விரல்மொழியருக்காக என் பட்டறிவு சார்ந்து, என் தனிப்பட்ட அறிவுக்கு உட்பட்டு, நமது பார்வையற்ற சமூகத்தின் குடும்பங்களின் சறுக்கல்களை, தோல்விகளைத் தாங்கி வரும் தொடர் இது.
நான் சொல்வது மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும் என்னும் கட்டாயம் இல்லைதான். ஆனால், இதில் கட்டாயம் உண்மைகள் இருக்கின்றன என்பதை இத்தொடரை படித்து முடித்த பிறகு உங்களால் ஒப்புக்கொள்ள முடியும். நான் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தில், என்னைக் கடந்த நம்மவர்களை அல்லது நம்மவர்களின் குடும்பப் பயணங்களின் எதிர்மறை நிகழ்வுகளை, எவர் பெயரையும் குறிப்பிடாமல், எவரையும் வருத்தாமல் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
ஒருவேளை, பலருக்கு இத்தொடரில் நான் குறிப்பிடவிருக்கும் சில நிகழ்வுகள் ஒரு படிப்பினையாக அமையலாம்; சிலருக்கு வெறும் சுவாரசியம் என்னும் அளவில் இருந்து விடலாம்; சிலருக்கு என் பெயர் ஒரு முகச்சுளிப்பைத் தரலாம்; சிலருக்கு என் எழுத்துக்களும் கருத்துக்களும் உண்மையென விளங்கி, என் பெயரை அவர்களின் நினைவிலும் நிறுத்தலாம். “எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்” என்ற உமர்கயாமின் வரிக்கேற்ப, எழுதும்படி ஊழுக்குள் நான் பணிக்கப்பட்டிருக்கிறேன், அவ்வளவே! மற்றபடி, என் எழுத்துக்களைக் கொள்ளலும், தள்ளலும் அவரவர் புரிதலின் அளவைப் பொறுத்ததே!
‘நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்’ - எங்க வீட்டு லக்ஷ்மி, ‘நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்’ - தங்கப்பதக்கம், ‘ஒரு குடும்பத்தின் கதை இது, அன்புக் கரங்களால் வரைந்தது’ - ஒரு குடும்பத்தின் கதை, ‘குடும்பம் ஒரு கதம்பம், பல வண்ணம் பல வண்ணம்’ - குடும்பம் ஒரு கதம்பம், ‘வீடு, மனைவி, மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல்’ - வீடு மனைவி மக்கள், ‘எத்தனை வகை? எத்தனை வகை? குடும்பக் கலைகளில் எத்தனை வகை?’ - சதி லீலாவதி. இவை குடும்பத்தைப் பற்றிய திரைப்பாடல்களில் நானறிந்த சில. ஒவ்வொன்றும் குடும்பப் பாங்கின் ஒவ்வொரு வகையைச் சுட்டினாலும், அதன் சிறப்பை வலியுறுத்துவதில் மாறுபடவில்லை.
உலகம் என்னும் ஒட்டுமொத்த ஒற்றை அமைப்பின் கடைசி கட்டமைப்பான குடும்பத்தை வகை பிரித்து மேம்போக்காகக் கணக்குப் பார்த்தால், உள்ளடங்கும் வகைகள் எத்தனை?
கூடியது முதல் இருவரில் ஒருவர் சாகும்வரை பிரியாமல் கூடி வாழும் குடும்பம் ஒரு வகை; கூடிப் பிரிந்து கூடிப் பிரிந்து ஏதோ ஒருவகையில் குடும்பம் என்னும் கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் குடும்பம் ஒரு வகை; கருத்து முரண்களின் நடுவிலும், கரு தந்த உறவின் கட்டாயம், காலச் சூழல், சமூகக் கட்டமைப்பு, பொருளாதாரத் தேவை என பொறுப்புகளால் சேர்ந்து வாழும் குடும்பம் ஒரு வகை.
கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம், இன்னும் குடும்பக் கலாச்சாரத்துக்குப் பெயர்போன நமது இந்திய மண்ணிலும் இன்று முளைத்து நிற்கும் தற்காலிகக் குடும்பம், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் (Living Together) குடும்பம் என இன்னும் எனக்கும் உங்களுக்கும் தெரியாமல், நம் அறிவுக்குப் புலப்படாமல் மறைந்து நிற்கும் வகைகள்தான் எத்தனை எத்தனையோ?
இருபாலர் சேர்க்கையை முறைப்படுத்தும் முதன்மைப் பங்கு குடும்பத்திற்குரியது என்றாலும், அதுதான் மனித வாழ்வின் பொதுக் கட்டமைப்புகளின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அடிப்படையையும் அமைத்துத் தருகிறது. சரி, இந்தக் குடும்பத்தின் அடிப்படை எது? அது, திருமணம் என்று எனக்கும் உங்களால் விளக்கம் தர முடியுமே. ஆனால், திருமணத்திற்கான தேவை எது என்றால் அது சமூகம், நாடு, கலாச்சாரம் என ஒவ்வொன்றும் மாறுபட்ட பதிலைத் தரும்.
எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் திருமணம் என்பது ஒரு சக துணைக்காக; இந்தியாவிலோ, முதலில் அது ஒரு பாலியல் முறைப்படுத்தல் அல்லது தேவைக்காக. அமெரிக்காவில், வயது வந்த ஒரு பெண்ணைத் திருமணத்திற்கு முன்னரே 4, 5 ஆண்கள் தேடி வராவிட்டால், அந்தப் பெண்ணிடம் ஏதோ உளவியல் சிக்கல் இருக்கிறது என்று பொருள். திருமணத்திற்கு முன் கருக்கலைப்பும் அவர்கள் கலாச்சாரத்தில் வழக்கமான ஒன்றே! ஆனால் இங்கோ, ஒரு வயதுப் பெண்ணை, ஒரே ஒரு ஆண் தேடி வந்துவிட்டாலே அவளே சிக்கல் என்று பொருள்.
‘Marriage is the licensed prostitution’, ‘Marriages are made in heaven’ - இரண்டுமே வெளிநாட்டு வழங்கல்கள்தான். எனில், அவர்களுக்கு அது விரும்பிய வழியைக் காட்டுகிறது. இங்கோ, இருபாலரது பாலியல் தேவையும் திருமணத்தின் வழியாகக் கிடைக்கப்பெறும்; அந்த ஒருவரிடமிருந்தே அதை பெற்றாக வேண்டும் என்பது நமது கலாச்சாரத்தின் கட்டாயம். ஒருவருடன் மட்டுமே கடைசி வரை கூடி வாழும் குடும்பங்கள் அங்கும் இல்லாமல் இல்லை. இங்கும், மணவிலக்கைக் கையாளும் குடும்ப நீதிமன்றங்களும், அதில் வழக்குகளும் மிகுந்து வருவதை அண்மைக் காலப் புள்ளிவிவரங்கள் அச்சுறுத்தி விளக்குகின்றன.
ஆண்-பெண் சந்திப்புகள் மிகும்போது, வரையறை மீறல்களும் மிகும் என்பது வாழ்வியல். அதனால்தான், ஆண்-பெண் நேரடிச் சந்திப்புகளை முடிந்தவரை அன்றைய இந்தியக் கலாச்சாரம் தடுத்தே வைத்திருந்தது. ‘பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றாதா?’ என்னும் வழங்கல் அதற்கு ஒரு சான்று. உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக, மாறுபாடுகளின் அடிப்படையில் இன்றைய இந்தியத் திருமணங்களிலும் பாலியல், பொருளாதாரம், உணவு, சக துணை போன்ற தேவைகளின் எதிர்பார்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. அதனால், திருமணச் சிக்கல்களின் வடிவங்களும் மிகுந்திருக்கின்றன. நபருக்கு நபர், அவரது தேவையை ஒட்டி, திருமணத்தின் எதிர்பார்ப்புகளும் மாறுபடுகின்றன.
