சில பாடல்கள் மட்டும் நம்மைக் காலத்திற்கும் அழச்செய்யும்; பின்னர் அதுவே நமக்கான ஆறுதலையும் தந்து ஆற்றுப்படுத்தும். மனம் ஒருசில மணித்துளிகள் ஒன்றின் மீது மட்டுமே கவனம் கொள்வதுதான் தியானம் என்றால், இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் நான் தியானிக்கிறேன். எப்போது கேட்டாலும் ஒரு குறிப்பிட்ட பிம்பத்தின்மீது என் நினைவுகள் நிலைகுத்தி நிற்கக் காரணமான அந்தப் பாடல், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருவர் வாழும் ஆலயம்’ எனத் தொடங்கும் இறுதிக் காட்சிப் பாடல்.
‘ஒருவர் வாழும் ஆலயம்,
உருவமில்லா ஆலயம்,
நிலைத்து வாழும் ஆலயம்,
நெஞ்சிலோர் ஆலயம்’.
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில், T.M. சவுந்தரராஜனும் L.R. ஈஸ்வரியும் பாடிய அந்தப் பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவியரசர் கண்ணதாசன். ஒவ்வொரு வரியும் அந்த பிம்பத்தின் வெவ்வேறு பரிணாமங்களை என் நினைவடுக்குகளில் நிறைக்கிறது. பாடலின் துவக்கமாக ஒலிக்கும் தேவாலய மணியோசை என் பள்ளித் துவக்க நாட்களுக்கு என்னைக் கூட்டிச் செல்கிறது.
எனக்கு இனி பார்வைக்கே வாய்ப்பில்லை என்றானபிறகு, நான் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலுள்ள டி.இ.எல்.சி. சபையால் நடத்தப்படும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் ஆறு வயதில் சேர்க்கப்பட்டேன். அது பள்ளிக்கூடம் எனச் சொல்லப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. எனது ஐந்து வயது ஒத்த அக்கம் பக்கத்துக் குழந்தைகளெல்லாம் எல்.கே.ஜி., யு.கே.ஜி. என ஏதேதோ சொல்லிக்கொண்டு கிளம்பிய நாட்களில், நானும் அக்காவின் பாடப்புத்தகங்கள் மற்றும் வார இதழ்கள் சிலவற்றைப் பைக்குள் நிரப்பிக்கொண்டு பள்ளிக்குச் செல்வதாக பாவனை செய்து மகிழ்ந்திருக்கிறேன்.
நான் ஒன்னாம் வகுப்பில் சேர்க்கப்படுவதை அறிந்தேன். அக்கா என்னைவிட மூன்று வகுப்புகள் அதிகமாய்ப் படித்துக்கொண்டிருந்தாள் என்பதில் எனக்கு உவப்பில்லை. ஆகவே, அக்காமீது கோபம் கோபமாக வந்தது. அந்தப் பள்ளியில் என்னைப் போன்ற குழந்தைகளின் கூச்சலும் ஆரவாரமும் எனக்கு அக்காவின் பள்ளியை நினைவுபடுத்தியது. பள்ளியெங்கும் சில அண்ணன்களும் அக்காள்களும் “புதுப்பையன், புதுப்பையன்” என்று பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது. என் சேர்க்கையின் பொருட்டு என் அப்பாவும், அம்மாவும் ஏதேதோ தாள்களில் எழுதப் பணிக்கப்பட்டார்கள்.
பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே என்னிடம் பாசமாகப் பேசுவதும், கன்னம் கிள்ளிக் கொஞ்சுவதுமாக இருந்தார்கள். நான் உற்சாகமாக இருந்தேன். என்னுடைய சுறுசுறுப்பான குள்ள நடையும், குழந்தைத்தனமான பேச்சும் ஆசிரியர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சூரியன் மஞ்சள் கொள்ளத் துவங்கியபோது, ஒரு பிஸ்கட் பாக்கெட்டை என் கையில் திணித்தபடி அப்பாவும், அம்மாவும் சனிக்கிழமை வந்து பார்ப்பதாகச் சொன்னார்கள். எனக்கு எல்லாமே இருண்டுவிட்டது. ‘அப்படியானால் நான் இங்குதான் இருக்கவேண்டுமா? இந்நேரம் அக்கா வீட்டுக்கு வந்திருப்பாள். நான் மட்டும் ஏன் இங்கேயே இருக்கவேண்டும்’ என்கிற என்னுடைய கேள்விக்கு யாருமே விடை சொல்லாதது அழுகையைக் கூட்டியது. என்னைக் கதற விட்டுவிட்டு, மெல்லப் பிரிந்து நடந்த அப்பாவையும், அம்மாவையும் ஒருமையில் ஏசினேன், கத்திக் கூச்சலிட்டேன்; பலன் ஏதுமில்லை.
