ஃபேர்வெல் என்றாலே ‘முஸ்தபா முஸ்தபா’வும் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடலுமே மனதில் ஒலிக்கத் தொடங்கும். அந்த பழைய விதியைத் தன் பாடலால் திருத்தி எழுதினார் சுகுமாரி அக்கா. அவர் எங்கள் விடுதிக் காப்பாளரின் அண்ணன் மகள். பொருளியல் முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்று, தற்போது மதுரை மீனாட்சி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் பார்வையற்ற பெண்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், விடுதிப் பணியாளர்கள், அதே விடுதியில் தங்கி கல்லூரி செல்லும் மூத்த அண்ணன்கள் என எல்லோருமே, மேல்நிலைக் கல்வியை முடித்து வாழ்வின் அடுத்த படியில் கால்வைக்கவிருக்கும் எங்களுக்கு தங்கள் மனதில் பட்ட அறிவுரைகளைக் கூறினார்கள்.
தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பில் அறிவுரைகளாக சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, “ஒரு கூட்டுக் கிளியாக” என்று சுகு அக்கா பாடத் தொடங்கினார்.
“செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்.
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்.
நேர்மை அது மாறாமல்,
தர்மம் அதை மீறாமல்,
நாளும் நடை போடுங்கள்
ஞானம் பெறலாம்.
பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை;
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை”
என, வாழ்வின் நெடிய பயணத்தில் எங்கெங்கோ பிரிந்து செல்லவிருந்த எங்களுக்கு வழிகாட்டிடும் வரிகளால் தொடர்ந்த அவர்,
“ஆனந்தக் கண்ணீரில்
அபிஷேகம் நான் செய்தேன்,
என் கண்ணில் ஈரமில்லை”
என்று முடித்தபோது எங்கள் அனைவரின் கண்களும் கலங்கி இருந்தன. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்திலும்கூட கண்கள் தேங்குகின்றன.
ஆண் குரல் வழிவந்த அந்தப் பாடலைத் தெரிவு செய்து அத்தனை உயிர்ப்புடன் சுகு அக்கா பாடியபோது, செவி வழியே மனம் சிலிர்த்தது. அதிலும், ‘என்னென்ன தேவைகள், அண்ணனைக் கேளுங்கள்’ என்ற வரியை, ‘அன்புடன் கேளுங்கள்’ எனத் தனக்கான பாடலாக மாற்றிக்கொண்டார் அக்கா.
அந்தப் பாடலை அதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறேன்; ஃபேர்வெல் பாடலாகப் பயன்படுத்தலாம் என்ற யோசனை எனக்குத் தோன்றியதே இல்லை. ஆனால், அதுவரையில் ஃபேர்வெல் சாங்ஸ் என்ற வரையறைக்குள் வந்த பாடல்களைவிட ஆயிரம் மடங்கு அன்பு ஊற்றெடுக்கும் நெகிழ்ச்சியான வரிகள் அவை.
ரஜினிகாந்த் படங்களில் ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘ஜானி’ மற்றும் ‘படிக்காதவன்’ ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். முதல் மூன்று படங்கள் மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நேர்த்தியான திரைப்படங்கள். ஆனால், ‘படிக்காதவன்’ அறுதப் பழசான கதைக்களம் கொண்ட, முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் எடுக்கப்பட்ட அழுகாச்சித் திரைப்படம். இருந்தும், அந்தப் படம் எனக்குப் பிடித்துப்போக முக்கியக் காரணம் இசைஞானி அவர்களின் பின்னணி இசை.
சிறுவயதில் பிரிந்துவிட்ட அண்ணன் தம்பிகளான சிவாஜியும் ரஜினியும் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் பின்னணியில் ஒலிக்கும் ‘ஒரு கூட்டுக் கிளியாக’ பாடலின் வயலின் இசை, சே! கலங்கடித்துவிடும். ஒவ்வொரு வரியிலும் கூறப்பட்டவை வாழ்வதற்கான வழிகள் அல்ல; வழிமுறைகள்.
‘நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா?’
என்ற கேள்விகளை சிவாஜிதான் கேட்கிறார் என்பதை நம்பவைக்கும் சக்தி, தமிழ் சினிமா பாடகர்களில் மலேசியா வாசுதேவனுக்கு மட்டுமே வாய்த்திருந்தது.
இப்போதே சிவாஜியைப் பார்க்க வேண்டுமா? (பாடலைக் கேட்க) இதோ! மலேசியா வாசுதேவன் அழைத்து வருகிறார்.
…ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]