என் அறிவின் அடிப்படையில் பார்வையற்றோரின் குடும்ப அமைப்புகள் மூன்று பிரிவுகளில் உள்ளடங்குகிறது.
நான் முதல் வகைக் குடும்பத்தை ஆதரித்து, வாழ்ந்து, அதிலேயே ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருப்பவன். பார்வையற்றவர்களை பார்வையுள்ளவர்கள் ஏன் மணந்துகொள்கிறார்கள் என்னும் கேள்வியை நடுநிலையாக ஆய்ந்தாலே போதும்; ஏன் பார்வையுள்ளவர்களை மணக்கக் கூடாது என்னும் கேள்விக்கான பதிலும் கிடைத்துவிடும்.
ஒருமுறை, என்னுடன் பணியாற்றிய சக பெண் வங்கி ஊழியர், நான் ஏன் ஒரு பார்வையற்றவரை மணந்தேன் எனக் கேட்டார். “தற்போதைக்கு எனக்கும் உங்களுக்கும் வங்கித் தகுதியில் வேறுபாடில்லை. ஒருவேளை எனக்குத் திருமணமாகாமல் இருந்து, நான் கேட்டிருந்தால் நீங்கள் என்னை மணந்திருப்பீர்களா?” என்று கேட்டேன். தயக்கமின்றி அடுத்த வினாடியே, “இல்லை, கட்டாயம் இல்லை” என்று வந்த பதிலில் நான் வியப்புறவில்லை. இப்போது உங்களுக்கே புரியும்.
“இல்லாமையை, இயலாமையை, குறைகளைத் தீர்த்துக்கொள்ளவும், சமமான இடத்தில் சமன்பாட்டைப் பெற முடியாதபோது அவற்றைப் பெறுவதற்கான அடுத்த நிலையாகத்தான் பெரும்பாலும் பார்வையுள்ள மற்றும் பார்வையற்ற இணைகள் இணைய நேர்கின்றன. அப்படியானால், நான் ஏன் என்னை எப்போதுமே சமமாக மதிக்கும் என்னைப் போன்ற ஒரு பார்வையற்றவரையே மணக்கக் கூடாது?” என்றேன்.
இதைப் படிக்கிற எத்தனை பேர் என்னுடன் ஒத்துப் போகிறீர்களோ தெரியாது. ஆனால், அவர் என் கூற்றிலிருந்த வலுவான உளவியல் உண்மையை ஒப்புக்கொள்வதாகச் சொன்னார். உண்மையில், எனக்குப் பார்வையுள்ளவர்கள் வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கவிருந்தனர்தான். மாறாக, பார்வையற்றவரைத் தான் மணந்தாக வேண்டும் என்னும் உறுதிப்பாடு என் சிறுவயது முதலே மேலோங்கி நின்றதற்கு இந்தக் கருத்துக்களே அடித்தளமிட்டிருக்கலாம்.
முதலிடத்தில் இருக்கும் பார்வையற்ற இணைகளின் குடும்பத்தை ஆய்ந்தாலும், பார்வை இல்லாதோர் பார்வை இல்லாதோரைதான் மணக்க வேண்டும் என்னும் கொள்கை கொண்டோர் சிலர்தான். பலர் பார்வையுள்ள அல்லது குறைபார்வையுள்ள துணைகளை முயற்சித்து, அது கைகூடாத நிலையிலேயே, பார்வையற்றவரை மணந்தாக வேண்டும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இதில், குறைபார்வையுடையவரை மணக்க விரும்புவதை ஒரு பெரிய பாதுகாப்பாகக் கொள்ளமுடியாது. பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் குறைபார்வையுடையோர், முழுப்பார்வையற்றவராக மாறிவிடுவது இயற்கை வகுத்திருக்கும் சிக்கல். அடுத்தது, பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொள்ளும் நபர்களுக்கு, வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கும் பார்வையற்றவரேயானாலும் துணை எனக் கொள்ளும்போது எதிர்பார்ப்பின் நிறைவை இட்டு நிரப்புகிறது.
