பல நாட்களாக புத்தகத்தின் பெயரின்பால் கொண்ட ஈர்ப்பினாலேயே படிக்க வேண்டும் என்று நான் விரும்பிய புத்தகம், நா. முத்துக்குமாரின் ‘அணிலாடும் முன்றில்’. ஒரு வழியாக, இந்தப் புத்தகத்தை இணையத்தின் உதவியால் திரை வாசிப்பான் கொண்டு படித்து முடித்தாயிற்று.
இவ்வளவு காலமும் கவிதைகள், கதைகள், நாவல்கள் என்று மூழ்கி இருந்த எனக்கு, உறவுகள் குறித்த இந்தப் புத்தகம் முற்றிலும் ஒரு வித்தியாசமான உணர்வையே தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தொகுப்பில், குடும்ப உறவுகள் குறித்து, தன்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களையும் மிக அழகாக குழைத்து, எழுத்தோவியம் தீட்டியிருக்கிறார் கவிஞர் முத்துக்குமார். இத்தொகுப்பு புத்தகமாக வெளிவருவதற்கு முன்னரே ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்கள் மத்தியில் ‘ஆல் டைம் ஹிட்’ அடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது!
புத்தகத்தை படிக்கும்பொழுதும், படித்து முடித்த பின்பும் முத்துக்குமாரின் இழப்பைப் பற்றிய சிந்தனைகளும், அவருடைய எழுத்தில் உள்ள வாழ்க்கையின் உயிரோட்டமும் ஒருவித சிலிர்ப்பை என்னுள் தந்துகொண்டே இருக்கிறது.
நிகழ்வுகளாய், கதைகளாய், கவிதைகளாய் ஒவ்வொரு உறவையும் வாழ்க்கையின் ஓட்டத்தையும், அவற்றில் உயிர்ப்பை தருகின்ற உறவுகளையும் மிகவும் அழகோடு உரையாடும் களமாகவே அமைந்திருக்கிறது இந்த அணிலாடும் முன்றில். உரையாடப்பட்ட உறவுகளில் சில மிகவும் கச்சிதமாக என்னுடன் பொருந்திப் போகவும், சில முரணாகவும், சில நான் இன்னும் கடந்திராத உறவுகளாகவும் என் நினைவுகளை இன்னும் தீண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. உறவுகளை விடுத்து அவரவருக்கு என ஒரு வாழ்க்கையை தேடிய கால ஓட்டத்தில், அறிவியல் வளர்ச்சியில் அமிழ்ந்து போன குடும்ப உறவுகளையும், அவற்றின் பசுமையான நினைவுகளையும் இதமாக புரட்டிச் செல்கையில் ஒருவித ஏக்கம் ஏற்படுவதை என்னால் தடுக்க முடியவில்லை.
தனிமனித சுதந்திரம், சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரான விவாதங்கள் என நீளும் ’பகுத்தறிவு’ விஞ்ஞானம் பேசும் இக்காலச் சூழலில், உள்ளத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறவுகளின் பிணைப்பையும், கொண்டாட்டங்களாக ஒன்று கூடலாக அமைந்த சம்பிரதாயங்கள் தந்த நினைவுகளையும் எளிதில் புறம் தள்ளிவிட முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது இந்தத் தொகுப்பு.
