பல பார்வையற்றோரின் இளவயது நிலையை ஒத்ததுதான் என்னுடய கதையும். குலூக்கோமா எனப்படும் கண் நீர் அழுத்த பாதிப்பு இருந்ததால், முழுவதும் பார்வையில்லாமல் பிறந்த எனக்கு, பிறந்த அடுத்த பத்து மணிநேரத்திலேயே மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், 'கண்ணில் வெள்ளை படர்ந்திருப்பதால் இப்போதைக்கு ஒன்றும் செய்யமுடியாது' என்றும், 'இந்த மருந்துகளை தொடர்ந்து ஊற்றுங்கள்' என்றும் மருத்துவர்கள் அன்று முதல் கூறி வருகின்றனர். ஆனாலும், 'இப்போதைக்கு முடியாது, பின்னாடி பாக்கலாம்' என்று மருத்துவர்கள் கூறியிருந்ததால், அந்த 'பின்னாடி' வரும் என்று நம்பிய நல்ல நேரத்திற்காக என் பெற்றோர் தொடர்ந்து அரவிந்த் மருத்துவமனைக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். என் அம்மா சாமியார்கள், பாதிரியார்கள் என சுற்றுவட்டாரத்தில் தமது கம்பெனிகளை நடத்திக்கொண்டிருந்த பலரிடமும் மதச்சார்பற்ற முறையில் என்னைத் தூக்கிக்கொண்டு போனார். நல்ல வேளையாக அப்போது ஹீலர் பாஸ்கர் கோஷ்ட்டியெல்லாம் இல்லை, எனவே இகலோக மீட்பர்களான அலோபதி மருத்துவர்களையும் என் பெற்றோர் உறுதியாகவே நம்பினர்.
கண் சிகிச்சை முகாம்கள் எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் அழைத்துச் செல்லவும் என் அம்மா தவறவில்லை. அப்போது நாங்கள் இருந்த சின்னக் கரியாம்பட்டிக்கு அருகில் உள்ள வெஞ்சாமான்கூடலூரில் நடந்த அப்படியொரு மருத்துவ முகாமில் என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், எனக்கு பார்வை திரும்ப தற்போதைக்கு வழியில்லை என்பதையும், எனக்கு உடனடியான தேவை ஆரம்பக் கல்வி என்பதையும் எடுத்துக் கூறியதோடு, எங்கள் ஊர் விவரத்தையும் பதிவு செய்துகொண்டனர். அந்த தகவலை எப்படியோ பெற்றுக்கொண்டு, எங்கள் ஊருக்குப் பேருந்து பிடித்து, 25 கிலோமீட்டர் பயணித்து என்னைக் கண்டுபிடித்திருக்கிறார் ராஜசேகர் சார். ஒருவேளை அன்று அவர் அந்தப் பேருந்துப் பயணத்தை மேற்கொள்ளாமல் போயிருந்தால், எனது வாழ்க்கை எப்படி மாறிப்போயிருக்குமோ தெரியாது!
ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், கரூர் சி.எஸ்.ஐ. ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் பார்வையற்றோருக்கான ஆதார மையங்கள் (Resource Centers) செயல்பட்டு வந்தன. திருச்சி புனித சிலுவை கல்லூரி (Holy Cross College) ஒரு கிறித்துவ சேவை நிறுவனத்தின் நிதியுதவியுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தியது. ஆண்கள் தொடக்கப் பள்ளியில் ஆதார ஆசிரியராக கணேசன் சாரும், மேல்நிலைப் பள்ளியில் ராஜசேகர் சாரும் இருந்தனர், அவர்களை முறையே சின்ன சார் என்றும் பெரிய சார் என்றும் அழைப்பது எங்கள் வழக்கம். என்னை முதல் ஆறு மாதங்களுக்கு எனது அப்பா தினசரி பள்ளிக்கு அழைத்துச்சென்று வந்தார். அப்போதே ஆறு புள்ளிகள், பொருட்களின் வடிவங்கள் என அடிப்படைப் பயிற்சிகள் பலவற்றை கணேசன் சார் தொடங்கிவிட்டார். இரு விரல்களையும் பயன்படுத்தி எப்படி பிரெயில் படிப்பது என்பதை ஆறு புள்ளிகள் கொண்ட பெரிய அட்டையை வைத்து, 'இது நாம் இருக்கும் தெரு, இது உன் அண்ணன் படிக்கும் தெரு. இப்போது உன்னைக் கொண்டுவந்து விட்டுவிட்டு உன் அண்ணன் திரும்ப இதே தெருவில் நடந்துபோய், அடுத்த தெருவில் இப்படி நுழைகிறான்' என்று சொல்லி, இரண்டு சார்களும் விளக்கிய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன. இரு சார்களுக்குமே எங்கள் ஒவ்வொருவரின் வீட்டு நிலைமைகள் உள்ளிட்ட எல்லாப் பின்னணிகளுமே அத்துப்படி. ஒவ்வொருவருக்கும் தகுந்தபடி, அவர்களின் கற்றல் திறன்களை கணக்கில் கொண்டதாக அவர்களின் பயிற்சிமுறை இருந்தது என்பதை இப்போது உணரும்போது உண்மையாகவே மலைப்பு ஏற்படுகிறது!
