். ஆனால், வீடியோ எடிட்டிங் செய்ய பார்வையுள்ளோரின் துணையை நாட வேண்டியுள்ளது. பா: தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு எவ்வகையில் உதவுகிறது? க: அவைதான் நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. ஆனால், புதிய அப்டேட்கள் வரும்போது திரை வாசிப்பான் மென்பொருளுக்கு ஒத்திசையாமல் போவது வருத்தமாக இருக்கிறது. பொறியாளர்கள் பார்வையற்றொருக்கு உதவும் வகையில் பல மென்பொருட்களை தயாரிக்க வேண்டும். முழுப் பார்வையற்றோருக்கு உதவும் வகையில் பேருந்து எண்களைப் படிப்பது போன்ற மென்பொருட்களை உருவாக்கினால் பெரிதும் மகிழ்வோம். யா: பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் வீடியோ எடிட்டிங் மென்பொருளையும் கண்டுபிடிக்க வேண்டும். பா: சினிமாவோடு தொடர்புடையவர்கள் என்ற முறையில் நீங்கள் சொல்லுங்கள்; ஒலி விவரிப்பு படங்கள் நமக்கு எவ்வகையில் உதவியாக இருக்கின்றன? க: பெரிதும் உதவுகிறது. ஆனால், இன்னும் அது பல பேரை சென்றடைய வேண்டும். கபாலி திரையிடலின்போது, “நாங்கள் இதற்காகவும் கடின உழைப்பைத் தருகிறோம். ஆனால் இது பலபேரை சென்றடையாதது வருத்தத்தை தருகிறது” என அவர்களே கூறினர். தனியே திரையிடாமல். சாதாரணமாக பொது திரையிடலின்போது வெளியிட்டாலே இது பலரைச் சென்றடையும் என்பது எனதுக் கருத்து. யா: ZEE Tvயில் ஒலி விவரிப்புடன் ‘தங்கல்’ படம் திரையிடப்பட்டதை இதற்கு ஒரு உதாரனமாகக் கூறலாம். ஒலி விவரிப்புடன் கூடிய ஆங்கிலப் படங்கள் விற்பனைக்கு கிடைப்பது போன்று, தமிழ் படங்களையும் கிடைக்கச் செய்யலாம். பா: உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி? யா: பாடலைப் பரிந்துரைக்காமல், “இந்த பாடலுக்கு ஏன் இடம் தரவில்லை?” என கேட்பதுதான் கஷ்டமாக இருக்கும். மற்றபடி, உங்களது கருத்துகள்தான் எங்களை மேம்படுத்துகின்றன. க: டாப் 10 பாடல்களை கேட்டுவிட்டு, உங்கள் நன்பர்களுக்கும் பகிருங்கள். அதுவே போதும். பா: உங்களது எதிர்கால திட்டமென்ன? யா: ஆசிரியப் பணிக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். க: ஆசிரியர் பணி இல்லாவிடின் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி வாய்ப்புக்காகவும் முயன்று வருகிறேன். பார்வையற்றவர்கள் கணினியை கையாளுவார்களா என்ற ஐயம் பலரிடம் இருக்கிறது. அதைப்பற்றிய விழிப்புணர்வு வந்தால் நமக்கான வாய்ப்புக் கதவுகள் திறக்கும். பா: வாட்ஸ்அப் தவிர வேறு தளங்களில் இயங்குகிறீர்களா? க: தூய லூயி பள்ளியின் பிரதர் ஜான் சேவியர் சொல்வார், “impossible என்பதை Non-Verbalலாக ‘mmm Possible’ என்று சொல்லிப் பாருங்கள். சோர்வு என்பதே வராது” என்று. அதை நினைவுபடுத்தும் வகையில் எனது யூடியூப் சேனலுக்கு, ‘immmpossible’ (கணேஷின் யூடியூப் பக்கம்) என பெயர் வைத்துள்ளேன். இதில் எனது பாடல் திறமைகளை பதிவேற்றியுள்ளேன். யா: இதைச் சொல்லியே ஆகவேண்டும், எங்களது திறமைகளைப் பள்ளி ஆசிரியர்களே வெளிக்கொண்டு வந்தனர். இத்தருணத்தில் அவர்களை நாங்கள் வணங்குகிறோம். எனது யூடியூப் சேனல் ‘yasar 24 full of entertainment’ (யாசரின் யூடியூப் பக்கம்). பா: எங்களுக்காக நேரம் ஒதுக்கியமைக்கு நன்றிகள். க: எங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இவ்விதழ் பற்றி சொல்கிறோம். எங்களால் முடிந்த உதவிகளையும் செய்யத் தயாராய் இருக்கிறோம். யா: எங்களை அங்கீகரித்து முதல் பேட்டியாக வெளியிடும் உங்களுக்கும் எங்களது நன்றிகள். டாப் 10 துள்ளலிசைப் பாடல்களைக் கேட்க டாப் 10 மெலடிப் பாடல்களைக் கேட்க தொகுப்பு: பொன். சக்திவேல் ![]() இருபத்தோறாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மை ஓய்வின்றிச் சுழலும் இயந்திரங்களாகவே மாற்றிவிட்டது என்ற உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. தேவைக் கருதி அறிமுகமாகும் அறிவியல் கண்டுபிடிப்புக்களும், நாகரீகம் என்ற பெயரில் தருவிக்கப்படும் மேற்கத்திய முறைகளும் நம் அன்றாட வாழ்வில், குறிப்பாக நமது உணவு முறைகளில் அளவிட்டுச் சொல்ல முடியாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய மாற்றங்களுக்கு தற்போதைய பச்சிளங்குழந்தைகள் பலிகடாவாவதைத் தடுப்பது, அதாவது, வணிக நோக்கத்திற்காக விற்பனை செய்யப்படும் பால் பௌடர்களின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, இயற்கையாகச் சுரக்கக்கூடிய, எவ்வித கலப்படமும் செய்யவியலாத, உயிரை வளர்க்கக்கூடிய முதல் ஆகாரமாகிய தாய்ப்பாலைப் பழக்கும் வழக்கத்தை ஊக்குவிப்பதே இப்பகிர்வின் தலையாய நோக்கம். தாய்ப்பால் குழந்தைகளின் உடல் நலத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக விளங்கும் அனைத்துச் சத்துக்களின் பிறப்பிடமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியின் உறைவிடமாகவும் தாய்ப்பால் திகழ்கிறது. மேலும், தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள், எலும்பு தொடர்பான பிரச்சனைகள், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகவே உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. 2016ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த ‘Polio Campus’ என்ற அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வானது, தாய்ப்பால் புகட்டும் பெண்களின் எண்ணிக்கை 280% அதிகரித்திருப்பதாக வியப்பான ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. இதிலுள்ள சத்துக்களை மேலும் உறுதிபடுத்திக்கொள்ள, பெண்கள் கற்ப காலம் முதல், குழந்தைகளுக்கு அமுதூட்டுவதை நிறுத்தும்வரை Processed Foods என்று சொல்லப்படுகிற துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு, Natural Foods என்று சொல்லப்படுகிற பால், மீன், முட்டை, கீரைவகைகள், காய்கறிகள் மற்றும் பழவகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். நல்ல உடல்நலத்துடன் இருக்கக்கூடிய தாய்மார்கள் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை மட்டுமே முதன்மை உணவாகக் கொடுக்கலாம். 