பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரைக் கிளையின் தலைவர் முனைவர் S. பாலாஜி; பார்வையற்ற ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளைச் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து அரசுக்கு முன்வைப்பவர். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டவர். பார்வை இழப்போடு, இடையில் நடந்த ஒரு விபத்தால் ஒரு காலையும் இழந்தவர். இருந்தபோதிலும், தொடர்ச்சியாகக் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இவரை நம் இதழுக்காகச் சந்தித்தோம்.
பாலகணேசன்: உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை நம் வாசகர்களுக்குக் கூறுங்கள்?
முனைவர் பாலாஜி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேர்க்குடி என்ற கிராமம்தான் என் சொந்த ஊர். எனது தொடக்கக்கல்வியை திருவாரூர் பார்வையற்றோர் பள்ளியிலும், நடுநிலைக் கல்வியை தஞ்சை பார்வையற்றோர் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை பூவிருந்தவல்லி பார்வையற்றோர் பள்ளியிலும் முடித்தேன். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை பச்சையப்பா கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றேன். இவை தவிர, சில பட்டயப் படிப்புகளையும் முடித்துள்ளேன். 2002-இல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். 2012-இல் முதுநிலை ஆசிரியராய் பதவி உயர்வு பெற்று, மதுரை ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன். எனது குடும்பம் பற்றிச் சொல்ல வேண்டுமானால் நான், மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகள்.
கேள்வி: நீங்கள் சங்கச் செயல்பாடுகளில் தீவிரமாய் இயங்கியவர் என்பதால் கேட்கிறேன்; தமிழகத்தில் சாதாரணப் பள்ளியில் பணியாற்றிய முதல் பார்வையற்ற ஆசிரியர் யார் என்ற தரவுகள் இருக்கிறதா?
பதில்: 1979-இல் பத்மராஜ் அவர்கள் கல்லூரி பேராசிரியராக பணி நியமனம் பெற்றதுதான் தொடக்கம். பள்ளிகளைப் பொறுத்தவரை, மாரிமுத்து (தத்துவவியல்), நா.ரா. ரங்கநாதன் (சமூகவியல்), கு.பா. ராமலிங்கம் (பொருளாதாரம்) போன்றோரை தொடக்ககால பள்ளியாசிரியர்கள் என்று சொல்லலாம். இவர்கள் 80-களின் தொடக்கத்தில் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றியவர்கள். பிற பகுதிகளைப்பற்றி விவரம் தெரியவில்லை.
கே: 50-களிலேயே நம்மவர்கள் கல்லூரிகளில் படிக்கத் தொடங்கி விட்டார்களல்லவா?
ப: 60-களில்தான் பட்டம்பெறத் தொடங்கினார்கள். இருந்தும் அவர்களுக்கு அப்போது முறையான பணிவாய்ப்புகள் இல்லை. சுருக்கெழுத்தர், டெலிஃபோன் ஆபரேட்டர் முதலிய பணிகள் தரப்பட்டன. மத்திய அரசின் V.R.T.C. நிறுவனத்திற்குச் சென்றால் ஏதேனும் ஒரு பணி கிடைக்கும். 80-களுக்குப் பிறகுதான் நம்மவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றத் தொடங்கினர்.
கே: அவர்கள் எதன் அடிப்படையில் பணிவாய்ப்பைப் பெற்றனர்?
ப: 1988 வரை மத்திய அரசின் அரசாணை 36305-இன்படி கருணை அடிப்படையில் 1% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதன்படி சொற்பமானவர்களே பணிவாய்ப்பைப் பெற்றனர். 1988-ல் தமிழக அரசின் அரசாணை 99-இன்படி ஊனமுற்றோர் பணியாற்ற உகந்த 14 பணிகள் அடையாளம் காணப்பட்டன. அதில் ஆசிரியப்பணியும் ஒன்று. இச்செயல்பாட்டில் தலைமைச் செயலாளர் M.M. இராஜேந்திரன் அவர்களின் பங்கு முக்கியமானது. அதன் பிறகே பார்வையற்றவர்கள் ஆசிரியப்பணியில் கணிசமாக பணியமர்த்தப்பட்டனர். 1991-ல் அரசாணை 1543-இன்படி ஒரே நேரத்தில் 43 பேர் கல்லூரிப் பேராசிரியர்களாக பதவி ஏற்றனர். 1994-ல் அரசாணை 7330-இன்படி 52 பேர் பேராசிரியர்களாக பணி பெற்றனர். இதுபோன்ற அரசின் செயல்பாடுகளால் இந்தியாவிலேயே அதிகம் பார்வையற்ற ஆசிரியர்கள் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது 4000-க்கும் அதிகமான பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
கே: பிற மாநிலங்களில் பார்வையற்ற ஆசிரியர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது? தமிழகத்திலிருந்து வேறுபட்டு அவர்களுக்கென சலுகைகள் ஏதேனும் அரசுகள் அளிக்கின்றனவா?