நான் முறைப்படி ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கும், சி.எஸ்.ஐ. விடுதிக் கட்டண உதவியை அந்தக் கிறித்துவ நிறுவனம் நிறுத்திக் கொண்டதற்கும் சரியாக இருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர், பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு, கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியுடன் இணைந்ததால் கிழக்கு ஜெர்மனியில் இருந்து செயல்பட்ட அந்த நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் குறைந்து போனதற்குக் கர்த்தரைப் பொறுப்பாக்க முடியாதுதான்! பள்ளி நிர்வாகமும் குறைந்தபட்ச கட்டணமில்லாமல் எங்களைத் தங்கவைக்க முடியாது என்று கைவிரித்துவிட்டது.
ஆனால், ராஜசேகர் சார் மாணவர்களை கைவிடவில்லை. அவரும் இன்னும் பலரும் இணைந்து உள்ளூரில் இருந்த தொழில் அதிபர்கள், சேவை நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரது ஆதரவைப் பெற்று, தானே விடுதி தொடங்கி நடத்தினார். ஒரு வாடகைக் கட்டிடத்தில், 'கண்மணி இல்லம்' என்ற பெயரோடு தொடங்கிய அந்த விடுதி தற்போது அரசு வழங்கிய இடத்தில் 'அன்பாலயம் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் சிறப்புப்பள்ளி மற்றும் விடுதி' என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. எனது அப்பா நடத்திய மண்டிக் கடையும் கடனுடன் கூடிய நட்டத்தில் மூடுவிழா காண, என்னையும் விடுதியில் சேர்ப்பது என்று முடிவானது. அதே வருடம் எங்கள் குடும்பமும் கடன் சுமையால் இருந்த விவசாய நிலத்தை விற்றுவிட்டு, என் அம்மாயி ஊரான வழியாம்புதூருக்கு குடிபெயர்ந்தது.
விடுதியில் தங்கியிருந்தாலும், ஹோம் சிக்னஸோடுதான் இருந்தேன். அதற்கேற்ப, வீட்டிலும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் பள்ளி விடுவதற்குள் வந்து அழைத்துப்போவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். மீண்டும் பள்ளிக்குத் திங்கள் கிழமையே வந்துவிடுவேன் என்பதில்லை; அப்படி வந்தாலும் பெரும்பாலும் பதினொரு மணிக்கு மேல்தான். இடையில் என் அம்மாயி கிடாய் வெட்டினாலோ, சும்மா கரூர் வந்தாலோகூட என்னை எந்த நேரத்திலும் வந்து கணேசன் சாரிடம் நைசாகப் பேசி கூட்டிச் சென்றுவிடும். இந்த அட்ராசிட்டிஸ்களை எல்லாம் எப்படி கணேசன் சார் பொறுத்துக்கொண்டாரோ தெரியவில்லை!