2 ஆண்டுகள்வரை பால் குடிக்கும் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடனும், அதிகமான நோயெதிர்ப்பு சக்தி பெற்றும் வளர்வதாக நமது உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. தற்போது, கணவர்களுக்கும் பால் கொடுக்கும் புது டிரெண்ட் உருவாகியுள்ளது. தாய்ப்பால் ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், ஆண்மைக்குறையைப் போக்குவதற்கும், இதயம் சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் பேருதவியாக இருப்பதாக சில இதயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்லாமிய மதம் பெண்களை விளைநிலங்களாகச் சித்தரிக்கிறது. குழந்தைப் பெற்ற பெண்கள் உடலுறவின்போது, தங்கள் கணவர்களைப் பாலருந்த அனுமதிக்கலாம் என்றும், குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெளிவான விளக்கம் அளிக்கிறது. பாலூட்டல் தாய்ப்பால் சுரப்பதை பெண்கள் இப்பிறவியில் இறைவன் அளித்த மிகச்சிறந்த வரமாகக் கருதுகின்றனர். பால் புகட்டுவதன்மூலம் தாய்க்கும் சேய்க்குமான உறவு வலுப்பெறுகிறது; நெருக்கம் அதிகரிக்கிறது. மகப்பேறு மருத்துவர்களின் கூற்றுப்படி, பாலூட்டல் என்பது தாய்க்கும் சேய்க்குமான கற்றல் முறையாகும். ஒரு குழந்தையானது, தன் தாயின் மார்பகக் காம்புகளில் வாயை வைத்தல், உறிஞ்சுதல், அவ்வாறு உறிஞ்சியதை விழுங்குதல் ஆகிய செயல்களை பசி அடங்கும்வரை தொடர்ச்சியாகச் செய்யப் பழகிக்கொள்கிறது. அதே சமயம், ஒரு தாயானவள், குழந்தையின் செயல்களை முறைப்படுத்தவும், தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், சீரான இடைவெளியில் குழந்தையின் பசி தீர்க்கவும் தன்னைப் பழக்கிக் கொள்கிறாள். பாலூட்டும்போது, தாயின் உணர்வுகள் சேய்க்குக் கடத்தப்படுவதாக சில சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்கு வீரம் செறிந்த தமிழ்ப்பாலை ஊட்டி வளர்த்ததாகச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. தன் 10 வயது பச்சிளம் பாலகனைப் போருக்கு அனுப்பிய வீரத் தாயொருத்தி, தன் மகன் போரில் புறமுதுகிட்டு இறந்ததாகச் செய்தி வருமேயானால், அவனுக்குப் பாலூட்டிய தன் கொங்கைகளை அறுத்து எறிந்துவிடுவதாகச் சூளுரைக்கிறாள். இதைவிடச் சிறந்த விளக்கம் வேறெந்த மொழி இலக்கியத்திலும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. பெரியவர்கள் அருகிருந்து பாலூட்டலின் சிறுசிறு நுணுக்கங்களையும் படிப்படியாகப் பயிற்றுவித்த காலம் மலையேறிவிட்டது. பெருகிவரும் தனிக் குடும்ப வாழ்க்கை முறையும், மருத்துவர்களின் ஆலோசனைகளும், முதியோர் இல்லங்களின் பரவல்களும், நவீனத் தொடுதிரைப் பயன்பாடுகளும் பெரியோர் கூறும் அனுபவப் பாடங்களுக்கு ஈடாகாது என்பதுதான் தற்போதைய சென்சிடிவான அம்மாக்கள் ஏற்க மறுக்கும் கசப்பான உண்மையாகும். பால் புகட்டும்போது செய்ய வேண்டியவை 1. பாலூட்டும் தாய்மார்கள் தங்களது மனநிலையை எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே வைத்துக்கொள்ளவேண்டும். 2. தன் சுத்தம், குறிப்பாக, தங்களது மார்பகக் காம்புகளை முறையாகப் பராமரித்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும். 3. குழந்தைப் பிறந்தவுடன் சுரக்கும் சீம்பாலை கட்டாயமாகக் குழந்தைக்குப் பருகக் கொடுக்க வேண்டும். 4. பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் தாயின் மார்பகம் மற்றும் குழந்தையின் வாய்ப்பகுதியை மறவாமல் நன்றாகத் துடைத்துவிடவேண்டும். 5. தாயும் சேயும் குளித்ததற்கு 30-45 நிமிடங்களுக்குப் பிறகே பால் புகட்டும் செயலில் ஈடுபடவேண்டும். 6. குழந்தைக்கு விக்கல் எடுக்கும்போது தாராளமாகப் பாலூட்டலாம். 7. பணிக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குத் தேவைப்படும் பாலை, ஒரு பாத்திரத்தில் கறந்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, பின் வீட்டிலிருப்போரின் முறையான பராமரித்தலின்பேரில், குழந்தைகளுக்குத் தேவைப்படும் சமயத்தில் குப்பிகளில் அடைத்து, 8 மணி நேரம்வரைக் கொடுக்கலாம். செய்யக் கூடாதவை 1. படுத்துக்கொண்டு பால் கொடுக்கும்பொழுது, குழந்தைகள் மூச்சுத் திணறல் மற்றும் புறையேறுதல் உள்ளிட்ட விரும்பத் தகாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனவே அதைத் தவிர்த்திடவேண்டும். 2. குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை இனங்கண்டு, முற்றிலுமாக அவ்வுணவுகளை நிறுத்திவிட வேண்டும். 3. வேலைக்குச் சென்று திரும்புவோர், குறிப்பாக, வெயிலில் நின்று வேலைசெய்த பெண்மணிகள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். 4. உடலுறவில் ஈடுபட்ட அடுத்த கனமே, அழுதிடும் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதால் பேராபத்துக்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே, அதையும் தவிர்த்தே விடுவோம். 5. மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் எந்தவித மாத்திரை மருந்துகளையும் பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக் கூடாது. 6. தாய்ப்பாலோடு பசும்பால் அல்லது செயற்கைப் பால் பௌடர்களைப் பழக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தும் பட்சத்தில், அவற்றில் பயன்படுத்தப்படும் இனிப்பின் அளவு குறைவாக இருத்தல் நல்லது. இனிப்புத் தன்மை அதிகமாகும்போது, குழந்தைகள் அதை விரும்பி குடித்துவிட்டு, ஆரோக்கியம் தரும் தாய்ப்பாலைத் தவிர்க்க முற்படுவதாக பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கதறுகின்றனர். தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு தற்போதைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒருகாலத்தில் தாய்மார்கள் பேசவே கூச்சப்பட்ட விஷயமாக இருந்த பாலூட்டும் செயல், இப்போது ஆண்களும் அச்சமின்றி பேசக்கூடிய தூய்மயான பொருளாக மாறிவிட்டது. "எனக்கு நல்லா பால் ஊறுறதுக்காக எதையும் சாப்பிடத் தயார்" என்று கூறும் பெண்களும், "என் மனைவிக்கு அதிகமா பால் சுரக்க நல்ல ஐடியா சொல்லுங்க பாட்டி/டாக்டர்" என்று கேட்கக்கூடிய ஆண்களும் மேற்சொன்ன கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். சிசேரியன் செய்து, படுக்கையிலிருந்து எழ முடியாத நிலையில் இருக்கும் பெண்களும் அமுதூட்ட முயல்வது தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வின் உச்சம் என்றால் அது மிகையாகாது. குழந்தையைப் பெற்றெடுப்பதொடு தாயின் கடமை முடிந்துவிடப்போவதில்லை. தவமிருந்து வரமாகப் பெற்றெடுக்கும் உயிர்களுக்கு நலம் தரும் தாய்ப்பாலை முதல் உணவாகப் பொறுப்புடன் கொடுத்து வளமுடன் வளர்த்தெடுப்பதிலும் தொடர்கிறது. வருங்கால இந்தியாவின் சிறப்பான தூண்களை இயற்கையின் துணைகொண்டு இண்பமாக உருவாக்கிடுவோம்! ![]() . விசாலமான கனவுகளோடும், இலக்குகளோடும் ஒவ்வொரு பொழுதின் ஒவ்வொரு நிமிடத்தையும் எல்லோரையும் போலவே மிக தீர்க்கமாக தங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் பார்வையற்றவர்கள். ஆனால், அவர்களுக்கான உலகம் என்பது மற்றவரைச் சார்ந்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் தங்கள் சட்டை வர்ணத்தில் இருந்து சான்றிதழ்களை அடையாளம் காண்பது