ப: மகாராஷ்டிராவில் நமக்கான உபகரணங்களை வாங்குவதற்கான படியை அரசு அளிக்கிறது. கேரள அரசு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு உதவ, வட்டாரத்திற்கொரு பணியாளரை நியமித்துள்ளது. ஹரியானாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லி பெருநகரமென்பதால் அங்கு நம் நிலை சிறப்பாக இருக்கிறது. பிற மாநிலங்கள் பேராசிரியர் பணிக்கே முக்கியத்துவமளிக்கின்றன. ஆந்திராவில் மாற்றுத்திறனாளிகள் தற்காலிகப் பணியாளர்கள்தான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது!
கே: பணி தளத்தில் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக நீங்கள் கருதுவது?
ப: திறமையை அங்கீகரிக்காமை, மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்ப்பது. தொழில்நுட்பத்தின் வரவு, மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவற்றால் இன்று அந்நிலை ஓரளவு மாறியிருக்கிறது. அடுத்ததாக, கற்றல்-கற்பித்தல் தொடர்பான உதவிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல். நம்மோடு நன்றாகப் பேசுபவர்கள் விண்ணப்பம் பூர்த்தி செய்தல் போன்ற உதவிகளைக் கேட்கும்போது நழுவிவிடுகிறார்கள். நம்முடன் பழகியவர்களைவிட, தெரியாதவர்கள் செய்யும் உதவிகளே அதிகம். பார்வையற்றவர்கள் அதிகம் பேசுகிறார்கள் என்ற கருத்தும் இருக்கிறது. அவர்கள் பேசித்தான் பல விடையங்களைப் பெறவேண்டியிருக்கிறது என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கே: நம்மவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டியவை என எதனைக் குறிப்பிடுவீர்கள்?
ப: 15 நிமிடங்கள் தாமதமாக வரலாம், அதுபோல முன்கூட்டியே செல்லலாம் என்ற சலுகையை நூல் பிடித்தாற்போல கடைப்பிடிக்க வேண்டியதில்லை. சில பள்ளிகளில் பயத்தின் காரணமாக தலைமையாசிரியர்கள் தனியாக வருகைப் பதிவேட்டை பராமரிக்கின்றனர். அதைப் பார்வையற்ற ஆசிரியர்கள் எதிர்க்கின்றனர். ஆடிட்டிங் பிரச்சனைக்கு அதுதான் தீர்வெனில் அதை ஏற்றுக்கொள்ளலாம். மேலும், நம்மவர்கள் பணிவுடனும் கனிவுடனும் பேசிப்பழக வேண்டும். அப்போதுதான் நமக்கான உதவிகள் கிடைக்கும். யாரையும் சார்ந்து இல்லை எனச் சொல்லிக்கொண்டாலும், பல நேரங்களில் பிறரின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. எனவே, ‘யாரையும் மதித்துவாழ்’ என்ற பாரதியின் வாக்கை வாழ்வில் கைக்கொள்ள வேண்டும். பணியிடத்தில் நம் நற்குணங்களை வெளிப்படுத்துவதன் மூலமே அனைவரின் மனத்திலும் இடம்பிடிக்க இயலும்.
கே: ஆசிரியர் பணியால் நம்மவர்களின் பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறது. அவர்கள் பார்வையற்ற அடுத்த தலைமுறையை கைதூக்கி விடுவதில் எவ்வாறு செயல்படுகின்றனர்?