பள்ளியிலும் நாங்கள் செய்த அழும்புகளுக்கு அளவில்லை. சரவணன் அண்ணன், ஜெயபால் அண்ணன், சந்திரசேகர் அண்ணன், முருகேசன் அண்ணன், செல்வம் அண்ணன் என பிற அண்ணன்கள் பெரிய ஸ்கூலுக்கு ஆறாம் வகுப்புக்குச் சென்றுவிட, கணேசன் சார் சாப்பிட போகும் கேப்பில் அடித்துக்கொள்வது, பிற பையன்களுடன் வம்பிழுப்பது, நரிபோல ஊளையிடுவது என சேட்டைகளைச் செய்துகொண்டேதான் இருப்போம். சந்திரன் சார் தவிர பள்ளிக்கூடத்தில் பிற ஆசிரியர்கள் பார்வையற்ற மாணவர்களை பெரும்பாலும் அடிக்க மாட்டார்கள். ஆனால், "அந்தக் கண்ணு வாத்தியாரக் கூட்டிக்கிட்டு வாடா!" என்று ஆள் அனுப்புவார்கள். எங்கள் கணேசன் சாரை அப்படிக் கூப்பிட இரண்டு காரணங்கள் இருந்திருக்க வேண்டும்: முதலாவது அவர் கண்ணு தெரியாதவர்களுக்கு ஆசிரியர்; இரண்டாவது கணேசன் என்ற அவரது பெயரையும் சுருக்கினால் அப்படி அழைக்கலாம். முதலாவது காரணமே பெரும்பான்மை என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவர் வந்தவுடன், "இங்க பாருங்க சார்! உங்க பையனுங்க பன்னுற அழும்ப" என்று தொடங்கி, குற்றப் பத்திரிக்கை வாசிப்பார்கள். அவரும் எங்களை கோபமாக இருப்பதுபோல் இழுத்துக்கொண்டு வந்து, ஒருசில பிரம்படிகளும் கொடுப்பார். சிறிது நேரத்தில் நாங்கள் செய்ததைச் சொல்லிச் சிரிப்பார்!
ரேங்க் சீட்டில் கையெழுத்து, பேரன்ட்ஸ் மீட்டிங் என பள்ளியின் அனைத்து பெற்றோர் சார்ந்த பணிகளையும் கணேசன் சார்தான் மேற்கொள்வார். பள்ளியில் மட்டுமல்ல, விடுதியிலும் பயோரியா பல்பொடி முதல் போர்வை வரை பலவற்றை தமது சொந்த செலவிலும், சிலவற்றை பிறர் உதவியோடும் கணேசன் சாரும் ராஜசேகர் சாரும் வாங்கிக்கொடுப்பார்கள். எனக்குப் பின்னர் அழகப்பன், பெரியசாமி, ஹாஜிஅலி என பலர் சேர்ந்தனர். விடுதியை கவனித்துக்கொள்ள ராஜசேகர் சார்தான் அவரது சொந்த ஊருக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் இருந்து குணசேகர் அண்ணனை அழைத்து வந்தார், அவர் எங்கள் பலருக்கும் அண்ணனாக இன்றுவரை இருப்பதோடு, அன்பாலயம் தொடர்ந்து இயங்கக் காரணமான ஒரே இயக்க ஆற்றலாகவும் உள்ளார். எங்கள் குடும்பமும் வறுமையில்தான் இருந்தது என்றாலும், என் மாமாவின் உதவியிருந்ததால் பிறருடன் ஒப்பிடும்போது எனது நிலை மேம்பட்டே இருந்தது. அவரவர் குடும்பச் சூழலையும் தேவையையும் புரிந்துகொண்டு உதவும் ஆசிரியர்கள் எங்களுக்குக் கிடைத்தது பெரும் பேறுதான்.