‘கருணை தெய்வம் கைகள் நீட்டி,
அணைக்கத் தாவும் ஆலயம்’.
மிகப்பெரிய கூட்டமே என்னைச் சூழ்ந்துகொண்டு ஏதேதோ சொல்லிப்பார்த்தது. ’வீட்டுக்கு’ என்று இழுத்து, இழுத்து அழுதேன். பெரிய வகுப்பு அண்ணன்களும், அக்காள்களும் சமாதானம் செய்கிற முயற்சியில் தோற்றார்கள். அவர்களுக்குக் கெட்டகெட்ட வார்த்தைகளில் வசைமாரி பொழிந்தேன்.
அந்தக் கூட்டத்தின் நடுவே, திடீரென என்னை நோக்கி நீண்ட கைகளுக்குள் சிக்கிக்கொண்டேன். தரை பிரிந்து அந்தத் தோளுக்கு எப்படி இடம் மாறினேன் என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. எனக்கு இப்போதும், ஏன் என் இறப்புவரை நினைவில் இருக்கப்போவதெல்லாம், கண்ணீர் கலந்து என் கன்னங்களில் வழிந்தோடிய மூக்குச்சலியைத் துடைத்துப் போட்ட அந்த நிர்வாண விரல்களே!
எனக்கு அது யார் என்று தெரியவில்லை. என் அப்பாவின் வாசத்தையும், வயதையும் ஒத்த அவர், என்னைத் தன் வீட்டிற்குக் கூட்டிப்போய் தோசை தந்தார். தனது பெயர் போஸ் என்றார். தானும் ஒன்னாம் வகுப்பில்தான் படிப்பதாகச் சொன்னார். வெகுநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தபடி, தூங்கிப்போனேன்.
‘காலமெல்லாம் திறந்துகாணும்,
கதவு இல்லா ஆலயம்’.
நான் 2, 3, 4 என வகுப்புகள் மாறிக்கொண்டே இருக்க, போஸ் சார் மட்டும் அடுத்தடுத்து வந்த புதுப்பையன்களின் ஒன்னாம் வகுப்புத் தோழனாகவே தொடர்ந்தார். சுபாஷ் சந்திர போஸ் என்கிற அந்த நெல்லை வாத்தியாருக்கு, சிவகங்கை மாவட்டம் மற்றும் அதனையொட்டிய புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களின் மூலை முடுக்குகளெல்லாம் நன்கு பரிச்சயமாக இருந்தன. திருப்பத்தூர் பள்ளி மாணவர் எண்ணிக்கையில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்களை தேடிச்சென்று பள்ளியில் சேர்த்தவர் அவர் என்பதால், போஸ் சார் தனது ஊருக்கு வந்தது, தன்னைப் பள்ளிக்கு அழைத்து வந்தது என ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றிச் சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன.
பெயருக்கேற்ற மிடுக்கோ, கம்பீரமோ வரித்துக்கொள்ளாத, தனது மாணவப் பிள்ளைகளிடம் அன்பு, கோபம், பெருமிதம் என எல்லாவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய ஒரு சராசரி மனிதர்தான் அவர். ஆயினும், வெளிச்சம் இழந்து வழி தவறிய பல ஆட்டுக்குட்டிகளின் மேய்ப்பராக இருந்தார். கற்பித்தல் மட்டுமே சாதாரணப் பள்ளி ஆசிரியர்களின் பணி. ஆனால், பார்வைச்சவாலுடைய குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர் என்பவர், வகுப்பிற்கு வெளியே நல்ல தாயாய், தகப்பனாய், தாதியாய் இருக்க வேண்டும் என்பதை தனது வாழ்வியலாகக் கொண்டார்.