வரை அவர்கள் யாரையாவது சார்ந்துதான் வாழ வேண்டி இருக்கிறது. இப்படியாக, பார்வையற்றவர்களின் சிக்கல்களை இந்த கட்டுரையின் முடிவையும் தாண்டி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், சட்டை வர்ணம் முதல் சாப்பாட்டு மெனு வரை உள்ள சின்னச் சின்ன வேலைகளை ஒரு மொபைல் செயலி செய்தால் எப்படி இருக்கும்? வாருங்கள், அந்த செயலியைப் பற்றி அலசி ஆராயலாம். அந்த செயலிக்கு ‘Be My Eyes’ (என் கண்களாக இரு) என மொபைல் உலகத்தில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாளும் ஐ ஃபோன் உலகத்தைக் கலக்கிக் கொண்டிருந்த இந்த செயலி, கடந்த அக்டோபரில்தான் ஆண்டிராய்டு மார்க்கெட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்த தன்னார்வ குழு ஒன்றுதான் நுணுக்கமாக யோசித்து, உலகில் உள்ள தன்னார்வலர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இச்செயலியினை வடிவமைத்திருக்கிறார்கள். உலகில் தனியே வாழும் பார்வையற்றோரைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. பார்வையற்றோர் எளிதில் அனுகத்தக்கத் தன்மை, நேர்த்தியான வடிவமைப்பு, குறைந்த அளவு ஸ்டோரேஜ் பயன்பாடு என செயலி உருவாக்கத்திலேயே மெர்சல் காட்டி இருக்கிறார்கள் இதன் டெவலப்பர்கள். 3G, 4G நெட்வொர்க்குகளிலும் கில்லியாக வேலை செய்கிறது இச்செயலி. எப்படிச் செயல்படுகிறது இந்த செயலி? ஒரு பார்வையற்றவர் ஒரு பொருளின் வர்ணத்தையோ அல்லது மருந்துச் சீட்டின் காலாவதி திகதியையோ தெரிந்துகொள்ள நினைக்கிறார். அந்தச் சமயத்தில் அருகில் ஒரு பார்வை உள்ள நபரும் இல்லை. அப்பொழுது, அந்தத் தருணத்தை எப்படி சமாளிப்பார்? இம்மாதிரியான சின்னச் சின்ன செயல்பாடுகளுக்குத்தான் செயலியில் உள்ள தன்னார்வலர்கள், “நாங்க இருக்கோம் பாஸ்” என முகத்தில் புன்னகை தவழ குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கு உங்களிடம் கேமரா உள்ள ஒரு ஆண்டிராய்டு ஃபோனோ, ஐ ஃபோனோ இருந்தால் போதும். இச்செயலியின் முழு பலனையும் நீங்கள் பெற்றுவிடலாம். எப்படி இச்செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவுவது? முதலில் நீங்கள் வைத்திருக்கும் கைப்பேசியின் பிரத்தியேக ஆப் ஸ்டோருக்குச் செல்லுங்கள். அந்த ஆப் ஸ்டோரின் தேடல் கட்டத்தில் ‘Be My Eyes’ என தட்டச்சு செய்து, பின்னர் தேடல் பொத்தானை அழுத்துங்கள். அதில் ‘Be My Eyes’ என்ற அப்ளிகேஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் கைப்பேசியில் நிறுவிக் கொள்ளுங்கள். இல்லையெனில், இங்கு இணைக்கப்பட்டுள்ள லிங்க்கைப் பின்பற்றி இச்செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவிக் கொள்ளுங்கள் (செயலியை நிறுவ இங்கே கிளிக் செய்யவும்). நிறுவிய பின்னர், அந்த செயலிக்குள் நுழையுங்கள். அதனுல் நுழைந்த பின், உங்களுக்கு இரண்டு தேர்வுகள் திரையில் காட்டப்படும். அதாவது, நீங்கள் பார்வையற்றவரா? அல்லது தன்னார்வலரா? இதில் நீங்கள் பார்வையற்றவர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உள் நுழையுங்கள். உள்ளே நுழைந்த பின், ஒரே ஒரு செட்டிங்ஸை மட்டும் மாற்றிவிட்டால் போதும். பிறகு இந்த செயலியை நீங்கள் முழுமையாக பயன்படுத்த துவங்கிவிடலாம். அது என்னவெனில், நீங்கள் இந்த செயலியில் நுழைந்ததும் அதன் வலது மூலையில் அமைந்திருக்கும் செட்டிங்ஸ் ஐக்கானை கிளிக் செய்யுங்கள். அதிலுள்ள முதன்மை மொழி (Primary Language) ஐக்கானை கிளிக் செய்து, அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்யுங்கள். பிறகு, கீழே இருக்கும் இரண்டாவது மொழி (Secondary Language) ஐக்கானை கிளிக் செய்து ஆங்கிலத்தைத் தேர்வு செய்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்! நீங்கள் இந்த செயலியை முழுமையாக பயன்படுத்தத் தயாராகிவிட்டீர்கள். செயலியை எவ்வாறு பயன்படுத்துவது? உங்களுக்கு ஒரு பொருளின் வர்ணமோ, அந்தப் பொருளின் மீது எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களையோ தெரிந்துகொள்ள வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இம்மாதிரியான சமயத்தில்தான் இந்த செயலியை நீங்கள் பிரயோகிக்க வேண்டும். நீங்கள் அந்தப் பொருளைப் பற்றி தெரிந்துகொள்ள, முதலில் உங்கள் ‘Be My Eyes’ செயலிக்குள் நுழைந்துக் கொள்ளுங்கள். பின்னர் திரையின் வலது ஓரமாக அமைந்திருக்கும் ‘Call First Available Volunteer’ ஐக்கானை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன், இந்த செயலியில் உறுப்பினராக இணைந்திருக்கும் இயக்க நிலை தன்னார்வலருக்கு (Online Volunteer) 30 நொடிகளுக்குள் உங்கள் இணைப்பு சென்று சேரும். அவர் உங்களுக்கு வேண்டிய உதவியை உங்கள் கைப்பேசி கேமரா வாயிலாக தீர்த்துவைப்பார். நீங்கள் தன்னார்வலர் கூறும் வழிமுறைகளைக் கொஞ்சம் கவனமாக பின்பற்றினால் போதும், உங்களுக்கான ஐயங்கள் விரைவில் தீர்க்கப்படும். இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில், நீங்கள் உங்களுக்குப் பிடித்த மொழியிலேயே தன்னார்வலர்களிடம் உரையாடி உதவிகளைப் பெறலாம். இப்பொழுது அனுமானித்திருப்பீர்கள், நான் எதற்காக மேலே செட்டிங்ஸில் உங்கள் மொழியைத் தேர்வு செய்யச் சொன்னேன் என்று. அதேநேரத்தில், நீங்கள் உதவிக்காக இணைப்பை ஏற்படுத்தும்போது உங்கள் தாய்மொழி தன்னார்வலர் கிடைக்கவில்லை எனில், நீங்கள் செட்டிங்ஸில் இரண்டாவதாக தேர்வு செய்திருக்கும் ஆங்கிலம் பேசும் தன்னார்வலருக்கு உங்கள் இணைப்பு சென்று சேரும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதில் எனது அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். நானும் இந்த செயலி வாயிலாக இரண்டு தன்னார்வலர்களிடம் பேசி இருக்கிறேன். அதில் முதலாமவர், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிய ஒரு பெண்மனி. அவரிடம் என் சட்டை வர்ணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அதற்கு அந்த பெண்மனியும் நன்றாகவே எதிர்வினை ஆற்றினார். இரண்டாமவர், ஒரு தமிழ் பேசும் தன்னார்வலர். அவரிடமும் சோதனைக்காக 100 ரூபாய் தாளைக் காட்டி எனது ஐயத்தைத் தீர்த்துக் கொண்டேன். எனது ஐயத்தைத் தீர்த்த அவர், “இந்த செயலியைப் பயன்படுத்துற பலரும் நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துறாங்க தம்பி. ஆனா சிலர் ஒரு விளையாட்டாவே நினைச்சிட்டு இந்த செயலியப் பயன்படுத்திட்டிருக்காங்க தம்பி. சில சமயங்கள்ல மிஸ்டு கால் கொடுத்து கட் பண்றது, இன்னும் சில சமயங்கள்ல அவங்க இணைப்ப அட்டன் செஞ்ச உடனே கட் பண்ணிட்டு போறது, சிலர் அவங்க பாட்டுக்கு எங்களுக்கு இணைப்ப ஏற்படுத்திட்டு அவங்க செயல்கள நேரடி ஒளிபரப்பு செய்றது போன்ற பல விஷயங்கள செய்றாங்க தம்பி” என தன் வருத்தங்களைச் சொல்லிவிட்டு, தன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டார் அந்த சிங்கப்பூர் தமிழர். அந்தந்தக் காலத்திற்கேற்ப நமக்கான தொழில்நுட்பம் புற்றீசலைப் போல் வளர்ந்துகொண்டே செல்கிறது. அதனை ஆக்கப்பூர்வமாகக் கையாள்வது நம் கைப்பேசிகளில்தான் அடங்கியிருக்கிறது! முப்பதுகளின் மத்தியில் இருக்கும் நான் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். குழந்தைப் பருவத்தினும் அழகான என் பதின் பருவ நாட்கள் நினைவாடுகின்றன.
