சென்ற இதழில் குறிப்பிட்டதுபோல, இசைத் துறை பற்றி இந்த மாதத் தொடரில் எழுதமுடியாமைக்கு வாசகர்களிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டு தொடர்கிறேன்.
கடந்த மாதமும், இந்த மாதமும் அடுத்தடுத்து வங்கித் தேர்வுகளுக்கான அழைப்புகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருப்பதாலும், ஆகஸ்ட் மாதத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முறையில் சில மாற்றங்களைச் செய்து மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டிருப்பதாலும், அரசு வேலைக்காக முயன்றுகொண்டிருக்கும் நண்பர்கள் கொஞ்சம் பரபரப்பாகவே இருக்கிறார்கள். அதே பரபரப்போடு போட்டித் தேர்வுகள் குறித்து இந்த மாதம் எழுதிவிடலாம் என்பதாலேயே இசைத் துறையை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டேன். இப்படியான ஒரு கட்டுரையை எழுதுவது, கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிவது மாதிரியானது. எந்த நேரத்திலும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் என்னைப் பதம் பார்க்கலாம் என்கிற எச்சரிக்கை உணர்வோடும், அப்படியே எனக்கு ஏதேனும் சிறு கீரல்கள் ஏற்பட்டாலும் வாசகர்களாகிய நீங்கள் என்னைக் கவனித்துக்கொள்வீர்கள் என்கிற பாதுகாப்பு உணர்வோடும் மேலே தொடர்கிறேன்.
பார்வையற்றவர்களுக்கு மிகப்பெரிய புகலிடமாக இருந்த ஆசிரியர் பணிக்கான கதவுகள் அடைக்கப்பட்ட பிறகு, அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை போட்டித் தேர்வுகள்தான். ஒவ்வொருவரும் தனது திறமைக்கேற்ப ஏதேனும் ஒருவகையான போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு எழுதி வருகிறார்கள். இந்த வகையான பிரிவினர் இந்த மாதிரியான தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள், எந்த வகையான தேர்வுக்கு எந்த மாதிரியான தயாரிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் இங்கே விளக்கமாக எழுதி வகுப்பெடுக்க விரும்பவில்லை. அதற்குத்தான் ஏகப்பட்ட இணையதளங்கள் இருக்கிறதே? எனவே, நேரடியாக பிரச்சனைகளுக்குள் சென்றுவிடுவோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடக்கும்? அப்படியே நடந்தாலும் அதில் தேர்ச்சி பெற்றால் பணி கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? என்கிற கேள்விகளுக்கு நம் மாண்புமிகுக்களுக்கே விடை தெரியாத சூழல்தான் நிலவுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர, தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் பார்வையற்றவர்களால் எழுதக்கூடிய தேர்வுகள் TNPSC நடத்தும் குரூப் 2, 2a மற்றும் 4 ஆகிய தேர்வுகள்தான். இதில் பார்வையற்றவர்களுக்காக ஒதுக்கப்படும் மிகச்சில பணியிடங்களுக்காக ஆயிரக்கணக்கானவர்கள் போட்டியிடவேண்டிய சூழல்தான் இருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? சரி, ஆயிரக்கணக்கானவர்களோடு போட்டிபோட்டு முதல் சில இடங்களுக்குள் வருவதுதானே போட்டித்தேர்வின் சாராம்சம் என வைத்துக்கொண்டாலும், பதிலி எழுத்தர் மற்றும் தேர்வுக் கண்காணிப்பாளர்களின் அலட்சியத்தால் நிகழும் தவறுகளுக்கும் நாம்தான் பொறுப்பாக வேண்டியிருக்கிறது!
