பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையும் தன்னாவர்லர் கோமதி குப்புசாமி அவர்களும் இணைந்து நடத்திய ‘பெரியார்: இன்றும் என்றும் — பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்’ என்ற விடியல் பதிப்பகம் தொகுத்து வெளியிட்ட புத்தகத்தின் பார்வையற்றோருக்கான ஒலிப்புத்தக வெளியீட்டு விழா குறித்த களப்பதிவுக் கட்டுரை, விரல்மொழியர் ‘ஜூலை 2018’ இதழில் வெளியானது (https://viralmozhiyar.weebly.com/2972300929943016-2018/7281667). ப. சரவணமணிகண்டன் எழுதிய அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்த சில கருத்துக்கள்/விமர்சனங்கள் குறித்து கோமதி குப்புசாமி அவர்களும், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையும் அளித்துள்ள மறுமொழிகள் பின்வருமாறு...
கோமதி குப்புசாமி
நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களுக்கு எனது மறுமொழியினைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
"நிகழ்வின் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்ததால், பார்வையாளர்களிடையே பேராசிரியர் சுபவீ மற்றும் முற்போக்குப் பேச்சாளர் மதிமாறன் இருவரின் வாழ்த்துக் காணொளிகள் எப்போது இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது" என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் குறித்தோ, தோழர் மதிமாறன் குறித்தோ நாங்கள் அழைப்பிதழில் எதுவும் குறிப்பிடவில்லை. விழாவில் கூடுதலாக இவ்விரண்டு காணொளிக் காட்சித் திரையிடல்களும் திட்டமிடப்பட்டன. ஆனால், நேரமின்மை காரணமாகவே மதிமாறன் அவர்களின் பேச்சு இடைநிறுத்தப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். காணொளிக் காட்சிகளைவிட மேடையில் இருப்போருக்கு அதிக நேரம் வழங்க எண்ணியே அவ்வாறு செய்தோம். மேலும், காணொளிகளை முழுவதுமாக இணையத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் வலைப் பக்கம் தயாரானவுடன், விழா தொடர்புடைய அனைத்துக் காணொளிகளையும் வலையேற்றத் திட்டமிட்டுள்ளனர்.
"ஒற்றை மேற்கோள், அடைப்புக்குறி என அனைத்தையும் வாசித்திருப்பது, புத்தகத்தின் உயிர்க்கருத்திலிருந்து கேட்பவரின் கவனத்தைச் சிதறடித்துச் சோர்வுறச் செய்யும் என்பதே உண்மை" என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்தினை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்தக் குறிப்புகள் சில முக்கியமான காரணங்களுக்காகவே சேர்க்கப்பட்டுள்ளன. ‘பெரியார் இன்றும் என்றும்’ ஒரு நாவல் அல்லது கதைப் புத்தக வகையிலான புத்தகமல்ல. இது தற்போதும் நமது சமூகத்தில் பரவலாகக் காணப்படும் மூடநம்பிக்கைகள், சமூக அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள், அவற்றைத் தகர்க்கும் வழிமுறைகள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் முதலியவற்றை உள்ளடக்கிய புத்தகமாகும். ஆய்வுப் புத்தகத்தின் வடிவத்தைப் பெற்றுள்ள இந்தப் புத்தகத்தினை முழுவதுமாக சிறந்த முறையில் பயன்படுத்த இந்தக் குறிப்புகள் பெரிதும் பயன்படும். இந்தக் குறிப்புகளைச் சேர்ப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உண்டு. ஆங்காங்கே சிறுசிறு புத்தகங்களைத் தவிர, பெரியாரின் எழுத்துக்கள் பெரும்பாலும் பிற மொழிகளில் இதுவரை மொழிபெயர்க்கப்படாமல் உள்ளன. அவ்வாறான மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேற்கொள்வோருக்கு வசதியாகவே இந்தப் புத்தகம் அடைப்புக்குறி, மேற்கொள்குறி உள்ளிட்ட குறிப்புகளோடு ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொஞ்சம் இந்தக் குறிப்புகளுக்குப் பழகிக்கொண்டால் எல்லோருக்குமே இந்தப் புத்தகம் நிச்சயம் பயன்படும் என்றே நம்புகிறேன். மேலும், இந்த ஒலிப்புத்தகம் உடனடித் தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தருவது என்பது இங்கு முக்கிய நோக்கமல்ல. சமூக மாற்றம் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தப் புத்தகம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. எனவேதான் எங்களைத் தொடர்புகொண்ட அனைவரையும் இனிமையான வாசிப்பு அனுபவத்தைத் தாண்டி புத்தகத்தின் கருத்துக்களை ஆர்வத்தின் அடிப்படையில் பயன்படுத்திப் பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொண்டுள்ளோம்.