பாடம், தேர்வுகள், பிரெயில் பயிற்சி, கணிதப் பயிற்சி அனைத்தும் மிகக் கிரமமாக நடக்கும். இதனை இரண்டு சார்களும் தமது கொள்கையாக வைத்திருந்தனர் போலும். தனியாக பெற்றோர் கூட்டம் ஏற்பாடு செய்தால் எல்லோரும் வர இயலாது என்பதால், பெரும்பாலும் லீவுக்கு அழைத்துச் செல்ல வரும் பெற்றோரை ஒரே நேரத்தில் வரவழைத்து, எப்படி நாங்கள் கல்வி பயில்கிறோம் என்பதையும், பெற்றோர் எப்படி எங்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் விளக்குவார்கள். சிறப்பாசிரியர் பயிற்சிக்கு அனுப்பப்படும் பயிற்சி ஆசிரியர்களை வைத்து, எங்களுக்கு கூடுதலாக என்னவெல்லாம் கற்பிக்கச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தனர். ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவது, வரைபடங்கள் பயன்படுத்துவது, பிரெயில் தட்டச்சு செய்வது என பல பயிற்சிகள் அவ்வாறு கிடைத்தன. கூடவே திரைப்படங்களின் கதைகள், அன்றாட நிகழ்வுகள், கிரிக்கெட்டில் தெண்டுல்கர் எப்படி அடிக்கிறார் உள்ளிட்ட வர்ணனைகளையும் எங்களுக்குச் சொல்ல இரண்டு சார்களும் ஒருநாளும் தவறியதில்லை. இத்தனைக்கும் அவர்களுக்கு அப்போது சம்பளம் பல மாதங்கள் முறையாக வழங்கப்படவில்லை.
ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் முற்றிலுமாகவே முடக்கப்படும் சூழல்கூட உருவானது. அந்தத் திட்டம் புனித சிலுவைக் கல்லூரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுவதற்கும், பல பார்வையற்ற, காதுகேளாத மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்ததற்கும் ராஜசேகர் சாரின் முயற்சிகள் முக்கியமான காரணங்களாக இருந்தன. பிற ஆசிரியர்களைவிட அதிக வேலைகளையும் செய்துவிட்டு, மிகச் சொற்பமான சம்பளத்தையே, அதுவும் நீண்ட இடைவெளிகளில் பெற்றுவந்தனர் எங்களின் ஆதார ஆசிரியர்கள்.
நான் ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்கும், கணேசன் சாருக்கு அரசுப்பணி கிடைப்பதற்கும் சரியாக இருந்தது. அவரது பிரிவை எங்களால் சற்றும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பொதுவாகவே கணேசன் சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். நாங்கள் நோயுற்றாலோ அல்லது சோர்வுற்றாலோ அவரது குரலில் அன்பு ததும்பி வழியும். அவர் எங்களைப் பிரிந்து ஈரோடு செல்லும்போது இரண்டையுமே பிரயோகித்துப் பார்த்தார், ஆனால், எங்களால் ஆறுதல் அடைய முடியவில்லை; அவராலும்தான். ஆம்! வரப்பில் கீழே விழுந்து கையில் அடிபட்டு நான் வீட்டில் இருக்கும்போது, பிஸ்கெட் வாங்கிக்கொண்டு பேருந்தில் வந்து, மூன்று மைல் தூரம் நடந்து வந்து என்னைப் பார்த்த ஆசிரியரை, "நோம்பிக்கு (திருவிழாவுக்கு) வாங்க சார்" என்று என் அம்மாயி சொன்ன மரியாதைக்காக வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு வந்த ஆசிரியரை, பிரெயில், அபாக்கஸ், ஆத்திச்சூடி என்று அடிப்படைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்த ஆசிரியரை எப்படி என்னால் மறக்க முடியும்?
அவரை நீங்கிய பின்னர் அந்தப் பள்ளி கொஞ்சம்கூட சுவைக்கவில்லை. நான் ஆறாம் வகுப்புக்கு வந்தது முதல் சிறுவர் பள்ளியில் ஒழுங்காக பிரெயில் சொல்லிக்கொடுக்கக்கூட சிறப்பாசிரியர் இல்லை. காதுகேளாதொருக்கான சிறப்பாசிரியர்தான் பார்வையற்றோருக்கும் கற்பித்தார். ஆனால், மேல்நிலைப் பள்ளியில் நல்ல சூழல் தொடர்ந்தது. ராஜசேகர் சார் தினமும் செய்தித்தாள் வாங்கிவந்து காலை பள்ளி வழிபாடு தொடங்கும் முன்னரே படித்துக்காட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த அதே ஆண்டில்தான் எங்கள் விடுதியும் சொந்தக் கட்டிடத்திற்கு 'அன்பாலயம்' என்ற பெயரோடு இடம்பெயர்ந்தது.