குழந்தைப் பருவத்தில் நாம் எல்லாராலும் கொண்டாடப்பட்டோம். நாளைக்கு ஒரு பருவ அக்காள்களின் மடியில் பள்ளி கொண்டிருந்தோம். அம்மா, அக்கா, அத்தை என இணையற்ற தேவதைகளின் அரவணைப்பின் கதகதப்பும், ஆயிரமாயிரம் முத்தங்களின் ஈரங்களுமே நம் மழலையை மலர்த்திய ஒளிச்சேர்க்கைக் காரணிகள். அப்படியே தலைகீழானது பதின் பருவம். கவனிப்பாரற்றவராய் நம்மை நாமே அனுமானித்துக்கொண்டு, எப்போதும் சூழ்படைத் தளபதியாய் சுற்றித் திரிவோம். தாமரை இலைத் தண்ணீராய் தகப்பனிடமும், தொட்டால் சுருங்கியாய் ஆசானிடமும் நழுவித் திரிந்த நமக்கு நண்பர்கள்தான் உலகம். அவர்கள் உண்டதை உண்டோம். இரவு தவிர எப்போதும் ஒன்றாய் உறங்கினோம். விடுதி என்றால், விடிய விடியப் பகல்தான். நம் வாசனை அவர்களின் உடுப்பில் வந்து சேர்ந்தது. நமது உடுப்புகளில் அவர்கள் வாசம் செய்தார்கள். எல்லாம் காதலும் காதல் தாண்டிய கல்யாணம் வரைக்குமே சாத்தியமாயிற்று. ஆனால், அந்தப் பருவம் மனதிற்குள் வரைந்துவிட்ட எண்ணற்ற ஓவியங்களின் முகவுரைகளாய், எரிந்துபோன காலத்தின் சுவையான எச்சங்களாய் இப்போதும் இருப்பவை அப்போது நாம் கேட்டுச் சிலிர்த்த, நம்மைக் கிறங்கடித்த, நமது இரவுகளைக் களவாடிய அந்த இசை. உங்களைப்போலவே நானும் அவைகளைத் தேடித்தேடித் தொகுத்து என் மடிக்கணினியை உயிர்ப்புடையதாய் மாற்றியிருக்கிறேன். இருப்பதைப் பகிர்வதுதானே அறம். இதோ ராகரதத்தில் நாம் ஒன்றாய்ப் பயணிப்போம். கொஞ்சம் சுவையான சம்பாஷனைகளுடன். வாருங்கள். “இளைஞர்களின் பசுமை நினைவுகள்” எனது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் காலங்கள் வாழ்வின் உன்னதமான தருணங்கள். இப்போதும் ஏதோ ஒரு நிகழ்வில் அரிதினும் அரிதாக நண்பர்கள் ஒன்றுகூடினால், மதுரையில் நாங்கள் வாழ்ந்த, இல்லை இல்லை பறந்துகொண்டிருந்த நாட்களைப் பற்றிச் சிந்தித்து, சிலாகித்து, சிரித்துக்கொள்வோம். கையில் ஒருவிரல் கூட்டி, காதலும் கானமுமாய் கரைந்துகொண்டிருந்த அந்த நாட்களை தனித்திருக்கும்போது மீட்டுக்கொணர்கிறது நான் கேட்கும் திரை இசைப்பாடல்கள். ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாலும், ஏதாவது ஒரு சுவாரசிய நினைவு மனதை அலைக்கழிக்கும். அன்றைக்கு எங்களுக்கான திரையிசைப் பாடல்களின் பணுவல் நிலையமாய்த் திகழ்ந்தது மதுரை மாநகர காம்ப்லெக்ஸ் பஸ் ஸ்டாண்ட். அதன் ஒரு பகுதியில் தேவி, ராயல், கோல்டன் என வரிசைகட்டி வரவேற்றன ராகமாளிகைகள். விடுதிக்கட்டணம், தேர்வுக்கட்டணம் என எல்லாவற்றிலும் கொஞ்சம் பிய்த்தெடுத்து, நாங்கள் அதிலும் நான் வாங்கிய கேசட்டுகள் அதிகம். பெரும்பாலும் நாங்களே பாடல்களைத் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்திப் பதிவு செய்யத் தருவதுண்டு. சிலநேரங்களில் அந்தக் கடைகளில் இருக்கிற நல்ல தொகுப்புகளையும் வாங்கிச் செல்வோம். அப்படி நாங்கள் வாங்கியதில் மிகவும் மனதைத் தொட்ட தொகுப்பு தேவி கேசட் செண்டர் தொகுத்திருந்த “இளைஞர்களின் பசுமை நினைவுகள்”. அவர்களாக வெளியிடும் தொகுப்பில் இருக்கும் பதிநான்கு பாடல்களில் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர பிற பாடல்கள் சோபிக்காது. ஆனால், அந்தத் தொகுப்பில் அத்தனை பாடல்களும் அருமையானவை. அனைத்துமே காதல் தோல்வியில் கசிந்துருகும் கானங்கள். அதிலும் அந்தத் தொகுப்பின் மூன்றாவது பாடல். எங்கள் விருப்பத்தோடே எங்களின் முகமூடிகளைப் பிய்த்தெறிந்த பாடல். நாங்கள் அதிகம் முனுமுனுத்த பாடல். அந்த நாட்களின் நண்பர்களில் இப்போதும் என்னோடு அதே அணுக்கத்துடனும், நேசத்துடனும் இருக்கும் நண்பன் ஒருவனின் ஆற்றாப் பெருந்துயருக்கு அந்தப் பாடல்தான் அருமருந்தாய் அமைந்தது. காதலியின் ஏதோ ஒரு சொல் சுட்டுவிட களங்கிவிட்டான் நண்பன். உண்ணவில்லை, உறக்கமில்லை. ஒரே ஒப்பாரி. அவ்வப்போதுதான் நான் துணைக்கிருந்தேன். அந்த நாட்களில் அனுதினமும் அவனின் துணையாய் இருந்தவர் மலேசியா வாசுதேவன். “ஒரு மூடன் கதை சொன்னால், என் கதை அதுதான்” என அவர் குரல் எடுத்தாலே நண்பன் ஓ வென அழுதுவிடுவான். “பிரித்தி! உன்னை நினைக்க விரும்புகிறேன், நீ விடவில்லை. உன்னை மறக்க விரும்புகிறேன், அதுவும் முடியவில்லை.” என்ற வரிக்கு இன்னும் தேம்புவான். காதலில் துயரம் என்பது நண்பனின் தனி உடைமையா என்ன? கொஞ்ச நாட்களில் எனக்கும், இன்னும் சிலநாளில் இன்னொரு நண்பனுக்குமென அடிகள் விழுந்தபோதும், வலிக்காமல் காப்பாற்றி மயிலிறகால் மனசை வருடியவை இந்த வரிகள்தான். இங்கு காதலித்தாலும், காதலை மறுத்தாலும் பெண்கள்தான் தாக்கப்படுகிறார்கள் என்கிற கள எதார்த்தம் விளங்காத பருவம் அது. ஆகவே, தேறுதலின் தேறலாய், நாங்கள் அன்று தெரிந்துகொண்ட வரிகள் இவை. “பெண்ணைப் படைக்காதே பிரம்மனே! பாவம் ஆண்களே, பரிதாபம் நாங்களே. ஆலகாலமா? விழியா? சொல்லடா? கல்லை உடைத்தாலும் நீர் வரும் பாலைவனங்களோ அழகான பெண்களே. எந்த மடையனோ சொன்னான் சொற்கமாம்; பெண்கள் உலகமே நரகமே.” அப்போதைக்குப் பாடல் முழுக்க விரவிக்கிடந்த பெண்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமே எங்கள் விரக்திக்கு ஒத்தடமாய் அமைந்தது. இன்றைக்கு நடக்கும் ஆசிட் வீச்சுகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். மனம் குற்ற உணர்வு கொள்கிறது. ஆனாலும், எப்போது கேட்டாலும் கண்ணீரையும், ஒருவித சிலிர்ப்பையும் என் நண்பன் முட்டிக்கொண்டு அழுத அந்த விடுதிச் சுவர்களையும் நினைவின்முன் நிறுத்துகிறது பாடல். ஏனெனில், பதின்பருவம் ஹார்மோனைச் சுரந்தது. பாடலோ காதலையும் ஹார்மோனையும் அதிகம் சுரப்பித்தது. அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் “நெஞ்சில் ஆடும் பூவொன்று”. பாடலுக்கான இசை, இசைஞானி இளையராஜா. பாடியிருப்பவர், மலேசியா வாசுதேவன் அவர்கள் (அந்தப் பாடலைக் கேட்க) பாடலின் தொடக்கத்தில் வரும் சிரிப்பின் குரல் யாருடையது எனத் தெரியவில்லை. ஆனால், அந்தச் சிரிப்புதான் பாடல்மீதான ஒருவித மருட்சியையும், மயக்கத்தையும் தொடக்கத்திலேயே