நிரந்தரமான பணிவாய்ப்பு ஒன்றுதான் பார்வையற்றோரைப் பொதுச் சமூக நீரோட்டத்தில் ஒருங்கிணைத்து, அவர்களும் இயல்பான வாழ்க்கை வாழ வழி ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால், பணிச்சூழலிலும் பார்வையற்றவர்களுக்குப் பல்வேறு சங்கடங்களும், சவால்களும் காத்திருக்கின்றன என்பதைத் தன் அனுபவத்திலிருந்து சொல்கிறார், தேசிய பார்வையற்றோருக்கான நிறுவனத்தின் (NIVH) மண்டல மையத்தில் பணிபுரியும் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவரின் போராட்டம் நிறைந்த பணி வாழ்வு குறித்து அவரோடு உரையாடுகிறார்கள் ப. சரவணமணிகண்டன் மற்றும் U. சித்ரா.
கேள்வி: முதலில் என்.ஐ.வி.ஹெச். பற்றி சுருக்கமாக நமது வாசகர்களுக்குச் சொல்லுங்களேன்?
பதில்: நிச்சயமாக. டேராடூனில் உள்ள என்.ஐ.வி.ஹெச். (NIVH - National Institute for Visually Handicapped) என்பது, நடுவண் அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் (Ministry of Social Justice and Empowerment) பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப்போரில் தங்கள் பார்வையை இழந்த படைவீரர்களுக்காக செயிண்ட் டன்ஸ்டன் ஹாஸ்டல் என்ற பெயரில் (St. Tunstan’s Hostel for War-Blinded) ஒரு இல்லம் 1943-இல் இருந்து செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த இல்லத்தை 1950-இல் கையிலெடுத்த இந்திய அரசு, அதனை வயது வந்த பார்வையற்றோருக்கான தொழிற்பயிற்சி மையமாக மாற்றியது.
பிறகு படிப்படியாக பிரெயில் அச்சகம், பார்வையற்றோருக்கான பல்வேறு தொழில் பயிற்சிகள், பார்வையற்றோருக்கான மாதிரிப் பள்ளி என வளர்ச்சியடைந்தது. சென்னையில் ஒரு மண்டல மையமும் (Regional Centre), செகந்தராபாத் மற்றும் கொல்கத்தாவில் கிளை நிறுவனங்களும் (Regional Chapters) ஏற்படுத்தப்பட்டு, செயல்படுகின்றன. தற்போது என்.ஐ.வி.ஹெச். என்பது, என்.ஐ.ஈ.பி.வி.டி. (National Institute of Empowerment for Persons with Visual Disabilities - NIEPVD) என்ற பெயரில் இயங்கி வருகிறது.
கேள்வி: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் இந்த நிறுவனத்திற்குள் எப்படி வந்தீர்கள்?
பதில்: நான் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வட்டம் சுந்தரவாண்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவன். ஐந்து வயதில் ஏற்பட்ட டைஃபாய்டு காய்ச்சலால் பார்வை பறிபோனது. தொடக்கக் கல்வியை கடலூர் பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளியில் படித்து, உயர் மற்றும் மேல்நிலைக் கல்வியை பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் முடித்தேன்.
1980-இல் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை ஆங்கிலம் முடித்துவிட்டு, டெல்லியிலுள்ள அகில இந்திய பார்வையற்றோர் சம்மேளனம் (All India Confederation of the Blind - AICB) நிறுவனத்தில் ஆங்கில சுருக்கெழுத்து பயின்றேன். 1986-இல் டேராடூனிலுள்ள பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்தில் ஆங்கில சுருக்கெழுத்துப் பயிற்றுனர் பணி கிடைத்தது.
கேள்வி: 1986 என்றால், திரு. பார்த்திபன் அவர்கள் உங்கள் மாணவரா?
