நாம் கவனிக்கப்படும் இச்சூழலில், நம் நடத்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். சிறுபான்மைச் சமூகமாய் இருக்கும் பட்சத்தில், தனி நபரின் தவறுகள்கூட ஒட்டுமொத்த சமூகத்தின் தவறாகவே பார்க்கப்படும். குறைந்த அளவே நாம் பணி வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். நம் உரிமைகளுக்காக இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாம் செய்யும் தவறுகள் என்பது நம் வாய்ப்புகளை மறுப்பதற்கான கருவியாக மாறிவிடும்.
நீங்கள் தனி நபர்தான். ஆனால், பார்வையற்றோர் சமூகத்தின் ஒரு பிரதிநிதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம் முன்னோர்களின் நன்மதிப்புதான் நமக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது. அதை, நாளைய சமூகத்தினருக்குக் கையளிப்பது நமது கடமை. திறமையாளரைவிட நன்னடத்தையாளரையே சமூகம் விரும்புகிறது. ஏனெனில், ஒழுக்கமே உயிரினும் ஓம்பப்படும்.
‘விரல்மொழியர்’ ஏப்ரல் இதழில் சில நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளும், உங்கள் ஆதரவைப் பெற்ற வழக்கமான பிற படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த இதழ் தொடங்கி ‘சிக்கல்களும் சிக்கியவர்களும்’ என்ற புதிய தொடர் இடம்பெற இருக்கிறது. மு. பார்த்திபன் அவர்கள் எழுதும் இத்தொடர் பார்வையற்றோர் குடும்ப நலம் தொடர்பானது. இது உங்கள் மனதிற்குள் புதிய பல திறப்புகளை உருவாக்கும் என நம்புகிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள், விரல்மொழியர் மின்னிதழுடன்.
‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’.