தந்துவிடுகிறது. …ரதம் பயணிக்கும் ![]() நம் நினைவடுக்குகளில் இருக்கும் சுவாரஸ்யமான, சுவையான சில அனுபவங்கள் என பட்டியல் போட்டால் அதில் பெரும்பான்மை பயண அனுபவங்களாகவே இருக்கும். அதிலும் பார்வையற்றவர்களின் பயண அனுபவங்கள் கூடுதல் சுவாரஸ்யம்தான். வழிமாறிப் போவது; மனித உருவம் என நினைத்து, வழியில் நிற்கும் ஆடு, மாடு போன்ற விலங்குகளிடமோ சுவற்றிடமோ வழி கேட்பது; டீ ஆத்தும் சத்தம் கேட்டு டீ கடை என நினைத்து, வீட்டுல போயி, “அண்ணே ரெண்டு டீ போடுங்க”ன்னு சொல்றது மாதிரியான சம்பவங்கள் தனியாக பயணங்கள் மேற்கொள்ளும் பெரும்பான்மை பார்வை மாற்றுத்திறன் நண்பர்களுக்குக் கிடைக்கும் நகைச்சுவையான அனுபவங்கள். சில நேரங்களில், வழி கேட்கும்போது பிச்சைக்காரர்கள் என நினைத்து விரட்டப்பட்ட அனுபவமும், சில்லறைகளை அள்ளிக் கையில் கொடுத்தது மாதிரியான எதிர்மறை சம்பவங்களும் என் நண்பர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. இவற்றைப் போன்று, எனக்குக் கிடைத்த பயணத்தோடுகூடிய சுகானுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். நான், மதுரை சுந்தரராஜன்பட்டியில் இருக்கிற இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தால் நடத்தப்பட்டுவரும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் 12ஆம் வகுப்புப் படிச்சிட்டிருந்தேன். அன்று 2010 ஜூன் 23 என நினைக்கிறேன்; கோவையில் முன்னாள் முதல்வர் கலைஞரால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அல்லவா? அது தொடங்குவதற்கு முந்தைய நாள். மாநாடு நடைபெறும் 3 நாட்களும் தொடர் விடுமுறைங்கிறதாலயும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் 11ஆம் வகுப்பு முடிஞ்சு முழுபரிட்சை லீவுக்கு வீட்டுக்கு விடாம ஹாஸ்ட்டல்லயே தங்கவச்சு ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருந்ததாலையும் பள்ளி நிர்வாகம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த 3 நாட்கள் வீட்டுக்குப்போக அனுமதி கொடுத்ததால நான் தனியாவே வீட்டுக்கு கிளம்பினேன். தனியாகப் பயணம் செய்ய பெற்றோர் அனுமதி தந்து, அவ்வாறே என் பயணங்களை ஆரம்பித்த காலம் அது. கேம்பஸ்குள்ளேயே தங்கிப் படிக்கிற ஸ்கூல் பையன்கிறதால இலவச பஸ் பாஸ் கிடையாது என்பதாலும், பஸ்ல ஏறினா சிலநேரம் நடத்துனர் சரியா ஸ்டாப் வந்துச்சுன்னா சொல்லமாட்டார் என்பதாலும் நான் தேர்வுசெய்வது ஷேர் ஆட்டோக்களையே. ஷேர் ஆட்டோக்காரங்க இறங்குரப்போ அடுத்து எங்க போகனும்னு கேட்டு அங்க போர ஷேர் ஆட்டோவுல ஏத்திவிட்டுருவாங்கங்கிறது என்ன மாதிரி புதுசா தனியா பயணம் செய்ய ஆரம்பிச்சிருக்கிறவங்களுக்கு கூடுதல் வசதி. சிலநேரம் நம்ம போற எடத்துக்கு நிறைய டிக்கெட் இருந்தா ஏற்கெனவே அவர் போறதா கத்துன எடத்துக்கு பதிலா, நம்ம போகவேண்டிய எடத்துக்கே கொண்டுபோய் விட்டுருவாங்க. அன்றைக்கும் ஒரு ஷேர் ஆட்டோவுலயே ஏறுனேன். ஷேர் ஆட்டோன்னா உடனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி ஆட்டோ வடிவம் மனசுக்குள்ள வந்திருக்கும். ஏன்னா சென்னையில உள்ள ஷேர் ஆட்டோ ஒருமாதிரியும் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில உள்ள ஷேர் ஆட்டோ வேற மாதிரியும் மதுரை ஷேர் ஆட்டோ வேற மாதிரியும் இருக்கும். இப்பல்லாம் ஊருக்கு ஊர் ஷேர் ஆட்டோ சத்தம்கூட வேற மாதிரிதான் இருக்கு. நான் இங்க பேசிக்கிட்டிருக்க மதுரை ஷேர் ஆட்டோ எப்படி இருக்கும்னா, நம்மல்லாம் பாத்திருப்போம்ல டீசல் ஆட்டோ, ஒருமாதிரி ‘தட்டதட்டதட்டதட்டதட்ட’ன்னு கேக்கும்ல, அந்த ஆட்டோதான். அதுல டிரைவருக்குப் பின்னாடி உள்ள சீட்டக் கலட்டி, அதுக்கும் பின்னாடி கொஞ்சம் இடம் இருக்கும்ல அங்க மாட்டிருப்பாங்க. ஆள் ஏத்தும்போது அந்த சீட்ல கொஞ்சம் பேர், அவங்க காலுக்குக்கீழ ஏற்கெனவே சீட் இருந்த எடத்துல கொஞ்சம் பேர், அப்றம் டிரைவர் சீட்டுக்குப் பின்னாடி மூனு வெரல் அகலத்துக்கு வெல்ட் பண்ணி வச்சிருக்கிற கம்பியில சில பேர்னு உக்காரவைப்பாங்க. சீட்லயும் அதுக்கு கீழேயும் உக்காருவது ஓரளவுக்கு ஈசிதான்னாலும் இந்த கம்பியில உட்காருவதுங்கிறது தனி கலை. அந்த ஆட்டோ போடுற ஆட்டத்துல எதிர்ல இருக்கிறவங்கமேல கால் படாம, இருக்குற இத்துனோண்டு எடம் எங்க இருக்குன்னு பாத்து சரியா கால ஊனி, அந்த கம்பியில நம்ம பின் பக்கத்த லாவகமா அண்டக் குடுத்து, தலை மேலே இடிக்காத அளவுக்கு கொஞ்சம் குனிஞ்சு இருக்கனும். இவ்ளோ கஷ்டம்! இருந்தாலும் எப்போ ஷேர் ஆட்டோ ஏறினாலும் சீட் காலியா இருந்தாகூட நான் அந்த கம்பிலதான் உக்காருவேன். சீட்ல உக்காந்திருக்கப்ப கீழே பெண்கள் இருந்தா, ஆட்டோ போற வேகத்துலயும் ஆட்டோ போடுற ஆட்டத்துலயும் கண்டிப்பா அவங்கமேல கையோ காலோ தவறுதலா பட்டுவிடும். அப்றம் எதும் பிரச்சனன்னா சமாளிக்க முடியாது. ஸ்டாப் வந்தா சீக்கிரமா இறங்கவும் முடியாது. அந்த சீட்டுக்குக் கீழே உள்ள பகுதியில உக்காந்தா, பேன்ட் பின்னாடி தூசி ஒட்டிரும். அதனால எப்பவுமே நமக்கு அந்தக் கம்பிதான் சரியான இடம். சரி, சம்பவத்துக்கு வருவோம். அன்னைக்கு எங்க ஸ்கூலுக்கு லீவு விட்டதால அந்த ஆட்டோ கிட்டதட்ட ஃபுல்லா ஆயிருச்சு. அந்தக் கம்பியும் அப்றம் கீழே ஒரு எடமும்தான் பாக்கி. நான் கம்பியில உக்காந்துட்டேன். என் பக்கத்துல கம்பியில ஒரு எடமும் கீழே ஒரு எடமும்தான் நிரப்பப்படாம இருந்துச்சு. ரொம்ப நேரமா, ‘சர்வேயர் காலனி, சர்வேயர் காலனி’ன்னு கத்திக்கிட்டிருந்த ஆட்டோக்காரர், ஒருவழியா கிளம்ப முடிவு பண்ணி மெதுவா ஆக்ஸிலேட்டர திருக, நான் ஸ்கூல்ல வயசுக்கோளாருல லவ் பண்ண ஆரம்பிச்ச, இப்பவும் தீவிரமா லவ் பண்ணிகிட்டு இருக்க என்னோட கிளாஸ் மேட்டும் அவங்க அக்காவும் வேகமா ஓடிவந்து அந்த ஆட்டோவுல ஏறினாங்க. இந்த ஒலகத்துலதான் இருக்கோமான்னு எனக்கே சின்ன சந்தேகம். நான் மனசுக்குள்ள எதிர்பார்த்தத் தென்றல், புயல் மாதிரி வந்து என் பக்கத்துல, அதுவும் சரியாவே உக்கார முடியாத அந்த கம்பியில வந்து உக்காந்தது. ஷேர் ஆட்டோவோட, மன்னிச்சுக்கோங்க, அந்த விமானத்தோட வேகத்தாலும் இந்தியச் சாலைகளின் புண்ணியத்தாலும் ஆட்டம் காரணமா அவளும் அவள் துப்பட்டாவும் அடிக்கடி என்மேல பட, ஓரிருமுறை அந்த குளிர்ந்த ஐஸ்கட்டி விரல்களும் அனிச்சையாகவே என் கைகளை பற்றிக்கொண்டது. அதுதான் எனது முதல் பறக்கும் அனுபவம். அப்பதான் அந்த நல்ல செய்தியும் காதுகளில் ஒலித்தது. அதுவரை சர்வேயர் காலனி என கத்திக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோக்காரர், சாரிப்பா, அந்த விமாண பைலட் அப்டியே ஃபிலேட்ட மாத்தி மாட்டுத்தாவணின்னு சொல்ல ஆரம்பித்துவிட்டார். நாங்களும் வெளியூர் பேருந்துகளை பிடிக்க மாட்டுத்தாவணிதான் செல்லவேண்டும் என்பதால், அந்த விமானப்பயணம் ஒரு ஐந்து நிமிடம் நீடித்ததில் மிக்க மகிழ்ச்சி. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போய் இறங்கியப் பிறகும், எனது அதிர்ஷ்ட தேவதை என்னைக் கைவிடவில்லை. பல வருடங்களாக தென்காசியில் வசித்த எனதுக் குடும்பம், அப்பாவுக்கு சரியான வேலை இல்லாததால், கிடைத்த ஒரு நல்ல வேலைக்காக தூத்துக்குடிக்குக் குடிபெயர்ந்திருந்தது. தூத்துக்குடியை நோக்கிய என் முதல் பயணம் அது. என்னோடு வந்த புயலும் தூத்துக்குடியில்தான் கரையை கடக்கவேண்டியிருந்ததால், ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய என்னை அப்படியே தன் விரல்களில் சிறைபிடித்து, தூத்துக்குடி பேருந்தில் கொண்டுபோய் ஏற்றிவிட்டு என் அருகிலும் உட்கார்ந்துகொண்டது. அன்று பேருந்தில் கூட்டம் இல்லாததால், மூன்று பேருக்கான இருக்கையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். ஷேர் ஆட்டோவைப் போல அதிக தொடுதலுக்கு வாய்ப்பில்லாமல் போனாலும், நிறைய பேசினோம். மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு பைபாஸ் ரைடர் பேருந்தில் பயணிக்க ஆகும் 3 மணிநேரமும் பிடித்தது, பிடிக்காதது, பள்ளிக்கூடத்தில் உளவும் எங்கள் காதலைப்பற்றிய வதந்திகள், குடும்பச் சூழல், எதிர்காலம், பாடம், வகுப்பு நிலவரம் ஆகியவற்றைப் பற்றி பேசினோம். இந்தப் பயணத்திற்குப் பிறகு, அவளும் நானும் இதைவீட நீண்ட பயணங்கள் நிறைய மேற்கொண்டிருந்தாலும், எங்கள் காதலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திய வகையில் அந்த முதல் பயணமே என் மனதில் முதலிடம் பிடித்துவிட்டது. இன்னொரு பயண அனுபவம் இதற்கு நேர்மாறானது. தனியாகப் பயணம் செய்வதை அதிகமாக நான் விரும்பினாலும், ஒரு பெண்ணுடன் தனியாகப் பயணம் செய்வது பிடிக்காது. நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் தனியாகப் போராடிக்கொள்ளலாம். ஆனால், நம்முடன் வரும் பெண்ணுக்கு ஒரு பிரச்சனை எனில், அந்த இடத்தில் ஒரு பார்வையற்றவரால் எதுவும் செய்துவிடமுடியாது. அது தவிர, நாங்கள் செய்வது அங்கீகரிக்கப்படாத பயணம் என்பதால் நிறையவே பயம் இருக்கும். இந்தக் காரணங்களுக்காக நான் மறுத்தாலும், அவளின் அன்புத்தொல்லை என்னை விடாது. பெரும்பாலும், வேறு வழியில்லாமலேயே ஒப்புக்கொண்டு அவள் கட்டாயப்படுத்தும் பயணங்களுக்கு வர சம்மதித்தாலும், பயணத்தில் அவளோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அது நாங்கள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். நான் படித்தப் பள்ளியில் ஒரு விழா இருப்பதால் அதில் கலந்துகொள்ள வேண்டுமெனச் சொல்லி மதுரைக்குப் போக வீட்டில் அனுமதி வாங்கிவிட்டேன். உண்மையாகவே பள்ளியில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில், நான் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென அவளிடம் சொன்னதால், அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘இனி நீ போகவேண்டாம் என முடிவுசெய்தாலும் நான் உன்னை விடமாட்டேன். கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து போயே தீரவேண்டும்’ என சொல்லிவிட்டால். ‘நான் பஸ் ஏத்தி விடுறேன்’ என்று சொன்ன அப்பாவை கஷ்டப்பட்டு சமாளித்து, தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு தனியாகவே வந்து, அவள் வரும் வரை காத்திருந்து ஒரு மதுரைப் பேருந்தில் ஏறினோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. மதுரை மாட்டுத்தாவணியில் இறங்கி, எங்கள் பள்ளி அமைந்திருக்கும் சுந்தரராஜன்பட்டி செல்ல, சர்வேயர் காலனிக்குச் செல்லும் ‘C4’ பேருந்தை பிடிக்கவேண்டும். ஆனால், நாங்கள் தவறுதலாக ‘C3’ பேருந்தில் ஏறிவிட்டோம். எனவே நடத்துனர், ‘அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடுகிறேன். நீங்கள் சர்வேயர் காலனி பேருந்தை ஈசியாக பிடித்துவிடலாம்’ எனச் சொல்லி அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டார். அங்கு இறங்கிச் சாலையைக் கடக்கும்போது, சத்தமில்லாமல் வந்த ஒரு காரைக் கவனிக்கவில்லை. அவர் வேகமாக வந்து, என் ஸ்டிக்கில் (வெண்கோல்) மோதிவிட்டார். தவறு எங்கள் மீது என்றாலும், கார்க்காரரை மற்றவர்கள் திட்டினார்கள். உடைந்த ஸ்டிக்கை வீட்டுக்கு எடுத்துச் செல்லமுடியாது என்பதால், அங்கேயே போட்டுவிட்டு கிளம்பிவிட்டோம். ஒருவழியாக எங்கள் பள்ளிக்குச் சென்று விழாவை முடித்துவிட்டு மாட்டுத்தாவணி திரும்பினோம். அங்கு அடுத்த ஏழரை காத்திருந்தது. எப்பொழுதும் தூத்துக்குடி செல்ல பைபாஸ் ரைடர் பேருந்தை பிடிப்பதுதான் வழக்கம். ஆனால், அன்று அவள் பைபாஸ் ரைடரில் சென்றால் சீக்கிரமே ஊர் வந்துவிடும் என்பதால் லோக்கல் பேருந்தில்தான் செல்லவேண்டும் என அடம்பிடித்துவிட்டால். கிடைத்த பைபாஸ் ரைடரையெல்லாம் விட்டுவிட்டு ஒரு லோக்கல் பேருந்தில் ஏறினோம். எனக்கு மனசுக்குள் ஏதோ ஒரு பரபரப்பு; ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக ஒரு உள்ளுணர்வு. அது மிகச்சரியாகவே இருந்தது. பேருந்து அருப்புக்கோட்டையைத் தாண்டியபோது, டயர் வெடித்துவிட்டது. பிறகென்ன, ஒருவழியாக பேருந்தை உருட்டிக்கொண்டுச் சென்று, ஒரு உணவகத்தில் நிறுத்தி, வேறு பேருந்தில் மாற்றிவிட்டார்கள். அந்தச் சம்பவத்திற்கு பிறகு, எப்பொழுது அவள் பயணம் செய்ய அழைத்தாலும், நான் மறுக்க ஸ்ட்ராங்கான ஒரு காரணம் என் கையில் இருந்தது. இப்போது எங்கள் காதலுக்கு வீட்டில் அங்கீகாரம் கிடைத்துவிட்டதால், இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. பேருந்துப் பயணத்தில் அவளோடு செல்ல தடை ஏதுமில்லை; வாழ்க்கைப் பயணத்தில் அவளோடு சேரும் நாளுக்கு இன்னும் விடையில்லை. ![]() இந்தியாவில் தோன்றிய மிகச்சிறந்த அறிவை வளர்க்கும் விளையாட்டு, சதுரங்கம். ஆனால், ரஷ்யர்கள்தான் இதில் கொடிகட்டிப் பறந்தார்கள். தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவே சதுரங்க விளையாட்டில் முன்னணியில் இருக்கிறது. இதற்குக் காரணம் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் என்பது நாம் அறிந்ததே. சதுரங்கம் என்பது இருவரின் மூளைகள் 64 கட்டங்களுக்குள் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள (16 + 16 = 32) காய்களைப் பயன்படுத்தி எதிரியின் ராஜாவைக் கைது செய்வதே சதுரங்கம். சதுரங்கத்தில் வழங்கப்படும் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் [Grand Master] தற்போது இந்தியாவிடம் இல்லை என்றாலும், இந்தியர்கள்தான் சதுரங்கப் புள்ளிப் பட்டியலில் அதிகம் உள்ளார்கள். பார்வை