ப: திருப்திகரமானதாக இல்லை. ஒருகாலத்தில் நம் சமூகத்தை முன்னேற்ற உடல், மனம், பணம் என மூவகையிலும் பங்களிப்பைக் கொடுத்தவர்கள், பொருளாதாரம் நிலைபெற்றதும் விலகிச் செல்கின்றனர். நட்பிற்காக பண உதவி செய்கிறார்களே தவிர, நம் சமூகம் முன்னேற வேண்டுமென மனமுவந்து கொடுப்பதில்லை. உரிமைகளையும், சலுகைகளையும் பெறுவதற்காக அனைவரும் தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
கே: சிறுபான்மையினராக இருக்கும் நமக்குச் சங்கம் அவசியம்தானே?
ப: (சிரிக்கிறார்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுநர்கள், முன்னாள் காவல்துறை ஊழியர்கள் முதலியோரெல்லாம் சங்கம் வைத்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? முன்னாள் நீதிபதிகள் தங்களுக்கென பேரவை வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அரசியல், அதிகாரம், நீதித்துறையில் இருப்பவர்களே சங்கம் வைத்திருக்கும்போது, தொடர்ச்சியாக உரிமைகளுக்காகவும், பிரச்சனைகளுக்காகவும் போராடும் நமக்குச் சங்கம் மிகவும் இன்றியமையாதது. சங்கமாக ஒன்றிணைவதன் மூலமே நமக்கான தீர்வுகளை விரைந்து பெறமுடியும்.
கே: இளைய தலைமுறையினரிடம் சங்கமாகச் சேரும் மனப்பான்மை எப்படி இருக்கிறது?
ப: குறைந்துகொண்டே வருகிறது. பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்திலும் (CSGAB), பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்திலும் (BTA) சேர பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் கொடுக்கும் சிறு தொகைக்காக அவர்களை சேரச்சொல்லவில்லை; அனைத்துப் பகுதிகளிலும் உறுப்பினர்கள் இருந்தால் செயல்பாட்டாளர்களுக்கு உளரீதியாக ஒரு தெம்பைக் கொடுக்கும். சங்கங்களின் முயற்சியால் தற்போது கல்வி பெறுவதும், வேலைவாய்ப்பு பெறுவதும் முன்பைக் காட்டிலும் எளிமையாகி இருப்பதாலோ என்னவோ, பலருக்கும் சங்கத்தின் அவசியம் புரிவதில்லை.
கே: பார்வையற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு எவ்வாறு அணுகுகிறது?
ப: 5 ஆண்டுகளுக்கும் மேலாக 10, 15 கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். போதிய நிதியில்லை, அரசின் கொள்கை முடிவு எனக்கூறி நிறைவேற்றாது காலம் தாழ்த்துகிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் தேவைகளை நிறைவேற்றச் சொல்கிறது. 5000 பேர்தான் இருப்போம்; நம் தேவைகளுக்காக நிதியும் மிகக் குறைவாகவே தேவைப்படும். இருந்தும் மறுப்பதன் காரணம் புரியவில்லை. பார்வையற்றவர்களும் வளர்ந்து கோரிக்கைகளை கேட்குமளவிற்கு வந்துவிட்டார்களே என்ற காழ்ப்புணர்ச்சியும் இருப்பதுபோல தோன்றுகிறது.
கே: தனியார் மயம் அதிகரிப்பால் மாற்றுத்திறனாளிகளின் நிலையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்?