இரு பார்வையற்றவர்கள் இணைய முடிவுசெய்யும் பட்சத்தில், இருவருக்குமே துணிச்சல், தன்னம்பிக்கை, தற்சார்பு, இயங்கு திறன், சகிப்புத்தன்மை, அனுசரிப்பு போன்ற தகுதிகள் கூடுதலாக வேண்டும். நடுத்தரக் குடும்பங்களில் பொதுவாகப் பொருளாதாரத் தலையீடு சற்று தூக்கலாக இருப்பது இயல்புதான். இதைத் தேவை, திட்டமிடல் போன்றவற்றை உள்ளடக்கி ஒரு வரையறைக்குள் வைத்துக்கொள்வது அவரவர் சாமர்த்தியம்.
இயங்கு திறன் நன்கு அமையப் பெற்றிருக்கும் எந்தப் பார்வையற்றவருக்கும் வழிநடத்துனரை (Guide) சார்ந்திருக்கும் நிலை பெரிய அளவில் வருத்துவதில்லை. அதிலும், தங்களுக்கென்று குழந்தைகள் பிறந்த பின், அவர்களின் பங்களிப்பு வாழ்க்கை முறையை எளிதாக்கி விடுவது கண்கூடு. ஆனால், பெண் பிள்ளையாய் இருந்தால் பருவப் பெண்ணாகும் வரையிலும், ஆண் பிள்ளையாய் இருந்தால் அவன் விரும்பும் வரையிலும்தான் வழிநடத்துதல் மற்றும் வெளிநிகழ்வுப் பங்கேற்பு போன்றவை நடைமுறைக்குச் சாத்தியம்.
குறை/நிறை என்பதெல்லாம் நபருக்கு நபர் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. பொதுவாகக் குறையென்று பார்த்தால், உடல் ரீதியான போராட்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். குழந்தை வளர்ப்புச் சமயங்களில், அதன் முக இயக்க மாற்றங்களை வைத்துக்கொண்டு செயல்படுவது என்பது இருவருக்குமே வாய்ப்பில்லை.
ஒருமுறை எங்களது தொடர்வண்டிப் பயணமொன்றில், என் மனைவி எங்கள் மகள் குழந்தையாக இருந்தபோது அவளைக் கையாளும் முறையை வியந்து, “குழந்தை வளர்ப்பில் உங்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லைதானே?” என்றார் ஒருவர். “இருக்கிறது. அது சிரிக்கும்போது பார்த்து பதிலுக்கு எங்களால் சிரிக்க முடியாது” என்றேன் நான்! எல்லாப் பாராட்டல்களுக்கும் தன்னை வியந்துகொள்ளும் பார்வையற்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சிறிய செயல்களுக்கெல்லாம் நீங்கள் பாராட்டப்பட்டால், உங்களை உலகம் இன்னமும் குழந்தையாக நினைக்கிறது என்றே பொருள்!
எப்படியும் குழந்தை ஒரு காலகட்டத்திற்குப் பின் ஒலியை வெளியேற்றும் என்னும் இயற்கைச் சமன்பாடு, நம்மவர்களைக் குழந்தை வளர்ப்பில் வெற்றி பெற வைத்திருக்கிறது. ஒன்றிரண்டு என்னும் இக்கால நிலைமை மட்டுமல்ல; ஏழுக்கு மேலும் குழந்தைகளைப் பெற்று, வெற்றிகரமாக வளர்த்து, பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கும் அக்கால பார்வையற்ற இணைகளையும் என்னைப் போலவே உங்களில் சிலரும் சந்தித்திருக்கலாம். தனது வாழ்க்கையின் வெற்றியைக் காட்டி ஒருவர் மகிழ்வாரானால், உண்மையில் அது பாதி மகிழ்ச்சிதான். அதன் முழுமை என்பது, தனக்குப் பின் வரும் அடுத்த தலைமுறையின் தழைத்தலைப் பொறுத்ததே. அந்த வகையில், நமது பிள்ளைகளின் வெற்றி எதுவோ, அதுவே நமது வெற்றியும்.
