மாவட்டந்தோறும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. தேர்தல் அலுவலர்கள் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று போராடிக்கொண்டிருக்கிற எதிர்க்கட்சியினர், தாங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது இதையேதான் செய்தார்கள் என்ற தொனியில் மக்கள் இப்படிப்பட்ட போராட்டங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதேசமயம், கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பான ஒரு முக்கிய விவகாரத்தில், மாற்றுத்திறனாளி சங்கங்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருப்பது அனைத்து தரப்பினரிடமும் பேசுபொருளாகியுள்ளது.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களா பார்வையற்றவர்கள்?
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், அதன் பணியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான பொது நூலகத்துறையின் ஒருங்கிணைந்த சங்கங்களுக்கு கடந்த 2007-இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, இயக்குனராக வெற்றி பெற்றவர் தர்மபுரி மாவட்ட நூலகத்தில் புத்தகக் கட்டுனராகப் பணியாற்றிவரும் பார்வை மாற்றுத்திறனாளியான சரவணன்.
ஆனால், அப்போது நடைபெற்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. மீண்டும் 2013-இல் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் போட்டியிட விரும்பிய சரவணனின் மனு பெறப்படாமல் அப்படியே நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் முறையிட்டும் பலனில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் எப்படியும் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த திரு. சரவணன், தான் சார்ந்திருக்கும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கத்தின் உதவியை நாடினார். இது குறித்து, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. நம்புராஜனிடம் பேசினோம்.
“பார்வை மாற்றுத்திறனாளியான திரு. சரவணன் அவர்கள் எங்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி. கடந்த 2013-இல் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்த விருப்ப மனு, கூட்டுறவு சங்க விதி எண் 34-ஐக் காரணம் காட்டி, பெறப்படாமலேயே நிராகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் 1983 பிரிவு 34-ன்படி, சங்கப் பொறுப்புகளுக்குப் போட்டியிடும் ஒருவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் அந்தப் பகுதியின் வட்டார மொழிகளில் நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இதனைக் காரணமாகச் சொன்ன அன்றைய தேர்தல் அலுவலர், திரு. சரவணன் சமர்ப்பித்த விருப்ப மனுவில் இடம்பெற்ற இடதுகைப் பெருவிரல் ரேகையைச் சுட்டிக்காட்டி, அவரது மனுவை நிராகரித்தார்.
அதனை முன்னனுபவமாகக் கருதி, இந்த முறை அவ்வாறு நடந்து விடாமல் தடுக்க வேண்டி, விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராகப் பணியாற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. ராஜேந்திரன் அவர்களை தேனாம்பேட்டையிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அலுவலகத்தில் எங்கள் சங்கத்தின் சார்பாகச் சந்தித்தோம்.
கடந்த தேர்தலின்போது சரவணனுக்கு நேர்ந்தது பற்றி நாங்கள் விளக்கியதோடு, சாதாரண எழுத்துகளை வாசிக்கவோ, எழுதவோ முடியாது என்கிற காரணத்தைச் சொல்லி மாநிலத்தில் எந்த ஒரு பார்வையற்றவரின் மனுவையும் நிராகரிக்கக் கூடாது என அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்புமாறு கேட்டோம். பார்வையற்றவர்களும் பிரெயில் முறையில் படித்து, இன்று பல்வேறு துறைகளில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பதை விளக்கினோம். பெனோ ஜெஃபைன் என்ற முழுப் பார்வையற்ற பெண் பிரெயில் வழியாகவே பயின்று, இந்தியக் குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்று, இந்திய வெளியுறவுப் பணியில் இருப்பதை எடுத்துக்காட்டாக முன்வைத்தோம்.
ஆனால், தொடக்கம் முதலாகவே, அவருடைய பேச்சும், நடவடிக்கைகளும் எங்களை அவமதிக்கும் விதமாகவே இருந்தன. அவர் எதையும் புரிந்துகொள்ளவில்லை என்பதைவிட, எதையும் புரிந்துகொள்ள விரும்பவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல், எங்கள் குறைபாடுகளை விரும்பத்தகாத வகையில் சுட்டிக்காட்டி எங்களுடைய உரிமையை மறுக்கவே, நாங்கள் பொறுமை இழந்தோம்.
உடனடியாக, அருகிலிருந்த காவல் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகளை அவர்களின் ஊனத்தைச் சுட்டிக்காட்டி அவமதித்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர் மீது புகார் அளித்தோம். புகாரைப் பதிவு செய்துகொள்வதாகச் சொன்ன காவல் துறை, CSR நகல் தர மறுத்தது. சில மாற்றுத்திறனாளி சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் இறங்கவே, CSR நகலைக் காவல் துறை தந்ததோடு, சம்பந்தப்பட்ட திரு. ராஜேந்திரன் அவர்களையும் அழைத்துப் பேசினார்கள்.