சனி, ஞாயிறு விடுமுறைகளில் விடுதிக்கே வந்து சிறப்பு வகுப்புகள் எடுப்பார். குறிப்பாக பத்து, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோருக்கு எல்லாப் பாடங்களிலுமே பயிற்சி இருக்கும்; கூடவே குட்டும் இருக்கும். ஆம்! கணேசன் சாரின் பிரம்படிகள் ஸ்பெஷல் என்றால், ராஜசேகர் சாரின் குட்டுகள் தனித்துவமானவை. ஆறு, ஏழாம் வகுப்புகளில் எனக்கு பெரும்பாலும் ‘சின்னப் பையன்’ என்ற காரணத்தால் குட்டுகள் விழாது. பெரிய வகுப்பு அண்ணன்களுக்கு விழுவதே பயமுறுத்தும் டோஸ்களாக இருக்கும்.
பெரிய சார் ஹாஸ்டலுக்கு வந்தாலே தானாக பிரெயில் புத்தகங்களை எடுத்துக்கொள்வோம். ‘கிர்ர்’ என்ற அவரது டி.வி.எஸ். சத்தம் கேட்கும்வரை படிப்போம்; அல்லது படிப்பதுபோல் நடிப்போம். எங்களுக்கு மட்டும்தான் குட்டு விழும் என்பதில்லை. எங்களை விட அதிகமாக குட்டுகள் வாங்கியது என்னைவிடவும் பலவயது குறைவாக இருந்த அவரது சொந்தப் பையன் ஸ்ரீராம் தான். நாங்களே சிபாரிசு செய்து விட்டுவிடும்படி கெஞ்சும் அளவுக்கு இருக்கும் ஸ்ரீராமின் நிலைமை! ஆனால், அது எப்போதாவது வரும் இடி போலத்தான்; பிற நேரங்களில் அமைதியும் கனிவும் வாஞ்சையும் அவரிடம் விரவிக்கிடக்கும்.
அவரும் பலமுறை என் வீட்டிற்கு வந்திருக்கிறார். ஒரு வாரத்திற்கு மேல் நான் பள்ளிக்குப் போகவில்லை என்றால், நேரடியாக வந்துவிடுவார்; அல்லது குணசேகர் அண்ணனை அனுப்பிவிடுவார். ஒருமுறை, ராஜசேகர் சார் வெளியூர்க்காரர் என்பதால் கடைக்காரர் வாடகைக்கு சைக்கிள் தர யோசிக்க, அவர் உடனே தனது மோதிரத்தைக் கொடுத்துவிட்டு சைக்கிள் எடுத்துக்கொண்டு எனது வீட்டிற்கு வந்தது இன்னும் நினைவிருக்கிறது!
நான் எட்டாம் வகுப்பு முடிக்கும்பொது ராஜசேகர் சாருக்கு அரசுப்பணி கிடைத்து திருவாரூர் சென்றார். அவர் இருக்கும்வரை 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை எல்லா வகுப்புகளுக்கும் மூன்று செட் பிரெயில் புத்தகங்கள், ஒலிநாடாக்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றுள் சிலவற்றை எடுத்துக் கொண்டுபோய் சில அண்ணன்கள் கரூர் லக்கி ஸ்டூடியோவில் கொடுத்து சினிமா பாட்டு பதிவுசெய்யச் சொல்வார்கள், அப்போது நான் அந்த அளவுக்கெல்லாம் வளரவில்லை. கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா வழங்கும் பிரெயில் புத்தகங்கள், ஒலிநாடாக்கள் தவிர தன்னார்வலர்களைக்கொண்டு பல பாடங்களைப் பதிவுசெய்து வழங்குவார் ராஜசேகர் சார். அதற்கு லக்கி ஸ்டூடியோவிலும் ஒலிநாடாக்கள் வாங்குவது வழக்கம். அப்படி சார் வாங்கச் செல்லும்பொது, பாட்டு பதிவுசெய்த கதைகள் வெளியாகி, பின்னர் ரிவார்ட் புள்ளிகளுக்கு ஏற்ப குட்டுகளும் கிடைக்கும்.
