வேலூரைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்றவர் தொடுத்த வழக்கில் இவ்வுத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. ராம்குமார் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் பயின்றுகொண்டிருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் திருக்குறளை பிரெயிலில் வெளியிட்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கு, இல்லை என்பதுதான் பதில். அப்படியென்றால், திருக்குறள் பிரெயிலில் பதிப்பிக்கப்படவில்லையா என்று கேட்டால், “இருக்கிறது. பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது” என்ற அழுத்தமான பதிலைத் தரவேண்டியுள்ளது.
1978-ஆம் ஆண்டிலேயே CFBI (Cristian Foundation for the Blind, India) பிரெயில் அச்சகம் திருக்குறளை தமிழ் பிரெயிலில் வெளியிட்டது. ரூ. 1.50-க்கு அப்புத்தகத்தை வாங்கிப் படித்ததாக நம்மிடம் நினைவுகூர்கிறார் கனரா வங்கியில் பணியாற்றும் மு. பார்த்திபன் அவர்கள். கோவை பஞ்சாலையில் பணியாற்றிய பொன்னுசாமி என்ற பார்வையற்றவர் திருக்குறளில் ஆழ்ந்த புலமை உடையவர். இவர் திருக்குறள் குறித்த பல கட்டுரைகளை ‘விழிச்சவால்’ பிரெயில் இதழுக்கு எழுதியுள்ளார். தனது திருக்குறள் ஆர்வத்திற்கும், ஆய்விற்கும் CFBI தந்த பிரெயில் பதிப்பே காரணம் என்கிறார் இவர். இப்படி பலதரப்பட்ட பார்வையற்றோரையும் சென்றடைந்தது CFBI வெளியிட்ட பிரெயில் திருக்குறள் பதிப்பு.
2000-ஆம் ஆண்டு, தமிழக அரசு கன்னியா்குமரியில் வள்ளுவருக்குச் சிலை எடுத்தது என்பது யாவரும் அறிந்ததே. அந்த நேரத்தில், மீண்டும் திருக்குறள் பிரெயில் பதிப்பு வேகம் பெற்றது. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பிரெயில் அச்சகம், மதுரை IAB (Indian Association for the Blind) பிரெயில் அச்சகம் ஆகியவை அப்போது திருக்குறளை பிரெயிலில் வெளியிட்டன. சென்னை CFBI பிரெயில் அச்சகம் திருக்குறளை மீண்டும் பதிப்பித்து வெளியிட்டது. அப்போதைய தமிழக முதல்வரான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் முன்னுரையோடு இப்பதிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2011-இல் IAB பிரெயில் அச்சகம் திருக்குறளை மறு பதிப்பு செய்தது. அந்த நூலில் திருக்குறள், தெளிவுரை, ஆங்கில விளக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது தவிர, திருக்குறள் ஆங்கில விளக்கங்களை மட்டும் தொகுத்து தனி நூலாக IAB வெளியிட்டது.
ஆக, திருக்குறள் பிரெயிலில் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இத்தகு சூழ்நிலையில், பிரெயிலில் திருக்குறள் வெளியிடப்படவில்லை என்றும், அது புதிதாக வெளியிடப்படவேண்டும் என்றும் கூறுவது பொருளற்றதாகவே இருக்கும்.
மேலே கூறப்பட்ட தகவல்கள் சரியாக இருந்தாலும், தமிழக அரசோ, நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ள பிற அமைப்புகளோ திருக்குறளை வெளியிடவில்லையே என்று கேட்கலாம். அவை மீண்டும் திருக்குறளை பிரெயிலில் வெளியிடுவதால் புதிதாக என்ன பயன் விளைந்துவிடப்போகிறது?
இது பற்றி வழக்கு தொடுத்த ராம்குமாரிடம் பேசினோம். “திருக்குறள் பிரெயிலில் பல அச்சகங்களால் வெளியிடப்பட்டிருப்பது உண்மைதான். ஆனாலும், அது எல்லோருக்கும் கிடைக்கவில்லையே” என்றார் அவர். மேலும், சிறப்புப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் மட்டுமே கிடைப்பதாகவும், புத்தகத்தின் விலை ஒரு சாதாரண பார்வையற்றவர் வாங்கும் அளவில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இது உண்மைதான். ஆனால், இது திருக்குறளுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. அனைத்து பிரெயில் புத்தகங்களின் நிலையும் இதுதான். புத்தகத்தின் தயாரிப்புச் செலவு விலையை அதிகப்படுத்துகிறது. புத்தகத்தின் அளவு பெரியதாக இருப்பதாலும், அதிக எடை கொண்டிருப்பதாலும், வைத்திருக்கக் கூடுதல் இடம் கோருவதாலும் எண்ணிக்கை குறைவாகவே சிறப்புப் பள்ளிகளில் பிரெயில் புத்தகங்கள் பேணப்படுகின்றன.