2017-இல் நடந்த குரூப் 4 தேர்வில், சென்னையில் ஒரு பார்வையற்றவருக்கு இன்னொருவருடைய விடைத்தாளைத் தவறுதலாக வழங்கிவிட்டு, அது தேர்வு முடியும் தருவாயில் கண்டுபிடிக்கப்பட்டும், தொடர்புடைய நபருக்கு அவருடைய வரிசை எண் கொண்ட விடைத்தாளில் பதில்களை நிரப்பத் தேவையான நேரத்தை வழங்க மறுத்தது தொடர்பான பாலிமர் நியூஸ் செய்தியை நம்மில் பலர் வாட்ஸ்அப்பில் ஃபார்வர்ட் செய்திருப்போம். மதுரையைச் சேர்ந்த வெங்கலமூர்த்தி என்ற தோழருக்கு, தமிழ்மொழியே வாசிக்கத்தெரியாத ஒரு பதிலி எழுத்தரை மேலே சொன்ன TNPSC தேர்வில் வழங்கியிருக்கிறார்கள். இந்தக் கடுமையான சூழலிலும், அந்த தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவர் 150-ஆவது இடம்பிடித்திருக்கிறார். நன்கு தமிழ் வாசிக்கக்கூடிய பதிலி எழுத்தர் வந்திருந்தால், நிச்சயமாக அந்தத் தேர்வில் முதல் சில இடங்களுக்குள் வந்து, அவர் தன் பணிவாய்ப்பை உறுதிசெய்திருப்பார். இதுபோல நம்மவர்களின் பதிவுசெய்யப்படாத துயரங்கள் ஏராளம்.
மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளின் நிலைமை இதுவென்றால், மத்திய அரசு அல்லது மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்கும் நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளின் கதை இதற்கு நேரெதிராக இருக்கிறது!
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான அரசாணையின் அடிப்படையில், பார்வையற்றவர்களுக்கான பதிலி எழுத்தர்களின் கல்வித் தகுதிக்கு எந்த நிபந்தனைகளும் கிடையாது என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, பதிலி எழுத்தர்களை அழைத்து வருவது தேர்வர்களின் பொறுப்பு என்கிற நிபந்தனைகளோடு நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் சில பார்வையற்றவர்கள் தங்களின் கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டதாக வருத்தப்படுகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்; இவரும் கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய போட்டித் தேர்வுகளைத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகளால் பார்வையற்ற தேர்வர்களுக்கிடையே இருக்கவேண்டிய போட்டி, பதிலி எழுத்தர்களுக்கிடையேயானதாக மாறிவிட்டது என்கிறார் அவர்.
தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்க முடியாதுதான். இப்பிரச்சனையின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட தகவல்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மாநில ஒதுக்கீடு இல்லாமல் பொதுப்போட்டியாக நடத்தப்படும் SBI வங்கி அதிகாரிக்கான (Probationary Officer) தேர்வில் கடந்த வருடம் 29-ஆக இருந்த கட்ஆஃப், ஒரே வருடத்தில் 49-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த வருடம் நடந்து முடிந்த கிராமிய வங்கிகளின் (RRB) அலுவலக உதவியாளருக்கான முதன்மைத் தேர்வில் [Preliminary Examination] தமிழகத்தில் பார்வையுள்ள பொதுப்பிரிவினருக்கே 61.75 தான் கட்ஆஃப் என்கிற நிலையில், பார்வையற்றவர்களுக்கான கட்ஆஃப் 64!
இங்கு என்ன நடக்கிறது என்றால், ஒரு பார்வையற்ற தேர்வர் வங்கித் தேர்வுகளுக்கு நன்கு பயிற்சி செய்துவரும் ஒருவரைப் பதிலி எழுத்தராக அழைத்துச் செல்லும்பொழுது, அவருக்குத் தேர்வுக்காகக் கொடுக்கப்படும் நேரத்தைவிட பார்வையற்றவர்களுக்கென கூடுதலாக வழங்கப்படும் கூடுதல் நேரமும் கிடைப்பதால், அல்வா சாப்பிடுவதுபோல கணிசமான கேள்விகளுக்குப் பதிலளித்துவிடுகிறார்கள்.
பார்வையுள்ளவர்களோடு ஒப்பிடும்பொழுது, பார்வையற்றவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கான பாடப்புத்தகங்களும், பயிற்சிகளும் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது என்பதை நாம் எந்தவித மாற்றுக்கருத்துமின்றி ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில், வழங்கப்படும் மிகக் குறைவான நேரத்திற்குள், எந்தவித இடையூறுகளும் இல்லாமல் தானே கணினி திரையில் வரும் கேள்விகளைப் பார்த்து பதில் அளிக்கும் பார்வையுள்ளவரைவிட, பதிலி எழுத்தர்கள் கேள்விகளைப் படிக்க அதனைக் கேட்டுப் பதிலளிக்கும் பார்வையற்றவரால் அதிகக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது சாத்தியம்தானா?