ஆங்கிலப் பாடங்களுக்கான வினாவிடைகளை பிரெயில் வடிவில் தட்டச்சு செய்து வழங்க அவர் ஒரு சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆர்வமிகுந்த இல்லத்தரசிகள் சிலருக்கு பிரெயில் கற்பித்து, அவர்களைக்கொண்டு எல்லா வகுப்புகளுக்கும் பிரெயில் ஆங்கில வினாவிடைகளை உருவாக்கினார். அந்த இல்லத்தரசிகள் நல்ல மனமும், வசதியும் படைத்தவர்களாக இருந்ததால், சொந்தமாகவே பிரெயில் தட்டச்சு எந்திரமும், தேவையான அட்டைகளையும் வாங்கிக்கொண்டனர். அவர்களுள் திருமதி. கலாவதி ராஜேந்திரன் அவர்கள் என் பள்ளி இறுதி வகுப்புவரை பிரெயில் தட்டச்சு செய்து வழங்கிக்கொண்டிருந்தார். என்ன தட்டச்சு செய்யவேண்டும் என்பதை புத்தகத்தில் குறித்து குணசேகர் அண்ணனிடம் கொடுத்து அனுப்பினால் போதும்; வாசனையான தாள்களில், தாராளமான இடைவெளிகளுடன் பிரெயில் வடிவம் கைக்கு வந்துவிடும். அவற்றை நேர்த்தியாக துளையிட்டு, கட்டி, எப்படி அட்டை போடுவது என்பதைக்கூட எங்களுக்குப் பயிற்றுவித்திருந்தார் ராஜசேகர் சார். கிறித்துவ நிறுவனங்கள் அருள்கூர்ந்து அனுப்பிவந்த பிரெயில் சஞ்சிகைகள் எங்களுக்கு நல்ல அட்டைகளாக பயன்பட்டன. அவரோடு கரூரில் ஒருங்கிணைந்த கல்வியின் பொற்காலம் முடிவுற்றது என்றுதான் சொல்லவேண்டும்.
ராஜசேகர் சார் விடைபெறும்போது எல்லோரும் அழுது, நிலைகுலைந்து வழியனுப்பினோம். எங்களின் குடும்பத்தினரும், சாரின் குடும்பத்தினரும்கூட உடைந்துபோய்விட்டார்கள். முன்பு அயல்நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டு, ஆதார ஆசிரியர் பணியைத் தொடர்ந்தவர்தான் அவர். ஆனால், இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்குத்தான் அவரும் சம்பளமே இல்லாமலும், சொற்ப சம்பளத்திற்கும் வேலைசெய்ய முடியும்? சொந்த விடுதி, விடுதியை நடத்த ஒரு அறக்கட்டளை, உதவிகள் வழங்கப் போதுமான தன்னார்வலர்கள் என எல்லா விதங்களிலும் ஏற்பாடுகளைச் செய்து வைத்துவிட்டுத்தான் அவர் அரசுப்பணிக்குச் சென்றார். அவருக்குப் பின்னர் பல ஆதார ஆசிரியர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்; அவர்களின் பெயர்கள்கூட எனக்கு நினைவில்லை. செல்வராணி என்னும் ஆசிரியர் நன்றாக கணிதம் கற்பித்தார்; ஒன்பதாம் வகுப்பு காலாண்டில், நான் கணிதத்தில் 98 மதிப்பெண் பெற்றேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
நான் பத்தாம் வகுப்பு வந்தபோது, அன்பாலயம் சார்பில் தனியாக ஆதார ஆசிரியர் நியமிக்கப்பட்டு, அருகிலுள்ள தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அடுத்த மூன்று ஆண்டுகள் எனக்கு இரண்டு அர்ப்பணிப்பு மிக்க ஆதார ஆசிரியர்கள் கிடைத்தனர். பத்தாம் வகுப்பில் பாமா டீச்சர் கணிதம், அறிவியல் என எல்லாப் பாடங்களையும் மிகவும் சிரத்தையெடுத்து சொல்லிக்கொடுத்தார். மொத்த புத்தகம், வினாவிடை நூல்கள், குறிப்புகள் என அவர் ஒரே பாடத்திற்கே பல விதமான ஒலிநாடாக்களைப் பதிவுசெய்து கொடுப்பார். எங்கெல்லாம் பத்தாம் வகுப்பு மாதிரித் தேர்வுகள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் அழைத்துச்சென்று என்னைத் தேர்வு எழுதவைப்பார். நான் நல்ல மதிப்பெண் பெறவேண்டி வழிபாடு செய்வார். என்மீதும் பிற மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறை வைத்திருந்தார். எங்களை நாடகம் உள்ளிட்ட பயிற்சிகளில் அவரும் கேத்தரின் டீச்சரும் சேர்ந்து ஈடுபடுத்துவது வழக்கம்.