தந்திரமான சுற்றறிக்கை
போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த தேர்தல் ஆணையர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பார்வையற்றவர்களின் விருப்ப மனுவை வாங்கிக்கொள்ளும்படி மாநிலத்தின் அனைத்துத் தேர்தல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். நாங்களும் ஆணையருக்கு எதிரான எங்கள் புகாரினை திரும்பப் பெற்றுக்கொண்டோம்.
இந்த முறை திரு. சரவணனின் விருப்ப மனு தேர்தல் அலுவலரால் வாங்கப்பட்டது என்றாலும், அதே காரணத்தைச் சொல்லி மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆணையரின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி சரவணன் வாதிட, ஆணையரின் சுற்றறிக்கையில், ‘பார்வையற்றவர்களின் மனுவினை தேர்தல் அலுவலர்கள் வாங்கிக்கொள்ள மறுக்கக்கூடாது’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொன்ன தேர்தல் அலுவலரின் பதில், தேர்தல் ஆணையரின் தந்திரமான நடவடிக்கையை எங்களுக்கு முகத்தில் அறைந்து உணர்த்தியது.
எனவே, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் (TARATDACG), தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு (NFB), டிசம்பர் 3 இயக்கம் ஆகிய மூவரும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக் குழுவை அமைத்துப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினோம். ஐந்து நாட்களும் தேனாம்பேட்டையிலுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டோம். போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பெருகிவந்த ஆதரவை எதிர்பாராத அரசு, இறுதியில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது சரவணன் போட்டியிடுகிற தர்மபுரி மாவட்ட பொது நூலகத்துறை கூட்டுறவு சங்கத்தின் தேர்தலை ரத்து செய்திருப்பதோடு, மோகன் என்ற பார்வை மாற்றுத்திறனாளி போட்டியிடும் சென்னை மிண்ட் அச்சகக் கூட்டுறவு சங்கத்தின் தேர்தலையும் நிறுத்தி வைத்திருக்கிறது” என்று பெருமையும் பூரிப்புமாக சொன்னார் திரு. நம்புராஜன்.
பெருகிய ஆதரவு
மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்த மார்ச் 28, 29 தேதிகளில்தான், ‘ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றாமல் காலங்கடத்திய மத்திய அரசு, கெடு முடியும் இறுதி நாளில் ‘ஸ்கீம்’ என்ற சொல்லுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததால் மாநிலமே கொந்தளிப்பிற்குள்ளானது. மார்ச் மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் விடுமுறையாக அமைந்துவிட்ட மகிழ்ச்சியைக்கூட அனுபவிக்க முடியாத பரபரப்பிலும் பதட்டத்திலும் இருந்தது தமிழகம். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும்கூட பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் என இவர்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் இருந்தது.
எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியம், விடுதலைச் சிறுத்தைகள் வண்ணியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலப் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி என முக்கியத் தலைவர்கள் பலரும் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செயல்படும் பல இளைஞர்கள் தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர். தினமும் புதிது புதிதாக போராட்ட களத்தில் பங்கேற்ற அனைத்து தரப்பு மாற்றுத்திறனாளிகளின் உத்வேகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதிரடி காட்டிய ஆணையர்
மாற்றுத்திறனாளிகளுக்கான நலன் மற்றும் உரிமைகளைச் சட்டத்தின் வழிநின்று பெற்றிடவும், பேணிடவும் ஏற்படுத்தப்பட்டதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம். இது தற்போது சென்னை கடற்கரைச் சாலையில், லேடி வெளிங்டன் கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக இருப்பவர் திரு. அருண் ராய் இ.ஆ.ப. அவர்கள்.
பொதுவாகவே, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான மறுவாழ்வுப் பணிகளில் மந்தமாகவும் விதிகளுக்குப் புறம்பாகவும் செயல்படும் இத்துறையின் பெரும்பாலான அதிகாரிகள், இவரின் வருகைக்குப் பிறகு பொறுப்புடன் பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இவரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாண விரும்புகிறார்.
அந்த வகையில், கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரத்தில் தனது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு மொழியைப் படித்தல், எழுதுதல் என்பதற்குப் பார்வை அவசியமில்லை; உள்ளார்ந்த திறமைதான் முக்கியம் என்பதை வலியுறுத்தினார். அத்தோடு, தேர்தல் ஆணையரின் நடவடிக்கையைச் ‘சட்ட விரோதம்’ என்று கூறியதோடு மட்டுமின்றி, இது தற்போது அமலுக்கு வந்திருக்கும் ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016’-ன் முக்கியக் கூறான, ‘உடல் குறைபாட்டைக் காரணம் காட்டி எந்த ஒரு பாகுபாடும் நிகழ்த்தப்படக் கூடாது’ என்கிற சட்ட விதிகளையே மீறுவதாக உள்ளது என வாதிட்டார். இதே நிலை தொடர்ந்தால், தொடர்புடைய அதிகாரி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிரடியாக அறிவித்து, முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகளின் பக்கம் நின்று கடமையாற்றினார்.