பதில்: ஆம். பார்த்திபன், தற்போது என்னோடு பணிபுரியும் திரு. காசிமணி இவர்கள் அனைவருமே என்னுடைய மாணவர்கள்தான். 1980-களில் தென்னிந்தியாவைச் சேர்ந்த கணிசமான பார்வையற்றவர்கள் டெல்லி, டேராடூன் சென்று ஆங்கில சுருக்கெழுத்து பயின்றோம். ஆனால், மொழித்தடை, நெடுந்தொலைவு, தட்ப வெப்பம் இவையெல்லாம் நமக்கு மிகப்பெரிய இடைஞ்சல்கள். எனவே, தென்னிந்தியப் பார்வையற்றோரிடையே எழுந்த கோரிக்கையைப் பின்பற்றி, 1988-இல் பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் முதல் மண்டல மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில், ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய இரண்டு பயிற்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. 1988-இல் அக்டோபர் மாதம் மண்டல மையம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டாலும், நான் அதே ஆண்டு ஜூலை மாதத்திலேயே இங்கு ஆங்கில சுருக்கெழுத்துப் பயிற்றுனராகப் பணிமாறுதல் பெற்று வந்துவிட்டேன்.
கேள்வி: சுருக்கெழுத்துப் பயிற்றுனரான தாங்கள், எப்போது பயிற்சி அலுவலராக ஆக்கப்பட்டீர்கள்?
பதில்: மண்டல மையம் தொடங்கப்பட்ட நாள் முதலாகவே நான் இங்கு பணியாற்றி வருகிறேன். இன்றைக்கும் மையத்தில் பணிபுரிபவர்களின் பணிமூப்பு அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறேன். டேராடூனிலிருந்து நான் சென்னை மண்டல மையத்திற்கு பணிமாறுதல் பெற்று வந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1994-இல் பயிற்சி மற்றும் பணியமர்த்தல் அலுவலர் பணியிடத்தில் நான் பொறுப்பு என்ற பெயரில் நியமிக்கப்பட்டேன்.
அன்றைய காலகட்டத்தில் மண்டல மையத்தின் இயக்குனராக திரு. E.O. அயர்லாந்த் என்ற ஆங்கிலோ இந்தியர் பணியாற்றினார். மிக நல்ல மனிதர். பார்வையற்றோருக்கான மறுவாழ்வில் உண்மையான அக்கறை கொண்டு செயல்பட்டவர்.
அவர்தான் பயிற்சி மற்றும் பணியமர்த்தல் அலுவலர் என்ற பணியிடத்தில் ஒரு பார்வையற்றவரைத் தான் நியமிக்க வேண்டும் என்கிற முனைப்புடன், என்னை அந்தப் பணியிடத்தில் பொறுப்பு என்ற பெயரில் நியமித்தார். இந்தப் பணிக்காக எனக்கு முதல் மூன்று மாதங்கள் ஒரு சிறிய தொகை படியாக (Allowance) வழங்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. அதாவது, மூன்று மாதங்களுக்குள் என் பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது அதன் அர்த்தம். ஆனால், இன்றுவரை அந்தப் பணியில் நான் நிரந்தரம் செய்யப்படவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.
கேள்வி: ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம்!
பதில்: ஆமாம். நான் பணிபுரியும் நிறுவனமானது, பார்வையற்றோரின் நலனுக்கென்றே தோற்றுவிக்கப்பட்டது என்பதால், மிகுந்த நம்பிக்கையோடு தொடர்ந்து பத்தாண்டுகள் ஏதாவது நல்லது நடக்கும் என பொறுமையோடு காத்திருந்தேன். எதுவும் நடக்கவில்லை. எனவே, 2005-இல் நிறுவனத்தின் இயக்குனருக்கு எனது பயிற்சி மற்றும் பணியமர்த்தல் அலுவலர் பணியினை நிரந்தரம் செய்யும்படி மனு அளித்தேன்.
ஆனால், நிறுவனமோ எனது மனுவைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக, மேற்கண்ட பணியிடத்திற்கு நேர்முகத்தேர்வு நடத்திட நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தது. அதிலும், நான் விண்ணப்பித்து விடாதபடிக்கு இனசுழற்சிப் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது.
நிறுவனத்தின் இத்தகைய போக்கு எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது. பார்வையற்றோரின் மறுவாழ்வை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நடுவண் அரசின் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பலர் பார்வையற்றோரின் உயர்வில் ஒருவித ஒவ்வாமையும், எரிச்சலும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அது. இத்தகைய மனநிலை மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லா அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது என்பதுதான் கசப்பான உண்மை.