அதே நேரம், ராம்குமார் கூறும் ஒரு கருத்து மிக முக்கியமானது. “தமிழக அரசின் பல துறைகளிடம் இது பற்றி நான் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லையே” என்கிறார். இது மிக முக்கியமான சிக்கல். பார்வையற்றோருக்கான அமைப்புகள் தங்களுக்குள்ளும், அரசிடமும் ஓர் ஒருங்கிணைப்பைப் பேணவேண்டும். ஒவ்வொரு அமைப்பும் என்ன செய்கிறது, தற்போதைய நிலையில் முக்கியத் தேவை என்ன என்பவை குறித்து அரசிடம் தெளிவான பார்வை இருத்தல் வேண்டும்.
வழக்கைத் தொடுத்தவர் என்னதான் கூறினாலும், இவ்வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட்டிருக்கும் பெரும்பாலான ஊடகங்கள், இதுவரை திருக்குறள் பிரெயிலில் வெளியிடப்படவே இல்லை என்ற வகையில்தான் எழுதியிருக்கின்றன. நமக்காக உழைத்த தனி நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் நாம் செய்யும் வரலாற்று துரோகம்தானே இது?
தமிழக அரசிடம் வலியுறுத்துவதற்கு நம்மிடம் பல கோரிக்கைகள் இருக்கின்றன. குறிப்பாக, வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடங்கள் மாற்றப்பட இருக்கின்றன. அதற்கான புத்தகத் தயாரிப்புப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதிய பாடத்திட்டங்களை பார்வையற்றோருக்குப் புரியும் வகையில் பிரெயிலிலும் தருவதாக தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த உறுதியை நிறைவேற்ற அவர்கள் ஒன்றிய அரசு அல்லது தனியாருக்குச் சொந்தமான பிரெயில் அச்சகங்களை நாடி ஆகவேண்டும். இதற்கு மாற்றாக, ஏற்கெனவே செயல்பட்டு வந்த பூவிருந்தவல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு பிரெயில் அச்சகத்தைப் புதுப்பித்து செயல்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என கோரலாம். அரசுக்குச் சொந்தமான அச்சகத்தில் பிரெயில் புத்தகம் தயாரிக்கப்பட்டால், புதிய பாடத்திட்டம் தொடர்பான அரசின் காப்புரிமையையும், தனி உரிமையையும் உறுதிப்படுத்தலாம் இல்லையா?
மேலும், 10, +1, +2 பொதுத் தேர்வுகள், TNPSC, TRB ஆகிய அமைப்புகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் முதலியவற்றுக்கான வினாத்தாள்களை பிரெயிலில் வெளியிட வலியுறுத்தலாமே!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம், செம்மொழித் தமிழ் ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கென மேற்கொண்ட பணிகளில் பார்வையற்றோரின் நலனையும் உள்ளடக்கிச் செயல்பட்டிருக்கின்றனவா என்பதும் கேள்விக்குரியதே. கணினியிலும் அலைபேசியிலும் நாம் பயன்படுத்தும் திரை வாசிப்பான்களில் இருக்கும் செயற்கைக் குரல்கள் குறித்த இவர்களின் ஆய்வுகள், பார்வையற்றோர் தமிழ் நூல்களைத் தடங்கலின்றி இணையத்தில் படிக்க செய்யப்படும் வசதிகள் குறித்தும் நாம் கேட்கலாம். இவை குறித்து என்ன செய்திருக்கின்றன என்பது ஒருபுறம் இருந்தாலும், இவை குறித்த மேற்கண்ட அமைப்புகளின் பார்வை்தான் என்ன என்பதாவது பொதுச் சமூகத்துக்குத் தெரியுமா?
இத்தகைய சிக்கல்கள் குறித்து பார்வையற்றவர்களும், நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ள அமைப்புகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, திருக்குறள் பிரெயிலில் வேண்டும் என்று கேட்பது, நம்மை 40 ஆண்டுகளுக்குப் பின் தள்ளுவதாகத்தான் அமையும்.
சென்ற ஆண்டு மயிலாடுதுறையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நீதிபதி சத்தியமூர்த்தி அவர்கள், “ஓலைச் சுவடி முதல் மெய்நிகர் பதிப்பு வரை கண்ட திருக்குறள் பார்வையற்றோர் படிக்கும் பிரெயில் முறையில் இல்லையே” என்று வருந்திப் பேசியிருந்தார். (தகவல்: காலச்சுவடு, ஏப்ரல் 2017).
அப்போது, ‘விழிச்சவால்’ பிரெயில் இதழின் ஆசிரியர் நா. ரமணி அவர்கள் இதுகுறித்து காலச்சுவடு இதழுக்குக் கடிதம் எழுதியிருந்தார். நீதிபதிகள் முதலிய உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு பார்வையற்றோருக்கான செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஊ்ட்ட வேண்டியது நம்முடைய கடமைதான் என்று நினைத்திருந்தோம். ஆனால், இந்த வழக்கு பார்வையற்ற ஒருவராலேயே தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தத்தை அதிகரிக்கிறது; இன்னும் நமக்கான பணி நிறையவே இருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது.
--
தொடர்புக்கு: [email protected]