செல்வம் சார் நான் பள்ளி மேல்நிலை படிக்கும்போது வந்தார். நம் இதழில், ‘இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம்’ என்ற தொடர் எழுதுகிறாரே, அதே செல்வம் சார்தான்! அவரது அணுகுமுறை எல்லா விதங்களிலும் தனித்துவமானதாக இருந்தது. அதில் அக்கறை இருக்கும்; கண்டிப்பு இருக்கும்; சுய ஒழுங்கை ஏற்படுத்தும் முனைப்பும் இருக்கும்; இவை அனைத்தும் பல வித்தியாசமான கோணங்களில் கலந்திருக்கும். ஒரு தவறைச் செய்யக்கூடாது என்று சொல்வார். அடுத்தமுறை அதே தவறைச் செய்தால், செய்து முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, "முடிஞ்சிச்சா?" என்று கேட்பார். தாமதமாக வந்தால், வரும்வரை காத்திருந்துவிட்டு பின்னர், “எழுந்து போ” என்பார். எந்த சிறு தவறையும் செய்துவிட்டு அவரது கழுகுப் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது. அவரும் விடுதியிலேயே தங்கியிருந்ததால், கிரிக்கெட் கேட்டு, செடிகளைப் பிடிங்கிப்போட்டு, தூங்கி என்று பலமுறை மாட்டிக்கொண்டிருக்கிறேன்.
இன்னொரு பக்கம் மிகக் கடுமையாக உழைப்பார். காதுகேளாதோருக்கான சிறப்புப் பயிற்சி மட்டுமே முடித்திருந்த அவர், பிரெயில் கற்றுக்கொண்டு எனக்காக பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற உதவக்கூடிய ஆங்கிலக் கட்டுரைகள், வினாவிடைகளை தானே தட்டச்சு செய்துகொடுத்தார். ஒரு வாரத்திற்குள் (காலாண்டு விடுமுறை என்று நினைக்கிறேன்) புள்ளிகளை எழுதிவைத்துக்கொண்டு ஒருவர் பிரெயில் கற்றுக்கொண்டு தட்டச்சு செய்ய முடியுமா என்று மலைப்பாகத்தான் இருந்தது.
ஒவ்வொன்றையும் மிகவும் நுட்பமாகவும், புதிய கோணத்திலும் எப்படி அணுகுவது என்று அவர்தான் விளக்கினார். ஸ்டடி முடிந்ததும் பலமணிநேரம் நாங்கள் இருவர் மட்டும் பேசுவோம். தினத் தந்திக்கும் தின மலருக்கும் என்ன வேறுபாடுகள் இருக்கும் என்பதில் தொடங்கி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, போட்டித் தேர்வுகள், அரசியல் நிலைமைகள் என பலவற்றை விளக்குவார்; விவாதிக்க ஊக்குவிப்பார். நான் போட்டிகளில் பரிசுகள் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், என்னுடய ஈகோ எகிறாமல் இருக்க, இன்னும் கற்க வேண்டியது எவ்வளவு உள்ளது என்று அவர் விளக்கியது பெரிதும் பயன்பட்டது. தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவசியமில்லை; வேலையைச் செய்வதுதான் முக்கியம் என்பதை விளக்கிச் சொன்னார்; அவ்வாறே நடந்துகாட்டவும் செய்தார்.