"திரு. இராஜேந்திரன் அவர்களின் பேச்சு, அரங்கின் முன்வரிசையில் அமர்ந்திருந்த பார்வையற்றோரைக் கடந்து, பின் வரிசைகளை நிறைத்திருந்த அந்தக் கல்லூரி மாணவிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது" என்றும், "பார்வையற்ற சமூகத்திற்கும் முற்போக்கு பேசுபவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கும் இடையேயான அந்த இடைவெளி குறித்து உரையாடும் ஒரு களமாக இந்த நிகழ்வு பரிணமிக்காமல் போனதும், சிறப்பு அழைப்பாளர்கூட அதுகுறித்த தனது புரிதலைப் பகிராததும் என்னைப் போன்றவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது" என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களுக்கு நேர்ந்த ஏமாற்ற அனுபவத்திற்காக மிகவும் வருந்துகிறேன். ஆனால், பெண்கள் குறித்தும், அவர்களது முன்னேற்றம் குறித்தும், அதற்குப் பயன்படும் பெரியாரின் கருத்துக்கள் குறித்தும் சிறப்புப் பேச்சாளர் பேசும் வகையிலேயே தலைப்பு அமைந்திருந்தது. மேலும், புதிய சிந்தனைகளை உள்வாங்கக் காத்திருந்த இளம் பெண்களைக்கொண்ட பெண்கள் கல்லூரி என்ற முறையிலும், கல்விப்புலம் சார்ந்த சில நடைமுறைகளைப் பின்பற்றியுமே இவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது.
"இவர்களைவிட தாங்கள் அதிமேதாவிகள் என்று கற்பனை செய்தபடி பார்வையற்ற சமூகத்திடமிருந்து விலகி நிற்கிற பல முற்போக்குவாதிகளிடமே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த உண்மையை உணரவைத்த, ‘பெரியார் இன்றும் என்றும்’ ஒலிப்புத்தக வெளியீட்டு நிகழ்வு, அதன் மாற்றுச்சிந்தனை காரணமாக தமிழ்ப் பார்வையற்ற சமூக வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படும்" என்று கட்டுரை முடிகிறது. ஒரு ஒலிப்புத்தக வெளியீட்டு விழாவின் நிகழ்வுகளை வைத்து இவ்வாறான கருத்துக்கு தாங்கள் எப்படி வரமுடிந்தது என்பது எனக்கு தெளிவாக விளங்கவில்லை. இந்த விழா எப்படிப்பட்ட மாற்றத்தை உணரச்செய்தது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை
எமது அமைப்பும், தன்னார்வலர் கோமதி குப்புசாமி அவர்களும் இணைந்து நடத்திய ‘பெரியார் இன்றும் என்றும்’ ஒலிப்புத்தகத்தின் வெளியீட்டு விழா குறித்தும், புத்தகத்தின் ஒலிப்பதிவு முறை குறித்தும் விரல்மொழியர் இதழில் வெளியான கட்டுரைக்கு மறுமொழியாக பின்வரும் கருத்துக்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள விழைகிறோம்.