இப்படியான ஒரு கருத்தைச் சொல்வதால், பார்வையற்றவர்களின் திறமையை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைத்துக் கொள்ளவேண்டாம். ஒரு பார்வையற்றவராக இத்தகைய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதில் நமக்கிருக்கும் அடிப்படையான சில சிக்கல்களை, இயலாமைகளைத் திறந்த மனதோடு ஒப்புக்கொண்டால்தான் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி நாம் சிந்திக்க முடியும்.
சிலர் செய்யும் இந்த மாதிரியான முறைகேடுகளால் தேர்வுகளுக்காக கடினமாக படித்துவரும் பலருடைய எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது எனும்போது, சரியான முறையில் தேர்வு நடப்பதை உறுதி செய்யவேண்டியது இதுபோன்ற தேர்வுகளை நடத்தும் அமைப்புகளின் தலையாய கடமை. இத்தகைய தருணத்தில் இதுகுறித்து பேசியே ஆகவேண்டியது நம்முடைய கடமை.
இதுகுறித்து நம்மோடு பேசிய போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகிவரும் ஒருவர், “இந்தியா முழுக்க IBPS எனப்படும் இந்திய வங்கிப் பணியாளர்கள் தேர்வு அமைப்பு நடத்தும் இளநிலை உதவியாளர் (Clerk) மற்றும் அதிகாரி (Probationary Officer) இந்த 2 பணிகளும் சேர்த்து பார்வையற்றவர்களுக்கு மட்டும் வருடத்திற்கு சராசரியாக 150 பணியிடங்கள் வழங்கப்படுகிறது. இதில் பெரும்பாலான இடங்களை பதிலி எழுத்தர்களால் தேர்ச்சிபெற்ற பார்வையற்றவர்களே பெறுகிறார்கள். மத்திய அரசு நடத்தும் SSC தேர்வுகளைப் பொறுத்தவரை இந்த பதிலி எழுத்தர்கள் பிரச்சனை ஓரளவுக்கு இல்லை என்றாலும், இந்த தேர்வு நடைமுறைகள் முழுவதும் முடிய 2 முதல் 3 வருடங்கள் ஆகிறது. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம், இடையிடையே அந்தத் தேர்வு தொடர்பான வழக்குகளால் நிகழும் தாமதம் என பலகட்ட பிரச்சனைகளுக்குப் பிறகே நமக்குப் பணி கிடைக்குமா, கிடைக்காதா என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அப்படியே ஒருவேளை நமக்கு பணிவாய்ப்பு உறுதி என்று தெரிந்தாலும், எப்போது பணி ஆணை கிடைக்கும் என்பது தெரியாது. IBPS தேர்வில் மட்டுமே தேர்வெழுதிய ஒரு வருடத்துக்குள்ளாகவே பணி ஆணை கையில் கிடைத்து விடுகிறது. திறமையற்றவர்கள் மிகத்திறமையான பதிலியெழுத்தர்களால் IBPS தேர்வெழுதி ஒரே வருடத்திற்குள் பணியில் சேர்ந்துவிட, திறமைசாலிகள் SSC தேர்வெழுதி வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டிய அவலநிலை நிலவுகிறது” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த முறைகேடுகளை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டதால், மத்திய அரசாங்கம் ஒரு குழுவை நியமித்து, அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் போட்டித்தேர்வுகளில் பார்வையற்றவர்களுக்கான பதிலி எழுத்தர்களுக்கு ஒரு புதிய நிபந்தனையை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை பதிலி எழுத்தர்களின் கல்வித்தகுதிக்கு எந்த உச்சவரம்பும் இல்லை என்றிருந்த விதி திருத்தப்பட்டு, தேர்வர்களின் கல்வித் தகுதியைவிட ஒருபடி குறைவான கல்வித் தகுதியே இருக்கவேண்டுமென மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட விதிகளாலும் பெரிதாக முறைகேடுகளைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான் என்கிறார்கள் மூத்த செயல்பாட்டாளர்கள்.