‘பாசமென்னும் மலர்களாலே,
பூஜை செய்யும் ஆலயம்’.
எங்கள் விடுதிச் சிரங்குகளுக்கு எத்தனையோ தடவை அவரின் கைவிரல்கள் களிம்பு பூசியிருக்கின்றன. தேர்வு விடுமுறைகளில் அழைத்துச் செல்லாது விடப்பட்ட பிள்ளைகளை, அவர்களின் ஏக்கத்தை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, பேரன்போடு அவர்களை அவர்களின் ஊர் சேர்ப்பார். எப்போதும் அவருக்கு உலகமாய் இருந்ததும், அவர் உயிரென நினைத்ததும் அந்தப் பள்ளியையும் அங்கு படித்த எங்களையும்தான். ஒன்றையே நினைத்திருந்து, ஊருக்கே வாழ்ந்திருந்து, உயிர்கொடுத்து உயிர்காக்கும் உன்னதராய் வாழ்ந்தவர் அவர்.
“என்னடே! மாவாட்டுற?” என்று சொல்லியபடியே என் விரல்களைப் பிடித்து, ஆறு புள்ளிகள் வாயிலாக அகிலத்தை எனக்கு அறிமுகம் செய்தார். வட்டம், சதுரம் என ரொட்டிகளால் அவரின் வடிவியல் வகுப்புகள் எங்கள் பசியாற்றின.
நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. பள்ளிச் சுற்றுலாவாக சென்னை செல்லக் காரைக்குடி ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். அந்த சில நிமிடங்களில், நிலைய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று, அவர்களின் மேற்பார்வையில் மாணவர்கள் அனைவரையும் தண்டவாளத்தில் இறக்கிவிட்டு, அதைத் தடவிப் பார்க்கச் சொன்னார். ரயில் என்ஜினோடு பெட்டிகள் எப்படி இணைக்கப்படுகின்றன என்பதை சில ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நேரடியாகவே அழைத்துச் சென்று காண்பித்தார். அவர்களுள், நான் கேட்காமலேயே என்னைத் தெரிந்துகொண்டு கூட்டிப்போனார்.
‘தியாகம் என்னும் ஒளியினாலே,
தீபம் ஏற்றும் ஆலயம்’.
எவர் நுகர்விற்கும் காத்திராத பூவின் வாசத்தைப்போல, யார் நனைதலையும் எதிர்பாராது பொழிகிற பெருமழை போல அவர் தனது கருணையையும், அன்பையும் எங்கள்மீது பொழிந்துகொண்டே இருந்தார். மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட அவர், எப்போதுமே எங்களிடம் கர்த்தரைப் பற்றி உபதேசித்ததில்லை. ஆனால், அந்த வசனங்களுக்கு உதாரணமாக வாழ்ந்திருக்கிறார் என்பதை இப்போது உணரும்போது, நான் புத்தகங்களில் படித்துச் சிலிர்த்த பல யுகபுருஷர்களின் பராக்கிரமங்களைப் பின்னுக்குத் தள்ளியவராய், தனது வாழ்வை வரலாறாக மாற்றிக்கொண்ட மகாநாயகன் எனது ஆசிரியர் என்பதில் பூரிக்கிறது மனம்.
நான் நடுநிலைக் கல்வியை முடித்துப் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, ஒரே ஒருமுறை மட்டும் அவரை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தேன். அப்போதெல்லாம் எனது பள்ளி ஆசிரியர் என்பதைத் தாண்டி, அவர்மீது வேறெந்த அபிப்பிராயமும் எனக்குள் எழுந்ததில்லை. நான் சிறப்புப் பள்ளி ஆசிரியராகப் பணியேற்ற பிறகே, கொஞ்சம் கொஞ்சமாக அவர் எனக்குள் நிலைகொள்ளத் தொடங்கினார்.