கேள்வி: இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: இதுவும் ஒருவித மேலாதிக்க மனப்பான்மைதான். ‘நம்மோடே பணியாற்றுபவர்கள், நம்மிடம் உதவி கேட்டு நம்மைச் சார்ந்திருப்பவர்கள் நமக்கு மேலே உட்காருவதா?’ என்கிற பொதுஜனத்தின் எரிச்சலும் பொறாமையும். அதாவது, எவ்வளவு உயரிய திறமைகளைப் பெற்றிருந்தாலும், பார்வையற்றவர்கள் தங்களினும் தாழ்ந்தவர்கள் என்று கருதும் பெரும்பான்மையினரின் மனப்போக்கு இது. அதனால்தான் நம்மைப் பாராட்டவோ, நமக்காகப் பரிதாபப்படவோ தயாராக இருக்கும் இவர்கள், நம்மைச் சமமாகக் கருத முன்வருவதில்லை. மறுவாழ்வுப் பணியில் இருப்பவர்கள், மனதளவில் சமவாழ்விற்குத் தயாராகவில்லை என்பதே உண்மை.
கேள்வி: நீதிமன்றம் செல்வது என்று எப்போது முடிவெடுத்தீர்கள்?
பதில்: 2006 அக்டோபரில் அந்தப் பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வு தொடர்பான விளம்பரம் வெளியானது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை மேலிடத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்த என்னால், அந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது என்னை மிகுந்த மன உளைச்சலுக்குள் தள்ளியது. நண்பர்களுடனான நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, நான் உயர்நீதிமன்றத்தில் அந்த விளம்பரத்தைத் தடை செய்து, எனது பணியினை நிரந்தரம் செய்ய உத்தரவிடுமாறு மனு செய்தேன்.
உயர்நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில், ‘நேர்முகத்தேர்வு நடத்திக்கொள்ளலாம்; ஆனால், நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்குப் பிறகே பணி நியமனம் வழங்கப்பட வேண்டும்’ என்று கூறிவிட்டது.
நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவைச் சற்றும் எதிர்பாராத நிறுவனம், பணி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டுவிட்டது. இது எனக்குக் கிடைத்த ஒரு தற்காலிக வெற்றி என்று சொல்லலாம். எனது வழக்கை எடுத்து நடத்தியவர், விஜயகுமார் என்ற பார்வையற்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்வி: ஓ! அருமை. தொடர்ந்து வழக்கின் போக்கு குறித்துச் சொல்லுங்கள்?
பதில்: வழக்கு தொடர்ந்து பதினோரு ஆண்டுகள் நடைபெற்றது. இடையில் வழக்கறிஞர் குறித்து எனக்குப் பலரும் பலவிதமாகச் சொன்னார்கள். ‘அவர் முக்கியமான கருத்துகளை வாதிடுவது இல்லை. நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், நான் பொறுமையாகக் காத்திருந்தேன். எனக்கும் அது தவிர வேறு வழியில்லை. திரு. விஜயகுமார் மட்டும் அவ்வப்போது நம்பிக்கையாகப் பேசினார். இறுதியில், 2017 நவம்பர் மாதம் எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வெளியானது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில், ‘தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களின் உழைப்பை நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. எனவே, திரு. கோபாலகிருஷ்ணன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பொறுப்பு என்ற பெயரில் கவனித்து வரும் பயிற்சி மற்றும் பணியமர்த்தல் அலுவலர் பணியிடத்தில் அவரையே நிரந்தரப்படுத்த வேண்டும். அவருக்கான ஊதிய பலனை கடந்த 1994 முதல் கணக்கிட்டு வழங்கிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது.
கேள்வி: இது உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. சரி, வழக்கில் யாரெல்லாம் எதிர் தரப்பாக சேர்க்கப்பட்டார்கள்?
பதில்: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலர், பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர், மண்டல மையத்தின் இயக்குனர் ஆகியோர் எதிர் தரப்பாக சேர்க்கப்பட்டார்கள். எனவேதான் இறுதித் தீர்ப்பின் நகலை அனைவருக்கும் உடனடியாக அனுப்பி வைத்தேன். தீர்ப்பு வெளியாகி நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையில் நான் கொல்கத்தாவிற்குப் பணி மாறுதல் செய்யப்பட்டேன்.
கேள்வி: ஏன்?
பதில்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மண்டல மையத்தின் தொழிற்பயிற்சி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மையத்தின் சில செல்வாக்கான அதிகாரிகளை எதிர்த்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியதோடு, அவர்களை உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யவேண்டுமென கோரிக்கை வைத்தனர். நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தவில்லை. மாறாக, குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள், நான்தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக ஒரு பொய்யான செய்தியை வலிந்து பரப்பினார்கள். விளைவு, நிர்வாக நடவடிக்கை காரணமாக, நான் கொல்கத்தாவிற்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன்.