இதில் தேர்வர்களின் கல்வித் தகுதியைவிட ஒருபடி குறைவு என்கிற விதியில், தேர்வர் இளங்கலை முடித்தவரெனில், பதிலி எழுத்தர்கள் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருபவராக இருக்கலாமா? அல்லது பள்ளிப்படிப்பு முடித்தவராக இருக்கவேண்டுமா? தேர்வர் கலை, இலக்கியத்தில் முதுகலை முடித்தவரெனில், அதே பிரிவில் இளங்கலை முடித்தவரையோ அல்லது இளங்கலை பொறியியல் முடித்தவரையோ அழைத்துச் செல்லலாமா என்பதெல்லாம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இதுபோன்று இந்த அரசாணையிலிருக்கும் சிக்கல்கள் குறித்து அக்டோபர் 4, 2018 தேதியிட்ட ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் (https://www.thehindu.com/opinion/op-ed/presuming-the-disabled-to-be-incompetent/article25115464.ece) ராகுல் பஜாஜ் என்கிற பார்வையற்ற வழக்கறிஞரின் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
ஒருவேளை, இந்த விதிகளில் சில மாற்றங்கள் செய்து பதிலி எழுத்தர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்தால், பிரச்சனை சரியாகிவிடுமா என்றால், அதற்கும் இல்லையென்பதுதான் பதிலாக இருக்க முடியும்! பல நேரங்களில், மேலே TNPSC தேர்வுகள் குறித்து சொன்னதுபோல பதிலி எழுத்தர்களால் நன்கு படிக்கும் பலருடைய எதிர்காலம் பாழாக்கப்படும் நிகழ்வுகளும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
இது குறித்து, கனரா வங்கியில் பணியாற்றும் திரு. மு. பார்த்திபன் அவர்களிடம் பேசியபோது, “பலவிதமான கல்வி, சமூக மற்றும் குடும்பப் பின்னணியிலிருந்து வரும் பார்வையற்றவர்களுக்கு பொருந்தும் வகையிலான ஒரு பொதுவான போட்டித் தேர்வு விதிகளை வகுப்பதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். அதனால், இதற்கு முன்பிருந்ததுபோல பதிலி எழுத்தர்களுக்கான கல்வித் தகுதிக்கு எந்தவிதக் கட்டுபாடுகளும் இல்லாமல் செய்துவிட்டு, பார்வையற்றவர்கள் எழுதும் தேர்வை ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்யவேண்டும். தேர்வு முடிவு வெளியானதும், அதில் வெற்றி பெற்றவர்களின் தேர்வு கேமரா பதிவை மறு ஆய்வு செய்து, தேர்வரின் தகுதியை உறுதி செய்துகொள்ளலாம். அனைத்து தேர்வுகளும் கணினிமயமாகியிருக்கும் தற்போதைய சூழலில், தேர்வை ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்வதெல்லாம் IBPS போன்ற அமைப்புக்கு பெரிய விஷயமில்லை” என்கிறார்.
பார்வையற்றவர்களுக்காக இயங்கும் அமைப்புகளும் போட்டித் தேர்வு குறித்த தெளிவான புரிதலை பார்வையற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். மாணவர்களும் குறுக்கு வழிகளை நாடாமல் ஆரம்பத்திலிருந்தே முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டால், போட்டித்தேர்வில் திறமை அடிப்படையிலான போட்டி ஏற்பட்டு உங்களுடைய எதிர்காலம் வளமாவதோடு, உங்களைப்போல தகுதியான ஒரு நண்பரின் எதிர்காலமும் வளமாகும்.
இந்தப் பதிவைப் படிக்கும் நீங்களும்கூட இதுகுறித்தான உங்களின் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். பதிவு யாரையும் புண்படுத்தும் வகையிலிருந்தால் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். இதில் ஏதேனும் கருத்துப்பிழைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால், தகுந்த ஆதாரங்களோடு எங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டலாம்!
--
தொடர்புக்கு: [email protected]