“ஏலே! சாதாரணப் பள்ளி வாத்தியாரைப் போல இல்லடே நீ பாக்குற வேலை. நிறைய சகிப்புத்தன்மை, பொறுமை, அன்பு எல்லாம் இருக்கனும். ஆனா, இதெல்லாம் நமக்கிட்ட இருக்குங்கிற துளி எண்ணம்கூட உனக்குள்ள வந்திடக் கூடாதுவே” - இப்படித் தன் கடந்தகாலச் செயல்கள் மூலமாக மானசீகமாய் அவர் என்னோடு அன்றாடம் உரையாடிக்கொண்டேதான் இருக்கிறார் என்றாலும், இந்தப் பத்தாண்டுகளில் ஒருமுறைகூட நான் அவரைச் சந்திக்கவில்லை.
அவரது குரலை இன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்கிறேன். இன்றைய நிலையில் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் பார்வையுள்ள ஆசிரியர்களுக்குச் சமமான எண்ணிக்கையில்தான் பார்வையற்ற ஆசிரியர்களும் பணியாற்றுகிறோம். ஆனால், பார்வையற்ற மாணவர்களின் கல்வி சார்ந்து குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மாற்றத்தையோ, விளைவையோ நாம் ஏற்படுத்தவில்லை என்பது எத்தனை வேதனைக்குரிய செய்தி. ஏதாகிலும் செய்யவேண்டும் என்கிற ஊக்கம் நம் மனதிலே இருந்தாலும், நாம்தான் செய்கிறோம் என்கிற அகந்தையும் கூடவே குடிகொள்ளத் தொடங்கிவிடுகிறதே!
இத்தகைய இறுமாப்போ, பெருமையோ கொள்ளாத, தன் கண்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான வெளிச்சத்தைச் சுமந்துகொண்டிருந்த அந்தப் பார்வையுள்ள ஆசிரியர்தான் ஒரு சிறப்புப் பள்ளி ஆசிரியரான எனக்கு அரூப வழிகாட்டி என்றானபிறகு, அவரை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்கிற அவா பிறந்தது.
முதலில் விசாரித்தபோது, அவர் தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், கடையனோடையில் தன் அம்மாவோடு வசிப்பதாகக் கேள்விப்பட்டேன். திருப்பத்தூர் பள்ளியை நிறுவிய சொன்ஜா என்கிற ஸ்வீடிஷ் அம்மையாரின் நூறாவது பிறந்தநாள் விழா கடந்த அக்டோபர் 4-ஆம் நாள் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. நிச்சயம் அந்த விழாவில் பங்கேற்க அவர் வருவார் என நம்பிக்கையோடு சிலரிடம் பேசினேன். ஆனால், அவர் எப்போதோ இறந்துவிட்டார் என்கிற செய்தி என்னை மீளாக் குற்ற உணர்ச்சியில் தள்ளிவிட்டது.
இந்தச் சமயத்தில், எனக்குப் பெரும் ஆறுதலாகவும், அவரை என் முன்னர் கொண்டுவந்து நிறுத்தி, நான் அவரைத் தொழுதேத்தி அஞ்சலி செய்கிற ஒரு நிறைவை எனக்கு வழங்குகிற பாசுரமாகவும் விளங்குகிறது இந்தப் பாடல். என் நெஞ்சில் குடிகொண்ட ஆலயமாய் அவர் நினைவுகள். ‘ஏலே!’ எனத் தொடங்கும் அவரின் கரிசனம் நிறைந்த குரலே அந்த ஆலயத்தின் பூசைமணி. என் ஆசானுக்கு சிறந்த அஞ்சலியாய் நான் தெரிந்துகொண்ட பாடல் இது.
பாடலைக் கேளுங்கள் (பாடலைக் கேட்க). முதலில் கேட்கையில், எவர் நினைவின் பொருட்டாகவேனும், உங்கள் இதயத்திலும் ஓர் ஆலயம் எழும்பக் காண்பீர்கள். அடுத்தடுத்து கேட்க நேர்கையில் இசை, வரி, குரல்நயம் எல்லாம் ஒன்றிணைந்து, நீங்கள் அந்த ஆலயத்திற்குள் போவதும் வருவதுமான உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில், அது
‘நிலைத்து வாழும் ஆலயம்,
நெஞ்சிலோர் ஆலயம்’.
…ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]