அப்போதைய மண்டல இயக்குனர் என்னிடம் ஒரு கையெழுத்துக் கேட்டார். நான் எதற்கு என்று கேட்கவே, “ஒன்றுமில்லை. நீங்கள் கையெழுத்திடுங்கள் சொல்கிறேன்” என்றார். நான் விடுதிக்காப்பாளராகப் பொறுப்பேற்றிருந்ததால், விடுதி தொடர்பான கோப்பு ஏதாவது இருக்கும் என்று நினைத்து கையெழுத்திட்டேன். உடனடியாக எனது பணியிடமாறுதல் ஆணையைக் கையில் கொடுத்து, அடுத்த நாள் காலையிலேயே கொல்கத்தாவில் பணியில் சேர்ந்துவிடுமாறு கூறினார். நான் எனது கருத்தைக் கூற முற்பட்டபோது, “நீங்கள் தலைமையகத்தில் இயக்குனரிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று முடித்துக்கொண்டார்.
கேள்வி: அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
பதில்: மிகவும் வேதனையடைந்தேன். பணி ஓய்வு பெறவிருக்கிற நேரத்தில் இப்படி ஒரு நிலை வந்துவிட்டது குறித்து மிகுந்த வருத்தமாக இருந்தது. அப்போதைய ஒரே ஆறுதல், பார்வையற்றோருக்கான சில அமைப்புகள் எனக்கு ஆதரவுக்கரம் நீட்டி, என்னை அரவணைத்து, தைரியம் சொன்னார்கள். நிர்வாகத்திடமும் எனக்காகப் பேசினார்கள், பலனில்லை.
இதற்கும் நீதிமன்றம் செல்வது தவிர வேறு வழியில்லை என்றே தோன்றியது. எனது பணியிடத்தை நிரந்தரம் செய்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பும் அப்போது வெளியாகியிருக்கவில்லை. இருப்பினும், உயர்நீதிமன்றத்தில் எனது பணியிட மாறுதல் ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் எனது பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவைக் காட்டி, நான் மீண்டும் பணியில் சேர்ந்தேன். ஆனால், இந்த முறை நிர்வாகம் முன் தேதியிட்டு வேறு ஒருவரை தொழிற்பயிற்சி அலுவலராகப் பணியமர்த்திவிட்டு, என்னை பணியமர்த்தல் அலுவலராகப் பணியாற்றும்படி பணித்தது. இந்த நேரத்தில்தான் எனது பணியினை நிரந்தரம் செய்யும்படி உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இன்றுவரை அந்த உத்தரவின்மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கேள்வி: இவ்வளவு நடந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். நிர்வாகம் உங்களை மட்டும் வஞ்சிப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்: அரசுக்கோ, இயக்குனருக்கோ என்மீது எந்த ஒரு கோபமோ, அதிருப்தியோ இருக்க வாய்ப்பில்லை. இங்கே பணியாற்றுபவர்களில் சிலர் தங்களைச் செல்வாக்கானவர்களாகக் கருதிக்கொண்டு செயல்படுகிறார்கள். பணிமூப்பின் அடிப்படையில் நான் முதலிடத்தில் இருப்பதால், நான் மண்டல மைய இயக்குனராக வந்துவிடுகிற வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார்கள். அப்படி ஒன்று நேர்ந்தால், அது அவர்களின் செல்வாக்கை வெகுவாகப் பாதிக்கும் என அஞ்சுகிறார்கள். எனக்கு இயக்குனராகும் எண்ணமெல்லாம் இல்லை. கொஞ்சமே கொஞ்சம் எஞ்சியிருக்கிற பணிக்காலத்தை, எந்த ஒரு புகாருமின்றிக் கழித்துவிட விரும்புகிறேன்.
விரல்மொழியர்: மிக்க நன்றி ஐயா. உரிமைக்கான உங்கள் தொடர் முயற்சிகள் வெற்றிபெற விரல்மொழியர் சார்பாக வாழ்த்துக்கள்.
கோபாலகிருஷ்ணன்: பார்வையற்றோரின் வாழ்வியலை விரல்மொழியர் என்ற மின்னிதழின் வாயிலாகப் பொதுச் சமூகத்தின் முன் வைக்க விரும்புகிற உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும். மிக்க நன்றி.
--
திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொள்ள: [email protected]