ப: மிக மோசமாக இருக்கும். முன்பு மொத்த பணியிடங்களை கணக்கில் கொண்டு நமக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதோடு, பொதுப்பிரிவிலும் பணிகளைப் பெறமுடிந்தது. இனி T.R.B. மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் என அடையாளம் காணப்பட்ட பணிகளை மட்டும் கணக்கில் கொண்டு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தப் போகிறது. P.T.A. தற்காலிகப் பணி நியமனங்களிலெல்லாம் நாம் புறக்கணிக்கப்படுவோம். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தற்காலிகமாக 35 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்; திறமையின்மை என காரணங்களைக்கூறி அவர்களைப் பணியைவிட்டு நிறுத்திவிட்டனர். பாராளுமன்றச் சட்டத்தின்படி அரசு உதவிபெறும் கல்லூரிகள் மாற்றுத்திறனாளிகளைப் பணியில் அமர்த்த வேண்டும். காது கேளாதோர், கை கால் ஊனமுற்றவர்களை அலுவலகப் பணிகளில் அமர்த்திக்கொண்டு, வேலை கொடுத்ததாய் கணக்கு காட்டுகின்றன; பார்வையற்றவர்களை பெரும்பாலும் நியமிப்பதில்லை. சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகள் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டியதில்லை என்றாலும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கலாமே! ஆனால், அது நடப்பதில்லை. மொத்தத்தில் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் இவற்றில் நாமெல்லாம் உதிர்ந்த மலர்கள். தொழில்நுட்பங்களை கையாளக் கற்றுக்கொண்டு, அனைவருக்கும் சமமானவர்களாய் மேலெழுவதே இதற்குத் தீர்வாய் அமையும்.
கே: தலைவராக உங்களது சாதனை என்ன? நிறைவேற்ற இயலாதது என்ன?
ப: பயணப்படியை 1.5 மடங்கு, அதாவது 1000-லிருந்து 2500-ஆக உயர்த்தி வழங்கச் செய்தது, பிரெயில் நூல்களை அச்சிடப் பாடப்புத்தகங்களை ஒருங்குறி வடிவில் N.I.V.H.-க்குக் கிடைக்கச் செய்தது, பேராசிரியர்கள் நியமனங்களில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படுமென உறுதியைப் பெற்றது போன்றவை சாதனைகள். பார்வையற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதலில் முன்னுரிமை, பாடநூல்களை ஒருங்குறி வடிவில் பொதுத் தளத்தில் வெளியிடுதல், நமக்கான உபகரணங்களை வாங்குவதற்கான செலவுப் படியை அரசிடமிருந்து பெறுதல் போன்றவை நிறைவேறாத கோரிக்கைகள் என்று சொல்லலாம்.
கே: உங்களுக்குக் கால் எப்போது பழுதுற்றது? அதற்கு அரசின் உதவி ஏதும் கிடைத்ததா?
ப: முனைவர் பட்ட ஆய்விற்காகத் தஞ்சை செல்லும்போது விபத்தில் இடதுகால் பாதிக்கப்பட்டது. அதற்கான இழப்பீட்டை நீதிமன்றத்தை நாடித்தான் பெற்றேன். பணியிலிருப்பவர் ஊனமடைந்தால் அரசின் உதவி கிடைப்பதுபோல, மாற்றுத்திறனாளி இன்னோரு ஊனமடைந்தால் தனிச் சலுகை எதுவும் வழங்கப்படுவதில்லை. சென்னை முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள தேசிய பல்லூனமுடையோருக்கான (Multiple-Disability) அலுவலகத்தையும் தொடர்புகொண்டேன்; முறையான பதிலில்லை. பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் இல்லாதவர்களையே அவர்கள் பல்லூனமுடையவர்களாகக் கருதுகிறார்கள் போலும். என்னுடைய பிரச்சனையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பார்வையற்றவராக இருந்தால் தனியாக பயணம் செய்துவிடலாம்; கால் பாதிக்கப்பட்டிருப்பதால் கட்டாயம் உதவியாளரை உடனழைத்துச் செல்லவேண்டும். இதனால், பயணச்செலவு அதிகரிக்கிறது. எனவே அரசு பயணப்படியை உயர்த்தி வழங்கலாம்; அல்லது சிறப்பு வாகன வசதியளிக்கலாம்.
கே: ஆக சிறுபான்மையினரிலும் சிறுபான்மை ஆகிவிட்டீர்கள்?
ப: ஆமாம்!
பா. புள்ளி விவரங்களை அரசாணை எண்ணுடன் துல்லியமாய்ச் சொல்கிறீர்களே! வியப்பாக இருக்கிறது. அதற்குக் காரணமென்ன?