ஒப்பீட்டின் அடிப்படையில் பார்த்தால், பார்வையற்ற இருவர் இணையும்போது, உளவியல் சிக்கல்கள் பார்வையுள்ளவர்களுடனான திருமணங்களைவிட கட்டாயம் குறைவுதான். இருப்பினும், சிக்கல்கள் மனங்களைப் பொறுத்ததேயன்றிப் பார்வையைப் பொறுத்ததன்று என்பதால், இந்த இணைகளிலும் நிறைவு, புரிதல் போன்றவற்றால் கூடுதல் விழுக்காடுகளால் வெற்றி வலம் வருவது போலவே, குறிப்பிட்ட அளவில் புரிதலின்மைகளால் தோல்விகளும் வலம் வருகின்றன.
இந்த வகை வாழ்க்கையை நான் ஏற்றுக்கொண்டிருப்பதால், பார்வையற்ற இருவர் இணையும் திருமணங்களில் உள்ள நேர்மறைகள் என் கருத்தில் கூடுதலாகப் புலப்படுகின்றனவோ என்னவோ? நான் ஏற்றிருக்கும் வாழ்க்கையை, ஏற்ற வகையில் எடுத்துக்கொள்ளும் மனநிலை என் எழுத்துக்களில் இருப்பது இயல்புதான். அப்படியானால், என் கொள்கைப் பிடிப்பில் எனக்கிருக்கும் நேர்மறைகளை நான் எழுதுவதில் எவருக்கும் தடை இருக்க முடியாது.
ஆனால், அடுத்தவரின் கொள்கைகளில் அல்லது தேவைகளில் உள்ள எதிர்மறைகளை எழுதும்போது அவர்களைப் பாதித்துவிடும் எதிர்மறை இருப்பதால், என் கொள்கையில் இருக்கும் நேர்மறைகளுடன் இத்தொடரின் இம்முதல் பகுதியை முடித்துக்கொள்வதே சரியாக இருக்கும்.
குடும்பங்களின் வெற்றிகளை அடுத்து வரும் தலைமுறைகள் பதிவு செய்கின்றன; தோல்விகள்தான் சமூகத்தால் பதிவு செய்யப்படுகின்றன. அப்படி சமூகத்தால் பதிவு செய்யப்பட்ட பார்வையற்ற குடும்பங்களின் தோல்விகள், சிக்கல்கள், சறுக்கல்கள், குழப்பங்கள் என எதிர்மறைகளைத் தாங்கிவரும் நிகழ்வுகளுடன் கூடிய இத்தொடரின் அடுத்தடுத்த பகுதிகளைப் படியுங்கள். படிப்பினை பெறுகிறீர்களா? மகிழ்ச்சி. கருத்தைப் பகிர விருப்பமா? எதிர்மறையோ நேர்மறையோ, எழுதுங்கள். எதிர்கொள்வதையோ, எடுத்துக்கொள்வதையோ உங்கள் கருத்துக்களே முடிவு செய்யும்.
உண்மையில், இத்தொடரில் இடம்பெறும் பல நிகழ்வுகளை கனத்த மனதுடன்தான் பதிவிடுகிறேன். இது இத்தொடரின் அறிமுகப் பகுதி என்பதால், குடும்பங்களைப் பற்றிய அலசல்களுடன் நிறைவு செய்திருக்கிறேன். சந்திப்போம், அடுத்த பகுதியில்.
…களைவோம்
--
கட்டுரையாளர் சென்னை கனரா வங்கியில் பணியாற்றி வருகிறார்.
தொடர்புக்கு: [email protected]

- ஆண், பெண் இருவருமே பார்வையற்றவராக இணைவது.
- பார்வையற்ற ஆணை பார்வையுள்ள பெண் மணப்பது.
- பார்வையற்ற பெண்ணை பார்வையுள்ள ஆண் மணப்பது.