இந்த ஒலிநூலானது பார்வையற்ற ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தும் விதத்திலேயே முதலில் திட்டமிடப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது. எனவேதான் மேற்கோள் குறிகள், அடைப்புக் குறிகள், பத்தி, பக்க மாற்றங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்புகள் ஒலிநூலைக் கேட்கும் நண்பர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடும் என்பதை அறிகிறோம். எனினும், இவை எதிர்காலத்தில் மொழிபெயர்ப்பிலும், ஆய்வுகளிலும் ஈடுபடும் பார்வையற்றோருக்கு உதவும் என்ற அடிப்படையிலும், இனி இந்த குறிப்புகளை நீக்க வாய்ப்பில்லை என்பதாலும் அவை அப்படியே இடம்பெற்றுள்ளன. இந்தக் குறிப்புகளால் தங்களது கேட்கும் அனுபவத்தில் ஏற்படும் சிரமத்தை நண்பர்கள் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இனிவரும் ஒலிநூல்களில் இவை தவிர்க்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முற்போக்கு அமைப்புகளுக்கும், பார்வையற்றோர் உள்ளிட்ட ஊனமுற்றோருக்கான அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளுக்கும் இடையில் இடைவெளி இருப்பது உண்மைதான். ஆனால், அதற்கான காரணம் முற்போக்காளர்களின் மேதாவித்தனம்தான் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அப்படியே ஒப்புக்கொள்ள முடியாது. மேதாவிகளாக இருப்பதாக யாரை கட்டுரை குற்றம் சாட்டுகிறதோ, அவர்களே தாம் பார்வையற்றோர் செயல்பாடுகள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் அறியாமையில் இருப்பதாக ஒப்புக்கொள்கின்றனர். தாம் பார்வையற்றோர் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்பட முடியும் என்றும், பார்வையற்றோர் எப்படியெல்லாம் சமூக மாற்றத்திற்குப் பங்களிப்பு செய்ய முடியும் என்றும் கூறினால் தாம் இணைந்து செயல்படக் காத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
சமய நிறுவனங்கள் அல்லது தன்னார்வ அமைப்புகளுக்கு இருக்கும் பொருளாதார அனுகூலங்களோ, உதவுவதற்கான வாய்ப்பு வசதிகளோ முற்போக்கு அமைப்புகளுக்கு இருப்பதில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில், முற்போக்காளர்களும் தமது பொறுப்பினை உணர்ந்து, இனியும் அறியாமை என்றெல்லாம் காரணம் கூறாமல் பார்வையற்றோர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் அனைவரின் உரிமைப் போராட்டங்களுக்கும், அதிகாரப் பங்கேற்பிற்கும் துணை நிற்பது தமது தார்மீகக் கடமை என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.
உலக நாடுகள் பலவற்றிலும் ஊனமுற்றோரின் உரிமைப் போராட்டங்கள் பெரும்பாலும் தன்னெழுச்சியாகத்தான் நடந்துள்ளன. ஆனால், பிற ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் இருந்தும், முற்போக்கு அமைப்புகளின் சமூக சமத்துவம் குறித்த கருத்தாக்கங்களில் இருந்தும் ஊனமுற்றோர் தமது போராட்டங்களுக்கான உந்துதலையும், உணர்வூக்கத்தையும் பெற்றுள்ளன. ஊனமுற்றோர் தமது திறன் மற்றும் அமைப்புச் செயல்பாடுகளால் சமூக-அரசியல் இயக்கத்தில் தமக்குரிய இடத்தை உறுதிசெய்து கொண்டுள்ளனர். தற்போது பார்வையற்றோர் அடைந்துவரும் வளர்ச்சி மற்றும் முன்னெடுத்துவரும் செயல்பாடுகளால், நமது இடத்தையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் காலம் வந்துவிட்டது என்று உறுதியாக நம்பலாம். இந்த நிலையில் முற்போக்கு அமைப்புகளும், முற்போக்காளர்களும் ஊனமுற்றோர் குறித்து இதுவரை செய்யாமல் விட்ட பணிகள் குறித்த, கவனப்படுத்தப்படாத விடயங்கள் குறித்த விவாதங்களை முன்னெடுத்து, பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்துவதே காலத்தின் தேவையாக உள்ளது.