ப: கல்லூரிக் காலத்திலிருந்தே சங்கச் செயல்பாடுகளில் என்னை முழுமையாக இணைத்துக்கொண்டேன். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான மத்திய அரசின் கூடல்களில் தவறாது கலந்துகொள்வேன். 1992-லிருந்து 2012 வரை வெளியான சட்டங்கள், சுற்றறிக்கைகள், அரசாணைகள் போன்றவற்றில் நேரடியாகவோ மறைமுகமாகவோ என்னுடைய பங்களிப்பு இருந்ததென்பது உண்மை. கால் பாதிக்கப்பட்ட பிறகே சங்கச் செயல்பாடுகளை சற்று குறைக்க வேண்டியதாகிவிட்டது.
கே: பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பிற அமைப்பினர் என்ன சொல்கிறார்கள்?
ப: ‘உகந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, கோரிக்கைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் உங்களால் எப்படிச் சொல்ல முடிகிறது’ எனச் செய்தியாளர்களே பாராட்டியிருக்கிறார்கள். பிற அமைப்புகளும், பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம் முறையாகத் தேர்தல் நடத்துவதையும், குறித்த காலத்தில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுப்பதையும் அறிந்து வியப்படைகிறார்கள். ஏனென்றால், பல அமைப்புகள் முறையாக இவற்றைச் செய்வதில்லை.
கே: உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
ப: பார்வையற்ற பட்டதாரிகள் சங்க ஆலோசகர் S.S. கண்ணன், பச்சையப்பா கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன், தஞ்சைப் பார்வையற்றோர் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் கணேசன், சங்கத்தோழர்களான பட்டாபிராமன், சாந்தலிங்கம், இளங்கோவன், நாகராஜ் மற்றும் எனது குடும்பம் எனப் பலரும் என் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள்.
கே: உங்களது பொழுதுபோக்கு பற்றி கூறுங்களேன்?
ப: ஆங்கிலம், தமிழ் என இருமொழி பிரெயில் மற்றும் ஒலிப்புத்தகங்களை வாசித்தல், என் குழந்தைகளின் கல்விச் செயல்பாடுகளுக்கு உதவுதல், வகுப்பெடுப்பதற்காகப் படித்தலென கல்வி சார்ந்ததாகவே எனது பொழுதுபோக்கு அமைந்திருக்கிறது.
கே: பாலாஜி அவர்கள் ஆசிரியராகாமல் இருந்திருந்தால் என்னவாகியிருப்பார்?
ப: ஒரு தொழில் வல்லுனராய் ஆகியிருப்பேன். அரசுப்பணியில் சேர்வதற்கு முன்பு சென்னையில் ஃபெனாயில், டெட்டாயில், அந்துருண்டை போன்றவற்றை மொத்த விற்பனை விலைக்கு டன் கணக்கில் வாங்கி பள்ளி, கல்லூரி போன்றவற்றுக்கு விநியோகித்தேன். அதில் கணிசமான லாபம் கிடைத்தது. அதனால் உந்தப்பட்டு அவற்றை நானே தயாரிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், சிறுதொழில் வளர்ச்சி மையத்தில் முறையாகப் பயிற்சியும் பெற்றேன். DDRO சொன்னார் என்பதற்காக ரூ. 15000 வங்கிக் கடனெல்லாம் கிடைத்தது. ஆசிரியப்பணி கிடைக்காது இருந்திருந்தால் அதைத் தொடர்ந்திருப்பேன். அதையும் தொடர்ந்திருந்தால் இரண்டாவது வருமானமாக இருந்திருக்குமே என இப்போது தோன்றுகிறது (சிரிக்கிறார்).
கே: புதிய தலைமுறை பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது?
ப: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பொறுமை, பணிவு, சேவை இவற்றை நடைமுறையில் பின்பற்றுவதன் மூலம்தான், நாமும் வளரமுடியும்; நம் சமூகத்தையும் வளர்க்க முடியும். இதுவே என் அனுபவத்தில் நான் கண்டறிந்த உண்மை!
பாலகணேசன்: இதுவரை எங்கள் வாசகர்களுக்காக தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு, ‘விரல்மொழியர்’ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
முனைவர் S. பாலாஜி அவர்களைத் தொடர்புகொள்ள: [email protected]
தொகுப்பு: பொன். சக்திவேல்