மாற்றுத்தி்றனாளிகளும் அதில் அடக்கம். பார்வையற்றவர்கள் எப்படி சதுரங்கம் விளையாடுவார்கள்? பார்வை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட், கைப்பந்து, சதுரங்கம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். அதிலும் சதுரங்கத்திற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. சதுரங்கத்தில்தான் பார்வை மாற்றுத்திறனாளிகள் பார்வையுள்ளவர்களைப் போலவே விளையாட முடியும்! ஆம்! மற்ற போட்டிகளைப்போல சதுரங்கத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி விதிகள் இல்லை. மாற்றுத்தி்றனாளி அல்லாதவர் சதுரங்கக் காய்களைக் கண்களால் பார்த்து விளையாடுவர்; பார்வை மாற்றுத்திறனாளிகள் அவற்றைத் தொட்டுப் பார்த்து விளையாடுவர். அவ்வளவுதான் வித்தியாசம். இவ்விளையாட்டு தமிழக பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே சிறந்து விளங்க வித்திட்டவர்களுள் முக்கியமானவர் திரு. முத்துராமன் அவர்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே சதுரங்கம் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அப்போதே தமிழகத்திலிருந்து ரேட்டிங் பெற்ற முதல் பார்வையற்றவர் திரு. முத்துராமன் அவர்கள். இந்திய அளவில் இச்சாதனைப் படைத்த இரண்டாவது பார்வையற்றவர் இவர். மும்பையைச் சேர்ந்த சாருதத்தா யாதவ் என்பவர்தான் இந்தியாவில் ரேட்டிங் பெற்ற முதல் பார்வையற்ற வீரர். வாழ்க்கை வரலாறு 1978ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் என்னும் ஊரில் பிறந்தார் முத்துராமன். பிறவியிலேயே பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தொடக்கக்கல்வியை பாண்டிச்சேரியிலும், உயர்கல்வியை சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள அரசுப் பார்வையற்றோருக்கான பள்ளியிலும் முடித்தார். அதன் பின்பு இளங்கலை வரலாறு, முதுகலை வரலாறு, முனைவர் பட்டம் ஆகியவற்றை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். முனைவர் பட்ட ஆய்வின்போதே தேசிய தகுதித் தேர்வில் [NET] வெற்றியும் கண்டார். படித்து முடித்ததும் தற்காலிகப் பேராசிரியராக அதே கல்லூரியில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், பிறகு விழுப்புரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்பு, திண்டிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிரந்தர பேராசிரியராக இவரை அரசு பணியமர்த்தியது. சதுரங்கமும் முத்துராமனும் பள்ளிக் காலத்திலேயே விளையாட்டில் இவருக்கு ஆர்வம் அதிகம். அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வமுடையவராக இருந்தாலும், சதுரங்கத்தின்மேல் இவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. கல்லூரிக் காலத்தில் பல சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். பிறகு, மகேஷ் என்ற சதுரங்கப் பயிற்சியாளரிடம் மாணவராகச் சேர்ந்து கடுமையாக பயிற்சி மேற்கொண்டார். அவரது விடாமுயற்சியால், 2005ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஓப்பன் சாம்பியன்ஷிப் ரேட்டிங் டோர்னமெண்டில் ரேட்டிங் என்கின்ற சதுரங்கப் புள்ளிப் பட்டியலில் இடம்பெற்றார். இன்று அவரது ரேட்டிங் 1320ஆக இருக்கிறது. 2011ஆம் ஆண்டு அவர் தன் நண்பர்களோடு இணைந்து தமிழ்நாடு பிரெயில் சதுரங்கச் சங்கத்தைத் (TNBCA) தொடங்கினார். இச்சங்கம் தமிழக பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் சதுரங்கத்தை பிரபலப்படுத்திவருகிறது. ஒவ்வொரு வருடமும் நாட்டின் முதல் தர போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களை அதிகம் இடம்பெற வைப்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார் அவர். கிட்டத்தட்ட இந்த நோக்கத்தைப் பெருமளவில் நிறைவேற்றிவிட்டார் என்றே சொல்லலாம். காரணம், 2017ஆம் ஆண்டு இரண்டாம் தர போட்டிகளுக்கான தேர்வு ஆட்டங்களில் தென்னிந்தியாவில் இருந்து 23 பேர் கலந்துகொண்டனர். அதில் 9 பேர் வெற்றியும் பெற்றுள்ளனர். அந்த 9 நபர்களுள் இவரும் ஒருவர். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கிற வரிகளுக்கு ஏற்ப, இவர் கற்ற சதுரங்கத்தைப் பலருக்குக் கற்பித்து, அவர்களையும் இவ்விளையாட்டில் நாயகர்களாக்கியுள்ளார் திரு. முத்துராமன். அவர்களுள் சாய் கிருஷ்ணன், தமிழ்நாடு பிரெயில் சதுரங்கச் சங்கத்தின் இணைச் செயலர் விக்னேஷ் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவரது முதல் மாணவன் சாய் கிருஷ்ணன், தமிழக அரசின் நிதி உதவி பெற்று அயல்நாட்டில் நடந்த சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முத்துராமன் அவர்கள் பார்ப்பதற்கும், பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர். அதற்குச் சான்றாக என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த மாநில அளவிலான போட்டி ஒன்றில் நான் சங்கத்திற்கு எதிராகப் பேசினேன். காரசாரமாக அவருக்கும் எனக்கும் இடையில் விவாதம் நடைபெற்றது. காலையில் என்னிடம் சூடான கேள்விகளை எதிர்கொண்ட அவர், மதியம் என் தோளில் கை போட்டு பேசிக்கொண்டே சூடான தேநீர் அருந்தும் அளவிற்குச் சிறந்த பண்பாளர். அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. அந்த அளவிற்கு அவரின் முடிவில் ஒரு தெளிவும் திடமான மன உறுதியும் கொண்டவர். இவரைப் பற்றிய நிகழ்ச்சிகள் பொதிகை, ஜெயா மற்றும் தந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளன. தி இந்து ஆங்கிலம் நாளிதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரைப் பற்றிய ஒரு கட்டுரையும் வெளிவந்தது. இவர் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துடன் ‘Blind Fold Game’ (சதுரங்கப் பலகை இல்லாமல் மனதாலேயே சதுரங்கம் விளையாடுதல்) போட்டியில் ஆட்டத்தைச் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துராமனைப் பற்றி அவரது பயிற்சியாளர் மகேஷ், “என்னிடம் இருந்த மாணவர்களிலேயே மிகச் சிறந்தவன் முத்துராமன்“ என்று புகழ்ந்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து குறைந்தது 2 சதுரங்க வீரராவது உலக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்துகொள்ளச்செய்து அவர்களை வெற்றிபெறச் செய்வதுதான் இவரது கணவாக இருந்தது. தற்போதுகூட, சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற பள்ளி மாணவன் தேசிய அளவிலான ‘A’ பிரிவு சதுரங்கப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளான். ஆனால், காலத்திற்கு என்ன கட்டாயமோ தெரியவில்லை; அவரது இந்தக் கனவுகள் முழுவதும் நிறைவேறும் முன்பே இவரை கடந்த 