வாசிப்புப் பழக்கத்தை அதிகம் ஊக்குவித்த அப்பா, சில காலமே கிடைத்த அம்மாவின் நெகிழ்ச்சியான அன்பு, ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் வீடு திரும்பும் நேரத்தை எதிர்நோக்கும் ஆயா,
கண்டிப்பையும் அன்பையும் சமமாகத் தந்த பெரிய மாமா, அன்பும் அனுபவங்களுமாக தோழமைகளையும் தனி மனிதனாக உலாவ ஊக்குவிக்கும் சின்ன மாமா, எப்பொழுதும் அன்னியப்பட்டுத் தெரிந்த மாமா அத்தையின் நினைவுகள், எந்நேரத்திலும் எல்லா விதத்திலும் ஆதரவாக அன்பை மட்டும் தந்த சித்தி, உறவுமுறைகளின் தேவையையும் குடும்ப நிகழ்வுகளின் நினைவுகளையும் என்றும் தந்துகொண்டிருக்கும் சித்தப்பா,
சண்டையிடவும் அக்கறை கொள்ளவும் அண்ணன்களும், தங்கைகளும் தம்பிகளும், நெருக்கமும் தொலைவும் ஒன்றே சேர்ந்த அத்தை, மாமாக்கள், தனக்கென தனி பாணி கொண்டு அந்த வெற்றிலையை குழைத்து வாயில் போடும் அம்மாச்சி, கண்டும் காணாமல் அன்பை வெளிப்படுத்தும் தாத்தா என கவிஞரின் ஒவ்வொருவருடனுமான நினைவுகளின் ஒரு சிறு புள்ளியேனும் புத்தகம் நெடுக என்னுடன் பயணித்தது போன்றும், அவற்றுடன் இவ்வளவு நாளும் பயணம் செய்ததுபோலும் என்னுள் ஒரு புத்துணர்வை இத்தொகுப்பு தந்தது.
மகனுக்கான கடிதம்
மேலே உள்ள அனைத்து உறவுமுறைகளையும் பற்றி விவரித்த நான், இந்த அப்பா-மகன் கடிதம் பற்றி சிலாகிக்காமல் போனால் இங்கே யாரேனும் கடிந்துகொள்ளக் கூடும். எனவே, அதற்காகவே ஒரு தனி தலைப்பு ஒதுக்க வேண்டியதாயிற்று.
இப்புத்தகத்தின் எல்லா கட்டுரைகளுக்கும் துவக்கப்புள்ளியாக ஏதோ ஒரு கவிதையையோ, சிந்தனையையோ, ஏதேனும் சிறுகதையின் வரிகளையோ கவிஞர் இணைத்திருப்பார். அதே பாணியில், கடைசிக் கட்டுரையில் ‘மகன்’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு நம் உலக நாயகன் எழுதிய கவிதை ஒன்றைப் பயன்படுத்தி இப்படி ஆரம்பிக்கிறார்:
‘மகனே! ஓ மகனே!
என் விந்திட்ட விதையே!
செடியே! மரமே! காடே!
மறு பிறப்பே!
மரணச் சௌகர்யமே! வாழ்’.
அடுத்து, முத்துக்குமாரின் மகனுக்கான கடிதம் இவ்வாறு பேசுகிறது:
"என் சின்னஞ்சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சி கொள். அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்துகொள்வதைவிட தீண்டிக் காயம் பெறு; அந்த அனுபவம் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ சூத்திரம் இதுதான். கற்றுப் பார்; உடலை விட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப்பார்". அவர் சொன்னதையெல்லாம் தன் மகன் ஆதவன் நாகராஜனுக்குச் செய்து காட்டிவிட்ட மாதிரி நடந்த நிகழ்வுகளாக இப்போதைக்குச் சொல்லத் தோன்றுகிறது.
அணிலாடும் முன்றில் மாதிரியான படைப்புகளும், அவற்றுடன் பிணைந்து நிற்கும் உறவுகளின் நினைவுகளுமே இன்றும் நாம் யாவரும் இயங்கிக் கொண்டிருப்பதன் உந்து சக்தி என்பதே நிதர்சனமான உன்மை.
கண்ணீரையும் புன்னகையையும் ஒருசேர கட்டுப்படுத்த முடியாமல் அள்ளித்தரும் படைப்புகள் சிலவற்றுள் அணிலாடும் முன்றிலுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு!
மொத்தத்தில், அணிலாடும் முன்றில் – உறவுகளால் கோர்க்கப்பட்ட ஓர் அணி.
--
தொடர்புக்கு: [email protected]