பொருளியல் பாடங்களுக்கு படம் வரைவது எப்படி என்று கற்பித்ததில் தொடங்கி, நேர மேலாண்மைக்காக தனியாக மாதிரி பொதுத்தேர்வு நடத்தி அவற்றை அவரே எழுதியது வரை பல சிறப்பான உத்திகளைப் பயன்படுத்தி பயிற்சிகள் அளித்தார். தான் படித்த பல்வேறு வார, மாத இதழ்களின் சாரத்தை அவர் விளக்குவது, விவாதிப்பது என கடந்த மிகுந்த பயனுள்ள நாட்கள் அவை. தான் சென்றுவந்துள்ள இடங்கள், சந்தித்த சுவையான மனிதர்கள், சுவாரசியமான சம்பவங்கள் என பல சுவையான செய்திகளைச் சொல்வார்.
நான் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றபோது, பலரும் அதற்கு உரிமை கொண்டாடினார்கள். ஆனால், அதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்த செல்வம் சார், எனக்கு அவர்தான் ஆதார ஆசிரியர் என்பதைக்கூட எங்கும் சொல்லி நான் கேட்டதில்லை. அவருடன் நடந்த உரையாடல்கள் காரணமாக, மதிப்பெண்களைப் பற்றிய பெரிய பிம்பங்கள் என்னிடமும் பெருமளவு உடைந்திருந்தன. எனது அறிவு முதிர்ச்சிக்கும், மனப்பக்குவத்திற்கும் அவருடன் நடந்த உரையாடல்கள் இன்றளவும் பயனளித்து வருகின்றன. அவர்தான் என்னிடம் ஆங்கிலம் எடுத்துப் படிப்பது நல்ல தெரிவு என்று விளக்கினார். "முதல் ரெண்டு வருஷம் சிரமப்படுவ. ஃபைனல் இயர்ல கண்டிப்பா நல்லாப் படிக்கிற குரூப்ல வந்திடுவ" என்று மிகச் சரியாகவே கணித்துச் சொன்னார்.
இன்றளவும் கணேசன் சாருடனும் ராஜசேகர் சாருடனும் எங்கள் குடும்ப உறவுகள் தொடர்கின்றன. எங்களின் கல்லூரிப் படிப்பு, வேலை, குடும்பநிலை என எல்லாவற்றையும் குறித்து தொடர்ந்து அக்கறை செலுத்தி வருபவர்கள் இவர்கள். அதற்காக பல்வேறு விதங்களிலும் தொடர்ந்து உதவி வந்திருக்கின்றனர். அவர்கள் இல்லாமல் எங்கள் குடும்ப நல்ல நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது; அவர்களின் குடும்பங்களிலும் அப்படித்தான். கடைசியாக ஸ்ரீராமின் திருமணத்திற்கு நாங்கள் குடும்பத்தோடு சென்றுவந்தோம். எப்போதும் தமது சொந்த மக்களாகவே கருதி எங்களது வளர்ச்சியில் பெருமிதம் அடைகிறார்கள் இவர்கள். ஒருமுறை கணேசன் சார், பேராசிரியர் சரவணன் அண்ணனிடம் அவரது சம்பளத்தைக் கேட்டார். அவரும் சொல்ல, "ரொம்ப சந்தோஷமா இருக்கு சரவணன், என்னவிட மூவாயிரம் அதிகமா வாங்குற!" என்று பூரித்தார்! செல்வம் சாரின் தொடர்பும் விரல்மொழியர் மூலம் சமீபத்தில் கிடைத்தது!
இந்த ஆசிரியர்கள் அனைவருமே பல்வேறு விதங்களில் என்னைப் போன்ற பலரது வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்புகளை புரிந்துள்ளனர். இவர்கள் தமது பார்வையற்ற மாணவர்கள் மீது பரிதாபமோ, கழிவிரக்கமோ காட்டியதில்லை. மாறாக அவர்களிடம் நிறைந்திருந்தது உண்மையான அன்பும், அக்கறையும், எல்லையற்ற ஈடுபாடும்தான். இந்த ஆதார ஆசிரியர்களைப் போல, என்னால் பயனுள்ள பணிசெய்ய முடிந்தால் அதுவே எனது வாழ்வின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதுவேன்!
--
(கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]