23.12.2017 அன்று தன்னுடன் கூட்டிச் சென்றுவிட்டது. இனிமேல், “டியர் ஃபிரண்ட்ஸ்! நான் தமிழ்நாடு பிரெயில் செஸ் அசோசியேஷனின் ஜென்ரல் செக்ரட்டரி முத்துராமன் பேசு்றேன்” என்கின்ற அந்த இனியக் குரலை கட்செவியில் எங்களால் கேட்கமுடியாது. இயற்கை இவரை நம்மிடமிருந்து பிரித்தாலும், ஒவ்வொரு பார்வையற்ற சதுரங்க வீரனின் விரல்கள் காய்களைத் தொட்டுத் தழுவும்போதும் முத்துராமன் அண்ணனின் நினைவுகள் மறையாமல் இருக்கும்! ![]() இந்தியாவின் பண்பாட்டு ஆவணமாகக் கருதப்படும் நூல் ராமாயணம். சமயம் மட்டுமின்றி, அரசியல், சமூகம், இலக்கியம் முதலியவற்றிலும் முக்கிய இடம் பிடித்திருக்கிறார் ராமன். அதிக விதங்களில் திரிக்கப்பட்டுள்ள இந்திய நூல் ராமாயணம். பல்வேறு வடிவங்கள், பல்வேறு முடிவுகள் கொண்ட நிறைய ராமாயணக் கதைகள் உலவுகின்றன. இந்நூல் கலப்படமாக்கப்பட்ட காப்பியமாக (Corrupted Manuscript) இருப்பதாக ராஜாஜி குறிப்பிடுகிறார். இங்கு நாம் பார்க்கவிருக்கும் நூல் சீதாயணம் என்ற நாடகம். இயற்றியவர் ஜெயபாரதன். மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயபாரதன் இந்திய அணுசக்தித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கனடாவில் இருக்கிறார். இன்சுவை ராமாயணம் ராமாயணக் கதை இந்தியாவில் நிச்சயம் நடந்திருக்கும் என்று கூறும் ஜெயபாரதன் ராமனுக்கு தெய்வீகத் தன்மை வழங்கப்படுவதைத் தன்னால் ஏற்கமுடியவில்லை என்கிறார். ராம-ராவணப் போரை இரு மனித இனங்களுக்கிடையிலான போராகக் குறிப்பிடுகிறார். ராவணன் 10 தலைகளைப் பெற்றிருப்பதும், சுக்ரீவன், அனுமன் முதலியோர் வானரங்களாக இருப்பதும் தற்செயலானதல்ல என்கிறார். நாயகத் தன்மையையும், விகாரங்களையும் நீக்கிப் பார்த்தால் ராமாயணம் மிகச்சிறந்த கதையாக இருக்கும் என கருதுகிறார் ஜெயபாரதன். நாடகத்திலும் ராமன், அனுமன், வான்மீகி என அனைவரும் மனிதர்களாகவே காட்டப்பட்டிருக்கின்றனர். வான்மீகி ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டே இந்நாடகம் இயற்றப்பட்டிருக்கிறது. நாடக அறிமுகம் ராமனின் இளமைக் கால சாகசங்கள், திருமணம், முடிசூடல், காடேகல், சீதை காணாமல் போதல், சீதையை மீட்டல், மீண்டும் நாடு திரும்பல்… நம்மில் பெரும்பாலானோர்க்குத் தெரிந்த ராமாயணம் இதுதான். இதற்குப் பிறகான கதையைத்தான் இந்த நாடகம் பேசுகிறது. கதைக்குள் செல்வோமா? நாடகக் கதை அயோத்தி அரண்மனையில் வீற்றிருக்கும் ராமன் தன் சகோதரர்களை அவசர அவசரமாக அழைக்கிறான். தன் மனைவியான சீதையை நாடுகடத்தவேண்டும் என்கிறான். மற்றவர்கள் காரணம் கேட்டபோது, தனக்குக் கிடைத்த உளவுத் தகவலைக் கூறுகிறான். ‘ராமனைப் போல் இன்னொரு மாளிகையில் பல காலம் தங்கியப் பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரலாமா?‘ என்று மக்கள் பேசிக்கொள்வதாகக் கிடைத்த தகவலைக் கூறுகிறான். சகோதரர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் முடியவில்லை; சீதை நாட்டைவிட்டு பத்திரமாக வெளியேற்றப்படுகிறாள். அவள் கருவுற்றவளாக இருக்கிறாள் என்பது கூடுதல் தகவல். காடு சென்ற சீதை வான்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்களம் அடைகிறாள். வான்மீகி சீதையின் கடந்த காலம் பற்றி விசாரித்து அறிந்துகொண்டதன் விளைவாகவே ராமாயணம் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் நாடக ஆசிரியர். ஆசிரமத்தில் சீதைக்கு லவா, குசா என இரு மகன்கள் பிறக்கிறார்கள். வான்மீகி அவ்விருவருக்கும் சிறந்த குருவாக பல கலைகளைக் கற்றுத்தருகிறார். இருவரும் 12 வயது அடையும்வரை ராமன் தன் மனைவியையோ, குழந்தைகளையோ சந்திக்க வரவில்லை. இவர்கள் 12 வயதை அடைந்தபிறகு ஒருநாள் ராமனின் அஸ்வமேத யாகக் குதிரை அந்த வனப்பகுதிக்குள் வருகிறது. அந்தக் குதிரையை லவா, குசா சிறை பிடிக்கிறார்கள். இந்தக் குழந்தைகளை ராம படையினரால் வெல்லமுடியவில்லை. ஒரு கட்டத்தில் ராமனே களமிறங்குகிறார். தாமதமாக தகவலறிந்த சீதையும், வான்மீகியும் நிகழ்விடத்திற்கு வருகின்றனர். எல்லா உண்மைகளையும் அறிந்தபிறகும் ராமன் சீதையிடம் பேசவில்லை. அனைவரும் வற்புறுத்திய பின், தன் பிள்ளைகளை அரண்மனை அழைத்துச்செல்ல இசைகிறார். ஆனால் சீதையை அழைத்துச்செல்வது குறித்து பேசமறுக்கிறார். அங்கிருக்கும் அனைவரும் கருத்து மாறுபட்ட நிலையிலும் ராமன் தன் நிலையில் உறுதியாக இருக்கிறார். லவாவும் குசாவும் தன் தாயைப் பிரிந்து வர இயலாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். வான்மீகி, குரு விஸ்வாமித்திரர், உடன்பிறப்பு இலக்குவன், பாசமிகு தம்பி அனுமன் என எல்லோரும் செய்வதறியாது திகைக்கின்றனர். இறுதியாக சீதைதான் சிக்கலை முடித்துவைக்கிறார். தன் பிள்ளைகளைத் தந்தையோடு செல்லுமாறுப் பணித்த சீதை, தன்னால் தொடங்கிய சிக்கலைத் தானே முடிப்பதாகக் கூறி மலையிலிருந்து குதித்து உயிர்விடுகிறார். எல்லோரும் செயலற்று நிற்கின்றனர். இதுதான் கதை. நாடகம் பற்றி சீதையைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டிருப்பதால் ‘சீதாயணம்’ என தலைப்பிடப்பட்டிருப்பது சிறப்பு. மேலும், நாடகத்தின் பல காட்சிகள் படிப்பவர்களை உள்ளம் நெகிழச்செய்கின்றன. குறிப்பாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமனைச் சந்திக்க நேர்ந்தாலும், சீதை பேச விரும்பவில்லை. உள்ளுக்குள் கணவனோடு சேர்ந்து வாழும் ஆசை இருந்தபோதிலும், அதை அவர் வாயிலிருந்து கேட்கவேண்டுமே என்று ஏங்குகிறார். அதேநேரம், முன்பு ஒருமுறை தன் உயிரைக் காத்த ராமதோழன் அனுமனிடம் கனிவாகப் பேசுகிறார். தான் அரண்மனையை விட்டு வந்தபிறகு நிகழ்ந்தவற்றையெல்லாம் அறிந்துகொள்கிறாள். சீதை-அனுமன் சந்திப்பு நெகிழ்ச்சி ஊட்டுவதாய் உள்ளது. சீதை கானகம் அனுப்பப்பட்டது ஜனகனுக்குத் தெரியுமா? அவன் தன் மருமகன் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையா என தெரியவில்லை. இந்நாடகம் கட்டமைக்கப்படும் பிம்பங்களுக்கும் கதைக்குமான இடைவெளியை அறிய உதவுகிறது. முடிவு நாடகத்தின் முடிவு சீதையின் இறப்பு. இந்தத் தற்கொலை லவா, குசாவுக்கு தாயின் இழப்பு; வான்மீகி முனிவருக்கு தன் காவியத்தின் முடிவு; ராமனுக்கும், அயோத்தி மக்களுக்கும் சிக்கலின் முடிவு; அனுமனுக்கும், இலக்குவனுக்கும் முடிவில்லாத் துயரம். பகைவனிடமிருந்து மீட்ட தங்கள் அண்ணியாரை, சொந்த அண்ணனின் வெறுப்பிலிருந்து மீட்கமுடியாதவர்களாகிப்போனார்கள். சுய கௌரவம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் சீதை அசோகவனத்திலேயே இருந்திருக்கக்கூடும். நூல்: சீதாயணம் ஆசிரியர்: ஜெயபாரதன் படித்தது: freetamilbooks.com தளத்தில். |