மேலும், தமது மதநம்பிக்கை அல்லது சேவை என்ற அடிப்படையில் பல்வேறு உதவிகளை ஊனமுற்றோருக்கு வழங்கியிருக்கும் பலரையும் நாம் அவர்களின் பணிகளுக்காக நிச்சயம் நன்றியோடு நினைவுகூறத்தான் வேண்டும். ஆனால், அவர்களின் வரம்பு சேவை என்ற எல்லையோடு முடிவடைந்துவிடக்கூடியது. கல்வியும், பிற திறன்களையும் பெற்றுள்ள பார்வையற்றோர்கூட பெரும் போராட்டங்களின் மூலமே தமக்கான உரிமைகளைப் பெற முடிந்திருக்கிறது. ஒரு பேருந்து பயணச் சலுகைக்காகக்கூட பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது. இத்தகைய போராட்டங்களுக்கு முற்போக்கு அமைப்புகளும், அவர்தம் கருத்தாக்கங்களும்தான் துணை நிற்க முடியும். இதுவரை இப்பணியை நேரடியாகச் செய்யத் தவறியுள்ள அமைப்புகளுக்கு நமது போராட்டங்கள் மற்றும் ஆற்றல் குறித்து அறிவூட்டுவதற்கான முன்னெடுப்புகளை, இது தொடர்பான விவாதங்களை நடத்துவதற்கு நாம் முயற்சிக்கலாம். மாறாக, ‘அவர்கள் அதிமேதாவிகள்போல் நடந்துகொள்கிறார்கள்’ என்று பொதுப்படையாகப் பேசுவதனால் பயனொன்றும் ஏற்படப்போவதில்லை என்றே கருதுகிறோம்.
இந்த விழாவில், கல்விப் புல நடைமுறைகள் சார்ந்தும், வளாகம் வழங்கியவர்களின் இடையீட்டினாலும் சில நிகழ்வுகளை நாங்கள் திட்டமிட்டவாறு நடத்த முடியவில்லை என்பது உண்மைதான். இருப்பினும், சுமார் 400 மாணவிகளுக்கு பார்வையற்ற சமூகத்தில் இவ்வாறான செயல்பாடுகளெல்லாம் நிகழ்கின்றன, அவற்றில் அவர்களைப் போன்ற பெண்கள் பலர் தன்னார்வத்துடன் பங்கேற்று, தமது நேரத்தையும் உழைப்பையும் வழங்கி நமக்குத் துணைபுரிகின்றனர் என்பதையும், பெரியார் இங்கு ஏற்படுத்தியுள்ள சமூக மாற்றம் குறித்தும் ஓரளவேனும் கொண்டுசேர்க்க முடிந்திருக்கிறது என்ற வகையில் ஆறுதல் அடையலாம். ஆனால், பேரவை தனக்கான மேடையை உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்த கட்டுரையாளரின் கருத்தோடு நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம்; அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டும் வருகிறோம்.
இவற்றையெல்லாம் தாண்டி, இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஒரே நோக்கத்தோடு நீண்ட பயணத்தை மேற்கொண்டு, விழாவில் முழுமையாகப் பங்கேற்று, விழா குறித்த அருமையானதொரு கட்டுரையை எழுதி வெளியிட்ட விரல்மொழியர் ஆசிரியர் குழு நண்பர் சரவணமணிகண்டன் அவர்களுக்கு எமது பேரவையின் நன்றிகள். இந்த விழா குறித்து பரவலாக கவனம் கொள்ளும் வகையில், யூடியூப் இணைப்புகளோடு, விழா குறித்த வர்ணனையாக கட்டுரை அமைந்திருந்தது சிறப்பு. இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விமர்சனங்களையும், அவை கோரும் விவாதங்களையும் நமது பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளாகவே கருதி நாங்கள் வரவேற்கிறோம்.
கூடுதலாக, இந்த ஒலிப்புத்தகம் தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்த தினமான கடந்த செப்டம்பர் 17 அன்று, அனைத்து செப்பனிடல் பணிகளும் முடிக்கப்பட்டு, ‘வாசிப்போம்’ பார்வையற்றோருக்கான இணைய நூலகத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். நண்பர்கள் https://vaasippom.blogspot.com/p/h20.html என்ற இணைப்பில் ஒலிப்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து, கேட்டு தமது கருத்துக்கள், எதிர்வினைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை, தமிழ் நாடு. தொடர்புக்கு: [email protected]