நெகிழ்வூட்டிய எழுச்சி
நடைபெற்ற போராட்டம் பற்றியும், அதன் நீட்சியாகக் கிடைத்த வெற்றி குறித்தும் தனது நன்றிகளும் பெருமிதமும் கலந்த தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், போராட்டத்தின் மையப்புள்ளியாகத் திகழ்ந்த சரவணன்.
“ஐந்து நாட்களும் கடுமையான போராட்டம் நடந்தது. போராட்டத்தின் மூன்றாவது நாளில், மகாராஷ்டிர மாநில கூட்டுறவுத் துறைக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு முக்கிய ஆணை எங்கள் கைகளுக்குக் கிடைத்தது. அந்த ஆணையில், ‘இன்னும் மூன்றே மாதங்களில் மகாராஷ்டிரக் கூட்டுறவுத் துறையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன் அனைத்து சரத்துகளும் உடனடியாக அமல்படுத்தப்பட்டு, அது தொடர்பான விரிவான அறிக்கையினைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
அந்த தீர்ப்பை நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகே, கூட்டுறவுத்துறை இறங்கி வந்தது. தர்மபுரி மாவட்ட பொது நூலகக் கூட்டுறவு சங்கத்தின் ஏனைய பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், நான் போட்டியிட்ட அந்த ஒரு பதவி இடத்திற்கான தேர்தலை மட்டும் நிறுத்தி உத்தரவிட்டார் ஆணையர். அதனைத் தொடர்ந்து நான் மீண்டும் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தேன்.
அதாவது, எனது பதவியிடத்திற்கான தேர்தல் நிறுத்தப்பட்டிருக்கிற இந்நிலையில், எனது சங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏனையவர்கள் பதவியேற்றுக்கொண்டால், அவர்கள் தங்களுக்குள்ளாகவே வாக்களித்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கானவர்களைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். இந்த நடவடிக்கையில் நான் இப்போது பங்கேற்க இயலாது என்பதாலும், மேலும் நான் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ போட்டியிடும் வாய்ப்பும் இல்லாமல் போகும் என்பதாலும் எனது பதவியிடத்திற்கான தேர்தல் நடைபெற்று முடிவு காணும் வரை, வெற்றிபெற்ற ஏனைய இயக்குனர்கள் பதவி ஏற்கக்கூடாது என்று வாதிட்டேன். அதனைத் தொடர்ந்து, நான் சார்ந்த கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டன.
இது பார்வையற்றவரின் பிரச்சனைதானே என்று அலட்சியம் செய்யாமல், தினமும் புதிது புதிதாக அனைத்து தரப்பு மாற்றுத்திறனாளிகளும் பெருவாரியான எண்ணிக்கையில் பங்கேற்றுக் கைதானார்கள். கைதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்றபோதும், நாங்கள் தடுத்து வைக்கப்பட்ட மண்டபங்களில் எங்களுக்கென்று பிரத்தியேகக் கழிப்பறைகளோ, சாய்தளப் பாதைகளோ இருக்கவில்லை. இருந்த சில கழிப்பறைகளும் சுத்தமின்றி, மோசமான நிலையில் காணப்பட்டன. இத்தகைய கடுமையான சூழ்நிலையையும் பொறுத்துக்கொண்டு, எமது உரிமைக்காகத் தோள் கொடுத்த பல மாற்றுத்திறனாளி நண்பர்கள் கையால் தவழ்ந்து செல்பவர்கள் என்பதை இப்போது நினைத்தாலும் நெஞ்சு பதறுகிறது” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.
கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் பார்வையற்றோர் பங்கேற்பது குறித்த இறுதியான சட்ட ஆலோசனைகள் கிடைக்கும் வரை, மிண்ட் அச்சகக் கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் நிறுத்திவைக்கப்படுவதோடு, தர்மபுரி பொது நூலகக் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற தேர்தல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர்.
மாநிலத்திலேயே இந்த இரண்டு சங்கங்களின் தேர்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, போராட்டத்திற்குக் கிடைத்திருக்கிற முக்கியமான வெற்றி. இத்தகைய போராட்டங்களில் பங்கேற்று, பல்வேறு இன்னல்களுக்கு நடுவே, நமது உரிமையை மீட்டெடுக்கும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் நமது காவல் தெய்வங்கள்தான். அவர்களுக்கு நமது நிபந்தனையற்ற ஆதரவைத் தட்சணையாகத் தந்தாலே போதும். வேறு எந்தக் குலசாமிக்கும் அர்ச்சனை செய்ய வேண்டிய தேவை நமக்கு எழாது!
--
தொடர்புக்கு: [email protected]